(ஆங்கிலமூலம்: வி.எ.மேனன் *** தமிழாக்கம் தமிழநம்பி)
உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக்
கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக
ஆராய்ந்தவர்.
அத்தகைய
நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும்
சிறிதும் இல்லை என்று முடிவு கண்ட தலைசிறந்த ஓர் அறிவியலறிஞர் ஆவார்.
உலகில்
ஆதன் தொடர்பான ஆராய்ச்சியிலீடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல்
அறிவியலரும், - ஒரே அறிவியலரும் கோவூர் அவர்களே!
ஆதன், ஆதனல்லாவகை விந்தை
நிகழ்வுகள் பற்றிய இடுவுரை (thesis)க்காக அமெரிக்க மின்னசோட்டா மெய்யறிவுக் கழகம் அவருக்கு முனைவர் பட்டம்
வழங்கியது.
ஆதன், ஆதனல்லாதவை, ஆவி ஆகியவை தொடர்பான
ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்றால் ஏமாற்றுக்காரர்களாக இருக்க
வேண்டும் இன்றேல் மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனபதே அவரின்
உறுதியான கருத்தாகும்.
"இயற்கையை மீறிய ஆற்றல்களை எவரும் எக்காலத்திலும் பெற்றிருக்கவில்லை; அப்படடிப் பட்டவர்கள்
மதநூலின் பக்கங்களிலும், உணர்ச்சிகளை வணிகமாக்கும் செயதித்தாள்களின் பக்கங்களிலுமே இருந்து
வருகிறார்கள்" எனகிறார் கோவூர்.
'எர்னெசுட்டு எக்கெல் சூழலியல் நடுவம்' இந்தியப் பெருங்கடலிலும், அதன் கரையோர
நாடுகளிலும், படிமலர்ச்சி(evolution) ஏணியின் விடுபட்ட இடைவெளிகளைக் கண்டறியும் நோக்கில், 'எக்கெல் ஆய்வுச்
செலவு' மேற்கொண்டது.
அதற்கென
அமைத்த அறிவியலர் குழுவில் கலந்து கொள்ளும்படி அமெரிக்காவின் அந்நிறுவனம் அழைத்த
ஒரே ஆசிய அறிவியலர் முனைவர் கோவூர் ஆவார்.
ஆனால், அவருடைய துணைவியார்
நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்ததாலும், அந்நோயால் இறந்து போனமையினாலும் அந்த வாய்ப்பை
கோவூர் இழக்க நேர்ந்தது.
முனைவர்
கோவூர் உலகின் பல இடங்களுக்கும் சென்றவர். பல நாடுகளில் பொதுக்கூட்டங்களிலும், உலகமாநாடுகளிலும்
சொற்பொழிவு நிகழ்த்தியவர். அவருடைய நூல்களிலுள்ள நிகழ்வாய்வு(case study) உணமைக்
கதைகளைப் பல்வேறு நாடுகளில் பல தாளிகை(பத்திரிகை)களும், செய்தித் தாள்களும்
தொடர்ச்சியாக வெளியிட்டன.
அக்கதைகளுள்
ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய
மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ்
நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.
மூடநம்பிக்கையை
விட்டுத் தொலைத்து காரணமறிந்து நடக்கும்படி தம் வாழ்நாள் முழுவதும்
அறிவுறுத்தியவர் முனைவர் கோவூராவார். இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன்
திருச்சவையின் கருமியக்குருத் தலைவரான காலஞ்சென்ற பேரருள்திரு கோவூர் ஈய்ப்பெ
தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார்.
'புனர்சென்மம்' என்ற (மலையாள) திரைப்படத்தில் ஓர் மன மருத்துவராகத் தோன்றும் போது, கீழ்க்காணுமாறு தம்
பிறப்பைப்பற்றி கோவூர் கூறுகின்றார்:
"முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால், ஒரு சிரியன் கிறித்தவக் குடும்பத்தில், நானே தேர்வு செய்து
கொள்ள இயலாததும் என் கட்டுப்பாட்டில் இல்லாததுமான நிலவரைவியல், உயிரியியல்
நேர்ச்சியால் (accident), அழகிய கேரள மண்ணில், ஒரு கிறித்தவத் திருத்தந்தையின் மகனாகப் பிறந்தேன். வளர்ந்து ஆளான பின்னர், இன்னொரு அழகிய நாடான
சிரீலங்காவை என்னுடைய நாடாகவும்,
பகுத்தறிவாண்மையை என் மெய்ம்மவியலாகவும்(philosophy) நானே
தீர்மானம் செய்து ஏற்றுக் கொண்டேன்."
