ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!


காலஞ்சென்ற மதிப்பிறகுரிய திரு. இராம சம்பந்தம் ஐயா 'தினமணி'யின் ஆசிரியர் பொறுப்பினின்றும் நீங்கிய பின்னர், அந்நாளேட்டின் போக்கை நடுவுநிலைத் தமிழர்கள் கவனித்து வருகின்றனர்.
7-7-2007ஆம் நாள் தினமணியின் ஆசிரியருரை தமிழில் ஆங்கிலம் கலக்கப் படுவதைப் பற்றி மிகவும் கவலை தெரிவித்தது. ஊடகங்களும் இதழ்களும் தமிழ்மொழியின் அழிவிற்கு வழிகோலுவதாகக் கூறியது. தமிழைக் காப்பாற்ற வேண்டுமெனக் கவலைப்பட்டது. ஆனால், அன்றைய தினமணியிலும் அதற்குப்பின் வந்தவற்றிலும் தங்கு தடை தயக்கமின்றி ஆங்கிலச் சொற்கள் கலந்தெழுதியதை - எழுதிவருவதை - எவரும் இல்லையென மறுக்க இயலாது. இப்போக்கே, அந்த ஆசிரியருரைப் போலித் தனமாகவும் ஏமாற்றுத் தனமாகவும் எழுதப் பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகின்றது. துணுக்கத் துணுக்கான குற்றச் செய்திகளைத் தொகுத்து அதற்குக் 'கிரைம் செய்திகள்' என்று தினமணி தலைப்பிட்டதும் கூட அந்த ஆசிரியருரை எழுதப் பட்டதற்குப் பின்னர்தான்!
இவையிருக்க, 18-3-2008ஆம் நாள் தினமணியில் "தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்" என்ற தலைப்பில் ஓர் கட்டுரை வந்தது. ஈர்ப்பான தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையில், தமிழ் சீரழிக்கப் படுவதற்குக் கவலைப்பட்டு எழுதுகின்ற ஏடுகளில் காணப்படும் பல்வேறு பிழைகள் சிரிப்பை வரவழைப் பதாகக் கூறப்பட்டிருந்தது. அக்கூற்று ஓரளவு உண்மையே! ஆனால், அக்கட்டுரையாசிரியை, தமிழ்காக்கும் நோக்கில் எழுதுகின்ற எல்லா ஏடுகளையும் ஒட்டுமொத்தமாக அங்ஙனம் கூறுவது அவரின் அறியாப் போக்கையே காட்டுகின்ற தெனலாம்.
ஒவ்வொரு நாளேடும் இதழும் தமிழை முறையாகப் பயின்றவரைக் கொண்டு பிழைதிருத்தம் செய்தால் பல்வேறுவகைப் பிழைகளைக் களையலாம் எனக்கட்டுரையாசிரியர் கூறுவது நற்றமிழ் நலம்நாடும் நல்லறிஞர் நெடுங்காலமாக வலியுறுத்திவரும் கருத்தே.
இந்திமொழிப் பாடலை இந்திப்பாடகர் பாடும்போது இருக்கும் இனிமை தமிழ்ப்பாடகர் பாடும்போது இல்லை என யாரோ ஒரு பாடகி கூறியதாக இந்தக் கட்டுரையாசிரியை எடுத்துக் காட்டியிருக்கிறார். தமிழ்ப்பாடலைத் தமிழ்ப் பாடகர் பாடும்போது இருக்கும் இனிமை ஓர் இந்திப்பாடகர் அத்தமிழ்ப்பாடலைப் பாடும்போது இருக்க இயலாது என்ற உண்மையை எண்ணிப்பார்க்க வேண்டாவா?

அடுத்து, எம்மொழியும் எல்லாவகை எழுத்துக்களையும் பெற்றிருக்க இயலாது. ஒவ்வொரு மொழியும், அம்மொழி பேசும் மக்கள் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலைகளைப் பொருத்தும் அவர்களின் உணர்வு உணவுகளைப் பொருத்தும் ஒலிகளையும் அவற்றிற்கான எழுத்துக்களையும் பெற்றிருக்கின்றன. சீன எழுத்தின் ஒலிப்பை வேறு எந்த மொழி பெற்றுள்ளது?

