மொழியும் மரபும் தமிழரும்
இக்கால் தமிழரக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ்
நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம். அந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று
அதிகாரங்களையும் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒவ்வொன்பது இயல்களென இருபத்தேழு இயல்களையும்
கொண்டுள்ளது. தமிழின் இலக்கிய இலக்கண மரபை விளக்குவதில் இந்நூல் தலைசிறந்ததாக விளங்குகிறது.
தொல்காப்பிய ஆசிரியர்
இலக்கண இலக்கிய வாழ்வியல் கூறுகளைக் கூறுகையில் பெரும்பாலான இடங்களில் அவருடைய தற்கூற்றாகக்
கூறாமல், அவர்க்கு முந்தைய இலக்கண இலக்கிய அசிரியர்கள் கூறுவதாகவே தெளிவுபடக் கூறியுள்ளார்.
‘வழக்கு எனப்படுவது
உயர்ந்தோர் மேற்றே’ என்ற தொல்காப்பியக் கூற்றின்படி கல்விகேள்விகளாலும் குடிப்பண்பாலும்
உயர்ந்தவர் மெற்கொண்டு வந்த தொன்னெறி விளக்கப்படுகிறது.
என்மனார் (என்று
சொல்வார்கள்) என்ற சொல்லாட்சி மட்டுமே 74 இடங்களில் தொல்காப்பியரால் பயிலப்பட்டுள்ளது.
அதனைப்போன்றே, ‘என்ப’ என்ற சொல்லைத் தொல்காப்பியர் 144 இடங்களில் கையாண்டிருக்கின்றார்.
‘மரபு’ என்ற சொல்லை அவர் அறுபதிற்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தியிருக்கின்றார்.
இவற்றுடன், எழுத்ததிகாரத்தில் மூன்று இயல்களின்
பெயர்கள் நூல்மரபு, மொழிமரபு, தொகைமரபு என அமைக்கப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தில் ஓர்
இயலின் பெயர் விளிமரபு. இவற்றோடு, ‘மரபியல்’ என்றே ஓர்இயல் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கினால், மரபைப்
போற்றுதலின் இன்றியமையாமை ஒருவாறு விளங்கக்கூடும். வேலையற்றுப்போய் வீணுக்கு இவ்வளவு
முகன்மை தந்துவிட்டதாகக் கருதுகிறவர்கள், மரபைப் போற்றாது இலக்கண வரம்பைக் கைவிட்டு,
கண்டமண்டலமாகத் தமிழில் பிறமொழி கலக்க விட்டதனால்தான் ‘மலையாளம்’ என்ற மொழி உருவாகி
அம்மொழி பேசுவோர் தம்மை வேற்றாராகக் கருதித் தமிழர்க்கு எதிராக இயங்கக்கூடியநிலை உருவாகியதையும்
நுட்ப உணர்வாளர் அறிவர். மரபு நிலை திரியின் மொழிச்சிதைவு ஏற்பட்டு மொழிஅழிவுக்கு வழிவகுக்கும்
என்ற உண்மையை உணரமறுப்பது அறிவுடைமையாமா?
இனி, மொழிக்கு முதலில் வரா எழுத்துக்களை இலக்கணம்
வரையறுத்திருக்கின்றது. அதில் இரண்டு எழுத்துக்களுக்கு மட்டும் விலக்களிக்கலாம் என
ஒருவர்கூற, இன்னொருவர் நான்கைந்து எழுத்துக்களுக்கு விலக்களிக்கலாம் என வலியுறுத்த,
நாளை ஒரு வெங்கியோ சங்கியோ மெய்யெழுத்துகளையும் மொழிக்கு முதல் எழுத்துகளாக எழுத வேண்டுமென
அடம்பிடிக்கமாட்டார் என்று சொல்லமுடியுமா? இப்போதே, ‘க்ருசாங்கிணி’ என்று கிறுக்கர்
எழுதுகின்றாரே!
இவையிருக்க புது மொழியறிவாளி ஒருவர், மொழித்தூய்மையாளரே
மொழி அழிவுக்கு வழிவகுக்கின்றனரென்று உண்மைக்குத் தொடர்பில்லா அவருடைய ஆய்வறிவால் உளறுவதைக்
காண்கின்றோம். ஐம்பதாண்டுகளுக்கு முன்னர்த் தமிழ்நடை எப்படி இருந்தது, இப்போது எப்படி
இருக்கிறதென கொஞ்சம் முயன்று பார்த்தால்தான் மொழித்தூய்மையாளரின் உழைப்பும் அவர்கள்
பட்ட தொல்லை துன்பங்களும் இழிவு அவமானங்களும் பயன்தந்திருப்பதை - முழுமையாக இல்லாவிட்டாலும்
பெரியஅளவு தமிழ் மீட்கப்பட்டிருப்பதை உணரமுடியும்.
காலந்தொறும் தமிழ் அழிப்பு முயற்சி வெவேறு உருவங்களில்
வெவ்வேறு வகைகளில் இருந்துகொண்டுதானிருக்கின்றது. தமிழ் தன் கட்டுக்கோப்பால் தனைத்தானே
காலந்தொறும் காத்துக்கொண்டு வருகின்றது. அந்தக் கட்டுக்கோப்பை சிதைக்க முயல்வார் எவரும்
தமிழழிப்பு முயற்சியாளராகவே கருதப்படுவர்.
==============================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக