அமர்நாத்து இராமகிருட்டினா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமர்நாத்து இராமகிருட்டினா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2025

கீழடியும் இந்திய ஒன்றிய அரசின் கீழ்மையும்!

 

கீழடியும் இந்திய ஒன்றிய அரசின் கீழ்மையும்!

மதுரை நகரிலிருந்து தென்கிழக்கே 12 அ.மா. (கி.மீ) தூரத்தில் வைகையாற்றங்கரையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீழடி என்னும் சிற்றூர் உள்ளது. இக் கீழடி, அகழ்வாய்வு செய்யப் பொருத்தமான இடமாக 2013-ஆம் ஆண்டு ஒன்றிய முற்போக்குக் கூட்டணி(UPA) ஆட்சியில் இந்தியத் தொல்லியல் துறையால் (ASI) தேர்ந்தெடுக்கப்பட்டது.

            2014-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வை ஆய்வாளர் கே. அமர்நாத்து இராமகிருட்டினா என்பார் தலைமையில் கீழடியில் தென்னந்தோப்பாக இருந்த பள்ளிச்சந்தை என்னுமிடத்தில் அகழ்வாய்வு தொடங்கியது. 2014–2015-இல் முதல் கட்ட ஆய்வும் 2015-2016-இல் இரண்டாம் கட்ட ஆய்வும் நடைபெற்றன. இவ் இரண்டுகட்ட ஆய்வுகளில், பரந்த அளவில் கட்டடத் தொகுதிகளைக் கண்டுபிடித்தனர். சுவர் கட்டமைப்புகள், வடிகால் அமைப்புகள், கிணறுகள் உட்பட 7,500 க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை அவர்கள் கண்டுபிடித்தனர் – இவை அனைத்தும் செழித்து வளர்ந்த ஒரு மீப்புதிய நகர்ப்புற நாகரிகத்தின் சான்றுகளாகும்.

            மேலும், பானைகள், மணிகள், உழவுத்தொழில் கருவிகள், தொழிற் கருவிகள், தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், களிமண் பொம்மைகள், நெயவுத்தொழில், பாண்டங்கள் செய்யும் தொழில்களின் அடையாளங்கள் எனப் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

            இவை கழக(சங்க)க்காலக் குடியிருப்பையும், கழக இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் பொருட்களை ஒத்தவையாகவும் இருந்தன. (சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல) இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்களாக இவை உள்ளன.

            2014-இல் பாரதிய சனதாக் கட்சி இந்திய ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது. ஆய்வின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு இசைவு தரப்படவில்லை. மேலும் முதல் இரண்டுகட்ட ஆய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட அனைத்துத் தொல்பொருள்களையும் மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வக நடுவத்திற்குக் கொண்டுபோய்விட்டனர்.

            28-09-2016 -இல், சென்னை உயர் நயன்மன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் திருவமை. கனிமொழிமதி என்பார், கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கீழடியில் உலகத் தகுதியிலான (தரத்திலான) அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்படும் தொல்பொருள்கள் அனைத்தும் கீழடி அருங்காட்சியகத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துப் பொதுநல வழக்குத் தொடுத்தார். நயனர்கள் நாகமுத்து, முரளிதரன் ஆகிய இருவர் தலைமை ஏற்ற முதலாவது அமர்விலேயே, அவர்கள், இந்தியத் தொல்லியல் துறை முடிவுகளுக்கு இடைக்காலத் தடை அறிவித்தனர்.

            ஆய்வாளர் அமர்நாத்து இராமகிருட்டினாவை 2017-இல் இந்திய ஒன்றிய அரசு அசாமுக்குப் பணியிடமாற்றம் செய்து வெளியேற்றியது. அத்துடன், கீழடி அகழாய்வின் அறிக்கையை அவர் எழுத வேண்டாம் என்று கூறி, இன்னொரு அதிகாரி எழுத இந்தியத் தொல்லியல் துறை ஆணையிட்டது. நயன்மன்றத்தை நாடிய அமர்நாத்து, ‘தாம் அகழ்வாய்வு செய்த இடம் குறித்துத் தாம்தான் அறிக்கை எழுத வேண்டும். அதுதான் மரபுஎன்று கூறி அதற்காக வழக்குத் தொடுத்தார். அமர்நாத்து இராமகிருட்டினாதான் அந்த அறிக்கையை எழுத வேண்டும் என்று நயன்மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

            ஒருவழியாகப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் பெப்ருவரி 2017-இல் மூன்றாம்கட்ட அகழ்வாய்வுக்கு இசைவு கிடைத்து, மார்ச்சு 24-ஆம் நாள் மூன்றாம் கட்டப் பணிகள் தொடங்கின. அமர்நாத்துக்கு மாற்றாக அமர்த்தப்பட்ட சிரீராமன் என்ற அதிகாரி ஒதுக்கப்பட்ட 40 இலக்க உருவாவில் வெறும் 12 இலக்கம் மட்டும் செலவழித்துவிட்டு, முதல்  இரு கட்ட ஆய்வுகளில் கிடைக்கப் பெற்றவை போல எந்தக் கட்டடங்களின் தொடர்ச்சியோ அல்லது புதிய கட்டடங்களோ கிடைக்கவில்லை என்பதால் ஒன்றிய அரசு இனியும் இங்குப் பணத்தைச் செலவழித்து ஆய்வைத் தொடரத் தேவையில்லை என அறிவித்து ஒரேயடியாக இழுத்து மூடினார்.

            வழக்கறிஞர் கனிமொழிமதி மீண்டும் மதுரை உயர்நயன் மன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தார். நயனர்கள் எம்.எம். சுந்தரேசன், சத்தீசுக்குமார் இருவரும் கீழடி ஆய்வுக்களத்தை நேரில் பார்வையிட்டு, இவ்வாறான சிறந்த தொல்லியல் ஆய்வு தமிழகத்துக்குக் கட்டாயம் தேவை எனவும் இதனை இந்தியத் தொல்லியல் துறை மேற்கொள்ளும் போதுதான் உலகத் தகுதியிலான கருவிகள், பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலம் சிறப்பான ஆய்வு முடிவுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். எனினும், இந்திய ஒன்றியஅரசு மறுபடி கீழடியில் ஆய்வு மேற்கொள்ளவில்லை.

            மூன்று கட்டங்களோடு கீழடி அகழாய்வை இந்திய ஒன்றிய அரசு நிறுத்திக் கொண்டது. அதன்பின், விழிப்புற்ற தமிழ்நாட்டரசு 2017-ல் அகழ்வாய்வைத் தானே மேற்கொண்டு மாநில அரசின் தொல்லியல் துறை மூலம் நான்காம் கட்டத்திலிருந்து ஒன்பது கட்டங்கள் முடித்து பத்தாம் கட்ட ஆய்வை நடத்தி வருகிறது.

            அமர்நாத்து அவர்களே அறிக்கையை எழுத வேண்டுமென்று நயன்மன்றம் உத்தரவிட்டாலும், அதற்குப் பிறகும் கூட, அவரைச் சென்னைக்கு மாற்றாமல், அசாம் கவுகாத்தியில் இருந்து கோவாவுக்கு மாற்றினர். (பின்னர்க் கோவாவிலிருந்து தில்லிக்கும் அதன்பின் அங்கிருந்து நொய்டாவிற்கும் மாற்றப்பட்டார்). நயன்மன்றத்தை நாடிய பின்பே, சென்னைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

            சனவரி 2023-இல் மீண்டும் தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்ட அமர்நாத்து, கீழடியில் 2014 – 2016-க்கு இடையில் தம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வுகள் குறித்த 982 பக்க ஆய்வறிக்கையை 2023 ஏப். 30-ஆம் நாள், இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் வித்தியாவதியிடம் தந்தார். ஆனால் அந்த அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை வெளியிடவில்லை. 

            அறிக்கையை வெளியிடக் கோரி உயர் நயன்மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2024-பெப்ருவரியில், உயர்நயன் மன்றத்தில் ஒன்றிய அரசு, ‘11 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும்எனக் கூறியது. ஆனால், அறிக்கையைப் பெற்று. இரண்டு ஆண்டுகள் ஆகியும் வெளியிடாது வைத்திருந்த பின்னால், இந்தியத் தொல்லியல் துறை, கடந்த மாதம் அமர்நாத்துக்கு, அவரது அறிக்கையைத் திருத்தி எழுதித் தருமாறு உத்தரவிட்டது. ஆனால், அமர்நாத்து , அறிக்கை எல்லா நிலைகளிலும் சரியாகவே இருப்பதாகக் கூறி, அதைத் திருத்த மறுத்து விட்டார்.

            கீழடி அகழ்வாய்வில் இதுவரை கண்டறிந்தவைதாம் என்னென்ன?

1. கீழடி அகழ்வாய்வுகளின் வழியாகக் கிடைத்த தரவுகள், கழக(சங்க)க் காலத்தின் செம்மையான நகரக்குடியிருப்பைத் தெளிவாகக் காட்டின. கழக(சங்க)க் காலத்தில் கட்டடங்கள் இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியது.

2. தமிழநாகரிகத்தின் காலக்கோட்டைப் பின்னோக்கி நகர்த்தி, சிந்து சமவெளி நாகரிகத்துடனான தொடர்புகளைப் பற்றிய பேச்சுகளைக் கீழடி அகழ்வாய்வு தூண்டியுள்ளது.

3. அக்காலத் தமிழ்மக்கள் குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்திய உறைக்கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

4. 120-க்கும் மேற்பட்ட தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துப் பொறித்த பானைஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் தனியாள்களின் பெயர்கள் (எ.கா: ஆதன், குவிரன், எய்யன், இயனன், சேந்தன், சாத்தன், சந்தன், குலவன், கோதை முதலியன) குறிப்பிடப் பட்டுள்ளன. இவை கி.மு.ஆறாம் நூற்றாண்டு, கழக(சங்க)க் காலத்திலேயே தமிழ்மக்களிடம் எழுத்தறிவு பரவலாக இருந்ததற்கான சான்றுகளாகும்.

5. தங்கத்தாலான அணிகலன்கள், பளிங்கு, சூதுபவளம், பச்சைக்கல், சுடுமண், கண்ணாடி ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மணிகள் கிடைத்துள்ளன. சங்கு, யானைக் கொம்பால் செய்யப்பட்ட வளையல்கள், சீப்பின் உடைந்த பகுதி முதலியவை கிடைத்துள்ளன.

6. கடினக்கல்படிகம் (Agate), குறை-மணிப் பழுப்புக்கல் (Carnelian) போன்ற கற்களால் ஆன மணிகள் வணிகத் தொடர்புகளைக் காட்டுகின்றன.

7. நூல் நூற்கும் தக்களிகள் (Spindle Whorl) மற்றும் செப்பு ஊசிகள் கிடைத்துள்ளன. இவை கீழடியில் நெயவுத்தொழில் செழிப்பாக இருந்ததைக் காட்டுகின்றன.

8. சாயப் பட்டறைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

9. இரும்பு ஈட்டிகள், உளிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் கிடைத்துள்ளன.

10. சுடுமண் முத்திரைக் கட்டைகள் (Rubber Stamp போன்றவை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

11. கட்ட-அரங்க ஆட்டக் (Chess போன்றது) காய்கள், பகடைக் காய்கள் (யானை மருப்பால் செய்யப்பட்டவை) கிடைத்துள்ளன.

12. சிறுவர்கள் விளையாட்டிற்கான காய்களும் கிடைத்துள்ளன.

13. மாடு, எருது, எருமை, செம்மறி ஆடு, ஆடு, நீலான் (ஒரு வகை மான்), புல்வாய் வகை மான், காட்டுப்பன்றி, மயில் போன்ற விலங்குகளின் எலும்புத் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

14. மாந்த உருவங்கள், காளை உருவ பொம்மைகள், பாம்பு உருவம் கொண்ட சுடுமண் படிமங்கள் கிடைத்துள்ளன.

15. படிகத்தால் (Quartz) செய்யப்பட்ட எடைக்கற்கள் கண்டறியப் பட்டுள்ளன.

16. கீழடி அகழாய்வு, கழக(சங்க)க் காலம் கி.மு. 6-ம் நூற்றாண்டிற்கும் முன்னதாகவே இருந்திருக்கலாம் என்பதற்கான வலுவான அடிப்படைச் சான்றுகளை வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒரு மேம்பட்ட, நகரவயமாக்கப்பட்ட, எழுத்தறிவு கொண்ட குமுகாயம் செழித்திருந்தது என்பதை மெய்ப்பிக்கின்றது.

17. 2024-இல் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 174 கீழ்நூ.மா.(c.m.) நீளமுள்ள களிமண் குழாய், அரப்பா அமைப்புகளை ஒத்த நீர் மேலாண்மையைக் குறிக்கிறது

18. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலக்கணிப்புகள், அறிவியல் அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாகக் கதிரியக் கரிமக் காலக்கணிப்பு(Radiocarbon Dating - C14) எனப்படும் பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

19. கீழடியில் கிடைத்த கரிமப்பொருட்களின் (எலும்புகள், நிலைத்திணைப் பொருட்கள் போன்றவை) மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள (’ - ப் பகுப்பு) (Beta Analytic) போன்ற உலகப் புகழ்பெற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள உயர் நுட்பியல் (Accelerator Mass Spectrometry – AMS) மூலம் காலக்கணிப்புகள் செய்யப்பட்டன.

20. இந்தியாவில் பூனே, பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள தகுதி வாய்ந்தவையும் இந்திய அரசினால் ஒப்புக்கொள்ளப் பட்டவையுமான ஆய்வகங்களும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து அவை கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கைகளைத் தந்துள்ளன.

21. கீழடியில் கிடைத்த எழுத்துகள், இதுவரை படிக்கப்படாத சிந்துவெளி எழுத்துகளோடு பல வகைகளில் ஒத்திருக்கின்றன. தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகள் தமிழ்நாட்டில் தோன்றி இந்தியாவின் பிறபகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டுமெனச் சிந்துவெளி அறிஞர் மறைந்த ஐராவதம் மகாதேவன் ஏற்கெனவே கூறியிருக்கின்றார். தமிழ்நாட்டில் மட்டும்தான் பானை ஓடுகளிலும் பிற பொருள்களிலும் எழுத்துப்பொறிப்புகள் கிடைக்கின்றன. வடஇந்தியாவில் நடைபெற்ற எந்தத் தொல்லியல் ஆய்விலும் இதுபோல் பானை ஓடுகளிலோ வேறு பொருள்களிலோ எழுத்துப் பொறிப்புகள் எதுவும் கிடைத்ததில்லை.           தமிழ்-பிராமி எழுத்து முறை தொல்தமிழேயாகும். இது வடமொழி-பிராமி இல்லை என்று முதன்முதல் எழுத்தாய்வுக்கான விதையை கே.வி.சுப்பிரமணிய ஐயர் ஊன்றினார்” - என்று பழ.நெடுமாறன் ஐயா நினைவூட்டுகின்றார். 1,000-க்கும் மேற்பட்ட கீழடிப் பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக் குறியீடுகளை ஒத்திருக்கின்றன.

22. முதல் கட்ட ஆய்வுகளில், கீழடியில் கிடைத்த மாதிரிகள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தொடக்கத்தில் கணிக்கப் பட்டன. ஆனால், அடுத்தடுத்த கட்ட அகழ்வாய்வுகளில் (குறிப்பாக நான்காம் கட்ட அகழாய்வில்) ஆழமான அடுக்குகளில் கிடைத்த மாதிரிகள் மீண்டும் கரிமக் காலக்கணிப்பிற்கு அனுப்பப்பட்டன. இந்த மாதிரிகளின் முடிவுகள், கீழடியின் தொன்மை கி.மு. 6 ஆம் நூற்றாண்டு (சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்) வரையிலும் செல்கிறது என்பதை உறுதிப்படுத்தின.

23. அகழ்வாய்வில், தொல்பொருட்கள் எந்த மண் அடுக்கில் (layer) கிடைத்தன என்பதைப் பொறுத்து அவற்றின் காலம் தோராயமாக முடிவு செய்யப்படுகிறது. ஆழமான அடுக்குகளில் கிடைக்கும் பொருட்கள் பழமையானவை என்பது தொல்லியல் ஆய்வின் ஒரு அடிப்படை நெறியாகும். இந்த மண் அடுக்குகளின் தொடர்ச்சியும் காலக்கணிப்பை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.

24. 2019–2020 (ஐந்தாம் கட்டம்) - ஆளில்லா வானூர்தி (UAV), தரை ஊடுருவல் கதுவீ (Radar) தொழில்நுட்பங்கள் வழியாக 340 மாத்திரி (மீட்டர்) நீளமுள்ள செங்கல் கட்டமைப்பு அடையாளங்கள் கண்டறியப்பட்டன.

25. கீழடி கொந்தகையில் 800 மாத்திரி  (மீட்டர்) அகழ்வாய்வில் கீடைத்த மண்டை ஓடுகளை இங்கிலாந்தின் இலிவர்பூல் சான் மூர்சு பல்கலைக்கழகம் ஆய்வு செய்து, 80% அறிவியல், 20% கலையைப் பயன்படுத்தி 30 முறைகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாந்தரின் (தமிழரின்) இரண்டு முகங்களை வடிவமைத்துள்ளது.

26. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த மாட்டு எலும்புகளை, புனேவில் உள்ள தெக்கன் கல்லூரியில் ஆய்வு செய்ததன் வாயிலாக, அவை ஏறுதழுவலில் (சல்லிக்கட்டில்) ஈடுபடும் நாட்டுமாடுகள் என்று உறுதிசெய்துள்ளனர்.

            இந்தியத் தொல்லியல்துறை, அமர்நாத்து அறிக்கையின் அறிவியல் நம்பகத்தன்மை மற்றும் தரவுகளின் தெளிவு குறித்துச் சில கேள்விகளை எழுப்பி மறுஆய்வைக் கோரியது. இந்திய அரசின் பண்பாடு, சுற்றுலாத் துறைகளின் அமைச்சரான கசேந்திரசிங் செகாவாது, “அமர்நாத்தின் கீழடி அகழ்வாய்வு குறித்த அறிக்கை அறிவியல் அடிப்படையில் இல்லை. அந்த அறிக்கைக்கு ஏற்பிசைவு வழங்குவதற்கு முன்பு மேலும்பல ஆய்வுகள் செய்யப்படவேண்டும். கூடுதல் தரவுகள், கூடுதல் சான்றுகளை அவர்கள் கொண்டு வரட்டும். ஏனென்றால் ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டுமே செய்தியை மாற்றமுடியாது என்று கூறினார்.

            ஆனால், தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளில், காலக்கணிப்பு, இக்கால மீப்புதிய அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி உலகின் முன்னணி ஆய்வகங்களில் (மேலே குறிப்பிட்ட எண் 19, 20-இல் உள்ள விளக்கப்படி) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றும், தமிழர்நாகரிகத்தின் தொன்மையை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்துள்ளன என்றும் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர்.

            இந்திய அரசு அமர்நாத்தின் அறிக்கையை வெளியிடாமல் இருக்கவும், மறுக்கவும் காரணங்கள் எவையாக இருக்கும்?

            கீழடியில், மத வழிபாட்டின் அடையாளங்கள் எதுவுமே இல்லாத கிடைக்காத – நிலை மதச்சார்பற்ற குமுகத்தைக் கூறுகிறது. இது, இப்போதைய ஒன்றிய அரசிற்கு, இந்துமதஞ்சார்ந்த அரசிற்குச் சிக்கலை ஏற்படுத்தி, ஆரியச் சார்பான அரசின் கொள்கைநிலைகளுக்கு முரணாக அமையும் என்ற இக்கட்டு எழுந்துள்ளது.

            இந்துமதஞ்சார் கதைகள், வேதகாலத்தையும் இந்தோ-ஆரிய தோற்றத்தையும் இந்திய நாகரிகக்காலமாக வலியுறுத்துகின்றன. கீழடியின் தமிழியச் சிறப்புகளும் மதச்சார்பற்ற தன்மையும் பிறவும் அவர்களுக்கு இக்கட்டை ஏற்படுத்தி கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

            கீழடி ஆய்வுக்கு ஒன்றிய அரசு ஏற்பிசைவு அளித்தால், தமிழர்களே இந்தியாவின் முற்காலக் குடிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆரியர்கள் இந்தியாவின் முற்காலக் குடிகள்; அவர்கள் இந்து மதத்தின் வழிபாட்டை மேற்கொண்டவர்கள் என்கிற கருத்தியலை கீழடி அகழ்வாய்வு உடைக்கலாம் என்கிற அச்சம் இந்தோ-ஆரியக் கும்பல்களுக்கு ஏற்படுவது இயல்பானது என்றும் கூறப்படுகின்றது.

            ஒரே தேசம், ஒரே பண்பாடுஎன்ற கொள்கையைத் திணிப்பதற்கே வைகைக்கரை நாகரிக வரலாற்றை மறைப்பதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.

            வெளிப்படையாகச் சொன்னால், ஆளும் பாரதிய சனதாக் கட்சியின் தாயமைப்பான தேசியத் தற்பணியர் அமைப்பும் (RSS), இந்துமதஞ்சார் குழுக்களும் பா.ச.க. அரசு கீழடிக் கண்டுபிடிப்புகளை முடக்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றன என்னும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

            இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள், தாங்கள் நம்புவதே உண்மையான முடிந்தமுடிவாக (சித்தாந்தமாக)- இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அவற்றை ஆய்வுகளின் முடிவாக வெளியிட விரும்புகிறார்கள். ஆனால், உண்மை அவர்களுக்கு எதிராக இருந்து அவர்களை இக்கட்டுக்குள்ளாக்கி இருக்கிறது என்பதே உண்மையாகும்.

            இனி, இந்திய ஒன்றிய அரசின் கீழ்மையைக் காட்டும் சான்றுகளாகச் சிலவற்றைப் பார்ப்போம். (இவை முன்பே குறிப்பிட்டுள்ளவற்றிலிருந்து பார்த்தெடுத்துத் தொகுத்தவையே!)

1. பாரதிய சனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின், கீழடியில் மூன்றாம்கட்ட அகழ்வாய்வுக்கு இசைவு தரவில்லை.

2. முதல் இரண்டுகட்ட ஆய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட அனைத்துத் தொல்லியல் சான்றுகளும் மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வக நடுவத்திற்கு அனுப்பப்பட்டன.

3. நல்லார்வத்துடன் செயற்பட்ட இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வை ஆய்வாளர் கே.அமர்நாத்து இராமகிருட்டினா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

4. கீழடியில் அமர்நாத்து செய்த ஆய்வைப் பற்றிய அறிக்கையை அவர் எழுதக்கூடாது; வேறொருவர் எழுதுவார் என்று வலியுறுத்தினர்.

5. இந்திய அரசு கீழடியில் அகழ்வாய்வைத் தொடரவும், அதன் தொடர்பாகப் பிறவற்றிற்காகவும் வழக்கறிஞர் கனிமொழிமதி உயர் நயன்மன்றத்தில் வழக்குத்தொடுக்க வேண்டியிருந்தது.

6. கீழடி மூன்றாம் கட்ட ஆய்வைத் தொடர அமர்நாத்து இருந்த இடத்திற்குத் தேசிய தற்பணியர் அமைப்புக் (ஆர்.எசு.எசு) கொள்கையர் சிரீராமன் அமர்த்தப்பட்டார்.

7. சிரீராமன், கீழடியில் அகழ்வாய்வு தொடரவேண்டியதில்லை என ஒரேயடியாக ஊற்றிமூடினார்.

8. நயன்மன்ற நடுவர்கள் கீழடி அகழ்வாய்வை நேரில் பார்த்து, இந்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்யவேண்டுமெனக் கூறியபோதும் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளவில்லை.

9. கீழடி ஆய்வறிக்கையை அமர்நாத்தே எழுதவேண்டும் என நயன்மன்றம் கூறிய பிறகும் அவர் சென்னைக்கு மாற்றப்படவில்லை.

10. 2023-இல் அமர்நாத்து அறிக்கை அளித்தும் அதை இதுவரை வெளியிடாமல் பல காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றது.

            இதற்குமுன், ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழ்வாய்வு நடத்தப்பட்ட போது, அங்குக் கிடைத்த முதுமக்கள்தாழியில் மாந்த எலும்புக்கூடு ஒன்று முழுமையாகக் கிடைத்தது; அதை ஆய்வுக்காக மைசூருக்கு எடுத்துச்சென்றனர்; அதன் முடிவு இன்றுவரை வெளியிடப்படவில்லை.

            2004-2005-ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் பி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வு குறித்து அவர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையையும் இன்றுவரை இந்திய அரசு வெளியிடாமல் மறைத்துள்ளது. இது குறித்து சென்னை உயர் நயன்மன்ற தலையீட்டின் பேரில் இரண்டு பொருள்கள் பீட்டாஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதன் அடிப்படையில் அந்தப் பொருள்களின் காலம் கி.மு.905 என்பது நிறுவப்பட்டது. ஆனால், சத்தியமூர்த்தியின் அறிக்கை இன்னமும் வெளியிடப் படவில்லை”– என்று பழ.நெடுமாறன் ஐயா எழுதுகிறார்.

            மேலும், “தமிழர்களின் தொன்மை உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாய்வு பற்றிய உண்மைகள் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன என்றும் அவரே குறிப்பிட்டுள்ளார்.

            கேரளத்தில் பட்டணத்தில் (முசிறியில்) ஒரு விழுக்காட்டளவே அகழ்வாய்வு செய்திருந்த நிலையில் தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவனத்திற்கு அகழ்வாய்வு செய்ய 2019-முதல் இசைவு மறுக்கப்பட்டது. இந்தியத் தொல்லியல் துறை அகழ்வாய்வு இசைவை நிறுத்தி ஆணையிட்ட போது, தில்லி உயர் நயன்மன்றம் அந்த ஆணையைச் செல்லாததாக்கி எங்களுக்கு அகழ்வாய்வு உரிமையை மீட்டளித்தது. ஆனால், தில்லி நயன்மன்றத்தில், ‘அவர்கள் கூறியவாறு நடப்போம்என்று கொடுத்த உறுதிமொழியை இந்தியத் தொல்லியல் துறை நிறைவேற்றாமல், மறுபடியும் இசைவளிக்க மறுத்துவிட்டது” – என்று தொல்லியலறிஞர் பி.செ.செரியன் தைம்சு ஆப்பு இந்தியா(11-10-2024) நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்த செய்தியை இங்கு நினைவுகூரல் பொருத்தமாக இருக்கும். இச் செய்தி நற்றமிழ் (நவம்பர்-திசம்பர் 2024) இதழிலும் மொழியாக்கம் செய்து தரப்பட்டிருந்தது.

            இந்தியத் தொல்லியல் துறை அறிக்கையை வெளியிடக் கேட்பதின் காரணம் வேறொன்றுமில்லை; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அறிக்கை உலகத்தின் பார்வைக்குச் செல்லும் என்றாலும், இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கையைத்தான் அதிகார அடிப்படையில் உலகமும், இந்தியாவிற்குள் பிற மாநிலங்களும் ஏற்கும் என்பதேயாகும்.

            வைகைப் பள்ளத்தாக்கு நாகரிகம்என்று அழைக்கப்படும் கீழடியில் அகழ்வாய்வுகள் 110 குறுக்கம் (ஏக்கர்) கீழடி மேட்டில் 2% மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வுகள், தமிழப் பழமையையும் சிந்து சமவெளித் தொடர்புகளையும் வெளிப்படுத்தலாம் எனக் கூறுகின்றனர்.

            தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரசுவதி நாகரிகத்தை முன்னிறுத்தித் தமிழ்ப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி, கீழடி நாகரிகங்களை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசு, இதுவரை சரசுவதி நாகரிகத்தை எவ்வகை அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும் மெய்ப்பிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் முறையான ஆய்வில் மெய்ப்பிக்கப் பட்டும்கூட அவற்றை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. இதையே மீண்டும் மீண்டும் கூறவேண்டிய நிலையாக இருக்கிறது.

            தமிழ் இளையோர் இவற்றையெல்லாம் நன்கு புரிந்துகொண்டு எண்ணிப்பார்க்க வேண்டும். இவற்றிற்குத் தீர்வைக் காணவேண்டும்.

குறிப்பு: இந்த மாத நற்றமிழ் இதழ் உருவாக்க வேலைகள் எல்லாம் முடிந்து அச்சுக்குப் போகின்ற நிலையில், 10-7-2025 நாளிட்ட தினமணிநாளிதழில் அகத்தியர்கட்டுரை (!) அம்மையார், கீழடி பற்றி எழுதிய கட்டுரையைப் பார்த்து, இக்காலத் தினமணியின் நடுப்பக்கக் கட்டுரை இப்படிப்பட்ட தக்கையும் சக்கையுமான செய்தியோடு வந்திருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டிய நிலை நேர்ந்தது.

            தரவுகள் பேசட்டுமே…’ என்பது தலைப்பு. கீழடித் தரவுகள் மிக விளக்கமாகப் பேசியதால்தானே இந்திய ஒன்றிய அரசின் மீது

குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அறிவியல் அணுகுமுறையோடு மெய்ப்பிக்க வேண்டுமாம்! உலகின் மிகச்சிறந்த ஆய்வகங்கள் காலக்கணிப்பீடு செய்து அறிவித்த பின்னரும், ஏற்காததுதானே தமிழருக்கு எதிரான நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது!

            இந்திய நடுவணரசின் மீது பத்துக் குற்றச்சாட்டுகளை மேலே குறிப்பிட்டிருக்கின்றோம். அவற்றுடன், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் சத்தியமூர்த்தியார் முடிவுகளை வெளியிடாததையும், கேரளத்தில் பட்டணம் (முசிறி) அகழ்வாய்வுக்குத் தடைசெய்வதையும் சேர்த்துப் பன்னிரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தினமணி விடையளிக்குமா?

            கீழடி பற்றிய ஒன்றிய அரசின் அடாச் செயல்களைத் தாங்கி எழுதவந்து, இருக்கு மறை உலகின் முதல் நூல் என்றும் அதன்காலம் கி.மு.6000 என்றும் பெருமையடித்துக்கொள்ள எந்தத் தரவுகள் வந்து பேசின? எந்த அறிவியல் அணுகுமுறை முடிவு செய்தது? உலகில் எந்த ஆய்வகம் எந்த மீப்புதிய ஆய்வுமுறையில் ஆய்வு செய்து சான்று வழங்கியது?

            கீழடி காலக்கணக்கீடுகள், மண்அடுக்குகளின் கால- வரையறை அனைத்தும் அறிந்த சிறந்த அகழ்வாய்வு வல்லுநர்களாலும் உலகத்தின் சிறந்த ஆய்வகங்களில் மீப்புதிய ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தியும் முடிவுசெய்யப்பட்டுள்ளன.

            ஒன்றிய அரசு அமர்நாத்தை மாற்றிக் கீழடி மூன்றாம்கட்ட ஆய்வை நடத்த அமர்த்தியவரும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் ஒன்றும் காணப்படவில்லை என்று கூறி ஊற்றி மூடியவரும் பணிநிறைவில் சென்றவரும் ஆகிய சிரீராமனை அழைத்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வு அறிக்கை எழுதித் தருமாறு கேட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. ஒன்றிய அரசின் நாடகக்காட்சிகள் தொடர்வதாகவே எண்ணமேற்படுகிறது.

            தினமணியின் மேதைகளும் பேதைக்கோதைகளும் எழுதுகின்ற எழுத்தே அவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்துகின்றன. புகழ்மிக்க அறிஞர்களின் அறிவார்ந்த எழுத்துகளால் ஒளிவீசிய தினமணி, இக்கால் இவ்வகைப் பேதைக் கோதைகளின் எழுத்துகளால் அவலத்திற்கு உள்ளாகி இருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

-----------------------------------------------------------------------------------------

புதுவை 'நற்றமிழ்' (கடகம் தி.பி.2056, சூலை 2025) இதழில் வந்தது.

-----------------------------------------------------------------------------------------