அதிர்ச்சியளித்த தமிழரிமாவின் இறப்பு!
புதுச்சேரித் தனித்தமிழ்க் கழகத்தின் செயலாளர்
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அரிமாப்பாண்டியன் ஐயா, இடஒதுக்கீட்டுப் போராளி ஆனைமுத்து ஐயாவின் மகள்
அரி.தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு அரங்கசாமி
அவர்களின் துணைத் தனிச்செயலராக இருந்த த.அ.தமிழரிமா அவர்கள் தி.பி 2055 நளி 30ஆம் நாள் (15-12-2024)
ஞாயிற்றுக்கிழமை சாலை நேர்ச்சியில் காலமானார்.
எதிர்பாராத இந்நிகழ்வு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி
மீத்துயரில் ஆழ்த்தியது.
இளங்காளையான மகனை இழந்த அரிமாப்பாண்டியன் ஐயாவுக்கும்
தமிழ்ச்செல்வி அம்மாவுக்கும் இன்னும் இளம் அகவையில் கணவரை இழந்திருக்கும் சுபாசினி
அவர்களுக்கும் மகன் தமிழாதனுக்கும் யார் எப்படிச் சொல்லி ஆறுதல் அளிப்பதென்று
தெரியாமல் கலங்குகிறோம்.
29-12-2024 அன்று தமிழரிமாவின் படத்திறப்பு மலர்வணக்கம் நிகழ்வு
நடைபெற்றது. புதுவை முதல்வர் தமிழரிமாவின் படத்தைத் திறந்துவைத்தார்.
என்னசொல்லித் தேற்றுவோம்
எவ்வகையில் தாய்தந்தை
அன்புத் துணைவியொடு ஆதனுக்கும் – முன்னின்றே
ஆறாத் துயராற்ற ஆகும்? தமிழரிமா
கூறாமல் சென்றாயே கூறு.
- த.ந.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மைக் கடை
- குறள்
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை;- இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
- நாலடியார்
(புதுவை நற்றமிழ் இதழில் வந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக