செவ்வாய், 6 ஜனவரி, 2026

தமிழ்காக்க நடவடிக்கை எடுப்பீர்!

 

தமிழ்காக்க நடவடிக்கை எடுப்பீர்!

முதுகலைப்பட்டந்தாங்கி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கணிப்பயிற்றுநர்கள் போன்ற பணிகளுக்குத் தேர்வுபெறத் தமிழ்மொழித் தேர்வில் வெற்றிபெறுவது கட்டாயத் தேவை என்று 2022-இல் தமிழ்நாட்டு அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கான 1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகப் போட்டித்தேர்வை தமிழ்நாட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 12.10.2025 அன்று நடத்தியது.

இதில் தேர்ச்சி பெற, தமிழ்மொழித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற்வேண்டியது கட்டாயமாகும். 40% தகுதி மதிப்பெண் பெறாதவர்கள், முதன்மைப் பாடத் தேர்வு எழுதினாலும் அந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யாமல் புறக்கணிக்கப்படும்.

இத் தமிழ்த் தகுதித் தேர்வை 2,20,412 பேர் எழுதியிருந்தார்கள். எழுதியவர்களில் ஏறத்தாழ 85,000 பேர் தேர்ச்சி பெறவில்லை என்று சிலரும், ஏறத்தாழ 84,000 பேர் தோல்வியுற்றதாக வேறுசிலரும் கூறுகின்றனர். துல்லியமான எண்ணிக்கை அதிகார அடிப்படையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த முடிவு தமிழர் அனைவர்க்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது உண்மையாகும். முடிவாக, ஏறத்தாழ  36 விழுக்காட்டுத் (% ) தேர்வர்கள் தோல்வி அடைந்ததாகக் கூறுகின்றனர்.

                தமிழகத்தில் தாய்மொழியான தமிழ் பயிற்றுவிப்போர் -பயில்வோரின் தகுதிநிலையை மேற்குறித்த தேர்வுமுடிவுகள் கூறுகின்றன. இந்த இரங்கத்தக்க நிலைக்கு யார் காரணம்? ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மிகவும் மனம் வருந்தி, “ஏழாம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவர்க்குத் தமிழ் நெடுங்கணக்குஅதாவது அ, , , ,………ஒள, ,   க், ங், ச், ஞ்,……..ற், ன் - சொல்லவும் எழுதவும் தெரியாத நிலையாகவே பள்ளிக்கல்வி நிலை இருக்கிறதுஎன்று கூறியதைக் கேட்கநேர்ந்தது. இது சற்றும் மிகையின்றிக் கூறப்படும் உண்மை நிலையாகும். அரசுப்பள்ளிகளின் நிலைமை இவ்வாறே உள்ளது. இதைப் பள்ளி ஆசிரியர் பலரும் ஒப்புக்கொள்வர்.

                இந்தநிலை, பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாதா? என்ன ஆக்க அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்? இந்தத் தமிழ்த் தகுதித்தேர்வு முடிவுகள் அவர்களுக்கும் தெரிந்துதானே இருக்கும்? ஆசிரியர்களின் நிலையே இரங்கத்தக்கதாய் இருக்கிறதே! இதுவரை பள்ளிக்கல்வித் துறை இவ்விழிநிலை போக்க ஏதாவது செய்திருக்கின்றதா?

                தமிழ் வாழ்க!’ என்று அரசுக் கட்டடங்களில் எழுதிவைத்தாலே தமிழ் வாழ்ந்துவிடுமா? மக்களை மயக்கி ஒப்போலை பெறும் வழியாகவன்றோ தெரிகிறது! இனியேனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் விழிப்புற வேண்டும்! தமிழைக் காக்கும் உண்மையான முயற்சியாக மாணவர்க்கு முறையாகவும் சரியாகவும் தமிழைப் பயிற்றுவிக்கத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்! முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நெஞ்சை அழுத்தும் கவலையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


இது தகுமா? இது முறையா? இது அறம்தானா?

 

இது தகுமா? இது முறையா? இது அறம்தானா?


            சிந்துவெளி நாகரிகத்தைச் ‘சிந்து சரசுவதி நாகரிகம் ' என வரலாற்றைத் திரிக்கும் கருத்தரங்கம் ஒன்று கோவையில் நடக்க இருக்கிறது. “தேசியத் தற்பணி அமைப்’பின்” (RSS) கிளை அமைப்பான ‘தென்னிந்திய ஆய்வு நடுவம்’ (Centre for South Indian Studies) என்னும் கரவான மதவெறி அமைப்பு, தமிழ்நாட்டரசின் நிதியில் இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரியுடன் இணைந்து இந்தக்கருத்தரங்கை நடத்துகிறது.

            தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளுக்குள் கருத்தரங்கப் புனைவில் புகுந்து ஆள் பிடித்து மாணவரிடையே பிளவுண்டாக்கி சாதி மத வெறி பிடிக்கவைக்கும் வேலையை நுட்பமாகச் செய்வதே இந்த அமைப்பின் வேலை. இந்த மதவெறி அமைப்புடன் சேர்ந்துகொண்டு அத்துடன் வெளிப்படையாக ஒத்துழைத்து கெடுவினை செய்ய முன்வந்திருக்கிறது கோவைக் ‘கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி’.

            தமிழ்நாட்டரசின் நிதியில் இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரியான இதற்கு வெளிப்படையாக மதவெறி அமைப்போடு கைகோத்துச் செயல்படும் துணிச்சல் எப்படி வந்தது? உயர்கல்வித் துறை இக்கல்லூரி மீதும், நச்சுவிதை தூவும் தொடர்புடைய ஆசிரியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? இளைய தலைமுறையை மதவெறிப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை அன்றோ! அறிவாளர் கடமை அன்றோ!

            கருத்தரங்கம் நடத்துவது தமிழ்த்துறை! கட்டுரையைத் தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் சங்கதத்திலும் கூட எழுதலாம் என்கிறது அறிக்கை! இவர்களைப் புரிந்துகொள்ள இந்த ஒருவரி போதாதா?

            சிந்துசமவெளி நாகரிகத்தைச் 'சிந்து சரசுவதி நாகரிகம்' என வரலாற்றைத் திரிக்கும் மோசடிக்குப் பெயர் ஆய்வுக்கருத்தரங்கா? அதற்குத் துணைபோவது பிழை என்பதை அறியாதவர்களா ஆசிரியர்கள்? தமிழ்நாட்டரசின் உயர்கல்வித்துறை உறங்குகிறதா? உயர்கல்வித்துறை அமைச்சருக்குத் தெரிந்தே இக்கொடுமை நடக்கிறதா?

            கல்லூரிகளை மதவெறியர் பிடிக்குள் கொண்டுசெல்லும் இதுபோன்ற அழிவு முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டாமா? கல்வித்துறையைக் காவிவயமாக்கக் கைகொடுப்போரை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டாமா?

            இக் கருத்தரங்கில் கலந்து கொள்ள தங்கள் பெயரை இந்த அறிக்கையில் போட ஒப்பியவர்கள் எந்த நெருக்கடியால் இப்படிச் செய்தார்கள் என்பதை அரசு கண்டறிய வேண்டாமா?

            மாந்த நேயம் காப்பாற்றப்பட மதவெறி முயற்சிகளைக் களையெடுப்பது மிக முகன்மைப் பணியன்றோ? மதவெறியை மறைமுகமாகத் தூண்டும் அமைப்புகள், கல்லூரிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டாமா?

            நஞ்சுக்கு இனிப்புத் தடவி நீர்வளப் பாதுகாப்பு போன்ற முகமூடிகளோடு வருவது அவர்களின் வழக்கம். முகமூடியைக் கிழித்துக் காட்டி மதவெறிக் கொடுமுகத்தை அடையாளம் காட்டும் கடமை, அறிவு வளர்ச்சியை விரும்பும் அனைவரின் கடமை.எனினும் அரசு விழிப்படைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

            கோவைக் கல்லூரியில் திசம்பர் 12, 13-ஆம் நாள்களில் நிகழவுள்ள இந்தக் அழிவுச்செயலை நிகழாமல் தடுப்பது உடனடித் தேவையன்றோ? இக்கருத்தரங்க ஆய்வுக் கருப்பொருள்களில் ஒன்றாகத் ‘திராவிட சித்தாந்தங்களின் சிதைவுகள்’ என்பதுவும் இருப்பதை அறிந்துணர வேண்டாமா?

            எனவே, இக்கருத்தரங்கு நடத்த இசைவளித்த தமிழ்நாட்டரசைக் கேட்கின்றோம் –இது தகுமா? இது முறையா? இது அறம்தானா?

