திங்கள், 14 மார்ச், 2016

ஐரோப்பியரும் வடமொழியாளரும்!
-         உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்!

     மேலைநாட்டு ஐரோப்பியரிடம் காணப்படாத ஒரு தீய பழக்கம் வடமொழியாளரிடம் இருந்தது. ஐரோப்பியர் தாம் கேட்கும் செய்தியும் கற்கும் பொருளும் யாவரிடம் கிடைத் திருக்கின்றனவோ அவரையும் அவர்களின் நூலையும் விடாமற் குறிப்பது அவர்கள் வழக்கம்.
    
            அவர்களுடைய நூல்களைக் காண்போமாயின், இது இன்னார் கூறியது; இதைக்கூறியவர் இன்ன நூலிற் கூறியுள்ளார் என்பதைத் தவறாமற் குறிப்பர். பின்பு எந்தப் பொருளேனும் புதிதாகக் காணப்படின், அப்பொருள் காணப்படும் இடத்தே அதற்கு எப்பெயர் வழங்குகிறதோ அதனைத் தங்கள் மொழியொலிக் கேற்பத் திரித்துக்கொள்வர; ஊர்ப்பெயர், மக்கட்பெயர் ஆகியவற்றையும் அவ்வாறே திரித்துக்கொள்வது அவர்கள் இயல்பு.
     வடமொழியாளரோ எனில், அப்பெயரை வடமொழியில் மொழிபெயர்த்து அவர்களுடையதாகத் தோன்றுமாறு செய்து கொள்வர்.
     விரிஞ்சிபுரத்திலுள்ள இறைவனுக்குப் பழம் பெயர் வழித்துணை நாயனார் என்பது. விருத்தாசலத்துக்குப் பழமையான பெயர் முதுகுன்றம் என்பது. வழி என்பதை மார்க்கமென்றும் துணை என்பதைச் சகாயம் என்றும் மொழிபெயர்த்து மார்க்க சகாயர் என்றும், முதுமை விருத்தம், குன்றம் அசலம் ஆகவே முதுகுன்றம் விருத்தாசலமென்றும், வெண்காடன் என்பதைச் சுவேதாரணியன் என்றும் கூறினர்.
     இவ்வாறே, விரிஞ்சிபுரத்திற்கு அருகில் ஓடும் பாலாற்றை க்ஷீரநதி என்றும், அழகர் மலையிலுள்ள சிலம்பாற்றை நூபுர கங்கை என்றும், அறம் வளர்த்தாள், பெரியநாயகி என்ற பெயர்களைத் தர்மசம்வர்த்தினி, பிரகந்நாயகி என்றும் மொழி பெயர்த்துக் கொண்டனர். இவ்வாறே சைவத் திருமுறைகளிலும் நாலாயிரப் பிரபந்தங்களிலும் காணப்படும் பல பெயர்கள் வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன.
     வழித்துணை நாயனாரை ஐவே கைடு (Highway guide) என்றோ முதுகுன்றை குட் ஓல்டு இல்லக் (Good old hillock) என்றோ ஆங்கிலேயரோ வேறு ஐரோப்பியரோ மாற்றியதோ, மாற்றுவதோ கிடையாது.

-         தமிழ்ப்பொழில் 32ஆம் துணர், மார்ச்சு 1957.
நன்றி! உரைவேந்தர் தமிழ்த்தொகை 23, பக்கம் 172, 173. 

-------------------------------------------------------  

கருத்துகள் இல்லை: