வியாழன், 30 ஜூலை, 2009

வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்!

வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்!

பள்ளிப் படிப்பின்போது, கடையெழு வள்ளல்கள் என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந்த ஏழு வள்ளல்கள் யார் யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் பாரி என்று உடனே தொடங்கி, அங்கேயே நிற்பதைக் காணலாம். சிலர் பாரி, காரி, ஓரி வரை வந்து நின்று போவதைக் காணலாம். தமிழ்மொழி சார்ந்த அலுவலில் இருக்கும் பலரே உடனே விடை சொல்ல முடியாத நிலையில் இருக்கும் போது நாம் இதைப் பெரிய குறையாக எண்ண வேண்டியது இல்லைதான்!
கழக(சங்க) இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறு பாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார்.
கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பது உண்மையாகும்.
இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.
இனி, அந்த ஏழு வள்ளல்களின் பெயரையும் அவர்களின் சிறப்பையும் காண்போம்:
பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகியோரே அவர்களாவர்.


பேகன் பொதினி(பழனி) மலைக்குத் தலைவர். மழைவளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம் மயிலுக்குக் கொடுத்தார் - அம்மயிலுக்குப் போர்த்தினார்.
 மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே கொடைமடம் எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
      புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழைபோலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான் என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.


பாரி பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.
      பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப் படாத ஒரு பாடல் இது:
            பாரி பாரி என்று பல ஏத்தி
            ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
            பாரி ஒருவனும் அல்லன்
            மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.   - (புறம். 107)


காரி, திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே மலாடு ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.
இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்:  ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய தலையாட்டம் என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையை இரவலர்க்கு அளித்தார்!
காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.


ஆய், பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். இவர் நாகம் நல்கிய ஒளிமிக்க நீல மணியினையும் கலிங்கத்தையும் ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தவராம்!
      வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.


அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.
      இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக் கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழவைக்கும் வலியுடையது. அக் கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
      அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.


நள்ளி மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாத
வாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர். 
      நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.


ஓரி சிறிய மலைகள உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லாராதலின், இவ் வள்ளலை வல்வில் ஓரி என்றும் அழைப்பர்.
      ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!
      ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.
      வள்ளல்களின் சிறப்பை,  புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.


------------------------------------------------------------------------

   
     

      
        
      

செவ்வாய், 28 ஜூலை, 2009

தெய்வங்கள் தந்த விடை!




          ‘இரட்டைப் புலவர்கள்என்று அழைக்கப் பட்டவர்கள் இரண்டு அறிவார்ந்த பாவலர்களாவர். அவர்களில் ஒருவர் கால் முடமானவர்; இன்னொருவர் கண் பார்வை இல்லாதவர். கண்பார்வை இல்லாதவர் முடமானவரைத் தோளில் சுமந்து செல்வாராம். முடமானவர், பார்வையற்றவரின் தோளில் அமர்ந்தபடியே வழிசொல்லிச் செல்வாராம்!

          இந்த இரு பாவலர்களும் சரியான நகைச்சுவைக் குறும்பர்கள்! இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே பாடலைப் பாடுவார்கள் இயற்றுவார்கள்! இவர்கள் பாடல் வெணபாவாக இருக்கும். இவர்களின் வெண்பா மிக எளிமையாக அமைந்திருக்கும். பாடல் எளிதில் விளங்கும். அகராதியின் துணை தேடவேண்டிய தேவையே இருக்காது.

          (வெண்பா நான்கடிப்பாடல் என்பது பலரும் அறிந்ததே. முதல் மூன்றடிகள் நான்கு சீர்களும் நான்காம்அடி மூன்று சீர்களும் உடையதாக இருக்கும். நேரிசை வெண்பா என்றால் இரண்டாம் அடியின் மூன்றாம் சீருக்கும் நான்காம் சீருக்கும் இடையில் சிறு கோடு இருக்கும்; அவ்வாறு வரும் அந்த நான்காம் சீரைத் தனிச்சீர் என்பார்கள்.)

          இரட்டைப் புலவர்கள், ஏதாவது ஒரு செய்தியைப் பற்றியோ, ஆளைப் பற்றியோ, காட்சியைப் பற்றியோ, நிகழ்ச்சியைப் பற்றியோ அவர்களுக்கே உரிய குறும்புத் தனத்துடன் பாடுவார்கள். இருவருள் ஒருவர் முதலில், வெண்பாவின் (முதல் ஏழுசீர் அல்லது எட்டுச்சீர் கொண்ட) முதல் இரண்டடிகளைப் பாடுவார். பெரும்பாலும் அந்த இரண்டடிகளும் கேள்வி கேட்பது போலவோ, ஐயமாக வினவுவது போலவோ இருக்கும்.

          தொடர்ந்து இரண்டாமவர், அடுத்த (எட்டு அல்லது ஏழுசீர் கொண்ட) எஞ்சிய இரண்டடிகளைப் பாடுவார். இரண்டாவதாகப் பாடுகின்றவர், முதலில் பாடியவரின் கேள்விக்கு விடையளிக்கும் வகையிலோ அல்லது அவர் எழுப்பிய ஐயத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையிலோ கருத்தமைத்துப் பாடுவார்.

          இவ்வாறு அவர்களால் பாடப்படும் வெண்பா, மிக நகைச்சுவை யோடும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமைந்து கேட்போரைச் சுவைத்து மகிழவும் ஆழச் சிந்திக்கவும் வைக்கும்.

          ஒருமுறை, நம் இரட்டைப் புலவர்கள், ஈழத்தில் நிகழ்ந்தது போன்ற ஏதோ பெரும் பேரழிவையோ, அறங்கொன்ற கொடுங் கொடுமையையோ அறிந்திருக்கிறார்கள். மனம் ஆறாத நிலையில், அவர்கள் அப்போதிருந்த உணர்வுநிலையில், தெய்வங்களை நோக்கிக் கேள்வி கேட்பது போலவும்,  அதற்குத் தெய்வங்கள் விடையளிப்பது போலவும் பாடிய ஒரு சுவைமிக்க பாடலை இப்போது பார்ப்போம்.

          முதலில் ஒருவர் பாடிய இரண்டடிகள்: 
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்
கூட்டோடே எங்கே குடிபோனீர் ?”
           இந்த இரண்டடிகளின் பொருள் நமக்கு எளிதில் புரிகிறது. கீர்த்தி என்றால் மிகுந்த புகழ். மிகுந்த புகழை உடைய, கேட்ட வரத்தை அளிக்கும் ஆற்றல் மிக்க தெய்வங்களே! இங்கிருந்து நீங்கி, எல்லோருமாக எங்கே போய்க் குடியேறி விட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார். 

          இதற்கு விடையளிக்கும் வகையில் இரட்டைப் புலவர்களில் இரண்டாமவர் பாடிய பகுதி இதுதான்: . .
__________________________           _- பாட்டாய்க்கேள்! செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண். 

    இந்த அடிகளின் பொருளைப்புரிந்து கொள்வதும் எளிதே! பாடுகின்றவனே! உன் கேள்விக்கு விடை கூறுகிறேன் கேட்டுக்கொள்! எங்கள் ஆற்றல் செல்லுபடியாகின்ற காலமெல்லாம் ஆளுமையை, அதிகாரத்தைச் செலுத்தினாம்! இப்போது இருளான கெட்டகாலம்; எங்கள் ஆற்றலெல்லாம் இழந்து, கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளாகி விட்டதைப் பார்த்திடுக!” - என்று தெய்வங்கள் முதலில் பாடிய பாவலருக்கு விடையளிப்பதாகக் கருத்தமைத்து, இரண்டாமவர் பாடிவிட்டார்.

    முழுப் பாடலையும் இப்போது பார்ப்போம்:
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்
கூட்டோடே எங்கே குடிபோனீர்? - பாட்டாய்க்கேள்!
செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண். 
   
    இரட்டைப் புலவர்களின் பாடல் எப்படி உள்ளது? ஈழக் கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டுத் தெயவங்களை நோக்கி வினா எழுப்பி, விடை கூறியவாறு இக்காலத்தில் தோன்றுகிறது அல்லவா?

---------------------------------------------------------

திங்கள், 27 ஜூலை, 2009

நெஞ்சே வெடித்துவிடும்போல்…




     துவைத்த துணிகளை மாடியில் கட்டியிருந்த கொடியில் ஒவ்வொன்றாய் விரித்துக் காயப்போட்டேன். காற்றில் பறந்து சென்றுவிடாதிருக்கக் கவ்வியைப் பொருத்தமாகப் போட்டேன். அதற்குள் கீழிருந்து அரசியின் (என் இல்லத்தரசிதான்) குரல் அழைத்தது. நெடுங்குத்தாய் அமைந்திருந்த படிக்கட்டுகளில் பொறுமையாகவும் கவனத்தோடும் இறங்கத் தொடங்கினேன்.

     எங்கள் வீட்டுக்கு எதிர்வீடு செந்தில் வீடு. செந்தில் ஏழாம் வகுப்பில் படிக்கும் நல்ல பையன். செந்தில் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள வீடு, 'சிவப்புக் கிழவி' என்று எங்களுக்குள் (நானும் என் துணைவியும்) பெயரிட்டுப் பேசிக்கொள்ளும் அம்மையாரின் வீடு. அவரும் அவர் கணவரும் அவர்களின் இரண்டாம் மருமகளோடும் மூன்றாண்டு அகவையுடைய பேரக் குழந்தை செல்வியோடும் வசித்துவரும் வீடு.

     நான் படிகளில் இறங்கிக் கொண்டிருந்த போது, அந்தச் சிவப்புக் கிழவியின் மருமகள், அப்போது தான் குளித்து உடுத்துப் பளிச்சென்றிருந்த தோற்றத்துடன் செந்தில் வீட்டு வாயிலில் உள்ள இரண்டு படிகளையும் ஒரே தாவாகத் தாவித் தாண்டி மகிழ்வுத் துள்ளலில் உள்ளே சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன்.

     தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த செந்தில் வெளியே வந்தான். மாடிப் படிகளிலிருந்து கீழே இறங்கிய என்னிடம், "கல்லப்பட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு ; அதனால் தான்!" என்று நமுட்டுச் சிரிப்புடன் மெல்லக் கிசுகிசுத்தான்! அந்த மருமகள், தன் கணவருடன் தனிமையில் பேச வசதியாக பக்கத்துவீட்டுத் தொலைப்பேசியில் அழைக்கச்சொல்லிப் பேசுவது வழக்கம்.

     சிவப்புக் கிழவியின் முதல் மகனுக்கு உள்ளூரிலேயே கட்டட ஒப்பந்தகர் வேலை; நல்ல வருமானம் உடையவர். மனைவி குழந்தைகளுடன் அவர் உள்ளூரிலேயே இரண்டு தெரு தள்ளிச் சொந்த வீட்டில் வசதியாக இருக்கிறார் . இரண்டாவது மகன், 50 கல் தொலைவிலிருந்த கல்லப்பட்டுத் தனியார் கல்லூரி ஒன்றில் வேலை செய்து வந்தார்; வருமானம் குறைவு; கல்லப்பட்டிலேயே குடும்பத்துடன்தான் இருந்தார். வீட்டு வாடகையும் குழந்தை செல்விக்கு மழலையர் பள்ளிக் கட்டணமும் வருமானத்தில் பெரும் பகுதியை விழுங்கியதால், பற்றாக் குறையால் தொல்லைப் பட்டுக் கொண்டிருந்தார்.

     இதை அறிந்து, சிவப்புக்கிழவியும் அவர் கணவரும், மருமகளையும் பேத்தியையும் தங்களுடனே த்தங்கி இருக்க, விழுப்புரத்திற்கு அழைத்து வந்து விட்டார்கள். குழந்தையை வீட்டிற்கு அருகிலுள்ள மழலையர் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். குழந்தை செல்வியின் அப்பா, பணியாற்றி வந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கிக் கொண்டார். கல்லப்பட்டிலிருந்து அவர் ஒவ்வொரு காரி(சனி)க்கிழமை மாலையும் விழுப்புரம் வந்துவிடுவார்; ஞாயிற்றுக்கிழமை இருந்து விட்டுத் திங்கள் கிழமை விடியற் காலையில் கிளம்பிக் கல்லபட்டுக்குச் செல்வார். இப்படியான நிலையிலேயே கடந்த ஆறுமாத காலத்தில் வாழ்க்கை அவர்களுக்குப் பழக்கமாகி விட்டது.

     நான் வீட்டிற்கு உள்ளே வந்ததும் அரசி கடுகடுத்தாள். "கண் ஆய்வு செய்துகொள்ள இன்றைக்குத் தவளக்குப்பம் போகவேண்டு மென்பது மறந்து விட்டதா? ம் ... ம்... கெளம்புங்க" என்று அலுத்துக் கொண்டாள்.

     ஆம்! அவளுக்குத் தையல் வேலையின் போதும் படிக்கும் பொழுதும் பார்வைத்தெளிவின்றித் தொல்லைப்பட்டதால், இன்று புதுவையை அடுத்தத் தவளக்குப்பம் கண் மருத்துவமனைக்குப் போக வேண்டுமெனத் திட்டமிட் டிருந்தோம். விரைந்து குளித்து விட்டு நானும் கிளம்பினேன்.

     நாங்கள் இருவரும் வீட்டைவிட்டுப் புறப்படும் போது
சிவப்புக்கிழவி வீட்டு வாயிலில் மகிழுந்து ஒன்று நின்று கொண்டிருந்ததைக் கவனித்தேன். யாரேனும் விருந்தினர் வந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

     நாங்கள் தவளக்குப்பம் சென்று அரசிக்குக் கண் ஆய்வு செய்து கொண்டு, அந்த மருத்துவமனைக் கடையிலேயே கண்ணாடியும் காத்திருந்து வாங்கிக் கொண்டோம். பிறகு, புதுச்சேரி வந்தோம். புதுவையில் கடைகளில் வாங்க வேண்டியிருந்த பொருள்களை வாங்கிக் கொண்டு, பேருந்தைப் பிடித்து வீட்டிற்கு வந்து சேர மாலை ஆறுமணியாகி விட்டது.

     வீட்டை நெருங்கும் போதே சிவப்புக்கிழவி வீட்டுக்கு வெளியே தெரு வாயிலில் பந்தல் போடப்பட்டிருந்ததைப் பார்த்தோம். பந்தலின் கீழே நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த சிலர் தமக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

     வீட்டைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்த நிலையில், பின்னாலேயே ஓடிவந்த செந்தில், ‘குழந்தை செல்வியின் அப்பா செத்துப் போயிட்டார்! அவர் வேலை செய்த கல்லூரியில் தண்ணீர்த் தொட்டி இடிந்து விழுந்ததால் அடிபட்டு இறந்தாராம்! மருத்துவ ஆய்விற்குப்பின் உடலை வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரத்திற்கு முன்தான் வந்தார்கள்!என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

     சற்றும் எதிர்பாராத பேரதிர்ச்சியாக இருந்தது! அரசி, உடை மாற்றிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக சிவப்புக்கிழவி வீட்டிற்குச் சென்றாள். நானும் சென்று பார்த்துப் பேசிவிட்டு வந்தேன். காலையில் குளிக்கப் போனபோது விடுதியின் நீர்த்தொட்டி இடிந்து வீழ்ந்ததில் அடிபட்டு அங்கேயே இறந்து விட்டிருக்கிறார்.

     ஆறேகால் மணிக்கெல்லாம் எடுப்பதென்று சொன்னார்கள். கைப்பாடை அணியமாயிற்று. சடங்குகள் செய்வதற்காக, வீட்டிற்கு எதிரில் தெருவில் விசுப்பலகையைக் கொண்டு வந்து போட்டனர். கண்ணாடிப் பெட்டியிலிருந்து உடல் வெளியே கொண்டுவரப்பட்டது. பின்னாலேயே பெண்கள் கூட்டமாக நெருக்கமாய் அழுதபடியே வந்தனர்.

     சிவப்புக் கிழவியின் இரண்டாம் மருமகளை இரண்டு பெண்கள் தாங்கியபடியே அழைத்து வந்தனர். தொய்ந்து துவண்டு வதங்கி வாடிய கீரைத்தண்டாக இருந்தாள். முகம் அடையாளமே தெரியவில்லை. அந்த அளவு துயரத்தேக்கம். காலையில் செந்தில் வீட்டிற்குத் துள்ளித் தாவிச்சென்ற உருவா இது? என் நெஞ்சைப்பிழிவது போன்ற ஓர் அழுத்தமான துன்ப உணர்விற்கு ஆளானேன்.

     எல்லாம் முடிந்தது. இடுகாட்டுக்குச் சென்றவர்கள் ஒவ்வொருவராய்த் திரும்பினர். நானும், அங்கு வீசிய நாற்றம் பொறுக்கமுடியாமல் சடங்குகள் முழுவதும் முடியும் முன்பாகவே திரும்பி விட்டேன். துயரம் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.

     வீட்டில், குளித்துவிட்டு தலையை உலர்த்திக் கொண்டு ஏதோ சிந்தனையாக இருந்தாள் அரசி. நானும் குளித்துவிட்டு வந்தேன். இருவரும் அந்தப் பெண், - சிவப்புக் கிழவியின் இரண்டாம் மருமகளின் துன்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.

     கொஞ்ச நேரத்தில், திடுமென எழுந்தாள் அரசி. இம்... ஒரு குடும்பத்தில் ஒருவரின் இழப்பால் எவ்வெவ் வகையிலெல்லாம் யார்யாருக்கெல்லாம் துன்பம் துயரமென மாயந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்! அங்கே, ஈழமண்ணில் எத்தனையோ மனைவிகளும் எத்தனையோ கணவன்களும் துணையிழந்தும், குழந்தைகள் தாய்தந்தையரை இழந்து கதறிக் கலங்கிக்
கொண்டிருக்கின்றனர். எத்தனையோ முதியோர் கவனிப்பாரின்றி மனஞ் சிதைந்து போயுள்ளனர். அவர்களுக்கு உணவில்லை; மாற்று உடையில்லை; குடிக்க, குளிக்க நீரில்லை; காயம்பட்டோருக்கும் நோயுற்றோருக்கும் மருந்தில்லை. அவர்களின் துன்பம் எப்படிப்பட்டதென நாம் முழுமையாக உணரவே இல்லைஎன்றாள்!

     உண்மைதான்! அத்துன்பத்தின் பாரிய பெரும் பேரளவை இப்போதுதான் உணரமுடிகிறது! ஐயோ, நெஞ்சே வெடித்துவிடும்போல் இருக்கிறது!

     மாந்தத் தன்மையே அற்ற மாந்தராக உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் மாறிவருகின்றனர். அவரவரும் தத்தமது நன்மையை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்குகிறார்கள். ஒன்றிய நாடுகள் அவையும் உதவாத அவையாகிப் போனது! அறம், மாந்தநேயம் என்பதெல்லாம் அவ்வப்போது பேசி ஏமாற்றும் சொற்களாகிவிட்டனஎன்று அரசிக்கு விடை கூறினேன்.

     மேற்கொண்டு எதுவும் பேசாது இருவரும் அமைதி யானோம்!

-------------------------------------------------------------------

புதன், 8 ஜூலை, 2009

ஈழம்: தமிழ்நாட்டு ஆட்சியாளர் நடிப்பும் நாடகமும்!

.  

     சென்னையில், ‘அனைத்து நாட்டுத் தமிழ்நடுவம்என்ற அமைப்பு ஒரு மாநாட்டை 08-06-2009 அன்று ஏற்பாடு செய்திருந்தது.  இந்த மாநாட்டில், வன்னிப்போர் நடந்தபோது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு அறிவுரைக் குழுவின் உறுப்பினராக இருந்த பேராசிரியர் வி.சூர்யநாராயண் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ நம் (இந்தியாவின்) கைகள் இரத்தக் கறையால் களங்கப் பட்டுள்ளனஎன்று அவர் ஒப்புக்கொண்டதோடு, ஈழச் சிக்கலில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசைக் கலந்து கொள்ளாது புதுதில்லி எதையும் செய்ததில்லை என்று கூறி, கருணாநிதி முதல்வராயுள்ள தமிழ்நாட்டரசு, இந்திய அரசின் அனைத்துச் செயல்களுக்கும் உள்கையாக இருந்ததை வெளிப்படுத்தி விட்டார்!

தமிழ்நாட்டு ஆட்சி
     தமிழ்நாட்டில் இப்போது கருணாநிதி முதலமைச்சராக உள்ள தி.மு..வின் சிறுபான்மை ஆட்சி, பேராயக் கட்சியின் துணைதரவோடு தான் நடந்து வருகிறது. ஆட்சியைப் பேராயக்கட்சி கவிழ்த்து விடாமல் எந்த நிலையிலும் எப்படியாவது காப்பாற்றிக கொள்ள வேண்டும் என்பதில் பதவி அதிகாரப் பேராசையை விடமுடியாத தி.மு.. தீர்மானமாக இருக்கிறது. அதனாற்றான், எக்காரணங் கொண்டும் தலைமை அமைச்சர் மன்மோகனும் பேராயக்கட்சித் தலைமையும் மனங் கோணாதவாறு தி.மு..வும் அதன் தலைவரான முதலமைச்சர் கருணாநிதியும் நடந்து கொள்கின்றனர்.

குடும்பம், அதிகாரம்
     தி.மு..வின் தலைவர் கருணாநிதி, தன் குடும்பத்தினர் பலருக்கும் அமைச்சுப் பதவி முதலானவற்றின் வழி நலன்களைச் சேர்த்துக் கொள்ளவும் காத்துக் கொள்ளவும் முதன்மை அளிப்பதை அவருடைய செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
     நடுவண் அமைச்சரவையில் விரும்பிக் கேட்ட துறைகளோடு கேட்ட எண்ணிக்கையில் கருணாநிதி விரும்பிக் கூறும் ஆட்கள் அமைச்சர்களாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அதன்வழி பதவி அதிகாரப் பயன் துய்க்க வேண்டும் என்றும் தி.மு.. கருதுவது தெளிவாகத் தெரிகிறது.

கைக்கூலி
     இவ்வாறான காரணங்களால்தான், தி.மு.. இந்திய அரசின் கைக்கூலி அமைப்பாகவும், சோனியா காந்தியின் தலைமையிலான பேராயக் கட்சியின் கையாள் அமைப்பாகவும் செயல்படத் தயங்கவோ கூச்சப்படவோ இல்லை.

ஒரே கொள்கை
     இம்முறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததுமே, முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு விடையளிக்கையில், ஈழச்சிக்கலில் நடுவண் அரசின் கொள்கையே தம் கொள்கை என்று கூறினார். அக்கூற்று முற்றிலும் உண்மை என்பதை இன்று வரை கருணாநிதியின் செயற்பாடுகள் மெய்ப்பித்து வருகின்றன!

உணர்வெழுச்சி
     சென்ற ஆண்டு (2008) செப்தம்பர் மாதத்திலேயே, இனவெறிச்சிங்கள அரசு ஈழத்தமிழரைக் கடுமையாகத் தாக்கிக் கொன்று கொண்டிருந்தது. அக்தோபர் மாதம், தமிழ்நாட்டில் தா.பாண்டியன் தலைவராக உள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி நடுவண் அரசையும் தமிழக அரசையும் வற்புறுத்தித் தமிழ் உணர்வாளர்களோடு ஒருநாள் உண்ணா நோன்பை நடத்தியது.
     தமிழக மக்கள், கொடுமையான இனஅழிப்புத் தாக்குதல்களால் அல்லலுற்று அழிந்து கொண்டிருக்கும் தம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்குத் தம் துணைதரவை வெளிப்படுத்தும் வகையில் உணர்வு கொண்டெழுந்தனர்.

நடிப்பும் ஊடகப் பரப்புதலும்
     இந்த எழுச்சியை மிக நன்றாகப் புரிந்துகொண்ட கருணாநிதி, தேர்ந்த திறமையோடும், மிகமிகத் தந்திரக் கரவோடும் தம் இன உணர்வு நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவருக்குச் சார்பாகவும் துணையாகவும் தமிழக மின் ஊடகங்களும் செய்தித் தாள்களும் செயற்பட்டன. இவ் ஊடகங்கள் கருணாநிதியின் குடும்பத்தினர்க்குச் சொந்தமானவையும் அரசு தரும் விளம்பரத்தின் வழி கிடைக்கும் வருமானத்திற்காகவும் பிறவற்றிற் காகவும் அரசிற்குச் சார்பாகவே இயங்குவனவாகும்.
     ஈழத்தமிழர் துன்பத்தைக் கண்டு முதலமைச்சர் ஆறாத் துயருற்றதாகப் பலவாறு செய்திகளைப் பரப்பின. ஈழத்திலிருந்து வந்த குறுவட்டின் வழி, சிங்களர் இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியும் கொதிப்பும் அடைந்து, அவர் வீறுகொண்டு எழுந்துள்ளதாகவும், தில்லியைப் பணிய வைத்து உடனே போரை நிறுத்தப் போகிறார் எனவும் பலவாறான செய்திகளைப் பரவலாகப் பரப்பின. அதற்கேற்ப அவரும் தம் தேர்ந்த போலித்தனமான செயற் பாட்டைத் தொடர்ந்தார்.

எழுச்சியைத் தணிக்க
     தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியுற்ற போராட்ட உணர்வைப் புரிந்து கொண்ட அவர், தாமும் போராடுவதாக நடித்து மக்களின் எழுச்சியைத் தணிவித்து மழுங்கடிக்க முழுமுனைப்பாகக் கரவுத்தனத்துடன் ஈடுபட்டார் என்பதைப் பின்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.
     இராசிவ் காந்திக்கு முன் பின் என்று ஈழச்சிக்கலைப் பார்க்க வேண்டும் என்றும் புலிகள் தலைமை முற்றதிகாரப் போக்குடையது என்றும் புலிகளைக் குறைகூறிப் பேசி வந்த கருணாநிதி, ஒரு நேர்காணலில் பிரபாகரன் தன் நண்பர் என்று கூறினார். மறுநாள், பேராயக்கட்சியின் எதிர்ப்பைக் கண்டு மிரண்டு, தான் கூறியதையே மழுப்பலாக மறுத்தார். தமிழ்ஈழம் அமையத் தாமும் உதவுவதாகத் திடுமென அறிவித்தவர், வழக்கம்போல் பேராயக் கட்சியின் சலசலப்பிற்குப் பின் வாய் மூடிக் கொண்டார்.

நடிப்பும் நாடகமும்
     நடுவண் அரசு முயற்சி எடுத்து ஈழத்தில் போரை நிறுத்தாவிட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்றார். பின் மற்ற கட்சிக் காரர்களைக் காரணம் காட்டி, பதவிவிலகப் போவதில்லை என்று அறிவித்தார்.
     இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்குப் போட்டியாக, போலியாக ஒரு அமைப்பு தமிழ்நாட்டு அரசால் உருவாக்கப்பட்டது. ..பா. இயக்கம் மாந்தத் தொடரிப் போராட்டம் என்றால், தி.மு..வும் மாந்தத் தொடரிப் போராட்டம் என்றது. ..பா.. கடை அடைப்புப் போராட்டம் என்றால் தி.மு..வும் அவ்வாறே அறிவித்தது. இவ்வாறு, போலித்தனமான போட்டிப் போராட்டங்களை அறிவித்து மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கப் பெரும்பாடு பட்டனர்.
     மாமறவன் முத்துக்குமாரின் ஈகச் சாவும் அதன்பின் 12 பேர் தீக்குளித்த நிகழ்ச்சிகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. ஊடகங்கள் உண்மையான ஈழச்செய்திகளை வெளியிடாது புறக்கணிப்புச் செய்ய மறைமுகமாக வலியுறுத்தி அதன்வழி மக்களின் எழுச்சியைத் தணிக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. எவ்வெவ் வாறோ முயற்சி செய்தும் மக்களின் எழுச்சியை அடக்கும் முனைப்பில் அரசு தோல்வியையே கண்டது!