ஒருமொழி தன் இயல்பிற்கேற்காத ஒலியினை ஏற்பின் நாளடைவில் தனக்குறிய சீர்சிறப்புத் தன்மைகளை இழந்து, சிதைந்து வேறோர் கலவை மொழியாகிப்போகும். இதுவேநடைமுறை உண்மையென மொழியறிஞர்கள் விளக்குகின்றனர்.
'' என்ற எழுத்து தமிழ் எழுத்தில்லை என்று புறக்கணிக்கும் தமிழ்வெறியால் தமிழுக்குப் பேரிழப்பு என்று கட்டுரையாசிரியை சீறுகிறார்! உண்மை அறியாமல் உணராமல் வரம்பு கடந்து வாயவிழ்க்கும் கூற்றே இது! தமிழ் என்பதை ஆங்கிலத்தில், "டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தமிஷ், தமிஸ்..." -என்றெல்லாம் தானே எழுதுகின்றனர்! பலுக்குகின்றனர்! '' என்னும் தமிழ் எழுத்தைப் புறக்கணிக்கும் ஆங்கில வெறியால், ஆங்கிலத்திற்குப் பேரிழப்பு என அம்மையார் கூறுவாரா? ', , ன..' போன்ற எழுத்துக்களைப்புறக்கணிக்கும் சமற்கிருத வெறியால், சமற்கிருதத்திற்குப் பேரிழப்பு என அந்த அம்மையார் எழுதிவிடுவாரா?

பிற மொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்துத் தமிழை வளப்படுத்த வேண்டும் என்று கூறுவதுதானே சரி. அவ்வாறின்றி, பிறமொழி எழுத்துக்களையும் பிறமொழிச் சொற்களையும் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டுவென வற்புறுத்துவது எவ்வாறு சரியாகும்? அவ்வாறு அயல் எழுத்தும் அயற்சொற்களும் கலந்தால், தமிழ் தன் இயல்பு கெடும்; சீர்மை குன்றும்! தமிழை அடையாளந் தெரியாத மொழியாக்கி அழித்தொழிக்கும் செயலாகவே அம்முயற்சி அமையும் அன்றோ?
"பற்றுதலுக்குப் பதிலாய் வெறியை மேற்கொண்டால் தமிழ் அழியும்" என்று சாவமிடும் கட்டுரையாசிரியை, 'பற்று'க்கும் 'வெறி'க்கும் என்ன விளக்கங்களை வைத்திருக்கின்றார் என்பதையும், அவற்றை அளந்து காட்ட வைத்திருக்கும் அளவுகோல் என்ன என்பதையும் வெளிப்படுத்தாமல் கமுக்கமாக வைத்துக்கொண்டு விட்டார்.
"தகுதி" என்ற தகைசான்ற சொல்லிருக்க, "அந்தஸ்து" என்ற அயற்சொல்லைத்தான் எழுதுவேன் - என்று அடம்பிடிக்கும் கட்டுரையாசிரியை தமிழை வளர்த்து உலகம் முழுதும் பரப்ப விரும்புவதாகக் கூறுவதைப் படிக்கையில் சிரிப்புமட்டுமா வரும்? உணர்வுமிக்க தமிழர்க்குச் சீற்றமும் வருவது இயல்பே யன்றோ?
தமிழை முறையாக அறிந்துணரவில்லையெனக் கூறிக்கொண்டே, தமிழில் பிறமொழி எழுத்துக்களையெல்லாம் கலந்தெழுத வேண்டுமென வற்புறுத்துவதற்கும், அவ்வெழுத்துக்களை எப்படியெல்லாம் ஒலிக்கவேண்டுமென வலிந்த ஆய்வு(?) மேற்கொண்டு வழிவகை கண்டு வலியுறுத்துவதற்கும் இம்மண்ணில் யாருக்கும் எந்தத் தடையுமில்லையே!
இவர்கள், சமற்கிருதத்தில், உலகிலுள்ள எல்லா ஒலிகளுக்குமான பல்வேறு மொழி எழுத்துக்களையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தியும், அவற்றை ஒலிப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து கண்டுபிடித்துக் கூறியும் தொண்டாற்றலாமே! இவற்றை விளக்கி, "சத்தான சமற்கிருதம் சகமுழுதும் பரவட்டும்" என்ற தலைப்பில் 'தினமணி'யில் கட்டுரை எழுதித் தெளிவுறுத்தலாமே? விரைவில் செய்வார்கள் என்று நம்புவோம்!
---------------------------------------------------------------------

5 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

ஐயா வணக்கம்.
தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் என இருக்கவேண்டும்.
மு.இளங்கோவன்

குமரன் (Kumaran) சொன்னது…

அருமையாகச் சொன்னீர்கள். அடுத்த முறை யாராவது கிரந்த எழுத்துகள் தமிழின் பகுதி என்று சொல்ல வந்தால் இந்தக் கட்டுரையில் இருக்கும் வாதங்களை எடுத்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி.

தமிழநம்பி சொன்னது…

நன்றி முனைவர் ஐயா!
-தமிழநம்பி.

குமரன் ஐயாவிற்கு,
பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா!
-தமிழநம்பி.

பெயரில்லா சொன்னது…

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Smartphone, I hope you enjoy. The address is http://smartphone-brasil.blogspot.com. A hug.

தமிழநம்பி சொன்னது…

நன்றி ஐயா!