            (முகநூலில் செய்தி அறிவித்த அன்பும் மதிப்புமார்ந்த செந்தலை கவுதமன் ஐயாவிற்கு நன்றி!)


(இந்நிகழ்வு திசம்பர் 12, 13ஆம் நாள்களில் நடக்கவில்லை. நிகழ்வை நிறுத்திவைத்திருப்பதாகச் செய்திகள் கூறின. ஆனால், அதே ‘கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி’யில் இருநாள் மாநாட்டில் தமிழ்நாட்டு ஆளுநர் 19-12-2025 வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு பேசியிருப்பதாக 20-12-2025 ‘தைம்சு ஆப்பு இந்தியா’ நாளிதழில் ஆறாம்பக்கத்தில் சிறிய அளவில் வந்த செய்தி கூறுகிறது)


தமிழுக்கு அரசுகள் ஆற்றவேண்டிய அரும்பணிகள்

 

தமிழுக்கு அரசுகள் ஆற்றவேண்டிய அரும்பணிகள்




            தாய்மொழியாம் தமிழுக்குத் தமிழக அரசுகளான புதுச்சேரி, தமிழ்நாட்டு அரசுகள் ஆற்றவேண்டிய இன்றியமையா அரும்பணிகளை, ஆசிரியவுரையிலும் பிறவற்றிலும் ‘நற்றமிழ்’ தொடர்ந்து அவ்வப்போது குறிப்பிட்டு வந்திருக்கின்றது. ஆள்வோரின் கவனத்தை அவை பெற்றதோ - பெறவில்லையோ, செயற் படுத்தப்படாமலே உள்ள நிலையை அறிகிறோம்; இருந்தபோதிலும் ‘நற்றமிழ்’ தொடர்ந்து தமிழ்க்கு ஆற்றவேண்டிய காப்புப் பணிகளையும், ஆக்கப் பணிகளையும் செயற்படுத்தத் தமிழ்நாட்டு அரசையும், புதுவை அரசையும் சலிப்பின்றி வலியுறுத்தலைத் தன் கடமையாகக் கருதுகின்றது.

            நகராட்சி, மாநகராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களில் ‘தமிழ் வாழ்க’ என ஒளிரும்எழுத்துகளில் எழுதிவைக்க ஏற்பாடு செய்தது பாராட்டவேண்டிய செயலே. இன்னும் தமிழறிந்தார்க்குப் பலர் பெயரில் பரிசில்கள் வழங்கப்படுவதும் சரியே. இச் சிறுசிறு செயல்களே தமிழுக்கு ஆக்கம் தந்துவிடும் செயல்களாக மனநிறைவு கொள்ள இயலாது. தமிழுக்கு உண்மையான நெடிதாக்கம் தருகின்ற நிலையான பயன் விளையும் ஆக்கங்களை எண்ணிச் செய்யவேண்டும்.

            எனவே, புதுச்சேரிஅரசும், தமிழ்நாட்டரசும் தமிழ்மொழியைப் பொறுத்தவரை கீழ்க்காணும் தமிழ்க்காப்புப் பணிகளை உடனடி கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டுமென ‘நற்றமிழ்’ வலியுறுத்துகின்றது.

1. முழுமையான ஆட்சிமொழியாகத் தமிழைச் செயற்படுத்தல்:

1968-ஆம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த பேரன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய அண்ணா, தமிழ்நாடு என்று பெயர்மாற்றும் தீர்மானத்தைத் தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நிலையில், ஆட்சிமொழிச் சட்டம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசும்போது, ஐந்து ஆண்டுகளுக்குள் அரசின் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்த, விரைவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு அரசுத் துறைகள், நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நயன் மன்றங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழை முழுமையாக ஆட்சிமொழியாகச் செயற்படுத்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், செயற்பாட்டில் இல்லை. தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்; செயற்பாட்டை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்.

2. தமிழ்வழிக்கல்வி நடைமுறைப்படுத்தல்:

முன்பு நினைவூட்டியதைப் போல், அண்ணா தமிழ்நாடு எனப் பெயர்மாற்றும் தீர்மானத்தைச் சட்டமாக நிறைவேற்றிய போது நிகழ்த்திய புகழ்மிக்க உரையில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ் பயிற்றுமொழி ஆக்கப்படுமென 1968-இல் உறுதியளித்தார். அதன்படி 1973ஆம் ஆண்டிலேயே கல்விநிலையங்கள் அனைத்திலும் தமிழ் பயிற்றுமொழி ஆக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழின் மேன்மை, தமிழர் பண்பாடு, நாகரிகக் காப்பு, தமிழரின் அடையாளத்தைப் போற்றிக் காத்தல், தமிழரின் உரிமையைப் பேணிக் காத்தல் முதலியவற்றிற்குத் தமிழைப் பயிற்றுமொழி ஆக்கவேண்டியது இன்றியமையாத் தேவையாகும்.

அண்ணா உயிருடன் இருந்திருந்தால் அவர் கூறியபடி தமிழைப் பயிற்றுமொழி ஆக்கியிருப்பார். தமிழ், பயிற்றுமொழி ஆக்கப்படுவதே தமிழரின் அனைத்துநிலை உயர்வுக்குமான வழியமைப்பு ஆகும் என்பதால் இக்கால் அரசாள்வோரும் அவர்கட்குத் துணையிருக்கும் அதிகாரிகளும் தெரிந்து தெளிந்து செயற்படுதல் வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்ச்சியடையச் செய்தபின் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவரலாம் என்னும் சிலரின் கூற்று, நீச்சல் பழகிய பிறகு நீரில் கால்வைத்து இறங்கலாம் என்னும் கூற்றுக்கு ஒப்பாகும் என்க. ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிக்க வழிவகை செய்துதரலாம்.

3. தமிழ்வழி படித்தோர்க்கே தமிழ்நாட்டில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை தரப்படுவதை உறுதிசெய்தல்:

தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்று உருவாக்கப்பட்டுள்ள அச்சத்தை மக்களிடமிருந்து போக்க வேண்டும். முதலில், தமிழ்நாட்டரசு எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழின் பயன்பாட்டை நூற்றுக்கு நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தின், தமிழ்வழி படித்த தமிழர்க்கு வேலைவாய்ப்புகள் பெருகக் கிடைக்கும் என்பது உண்மை. மண்ணின் மைந்தர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதைத் தக்கவாறு சட்ட நுணுக்கங்கள் அறிந்து, தேவையான புதிய சட்டங்கள் இயற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் தமிழரின் வேலைவாய்ப்புரிமையைக் காப்பாற்றி உறுதிப்படுத்தவேண்டும்.

மேலே குறிப்பிட்ட மூவகைச் செயற்பாடும் ஒன்றோடு ஒன்று தவிர்க்க இயலாத் தொடர்புடையனவாகும். தமிழரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இவை மூன்றும் இன்றியமையாத செயற்பாடுகள் ஆகும்.

4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, கல்வி மாநில அதிகாரப் பட்டியலில் இருந்தது. 1976-இல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42-ஆவது திருத்தத்தின் மூலம், இந்திரா காந்தி ஒன்றிய தலைமைஅமைச்சராக இருந்த நெருக்கடிநிலைக் காலத்தில் கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றிக் கொள்ளப்பட்டது. இது, இக்கால் ஆட்சியிலிருக்கும் ‘தேசிய தற்பணி அமைப்’பின் (RSS) வழிவந்தவர்களும், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றவர்களுமான ஆட்சியாளர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.

இதனால் மாநில மக்களின் தாய்மொழி பல்வேறு வகையில் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்நிலை, மொழிநிலையில் தென்னாட்டவர், மேற்கு வங்காளத்தினர், மராத்தியர் முதலியோரை மொழிஅடிமையராக்கி இந்தி, சங்கதத் திணிப்புக்கு வசதிசெய்து தருகிறது. எனவே, முழு ஆற்றலுடன் போராடிக் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும்.

5. உருசியா, சீனா, பிரான்சு, சப்பான், கொரியா முதலிய நாடுகளில் மக்கள் அனைத்து அறிவியலையும் நுண்கலைகளையும் கூடத் தம் தாய்மொழி வழியே படித்து முன்னேறி உலகின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்றனர். நோபல்பரிசு பெற்ற பல அறிஞர்களுக்கு அவர்கள் தாய்மொழியைத் தவிரப் பிறமொழி தெரியாது என்பது உண்மையாகும். மேற்கூறிய நாடுகளில், உலகின் எந்த மூலையில் எந்த மொழியில் புதிய அறிவியல் செய்தியோ பிறதுறைச் செய்தியோ வந்தாலும் உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அச்செய்தி பெயர்த்தளிக்கப்படுகின்றது. நூல்களும் அவ்வாறே பெயர்க்கப் படுகின்றன.

புதிய சொற்களை, குறியீடுகளை உடனே பெயர்ப்பதில் சிக்கல் இருந்தால் மூலநூல் சொற்களையும் குறியீடுகளையும் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், முறையாக அவற்றிற்கான தமது மொழியின் பெயர்ப்புச் சொற்களையும் குறியீடுகளையும் கண்டுபிடித்துப் பிறகு மொழிபெயர்த்த நூலில், செய்தியில் திருத்தம் செய்கின்றனர். இவ்வாறாகத் தமிழில் பெயர்த்துத்தரும் ஏற்பாடு இன்றியமையாத் தேவையாகும்.

6. தமிழில் படித்தால் எளிதில் வேலை கிடைக்கும் என்கின்ற நிலை ஏற்பட்டால், ஆங்கிலவழியில் பயிலச்செல்வதில் ஆர்வம் குறையும். தனியார் பள்ளிகள் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். இதனால் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்விக்கான செயற்கைத்தடை நீங்கும்; கல்வியின் பெயரால் நடைபெற்று வரும் கொள்ளைகள் தடுக்கப்படும்.

7. எல்லாப் பள்ளிகளிலும் தமிழை ஒன்றாம் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளி வகுப்புவரை கட்டாயப் பாடமாக்க வேண்டும். எந்தமொழி பேசினும் அவர்கள் தமிழகத்தில் இருப்பதால் தமிழகக் கல்விமுறையை ஏற்றுப் பயிலவேண்டும். தமிழே படிக்காமல் உயர்கல்வி, முனைவர் பட்டம் வரை பயிலும் நிலை தொடரக்கூடாது.

8. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் குறைவின்றி அமர்த்தப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் மேம்பட்ட கட்டமைப்புகள் கொண்டவையாக ஏற்பாடு செய்யவேண்டும். பாடநூல்கள், கற்பித்தல் கருவிகள் தடையின்றித் தரவேண்டும்.

ஆசிரியர்களுக்குப் பணிக்காலத்திலும் தேவைப்படும் பயிற்சி அளிக்க வேண்டும். கடமை தவறி நடக்கும் ஆசிரியர்கள் மீது தவறாது நடவடிக்கை எடுக்கத்தக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.

9. தமிழகக் கல்விநிலையங்களில், கல்லூரிகளில் தமிழுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட அமைப்பாரும், தமிழ் வெறுப்பாளரும், மதம் சாதி சார்ந்த அமைப்பாரும் நிகழ்ச்சிகள் நடத்த இசைவளிக்கக் கூடாது. மீறி நடத்துவார் மீதும் இசைவளிப்பார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு நடைமுறையில் சட்டங்களும் நெறிமுறைகளும் இல்லாமலிருந்தால், உடனடியாக இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

10. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கடைகள், வணிகநிறுவனங்கள், தொழிலகங்கள், அரசுக் கட்டடங்கள், பணிமனைகள், அலுவலகங்கள், முதலிய எல்லா இடங்களிலும் பெயர்ப்பலகைகளில் முதன்மையாகத் தமிழ் இடம் பெறவேண்டும். விளம்பரப் பதாகைகளும் தமிழில், இருக்க வேண்டும். இவற்றிற்குக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும்; இவற்றைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

11. ஒளிஊடகங்கள் முதலியவற்றில் தமிழைச் சரியாகப் பலுக்க(உச்சரிக்க)த் தவறுவோர்க்கும், வலிந்து ஆங்கிலம் முதலிய அயற்சொற்களைப் பயன்படுத்துவார்க்கும், தமிழைத் தப்பும் தவறுமாகப் பேசுவார்க்கும் தண்டனை தரும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தமிழ் அழிக்கும் செயல்கள் செய்தித்தாள்கள், இதழ்களில் காணப்பட்டாலும் தொடர்புடைய யாரும் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது.

12. இந்தி, சங்கத மொழிகளுக்கு ஒதுக்கப்படும் தொகைக்குச் சமமாகச் செம்மொழி தமிழுக்குத் தொகையை ஒதுக்க வலியுறுத்தவேண்டும்.

13. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள ஒன்றியஅரசின் பல்வேறு அலுவலகப்பணிகளில் தமிழ் படித்த தமிழர்களையே அமர்த்தவேண்டும் அல்லது மிகுதியான பணியாளர்கள் தமிழ்படித்த தமிழர்களாக இருக்க வேண்டும்.

14. எவ்வளவு எதிர்த்தாலும் இந்தித்திணிப்பு நாளொரு சொல்லும் பொழுதொரு தொடருமாகத் திணிக்கப்படுவது நின்றபாடில்லை. இந்த நிலையில், திணிக்கப்படும் இந்திய ஒன்றிய அரசின் திட்டங்களின் இந்திப் பெயர்களைத் தமிழில் ஒலிமாற்றம் செய்து எழுதாமல், தமிழக அரசுகள் தமிழர்க்குப் புரியும்படி அவற்றைத் தமிழில் பெயர்த்து எழுத வேண்டும்; சொல்ல வேண்டும்.

15. தமிழகத்தில், தமிழைப் புறக்கணித்து, ‘வந்தே பாரத்’, ‘கேலோ இந்தியா’ போன்ற இந்திப் பெயர்களை முன்னிறுத்தி நடக்கும் நிகழ்வுகளில் இந்திய ஒன்றிய அமைச்சன்மாருடன் தமிழகஅமைச்சர்கள் கலந்துகொள்ளக் கூடாது. தமிழகத்தில் அப் பெயர்களைத் தமிழில் பெயர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக அரசுகளும் அவற்றைத் தமிழில் பெயர்த்தே சொல்லவேண்டும்; எழுத வேண்டும்.

16. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள பல்வேறு அலுவலகப் பணியாளரும் தவறாது தமிழில் கையொப்பமிடவேண்டும். அதற்கான நெறிமுறைகள் வகுத்துக் கடுமையாகப் பின்பற்றச்செய்து, கண்காணிக்க வேண்டும்.

17. தமிழ்க்கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய உண்மையான தக்க ஏற்பாடு வேண்டும்.

18. அனைத்து நயன்மன்றங்களிலும் தமிழில் வழக்குரைத்து உறழாட ஏற்பாடு செய்ய வேண்டும்; இதற்குத் தக்க ஏற்பாட்டிற்கு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

19. தமிழ்நாட்டில், புதுவையில் வானூர்தி நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழில் உரையாட வசதி வேண்டும்; ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏற்பாடு செய்ய வேண்டும்.

20. தமிழ்நாட்டில், புதுவையில் தமிழ்பேசும் தமிழர்தம் இயல்பான உடையான வேட்டி, சட்டை, மேல்துண்டு உடுத்திச் சென்றால் எந்த அலுவலகத்திலும் - எந்த நிகழ்ச்சியிலும், தடை செய்வாரைத் தண்டிக்கும் சட்டம் இயற்றவேண்டும்.

21. இந்திய ஒன்றியஅரசின் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் அனைத்தும் தமிழில் இருக்கும்படி வலியுறுத்தவேண்டும். வேற்று மொழியிலிருந்தால், தமிழ்மொழிபெயர்ப்பும் உடன்இருக்க வலியுறுத்தி ஏற்பாடு செய்ய வேண்டும்.

22. அகழ்வாய்வு செய்த அறிஞர்களின் முறையான அறிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிட வற்புறுத்த வேண்டும். அகழ்வாய்வுகளின் வழியாக வரையறுத்த தமிழ்மொழியின் காலம் வரலாற்று நூல்களிலும் பள்ளிப் பாடநூல்களிலும் கட்டாயமாக இடம்பெறச்செய்ய வேண்டும்.

23. செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை முதலியவற்றின் செயற்பாடுகளைச் செம்மைப்படுத்திப் புத்துணர்வூட்டித் தமிழின் பல்துறை வளர்ச்சிக்கும் குறிப்பாக அறிவியல்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும்.

24. வெளிமாநிலங்களில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில் தமிழ் கற்பிக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். இதன் தொடர்பாக அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும்.

25. வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ்ப்பாடநூல்கள் தந்து தக்க தமிழாசிரியர்களால் தமிழ் கற்பிக்க எல்லாவகை ஏற்பாடுகளும் செய்யவேண்டும்.

26. அலுவலகக் குறிப்புகள், கடிதங்கள், அரசாணைகள் ஆகியவற்றைத் தமிழில் பிழையின்றி எழுதவும் பயன்படுத்தவும் அனைத்து அரசு ஊழியர்க்கும், அலுவலர்க்கும், அதிகாரிகளுக்கும் கட்டாயப் பயிற்சி அளிக்கவேண்டும். பொதுமக்கள் அரசுக்கு விடுக்கும் முறையீட்டு மடல்களுக்குத் தமிழிலேயே விடை தருவதை உறுதிசெய்தல் வேண்டும்.

27. மருத்துவம், பொறியியல், கணிஅறிவியல் போன்ற உயர்கல்வித் துறைகளில் புத்தாக்கப் பாடத்திட்டங்களைத் தமிழில் உருவாக்கித் தகுதியான பாடநூல்களை உருவாக்கித் தரவேண்டும்.

28. கணிப்பொறி, கைப்பேசி முதலியவற்றின் இணையப் பயன்பாட்டிற்குத் தேவையான எழுத்துருக்கள் , உள்ளீட்டுக் கருவிகள், பிழைதிருத்திகள் முதலியவற்றை உருவாக்கி ஒருபோகாகப் பயன்படுத்தும் வகையில் தகைப்படுத்தவேண்டும்.

29. குமுக ஊடகங்களில் தக்கவாறு தமிழின் பயன்பாட்டை வலியுறுத்தி ஊக்குவிக்க வேண்டும்.

30. அரசின் அனைத்து இணையதளங்கள், இணையவழி மக்கள் பணிகள் முதலியவை முழுவதையும் தமிழிலேயே அணுகக்கூடிய வகையில் புத்தாக்கத் தொழில்நுட்பத்துடன் தமிழ்மொழியை இணைக்க வேண்டும். செய்நுண்ணறிவு, எந்திரக் கற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் தமிழ்மொழி ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். தமிழில் மென்பொருள், செயலி முதலிய எண்ம உருவாக்கங்களை ஊக்குவிக்கவேண்டும்.

31. தமிழில் எழுதப்படும் தகுதியான இணைய இதழ்கள், அறிவியல் இலக்கியம், குழந்தை இலக்கியம் போன்றவற்றிற்குப் பரிசளித்துப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

32. திரைப்படம், தொலைக்காட்சி, ஒளிஊடகங்கள், பல்வகை இதழ்களில் தமிழ்மொழிக்கு ஆக்கமளிப்பவர்களைத் தேர்வு செய்து விருதுகள், பரிசுகள் அளிக்க வேண்டும்.

33. தமிழகத்தில் கல்வெட்டுகள், குகை, பாறை ஓவியங்கள் முதலியவற்றைப் பாதுகாக்க வேண்டும். அரியநூல்களையும் அனைத்து ஓலைச்சுவடிகளையும் எண்ம முறையில் சேமித்துப் பாதுகாக்க வேண்டும்.

34. மறைந்துவரும் தமிழ் வட்டார வழக்குகளை, கரிசல் பகுதியார், கொங்குநாட்டார், நகரத்தார், சேலத்தார், நடுநாட்டார் முதலானோர் பேச்சு வழக்குகளைப் பதிவு செய்து காப்பாற்ற வேண்டும்.

35. தமிழ்நாட்டிலும், புதுவையிலும் ஒன்றிய அரசால் நடத்தப்பெறும் ‘கேந்திரிய வித்யாலயா’ போன்ற பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்கும்படிச் செய்யவேண்டும்.

இந்த நீண்ட பட்டியலில் முதலில் குறிப்பிட்டுள்ள 1 முதல் 5-ஐ நிறைவேற்றினாலே பின்னால் குறிப்பிட்டுள்ளவற்றை எளிதில் நிறைவேற்றிவிடமுடியும். ஆனால், மேலே குறித்த 35-உம் தமிழின் காப்பிற்கும் ஆக்கவளர்ச்சிக்கும் இன்றியமையாதன ஆகும்.

அரசுகள் இவற்றை நிறைவேற்றித், தமிழை உலக மொழிகளுக்கு இணையாக உயர்நிலைஎய்த உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென ‘நற்றமிழ்’ வேண்டிக் கேட்டுக்கொள்கின்றது.

எந்தமிழ் காக்க முன்நிற்பீர் -அதற்

கேற்ற பணிகளைச் செய்குவீர் இன்றே !

- பாவலரேறு பெருஞ்சித்திரனார். (1959)

கடன்என்று தமிழ்த்தொண்டில் அமிழ்வாய் — ஒரு

கடல்போன்ற புகழ்கொண்டு கமழ்வாய் ! - பாவேந்தர்

                                                                                                            - த.ந.