பா -இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா -இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூலை, 2009

வ.அய்.சுப்பிரமணியம் ஐயாவை இழந்தோமே!

.. ..


தலைமைப்பண் பாற்றல்சால் தமிழறிஞர் ஆய்வர்!   
     தன்னிகரில் வினையாண்மைத் தகையாளர்! என்றும நிலைத்திருந்தே ஆய்வுசெயும் நிறுவனங்கள் தந்தார் 
      நிறைவாகச் செந்தமிழில் நெடும்பணிகள் ஆற்ற! தொலைநோக்கில் பல்கலயில் தூயதமிழ்க் கென்றே 
     துறையொன்றைத் தொடக்கியவர் துய்யதமிழ் நெஞ்சர்!
இலையின்றே . அய்.சுப்  பிரமணிய ஏந்தல் 
     ஈடில்லாப் பெருந்தமிழர் இவரையிழந் தோமே!

----------------------------------------------------------------

புதன், 3 ஜூன், 2009

ஐயா திருமுருகனார் மறைவுக்கு இரங்கல்!

. .                                                                                                                 
 
ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும் . 
          ஈழத்துச் செய்தியின்பின் இந்தச் செய்தி ! 
தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம்?  . 
          தீந்தமிழின் இலக்கணத்தில் ஐயம் தோன்றின்!
ஏற்றமுற விளக்குதற்கே எவரிங் குள்ளார் . 
          இசைத்தமிழின் நுணுக்கங்கள் எடுத்துச் சொல்லி ! 
ஆற்றலுறத் தமிழறிந்த ஐயா எங்கள் . 
          அருந்திரு முருகனாரே ! அழுகின் றோமே !

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2008

இசைமிக்க சுரும்பியனை இழந்தோம்!


இசையறிஞர் ஆசிரியர் இன்றமிழ்ப்பண் ணாய்வர்!
            எவரையுமே ஈர்க்கின்ற இசையமைக்கும் வல்லார்!
நசைமிக்கார் தமிழிசையை மீட்டுயர்த்த! வாழ்வில்
            நாளெல்லாம் அதற்கெனவே நாடியுழைத் தோய்ந்தார்!
விசைக்குரலிற் பாவேந்தர் பாவெடுத்துப் பாடின்
            வியப்புறுவோம் வீறுறுவோம் விருப்புறுவோம் வினைக்கே!
இசைமிக்க சுரும்பியனை இழந்தோமே! இவர்போல்
            எவருழைப்பார் தமிழிசைக்கே, இரங்கியழும் நெஞ்சே!

திங்கள், 17 டிசம்பர், 2007

ஒரு தமிழ்ச்செல்வன் உயிர் பறித்தாலென்?



 அருந்தமிழ் வுணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
திருந்திடாச் சிங்களர் தீமையின் உருவினர்
போர்நெறி மதியாப் பார்பழி கொடுமையர்
சீரார் அமைதிச் சிரிப்பின் நல்லெழிற்
செந்தமிழ்ச் செல்வனைச் செகுத்தனர்! அட,ஓ!
முந்தும் அதிர்ச்சி! நொந்திடும் சிந்தை!

ஈழத் தேசிய எழுச்சித் தலைவரின்
ஆழன் பேந்திய அணுக்கத் தம்பி!
ஒப்பிலாத் தோழன்! உயர்மறப் பொருநன்!
செப்புரை தேர்ந்த செஞ்சொலன், இன்சொலன்!


அமைதிகாண் பேச்சுக்(கு) ஆண்டனார்க் குப்பின்
சமைவுறப் பொருந்திய அமைதிப் புறவவன்!  
நார்வே பவ்வர்  நனிபுகழ்ந் தேற்றும்
சீர்மையன், கூர்மையன், செழும்பொறை நோன்றவன்!

களம்பல வென்றவன்; காலிழந் திடினும்
உளவலி தாழா உறுதித் திண்ணியன்!
குறியின் மாறாக் கொள்கை நெறியினன்!
பெறற்கரு மாற்றலன், பெருவலி நெருப்பனான்!

இனவெறிச் சிங்களர் தனிக்கொடுங் கொடுமையர் மனச்சான் றழித்தே மாரியாய்க் குண்டுகள்
முழக்கொடு தொடர்ச்சியாய் இலக்குகொண் டழிப்பதோ குழந்தைகள் பெண்கள் குடுகுடு முதியோர்!
இன்றோ, அமைதிக் கென்றே உழைக்கையில்
கொன்றனர் எந்தமிழ்ச் செல்வனை, அன்றோ?

போர்தீர் வென்றிடும் புன்மதி யாளர்
தேர்பு, தமிழினம் தீர அழிப்பதே!
செருநெறி கருதார் சீரறம் பிழைத்தே
ஒருதமிழ்ச் செல்வன் உயிர்பறித் தாலென்?
ஓரா யிரந்தமிழ்ச் செல்வர் வருவர்
தீராக் கொடும்பகை தீர்கணக் காற்றுவர்!
ஈழ விடுதலை ஈட்டிப்
பீழை துடைத்தே பெருநலஞ் சேர்ப்பரே!

- த.ந. (05-11-2007)