அகழ்வாய்வுக்கு முட்டுக்கட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகழ்வாய்வுக்கு முட்டுக்கட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜனவரி, 2025

அகழ், கண்டுபிடி, காட்சிப்படுத்து!

 

(11-10-2024 நாளிட்ட தைம்சு ஆப்பு இந்தியாநாளிதழில் வந்த அறிமுக உரையுடனான நேர்காணலின் தமிழாக்கம்-தைம்சு ஆப்பு இந்தியாநாளிதழுக்கு நன்றி!)

அகழ், கண்டுபிடி, காட்சிப்படுத்து!

எருணாகுளத்திலுள்ள பன்முகத்தன்மையுடைய தொல்லியல்சார் அறிவியல்களுக்கான தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவனம்கழகக்காலச் சேரர் துறைமுகமான பட்டணம் (முசிறி) என்னுமிடத்தில் அகழ்வாய்வு செய்துவருகிறது. அந் நிறுவனம் கேரளத்தின் பேரியாற்றுக் கரையில் சங்ககாலப் பண்பாடுகளைக் காட்சிப் படுத்தும் ஓர் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிட்டு வருகின்றது. அதன் இயக்குநரான வரலாற்றாளரும் தொல்லியலாளருமான பி.செ.செரியன் பட்டணத்தில் பல அகழ்வாய்வுகளுக்குத் தலைமையேற்றவராவார். கழக(சங்க)க் காலத்தில் முசிறி உலகெங்குமுள்ள வாணிகர்களையும் கடலோடிகளையும் ஈர்த்ததாக அவர் கூறுகிறார். ஏ.இரகுராமனுடனான நேர்காணலில், ஒரு கிரேக்க மாந்தத்தலை-விலங்குருச் சிலை, உரோமப் பேரரசர் அகசுத்தசு சீசரை ஒத்துள்ள முத்திரை மோதிரம் உள்ளிட்ட கண்டுபிடிப்புளைப் பற்றியும் அகழ்வாய்வர் நேர்கொள்ளும் இக்கட்டுகளைப் பற்றியும்கூட செரியன், விளக்குகின்றார்.

நீங்கள் ஏன் பட்டணத்தில் கழகக்கால அருங்காட்சியகத்தை நிறுவ விரும்புகின்றீர்கள்?

இக்காலக் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் கழகக் காலம் பண்பாட்டு அடித்தளம் அமைத்திருக்கும். இந்த ஈராயிரமாண்டு பழமையான நாகரிக நுட்பப்பண்புகளுடனும் கழகக்காலக் கேரளமும், இந்தியத் துணைக்கண்டமும் தொடர்பு கொண்டிருந்த ஏறத்தாழ இப்போதைய இருபத்தைந்து நாடுகளுடனும் மக்கள் இணைந்திருக்கத் தேவையிருக்கின்றது. பட்டணம், அகழ்வாய்வு தளத்தின் உச்சக்கட்டக் காலமாக மதிக்கப்படுகின்ற கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலான காலம் கழகக் காலத்தோடு ஒத்திருக்கின்றது.

நாங்கள் அந்த அருங்காட்சியகத்திற்கு முசிறி கற்பனைக்களம் அல்லது கழகக் காலக் கற்பனைக்களம் என்று பெயரிட எண்ணுகிறோம்.

என்னென்ன காண்பிக்கப்படும்?

நாங்கள், தென்சீனக்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை செங்கடல், நைல், நண்ணிலக்கடல் ஆகியவற்றுடன் இணைந்த விரிவானதொரு கடல்சார் வலையமைப்பைப் பற்றிய சான்றுகளைக் கண்டுபிடித்துள்ளோம். இந்தத்


தொல்பொருள்களின் வகைப்பாட்டு பகுப்பாய்வுகளும், கதிரியக்கரிமக் காலங் காணலும், உரோமப் பேரரசின் காலம் இப் பகுதியோடு மிகவும் தொடர்புகொண்டிருந்த காலமாகக் (கி..மு, முதல் நூற்றாண்டிலிருந்து கி,பி மூன்றாம் நூற்றாண்டு வரை) காட்டுகின்றன. பண்டைய தமிழர்களின் உலகளாவிய தொடர்புகளை விளக்கும் வகையில் பட்டணம் இங்கு எல்லாப் பகுதிகளிலிருந்தும் பொருள்களைக் கொடுத்துள்ளது.

பதினொரு (மாந்த) எலும்புக்கூட்டு எச்சங்களின் பழமையான தாயனை (D.N.A) பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டன. இவற்றில் மூவர் நண்ணிலக்கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள், நால்வர் மேற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள், நால்வர் தென் ஆசியா அல்லது இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததுடன் உலகப் பொதுப் பண்பாட்டையும் உணர்த்துவதாக உள்ளன. குசராத்திலுள்ள பாரிகசா (பரூச்சு) என்ற இடத்தின் முகன்மைத் தன்மை, அது முசிறிக்கு முன்னர் ஒரு பெருந்துறைமுகமாக இருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும் கி.மு.முதல் நூற்றாண்டு முதல் பருவக் காற்றுகள்வழி நடத்தப்பட்ட கடற்செலவால் கப்பல்கள் செங்கடலிலிருந்து குசராத்து துறைமுகங்களையும் அரபிக்கடல் துறைமுகங்களையும் தவிர்த்து நேரடியாகச் சேரநாட்டை (பழந் தமிழகம்) அடையமுடிந்தது.

பட்டண அகழ்வாய்வு மேற்கொள்வதில் என்னென்ன இக்கட்டுகள் இருந்தன?

பட்டணத்தில் உள்ள நூறு குறுக்கம் (acre) தொல்லியல் மேட்டில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான (<1%) பகுதியே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. தொல்லியல்சார் அறிவியல்களுக்கான தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவன’’த்திற்கு மேலும் அகழ்வாய்வு செய்ய 2019 முதல் இசைவு மறுக்கப்பட்டது. 2022இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI) அகழ்வாய்வு இசைவை நிறுத்தி ஆணையிட்ட போது, தில்லி உயர் நயன்மன்றம் அந்த ஆணையைச் செல்லாததாக்கி எங்கள் அகழ்வாய்வு உரிமையை மீட்டளித்தது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் நயன்மன்றத்திற்கு அவர்கள் கூறியவாறு நடப்போம் என்று உறுதியளித்தது. ஆனால், மறுபடியும் அகழ்வாய்வுக்கு இசைவளிக்க மறுத்துவிட்டது. மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முன்பாக, நாங்கள் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதினோம். இத்தகைய தடைகள், முன்னணிப் பல்பலைக் கழகங்களுடனும் பல்துறை வல்லுநர்களுடனும் மேற்கொண்டு வந்த பல பத்தாண்டுக் கால பன்னாட்டு ஒத்துழைப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். எப்படி இருந்த போதும், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.இசுதாலின், தமிழ்நாட்டிற்கு வெளியே அவர்கள் முறைப்படி ஆய்வுசெய்ய விரும்பும் நான்கு இடங்களில் இந்தியத் தொல்லியல்


 ஆய்வகத்துடனும், ‘தொல்லியல்சார் அறிவியல்களுக்கான தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவனத்துடனும் உடனிணைந்து அறிவியல் முறைப்படி ஆய்வு செய்ய விரும்பும் ஓரிடம் முசிறி என்று அறிவித்ததில் நாங்கள் ஊக்கமடைந்து இருக்கிறோம்.

முசிறியிலிருந்து ஏற்றுமதியான முதன்மையான பொருள்கள் என்னென்ன?

பட்டணத்தில், நாங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான அடையாளக் குறிப்புகளை வழங்கும் 39 வகையான பொருட்களைக் கண்டறிந்தோம், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் மூலிகைச் செடிகள், கறிச்சரக்குப் பொருட்கள், யானை மருப்பு, சந்தனமரம், தேக்குமரம், சுராலை (சாம்பிராணி), யானைகள், குரங்குகள், செல்ல வளர்ப்புயிரிகள், ஆமையின் ஓடு ஆகியவை அடங்கியிருந்தன. மற்ற குறிப்பிடத்தக்க ஏற்றுமதிப் பொருள்களில் பெரும்பாலும் பருத்தி, பட்டு (சீனாவிலிருந்து வந்தது), முத்து (சிறிலங்காவிலிருந்து வந்தது), அரிசி, தேங்காய், சேரநாட்டின் மழைக்காடுகளில் செழிப்பாக விளையும் பழவகைகள் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட மது ஆகியவை அடங்கியிருந்தன.

மாழை(உலோக)த் தொழில் அக்காலத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உரோமன் (நண்ணிலக் கடல்) இரு கைப்பிடியுள்ள கலன் சிதறல்கள் இந்தியப்பெருங்கடல் பகுதியில் உள்ள இடங்களில் இதுவரை ஆவணப் படுத்தப்பட்டவைகளில் மிகப்பெரியவை.  சாராயமும் தேறலும் பண்டைய உலகில் உடல்வளத்திற்கான குடிவகைகளாகக் கருதப்பட்டதால், பெருமளவில் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.

இந்தப் பொருள்களின் அளவும் மதிப்பும் முசிறி ஓலைச்சுவடி போலும் ஆவணங்களில் உள்ளன. அதைப் போன்றே அலெக்குசாந்திரியாவுக்கும் இறுதியாக உரோமப் பேரரசிற்கும் இட்டுச்செல்லும் செங்கடல் துறைமுகமான வெரெணிகேவிற்கும் நீல(நைல்)ஆற்றுத் துறைமுகமான கோபதோசிற்கும் இடையிலான பதினான்கு வாணிக நிலையங்களின் வலைப்பின்னலாலும் வலியுறுத்தப்படுகின்றன. இந்தத் தளங்களை அகழ்வாய்வு செய்வதால், கிரேக்க உரோமன் காலத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட பொருள்களைப் பற்றியும் பரோனிக்குக் காலத்தில் பரிமாறப்பட்ட பொருள்களைப் பற்றியும் கூட ஒருவேளை தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும்.

சீசரின் மாந்தத்தலை-விலங்குரு (sphinx), தொமித்தியன் (உரோமின் மிகத் தீங்கான பேரரசன்) தலை பற்றிய செய்தி என்ன?


தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவன2020 அகழ்வாய்வின்போது ஒரு கிரேக்க மாந்தத்தலை-விலங்குருவும் உரோமப் பேரரசன் தொமித்தியனின் தலையைச் சித்திரிக்கும் பழமையான பொருளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த மாந்தத்தலை- விலங்குரு பேரரசர் அகசுதசுடன் தொடர்புடையது, அவர் அதன் படமுடைய ஒரு மோதிரத்தை அணிந்திருந்தார். இதே போன்ற ஒரு செதுக்கப்பட்ட மாந்தத்தலை- விலங்குரு பட்டணத்தில் கண்டெடுக்கப் பட்டது, இத்தாலிய ஆய்வாளர் சூலியோ உரோக்கோ, அகசுதசு சீசர் அணிந்த மாந்தத்தலை-விலங்குருவுடன் இது ஒத்திருப்பதை உறுதி செய்துள்ளார். தொமித்தியனின் நினைவுகளும் சிலைகளும் உரோம ஆளவையால் அழிக்கப்பட்டதோடு அவர் தலை துண்டிக்கப்பட்டு கொடுமையான வல்லாட்சியரென முத்திரையிடப்பட்டார். பட்டணத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை அண்மையில் புகழ்மிக்க செருமன் தொல்லியலரும் கலை வரலாற்றாளருமான மாரியன் பெருக்குமான் அவர்களால் முறையாக உறுதிப்படுத்தப் பட்டது.

கீழடி கண்டுபிடிப்புகள் பட்டணத்தின் முகன்மைத் தன்மையை அதிகப்படுத்தியுள்ளனவா?

கீழடியும் பட்டணமும் ஒரே காலக்கட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க வகையில் ஒன்றுக்கொன்று பொருந்துகிற கழகக்(சங்க) காலத்தின் மேம்பட்ட உலகளாவிய பண்பாட்டை வெளிப்படுத்தும் இடங்களாகும். அவற்றின் உலகப்பார்வையும் உறவுகளும் அன்பு’, ‘உண்மை’, ‘பற்று’, ‘பகுத்தறிவுஎன்ற பண்பாண்மைகளால் ஆழமாக வடிவமைக்கப் பட்டுள்ளனவாகத் தெரிகின்றன. பேரியாறு வையையாற்றுக் கட்டமைப்பின் ஊடாகக் கடந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குறிஞ்சி நிலப்பகுதிகளில் பரந்து விரிந்து மேற்குக் கடற்கரையில் முசிறியையும் கிழக்குக் கடற்கரையில் அழகன்குளத்தையும் ஒரு வாணிக வழி இணைத்திருக்கக்கூடும். இந்தப் பண்டைய வாணிக வழியில் கீழடி ஒரு முகன்மையான நகர மையமாகச் செயல்பட்டது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் அணுகுமுறை எந்த மாநிலமும் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கழகக்காலத் தளங்கள் பல உள்ளன, ஆனால் இதுவரை கேரளாவில் பட்டணம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட தளமாக உள்ளது. தமிழ்நாடு தன்னுடைய உரிய மதிப்பைப் பெறும்வகை அதை உறுதிப்படுத்த வேண்டும்.

                                        (புதுவை நற்றமிழ் இதழில் வந்தது)

===============================================