ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

போதும் ஐயா, போதும்!போதும் ஐயா, போதும்!
--------------------------------------------------------------------------------------------------------------

சலிக்கும் அளவு பேசியாயிற்று!
ஓயும் அளவு உரையாடியாயிற்று!
வெறுப்பில் தூக்கிப்போடும் அளவு எழுதியாயிற்று!

வழக்கம்போல் ஓர் அடிமை அரசு அமைந்து விட்டது!

வழக்கம் போல் ஊழல் தொடரப்போகின்றது!

போதும், போதும்! ஆரவாரங்கள் போதும்!

இனியாவது தமிழ் தமிழர் நலன் குறித்து எண்ணுவோமா?

நெடுஞ்சாலைக் கற்களில் தமிழை நீக்கி இந்தித்திணிப்பு!
21ஆம் நாளிலிருந்து காவிரிபற்றி தொடர்ந்து நயன்மன்ற ஆய்வு!
பவானி ஆற்றில் கட்டப்படும் புதிய அணை!
கூடங்குளத்தில் இன்னும் இரண்டு உலைகளென்னும் கொடுமை!
புதிய கல்விக்கொளகை வழி கல்வி உரிமை மேலும் பறிப்பு!
சமற்கிருதக் கெடுதல்!
இன்னும், தாய்மொழியாம் தமிழ்வழி கற்க விடாத கொடுமை!
தமிழில் மறுக்கப்படும் வழிபாட்டுரிமை!
நயன்மன்றத்தில் தமிழில் பேசமுடியாத இழிநிலை!
நாடாளுமன்றத்தில் தமிழர் தம் தாய்மொழியில் பேசுவதற்கும் குறைகளைத் தெரிவிக்கவும் இயலாத கேடு!
தமிழர் பண்பாட்டு நிலைகளை அழிக்க எண்ணும் போக்கு!
மழைக் குறைவால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலை!
உழவரின் தற்கொலைகள் தொடரும் பேரவலம்!

இவற்றைப் பற்றி எண்ணுவோமா?
இவற்றிற்குத் தீர்வ காணப் பேசுவோமா?
இந்தக் கேடுகளிலிந்து தப்ப இயன்றவரையில் செயல்படுவோமா?
--------------------------------------------------------------

சனி, 11 பிப்ரவரி, 2017

‘தாழி ஆய்வு நடுவ’த்தின் தனிச்சிறப்பார்ந்த நாட்குறிப்புச் சுவடிதாழி ஆய்வு நடுவத்தின் தனிச்சிறப்பார்ந்த நாட்குறிப்புச் சுவடி

 


           
சென்ற ஆங்கில ஆண்டிற்கான (2016) நாட்குறிப்பேட்டைத் தனிச் சிறப்போடும் அழகோடும் அரிய செய்திகளோடும் செப்பமாகத் தாழி ஆய்வு நடுவம்வெளியிட்டிருந்தது குறித்த பதிவை அன்பர்கள் படித்திருக்கலாம்.

தாழி ஆய்வு நடுவத்தின் 2017-ஆம் ஆண்டு நாட்குறிப்பேடு, புதுச்சேரி அன்னை அருள் கட்டளை வெளியீடாகப் புதுவை அன்னை அருள் மறுதோன்றி அச்சகத்தில் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

அளவில் பெரியதாக, அட்டையுடன் 28 நூ.மா. நீளம், 221/2 நூ.மா. அகலம் (நூ.மா.- நூற்றுமாத்திரி அல்லது நூற்றிலொரு மாத்திரி- centimeter – c.m.) உள்ளது.

இதில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகள் வரை நாட்குறிப்பு எழுதலாம். அத்துடன், ஒவ்வொரு பக்கத்திலும் மேல் பகுதியில் 51/2 நூ.மா. அளவிற்கு அறிவியல் செய்திகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன; கீழே 31/2 நூ.மா. அளவில் உள்ள இடத்தில், மேல்பகுதியில் இடம்பெற்ற அறிவியல் தொடர்பான தமிழ்க் கலைச்சொற்களின் ஆங்கிலவடிவமும், அன்றைய நாள் உலகளவில் சிறப்பாக என்ன நாள் என்றும், எந்தெந்த அறிஞர்தம் நினைவுநாள் என்னும் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.

இந் நாட்குறிப்பின் முன் அட்டையின் நடுப்பகுதியில், நாம் வாழும் உலகின் கோளத்தோற்றப் படம் உள்ளது; மேலே. புடவியின் உலகு... என்று நாட்குறிப்பின் பெயரும், கீழே நாள்-குறிப்பு 2017 என்ற குறிப்பும் உள்ளது.

இது, நாட்குறிப்பு எழுதும் சுவடியாக மட்டும் இல்லாமல்,  பூதியல் நிலவரைவியல் (Physical basis of Geography) செய்திகளை அழகுற எளிமையாகத் தூயதமிழில் தரும் அறிவியல் அருஞ்செய்திக் களஞ்சியமாகவும்  உள்ளதெனில் மிகையில்லை.
நாட்குறிப்புச் சுவடியின் முன்அட்டை ஒட்டுத்தாள் உட்புறப் பக்கத்தில், இந்த இந்திய ஒன்றியத்தில் தக்கவாறு நினைவுகூறப் படாத ஒப்பற்ற ஈகி வ.உ.சி. அவர்கள், சிறையிலிருந்து தம் தந்தையார் உலகநாதனார்க்கு எழுதிய அகவற்பா மடலும் இரு வெண்பாக்களும், அவர் இழுத்த செக்கின் படமும் இடம்பெற்றுள்ளன; பினனட்டை ஒட்டுத்தாள் உட்புறத்தில் வ.உ.சி.யார் பொன்.பாண்டித்துரையார்க்கு எழுதியதோர் அகவற்பா நன்றிமடல் பாண்டித்துரையார் படத்துடனும் தமிழ்ச்சங்கக் கட்டடப் பின்னணியோடும் காணப்படுகிறது.            

பின்னட்டைப பகுதியில், நால்வகை நிலங்கள் குறித்த தொல்காப்பிய நூற்பாவும், மழையின் சிறப்புரைக்கும் பதின்மூன்றாம் திருக்குறள் உரையோடும், ஒரு விதை முளைத்தெழுந்து செடியாகும் காட்சியின் மூன்று படங்களும், வாடிய பயிரை... எனத்தொடங்கும் வள்ளலார் பாடலும் உள்ளன.

இந்த முயற்சி மிகவும் பாராட்டிற்குரியதாகும். நூலில் எழுதப் படுவதைப் போல இந்நாட்குறிப்பிலும் பாயிரம் உள்ளது. ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே (நன்னூல்-54) அல்லவா!. பாயிரம் பகுதியில், நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள அறிவியல் செய்திகள் பற்றிய குறிப்பும், தமிழரின் மீட்புக்கருவியாக உள்ளது தமிழ்மொழியே என்னும் குறிப்பும் காண்கிறோம்.

இதனைத் தொடர்ந்து நாட்குறிப்பு உரிமையாளர் தற்குறிப்பு விளத்தங்களை எழுதிவைக்கும் பல பகுதிகள் உள்ளன. தொடர்ந்து, புடவி (Universe) எனுந் தலைப்பில், கதிரவ மண்டில விளக்கமும் அதன் தொடர்பான அடிப்படை உண்மைகளும் கோள்களைப்பற்றிய செய்திகளும் பிறவும் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு தலைப்பு குறித்து  வழவழப்புத்தாள் படத்துடன் அரிய பல செய்திகள் திரட்டித் தரப்பட்டுள்ளன.

சனவரி மாதத் தொடக்கத்தில் உலகம் என்னுந தலைப்பில் உலகத் தோற்றம், வடிவம், அளவு, சுழற்சி பற்றிய செய்திகள் விரிவாகத் தூய எளிய தமிழில் உள்ளன. மாத இறுதிப் பக்கத்தில் உலகக்கோளின் வெட்டுப்படத்தின் வழி அமைப்புகள் விளக்கப்பட்டுள்ளன. வேறு மூன்று படங்களில் அகலாங்கு (Lattitude), நெட்டாங்கு (longitude), நண்ணிலக்கோடு (Equator) முதலிய புனைவுக் கோடுகள் பலவும் வரைந்து காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறே,  ஒவ்வொரு மாதத்திற்கும் பெருங்கடல், கண்டம்,  தீவு, மலை, எரிமலை, நிலநடுக்கம், ஆறு, அருவி, ஏரி, பாலை, மழை என்ற தலைப்புகளில் படங்களும் தலைப்பைச் சார்ந்த பல்வேறு அரிய செய்திகளும் திரட்டித் தரப்பட்டுள்ளன. அவற்றை விரித்துரைக்கின் பெருகும்.

முன்னரே கூறியவாறு, ஆண்டு முழுவதற்குமான 365 பக்கங்களிலும் அருமையாகத் தூயதமிழ்க் கலைச்சொற்களைப்  பயன்படுத்தி எளிதில் புரியுமாறு அறிவியல் செய்திகள் தரப்பட்டுள்ளன.

இந்த முயற்சி மிகவும் பாராட்டிற்குரியதாகும். நாட்குறிப்பின் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளதற் கொப்ப, தமிழ்மொழியே. தமிழர்க்கு மீட்புக் கருவியாகும். அதை விளக்கும் எடுத்துக்காட்டைப் போன்று இந் நாட்குறிப்புச்சுவடி அமைந்துள்ளதெனில் மிகையன்று.

நாம் பொங்கல் திருநாளை 2017 சனவரி 14இல் சுறவத் திங்கள் முதல் நாளில் கொண்டாடினோம். நாட்குறிப்பில் 2017 சனவரி 15 அன்று தைப்பொங்கல் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது ஒன்றே வேறுபாடாகத் தெரிந்தது.

மிகச் சிறப்பாக அச்சிட்டு கட்டம் செய்து அரிய செய்திகளோடு உள்ள இந்நாட்குறிப்புச் சுவடியை வெளியிட்டோர்:
அன்னை அருள் அறக்கட்டளை, 169, ஈசுவரன் கோயில் நெரு, புதுச்சேரி 605001. தொலைப்பேசி எண்: 0413 2336205.  

இந்த உயர்ந்த ஒப்பற்ற நாட்குறிப்பைத் தந்த அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்!  
------------------------------------------------------------------------

திங்கள், 23 ஜனவரி, 2017

பாவலரேறு ஐயாவுக்கு ஒரு தொலைவரி!பாவலரேறு ஐயாவுக்கு ஒரு தொலைவரி!
---------------------------------------
 

ஐயா!

உங்கள் உழைப்பு!

உங்கள் ஈகம்!

உங்கள் வாழ்க்கை!

உங்கள் எழுத்து!

உங்கள் மேடைமுழக்கம்!

உங்கள் பாட்டுப் பெருமுழக்கம்!...எதுவும் வீணாகவில்லை ஐயா!

பயனளிக்கத் தொடங்கிவிட்டது!வடவாரிய வல்லாண்மை விலங்குத்தனமான அதிகார வலிவிலிருந்தும்...

அஞ்சிப் பார்க்கவேண்டிய நிலையை இன்று நந்தமிழ் இளைஞர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர் ஐயா!ஏறுதழுவல் மீட்பிற்கான

போராட்டக் களமெங்கும்

தனித்தமிழ்நாடுமுழக்கம் கேட்டு

வல்லதிகாரத் தில்லி

வாயடைத்து நிற்கின்றது ஐயா!இன்றில்லாவிட்டாலும் நாளை

நீங்கள் நினைத்தது நடக்கும்!

தமிழ்நாட்டைத் தமிழிளைஞர் மீட்பர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது ஐயா!

உங்கள் புன்னகை பூத்த முகம் தெரிகிறது ஐயா!அறவே நம்பிக்கையிழந்திருந்த

தன்னலமற்ற தமிழ்க் குமுகாயத்தின் நலம் நாடும் உண்மை உள்ளங்களுக்கு

நம்பிக்கை ஒளிக்கீற்றளித்த இருபால் இளைஞர்களே!

நன்றி!


உங்கள் உரம் பெருகட்டும்!

உறுதி நிலைக்கட்டும்!

தாயகத்தைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!

-----------------------------------------------------------

சனி, 14 ஜனவரி, 2017

கூவுகவே பொங்கலோ பொங்கல்!கூவுகவே பொங்கலோ பொங்கல்!
----------------------------------------------------------


பொங்கு தமிழ்மகனே பொங்கலோ பொங்கலென
இங்குன் மொழியழிய எங்கெங்கும் தாழ்ந்திழிய!

கல்வியிலை தாய்மொழியில் காணும் இடமெங்கும்
பொல்லா மொழியில் புகட்டுகின்ற பள்ளிகளே!

ஆட்சி மொழியெல்லாம் ஆங்கிலமும் இந்தியுந்தாம்!
காட்சியூட கங்கள் கலப்பு மொழியினில்தான்!

குற்றங் கடிந்தே குறைதீர்க்கும் என்றுசெலும்
இற்றை நயன்மன்றம் எங்கும் தமிழில்லை!

நாளிதழ் தொட்டே நடந்திடும் பல்வேறு
தாளிகைகள் தம்மில் தமிழ்க்கொலைகள் பேராளம்!

கோயில் வழிபாட்டில் கூறுகின்ற போற்றலிலே
தாயின் மொழியாம் தமிழில்லை; இல்லையடா!

உன்றன் உரிமையெலாம் ஒவ்வொன்றாய்ப் போனதுவே!
பன்னூறு காலம் பயன்கண்ட ஆற்றுரிமை

இன்றுபறி போகிறதே! யார்முறையைக் கூறுகிறார்?
என்றுச்ச மன்றத்தை யாரே மதித்தாரே!

எல்லா வகையாலும் ஏதம் மிகநிறைந்த
பொல்லா அணுவுலைகள் போற்றத் தமிழ்நாடாம்!

செந்தமிழ் மண்சார்ந்த சீரார்ந்த பண்பாட்டை
நந்தம் கலைகளைநாம் போற்றத் தடையிங்கே!

எந்த வகையாலும் எப்போதும் நம்மவர்க்கே
வந்திடும் தொல்லைபல! வாழ்க்கை நிலையிதிலே

மான விறகெரித்து மண்டடிமை கேடரிசி
கூனலுறப் பானையிலே கொட்டியதைப் பொங்கியே

தன்மானம் வீறு தகைமை தமைமறந்தே
புன்மையுறக் கூவுகவே பொங்கலோ பொங்கலென
இன்னுமிகத் தாழ இழிந்து.
--------------------------------------------------

செவ்வாய், 10 ஜனவரி, 2017

‘நல்லாண்பிள்ளை பெற்றாள் வரலாற்றுக் கட்டுரை’ – நூல் அறிமுகமும் அலசலும்!. நல்லாண்பிள்ளை பெற்றாள் வரலாற்றுக் கட்டுரை நூல் அறிமுகமும் அலசலும்!.
 --------------------------------------------------------------
                      
               ஒரு நாட்டின் வரலாறு, அந்நாட்டின் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அங்கு வாழும் மக்களுக்கு வரலாறு தெரியாவிட்டால், அவர்களின் மூதாதையர் பற்றிய அறிதல் இல்லாவிட்டால், அம்மக்கள் எந்த அடையாளமும் இல்லாதவர்களாவர்.
     பிற்காலத்தில் வலிமை மிக்க மக்களினத்தோடு வாழ நேர்கையிலும், வல்லதிகாரம் செலுத்தும் ஆட்சியின் கீழ் வாழவேண்டி நிலையிலும் தாம் வந்த குடிமரபுக்குரிய பழக்க வழக்கங்கள் பண்பாடு நாகரிகமெல்லாம் இழக்க நேரிடும். தம் தாய்மொழியை இலக்கியச் சிறப்புகளை எல்லாம் இழக்க நேரிடும். தம் மூதாதையரின் அன்பு, அறிவு, புகழ், வீரம், காதல், கொடை போன்ற பல சிறப்புமிக்க நிலைகளையும் தம் உண்மையான அடையாளத்தையும் அறிய முடியாமற் போகும். தம் தனித்தன்மை இழந்து, முழுவதும் பிற மக்களின் பழக்க வழக்கங்கள் பண்பாடு நாகரிகத்திற்கு மாறிப்போக வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எந்த ஒரு நாட்டின் வரலாறும் ஆவணப்படுத்தப் படவேண்டியது இன்றியமையாத பணியாகும்.

     அவ்வாறே, ஒவ்வொரு ஊரின் வரலாறும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதைப் பிற்கால மக்கள் அறிய வேண்டும். அதன்வழி நல்லது கெட்டது அறிந்து, நல்லவற்றை எண்ணிப் பெருமை கொண்டு அதன்வழி தொடரவும், மேலும் நல்லவற்றை நாடி செயற்படவும், தீயது ஏதேனும் இருப்பின் தவிர்க்கவும் பிற்கால மக்களுக்கு இயலும். எப்படியெல்லாம் நம் முன்னோர் இந்த ஊரை உருவாக்கி வளர்த்தெடுத்து முன்னேற்றி இருக்கிறார்கள் என்பதை அறிந்து மேலும் நாம் ஊரின் முன்னேற்றத்திற்கு எதை எதை எவ்வெவ்வாறு செய்யலாமென்ற ஊக்கம் பெற முடியம்.
     ஊரின் வரலாற்றை ஆவணப்படுத்துவதும், அதைப் படித்து உணர்ந்து மகிழ்வதும், மேலும் ஊர்நலத்திற்கென்று  ஈடுபட்டுப் பணியாற்றுவதும் பெருமைமிக்க செயல்களாகும். 
    
     எழுத்தாளராக எவ்வகை முன்பட்டறிவும் அறவே இல்லாத ஒரு கால்நடை ஆய்வாளர், இதற்குமுன் எவ்வகைப் பதிவும் இல்லாத  தம் ஊரின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற பேரவாவினால் முயன்று முனைந்து 180 பக்கத்தில் எழுதிய நூல்தான் செஞ்சி தாலுக்கா நல்லாண்பிள்ளை பெற்றாள் வரலாற்றுக் கட்டுரை என்பதாகும். எண்பத்தொரு அகவையாளரான நூலாசிரியர் பெயர் ம.ஆ.கிருட்டினமூர்த்தி என்பதாகும். நூல் எந்த ஆண்டு எழுதப்பட்டதென்ற குறிப்பு நூலில் காணப்பெறவில்லை.
    
     நூலாசிரியர் தம் முன்னுரையில், தாம் அந்த ஊரில் பிறந்தது தொடங்கித் தம் வரலாற்றைக் கூறுகிறார். தாம் தம் ஊரின் வரலாற்றை எழுத ஆர்வமேற்பட்டதையும் அதற்காக மேற்கொண்ட முயற்சிகளையும் கூறுகிறார். ஊரின் முன்னேற்றத்திற்கு உதவியவர்களைப் பற்றிக் கூறுகிறார். நாலைத் தம் தாய்தந்தையர்க்கு படையலிடுகிறார்.
    
     இவ்வூரைச் சேர்ந்த புதுச்சேரிப் பல்கலைக்கழக மாந்தவியல் துறைத் தலைவர் முனைவர் ஆ.செல்லபெருமாள் நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். அதில், இவ்வூர் மக்களின் உறவுமுறை கால்வழி அமைப்புபற்றி முனைவர் சுசாதா திலக் என்பார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தம் முனைவர்பட்ட மாந்தவியல் ஆய்வில் ஒருதனி இயலில் விவரித்துள்ளார் என்று குறிப்பிடுகிறார். ஊருக்குச் சிறப்புசேர்த்தோர் பலர் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.
    
     நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள ஊரின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், திருவமை திருப்பாவை நாதமுனி நூலாசிரியர்பற்றியும் நூலைப்பற்றியும் சிறப்பித்து வாழ்த்தியுள்ளார்.
    
     நூல் 25 தலைப்புகளில் செய்திகளைப் பதிந்துள்ளது. ஊர்ப் பெயர்க்காரணம் பற்றி முதலில் கூறுகிறார். மலையடிவாரத்தில் வாழநேர்ந்த சாளப்புத்தூர் மக்களில் ஒரு இணையருக்கு நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த ஒரு ஆண்குழந்தை ஊரின் மேற்கே ஒரு சிறு கோவிலை ஒட்டிய சப்பாத்திக் காட்டை அழித்து ஊர் உண்டாக்கிக் குடியேற உதவியதால் அவனைப்பெற்ற தாயைப் போற்றும் வகையில், நல்லாண்பிள்ளை பெற்றாள் என்ற பெயரிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். திருவண்ணாமலை மாவட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் இதே பெயரில் ஊர் உள்ளதையும் குறிப்பிடுகிறார்.
    
     காடு திருத்தி ஊராக்கிக் குடியேறிய பல்வேறு வீட்டினரைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஊர்த்தலைவர்(Headman), கணக்கர் முதலிய சிற்றூர் அதிகாரப் பணியினர் அமர்த்தம் பற்றியும் அவர்கள்பணிகளையும் கூறுகிறார். தாழ்த்தப்பட்டோர் பழைய புதுக்குடியிருப்பு, அருந்ததியர் குடியிருப்பு பற்றியும், கல், பாறைத் தொழிலர் பற்றிக் குறிப்பிடுகிறார்.
    
     அரசு உதவியுடன் பொதுமக்களால் உருவாக்கப்பட்ட நல்லாண்பிள்ளை பெற்றாள் ஏரி, சிறிய குளங்கள் பற்றியும் சுற்றிலுமுள்ள 13 ஊர்கள் பற்றிய சிறு விளக்கமும் தருகிறார். தலைக்கோட்டைப்போர் பற்றியும், அதன்பின்பும் ஊரில் நடந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகிறார்.
    
     ஊரிலுள்ளோர் நாயக்கர் என அழைக்கப்படுவது பதவி என்றும் கிருட்டினதேவராயர் காலத்தில் அரசரால் அமர்த்தம் பெற்றவர்களே நாயக்கர் என்றும் அது பின்பு பரம்பரைப் பட்டப்பெயர் ஆனதையும் விளக்குகிறார். கிருட்டினதேவராயர் காலத்தில் அடிமைமுறை இருந்ததாக இவர் கூறுவது ஆய்வுக்குரியதாகும்.
    
     கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த நல்லாண்பிள்ளை பெற்றாள் மலைத்தொடர், அம் மலைவாழ் விலங்குகள், மரங்கள், தேனடை அழிப்பு, மலைகளை இணைத்துக்கட்டிய நீர்த்தேக்கம் பற்றியும் குறிப்பிடுகிறார். காட்டுச் சிறுத்தைப் பிடித்தல், நெருப்புக்கடைதல் பற்றியும் கூறுகிறார்.
     திருவண்ணாமலை துரிஞ்சலாற்றிலிருந்து பனைமலைப் பேட்டைக்கு அமைத்த நந்தன் கால்வாய் வரலாற்றைக் கூறுகிறார்.    
    
     நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊருக்குக் கிழக்கே 400 ஆண்டுகளுக்கு முன் இருந்த சாளப்புத்தூர் என்ற ஊரைப்பற்றியும், (மறைந்த அந்த ஊரிலிருந்தவர்களில் ஒருபகுதியினர் நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊரை உருவாக்கிக் குடியேறியவராவர்) அங்கிருந்த வீட்டமைப்பு, மக்களின் உணவையும் கூறுகிறார். பயிரிட்டவை பற்றியும் வீடுகளில் இருந்த கருவிகள் கலன்கள் பற்றியும் பயன்படுத்திய இரும்பு செம்பு முதலிய மாழைகள் பற்றியும், குடும்பம், பிள்ளைகள் விளையாட்டு, கருவி, பாடிய பாடல்கள், ஆடை, படிப்பு பற்றியும் கூறுகிறார்.
    
     நல்லாண்பிள்ளை பெற்றாள் குடிவாழ்க்கை என்ற தலைப்பில், வீடுகள் திண்ணை நடுவீடு தாழ்வாரம் வாசல், சேர்கொட்டடி முதலியவற்றுடன் அமைந்ததை அழகாக விளக்குகிறார். வீட்டிலிருந்த பொருள்களைக் கூறுகிறார். பல்வேறு குடும்ப உறவுகள் குறித்து நாம் அறிந்தவற்றை இவர் கூறினாலும், பல நுட்ப செய்திகளையும் இவர் கூற்றில் தெரிந்துகொள்கிறோம்.
    
     நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊரை இணைக்கும் சாலைகள் பற்றியும், ஊரிலுள்ள பல்வேறு கோயில்கள், நடக்கும் திருவிழாக்கள் பற்றியும் விளக்குகிறார். சமயந் தொடர்பான செய்திகளில், வைணவ வடகலை தென்கலைப் பிரிவுகளின் வேறுபாடுகளை இவர் பட்டியலிட்டு விளக்கியிருப்பது அருமை.
    
     குறியறிதல் (சகுனம்), பல்வேறு நம்பிக்கைகள், விளக்கம் பெற வேண்டிய இயற்கை இகந்த நிகழ்வுகளையும் கூறுகிறார். 
பதின்மூன்று வகை விளையாட்டுகளைப் பட்டியலிட்டு விளக்கியிருப்பது அருமை! பெண்கள் விளையாட்டுகளாகப் பதினெட்டுக்கும் மேல் கூறி விளக்குகிறார். ஊரில் நடக்கும் நிகழ்வுகளாக்க் குடுகுடுப்பைக்காரன் கூற்று, பாம்பாட்டி, குரங்காட்டி, கரடிவித்தை, கழைக்கூத்தாட்டம், கண்கட்டுக் கலை, பூம்பூம் மாடு, குருவிக்காரன் ஆட்டம், ஊரில் நடக்கும் கூத்து பற்றியெல்லாம் சுவைபடக் கூறுகிறார். இக்காலப்பிள்ளைகள் அறியாத பல செய்திகள் இப்பகுதியில் உள்ளன.
    
     ஊருக்குத் தொடக்கப் பள்ளிக்கூடம் வந்தது தொடங்கி மேல்நிலைப்பள்ளி வந்தது வரையான வரலாற்றைக் கூறுகிறார்.
     ஊரில்கொண்டாடும் பலபண்டிகைகளைச் சுவைபட விளக்குகிறார்.
அரசுசார்ந்த ஊர் அலுவலகம், நூலகம் பற்றிக் கூறுகிறார்.

     திருமணம் நடைபெறும் முறைகள், பல்வேறு நற்சடங்குகள், துயர நிகழ்வுச் சடங்குகள் பற்றியெல்லாம் இவர் பதிவு செய்துள்ள அருமை பாராட்டிற்குரியவை என்பதில் ஐயமில்லை.
    
     ம.ஆ.கிருட்டினமூர்த்தி எழுதியுள்ள இந்நூல் முறையாக எழுதப்பட்ட வரலாற்று நூலாக அமையாததென்று எவராலும் புறக்கணிக்க முடியாத வகையில், பல வரலாற்று நிகழ்வுகளையும் வாழ்க்கை முறைகளையும் பணபாடு, நாகரிக,பழக்க வழக்கங்கனையும் தொகுத்தளித்துள்ள அரிய தொரு கருவூலம் என்றே கூறவேண்டும். மாந்தவியல் ஆய்வாளர்க்கும் வரலாற்றாசிரியர்க்கும் அருந்துணையாக விளங்கும் நூலாக இது விளங்குகிறது எனில் மிகையே இல்லை!
--------------------------------------------------------------                      

செவ்வாய், 3 ஜனவரி, 2017

நான் கண்ட வ.உ.சி. – கி.ஆ.பெ.விசுவநாதம்நான் கண்ட வ.உ.சி. கி.ஆ.பெ.விசுவநாதம்.
----------------------------------------------------------------------------


...வ.உ.சி. பலமுறை சிறை சென்றவர். அவர் செய்த குற்றமெல்லாம் இந்நாட்டின் மீதும் மக்களின் மீதும் அன்புகொண்ட ஒன்றுதான்.
இக்காலத்தில் சிறைசெல்ல விரும்புவோர் பலருக்கு நன்கு தெரியும், முதல் வகுப்பும் முந்திரிப்பருப்பும் அல்வாவும் ஆரஞ்சுப்பழமும் கிடைக்குமென்று.
அந்தக்காலத்தில் அனைவருக்கும் தெரியும் செக்கிழுத்துச் சீரழிய வேண்டுமென்பது. கற்கள் உடைபடச்செய்ய வேண்டும். இன்றேல் பற்கள் உடைபட்டுவிடும். குத்துவதெல்லாம் நெல்லாக இருக்கும்; உண்பதெல்லாம் களியாக இருக்கும்.
இக்காலம் சிறைக்குச்சென்றவர்கள் போற்றுதலும் பூமாலையும் பெறுகின்ற காலம். அக்காலம் தூற்றுதலும் துயரமும் பெறுகின்ற காலம். முடிவாகக் கூற வேண்டுமென்றால், எல்லாச் சாதியினரும் சிறைக்குச் சென்றவர்களை வெறுத்துச் சமூகத்தில் ஒதுக்கி வைத்த காலமது எனக்கூறலாம்.
அப்படிப்பட்ட காலத்தில்தான் திரு.பிள்ளை அவர்கள் சிறைபுகுந்தார்கள்; செக்கும் இழுத்தார்கள். களைப்பு மிகுதியினால் குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தண்ணீர் பெறாமல் சவுக்கடியையே பெற்றார்கள். சில நாட்கள் அல்ல; பல ஆண்டுகள். நாட்டுப்பற்றுக் காரணமாக உயிர் போகும் வேதனையைப் பெற்று வாடி வதங்கி வருந்த உழைத்தவர் திரு. பிள்ளை அவர்கள் ஆவர்.

படிப்பு இல்லாமல் தேசத்தொண்டு செய்யப்போனவர் அல்லர் அவர்; அக்காலத்திலேயே கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்கள்.
தொழிலில்லாமல் தேசத்தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். வழக்குரைஞர் தொழில் செய்துகொண்டிருந்தவர்.
வருமானமில்லாமையால் தேசபக்திகாட்டப் புறப்பட்ட வக்கீல்களைச் சேர்ந்தவர் அல்லர் அவர்; தொழிலில் நல்ல வருமானத்தைப் பெற்று வந்தவர்..
புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டுப் பொதுத்தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். எவ்வளவு கத்திப் பேசினாலும் இந்துவும் சுதேசமித்திரனும் ஏழு எட்டு வரிகூட எழுதா அக்காலத்தில் தேசத்தொண்டு செய்து வந்தவர்.
அவரது அருஞ்செயலையும் அருங்குணத்தையும் உள்ளத்தையும் விட வேறெதையும் கூற வேண்டியதில்லை...

(கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்புகள்-3 பக்கம் 400,401. நெய்தல் பதிப்பகம், சென்னை-5)
{நூலில் கண்டவாறே எந்தத் திருத்தமுமின்றிக் கட்டுரைப் பகுதியைத் தந்துள்ளேன். த.ந.}
-----------------------------------------------------------------------  

வியாழன், 29 டிசம்பர், 2016

‘செந்தமிழ்ப் பாடினி’ பாவலர் திருவமை மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘செந்நெற் பயன்மழை’ நூல்

‘செந்தமிழ்ப் பாடினி’ பாவலர் திருவமை மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘செந்நெற் பயன்மழை’ நூல்.
---------------------------------------------------------------------------------------------------------------
பாவேந்தர் பாரதிதாசன், 23-8-1960 நாளிட்ட குயில் இதழில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்  பற்றி எழுதிய பன்னிரண்டு வெணபாக்களுள் ஒன்றில், எந்தமிழ் மேலென்று உணமை எடுத்துரைப்போன்; செந்தமிழன்! செந்நெற் பயன்மழை... என்று எழுதியிருப்பார்.
செந்நெல்லைப் பயனாக்ககும் மழையாக அவர் பாவாணரைப் புகழ்ந்திருப்பார். அதே,செந்நெற் பயன்மழை என்னும் தொடரை நூலாசிரியர் மணிமேகலை அவர்கள் பாவேந்தர் பாவாணர் இருவரையும் குறிக்கப் பயன்படுத்தி நூலின் தலைப்பாக்கி உள்ளார்.
நூலாசிரியர் மணிமேகலை, பாவேந்தரின் மகள் வயிற்றுப் பெயர்த்தி ஆவார். தேர்ந்த பாவலராகத் திகழ்பவர். பல பாடல் நூல்களை ஆக்கி அளித்தவர். அவருடைய முதல் உரைநடை நூலாக செந்நெற் பயன்மழை வந்துள்ளது.   

நூல், ஐந்து பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது. பாவேந்தர், பாவாணர், பாவேந்தர் போற்றிய பாவாணர், பாவாணர் போற்றிய பாவேந்தர், பாவேந்தரும் பாவாணரும் ஆகியவை அந்த ஐந்து பகுதிகளாகும்.

பாவேந்தர் என்னும் பகுதியில், சுருக்கமாக அவர் வாழ்க்கைக் குறிப்புகளாகப் பிறப்பு, குடும்பம், கல்வி, தோற்றம், திருமணம், ஆசிரியப்பணி, பணிநிறைவு, இதழ்ப்பணி, படைத்த நூல்களைப்பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். பாவேந்தர் படைத்த நூல்கள் 92-ஐயும் பட்டியலிட்டுள்ளார்.
சிலநிகழ்வுகள் என்னும் தலைப்பிலும், மறைவுக்குப் பின் என்ற தலைப்பிலும் இவர் தரும் பல செய்திகள் இதுவரை பலரும் அறியாதவை; வரலாற்றுச் சிறப்புடையனவாகும். மக்கள் பாவலர்
பட்டுக்கோட்டையார் பாரதிதாசன் வாழ்க! என்று எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார், பெங்களூரில் இசைநிகழ்ச்சி நடத்திய எம்.எசு.சுப்புலட்சுமியைப் பாடவிடாமல் கலகம் செய்த கன்னடர்களைக் கண்டித்துக் குயில் இதழில், கன்னடம் பணியவேண்டும் என்றதலைப்பிட்டுக் கடுமையாகப் பாடல் எழுதியது போன்ற பல செய்திகளைக் காணலாம்.

பாவாணர் என்ற தலைப்பிலும், பாவாணரின் சுருக்க வரலாறு, பணி, படைத்த நூல்களின் பட்டியல், சில நிகழ்வுகள், மறைவுக்குப்பின் ஆகிய செய்திகளைத் தருகிறார். மொழி ஆராய்ச்சி என்ற பாவாணரின் முதற்கட்டுரை 1931 சூன்-சூலை செந்தமிழ்ச்செல்வி இதழில் வந்தது போன்ற பல செய்திகளைத் தந்திருக்கின்றார்.

பாவேந்தர் போற்றிய பாவாணர் என்னும் பகுதியில், பாவாணருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேர்ந்த ஒத்துழைப்பின்மையும் மதிப்புக்குறைவும் வேலைநீக்கமும் பற்றிய செய்திகளையும், பாவேந்தர் முழுமையாகப் பாவாணரைத் தாங்கி அவருக்குத் துணையாக வலிவாக எழுதிய பல செய்திகளையும் தந்திருக்கிறார்.

பாவாணர் போற்றிய பாவேந்தர் என்ற பகுதியில் பாவாணர், பாவேந்தரின் கொள்கைப்பற்றையும், அன்பையும் போற்றிய பல செய்திகளைத் தந்துள்ளார்.

பாவாணரும் பாவேந்தரும் என்னும் பகுதியில் இருவரின் செயல்பாடுகளில் காணும் கொள்கை ஒற்றுமையையும் விளக்கிக் கூறுகின்றார்.

பாவேந்தரைப் பற்றியும் பாவாணரைப் பற்றியும் அறிந்தவர்களும் தெரிந்திராத பல செய்திகள் நூலில் உள்ளன. இந்நூல்,
தமிழன்பர்களும், ஆய்வாளர்களும் பயன்கொள்ளத் தக்கதாம்.

இந்த நூல்லைப் பதிப்பித்தோர் முகவரி:         
விளாதிமிர் பதிப்பகம்,
44, நான்காம் குறுக்குத் தெரு,
குறிஞ்சி நகர்,
புதுச்சேரி 605 008.
தொலைப்பேசி: 0413 2255693
கைப்பேசி: 94421 86802.
-------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் – கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!


திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!
-------------------------------------------------------------

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும் நண்பர்களாக இருந்துள்ளனர். பல நேரங்களில் கி.ஆ.பெ.வி., திருவிகவைக் கண்டு பேசியிருக்கிறார்.

மறைமலையடிகளுக்கும் பெரியாருக்கும் முரண் ஏற்பட்ட காலத்தில், அடிகளார்மீது, பெரியாரைக் கொலைசெய்யத் தூண்டினார் எனக் குற்றம் சுமத்தி வழக்கொன்றும் போடப்பட்டிருந்தது. அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்ததற்குத் திரு.வி.க.வும் கி.ஆ.பெ.வி.யும் காரணமாக இருந்திருக்கின்றனர்.

திரு.வி.க., தாம் எழுதி வெளியிட்ட தம் வரலாற்றில், கி.ஆ.பெ.வி.யைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.   

திரு.வி.க., அகவை முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயலிழந்து இல்லத்தில் இருக்கம் பொழுது, கி.ஆ.பெ.வி. பலமுறை சென்று அவரைப் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கச் சென்றபோதும், முனைவர் மு.வரதராசனார் அங்கு இருந்திருக்கிறார். மு.வ., திருவி.க.வைத் தம் தலைவராகவும் தம் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்ததாகக்  கி.ஆ.பெ.வி. எழுதியுள்ளார்.

கடைசியாக ஒருமுறை கி.ஆ.பெ.வி., திரு.வி.க.வைக் காணச் சென்றநிகழ்வினை அவர் எழுதியவாறே கீழே காண்க:

திரு.வி.க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். கி.ஆ.பெ. வந்திருக்கிறார் என்று டாகடர் மு.வ., அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூவினார். திரு.வி.க. கையை அசைத்து உட்காரச் சொன்னார்.

நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு,
ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
என்று கேட்டேன்.
அதையே அவர் மிகவும் ஓசை குறைந்த சொற்களால் திரும்பக் குறிப்பிட்டு,
நாடு இருக்கிறது... மொழி இருக்கிறது... மக்கள் இருக்கிறார்கள்... நீங்களும் இருக்கிறீர்கள்... பார்த்துக் கொள்ளுங்கள்
என்று கூறினார்கள். நாங்கள் கண்கலங்கினோம்....
வாழட்டும் திரு.வி.க. புகழ்!
வளரட்டும் திரு.வி.க. மரபு!
 - என்று முடித்திருக்கின்றார் கி.ஆ.பெ.வி.

(கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்புகள் 3, நெய்தல் பதிப்பகம், சென்னை-5., பக்கம் 397-399)
--------------------------------------------------------------