சனி, 1 பிப்ரவரி, 2020

புதுச்சேரி வரலாற்றுச் செய்திக் குவியலாக ஒரு நாள்காட்டி


புதுச்சேரி வரலாற்றுச் செய்திக் குவியலாக                  ஒரு நாள்காட்டி          

==================================================================
    

          புதுவை அருங்காட்சியகத் திட்டத்தில், தாழி ஆய்வு நடுவத்தின் ஆக்கத்தில், அன்னை அருள் கட்டளையின் வெளியீடாக 2020-ஆம் ஆண்டு நாள்காட்டி ஒன்று வந்திருக்கின்றது. 28-1-2020 அன்று அன்பர் அத்திப்பாக்கம் கணியனார் வழி அந் நாள்காட்டியைப் பெற்றேன்.
நாள்காட்டியின் முதல்தாள் முகப்பில் புதுச்சேரி நகரத்தின் வரைபடம் உள்ளது. புதுச்சேரி நகரம் 1827-இல் வெள்ளை நகரமென்றும் கருப்பு நகரமென்றும் பிரிக்கப்பட்டிருந்த செய்தி இருந்த்து. ஆம்பூர்சாலை, செஞ்சிசாலைக்கு இடையிலிருக்கும் கால்வாயிலிருந்து கிழக்கே கடற்கரை வரையிலான பகுதி வெள்ளை நகரமென்றும், கால்வாயிலிருந்து மேற்குப்பகுதி (பொலிவார்டு) அலங்கம்(அரண்) வரையிலான பகுதி கருப்பு நகரமென்றும் பிரிக்கப்பட்டிருந்த செய்தி உள்ளது. வெள்ளையர் நகர்ப்பகுதியில் பிறர் குடியேறத் தடை இருந்திருக்கிறது. 1777-இல் புதுச்சேரி நகரத்திலிருந்த தெருக்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
நாள்காட்டியின் ஆவணப்பணி, புதுச்சேரி வரலாற்றுப் பதிவுக்கு உழைப்பளித்த இழான் தெலோசுக்குப் படையலிடப்பட்டுள்ளது. நாள்காட்டியின் முதல் தாளின் இரண்டு பக்கங்களிலும், புதுவை அருங்காட்சியகத் தேசிய மரபு அறக்கட்டளைப் பொறுப்பாண்மையர் .அறிவன் தந்துள்ள செய்திகளை அறிகையில் வியப்பும் கவலையும் மேலோங்குகின்றன.
இந்திய-பிரெஞ்சு அருங்காட்சியக மொன்றின் அமைப்புக்காக மேற்கொண்ட முயற்சிகள் புதுச்சேரி அளவில் ஒத்துழைப்பின்மையால் தடைபட்டுவரும் நிலை, நேர்ந்த தொல்லைகள் துன்பங்கள் படிக்கையில் மனம்நோகச் செய்வனவாக உள்ளன, புதுச்சேரி வரலாற்றுத் தேடல் தொடர்ந்துகொண் டிருப்பதும், நூற்றுக்கணக்கான படங்களைக் கொண்ட புதுவை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதும் சிறப்பு நூலகப்பிரிவு தொடங்கிய செய்தியும் ஆறுதலளிப்பன. இத்தகு முயற்சிகளில் துணைநின்றார் நன்றியுடன் குறிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி நகரத்தின் பெயர்கள், ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, வீரா (நாயக்கர்) நாட்குறிப்பு, பல்வேறு அகராதிகள் ஆகியவற்றில் எவ்வெவ்வாறு தரப்பட்டுள்ளன என்ற செய்தியும் உள்ளது. புதுவை நகரிலுள்ள தெருக்களின் பெயர்கள் அரசிதழில் உள்ளவாறு பட்டியலிடப் பட்டுள்ளதோடு, தெருக்களைப்பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. பிரெஞ்சிந்திய ஆளுநர்களின் பெயர்களும் காலவாரியாக தரப்பட்டுள்ளன.
மாத நாள்காட்டியின் ஒவ்வொரு மாதப் பக்கத்திலும் கீழே நாள்காட்டியும் மேலே செய்திகளும் படங்களும் இடம்பெற்றுள்ளன. நாள்காட்டியின் நீளம் இரண்டடி; அகலம் ஒருஅடி ஐந்து விரற்கடை யாகும். நாள்காட்டியின் மாத, கிழமைப் பெயர்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மும் மொழிகளிலும் தரப்பட்டுள்ளன.
சனவரி மாதப் பக்கத்தில், சோழமண்டலக் கடல்(கரை) என்ற தலைப்பில், சோழர்களைப்பற்றிய சிறு குறிப்பு உள்ளது. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுமத்தைப் பற்றிய செய்தி உள்ளது. புதுச்சேரியின் நகரத் தந்தை என்றழைக்கப்பட்ட பிரான்சுவா மர்த்தேன் பற்றிய செய்தியும் பிறவும் உள. புதுச்சேரி நகரத்தின் கிழக்குக் கடற்கரையைக் காட்டும் சிறு வரைபட மொன்றும் பெயர் குறிப்பிடப்படாத ஐந்து தலைவர்களின் படங்களும் உள்ளன.
பெப்ருவரி மாதப் பக்கத்தில், அலங்கம் என்ற தலைப்பில் புதுவை நகரின் நான்குதிசை அலங்கங்களையும் காட்டும் வரைபடமொன்றும் தலைவர்கள் பதினொருவர் படங்களும் இரண்டு கட்டடகளின் படங்களும் ஒரு பிள்ளையார் படமும் உள்ளன. படங்களைப்பற்றிய குறிப்போ பெயர்களோ இல்லை.
மார்ச்சு மாதப் பக்கத்தில், தூய இலூயி என்ற தலைப்பில் அவரைப் பற்றிய சிறு குறிப்பு உள்ளது. தூய இலூயி என்ற பெயரில் புதுச்சேரி நகரில் கோட்டை கட்டப்பட்ட செய்தி உள்ளது. புதுவை நகரப் பகுதி யொன்றின் சிறு வரைபடமும் நேரு, பட்டேல், போசு, அண்ணா, சுப்பையா முதலிய பதின்மரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. பெயர்கள் குறிக்கப படவில்லை.
ஏப்பிரல் மாதப் பக்கத்தில், திப்புசுல்தான் என்ற தலைப்பில், அவரைப் பற்றிய சிறு குறிப்பு உள்ளது. புதுவை நகரப் பகுதியொன்றின் சிறு வரைபடமும், கோயில், பள்ளிவாசல், திருச்சவை படங்களும் உள. காந்தி, திப்பு, ஐதர்அலி படங்களுடன் இன்னொருவர் படமும் உள்ளது.
மே மாதப் பக்கத்தில், நிடமாமல்ல இராசப்பர் என்ற தலைப்பில், பிரெஞ்சு, ஆங்கிலம் இந்திய மொழிகள் தேர்ந்த அவரைப் பற்றிய சிறுகுறிப்பு காணப்படுகிறது. . புதுவை நகரப் பகுதியொன்றின் சிறு வரைபடமும் இரு கட்டடங்களின் படமும் பெயர் குறிக்கப்படாத அறுவர் படங்களும் உள்ளன.
சூன் மாதப் பக்கத்தில் பெருமாள் என்ற தலைப்பில் புதுவை வரதராசப் பெருமாள் கோயில் பற்றிய குறிப்பு உள்ளது. புதுவை நகரப் பகுதியொன்றின் வரைபடமும் உள்ளது. கோயில் குளம் தெருவைக் காட்டும் நான்கு படங்கள் உள்ளன. பெயர் குறிப்பிடாமல், அரவிந்தர் முதலிய நால்வர் படங்கள் உள.
சூலை மாதப் பக்கத்தில், பாரதி என்ற தலைப்பில் அவரைப் பற்றியும் அவருடைய புதுச்சேரித் தொடர்பு பற்றியும் குறிப்பு உள்ளது. நகரப் பகுதியொன்றின் சிறிய வரைபடம் உள்ளது. பல்வேறு தொழிலாளர்களின் தொழில்களைக் குறிக்கும் ஏழு படங்கள் உள்ளன.
