புதன், 26 நவம்பர், 2025

காலணி வீசும் ‘சனாதன’க் காப்பு!

 

காலணி வீசும் சனாதனக் காப்பு!

               

       மகாராட்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த பூ.இரா.கவாய் என்னும் பூசன் இராமகிருட்டின கவாய் இந்திய உச்சநயன் மன்றத்தின் நயனராக 2019 மே 24-அன்று அமர்த்தம் பெற்றார்; 2025 மே 14-அன்று உச்சநயன் மன்றத்தின் 52-ஆம் தலைமை நயனராக அமர்த்தம் பெற்றுக் கடமையாற்றி வருகிறார்.


    கடந்த ஆறு ஆண்டுகளில், அரசியலமைப்புச் சட்டம், மேலாண்மைச் சட்டம், குடிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம், மின்சாரச் சட்டம், நடுவர் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், கல்வித் தொடர்பானவை, வாணிக வழக்குகள் உள்ளிட்ட பல்வேறுநிலைச் சட்டங்களைக் கையாளுகின்ற ஏறத்தாழ 700 அமர்வுகளில் இடம்பெற்றிருந்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல், குடிமக்களின் அடிப்படைஉரிமைகள் உள்ளிட்ட மாந்த உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புகள் உட்பட சற்றேறக்குறைய 300 தீர்ப்புகளை எழுதியுள்ளார். 2025 நவம்பர் 23 - அன்று பணிநிறைவு செய்ய உள்ளார்.

    உலான்பாதர் (மங்கோலியா), நியூயார்க்கு (அமெரிக்கா), கார்டிப்பு (பிரிட்டன்), நைரோபி (கென்னியா) ஆகிய இடங்களில் பல்வேறு அனைத்து நாட்டு மாநாடுகளில் கலந்துகொண்டிருக்கின்றார். கொலம்பியா பல்கலைக் கழகம், ஆர்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், அமைப்புகளிலும் பல்வேறுபட்ட அரசியலமைப்பு, சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கின்றார்.

    2025 அக்டோபர் 6 அன்று, இந்தியாவின் உயர் நயன் மன்றத்தின் நயன்மன்றம் -1 என்ற அறையில், தலைமை நயனர் கவாய் அவர்களின் மன்றத்தில், காலை 11.35 மணியளவில், வழக்காளர்களின் முன்னிலையில், வழக்குரைஞர் ஒருவர் தலைமை நயனர் மீது காலணி ஒன்றை வீச முயன்றார். அப்போது அவர் “சனாதனத்தை அவமானப் படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” (“சனாதன் கா ஆப்மான் நகி சகேங்கே”) என்று ஒலி எழுப்பினார். அந்த வழக்குரைஞரை உடனடியாகப் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே கொண்டுசென்றனர்.

    தலைமை நயனர் கவாய் அவர்கள் எவ்வகை அச்சமோ கோவமோ பரபரப்போ, பதற்றமோ இல்லாமல் அமைதியாகக், ”கவனத்தைச் சிதறவிடாதீர்கள், இது எனக்குத் தாக்கம் ஏற்படுத்தாது” என்று கூறிவிட்டுத் தாம் கவனித்த வழக்கைத் தொடர்ந்தார். இதனை இந்தியச் சட்ட வட்டாரங்கள் “எடுத்துக்காட்டான நயன்துறை மனப்பாங்கு” (model judicial temperament) என்று பாராட்டின. ‘நடந்து விட்ட செயல்’ குறித்து உடன் இருந்தோர் சற்று நேரம் கழித்து நினைவூட்டிய வேளையில், தலைமை நயனர், ‘அதை அப்போதே மறந்து விட்டேன்’ என்று இயல்பாகச் சொல்லிவிட்டு நயன்மன்றப் பணியில் மூழ்கி விட்டார். அவர் நயன்மன்றப் பதிவாளரிடம், காலணி வீசியவர் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

    நம் நாட்டு மக்களை மட்டுமல்லாமல், உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வேளையில், சிறிதளவும் பொறுமையை இழக்காமலும், பதற்றமடையாமலும் தனது பணியினைத் தொடர்ந்த நிலை, தலைமை நயனரின் முதிர்ச்சி பெற்ற பேருள்ளத்தை வெளிப்படுத்தியது. பிற நயனர்கள், மூத்த வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் எனப் பலரும் அவரின் இந்த நடத்தை குறித்துப் பாராட்டினார்கள். உ. ந. மன்ற வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர், “அந்த நெருக்கடியான நேரத்தில் நயன் மன்றத்தின் பெருமிதத்தைக் காக்கும் வகையில் அவர் அமைதியாக நடந்துகொண்டார்” என்று கூறினார்.

        தலைமை நயனர் மீது காலணியை வீச முயன்ற ஆள் தன்னறிவை இழந்துவிட்ட பித்துப்பிடித்த ஆளோ, தெருத்திரி மாந்தனோ, முதிர்ச்சியற்ற இளைஞனோ இல்லை. 71 அகவை நிரம்பிய உச்ச நயன் மன்றத்தின் மூத்த வழக்குரைஞர் என்பது வியப்பளிக்கும் உண்மையாகும்!

அரசமைப்புச் சட்டத்தின்படிப் பணியாற்றிய தலைமை நயனரை, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான, பிறப்பிலேயே வேறுபாடு கற்பிக்கின்ற ‘சனாதன’க் கோட்பாட்டின் வெறியுணர்வுடைய ஒருவர் தாக்கிட முயன்றுள்ளார். இது ஒரு தனியாள் செயல் இல்லை. இந்தச் செயலைப் புரிந்தவருக்குப் பின்னால் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கொள்கையும், நம்பிக்கையும் உள்ளோர் உள்ளதை உணர இயலும் என்று நடுவுநிலையாளர் கருத்துரைக்கின்றனர்.

    வழக்கறிஞர் அமைப்புகள், இந்த நிகழ்வு, “நயன் மன்றத்தின் மீதான நேரடித் தாக்குதல்” என்று கண்டித்துள்ளன. உ.ந.மன்ற வழக்கறிஞர் மன்றம் காலணி வீச முயன்ற வழக்குரைஞர் இராக்கேசு கிசோரின் உறுப்பினர் உரிமையை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    தலைமை அமைச்சர் நரேந்திரமோடி, இத் தாக்குல் முயற்சி குறித்து எஃசு (X) தளத்தில் எழுதிய செய்தியில், “இந்தியத் தலைமை நயனர் பூ.இரா.கவாய் அவர்களுடன் பேசியுள்ளேன். இன்று காலை உச்சநயன் மன்ற வளாகத்தில் அவர்மீது நடந்த தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோவமடையச் செய்துள்ளது. இப்படிப்பட்டக் கீழ்மையான செயல்களுக்கு நம் குமுகத்தில் இடமில்லை. இது முழுமையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையிலும் நயனர் கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். அது, நயன்மையின் விழுமியங்களிலும் நம்முடைய அரசியலமைப்பை வலுப்படுத்தும் உணர்விலும் அவருடைய உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

    இந்திய ஒன்றிய அமைச்சர் இராமதாசு அத்துவாலே போன்றவர்கள், இது ஒடுக்கப்பட்ட குமுகத்தைச் சேர்ந்த நயனர் உயர்பதவிக்கு வந்ததை உயர்சாதியினர் ஏற்றுக்கொள்ளாததன் விளைவு என்றும், அதனால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    பதிவு செய்த உ.ந.மன்ற வழக்கறிஞர்கள் மன்றம் (SCAORA), பேராயக் கட்சி, தமிழக முதலமைச்சர் மு.க.இசுதாலின், கருநாடக முதல்வர் சித்தராமையா முதலியோரும் காலணி வீசிய நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியே கொண்டுசெல்லப்பட்ட அந்த வழக்குரைஞரை தில்லி காவல்துறை உசாவிய போது, 71 அகவையுடைய உச்ச நயன்மன்ற வழக்குரைஞராகிய அவர் பெயர் இராக்கேசு கிசோர் என்று கூறியிருக்கின்றார். 16-9-2025 அன்று உ. ந. மன்றத்தில் ‘மத்தியப் பிரதேச’ மாநிலம் காசுரகா கோயில் விட்டுணு சிலை புதுப்பிப்பு பற்றிய வழக்கில், தலைமை நயனர், ‘கடவுளை அவமதித்துப் பேசிவிட்டார்’ என்றும், ‘சனாதன’த்தைப் பற்றுடன் கடைப்பிடித்துவரும் அவரால் தலைமை நயனர் சொன்னதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றும் கூறியுள்ளார். காலணியை வீசிடும் முயற்சி செய்தது, அவருடைய செயல் இல்லை என்றும் கடவுள் செய்யுமாறு ஏவியபடி, காலணியைக் கழற்றி வீச முயன்றதாகவும் கூறியுள்ளார். மூன்று மணி நேர உசாவலுக்குப் பிறகு, அவரைக் காவல் துறையினர் போக விட்டிருக்கின்றனர்.

    நடுவுநிலை அறிஞர்கள், இந் நிகழ்ச்சியை ஒரு தனிப்பட்ட தாக்குதலாக மட்டுமன்றி நயன் துறையின் மாண்பைக் குலைக்கின்ற, அவமதிக்கின்ற, செயலாகப் பார்க்கின்றனர். நயன்துறையின் உரிமைக்கும் நாட்டின் அரசியலமைப்பிற்கும் அச்சுறுத்தலாகவும் பார்க்கின்றனர். இத்தகைய வெறுப்புச் செயல்களுக்குத் தெளிவான விடையளிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றனர்.

    இன்னும் சிலர், சாதி சார்ந்த இழிவுபடுத்தலாகவும், ஓர் ஒடுக்கப்பட்ட பிரிவைச்சேர்ந்த தலைமை நயனர் மீதான தாக்குதலாகவும் பார்க்கின்றனர். தலைமை நயனர் பூ.இரா.கவாய் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த இரண்டாம் தலைமை நயனர் என்பதை நினைவூட்டுகின்றனர்.

    காலணி வீசுவது என்பது இழிவுபடுத்தலின் உச்சமாகக் கருதப் படுவதால், இந் நிகழ்வு குறிவைத்து நடத்தப்பட்ட சாதி அடிப்படையிலான அவமதிப்பு என்று கருதப்படுகிறது. இச் செயல் பட்டியல் சாதிகள், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989-இன் கீழ் வரும் ஒரு செயலாகும் என்றும், இது பொது இடத்தில் ஒடுக்கப்பட்ட குமுகத்தைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்த முனையும் நோக்குடன் செய்யப்பட்டது என்றும் வலியுறுத்துகின்றனர்.

    வேறு சிலர், இந் நிகழ்வை நயன் துறையிலும் ‘சனாதன’க் கோட்பாடுகளைப் புகுத்த முயலும் பார்ப்பனிய மதவெறி ஆற்றல்களின் நேரடித் தாக்குதலாகப் பார்க்கின்றனர். நயன்துறையின் தனி உரிமையைக் குலைக்கும் முயற்சி என்பது மட்டுமின்றிச் சமன்மை, குமுக நயன்மை ஆகியவற்றிற்கு எதிரான ஒரு செயலாகவும் பார்க்கின்றனர்.

     காசுரகா கோயில் சிலைகள் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. சிதைவடைந்த விட்டுணு சிலையைப் புதுப்பித்து கோயிலுக்குள் வைப்பதற்கு நயன்மன்றம் உத்தரவிட முடியாது. இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் பதிவு செய்த வழக்கு என்று தலைமை நயனர் குறிப்பிட்டார். தொல்லியல் துறையினரை அணுகுங்கள் என்று கூறித் தனது அமர்விற்கு வந்த வழக்கினைத் தள்ளுபடி செய்தார். திரும்பதிரும்ப முறையீட்டாளர் சிலையைப் புதுப்பிப்பதற்கு உத்தரவிடக் கோரிய நிலையில், நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள விட்டுணுவிடமே கேட்டுப் பெறுங்கள் என்று சொல்ல நேர்ந்தது.

    கோயிலில் உள்ள அந்தச் சிலை சிதைந்து விட்டது, புதியசிலை வைக்க வேண்டும் அல்லது சிதைந்த சிலையைப் புதுப்பிக்கவேண்டும் என்று அவர் கோயில் மேலாண்மையிடமோ, தொல்லியல் துறையிடமோ முறையிட வேண்டும், இல்லையேல், மாவட்டஆட்சியர் மூலம் முயற்சி செய்யலாம். நயன்துறையை நாட முடிவு செய்தாலும், உயர் நயன்மன்றம் சென்று தீர்ப்பு பெறலாம். அங்கும் ஞாயம் கிடைக்க வில்லை என்றால் தான் உச்ச நயன் மன்றத்தை அணுகி இருக்க வேண்டும். ஆனால், இவர் நேராக உச்ச நயன் மன்றம் சென்றது சரியில்லை. தொல்லியல் துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒன்றிய அரசாட்சியில் இருப்பது ‘சனாதன’த்தைப் போற்றும், காக்கத் துடிக்கும் ஆட்சியாளர்கள் தாமே! ஏன் இவர் அதை நாடவில்லை? காரணம், இவர் நோக்கம் விட்டுணு சிலை சீரமைப்பு இல்லை! கவாய் தான்! ஒடுக்கப்பட்டோரிலிருந்து இரண்டாம் முறை ஒருவர் உயர் பதவிக்கு வந்ததைப் பொறுக்க முடியவில்லை என்ற விளக்கமும் தரப்படுகின்றது.

    “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக்கூடிய இடத்தில், ஒருசாராரின் மத நம்பிக்கைகள், மத வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் அடிப்படையில் மட்டுமே இனி உச்ச நயன் மன்ற வளாகங்கள் செயல்பட வேண்டுமென்றும், அவற்றின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்றும், அவற்றிற்கு மாறாக இந்தியக் குற்றத் தண்டனை நெறித் தொகுப்புச் சட்டத்தின்படி ஞாயமான தீர்ப்புகளோ கருத்துகளோ எடுத்துரைப்புகளோ கூறுகின்றவர் உச்ச நயன் மன்றத் தலைமை நயனராக இருந்தாலும் சரியே, நாங்கள் அவர்மீது காலணி வீசிடத் தயங்க மாட்டோம்!” - என்பதற்கு அடையாளமாகவே இந்தச் செயலைத் திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது.

    பழ.நெடுமாறன் ஐயா, “தலைமை நயனர் அவர்கள் மிக்க பெருந்தன்மையுடன் கிசோரை மன்னித்திருந்தாலும், அவர் மீது வழக்குத் தொடுத்து உரிய தண்டனை பெற்றுத் தராமல் விடுவித்திருப்பது எதிர்காலத்தில் இதைப்போன்ற அடாத செயல்களில் பலர் ஈடுபடுவதற்கு ஊக்கமளிக்கும். உச்ச நயன்மன்றத்தின் வரலாற்றில் தலைமை நயனர் மீது செருப்பு எறிந்து அவரை அவமானப்படுத்த நடைபெற்ற முயற்சி இதுவரை நடந்திராத ஒன்றாகும். இந்த அடாத செயல், நமது நயன்துறையின் கண்ணியம், சட்டத்தின் ஆட்சி மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். மிக எளிய பின்னணியைக் கொண்ட ஒருவர் தனது அறிவினாலும், கடும் உழைப்பினாலும் நமது தேசத்தின் நயன்துறையின் மிக உயர்ந்த தலைமைப் பதவியை அடைந்துள்ளார். இத்தகைய சட்ட மாமேதை ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சி மிகவும் கண்டிக்கத் தக்கதாகும். இவ்வாறு செய்த மிக இழிவான ஒருவனைத் தண்டிக்காமல் விடுவது எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறு வேண்டாத நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஊக்கமளிப்பதாகும்”.… “இதைப்போன்று நயன்துறைக்கு எதிரான தகாத செயல்கள் நடைபெறுவது தடுக்கப்படவேண்டும். முளையிலேயே இத்தகைய நிகழ்ச்சிகள் கிள்ளியெறியப்படவேண்டும். உச்ச நயன்மன்றத் தலைமை நயனரை நயன்மன்றத்திலேயே அவமானப்படுத்தத் துணிந்த ஒருவன் அதுவும் மூத்த வழக்கறிஞராக உள்ளவன் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகின்றார்.

    மேலும், “தொடர்ந்து பல காலமாக நயன்துறைக்கு எதிரான வெறுப்பு நஞ்சினை உயர்பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து உமிழ்ந்து கொண்டே வருகிறார்கள். குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியிலிருந்த தன்கர், ஆளுநர்களின் முற்றதிகாரப் போக்கிற்கு எதிராக உச்ச நயன்மன்றம் தீர்ப்பளித்தபோது, அதை மிகக் கடுமையாகத் திறனாய்வு செய்தார். பா.ச.க., ஒன்றிய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே கண்டித்தார்கள். தலைமை அமைச்சரின் பொருளியல் கலந்துரைஞர்களில் ஒருவரான சஞ்சீவ் சன்யால் என்பவர், “முன்னேறிய பாரதமாக நமது நாடு மாறுவதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவது நமது நாட்டின் நயன் மன்றங்களேயாகும். நயன்மை அமைப்பும் சட்டங்களும் நமது முன்னேற்றத்திற்குப் பெரும் தடைகளாக விளங்குகின்றன. நயனர்கள் குறைந்த நேரமே வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறைகளும் அதிகம். இந்தியாவின் நயன்மை அமைப்பு முறை சீர்கேடான நிலையில் உள்ளது. இந்திய மக்களாட்சியின் (சனநாயகத்தின்) வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளது என்றெல்லாம் நயன்துறையைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்” - என்றும் நெடுமாறன் ஐயா எடுத்துக்காட்டுகிறார்.

    உ.ந.மன்ற வழக்கறிஞர் மன்றம் வழக்குரைஞர் இராக்கேசு கிசோர் தொழில்முறை நடத்தை நெறிகளை மீறியதாகக் கூறிக் கண்டித்து, அவர் மீது நயன்மன்ற அவமதிப்புக் குற்ற வழக்குப் பதிவு செய்தது. இதற்கு இந்திய ஒன்றிய அரசுத் தலைமை வழக்கறிஞர் துசார்மேத்தாவும் ஒப்புதல் அளித்து வழக்கிற்குத் துணைநின்றார். இந்த வழக்கு 27-10-2025 - அன்று நயனர்கள் சூரியகாந்து, சாய்மாலியா பாக்குசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உசாவலுக்கு வந்தது. எனினும், இந்த நிகழ்வு மீண்டும் கவனத்திற்கு வருவதைத் தவிர்ப்பதற்காக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் அமர்வு தயக்கம் காட்டியது. வழக்குத் தொடர்வது தேவையற்ற விளம்பரத்தைத்தான் பெற்றுத்தரும் என்று நயன்மன்றம் குறிப்பிட்டது. தலைமை நயனர் பூ.இரா.கவாய் இந்நிகழ்வு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள நிலையில், இதை அப்படியே விட்டுவிடுவது அறிவார்ந்ததாகும் என்று அமர்வு கூறியது.

    ஆனால், இந்த நிகழ்ச்சி நிறுவனத்தின் பெருமிதத்துடன் தொடர்பு உடையது என்று மூத்த வழக்கறிஞர் விகாசு சிங் வலியுறுத்தினார். தாக்குதல் நடத்தியவர் தனது செயலை ஞாயப்படுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தலைமை நயனர் மீதான தாக்குதலை குமுக வலைத்தளங்களில் சிலர் பெருமைப்படுத்துவது பற்றியும் அவர் கவலை தெரிவித்தார். நயன்மன்றத்தின் மீதான தாக்குதல்களை இணையத்தில் ”போற்றிப் புகழ்வதை”த் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கப் போவதாக உச்ச நயன் மன்றம் அறிவித்தது.

    இராக்கேசு கிசோர் காலணி வீசிய செய்தி, உயர்சாதியின் சாதிவெறித் தாக்குதல் என்று குமுக ஊடகங்களில் பரவியது. இவ்வாறு ஆங்கில இதழ்களிலும் செய்தி வந்தது. தலைமை நயனர் ஒடுக்கப்பட்ட பிரிவினர் என்பதால், இராக்கேசு கிசோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை முன்பே குறிப்பிட்டோம். இத்தகைய நிலையில் கிசோர், முதலில் ”என் பெயர் முனைவர் இராக்கேசு கிசோர். என் சாதியை யாராவது சொல்ல முடியுமா? ஒருவேளை நானும் தலித்தாக இருக்கலாம்” என்று கூறியதாக இந்தியன் எக்சுபிரசு, தெக்கான் எரால்டு, இந்துத்தான் தைம்சு முதலிய செய்தி நிறுவனங்கள் கூறின. மறுநாள் அவரே, ”நான் பாண்டே, திவாரி, குப்தா இல்லை, நான் ‘தலித்’ என் சாதிச் சான்றிதழைக் காட்ட அணியமாக (தயாராக) இருக்கிறேன்.” என்று கூறியதாகச் செய்திகள் வந்தன. ஆனால், அவர் ”அணியம்” என்று சொன்னாலும், பின்னர் எந்தச் சாதிச் சான்றிதழும் காட்டவில்லை. இது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    “கேட்டினும் உண்டோர் உறுதி” என்பார் வள்ளுவப் பெருந்தகை. உ.ந.மன்றத்தில் நிகழ்ந்த இந்தக் காலணி வீச்சு நிகழ்வு, ஒன்றை நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றது. ‘சனாதனக் காப்பு’ எந்த எல்லைக்கும் போகும் என்பதை இந்திய மக்களுக்கும் குறிப்பாகச் ‘சனாதன’ எதிர்ப்புக் குரலெழுப்பும் தமிழருக்கும் உணர்த்தியிருப்பதே அதுவாகும். தமிழர், குறிப்பாகத் தமிழ் இளையோர் விழிப்புற வேண்டும்!

                கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக்

                கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார் வீணே

                நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

                நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ!...        

                                                                                - வள்ளலார்

                மக்களைத் தாழ்த்தும் மதம் உயர்ந்ததுவா?

                மதத்தைத் தவிர்க்கும் மக்கள் உயர்ந் தவரா?

                மக்களுள் பலரைத் தாழ்ந்தவர் என்னும்

                மாமதங் கொண்ட மதமும் பெரிதா?

                மதத்தைத் தவிர்த்தால் கொதித்திடும் நெஞ்சம்

                மலத்தைத் தலையில் சுமந்திட வருமா?    

                                                                - பாவலரேறு  பெருஞ்சித்திரனார்.

                                                                                                                -  த.ந.

(புதுவை 'நற்றமிழ்' - நவம்பர் 2025 இதழில் வந்தது)