வியாழன், 11 அக்டோபர், 2012

நாகசாமியாரின் நயன்கெட்ட நூல்!


நாகசாமியாரின் நயன்கெட்ட நூல்!
                                                                                                    
மிழ்நாட்டரசின் தொல்லியல்துறையில் இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் இரா.நாகசாமி எழுதியுள்ள “Mirror of Tamil and Sanskrit” என்கின்ற ஆங்கில நூல் இவ்வாண்டின் (2012) தொடக்கத்தில் தமிழ்க் கலைக் கழகப் பதிப்பாக வெளிவந்துள்ளது. அந்நூலைப் பற்றிய அறிமுகம் தி இந்து நாளிதழிலும் வந்தது. அந்நூலின் உள்ளடக்கக் கருத்துக்கள் பற்றி நூலாசிரியர் முன்னுரைப் பகுதியில் நாகசாமி எழுதிள்ள பகுதிகளின் தமிழாக்கத்தைக் கீழே காண்க:
     
தமிழ், வேத சமற்கிருத மரபுகளை ஏற்று குறிப்பாக உருவாக்க நிலையில் பிராமணர்கள் உதவியுடன் செம்மொழி நிலையை அடைந்துள்ளது என்று பழந்தமிழ் இலக்கியங்களையும், தொன்மையான தமிழ் இலக்கணத்தையும் விரிவாகப் பார்த்து, முதன்முறையாக இந்நூல் நிலைநாட்டுகிறது. தமிழ், அதன் வரலாறு தெரிந்த காலந்தொட்டே சமற்கிருத்தினின்று கடன் பெற்றுக் கொண்டதனால் விரைவாக முன்னேற்றமடைந்தது என்று இந்நூல் தெளிவாக விளக்குகிறது.
பண்டைத் தமிழர்கள் வழிபட்ட கடவுள்கள் சிவன், விட்டுணு, கிருட்டிணன், பலராமன், இராமன், குமரன்(முருகன்), இந்திரன் துர்க்கை, காளியும் மற்றையோரும் வேதக்கடவுள்களாக உள்ளமை தெளிவானதாகும்.
அக் குமுகாயம் சாதி அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வய்சியர், சூத்திரர் மற்றும் கலப்புச்சாதியினர் என்று பிளவுபட்டிருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு பரப்பிலும் வேத மத்ததின் பயன்நிறைவைப் பெரும்பாலான தமிழர்கள் நம்பினர். வேதச் செழுமையில் கூறியுள்ள பழக்கவழக்கங்களால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். குடும்ப வாழ்க்கையில் வேத வேள்விகளை நடத்தினர். வேதப் பிராமணர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட முறைகளை அவர்கள் பின்பற்றினர்.
சேர சோழ பாண்டியர் வேளிர்தலைவர் போலும் எல்லா மன்னர்களும் மேற்குடி என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவு வேளாளர் உட்பட பெரும்பான்மைப் பொதுமக்களும் வேதம் கற்று அவற்றிற் கூறியவாறு வழிபாடு நடத்தினர்.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் தமிழரின் நான்கு வகை வாழ்க்கைப் பிரிவு பரத நாட்டிய நூலில் காக்சியாப் பிரிவு எனக் குறிக்கப்பட்டுள்ளது.
வேத முனிவர்களான யாக்கினவால்கியர், வசிட்டர், நாரதர், மனு, பிரகத்பதி, பராசரர் மற்றும் பிறர் தொகுத்த தரும நூல் நெறிமுறைகளின் அடிப்படையில் நயனாள் முறை இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட படிநிகராளிகளைக் கொண்ட ஊர் அவையான வேத சபைகளின்படி குடிமை ஆட்சி அமைக்கப்பட்டது.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் யாப்பியல் சமற்கிருத மூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் பேச்சொலியியல், உவமம் போன்ற அணிகள் முதலியவை எடுத்துக்காட்டாகும். மேலும், படிக்கக்கூடிய பழமையான எழுத்து பிராமி பிராமணர்களால் அசோகர் காலத்தில் சரசுவதி பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டது; அவர்கள் பெயரால் பிராமி என்று அழைக்கப்பட்டது.........
இறந்தவர்களை அடக்கஞ் செய்தல், இறுதிச் சடங்குகள், நினைவுக்கல் நடுதல், முதலியன சமற்கிருத ஆகம இலக்கியங்களில் வரையறுத்தவாறு இருந்தன.   பழந்தமிழ்நாட்டுக் கோயில் வழிபாடு ஆகமச் சடங்குப் பொருளுரைகளைப் பின்பற்றியது. இசை நாட்டியம் இலக்கியங்களின் அழகியல் பரதநாட்டிய நூலை அடிப்படையாகக் கொண்டது; சுவைத்துணர்தலும் அவ்வாறே இருந்தது.
தொல்காப்பிய இலக்கணம் வேதமரபையும் பரத நாட்டிய மரபையும் வேராகக்கொண்டுள்ளது. செய்யுளின் அகம் புறம் பிரிவு நாட்டிய மரபு அகச்சுட்டு புறச்சுட்டு என்னும் இருவகை நாட்டியங்கள் ஆகும்.
இந்தியாவின் மற்றெல்லாப் பகுதிகளும் அவற்றிற்குரிய வட்டார மொழிகளைக் கொண்டிருந்ததைப் போன்றே தமிழும்கூட அதற்குரிய வட்டார மொழியைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. உள்வரும் கருத்துக்களை விரைந்து தன்னியலாக்கக்கூடிய முறபோக்கான வட்டார மொழியாக இருந்து, தமிழ் அழகிய செம்மொழியாக மலர்ந்ததே வேறுபாடாகும்.
காலகவியல் அறிவியலில் தமிழர்கள் வேதமரபைத் தமதாக ஏற்றுக் கொண்டதைக் காட்ட மறுக்கவியலாச் சான்றுகள் உள்ளன.....
இவ்வாறு, மொழிப்புலம், இலக்கணம், யாப்பு, இலக்கியம், கலை, கட்டடக்கலை, இசை, நாட்டியம், அரசாட்சி, நயனாட்சி, குமுக நடைமுறைகள், வானியல், மெய்மவியல், சமயத்திலும் பழந்தமிழர்கள் வேதமரபைப் பின்பற்றினர்; பெருமளவில் வடநாட்டு முறைகளினால் தாக்குரவுற்றனர்.
தொல்காப்பியத்தையும், கழக இலக்கியங்களையும் புறக்கணித்து விலக்கக் கூடியவராலேயே இக்கொள்கையை மறுக்க முடியும். தமிழ் வரலாற்றின் எக்காலத்திலும், தமிழ்க்கல்வியை அடக்கி ஒடுக்கும் எந்த ஒரு முயற்சியும் இடம்பெறவில்லை. இந்நூல், உண்மையில் தமிழ் சமற்கிருத ஊடாட்டத்தை முறையான வரலாற்றில், காலவரிசை முறையில் வைக்கும் புதுவழிகண்டு விளக்கிக் காட்டும் இயலுருக் காட்சியாகும்.........
     
      நாகசாமியாரின் இந்நூலில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான கருத்துக்கள் முன்னரே தக்க சான்றுகளுடன் வீழ்த்தப்பட்டவையே. மீண்டும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு பிற நாட்டினரைக் குழப்பும்  முயற்சியை நாம் மீண்டும் வீழ்த்தியாக வேண்டியிருக்கின்றது. பேராசிரியர் சியார்ச்சு கார்ட்டும் இந்நூற் கருத்துக்களை மறுத்திருக்கிறார்.
     
      27-7-2012இல் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டமொன்றில் முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன், இளங்கோவும் முனைவர்கள் மறைமலை இலக்குவனார், இரா.மதிவாணன், பூங்குன்றன், அரசேந்திரன் போன்றோரும் தொல்பொருள் ஆய்வுத்துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன், கோவைஞானி, பெ.மணியரசன் முதலான பலரும் கலந்து கொண்டு நாகசாமியாரின் நூலை மறுத்தும் கண்டித்தும் பேசியிருக்கின்றனர்.        
     
      21-8-2012இல் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழறிஞர் தமிழண்ணல் தக்க விளக்கங்கள் கூறி நாகசாமியார் நூலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார். அவர் உரையின் சில பகுதிகளைக் கீழே காண்க:
     
      உலகிற்கே உழவைக் கற்பித்த தமிழருக்கு உழவு தெரியாது, வங்காளத்தாரே உழவு கற்றுக்கொடுத்தார்கள் என்கிறார் நாகசாமி. தொல்காப்பியம் இலக்கணநூல் இல்லை; நடனநூல் என்கிறார். சிலப்பதிகாரத்தைப் பொய்யாகப் புனைந்த நூல் என எட்டாம் இயலில் கூறிவிட்டு அவரே பத்தொன்பதாம் இயலில் வரலாற்றுச் சான்றுக்குக் குறிப்பிட்டுள்ளார். அவர் கருத்தில் அவரே முரண்பட்டுவிட்டு நூலை சான்றுகளுடன் மறுக்க யாரேனும் உண்டா? என்று தமிழர்களைப் பார்த்து அறைகூவுகிறார்.
      நாகசாமி சமற்கிருதமும் பரதமுனிவரின் நடனநூல் மட்டுமே படித்துள்ளார். வேறு இலக்கியங்களைப் படிக்கவில்லை. தொல்காப்பியத்தையும் சரியாகப் படிக்காமல் நுனிப்புல் மேய்ந்துள்ளார். தொல்காப்பியத்தில் 100 கொள்கைகள் உண்டு. அகம் புறம் என்பதே வடசொல் என்கிறார். இப்படி முழு முட்டாள்தனமாக எழுதிவிட்டு முதன் முறையாக நானே எழுதியுள்ளேன் என்று மார் தட்டுகிறார்.
      4ஆம் நூற்றாண்டு காலத்தில் சமற்கிருதத்தில் அணிநலன்கள் இல்லை. 7ஆம் நூற்றாண்டில்தான் சமற்கிருதத்தில் அணிநலன்கள் வந்தன. உவமை என்ற தமிழ்ச்சொல்லைத் திருடி சமற்கிருதத்தில் உவமா என்றனர். தீ என்னும் தமிழ்ச்சொல்லைத் திருடி தீவகம் என்றனர். இயைபுதான் யமகம் என்று சொல்லாமல் யமகம் இயைபு ஆனது என்கிறார்.  
     
      29-9-2012இல் எழுத்தாளர் துரை.இரவிக்குமாரின் மணற்கேணி அமைப்பு புதுச்சேரியில் நடத்திய தமிழும் சமற்கிருதமும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் கலந்து கொண்டவர்களில் நடன.காசிநாதன், அ.மணவாளன், சு.இராசவேலு, மாதையன் போன்றோர் நாகசாமியாரின் நூலுக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்தனர். நடன.காசிநாதனாரின் உரையின் சில பகுதிகளைக் கீழே காண்க:
     
பொருந்தல் அகழாய்வு தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் நிறைமுடுக்க நிரலளவி (ஏ.எம்.எசு) காலக்கணிப்பு கி.மு.490, ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழி தொல்தமிழ் எழுத்துக்கள் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கும் முந்தியது. அனுராதபுரம் பானையோட்டுப் பொறிப்பு கி.மு.600-370, மாங்குளம் பாறைக் கல்வெட்டின் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு, பட்டிப்புரோலு கற்சிமிழ்க் கல்வெட்டுக் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு, புலிமான் கோம்பை தொல்தமிழ்க் கல்வெட்டுக் காலம் கிமு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு. அழகன்குளம் பானையோட்டுப் பொறிப்பு இரா.நாகசாமி கருத்து கி.மு.360 ஆகும்.
      முனைவர் கே.வி.இரமேசு கருத்துப்படி, தமிலி (தமிழ்) எழுத்து அசோகன் காலத்துக்கு முன்பாகவே தமிழகத்தில் அழியக்கூடிய பனையோலையிலும் மற்றுமிருந்த பொருட்கள் மீதும் எழுதப்பெற்று வந்தது. இவ்வெழுத்து முதலில் தமிழ்-பொலிந்தி எழுத்தாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டுப் பின்பு தமிழ் அங்கிருந்து பட்டிப்புரோலு வழியாக மகாசுதான்(வங்காளம்), சோகவுரா, பிப்பிரவா (கிழக்கு உ.பி.), பட்டிலி (இராசசுத்தான்) ஆகிய இடங்களில் பரவி இறுதியாகக் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் மேலும் சில புதிய வளர்ச்சி ஏற்பட்டு அசோகனால் பயன்படுத்தப்பட்டது. நாகசாமி தாம் ஒரு தொல்லியலறிஞர் என்று புலப்படுத்திக் கொள்வதைவிட சமற்கிருதத்தின் முனைப்பான பற்றாளர் என்று காட்டிக் கொள்வதிலேயே பெரும் ஆர்வம் கொண்டுள்ளார்.
     
இங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டு மூன்று கூட்டங்களில் மறுப்பு அறிவித்தல் போதுமானதன்று. பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், அறிஞர் அண்ணா, தந்தைபெரியார் இல்லாத இக்காலத்தில் நாகசாமியாரின் உண்மைக்கு மாறான நயன் கெட்ட கருத்துக்களை வரிக்குவரி மறுத்து ஆங்கில நூல் இன்னும் வராதது தமிழர் நாணத்தகு நிலையாகும்.
தன்மானச்சூடும், தமிழிலக்கிய அறிவும், தொல்லியல் ஆய்வறிவும், உண்மையை வெளிப்படுத்தும் நேர்மை உள்ளமும் கொண்ட தமிழாய்வறிஞர் இனியும் காலந்தாழ்த்தாது இவ்வினையில் ஈடுபடுமாறு 'நற்றமிழ்' பணிவுடன் கேட்டுக்கொள்கின்றது. மற்றவர்கள், ஆரியப் புரட்டை விளக்கிப் பரப்புரை செய்து விழிப்பேற்படுத்த முயல்வோம்.

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.    
(குறிப்பு :'நற்றமிழ்'  இதழில் எழுதியது - த.ந.)                       
------------------------------------------------------------------------