பா - நினைவேந்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா - நினைவேந்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அடிகளாசிரியர்க்கு இரங்கல்


அடிகளாசிரியர்க்கு இரங்கல்
                           
(விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்தை அடுத்த கூகையூர் என்னும் குகையூரில் குடத்திலிட்ட விளக்காய் வாழ்ந்த ஏற்றமிகு தமிழறிஞர், தொல்காப்பிய திருமந்திர ஆய்வாளர் அடிகளாசிரியர் கடந்த 8-1-2012இல் இயற்கை எய்திதினார். அப்பெரியாரின் நினைவேந்தும் பா இது)

உலகில்சீர் தொண்டாற்றி ஒளிசேர்த்தார் பலருள்ளும்
ஒப்பாய்க் கூறப்
பலகற்றும் ஆய்ந்தாழம் பற்பலநூல் விளக்கமுறப்
படைத்த ளித்தும்
இலகுறவே கூரையகம் ஏற்றதென கோரைப்பாய்
இருந்தே வாழ்ந்த
அலகில்லா எளிமைசேர் அடிகளாசி ரியருமைப்போல்
யாரே உண்டு?

மாறலிலாத் தமிழ்ப்பற்றில் மறைமலையார் நற்றொடர்பில்
மக்க ளுக்கே
தூறலற அழகழகாய்த் தூயதமிழ்ப் பெயரிட்டீர்!
தோய்ந்த ஆய்வுச்
சேறலுற செம்மொழியாம் செந்தமிழ்த்தொல் காப்பியத்தின்
சிறப்பு ரைக்கும்
சாறமுறு நூல்பலவும் சமைத்தளித்தீர்! ஐயமற
தமிழ்கற் பித்தீர்!

நூற்றியிரண் டாண்டகவை நுடங்காத வாழ்வினிலே
நுவன்றீர் தேர்ந்தே
தேற்றமுற ஆய்ந்தறிந்த தெளிவார்ந்த கருத்துக்கள்;
தேடி வந்த
ஏற்றமுறு சிறப்புகளோ எண்ணிலவாம்! இவைவிடுத்தே
எங்கே போனீர்?
ஆற்றல்சால் உம்நினைவை அகத்தேற்றோம்! வணங்குகிறோம்!
அடிகள் ஐயா!

(இலகுற எளிமையுற; தூறல் பழிச்சொல்லல், சேறல் எழுச்சி)

---------------------------------------------------------------

ஞாயிறு, 23 நவம்பர், 2008

பாவலர் பாரதியார் நினைவேந்தி...!

(எண்சீர் மண்டிலம்: காய் – காய் – காய் – மா )


பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்
            பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும்
தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித்
            தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை!
வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி
            விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்
சீரழிந்தே அடிமையுற்ற சிறுமைநிலை போக்கச்
            சீறிஎழச் செய்தஇத ழாசிரியர் இவரே!
.
தொன்மையுடன் புதுப்புதுமை தோய்ந்தகருத் தெல்லாம்
            துளித்தயக்கு மில்லாது துணிவுடனே சொன்னார்!
முன்மையுறத் தாய்மொழியில் முறையாகக் கற்பீர்;
            முந்திடும்ஆங் கிலவழியோ முழுபேடிக் கல்வி!
வன்மையுடன் அதைத்தவிர்ப்போம்; வண்டமிழின் வழியே
            வழங்கிடுவோம் கல்வியென வழிவகையும் சொன்னார்!
மென்மையொடும் அன்போடும் மிகப்பரிந்து சொன்னார்
            மேனமையுறத் தாய்மொழியே மிக்கதுணை என்றே!
.
ஒருபக்கப் பாரதியே உருவாக்கிக் காட்டும்
            உதவாத போக்கிங்கே உள்ளதிது நன்றோ!
ஒருவிடுக அயற்சொல்லை ஒல்லும்வா யெல்லாம்
            ஓங்குகலை சேர்த்துதமிழ் உயர்த்திடுக என்றார்!
தெருளுறவே அவருரைத்த தேர்ந்தகருத் திதனைத்
            தெரிந்திருந்தும் பிறசொல்லைத் தீந்தமிழில் கலக்கும்
அருவருப்பை மாற்றிடுவோம் அறிவியலும் கலையும்
            அருந்தமிழில் வளர்த்திடுவோம்! அன்புணர்வில் வாழ்வோம்!
------------------------------------------------------------------------------------------------


வெள்ளி, 5 செப்டம்பர், 2008

தமிழ்மாமணி புலவர் இறைவிழியனார் நினைவேந்தல்


 நினைவேந்தல் நாள் :22-05-2008

(நேரிசை வெண்பா)

நிறைதமிழ் காப்பே நினைவேந்திச் சற்றும்
மிறையறியாத் தொண்டால் மிளிர்ந்தாய்! - இறைவிழிய!
உன்னை மறந்திடலும் ஒல்லுமோ?  என்றென்றும்
நின்னையே நாடுமென் நெஞ்சு.

------------------------------------------------------------------------------------------


வியாழன், 4 செப்டம்பர், 2008

அண்ணா- நூற்றாண்டு நினைவு!


இருபத்து நான்கு வரிகளில் -                                                                
அண்ணாவின் இனிய நினைவேந்தல்!       


அண்ணா!  அட,ஓ!  எண்ணம்  இனிக்கும்                             திண்ணியர்  திருப்பெயர்!  ஈரா  யிரமாண்
டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க
எழுச்சியோ டிளைஞரை  ஈர்த்தவர்  பெயரிது!

ஆரையும்  விடவும்  ஆரிய  அரவை                                        -5            
நேருறத்  தாக்கி  நிலைகெடக்  கிடத்திய 
ஒருதனிப் பெரும்பணிப்  பெரியார்  தேர்ந்தசெந்                 தெருள்தெளி  மாணவர்  தீந்தமிழ்ப்  பெயரிது!

மூடுற்ற  தமிழினப்  பீடு  விளக்கிய                                  
ஈடிலா  அறிஞரின்  சூடெழும்  பெயரிது!                                 -10

தாய்நிலந் தன்னைத் தமிழ்நா  டென்றே                         வாய்மகிழ்ந்  தழைக்க  வைத்தவர்  பெயரிது!
ஆட்சியில்  கல்வியில்  காட்சியில் இசையில்
நீட்சி  தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி                       
நலக்கலை  சிதைத்தோர்  கலக்குற  துலக்கமாய்ச்             -15  
சொலல்வல்  திறத்தரின்  சுருக்கப்  பெயரிது!

செத்ததை விலக்கிய  செந்தமிழ்த்  திருமணம்
ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர்!

பிறப்பிற்  பிரிவினை  இறக்கங்  கூறிய
சிறப்பறு 'ஆரிய மாயை'  செறுத்தவர்!                                  -20

தமிழர் உணர்வுத் தழல்'தீப் பரவுக'!
இழிவொழித் தெம்மினம் ஏற்றம் பெறுகென                    
ஆர்த்தவர்;  உழைத்தவர்;  அதன்வழி
சீர்த்திசால் தமிழினம் காத்தவர் பெயரிதே!                         -24


***************************************************************





செவ்வாய், 18 டிசம்பர், 2007

பொன்னம்பலனாரைப் போற்றுகின்றோம்!

 பொன்னம்பலனாரைப் போற்றுகின்றோம்!


தூயதமிழ் தன்மானம் போற்றி வாழ்ந்தாய்!                                                                      துணிவுடனே மாணவர்க்கும் உணர்த்தி வந்தாய்!                                                        

தோயநலம் தமிழுக்கே தொய்வில் லாமல்                                                                          தொடர்காப்பு வினைபுரிந்தாய்! தொலையாத் தொல்லை                                              
தீயவுளத் தாரிழைத்தும் சிறிதும் மாறாத்                                                                            திடஞ்சான்ற தமிழ்மறவ! திறலின் வேந்தே!                                                                        
ஓயலறி யாப்பொன்னம் பலனே! உன்னை                                                                             உளம்நெகிழ நினைவேந்திப் போற்று கின்றோம்!                                                                                                                          
                                                                                                                                                                      - த. ந. - 10-12-2007.