செவ்வாய், 21 ஜனவரி, 2025

மாவீரர் நாள்

                             மாவீரர் நாள்

 

தாய்நாட்டின் விடுதலைக்குத் தம்முயிரை ஈந்தோர் 

        தகுநினைவு கூர்ந்தவரை வணங்கிடுநாள் அன்றே 

ஏய்ந்தமைய அழைக்கின்ற மாவீரர் நாளாம்!  

        ஏனையபல் நாட்டாரும் நினைந்திடுமோர் நாளாய் 

வாய்தலுற குறிப்பிடுவர் வணங்கிடுவர் அன்றே! 

        வாயார அவர்புகழை வழுத்திமகிழ் வாரே! 

ஓய்வறியாத் தலைவரந்நாள் உள்ளபல செய்தி 

        ஓர்ந்தறிய விளக்கிடுநல் லுரையாற்று வாரே!   

 

ஈழத்தில் நவம்பரிலே இருபத்தி ஏழில் 

        ஈகியரை நினைந்துருகி இரங்குகின்ற நாளே!   

ஆழமென உணர்வுறைசத் தியநாதன் சங்கர் 

        அவர்தலைவர் மடியினிலே உயிர்நீத்த நாளே! 

காழமுறு தமிழீழம் காணுகின்ற கொள்கைக் 

        கணந்தோறும் நெஞ்சிருக்கக் களத்துயிரீந் தோரைச் 

சூழலுற உறவுசுற்றம் சோர்ந்துவணங் கும்நாள்! 

        தூயீகி யர்நினைப்பில் தோய்கின்ற நாளே!  


            மற்றபல இயக்கம்சார் மாவீர்ர் ஈகம் 

        மாற்றமின்றி வழிபடுநல் மனமும்பெற் றாரே!  

சற்றும்வேற் றுமையின்றிச் சமமாக எண்ணிச் 

        சமைவுறவே புலிகளெலாம் சார்புகரு தாரே!   

உற்றார்மா வீரர்நாள் ஊர்தோறும் போற்றி 

        உறுநினைவில் கடைப்பிடித்தல் உண்டென்ற போதும் 

மற்றுகிளி நொச்சியிலே கனகபுரம் தன்னில் 

        மாவீரர் துயிலிடத்து மாபெருநி கழ்வாம்! 

 

மணியோசை நினைவமைதி மாச்சுடரை ஏற்றல் 

        மனமுருக வணங்கிடுதல் மாத்துயரில் மாழ்கல்! 

துணிவார்ந்த புலித்தலைவர் துலக்கவுரை செய்தல்!  

        தொடர்ந்துவந்த இறுதிப்போர் துன்பத்தின் பின்னே 

பணிந்தமனத் தோடுருகி பற்பலமா வீரர் 

        பரிவார்ந்த உறவெல்லாம் படையலிட்டு விம்மல் 

பிணிப்புற்று மனங்கலங்கிப் பேதுறவே வைக்கும்! 

        பிற்றையெவர் வருவாரோ பெருந்துயரை மாற்ற!  

பிரபாகரன் எழுபது!

 பிரபாகரன் எழுபது!

 

ஆண்டிரண்டா யிரத்தின்பின் அரும்பெறலாய் இனத்துதித்த

ஆற்ற லானாய்!

மூண்டபெரும் உணர்வேற்றி முப்படையும் உருவாக்கி

மொய்ம்பு மிக்க

திண்டோளப் புலிப்படையைத் திறங்கெட்ட இவ்வுலகே

திரும்பிப் பார்க்க

தொண்டிளையோர் துணைநின்ற துணிவுருவே, உரிமைப்போர்

துவளா நெஞ்சே!

 

அமைதிப்போ ராட்டத்திற் கணுவளவும் மதிப்பில்லை

அதுவீண் என்றே

அமைந்தாய்ந்தே எடுத்தாயே ஆய்தம்கை அஞ்சினரே!

ஆனால் கூட

இமையளவும் தாக்குதலில் எளியகுடி சிங்களவன்

இலக்கில் லாமல்

குமையழிவு செய்கின்ற கொடும்படையே குறியாகக்

கொண்டு வென்றாய்!

 

மக்களெலாம் உன்பின்னே! மறப்போரில் பலமகளிர்!

மாந்த நேயம்

எக்காலும் மறவாத ஏந்தலென ஒளிர்ந்தாயே!

இந்த நாட்டில்

அக்கரையித் தாலிப்பேய் அழிவினைக்கே வந்திங்கே

ஆட்டம் போட

குக்கலொன்றிங் காட்சியிலே குந்திதுணை கொடுத்ததெலாம்

கொடுமைக் கன்றோ?


 

 

 

 

அற்றையநாள் நெடுஞ்செழிய! அருங்கரிகால் பெருவளத்த!

அரிய வெற்றிப்

பொற்புறுசெங் குட்டுவனே! போந்திமயம் கயற்புலிவில்

பொறித்தல் போலும்

வெற்றியெலாம் பின்தள்ளி வென்றவனே தமிழீழம்!

வியக்கும் வண்ணம்

அற்றமற ஆண்டவனே! அருமொழுக்கப் பேராண்மை

ஆன மாந்த!

 

நான்ககவை தனிலேயே நடக்கின்ற இனக்கொடுமை

நாளும் கண்டு

யான்தடுப்பேன் உரிமைமீட்(டு) எனப்பதினெட் டாமகவை

எழுச்சி யோடே

மேன்மையுறு வித்திட்டாய்! மேலுமிரு பத்தொன்றில்

மிகமுன் னேறி

தோன்றலென புலிப்படையைத் தொடக்கினையே பகைமருளத்

துணிந்த வீரா!

 

முப்பத்தா றாமகவை மூன்றிலொரு பங்கிலங்கை

முழுதும் வென்றாய்!

துப்பிழந்த தமிழினமே தொலைத்ததைம்பத் தைந்திலுனை

துன்பில் ஆழ்ந்தோம்!

இப்போதோ எழுபதையா, இன்னுயிரில் தோயுறவே

எண்ணி ஏங்கி

ஒப்பரிய உன்பெருமை ஓயாதே பேசிபுகழ்ந்(து)

ஓய்கின் றோமே!

நல்லவொரு தலைவர் நல்லக்கண்ணு ஐயா!

 

நல்லவொரு தலைவர் நல்லக்கண்ணு ஐயா!

விடுதலைப் போராட்ட வீரர்; கொள்கைச் செயற்பாடுகளில் போராட்டங்களில் நெகிழ்ச்சி இல்லாக் களப்போராளி; அரசியல் கட்சிகள் அனைத்தையும் பற்றிய ஏற்ற இறக்கங்களை அறிந்த மூத்த தலைவர்; அகவை வேறுபாடின்றி அனைவராலும் தோழர் என்றழைக்கப்படுபவர்;. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்; இன்றைக்கும் நாம் காணும் பொருள் அவா இல்லாத, ஊழலற்ற நேர்மையான எளிமையான தலைவர் இரா. நல்லக்கண்ணு ஐயா ஆவார்.

நல்லக்கண்ணு திருவைகுண்டத்தில் 10பேர் கொண்ட எளியதோர் உழவர் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக 26.12.1925இல் பிறந்தார். பள்ளிக்குச் செல்லுகின்ற காலத்திலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் தந்தை இராமசாமியாரின் மன வருத்தத்திற்குக் காரணமானார். மதுரை இந்துக்கல்லூரியில் தமிழ் இடைநிலை வகுப்புவரை படித்தார். பாரதியின் பாடல்களாலும் செக்கிழுத்த செம்மல் வ. உ .சிதம்பரனாரின் இயக்கத்தின் வழியாகவும் விடுதலை வேட்கை பெற்றார்.

பேராய(காங்கிரசு)க் கட்சியில் இளம் அகவையிலேயே சேர்ந்த நல்லக்கண்ணு, இந்திய விடுதலைப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 15ஆம் அகவையில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். முறைப்படியான கட்சி உறுப்பினராவதற்கு இன்னும் அவருக்குச் சற்று அகவை கூடுதலாக வேண்டியிருந்தது. ஆனால் அடுத்த சில பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுப் பொதுவுடைமை இயக்கத்தின் மிக முதன்மையான ஆளுமையாக நல்லக்கண்ணு ஐயா உருவானார்.

அவர் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்த காலத்தில், இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பத்தினிக் கோட்டம்என்ற இடத்தில் நெல்மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை அறிந்த நல்லக்கண்ணு, பொதுவுடைமைக் கட்சி நாளிதழில் அதுகுறித்து எழுதி வெளிப்படுத்தினார். அரசு அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்று ஆயிரம் நெல் மூட்டைகளை வெளியில் கொண்டு வந்தார். இது பஞ்சத்தால் பசியில் வாடிய மக்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்ததன் விளைவே, ‘’இந்தச் சுத்து வட்டாரமே இன்று சாப்பிடுகிறது என்றால் அதற்கு நல்லக்கண்ணு ஐயாதான் காரணம்’’ என 80 ஆண்டுகள் கடந்தபிறகும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நன்றியுணர்வுடன் பாராட்டுவதாகும்.

அந்த அகவையிலேயே அன்று தொடங்கிய போராட்ட வாழ்க்கை, இன்றுவரை அகவை நூறு ஆகியும் ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், தொழிலாளர், உழைக்கும் பிரிவார், விளிம்பு நிலை மக்கள் ஆகியோரின் நலனுக்கான போராட்ட வாழ்க்கையாகத் தொடர்கிறது.

இந்திய விடுதலைக்குப் பின், பொதுவுடைமைக் கட்சியார் மீது இந்திய அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறைகளை மனத்திடத்தோடு எதிர்த்துப் போராடினார். இதனால் அவரும் இன்னும் பல தலைவர்களும்


ஆய்தப் புரட்சியைத் தூண்டியதாகவும், அரசுகளைக் கவிழ்க்க முயன்றதாகவும்கூறி, ‘நெல்லை வஞ்சக (சதி) வழக்குப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1952ஆம் ஆண்டு இந்த வழக்கில் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்களுக்கு வாணாள் சிறை எனத் தண்டனை தரப்பட்டது. அப்போது அவருடைய அகவை வெறும் 27 மட்டுமே. குறைக்கப்பட்ட 7 ஆண்டுக்கால சிறைவாழ்க்கையில், காவல்துறையின் கொடிய அடக்குமுறை அடிதடிக்கு ஆளாகிய நிழ்வுகள் எல்லாம் வாழ்வில் அவர் பெற்ற மாறாத விழுப்புண்களாகும்.

இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகவும், சுற்றுச்சூழல்மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். குறிப்பாகப் பொருநை(தாமிரபரணி) ஆற்றை அழித்து அதை நம்பி இருந்த மக்கள் வாழ்வின் அடித்தளத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த மணல்கொள்ளைக் கும்பலுக்கு எதிராகப் போராடினார். நயன்மன்றில் இதற்காக அவரே வழக்கில் உறழாடிச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். பொருநையில் மணல் அள்ளுவது உயர்நயன்மன்றத்தால் தடை செய்யப்பட்டது.

நாங்குநேரி வானாமாமலைப் பெருமாள்கோயில் நுழைவுப் போராட்டம், சாதிச் செருக்குப் படுகொலை எதிர்ப்பு, மணல் கொள்ளையைத் தடுக்க உயர் நயன்மன்றம் வரை சென்று போராடியது எல்லாம் நல்லக்கண்ணு ஐயாவின் நெகிழ்ச்சியற்ற போராட்ட குணத்திற்கான சான்றுகளாக உள்ளன. 80 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் நல்லக்கண்ணு ஐயா, இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்தது இல்லை. தம் துணிவுமிக்க போராட்டங்களாலேயே மக்கள் மன்றத்தில் இன்று வரை அவர் அடையாளங் காணப்பட்டு வருகிறார். அரசியலில் சில ஆண்டுகள் இருந்துவிட்டாலே சொந்த வீடு, சொத்து, மகிழ்வுந்து என்று வாழும் ஆள்களுக்கிடையில் எளிமையின் உச்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். பெரிய போராட்டம், சிறிய போராட்டம் என்று பார்க்காமல் போராட்டத்தின் நோக்கத்தை மட்டுமே அறிந்து அதில் கலந்துகொள்ளும் மாமாந்தர் நல்லக்கண்ணு ஐயா, ஆவார்.

ஐயாவின் 80 ஆவது பிறந்தநாளில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அவருக்கு உருவா ஒரு கோடி திரட்டிக் கொடுத்தது. அதைத் தம் சார்பாக மீண்டும் கட்சிக்கே திருப்பிக்கொடுத்தார். அதேபோல், தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்ற நல்லக்கண்ணு, அரசு வழங்கிய ஓர் இலக்கம் உருவா பரிசுத் தொகையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியைக் கட்சிக்கும் மீதியை உழவுத் தொழிலாளர் அமைப்புக்கும் அளித்தார். அவருக்குத் தமிழ்நாடு அரசு தகைசால் தமிழருக்கான விருதை அறிவித்து உருவா பத்து இலக்கம் அளித்தது. அரசுதந்த உருவா பத்திலக்கம் காசோலையுடன் தம் சொந்தப்பணம் உருவா ஐந்தாயிரத்தைச் சேர்த்து மொத்தம் பத்திலக்கத்து ஐயாயிரம் உருவாவை முதல்-அமைச்சரின் பொதுத் துயர்துடைப்பு நிதிக்கு வழங்கினார்.


நல்லக்கண்ணு ஐயா மிகவும் தன்னடக்கமானவர். அவர் கலந்து கொண்ட போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பெரிய நிகழ்வுகள் எதிலும் முதன்மையாகத் தன்னை நிறுத்திக் கொள்ளாதவர். அவற்றில் சிலவற்றில் அவரின் பங்கு மிகவும் முகன்மையானது என்றாலும் தன்னை முன்னிறுத்தி அந் நிகழ்வுகளை விரித்துரைக்காத விந்தை மாந்தர் அவர்.

இராசாசி ஆட்சிக்காலத்தில், நிலங்கள் பார்ப்புத்தேய’ (பிரம்மதேய) முறைப்படி ஆட்சியாளர்களால் இலவயமாகப் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அவர்கள் அந்த நிலத்தில் வரும் விளைச்சலை எடுத்துக் கொண்டனர். அவர்கள் நேரடியாகச் சென்று பயிர் செய்யமாட்டார்கள். ஆனால் விளைச்சலை மட்டும் பெற்றுக் கொள்வார்கள். தேவதான முறைப்படி இத்தகைய நிலங்கள் கொடையாகக் கோவில்களுக்கு வழங்கப்பட்டன. சில நேரங்களில் ஒரு சிற்றூர் முழுமையும் கூட கோவிலுக்கு வழங்கப்பட்டது. சிறு உழவர்களும் பணியாளர்களும் அவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எதிர்த்து யாரேனும் நின்றால் அவர்களை வெளியேற்றி விடுவார்கள். இவற்றை எதிர்த்து நல்லக்கண்ணு ஐயா கலந்துகொண்ட உரிமைப் போராட்டங்கள் 1948-ம் ஆண்டு தொடங்கி 1960-ம் ஆண்டு வரை தொடர்ந்தன. முதலமைச்சராக இருந்த இராசாசி, நிலக்கிழார்களின் பக்கமும் மடங்களின் பக்கமும் நின்று கொண்டார். உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்எனக் கூறியபோது, இராசாசி நிலத்துக்கான ஆவணங்களைக் கொண்டிருப்பவர்களுக்குதான் நிலம் சொந்தம் என்றார். ஆனால், நல்லக்கண்ணு ஐயாவும் தோழர்களும் மேற்கொண்ட போராட்டங்களினால், இந்தக் கோவில்களும் மடங்களும் கொண்டிருந்த அதிகாரம் உடையத் தொடங்கியது. அவர்களின் அறுவடை விதிகளையும் முறைகளையும் தொழிலாளர்கள் போராடி எதிர்த்தனர். அடிமைகளாக இருக்க மறுத்தனர்.

மாநிலம் முழுவதும் உழவர்களுக்கான இயக்கத்தை உருவாக்கி உழவர் (சங்கம்) அமைப்புக்கான அடித்தளத்தை உருவாக்கியவர் என்று பொதுவுடைமைக் கட்சிகளின் தலைவர்கள் நல்லக்கண்ணு ஐயாவைப் பாராட்டுகிறார்கள்.

பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டும் நல்லகண்ணு ஐயாவின் நூற்றாண்டும் ஒரே நேரத்தில் அமைந்துள்ளது ஒரு சிறப்பான பொருத்தமாகும்.

பொதுவாழ்க்கையில் நேர்மையோடும் உண்மையோடும் ஊழலற்றும் எளிமையாகவும் இருக்கவேண்டியதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் மக்களின் உண்மைத் தொண்டர் ஈடற்ற தலைவர் நல்லக்கண்ணுஐயா நீடுவாழ நற்றமிழ் உளமார வாழ்த்துகின்றது.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு. - குறள்.1025.

                                                                             -..

(புதுவை நற்றமிழ் இதழில் வந்தது)

அதிர்ச்சியளித்த தமிழரிமாவின் இறப்பு!

 அதிர்ச்சியளித்த தமிழரிமாவின் இறப்பு!

புதுச்சேரித் தனித்தமிழ்க் கழகத்தின் செயலாளர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அரிமாப்பாண்டியன் ஐயா, இடஒதுக்கீட்டுப் போராளி ஆனைமுத்து ஐயாவின் மகள் அரி.தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு அரங்கசாமி அவர்களின் துணைத் தனிச்செயலராக இருந்த த.அ.தமிழரிமா அவர்கள் தி.பி 2055 நளி 30ஆம் நாள்          (15-12-2024) ஞாயிற்றுக்கிழமை சாலை நேர்ச்சியில் காலமானார்.

எதிர்பாராத இந்நிகழ்வு, அனைவரையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கி மீத்துயரில் ஆழ்த்தியது.

இளங்காளையான மகனை இழந்த அரிமாப்பாண்டியன் ஐயாவுக்கும் தமிழ்ச்செல்வி அம்மாவுக்கும் இன்னும் இளம் அகவையில் கணவரை இழந்திருக்கும் சுபாசினி அவர்களுக்கும் மகன் தமிழாதனுக்கும் யார் எப்படிச் சொல்லி ஆறுதல் அளிப்பதென்று தெரியாமல் கலங்குகிறோம்.

29-12-2024 அன்று தமிழரிமாவின் படத்திறப்பு மலர்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. புதுவை முதல்வர் தமிழரிமாவின் படத்தைத் திறந்துவைத்தார்.

என்னசொல்லித் தேற்றுவோம் எவ்வகையில் தாய்தந்தை 

அன்புத் துணைவியொடு ஆதனுக்கும் முன்னின்றே

ஆறாத் துயராற்ற ஆகும்? தமிழரிமா

கூறாமல் சென்றாயே கூறு. 

-       ..

 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மைக் கடை   - குறள்

 

 

புல்நுனிமேல்  நீர்போல்  நிலையாமை  என்றெண்ணி

இன்னினியே  செய்க  அறவினை;-  இன்னினியே

நின்றான்  இருந்தான்  கிடந்தான்தன்  கேள்அலறச்

சென்றான்  எனப்படுத  லால்.

                                                                                     நாலடியார்

 

                                                           (புதுவை நற்றமிழ் இதழில் வந்தது)


சனி, 11 ஜனவரி, 2025

கொஞ்சமும் பொருத்தமற்ற பதவிஅமர்த்தம்!

 

கொஞ்சமும் பொருத்தமற்ற பதவிஅமர்த்தம்!

திருவாட்டி சுதா சேசையன் என்பார் தமிழ்நாட்டின் எம்.சி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் மருத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றி, 30 திசம்பர் 2022இல் பணிநிறைவு பெற்றவர். இவர் தமிழ் பத்திமை (ஆன்மிக) இலக்கியங்களைப் பற்றிய மேடைப் பேச்சாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருப்பவர்.

இந்நிலையில் அண்மையில், திருவாட்டி சுதா சேசையன் செம்மொழித் தமிழ் உயராய்வு நடுவத்தின் துணைத்தலைவராக அமர்த்தப்படுவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்தப் பதவி அமர்த்தம் இந்த நிறுவனத்தின் நோக்கங்களுக்கே முரணானதாக இருக்கிறது என்றநிலை மனம் கவலச்செய்வதாக உள்ளது. இந் நிறுவனத்தின் தலைவரான தமிழ்நாட்டு முதலமைச்சரைக் கலந்துபேசி இந்த அமர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

திருவாட்டி சுதாசேசையன், தமிழின் செவ்வியல் இலக்கியங்களை முறையாகக் கற்றவரில்லை. செவ்வியல் தமிழ் உயராய்வு நடுவத்தின் உயர்பொறுப்பிற்கு வருவோர், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், ஆராய்வு நுட்பமும், பரவலாக இதுவரை வந்துள்ள செவ்வியல் தமிழ்நூல் ஆய்வுகள் எல்லாவற்றையும் பற்றிய அறிவும் பெற்றிருத்தல் இன்றியமையாத் தேவைகளாகும்.

நல்ல மருத்துவர் என்றோ, மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் என்பதாலோ, நன்றாகப் பத்தி இலக்கியச் சொற்பொழிவு செய்கிறார் என்னும் தகுதியிலோ வேண்டியவர் என்ற அடிப்படையிலோ, உறவுக்காரர் என்ற தொடர்பிலோ, நம்மவர் என்ற எண்ணத்திலோ, அமர்த்தப்படும் பதவி செம்மொழித் தமிழாய்வு நடுவ நிறுவனத் துணைத்தலைவர் பதவி இல்லை!


இவர், காசியில் பா.ச.க அரசு நடத்திய சங்கமம்நிகழ்வினில் இந்தியிலும் தமிழிலும் தொகுப்புரை தந்தவராம். இந்திய நாடாளு மன்றக் கட்டடத் திறப்புவிழா நிகழ்ச்சியிலும் இவர் இந்தியிலும் தமிழிலும் வண்ணனைத் தொகுப்புரை தந்தாராம். இவையும் கூட செம்மொழித் தமிழாய்வு நடுவ நிறுவனத் துணைத்தலைவர் பதவிக்கான தகுதிகள் என்று எந்த அறிவாளியும் கூறார். சுதா சேசையன் விகடன் குழுமத்தின் அறிதி (தகவல்) களஞ்சியத்தின் பதிப்பாசிரியராக இருந்தாராம். இது எவ்வகையிலும் அண்மைப் பதவி அமர்த்தத்திற்கான தகுதியாக இருக்கமுடியாது. இவர் பெற்றுள்ளகேப்டன் சேசாத்திரிநாதன் பட்டம் எந்தவகையும் இந்தப் பதவி அமர்த்தத்திற்குத் தொடர்புடையதன்று.

கொஞ்சம்கூட பொருத்தமற்ற இப்பதவி அமர்த்தத்தை நற்றமிழ்கடுமையாகக் கண்டிக்கின்றது. இந்தப் பதவி அமர்த்தம் உண்மையான தமிழறிஞர்களையும் தமிழ் ஆய்வாளர்களையும் இழிவுபடுத்தும் செயலாக நற்றமிழ் கருதுகின்றது. உடனே இப்பதவி அமர்த்த ஆணையைத் திரும்பப்பெற வேண்டுமென்றும் தகுதியான தமிழாய்வறிஞர் ஒருவரைத் தேர்ந்து அமர்த்தம் செய்யவேண்டுமெனவும் இந்திய ஒன்றியஅரசை நற்றமிழ்வலியுறுத்துகின்றது.

இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். கு.517.

(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் -அக்குதோபர் 2024 இதழில் வந்தது)


வணிகர் தலைவர் த.வெள்ளையனார் மறைந்தார்!

 

வணிகர் தலைவர் த.வெள்ளையனார் மறைந்தார்!


 

தமிழ்நாடு வணிகர் அமைப்புகளின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் 10-9-2024 அன்று அவருடைய 76ஆம் அகவையில் காலமானார்.

வணிகர்கள் அன்றைய காலக்கட்டத்தில் எதிர்கொண்ட குமுகப் பகைவர்களின் அச்சுறுத்தல், அரசு அதிகாரிகளின் வரம்புமீறல் முதலியவற்றை முடிவுக்குக் கொண்டுவர, தமிழகத்தில் பல்வேறு அணிகளாகப் பிரிந்து கிடந்த வணிகர்களை ஒருங்கிணைத்தவர் த. வெள்ளையனார் ஆவார்; வணிகர்களின் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்; வணிகர்களின் கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்தவர்.

வாணிகம் தொடர்பான அரசின் வரி விதிப்புக் கொள்கைகள்வணிகர்களைத் தாக்காமல் இருக்கக் கேடகமாகச் செயல்பட்டவர். நாட்டுமக்களின் பொதுச்சொத்தான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்க்குத் தாரைவார்க்கும் நிலையையும், சில்லறை வணிகத்தில் அயலவர் முதலீட்டிற்குத் திறந்துவிட இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்த்துப் போராடியவர். இடச்சாரிக் கட்சிகளோடும், மக்கள்நாயக ஆற்றல்களோடும் இணைந்து செயல்பட்டவர். வணிகர் நலன்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் உழவர்கள் பெருந்துணையிருக்கக் காரணமானவர்.

வணிகர்அமைப்பின் தலைவர் என்பதையும் கடந்து, ஈழத்தமிழர் நலனுக்காக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். தமிழினத்துக்கான அத்தனைப் போராட்டங்களிலும் துணையாக இருந்தவர். தூத்துக்குடித் துமுக்கிச்சூடு நிகழ்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வணிகர்களின் கடையடைப்புப் போராட்டத்தை நடத்திய தமிழ்க்குமுக நன்மையில் நாட்டம் கொண்ட மாந்தர் அவர்.

தலைவர் வெள்ளையன் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர்; தமிழீழ விடுதலை, ஏழு தமிழர் விடுதலைப் போராட்டங்களுக்குத் துணைநின்றவர். அவரது மறைவு வணிகர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கே ஏற்பட்டுள்ள பேரிழப்பு ஆகும்.

(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் அக்குதோபர் 2024 இதழில் வந்தது)

திரவிடப்பெருமை வெளிப்பட உதவிய பிரித்தன் தொல்லியலர்!

  

(என்.விநோத்குமார் என்பார் தைம்சு ஆப்பு இந்தியாநாளிதழில் (24-9-2024) எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. தைம்சு ஆப்பு இந்தியாநாளிதழுக்கும் என்.விநோத்குமாருக்கும் நன்றி. தமிழநம்பி.)

திரவிடப்பெருமை வெளிப்பட உதவிய பிரித்தன் தொல்லியலர்!



திரவிடமொழியைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுவதும் ஆரியருக்கு முந்தியதுமாகிய சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பை 1924இல் சான் மார்சல் அறிவித்தது, இலக்கியங்கள், அகழ்வாய்வுகளில் தமிழ் வேர்களைத்தேடும் மரபுவழிக் குழுக்கள் பெருகக் காரணமானது.

இந்திய ஒன்றியஅரசு உறுதியான நிலையில் பிரித்தானியருக்கு (ஆங்கிலேயருக்கு) எதிராகப் பரப்புரை செய்துவரும் பொழுது தமிழ்நாடு ஒரு பிரித்தானிய அலுவலரை அவருடைய தொல்லியல் கண்டுபிடிப்பு திராவிடத்திற்கு உச்சவுயர்வைத் தந்து ஓர் உந்துதலானதால் அவரைக் கொண்டாடி வருகின்றது.

20 செபுதம்பர் 1924இல் பிரித்தானியத் தொல்லியலர் சர் சான் மார்சல் சிந்துவெளி நாகரிகக் கண்டிபிடிப்பைப் படவிளக்க இலண்டன் செய்திகள்” (Illustrated London News) இதழ்வழி அறிவித்தார். அவருடைய கட்டுரையான, “நெடுங்காலமாக மறக்கப்பட்ட நாகரிகத்தின் முதல் வெளிப்பாடு: ஒரு வரலாற்றுக்கு முந்திய கடந்த காலம்என்பதில், ‘சிந்துவெளி நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது. சிந்துவெளி மொழி அல்லது மொழிகள் கட்டாயம் ஆரியருக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அம்மொழிகளில் ஒன்றோ மற்றொன்றோ (ஒன்றுக்கு மேற்பட்டதுபோல் தோன்றுகின்றபடி இருக்குமானால்) திரவிட மொழியாகும் என்று குறிப்பிட்டார்.

எழுச்சிமிக்க மொழிவரலாற்றைக் கொண்ட ஒரு மாநிலத்திற்கு ஒரு பிரித்தன் அதிகாரியின் இந்த ஆய்வுமுடிவு திராவிடர்க்கருத்தியல் மொழிவோர்க்கு மேடை அமைத்துக் கொடுத்ததுபோல் ஆயிற்று. பின்னாளில், ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் சிந்துவெளி எழுத்திற்குப் பொருள்காணும் அவர்களுடைய முயற்சியால் அந்த மாநில மொழியினுடைய தொன்மையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.


தியூக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சுமதி இராமசாமி 2001இல் ஒரு கட்டுரையில் இக் கண்டுபிடிப்பின் தொடக்கக்கால எதிர்வினையாகச் சென்னை மாநிலத்திலிருந்து தி.ஆர்.சேச ஐயங்காரின் (1925) ‘திராவிடர் இந்தியா’ (Dravidian India), மு.சி.பூரணலிங்கம் பிள்ளையின் (1927) ‘தமிழ் இந்தியா’ (Tamil India) போன்ற நூல்கள் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போதிலிருந்து தமிழ்நிலம் சிந்துவெளி நாகரிகம் இரண்டிற்கும் இடையில் மொழியியல் தொடர்பில் நிறைய இலக்கியங்கள் வந்துள்ளன.

இருந்தபோதிலும், மேலும் உறுதிப்படுத்த, அம்மாநிலம் அதற்குப் பிறகும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2015இல் இந்திய அகழ்வாய்வுத் துறையின் (Archaeological Survey of India - ASI) கே.அமர்நாத்து இராமகிருட்டினா தலைமையில் கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பானைகள், வைகையாற்றங் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண்ணாலான சுட்ட செம்பழுப்பு வட்டக் கிணறுகள் போன்ற கலைப்பொருள்கள், தமிழ்நாட்டின் கழக (சங்க)க் காலம் முன்பு நினைத்திருந்ததைவிட மேலும் பழமையானதென்ற கருத்தளித்தன. இக் கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கின. பலர், கருப்பு-சிவப்பு மட்பாண்டச் சில்லுகளில் கண்ட ஆதன், குவிரன் எனும் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டினர்.

இது, “திரவிட மொழிபேசும் மக்கள் வடஇந்தியாவில் ஆரியர்களுக்கு முற்பட்டவர்களாகவும் பெரும்பாலும் சிந்துவெளி நாகரிகத்தினரைப் போல் மேம்பட்ட பண்பாட்டை உடையவர்களாகவும் இருந்தனர்என்னும் மார்சலின் உறுதியுரையைச் சான்றுடன் உறுதிப்படுத்துகின்றது.

ஒரு புயல் தொடர்ந்தது. இந்திய ஒன்றியஅரசு இராமகிருட்டினாவை மாற்றியது. கீழடி அகழ்வாய்வை நிறுத்தும் நோக்கிலேயே அம்மாறுதல், செய்யப்பட்டதாக தமிழ்நாட்டு அறிவாளிகள் குற்றம்சாட்ட அது காரணமாயிற்று. மூன்று கட்ட அகழ்வாய்வுகளுக்குப்பின், தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணியை மேற்கொண்டது.

வரலாறு, இலக்கியங்களின்பால் ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான தி.உதயச்சந்திரன் 2018இல் தொல்லியல் துறையின் ஆணையராக்கப்பட்டார். அவருடைய தலைமையில் தொல்லியல் துறையில் இம் மாநிலத்தில் பரபரப்பான செயற்பாடுகள் நிகழ்ந்தன. அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் எளிய மக்கள் மொழியில் பதிப்பித்து


வெளியிடப்பட்டன. புதிய அகழ்வாய்வு இடங்கள் அடையாளம் காணப்பட்டன. பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஏறத்தாழ இதே நேரத்தில், சென்னையில் உள்ள உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம், அரப்பா, சிந்துவெளிநாகரிகத்தின் அறிவியல் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியைத் தொடங்கியது. சிந்துவெளி நாகரிகத்தில் மார்சலின் திராவிடர்பற்றிய குறிப்பும் இங்கே பரவலாக நிலவும் திராவிடர் பற்றிய கருத்துகளும் ஒத்திருந்தன. எனவே, 2018இலிருந்து நாங்கள் சொற்பொழிவுகள், அச்சிட்ட வெளியீடுகளுடன் சிந்துவெளி கண்டுபிடிப்பு நாள்கொண்டாடுகின்றோம். மார்சலுக்குத் தமிழருடன் நேரடித் தொடர்பில்லை என்றாலும், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் அவருடைய வல்லாண்மையின்கீழ் இருந்தபோதுதான் மற்றொரு பிரித்தானியத் தொல்லியலரான அலெக்குசாந்தர் இரியா, ஆதிச்சநல்லூர் அகழ்வாழ்வுகளை மேற்கொண்டார்என்று உரோ.மு.ஆ.நிறுவனத்தின் நிறுவுநர்-அறங்காவலர் சுந்தர் கணேசன் கூறுகிறார்.

மாநிலத் தொல்லியல் துறையும் உரோ.மு.ஆ.நிறுவனமும் சனவரி 5-7, 2025இல் சென்னையில் பன்னாட்டு சிந்துவெளி மாநாடுநடத்துகின்றன.