திருவள்ளாவில், தம் மூதாதையர்
இல்லத்தில், தந்தையார் தொடங்கிய சிரியன் கிறித்தவக் கல்வி நிலையத்தில், கோவூர் பள்ளிப்
படிப்பை முடித்தார். பின்னர், அவருடைய தம்பி பெகனன் கோவூருடன், (அமெரிக்க ஏல் பல்கலைக் கழகத்திலும், அனைத்து நாடுகள்
அவையிலும் பணியாற்றியவர்) உயர்கல்வி பெறக் கல்கத்தா சென்றார்.
கல்கத்தாவில்
பங்கபாசி கல்லூரியில் புதலியல்(Botany),
விலங்கியலைச் சிறப்புப் பாடமாகப் படித்துத் தேறினார்.
கோட்டயம்
கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணி புரிந்தார். பின்னர், 1928இல்
யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரி முதல்வர் அருள்திரு பி.தி.கேசு அவர்களின் அழைப்பை
ஏற்று, சிரீலங்காவுக்குக்
குடிபெயர்ந்தார்.
உதகையில்
மலை-மரவடை (mountain flora) மாதிரிகளைத் திரட்டும் களப்பணியில் இருந்த போதுதான், தலைசிறந்த புதலியலரான
அருள்திரு கேசு முனைவர் கோவூரைச் சந்தித்தார்.
யாழ்ப்பாணம்
நடுவண் கல்லூரியில் பணியேற்ற முதலாண்டில் இளைஞர் கோவூரை, இறுதியாண்டு
மாணவர்களுக்குப் புதலியலுடன் கிறித்தவத் திருமறைப் பாடமும் கற்பிக்கச் சொன்னார்கள்.
கேம்பிரிட்சு
பல்கலைக் கழகத்திலிருந்து தேர்வு முடிவுகள் வந்தன. அவருடைய மாணவர்கள் அனைவரும்
மேஞ்சிறப்போடும் மதிப்போடும் திருமறைப் பாடத்தில் தேறியிருந்தாரகள். ஆனால் அடுத்த
ஆண்டு, திருமறைப்பாடம்
கற்பிக்கும் பொறுப்பு கோவூரிடமிருந்து பறிக்கப் பட்டது. கல்லூரித் துணைமுதல்வர்
அருள்திரு ஓ.எல். கிப்பனுக்கு அப்பொறுப்பு தரப்பட்டது.
அதைப்பற்றி
வினவிய போது, அருள்திரு கேசு அவர்கள்,
"ஆபிரகாம், திருமறைப் பாடத்தில் நீங்கள் சிறப்பான தேரச்சி
முடிவுகளை உருவாக்கித் தந்தீர்கள் என்பதை நான் அறிவேன்! ஆனால், அம்மாணவர்கள்
அனைவருமே அவர்களுடைய மத்தத்தைத் துறந்து விட்டனர்!" என்று புன்னகையுடன்
கூறினார்.
1943இல் அருளதிரு கேசு பணிநிறைவுற்று (ஓய்வு பெற்று) இலங்கையினின்றும் நீங்கியதும், கோவூர், யாழ்ப்பாணம் நடுவண்
கல்லூரியினின்றும் நீங்கி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு
வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார்.
1959இல் கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராக இருந்தபோது
பணிநிறைவுற்றார்.
கல்லூரிப்
பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப்
பேசவும் எழுதவும் தொடங்கினார்.
"எல்லாக் குழந்தைகளையும் போலவே, நானும், இளமைக் காலத்தில், பெற்றோருடைய சமய மூட
நம்பிக்கைகளாலும், நடவடிக்கைகளாலும் மூளை மழுக்கத்திற்கு ஆளாகியிருந்தேன். பின்னர், அம்மடத்தனமான
கருத்துக்களை விலக்கித் தள்ள எனக்குப் பெரும் பாடாயிருந்தது" என்று கோவூர்
கூறுகிறார்.
அதே
தவற்றை மீண்டும் செய்வதைத் தவிர்த்துத் தம் ஒரே மகனான ஆரிசு கோவூரை மத
மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை எனத் தீர்மானித்தார்.
பேராசிரியர்
ஆரிசு கோவூர், இப்பொழுது(1976) பிரெஞ்சு, கியூபா அரசுகளின் கீழ், அறிவியல் ஆராய்ச்சிகளை நெறிப்படுத்திக் கொண்டிருக் கின்றார். அவருடைய மூன்று
மகன்களையும் எவ்வகை மத நம்பிக்கைகளின் அடையாளமு மில்லாமல் வளர்த்து வருகின்றார். இதற்கு
அவருடைய அறிவார்ந்த துணைவியார் பேராசிரியை சாக்குலின் கோவூரின் முழு
ஒத்துழைப்பையும் பெற்றிருக்கிறார்.
முனைவர்
கோவூரின் துணைவியார் 'அக்கா கோவூர்' 1974இல் இறந்த போது அவருடைய இறப்பு அறிவிப்பு சிரீலங்காவில் –அந்நாட்டு நாடாளு
மன்றத்திலும்- பேருணர்வெழுச்சியை ஏற்படுத்தியது.
அந்த
இறப்பறிக்கை, "திருவாட்டி அக்கா கோவூர், பேதமை சான்ற மக்கள் கவலும்படியாக எந்த ஆவியையோ, ஆதனையோ விட்டுச்செல்லாமல் இறந்து
விட்டார். அன்னாரின் விருப்பப்படி, அவருடைய உடல், கொழும்பு திருநள்ளா பாமன்கடா
சந்திலிருந்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை எட்டு மணிக்குக் கொழும்பு சிரீலங்கா பல்கலைக் கழக
மருத்துவப் புலத்திற்கு அகற்றப்படும். இறுதிச்சடங்கோ, எரியூட்டலோ, மலர்களோ இல்லை!"
என்று எழுதப் பட்டிருந்தது.
அவருடைய
இறப்பறிவிப்பு எல்லா உள்நாட்டுச் செய்தித் தாள்களிலும் பதிப்பிக்கப் பட்டது. எனினும், சிரீலங்கா ஒலிபரப்பு
வாரியம், இறப்பறிவிப்புப் பட்டியலில் இவ்வறிவிப்பைச் சேர்க்க மறுத்து விட்டது,
நாடாளுமன்றத்தில்
கேட்கப்பட்ட போது, உரோமன் கத்தோலிக்கரான ஒலிபரப்புத்துறை அமைச்சர், உரோமன் கத்தோலிக்கத் திருத்தந்தை
ஒருவரும், புத்தமதத் துறவி ஒருவரும் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் மறுக்கப்
பட்டது என்று கூறினார்.
'ஆதனிலி'க் கொள்கையை நம்பும் ஒரு புத்தத் துறவி, தூய நெஞ்சில் ஆதன் இடம்பெற் றுள்ளதாக நம்பும்
ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தையின் நம்பிக்கையில் பங்கு கொண்டதுதான் விந்தை!
திருவாட்டி
கோவூர், அவருடைய
கணவரின் ஆராய்ச்சிகளிலும், செயற்பாடுகளிலும் அவருக்கு வலிவுமிக்கத் தூணாகத் துணையிருந்தார். சிரீலங்கா
பகுத்தறிவாளர் கழகத்தின் பொருளாளராகத் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தார். கட்டற்ற
சிந்தனையாளர்களின்(Free
thinkers) உலக மாநாடுகளில் தம் கணவருடன் கலந்து கொண்டார்.
இயல்பிகந்த
(வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன
நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.
அதற்காகவே, இயற்கையிகந்த
வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி
செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா
பரிசளிக்க அவர் அணியமாய்(தயாராக) இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge)யாகக்
கூறினார்.
தான்
இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு
செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார்.
(முனைவர் கோவூரின் "BEGONE GODMEN!" என்ற
ஆங்கில நூலின் முன்னுரையில், திரு.வி.எ.மேனன், கோவூர் குறித்து எழுதியுள்ளவற்றிலிருந்து ஒரு பகுதி.)
------------------------------------------------------------------------------------------------------------