தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் அருந்தமிழ்த் தொண்டு!
சொக்கநாதர் என்பார், நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராகப் பணியாற்றிவந்தார். அவர் மனைவி சின்னம்மையாருடன் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில் குடியிருந்து வந்தார். திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லாமலிருந்து, 1876ஆம் ஆண்டு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. திருக்கழுக்குன்றம் கோயிலில் உள்ள சிவன் வேதாசலத்தை வேண்டி நோன்பிருந்ததால்தான் குழந்தை பிறந்ததாக நம்பிய அவர்கள், தம் குழந்தைக்கு வேதாசலம் என்றே பெயரிட்டனர்.
வேதாசலம் வளர்ந்து, தம் நாற்பதாம் அகவையில், 1916இல், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்துத் தம் பெயரையும் மறைமலை என்று மாற்றிக்கொண்டார். வேதாசலம் என்ற வடமொழிச்சொல் வேதம்+அசலம் எனப் பிரியும். வேதம் எனும் வடசொல்லிற்குத் தமிழ், மறை என்பதாகும். அசலம் என்ற வடசொல்லிற்குத் தமிழ், மலை என்பதாகும். எனவே வேதாசலம் மறைமலை ஆனார்.
வேதாசலம் நாகையில் ஒரு கிறித்துவப் பள்ளியில் நான்காம் படிவம்வரை படித்தார். தந்தையாரின் மறைவு காரணமாகப் பள்ளிப்படிப்பை அவரால் தொடரமுடியவில்லை. நாகையில் புத்தகக்கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிக்க நாராயணசாமிப்பிள்ளை என்பார் புத்தக விற்பனை செய்ததுடன், தமிழ்கற்பிக்கும் பணியும் செய்துவந்தார். மனோன்மணியம் சுந்தரனார் இவரிடம் தமிழ் பயின்றவராவார். வேதாசலம், நாராயணசாமியாரிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும், தருக்க நூல்களையும் முறையாகக் கற்றுச் சிறந்த தமிழறிவு பெற்றார். பிறகு சூளை சோமசுந்தர நாயகரிடம் சிவனியக் கொண்முடிபு (சைவ சித்தாந்தம்) கற்றார். தம் 21ஆம் அகவைக்குள் தொல்காப்பியம், கழக இலக்கியப் பாடல்கள், சிவனியக் கொண்முடிபு நூல்கள் முதலியவற்றை மனப்பாடமாகக் கற்றிருந்தார். பின்னர்த் தம் தாய் சின்னம்மையார் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று இளம் அகவையிலேயே மிகச்சிறந்த கல்விமானாக விளங்கினார். தம்முடைய தனி முயற்சியில் படித்து ஆங்கிலத்திலும் வடமொழியிலும் புலமை உடையவரானார்.
தமிழாசிரியர் ஆகவேண்டும் என்ற விருப்பத்தில் அதற்கான தேர்வுகளை எழுதி வெற்றிபெற்ற வேதாசலம், சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழாசிரியர் பணிக்கு இவருடைய திறமையை ஆய்வுசெய்தவர், பரிதிமாற் கலைஞராவார். இவர்கள் இருவரும் இக்கல்லூரியில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றினார்கள். பின்னர் இவர்கள் இருவரும் தனித்தமிழ் இயக்கத்திலும் முனைப்புடன் செயல்பட்டனர்.
சிவனியம் பற்றிய கட்டுரைகளைப் பல இதழ்களில் முன்னரே எழுதியிருந்த வேதாசலம், தனியாக இதழ் தொடங்க விரும்பி 1902ஆம் ஆண்டு ’ஞானசாகரம்’ எனும் இதழைத் தொடங்கினார், 1905-ல் ‘சைவ சித்தாந்த மகாசமாசம்’ அமைப்பைத் தொடங்கினார். பின்னர் 1912ஆம் ஆண்டு வள்ளலாரின் வழியில் சென்னைப் பல்லாவரத்தில் ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ தொடங்கினார்.
வேதாசலத்துக்குச் சமற்கிருதத்தின் மீதோ ஆங்கிலத்தின் மீதோ வேறு எந்த அயல்மொழியின் மீதோ வெறுப்புணர்வு கிடையாது. 1916-ஆம் ஆண்டு வேதாசலம் தம்வீட்டுத் தோட்டத்தில் தம் மகள் நீலாம்பிகையாருடன் உலாவிக் கொண்டு இருந்தார். அப்போது, ‘திருவருட்பா’ பாடலாகிய
“பெற்றதாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறு தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.” - என்ற பாட்டைப் பாடினார்.
பிறகு தம் மகளிடம் “இப்பாட்டில்உள்ள ‘தேகம்’ என்னும் வடசொல்லை நீக்கி அவ்விடத்தில் யாக்கை என்ற தமிழ்ச்சொல் இருக்குமானால் செய்யுளின் ஓசையின்பம் இன்னும் இனிமையாக இருக்கும்” என்றார். மேலும், பிறமொழிச் சொற்கள் வழங்கி வருவதால் தமிழ்ச் சொற்கள் மறைந்து விடுகின்றன” என்றார். உடனே நீலாம்பிகையார் தந்தையிடம், நாம் இனி அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும், எழுதுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வத்துடன் கூறினார். இந்நிகழ்வே தனித்தமிழ் இயக்கம் தோன்ற அடித்தளமிட்டது. தனித்தமிழ் இயக்கம் 1916-இல் தோற்றம் பெற்றது.
வேதாசலம் தம் பெயரை, மறைமலை என்று மாற்றிக்கொண்டார். தம் பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப் பெயர்களைத், திருஞானசம்பந்தம் - அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் - மணிமொழி, சுந்தரமூர்த்தி - அழகுரு, திரிபுரசுந்தரி – முந்நகரழகி எனத் தமிழாக்கினார். “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்“, “பொதுநிலைக் கழகம்“ எனப் பெயர் மாற்றம் பெற்றது. தாம் நடத்திய ‘ஞானசாகரம்’ இதழின் பெயரை ‘அறிவுக்கடல்’ என மாற்றினார். சுவாமி வேதாசலம் என்று குறிப்பிட்டவர்கள் மறைமலையடிகள் என்று குறிப்பிடத் தொடங்கினர்.
இவ் வகையிலான அடிகளாரின் செயற்பாடு, திராவிட இயக்கத்தவர் பலர் தம் பெயரைத் தூய தமிழ்ப்பெயராக மாற்றிக்கொள்ள உணர்வூட்டி வழிகாட்டியது. இதன்பிறகுதான் பெரும்பாலான அயற்சொற்கள் தமிழ்ச் சொற்களாக மாற்றப்பட்டு வழக்கிற்கு வந்தன. அடிகளார் வழிகாட்டுதலில் நீலாம்பிகையார் ‘வடசொல்-தமிழ் அகரவரிசை‘ எனும் நூலை எழுதி வெளியிட்டார். தனித்தமிழ் குறித்த அடிகளாரின் சொற்பொழிவுகள், தமிழக மேடைப் பேச்சாளர்களை நல்ல தமிழில் பேசவைத்தன. அடிகளின் தூயதமிழ் எழுத்துகள், தூயதமிழ் எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தன.
சமற்கிருதம் என்னும் சங்கதம் நீக்கிய தனித்தமிழ்த் திருமணங்களைத் தம் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் அடிகளாரே செய்துவைத்தார். தமிழர்களுக்கெனத் தனி ஆண்டுமுறையாகத் திருவள்ளுவர் ஆண்டைத் தமிழறிஞர்களுடன் கூடி ஆராய்ந்து அறிவித்தார். திருவள்ளுவராண்டுக் கி.மு.31ஐத் தொடக்கமாகக் கொண்டதாகும். இவ்வாண்டு முறையைத் தமிழ் உணர்வாளர் அனைவரும் ஏற்றுப்போற்றினர். தமிழ்நாட்டரசும் 2009இலிருந்து இவ்வாண்டு முறையைப் பின்பற்றியது.
மறைமலையடிகள், சிவனியத் தொண்டோடு சாதிபற்றி ஆய்வு செய்திருக்கின்றார். குமுகாய சீர்திருத்தங்கள் சிலவற்றை முயன்று மேற்கொண்டிருக்கின்றார். எல்லாக் குலத்தவரையும் சமமாக நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்குச் சமஉரிமை தரவேண்டும். கைம்பெண்கள் தாலியறுத்தல், மொட்டையடித்தல், பட்டினிப்போடல் முதலியவற்றை நிறுத்தவேண்டும். ஆண்களுக்கு 25 அகவையும் பெண்களுக்கு 20 அகவையும் ஆகுமுன் திருமணம் செய்யக்கூடாது. மணக்கொடை (சீதனம்) அறவே கூடாது. கலப்புமணத்தையும் காதல் மணத்தையும் வரவேற்க வேண்டும். சிறுவர் மணத்தை முழுதும் தவிர்க்கவேண்டும் என்றார். வள்ளலார் போன்றே, தேவையற்ற மதச்சடங்குகளை தவிர்க்க வேண்டுமென்றார். ஒளி வழிபாட்டை ஏற்றார்.
மறைமலையடிகள், சிறந்த மொழியாசிரியர், இதழாசிரியர், எழுத்தாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், மருத்துவர் என்ற பல்வேறு நிலைகளில் ஈடுபட்டிருக்கின்றார். ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் 56க்கும்மேல் எழுதியிருக்கின்றார். ஆங்கில இதழ்கள் இரண்டை நடத்தியிருக்கின்றார். புதினம், நாடகம், பாடல், வரலாறு எனப் பலவகை நூல்களையும் எழுதியுள்ளார். நூல்கள் நான்காயிரத்திற்கும் மேல் தொகுத்து ‘மணிமொழி நூல்நிலையம்’ அமைத்திருந்தார். இப்பொழுது, கன்னிமாரா நூலகத்தில் ஒருபகுதியாக அஃது இயங்குகிறது.
அடிகளாரின் தொண்டுவாழ்க்கை முகன்மையாக மூன்று பிரிவுகளைக் கொண்டது என்று கூறலாம். ஒன்று, தமிழ்த்தொண்டு வாழ்க்கை, இரண்டாவது, சிவனியச் சமயத்தொண்டு வாழ்க்கை. மூன்றாவது ஆங்கில நூலாக்கம், தமிழாக்கம் தொடர்பான தொண்டு ஆகியவையாகும். இம்மூன்று நிலைகளில், அடிகளின் சமயத் தொண்டு வாழ்க்கைபற்றி அவர்காலத்திற்குப் பின் சிவனியஞ் சார்ந்தவர்களாலேயே பெரிதாகப் பேசப்படவில்லை. அவருடைய ஆங்கில நூல்களில் இந்தி எதிர்ப்பு, தமிழ்த்திருமணம் தமிழ்ப்பாவலர் குறித்தவை மட்டுமே தமிழறிஞர்களால் எப்போதாவது குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்த நூல்களும்கூட சிறப்பாகக் குறிப்பிடப்படுவதில்லை. எனவே, அடிகளாரின் தொண்டுநிலைகளில் தலைசிறந்ததாக அவருடைய தமிழ்த்தொண்டே முன்நிற்கிறது. மறைமலையடிகள் என்றால் தனித் தமிழ்த்தந்தை என்ற தகுதியே வரலாற்றில் நிலைத்துவிட்டது.
அடிகளின் தனித்தமிழ்த்தொண்டு பற்றி அறிய முதலில் தனித்தமிழ் பற்றிய சில செய்திகளைத் தெரிந்துகொள்வது தேவையாகும். தனித்தமிழ் என்றால் அயல்மொழிச் சொற்களை நீக்கிய கலப்பில்லாத தமிழ் என்றே பொருளாகும். ‘தமிழென ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிருமொழி யில்லை; தமிழது தானே தனித் தமிழாகும் தவிர்த்திடின் பிறசொல்லை’ என்று பாவாணர் பாட்டில் குறிப்பிடுவார்.
சரி, தனித்தமிழ் அல்லது தூயதமிழின் தேவை என்ன? அயற்சொற்களை ஏன் கலக்கக்கூடாது?
1. வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ் பன்மொழிக் கலவையாக மாறுகிறது; தமிழ்ச்சொற்கள் வழக்கிழந்து மறைந்து போகின்ற கெடுதல் நேர்கிறது.
2. அயற்சொற் கலப்பு தமிழ்ப் பண்பாடு, கலை, நாகரிகத்தின் மீது வல்லாண்மை செலுத்துகிறது.
3. அயற்சொல் கலப்பு, தமிழின் இயல்பைக் கெடுக்கிறது. தமிழின் இனிமையையும் அழகையும் குறைக்கிறது; தமிழின் வளர்ச்சியைக் குன்றச் செய்கின்றது.
4. கலப்புநிலை தொடரும்போது, காலப்போக்கில், தமிழர் அடையாளமற்றவர்களாக, வரலாறற்ற மக்களாக மாறும் கேட்டிற்கு வழி செய்கிறது. எப்படி? சேரநாட்டுத் தமிழ்மக்கள் பேசிய தமிழில் சங்கதம் என்ற சமற்கிருத மொழி அளவுகடந்து கலந்ததால், அப்பகுதியில் வழங்கிய தமிழ், மலையாளமாக மாறிவிட்டது. அம்மக்கள் மலையாளிகளாகி விட்டனர். அதனினுங் கொடுமை, அவர்கள் தமிழர்களிடம் இப்போது பகையுணர்வு பாராட்டுகிறார்கள். தமிழர்களாகிய நாம், சேரநாட்டையும் இழந்தோம்; சேரநாட்டுத் தமிழ்மக்களையும் இழந்தோம்.
5. “இன்னொரு மொழியின் சிறந்த நூல்களையும் கருத்துகளையும் தமிழில் பெயர்த்துக்கொள்ளுதல் நல்லதும் தேவையும் ஆகும். ஆனால் அயல்மொழிச் சொற்களைக் கலப்பது தமிழை அழித்துவிடும் நிலையாகும்“ என்று மறைமலையடிகள் விளக்குவார். எனவே, தமிழைக் காக்கின்றமுயற்சியே, தமிழ்க் காப்புணர்வே தனித்தமிழ் இயக்கம் அல்லது தூயதமிழ் முயற்சி தோன்றக் காரணமாகும்.
சரி, உலகத்தில் தமிழர்கள் மட்டும்தானா இவ்வாறு அயற்சொற் கலப்பை எதிர்க்கிறார்கள்? மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்கள்?
1. ஆங்கில வரலாற்று ஆசிரியர் பிரீமன், ஆங்கிலத்தில் பிரெஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் கலந்து பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதால், அம்மொழிகள் கலப்பற்ற தூய ஆங்கிலம் எழுத வேண்டுமென்றார். “தூய ஆங்கிலக் கழகம்“ (Society for pure
English) என்ற அமைப்பு 1918 முதல் இயங்கி வருகின்றது.
2. பிரெஞ்சு மொழியில் பிறமொழிச் சொற்களை நீக்குவதற்காக பிரான்சின் தலைவராயிருந்த சார்லசு திகால் என்பார் பல சட்டங்களை இயற்றினார்.
3. செருமானியர் மொழிச் சீர்திருத்தம் செய்து பல அயற்சொற்களை விலக்கினர்.
4. புரட்சியாளர் இலெனின், ‘உருசிய மொழியைக் கெடுப்பதை நிறுத்துங்கள், பிறசொற் கலப்பை எதிர்த்துப் போரிடுங்கள்’ என்று அறிக்கை வெளியிட்டவராவார்.
5. துருக்கியின் வல்லாட்சியர் அத்தாதுர்க்கு என்ற கமால்பாச்சா துருக்கி மொழியிலிருந்து இருபதாயிரம் அரபி, பாரசீகச் சொற்களை நீக்கிவிட்டு 1,58,000 தூய துருக்கிச் சொற்களை உருவாக்கச் செய்தார்.
6. சீனமொழி தூயதாக்கப்பட்ட பிறகு, மாண்டரின் எனப்பட்டது. தூய சீனமொழியையே பேசவேண்டுமென்று பொதுவுடைமை அரசு கட்டளையிட்டது.
பிரெஞ்சு, சீனம், உருசிய மொழிகளில் அயற்சொற்கலப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்றது.
7. இங்கே, இந்தியாவில் தூயகன்னட இயக்கம் திருள் கன்னடம் என்றும் அச்சகன்னடம் என்றும் வழங்கப்பட்டது. அச்சதெலுங்கு இயக்கம் தூய தெலுங்கில் இலக்கியங்களைப் படைத்தது. பச்ச மலையாளம் என்ற பெயரில் தனி மலையாளம் வழங்கப்படுகிறது.
“இயற்கை மொழியாகிய தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலப்பது எல்லா உடல் உறுப்புகளும் சரியாக அமைந்த அழகியதோர் உடம்பிலுள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு மண்ணாலும் மரத்தாலும் அந்த உறுப்புகளைப் போல் செயற்கையாகச் செய்து அவற்றை அந்த உடம்பில் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கின்றது” என்று மறைமலையடிகள் கூறுகிறார்.
அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத் தோற்றத்திற்கு முன்னரே, 1856இல் இராபர்ட்டு கால்டுவெல் என்னும் அறிஞர், தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்தியங்க வல்லது என்றும் தமிழ் வடமொழியின் கலப்பை எந்தஅளவு நீக்குகிறதோ அந்த அளவுக்குத் தூய்மையுடன் சிறந்து விளங்கும் என்றும் ‘தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவருடைய நூலில் கூறியிருந்தார். அவ்வாறு கூறியிருந்ததுடன், ‘எதற்கும் பார்ப்பனமூலங் கற்பிக்கும் தன்மை வடமொழிப் பண்டிதர்களின் இயல்பு’ என்றும்கூட அவர் எழுதியிருந்தார். 1905ஆம் ஆண்டில், பாண்டித்துரைத்தேவர் தோற்றுவித்த நான்காம் தமிழ்க்கழக விழாவில், மறைமலையடிகள் சொற்பொழிவாற்றும் பொழுதே தனித்தமிழ் இயக்கக் கருத்துகளை வெளியிட்டிருந்தார். அங்கு இருந்த பாண்டித்துரைத் தேவரின் அரசவைப்புலவர் இரா. இராகவ ஐயங்காருக்கு அடிகளாரின் கருத்துகள் அறவே பிடிக்கவில்லை என்ற செய்தி பதிவாகி இருக்கின்றது.
தனித்தமிழில் பேசுவோரையும் எழுதுவோரையும் இப்பொழுதும் கூட எள்ளல், பகடி செய்கின்ற கூட்டம் கற்றாரிடையே இருக்கின்ற நிலையில், 108 ஆண்டுகளுக்கு முன்னால் அடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கையை எப்படியெல்லாம் எள்ளல் செய்திருப்பார்கள்! பலருக்கும் தெரிந்த மூன்று செய்திகள்: மொழிஞாயிறு பாவாணர், ‘காபி’ என்ற ஆங்கிலச்சொல்லின் மூலம்அறிந்து அறிவியற்படி அதற்குப் பொருத்தமாகக் ‘குளம்பி’ என்று தமிழில் பெயர்த்திருந்தார். அதை எதிர்க்கக் கிளம்பிய கிறுக்கர்கள், குளம்பி என மொழிபெயர்த்ததைக் ‘குழம்பி’ எனப் பெயர்த்ததாகச் சொல்லியும் எழுதியும் எள்ளி நகையாடி மகிழ்ந்து கொண்டனர். ஆனால், புதுவையில் ‘சவகர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி நிறுவன’ மருத்துவமனை என்னும் ‘சிப்மர்’ மருத்துவமனை எதிரில் ‘குளம்பியகம்‘ என்ற பெயரில் ஒரு கடையே இருந்தது; இப்பொழுதும் உள்ளதா என்று தெரியவில்லை.
அதே உணர்வுடன் அவர்களில் சிலர், ‘டிரங்க் கால்’ என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு ‘முண்டக்கூவி’என்றொரு பொருந்தாத மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டு, தனித்தமிழ் இயக்கத்தார் அப்படி மொழிபெயர்த்ததாகப் பொய்யுரைத்து முக்கிமுக்கிச் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்! நாம், ஐயா, ‘டிரங்க் கால்’ என்றால் முண்டக்கூவி இல்லை ‘தொலை அழைப்பு’ என்றோம். உடனே, மொழிவெறி என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்!
ஒருமுறை, அவ்வகையினர், ‘மைனர் இர்ரிகேசன்’ என்பதைச் ‘சிறுநீர்ப் பாசனம்’ என்று மொழிபெயர்த்துக்கொண்டு சிரிப்பாய்ச் சிரித்தார்கள்! நாம், - ஐயா, ‘மைனர் இர்ரிகேசன்’ என்றால் சிறுநீர்ப்பாசனமில்லை, ‘சிறுபாசனம்’ என்றோம். வழக்கம்போல் மொழிவெறி என முணுமுணுத்தார்கள்!
தனித்தமிழை வலியுறுத்திய மறைமலையார் பலவகையான எதிர்ப்புகளை நேர்கொண்டார். தமிழைத் தமிழாக இருக்கவிடுங்கள் என்று அடிகளார் வலியுறுத்தியதை நகையாடி எதிர்த்தவர் பலர். அவருள் சிலர் “இது கலிகாலக் கொடுமை” என்று இகழ்ச்சியாகப் பேசினர். அவர்களுக்கெல்லாம் அடிகளார் சிரித்தவாறே விடை கூறினார். ‘நம் தமிழ்த்தாயைப் பிறமொழிச்சொற்கள் என்னும் கோடரியினால் வெட்டிச்சாய்க்க முயல்வதுதான் கலிகாலக் கொடுமை! இத் தீவினையைத் தடுத்துத் தமிழைப்பாதுகாக்க முன்நிற்கும் எம் போல்வாரது நல்வினைச்செயல் ஒருகாலும் கலிகாலக்கொடுமை ஆகாது’ என்றார். இன்னும் சிலர், ‘மொழியை என் விருப்பத்துக்குப் பேசுவது என் உரிமை. வேற்றுமொழிச்சொற்கள் கலந்தும் பேசுவேன், இருக்கின்ற சொற்களைத் திரித்தும் பேசுவேன்’ என்று கூறினர். இப்போதும் சிலர் அவ்வாறு கூறுவதைக் கேட்கிறோம். அவர்களுக்கும் அடிகளார் மறுமொழி தந்தார். ‘ஒவ்வொருவரும் அவர் விருப்பத்துக்கு மொழியில் கலப்படம் செய்தும் திரித்தும் பேசினால், அவர்களுக்குள்ளேயே தொடர்பு அறுந்து போகும். ஓவ்வொரு சிறு கூட்டத்திற்கும் ஒவ்வொரு மொழி தோன்றும். காலந்தோறும் ஒவ்வொரு புதுமொழி உருவாகி அந்த மக்களை ஒன்றுசேரவிடாமல் பிரித்துவிடும்’ என்று விளக்கினார்.
சில புலமையாளர்கள், தனித்தமிழ் என்பதை, தனித்து + அமிழ் என்று பிரித்துக்காட்டித் தனியே அமிழ்ந்துபோ, மூழ்கிப்போ என்று பொருள்கூறிக் கிண்டல் செய்தனர். வேறுசிலர், வடசொற் கலவாமல் ஒரு நூலையேனும் தமிழில் எழுதமுடியுமா? என அறைகூவலிட்டனர். ஒரு சிறுகதை எழுத்தாளர் கூட ‘என்ன செய்தாலும் இந்தத் தனித்தமிழால் ஒன்றைமட்டும் செய்ய முடியாது. இலக்கியம் படைக்கவே முடியாது’ என்று செருக்கிக்கூறினார். இரங்கத்தக்க அவருக்குப் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எங்கே தெரிந்திருக்கப் போகின்றது? பாவாணர் முதலான மொழி ஆய்வறிஞர்கள் எழுதிய நூல்களை எங்கே படித்திருக்கப் போகின்றார்? தனித்தமிழ்ச் செழுமைமிக்க ஈடற்ற இலக்கியங்களை இருபதாம் நூற்றாண்டில் இயற்றித் தந்த தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரைத் தெரிந்திருந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவருடைய நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப் பட்டிருக்கின்றன. நம் பெருமதிப்பிற்குரிய ஐயா ம.இலெ.தங்கப்பா எழுதிய தூயதமிழ் நூல்களுக்கு, இந்திய இலக்கிய அமைப்பு (சாகித்திய அகாதமி) இரண்டுமுறை பரிசளித்திருக்கின்றது. இன்னும் இலக்குவனார், வ.சுப.மாணிக்கனார், தமிழண்ணல், இரா. இளங் குமரனார், அருளியார், இரா.இளவரசு, தமிழ்க்குடிமகன், இறைக்குருவனார், தி.நா. அறிவொளி, மா. பூங்குன்றன், கு. அரசேந்திரன், மா. பொழிலன், முதலானோர் பலர் எழுதியுள்ள தூயதமிழ் நூல்கள் எண்ணற்றவை அவர்களுக்கு விடைகூறுவனவாக உள்ளன.
1933 திசம்பரில் “சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தார்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ‘தமிழ் அன்பர் மாநாடு’ என்ற மாநாடு ஒன்று நடக்கவிருந்தது. அந்த மாநாட்டின் தலைவர் கே.வி.கிருட்டினசாமி ஐயர், பொருளாளர் இராமசாமி ஐயர், வரவேற்புக்குழுத் தலைவர் உ.வே.சாமிநாத ஐயர், பிற பொறுப்பாளர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! அம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கே.வி.கிருட்டினசாமி ஐயர் மறைமலையடிகளார்க்குக் கடிதமும் அழைப்பும் விடுத்தார்; தொலைவரி ஒன்றும் அனுப்பினார். அதற்கு அடிகளார் எழுதிய விடைமடல் வரலாற்றுச் சிறப்பிற்குரியதாகும். அம் மடலில், “கடிதங்கள், அழைப்புகள், தொலைவரி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும் உ.வே.சாமிநாதையர் அவர்களுக்கும் நன்றி! தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க்கூட்டத்திலும் கலந்து கொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். பண்பட்ட பழையமொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ்சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிறமொழிக்கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும் அதன் வளர்ச்சியினைக் குன்றச் செய்யுமென்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக!” என்று எழுதியிருந்தார்.
தமிழில் வடசொற்கலப்பு தொடங்கி, ஊர்ப்பெயர், கடவுளர் பெயர், மலை, ஆறு முதலியவற்றின் பெயர்களை எல்லாம் வடமொழிச் சொற்களாக மாற்றிவிட்டனர். கண்டமண்டலமாகத் தமிழில் கலந்திருந்த சங்கதச் சொற்கள், தமிழ்ச்சொற்களை வழக்கு ஒழித்திருந்தன. அவற்றை மீட்டெடுக்க எப்படி எல்லாம் போராடினார்கள் என்பதை அறியவேண்டும். குறிப்பாக இரண்டு எடுத்துக்காட்டுகள்: 1942ஆம் ஆண்டிற்கு முன்னால், அரசு அலுவலகங்களிலும் பிற இடங்களிலும் தமிழர்கள் பெயருக்கு முன்னால் பெயரடையாக மகாராச ராசசிறீ என்று எழுதிவந்தனர். 1942இல் அரசின் பொதுப்பணித்துறை, மகாராச ராசசிறீ நீளமாக உள்ளது; சிறீ என்று மட்டும் இருந்தால் போதும் என்று ஆணை பிறப்பித்தது. அப்போது, “தென்னிந்திய நலஉரிமைச் சங்கம்“ என்ற அமைப்பும் மறைமலையடிகள் வழியினரும் ‘சிறீ’யை நீக்கிவிட்டு அவ்விடத்தில் ‘திரு’வைப் பயன்படுத்த வேண்டுமெனக் கோரினர். பொதுப்பணித்துறை 7-3-1942இல் ஓர்அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், பொதுமக்கள் சிறீ, திரு இரண்டில் எதைப் பயன்படுத்தவேண்டும் என்ற தங்கள் கருத்தை 15-4-1942க்குள் எழுதி விடுக்குமாறு கேட்டிருந்தது. ‘திரு’ பயன்படுத்தக்கூடாது ‘சிரீ’யே வேண்டுமென இரா. இராகவையங்கார், உ.வே.சாமிநாதையர் முதலானோர் சுதேசமித்திரன் இதழில் எழுதினர். ‘திரு’ என்பதே தொன்றுதொட்ட வழக்கு எனச் சான்றுகளோடு விளக்கமாக நாவலர் சோமசுந்தர பாரதியாரும் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் எழுதினர். பாவேந்தரும் திருவை எதிர்ப்பவர்களைக் கண்டித்துப்
பாட்டெழுதினார். முடிவாகத், ‘திரு’ என்ற சொல்லே பயன்படுத்த வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இன்னொரு செய்தி, காரைக்குடிப் பகுதியில், காரைக்குடி சாமி, இராம.சுப்பையா முதலானோர் நடுத்தெருவில் நின்றுகொண்டு, போவோர் வருவோர்க்கெல்லாம் ‘வணக்கம் ஐயா, வணக்கம் அம்மா’ என்று வலிந்து வணக்கம் சொல்லி வந்தார்களாம்! எதற்காக? நமசுக்காரத்தை விரட்டித் தொலைத்து வணக்கத்தை மீட்டெடுப்பதற்காக!
அண்மைக் காலமாகச் சிலர், தூயதமிழ் இயக்கம் தோல்வியடைந்து விட்டது; அந்த இயக்கம் வெற்றி பெறாது என்றெல்லாம் முகநூலிலும் வெளியிலும் எழுதுகின்றனர். தனித்தமிழ் இயக்க முயற்சி தமிழைக் காக்கும் முயற்சி! வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் அது என்ன மட்டைப்பந்து ஆட்டமா? சடுகுடுப் போட்டியா? ஒவ்வொரு தமிழ்ச்சொல்லை மீட்டெடுக்கும் போதும் தூயதமிழ் இயக்கம் வெற்றி பெறுகின்றது. அயன்மொழிச் சொல் தமிழில் கலக்காமல் தவிர்க்கும் ஒவ்வொரு முறையும் தமிழ் வெற்றி பெறுகிறது. புதியதாகத் தூயதமிழில் ஒருகலைச்சொல் உருவாக்கும்போது தமிழ் வெற்றிபெறுகிறது. இஃதொரு தொடர் முயற்சி! ஒரேநாளில் செய்துமுடித்துவிடும் செயல் இல்லை! நூறாண்டுகளுக்கும் முன்னால் எழுதிய தமிழ் நடையில் இப்போது யாராவது எழுதினால், அவர் பகை உணர்வோடு தமிழில் வேண்டுமென்றே வலிந்து அயற்சொற்களைக் கலந்து எழுதுகிறார் என்று அடையாளம் காணும் அளவிற்கு இன்று தனித்தமிழ் பேணும் முயற்சி முன்னேற்றம் கண்டுள்ளது எனக்கூறலாம். இந்நிலையே நிறைவளிக்கக்கூடியது இல்லை என்பது உண்மை! நமக்கு நன்றாகத் தெரியும், போகவேண்டிய தொலைவு இன்னும் மிகுதியாக உள்ளது. இன்று, சமற்கிருதத்துடன் இந்தி, ஆங்கிலம் முதலிய பல மொழிச் சொற்களும் தமிழில் கலக்கத் தொடங்கிவிட்டன.
அடிகளாரைத் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணி மிகுந்துள்ளது. மறைமலையடிகள், தமிழில் சங்கதக்கலப்பை நீக்கவேண்டுமென்ற தாலும், தூயதமிழே வேண்டும் என்றதாலும். ஆரிய ‘வேத}க் கருத்துகளை எதிர்த்ததாலும், சாதிவேற்றுமையை எதிர்த்ததாலும் மதச் சடங்குகளைத் தேவையில்லை என்றதாலும். இந்தித் திணிப்பை எதிர்த்ததாலும், கலப்பு மணத்தையும் காதல்மணத்தையும் வரவேற்றதாலும், வல்லாண்மைச் சாதியினர் அவரைக் கடுமையாக எதிர்த்தனர்; அவர்பால் வெளிக்காட்டாத பகைகொண்டனர். அதனாலேயே அவரும், அவர்வழியினரும் புறக்கணிக்கப்பட்டனர், இப்போதும் புறக்கணிக்கப் படுகின்றனர். இதழ்களிலும் ஊடகங்களிலும், பிற இடங்களிலும் நீக்கமற இடம்பெற்றுள்ள வல்லாண்மைச்சாதியினர், அடிகளின் முயற்சி அனைத்தையும் வெற்றி பெறாத முயற்சி என்று தூற்றிஎழுதி மகிழ்ந்துகொள்வதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
“தமிழ்ப் பெருங்கடலான மறைமலையடிகளார் தமிழ் மறுமலர்ச்சியின் விடிவெள்ளி; கன்னல் குரல்தனில் பேசிக் கேட்போர்க்
கெல்லாம் காதினிக்கக் கருத்தினிக்க வைத்த செம்மல். சொற்பொழிவுக் கலையில் அந்நாளில் ஒப்பவர் யாருமின்றி உயர்ந்தோங்கி நின்றவர். பழைய பாடல்களுக்குப் புதுமையான பொருள் விளக்கம் அளித்தவர். மேடைத் தமிழ் வளர்ச்சிக்குக் காரணமாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் அடிகளார். தமிழில் பேசவந்த இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்” என்று பலராலும் போற்றப்பட்டார்.
‘மறைமலையடிகளார், தாம் நிகழ்த்த விரும்பும் சொற்பொழிவின் பொருளை நன்கு எண்ணி அதுபற்றிக் கூறவிரும்பும் கருத்துகளை முறைப் படத் தொகுத்தும் வகுத்தும் எழுதிக் கொள்வது வழக்கம். அவையே பின்பு நூல் வடிவில் வெளிவரும்’ என்பார் ஒளவை.சு.துரைசாமியார். “மறைமலையடிகளின் சொற்பொழி வின்பத்தில் மூழ்கிவிட்டேன். அவர் இனிய பேச்சொலிகள் என் இரண்டு செவிகளிலும் இன்ப முழக்கஞ் செய்கின்றன.” என உ.வே.சாமிநாதர் குறிப்பிட்டுள்ளார். “பனிமலையின் உயரம்; நீல் ஆற்றின் நீளம்; அமைதிவாரியின் ஆழம் - ஆகியவை ஒருங்கே அமைந்தவர் மறைமலையடிகள்.” - என்று பாவாணர் அடிகளாரைப் போற்றிக் கூறினார். ‘மறைமலை அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க., புகழாரம் சூட்டியுள்ளார்.
தாம் வாழ்ந்த 75ஆம் அகவை வரை மறைமலையடிகள் தளராது மேற்கொண்ட தனித்தமிழ்த் தொண்டு, முன்னினும் எழுச்சி, வீறோடு தொடரவேண்டும். இல்லையேல், இந்த நூற்றாண்டில் இன்னுமொரு மலையாளமோ, இந்தி சமற்கிருத ஆங்கிலக் கலப்பு மொழியோ தோன்றித் தமிழர்களைப் பிரித்துவிடும் வாய்ப்பு நேரும். சிலகோடித் தமிழர்கள் இன்னொருவகை மொழி இனத்தவராக மாறிவிடுவர் என்றால் மிகை உரை இல்லை. உண்மையாகும்!
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இல்லாத குடி.
– என்று வள்ளுவர் பெருமான் எச்சரிப்பதைக் கருத்தூன்றி எண்ணிப் பார்ப்போம்!
தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் – அவனே
தமிழுயரத் தானுயர்வான் தான்!
- பாவாணர்.
(புதுவை நற்றமிழ் அதழில் வந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக