தமிழ் எதிரப்பு கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் எதிரப்பு கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஏப்ரல், 2008

'தினமணி', 'திண்ணை'யில் வந்த கட்டுரை பற்றிய இருவரின் எழுத்துக்கள் பற்றி ...!



            18-03-2008 'தினமணி'யில் 'தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்'  என்ற ஈர்ப்பான தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. அதன்பின் அதே கட்டுரை திண்ணையிலும் வந்தது. அக்கட்டுரை பற்றிய கருத்துரைகளை அடுத்துவந்த திண்ணையில் 'ரவிசங்கர்' எழுதியிருந்தார். அதற்குப்பின் 'கார்கில் ஜெய்' என்பார் 'தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்' என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகளைத் தொடர்பு படுத்தி எழுதியிருந்தார்.
            இரவிசங்கர் தம் கட்டுரையில், மூலக் கட்டுரை (தினமணி/ திண்ணையில் வந்தது) கூறும் முதன்மையான கருத்துக்களை எடுத்துக்கூறி அவை தொடர்பாக பன்னிரண்டு கேள்விகளை எழுப்பியிருந்தார். பிறமொழிகளில் உள்ள ஒலியை அப்படியே தமிழில் கொண்டுவர வேண்டும் என்றும் அதற்காகத் தமிழ் எழுத்துக்களை மாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளமை தொடர்பாகத் தம் கருத்துக்களைக் கூறியிருந்தார்.
            இறுதியில், பிறமொழிகளின் ஒலியைத் தம் மொழியில் ஏற்படுத்தற்காக புது எழுத்துகளைப் பெற்றுப் பரவலான மொழிகள் எவையெவை ? அவை தமிழுக்கு நிகராகத் தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவையா?  புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின என்பதற்குச் சான்றுளவா? என்ற கேள்விகளுக்கு மூலக் கட்டுரையாளரிடம் மறுமொழி இருக்காது என்றவாறு எழுதி இருந்தார்.
     கார்கில் ஜெய் தம் கட்டுரையின் தொடக்கத்திலேயே, தமிழில் புது எழுத்துக் குறியீடுகள் ஒலிப்பில் எந்த அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என்ற அவருடைய ஐயப்பாட்டைத் தெரிவித்தாலும் மூலக்கட்டுரை ஆசிரியைக்குச் சார்பாகவே கருத்துரைத் துள்ளார். சில கோளாற்றுக் குறும்புக் கூற்றுக்களும் கூட காணப்படுகின்றன.
     Small irrigation system - என்பதற்கு மிகச்சரியான மொழிபெயர்ப்பு 'சிறுநீர்ப் பாசனம்'  சங்கடப் படுத்துகிறது - என்று இவர் எழுதுகிறார். இதைப் பார்த்ததும் 2005இல் வெளிவந்த துளிப்பா (ஐக்கூ) நூலான 'சிதறல்கள்' பக்கம்19இல் உள்ள ஒரு துளிப்பா நினைவுக்கு வந்தது. அது இது:
'சிறுநீர்ப் பாசனம் !' - மொழிபெயர்த்துச் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.
'சிறுபாசனம்' என்றோம்.
மொழிவெறி என்கிறார்கள்!
     இத்தமிழ் மண்ணில் ஓடி ஆடி உருண்டு புரண்டு நீர்நிலைகளில் குதித்துக் குளித்து முங்கி மூழ்கி இம்மண்ணை நக்கிச் சுவைத்து நலம் பெற்ற மண்ணின் மைந்தர் எவரும் 'சிறுநீர்ப் பாசனம்' என்று மொழிபெயர்க்க மாட்டார்கள். முடக்கொற்றான் கொடியென்றும் அறியாது அதை, முடக் கொற்றான் மரம் என்று எழுதுவார் போன்றவர்களைத் தவிர, அது மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்று எவரும் கூறமாட்டார்கள். ஏனென்றால், பாசனப்பயிர், பாசன வாய்க்கால், பாசன நீர் போன்ற வழக்குச் சொற்கள் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
      தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச்சொல் அகரமுதலி' ( Dictionary of Technical Terms) பக்கம் 626இல் 'சிறு பாசனம்' என்றே இருப்பதைக் காணலாம் (இன்னொரு செய்தி : Small irrigation system என்று வழங்குவதில்லை; Minor irrigation என்றுதான் கூறுவது வழக்கம்!)
'ரிஷபம்' , 'மேஷம்' என்றால் மாடு ஆடு என்பதை விட இனிமையாக இருப்பதாக இவரிடம் யாரோ கூறினாரென்றும், 'எருமை' எனச் சமற்கிருதத்தில் திட்டியபோது, இலயோலாக் கல்லூரி மாணவர் பொறுமை காத்தனர், மகிழ்வுற்றனர் எனவும் இவர் கூறுகிற போது 'சாக்குப்பையிலிருந்து பூனை வெளியே வந்து விடுகிறது'! இவற்றைப் படித்தபின் இவர் அந்தக் கட்டுரை ஆசிரியையின் புகழ் பாடுவது குறித்து நமக்கு ஐயம் எழ வாய்பு பறிபோய் விடுகிறது.
        இரவிசங்கர் அவருடைய கேள்விகளுக்கு மூலக் கட்டுரையாளரிடம் மறுமொழி இருக்காது என்றவாறு எழுதி இருந்தார். இது அவருடைய 'ஆணவம்' , திம்ர் என்கிறார் கார்கிலைப் பெயரில் கொண்டவர் அப்படியானால்,
'தமிழ் வெறி'
'தமிழ் அழிவை நோக்கிப் போகும்'
'தனித்தமிழில் எழுதுவது அபத்தம்' ... என்றும்,
(தக்க தமிழ்ச்சொல் தமிழில் இருந்தாலும் பயன்படுத்தாமல்) 'அந்தஸ்து' என்ற அயற் சொல்லைத் தான் பயன்படுத்துவேன் என்றும் - எழுதுவதை என்னவென்பார் இவர்?