ஆகத்து மாதப் பக்கத்தில், வேதபுரி ஈசுவரர் கோயில் என்ற தலைப்பில், அக் கோயிலைப் பற்றிய அரிய குறிப்பு தரப்பட்டுள்ளது. கோயிலின் படமும் நகரப் பகுதியொன்றின் சிறு வரைபடமும் உள்ளன. ஆசிரியர் மாணவர்களோடு பள்ளி வகுப்புகள் ஐந்தின் படங்களும், இரண்டு கட்டடங்களின் படங்களும் உள்ளன.
செபுதம்பர் மாதப் பக்கத்தில், பொன்னுத்தம்பி என்ற தலைப்பில், பிரெஞ்சிந்தியர், வழக்கு மன்றத்திற்கு உள்ளே காலுறையும் காலணியும் அணிந்து செல்லும் உரிமையைப் போராடி, வழக்காடி வென்று பெற்றுத் தந்த பொன்னுத்தம்பி என்ற வழக்கறிஞரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நகரப் பகுதியொன்றின் சிறு வரைபடமும், மணிக்கூண்டுப் படமும், இரண்டு கட்ட்டங்களின் படமும், இலால்பகதூர் சாத்திரி, சீவானந்தம் முதலிய எழுவரின் படங்களும் உள்ளன.
அக்குதோபர் மாதப் பக்கத்தில், நைனியப்பர் என்ற தலைப்பில், தரகராயிருந்த அவரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் தரப்பட்டுள்ளன. நகரப்பகுதியொன்றின் சிறு வரைபடமும், ..சி., பாவேந்தர், பாவலர்கள் தமிழ்ஒளி, வாணிதாசனார், திருமுருகனார் முதலிய பதினொருவர் படங்களும் பெயர் குறிப்பிடப்படாமல் காணப்படுகின்றன.
நவம்பர் மாதப் பக்கத்தில், பெத்ரோ கனகராயர் என்ற தலைப்பில் அவரைப் பற்றிய சிறு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியொன்றின் சிறு வரைபடமும், பெயர் குறிப்பிடப்படாமல், காமராசர் முதலிய 26பேரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
திசம்பர் மாதப் பக்கத்தில், தெபேர் என்ற தலைப்பில், தெபேர் உருவாக்கிய வரைபடம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. தெபேரின் படமும் இன்னொருவரின் டமும் பெயர் குறிப்பிடப்படாமல் இடம்பெற்றுள்ளன. புதுவை நகர்ப் பகுதியின் சிறு வரைபடம் உள்ளது. புதுச்சேரித் தொடர்புடைய பிரெஞ்சுக்காரர்கள், புதுச்சேரிக்காரர்கள் பலரின் பெயர்கள் பல நீள்வட்டங்களிலும், கட்டங்களிலும், கைகாட்டிகளிலும், பிற அடைப்புகளிலும் தரப்பட்டுள்ளன.
நாள்காட்டி உருவாக்கத்திற்கான அரிய முயற்சியும், ழைப்பும் உணரமுடிகிறது. பாராட்டிற்குரிய பணி. நாள்காட்டியிலுள்ள செய்திகளைச் செப்பமாக்கி முறைப்படுத்தி நூலாக ஆக்கினால் ஓர் அரிய ஆவணமாக நிலையாகப் பேணிக்காக்க இயலும்.
போற்றத்தக்க இவ் அரிய முயற்சியில், புதுவைக்குயில் பாவேந்தரை அடையாளப்படுத்தியதில் நிறைவின்மையைக் குறிப்பிட விரும்புகிறோம். வரலாற்றுப் பேணலில் பேரார்வமும் பெரும் ஈடுபாடும் கொண்டு உழைப்பெடுத்தோரையும் துணையிருந்தோரையும் நெஞ்சாரப் பாராட்டவேண்டும்; பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!
============================================================================   
        




கருத்துகள் இல்லை: