வணிகர் தலைவர் த.வெள்ளையனார்
மறைந்தார்!
தமிழ்நாடு வணிகர் அமைப்புகளின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் உடல்நலக்
குறைவால் 10-9-2024 அன்று அவருடைய 76ஆம் அகவையில் காலமானார்.
வணிகர்கள்
அன்றைய காலக்கட்டத்தில் எதிர்கொண்ட குமுகப் பகைவர்களின் அச்சுறுத்தல், அரசு அதிகாரிகளின் வரம்புமீறல் முதலியவற்றை முடிவுக்குக் கொண்டுவர, தமிழகத்தில் பல்வேறு அணிகளாகப் பிரிந்து கிடந்த வணிகர்களை ஒருங்கிணைத்தவர் த. வெள்ளையனார் ஆவார்; வணிகர்களின் உரிமைகளுக்காகப்
பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்; வணிகர்களின் கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்தவர்.
வாணிகம்
தொடர்பான அரசின் வரி விதிப்புக் கொள்கைகள்வணிகர்களைத் தாக்காமல் இருக்கக்
கேடகமாகச் செயல்பட்டவர். நாட்டுமக்களின் பொதுச்சொத்தான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்க்குத்
தாரைவார்க்கும் நிலையையும், சில்லறை வணிகத்தில் அயலவர் முதலீட்டிற்குத்
திறந்துவிட இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்த்துப்
போராடியவர். இடச்சாரிக் கட்சிகளோடும், மக்கள்நாயக ஆற்றல்களோடும் இணைந்து செயல்பட்டவர். வணிகர்
நலன்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் உழவர்கள் பெருந்துணையிருக்கக் காரணமானவர்.
வணிகர்அமைப்பின்
தலைவர் என்பதையும் கடந்து, ஈழத்தமிழர் நலனுக்காக நடத்திய பல்வேறு போராட்டங்களில்
பங்கேற்றவர். தமிழினத்துக்கான அத்தனைப் போராட்டங்களிலும் துணையாக இருந்தவர். தூத்துக்குடித்
துமுக்கிச்சூடு நிகழ்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வணிகர்களின் கடையடைப்புப்
போராட்டத்தை நடத்திய தமிழ்க்குமுக நன்மையில் நாட்டம் கொண்ட மாந்தர் அவர்.
தலைவர் வெள்ளையன் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர்; தமிழீழ விடுதலை, ஏழு தமிழர் விடுதலைப் போராட்டங்களுக்குத் துணைநின்றவர். அவரது மறைவு வணிகர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கே ஏற்பட்டுள்ள பேரிழப்பு ஆகும்.
(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் அக்குதோபர் 2024 இதழில் வந்தது)