எழுச்சியும் ஒடுக்கும் முயற்சியும்
     கண்டனப் பேரணி, உண்ணா நோன்பு, மறியல், வேலை நிறுத்தம், கடைஅடைப்பு, உருவ எரிப்பு, முற்றுகை, தீக்குளிப்பு உயிர் ஈகம் போன்ற பல்வேறு வகைப் போராட்டங்கள் பல்லாயிரக் கணக்கில் சிற்றூர் முதல் பெருநகர் ஈறாக பல இலக்கக் கணக்கான மக்களின் பங்கெடுப்போடு நடைபெற்றன. ஆனால், நடுவண் அரசும் தமிழ்நாட்டு அரசும் இவற்றை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
     போராட்டம் நடத்தியவர்கள் தளைப் படுத்தப்பட்டாலும், மிகச்சிலர் தவிர மற்ற அனைவரும் அன்றே மாலையில் விடப்பட்டனர். திரைப்பட இயக்குநர் சீமான் போன்று மக்களைக் கிளர்ச்சிக் கெழச்செய்த சொற்பொழிவாளர்களை இ.பா.சட்டத்தின் கீழ் சிறைவைத்து ஒடுக்க முனைந்தனர். மக்களின் போராட்டங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களால் பொருட்படுத்தப் படவில்லை; ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் கொஞ்சங்கூட மதிக்கப் படவில்லை.

உளத்தியல் முயற்சிகள்
     தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் எழுச்சியையும் மழுங்கச் செய்ய உளத்தியல் அடிப்படையில் முயற்சிகள் தந்திரமாக மேற்கொள்ளப் பட்டன. பிரபாகரன் தளை செய்யப்பட்டால் அலெகசாந்தர் போரசு மன்னனை நடத்தியதைப் போல் மதிப்புடன் நடத்த வேண்டும்’, ‘பிரபாகரன் கொல்லப் பட்டால் வருத்தப்படுவேன்போன்ற கூற்றுகளை வெளிப்படுத்தியதை இவற்றிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
     ஆனால், இக் கூற்றுகள், முதல்வரின் ஆழ் மனத்தில் போரை நிறுத்த வேண்டுமென்ற முனைப்பு இல்லை எனபதை மக்கள் புரிந்துகொள்ள வழி செய்தன.

இணையற்ற நடிப்பு
     நடுவணரசின் தூதுவர்களாகக் கொழும்பு சென்ற அதிகாரிகள், அங்குச் சிங்கள ஆட்சியாளர்களிடம் போர்த் தாக்குதலை விரைவு படுத்தவும், அதற்கு அவர்களுக்குத் தேவை என்ன என்பதை அறிந்து வரவும், ஏதுமறியாத் தமிழர் பெரும் பேரளவில் கொல்லப்படுவதற்கு எந்த உலக நாடாவது எதிர்ப்பு தெரிவித்தால் இந்தியா இலங்கைக்குத் துணையாக இருக்கும் என்று உறுதி கூறவும் பிரபாகரன் இறந்துவிட்டதாகச் சிங்கள ஆட்சியாளரிடம் சான்றிதழ் பெற்று வரவுமே சென்றனர் என்று இப்போது செயதிகள் வெளிவந்து விட்டன.
     அந்தத் தூதுவர்கள் ஒவ்வொரு முறை இலங்கைக்குச் சென்று திரும்பியதும், தமிழ்நாட்டு முதலமைச்சரை வந்துச் சந்தித்துச் சென்றனர். அப்போதெல்லாம், அத் தூதுவர்கள் போரை நிறுத்தச் சிங்கள அரசை வலியுறுத்திவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்கள் என்று செய்தியாளருக்குத் தெரிவித்தனர். இந்த நாடகத்தில் யாருடைய நடிப்பு இணையற்றதெனக் கண்டுபிடிப்பது திறமைமிக்க மானாட்ட மயிலாட்டக் கிழட்டு நடுவருக்கும் மண்டையைக் குழப்பக் கூடியதே!

மூன்றுமணி நாடகம்
     சென்னைக் கடற்கரையில் முதலமைச்சர் மேற்கொண்ட மூன்றுமணி நேர உண்ணாநோன்பு முயற்சி ஒரு அப்பட்டமான நாடகம் என்று மக்கள் அனைவரும் கூறுகின்ற வகையில் அமைந்து விட்டது. போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று கூறி, உண்ணா நோன்பை முதலமைச்சர் முடித்த அன்றே, சிங்கள இனவெறி அரசு ஏதுமறியா ஈழத்தமிழர் 272 பேரைக் கொன்றது. அடுத்தநாள் 172 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த நாள் ஆயிரம் பேர் சாகடிக்கப் பட்டனர். ஆம்,  இனக்கொலை தொடர்ந்து பேரெண்ணிக்கையில் நடந்தது. ஆனால், இதற்கு அமைதி கூறும் வகையில் மழை விட்டுத் தூவானம் போல் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கிறது எனத் தயங்காது பொய் கூறினர்.

கருத்துச் செலுத்தவே இல்லை
     இதுவரை, ஈழ விடுதலைப் போரில் ஓரிலக்கம் தமிழர் உயிர் இழந்துள்ளனர். போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததற்கு முன்னராகக் கடைசி இரண்டு மூன்று நாட்களில் ஈழத்தமிழர் 53000 பேர் கொல்லப் பட்டிருந்தனர்; 13000 பேர் காணாமற் போயிருந்தனர்! தமிழ்நாட்டு அரசோ, தமிழக முதல்வரோ இச்செய்தி குறித்து வாய் திறக்கவே இல்லை. இரங்கலுரையோ ஆறுதல் சொற்களோ இவர்களால் கூறப்படவில்லை!
     போருக்குப் பின், ஏதுமறியாத் தமிழர் மூன்றிலக்கம் பேர், 41 இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட கடுங்காவற் கூடாரங்களில் மந்தைகளைப்போல் அடைக்கப் பட்டனர். காயங்களாலும் நோய்களாலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, உணவு, உடை, மருந்து, நீர் கிடைக்கவில்லை எனச் செய்திகள் கூறுகின்றன. அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப் படுகிறார்கள் என்றும், இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது என்றும் செய்திகள் கூறுகின்றன.     அவர்களின் சொல்லொணாத் துயர் நீக்கும் முயற்சியில் இன்னமும் தமிழ்நாட்டரசு கொஞ்சமும் கருத்துச் செலுத்தவில்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது.

சிங்களர்க்குப் பரிந்து
     இப்படிப்பட்ட நிலையில், பணத்தை வாரி இறைத்தும் வேறுவகை மோசடி செய்தும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவு வெற்றி பெற்றபின் தமிழ்நாட்டு முதல்வர் தில்லி சென்றார். நடுவண் அரசு அமைச்சரவையில் கேட்ட எண்ணிக்கை அளவில் தாம் விரும்புகின்றவர்களுக்கு அமைச்சர் பதவி பெறுவதற்காகத் தில்லியில் நாட்கணக்கில் தங்கிப் பேசி அவர் பெருமுயற்சி மேற்கொண்
டிருந்ததைக் கண்டோம்! கேட்டவற்றைப் பெற்றுக் கொண்டதன் பின்னும்கூட ஈழத்தமிழர் நலன்காக்கத் தில்லியை வற்புறுத்தாத நிலையே தொடர்ந்து வருவதைப் பார்க்கின்றோம்!
     அண்மையில், சட்டமன்றத்தில் சிங்களர் சினமுறாத வகையில் ஈழத்தமிழர் நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறிய கூற்று, ஈழத்தமிழர்க்குச் சம உரிமையோடு வாழ வழி கூறுகிறதா இல்லை அவர்களைச் சிங்களரின் அடிமைகளாகவே இருக்க வலியுறுத்துகிறதா என்று மக்களை ஐயுறச் செய்துள்ளது.

வரலாறு அம்பலப்படுத்தும்
     பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் குடும்பத்தினர் நலன்களை முன்னுரிமை தந்து பேணுவதற்காகவும் ஈன்ற இனத்திற்கே எதிராக நடந்துகொண்டு, அதை மறைக்க எத்தனை நடிப்பும் நாடகமும் நடத்தினாலும், உண்மையை நெடுங்காலத்திற்கு மறைக்க இயலாது! வரலாறு ஈகிகளையும் நல்லவர்களையும் தன்னலக்காரர்களையும் இரண்டகர்களையும் அம்பலப்படுத்துவதை யாராலும் மூடி மறைத்துவிட இயலாது.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.        குறள்.114.
           
--------------------------------------------------------------