2018இல் உரோ.மு.ஆ.நிறுவனம் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான ஆர்.பாலகிருட்டினனின் சொற்பொழிவு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. அவர், கழக(சங்க) இலக்கியங்களைப் பயனபடுத்திப் பானை வழியில் விளக்கமளித்தார். தென்தமிழகத்தில் அகழ்வாய்வில் கிடைத்த பானைகளில் சிந்துவெளி எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். சிந்துவெளி நாகரிகமும் வைகைக்கரை நாகரிகமும் சிந்துவெளி எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளதால் இரண்டிற்கும் தொடர்புள்ளதாக அவர் கருத்துரைத்தார். இக்கருதுகோள், சிந்துவெளி நாகரிகம் முடிகின்ற இடமும் கழகஇலக்கியங்கள் தொடங்குகின்ற இடமும் ஒன்றே என்று முன்மொழியும் அவருடைய தலைசிறந்த படைப்பான ஒரு நாகரிகத்தின் வழிச்செலவுஎன்ற நூலைப் பாலகிருட்டினன் வெளியிடச் செய்தது.

தமிழினத்தின் (திராவிட இனத்தின் எனப் படியுங்கள்) தனிச்சிறப்பு அடையாளக் கூறுகளில் ஒன்றாகக் கழக(சங்க) இலக்கியங்களைப் போற்றும் கட்சியான தி.மு.க.விற்குப் பாலகிருட்டினனின் கருதுகோள் உடனடியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிற்று.


வடக்கு தெற்குப் பிரிவு வளர்ந்துவரும் நிலையில், சிந்துவெளி கண்டுபிடிப்பு நூற்றாண்டைக் கொண்டாடத் தி.மு.க. ஏன் தேர்ந்தெடுத்தது என்று தெளிவாகத்தெரிகிறது. அக்கட்சி, ஒரு பிரித்தானிய அலுவலரைப் பெருமைப்படுத்துவது இது முதன்முறை இல்லை. 2000த்தில் முதலமைச்சர் கருணாநிதி முல்லைப்பெரியாறு அணை கட்டித்தந்த பிரித்தானியப் பொறியியலரான பென்னிகுயிக்குக்கு ஒரு சிலையை நிறுவினார். 2022இல் மாநில அரசு பென்னிகுயிக்குக்கு பிரித்தன் நாட்டில் ஒரு சிலை நிறுவும் திட்டத்தை அறிவித்தது. இப்போது, மார்சலுக்கு ஒரு முழுஉருவச்சிலை நிறுவத் தீர்மானித்துள்ளது.

மாநிலத் தொல்லியல் துறையின் தொடர் கண்டுபிடிப்புகளும் பா.ச.க.தலைமையிலுள்ள ஒன்றியஅரசின் மிரட்டல் அழுத்தமும் திராவிட மாதிரிமுழக்கமிடலும் சேர்ந்து தமிழக மக்கள்தொகையின் பெரும்பகுதியின் கவனத்தை இதுவரை கண்டுகொள்ளப்படாதிருந்த தொல்லியலை நோக்கித் திருப்பியது. தென்தமிழ்நாட்டில் கழக(சங்க)க்கால மரபு சார்ந்ததாக அறிந்துள்ள மதுரை, தஞ்சை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளின் அகழ்வாய்வுகள் தொல்லியலாய்வு, கல்வெட்டாய்வு ஆர்வலர் குழுக்கள் பலவற்றைத் தோற்றுவித்தன.

தொல்லியல் இடங்கள் பற்றி விழிப்பூட்டவும் அவற்றைப் பாதுகாத்துப் பேணவும் இக் குழுக்கள் கிழமையிறுதி நாட்களில் தொல்லியலாய்வு, கல்வெட்டாய்வுகளில் சான்றிதழ், பட்டயப் படிப்புகளை இணையவழி, நேர்முகவழிகளில் நடத்துகின்றன. இவை மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திலும் தமிழ்நாட்டு அரசு பயிற்சி நிறுவனங்களான தமிழ்நாடு தொல்லியல் அருங்காட்சியியல் பயிற்சி நிறுவனங்களிலும் அளிக்கப்படும் வழக்கமான படிப்புகள் அல்லாதவை. குடிமக்கள் அறிவியல்’ – என்பதைப் போன்று குடிமக்கள் தொல்லியல்’’ என்பதற்குத் துணைதரும் ஒரு புதிய அடித்தளம் உருவாக்கும் வகையில், சில குழுக்கள் தொல்லியல் இடங்களுக்கு மரபறி நடைச்செலவுகளுக்கும் கூட ஏற்பாடு செய்கின்றன.

இத்தகைய ஆர்வலர்கள் புதிய பொருள்களைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள். ஆனால், அவர்கள் அடையாளம் காண்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. எந்தக் கருதுகோளையும் மெய்ப்பிக்கத் தகுந்த தொழிலறிந்தார் அணுகுமுறை தேவைஎன்று பெயர்தெரிவிக்க விரும்பாத ஓய்வுபெற்ற ஒரு தொல்லியல் பேராசிரியர் கூறுகின்றார்.

(புதுவை தூயதமிழ் மாத இதழ் நாகிய 'நற்றமிழ்'  (செபுதம்பர்- அக்குதோபர் 2024) இதழில் வந்தது)