செவ்வாய், 17 மார்ச், 2009

காசி.ஆனந்தனார் உரையிலிருந்து சில குறிப்புகள்!


28-02-2009 அன்று புதுவையில் மீனவ விடுதலை வேங்கைகள் நடத்திய போர் நிறுத்தக் கோரிக்கை மாநாட்டில் பாவலர் காசி.ஆனந்தனார் ஆற்றிய உணர்வுரையிலிருந்து தொகுத்த சில குறிப்புகள்: 

* ஓர் அரசியல் ஆய்வாளனாக இருந்து கூறுகிறேன்! உலகில் சில நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்தாலும் இலங்கையில் ஈழச்சிக்கலை, விடுதலைப் புலிகளைப் புறக்கணித்துத் தீர்க்க முடியாது.           எடுத்துக்காட்டாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இலாரி கிளின்டன், விடுதலைப்புலிகள் 'தீவிரவாதிகள் அல்லர்; அவர்கள் ஒடுக்குமுறை எதிர்ப்பாளர்கள்' என்று முன்னர் கூறியதையும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி, விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்த அறிவிப்பை ஏற்று, இலங்கை அரசும் போர்நிறுத்தம் அறிவித்து, தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளதையும் கருத்தில் கொள்க.

* 1963 சூன்6 நாளிட்ட 'தி இந்து' நாளிதழில் காலஞ்சென்ற இராசாசியார் எழுதிய கட்டுரையில், 'சிலோன் தமிழர்கள் குடியேறியவர்கள் அல்லர்; அவர்கள் அத்தீவின் பழங்குடிகள்' (ceylon Tamils are not settlers; they are the aborigines of that island) என்று ஈழத் தமிழர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

*  ஈழத்தில் சிங்களமொழித் திணிப்பால் தமிழ் அழிப்பு நடைபெற்று வருகிறது. 'சிங்களம் மட்டுமே' என்ற சட்டத்தைச் சிங்கள ஆட்சியாளர் நிறைவேற்றி தமிழ் அழிப்பு செய்து வருகின்றனர்.
          இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது தமிழ்மக்கள் 10 சதுர கற்கள் பரப்பளவிலும் சிங்களர் 15 கற்கள் பரப்பளவிலும் இருந்து வந்தனர். ஆங்கிலேயர் 04-02-1948இல் இலங்கையை விட்டு நீங்கியபோது, தமிழர்கள் 8 சதுர கற்கள் பரப்பிலும் சிங்களர் 17 சதுர கற்கள் பரப்பிலுமாக இருந்தனர்.
          தமிழர் பகுதிகளிஈல் சிங்களக் குடியேற்றத்தினால் தமிழர் வாழிடம் சுருங்கி வருகிறது.

* ஆங்கிலேயர் சிங்களரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த போது 1948இல், தமிழர்களின் மக்கள்தொகை 35 இலக்கம்; சிங்களர் 65 இலக்கம். இப்போது, சிங்களர் தொகை ஒன்றரை கோடி. தமிழர்களோ அதே 35 இலக்கம்.           தமிழ்த் தாய்மார்கள் யாரும் கருவுறாமல் இருந்து விட்டார்கள் என்று கருதல் வேண்டா! சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் நாடோறும் அழிக்கப்பட்டு வந்ததை இக் கணக்கே கூறும்.
          எனவே, மொழி அழிப்பு, வாழிடப் பறிப்பு, இன அழிப்பு என்ற கூறுகளால் தமிழ்த் தேசிய இனஅழிப்பு இலங்கையில் நடைபெறுகின்றதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.       இதற்குத தீர்வு, தமிழீழ விடுதலையே என்பதையும் உலகம் புரிந்து கொள்ள வேண்டும். உணர்வாளர்கள் இவற்றையே முழங்க வேண்டும்.   

*  இந்திய விடுதலைப்போரில் இறந்தோர் தொகை ஏறத்தாழ 10,000 பேர். ஈழ விடுதலைப் போரில் இதுவரை இறந்துள்ள ஏதுமறியாத் தமிழர்கள் ஒன்றரை இலக்கம் பேர். போராளிகள் 30,000 பேர்.
          இவற்றோடு, தமிழர்களின் இரண்டரை இலக்கம் வீடுகள் அழித்துத் தரைமட்ட மாக்கப் பட்டுள்ளன.
          கடந்த ஈராண்டுகளில் ஊடகத் துறையினர் 70 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

* ஈழத் தமிழர்கள் அறப் போராட்ட வழியில், 28 ஆண்டுகள் சம உரிமைக்காகப் போராடினர். அப் போராட்டங்களால் கொஞ்சமும் பயன் கிடைக்கவில்லை என்பதோடு மேன்மேலும் தமிழர்கள் தாக்குதலுக் குள்ளாயினர். பின்னரே, கடந்த 32 ஆண்டுகளாகக் கருவியேந்திய அறவழிப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

* 1983ஆம் ஆண்டு ஆகத்து 15இல், அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் திருவாட்டி இந்திரா காந்தியார் தில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய போது, 'இலங்கையில் இனஅழிப்பு நடைபெறுகிறது; நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்' (genocide is going on at Srilanka; we will not stay as spectators) என்று முழக்கம் செய்தார்.