நல்லவொரு தலைவர் நல்லக்கண்ணு ஐயா!
விடுதலைப் போராட்ட வீரர்; கொள்கைச் செயற்பாடுகளில் போராட்டங்களில் நெகிழ்ச்சி இல்லாக் களப்போராளி; அரசியல் கட்சிகள் அனைத்தையும் பற்றிய ஏற்ற இறக்கங்களை அறிந்த மூத்த தலைவர்; அகவை வேறுபாடின்றி அனைவராலும் தோழர் என்றழைக்கப்படுபவர்;. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்; இன்றைக்கும் நாம் காணும் பொருள் அவா இல்லாத, ஊழலற்ற நேர்மையான எளிமையான தலைவர் இரா. நல்லக்கண்ணு ஐயா ஆவார்.
நல்லக்கண்ணு திருவைகுண்டத்தில் 10பேர் கொண்ட எளியதோர் உழவர் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக 26.12.1925இல் பிறந்தார். பள்ளிக்குச் செல்லுகின்ற காலத்திலேயே ஒடுக்குமுறைகளுக்கு
எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் தந்தை இராமசாமியாரின் மன
வருத்தத்திற்குக் காரணமானார். மதுரை இந்துக்கல்லூரியில் தமிழ் இடைநிலை வகுப்புவரை
படித்தார். பாரதியின் பாடல்களாலும் செக்கிழுத்த செம்மல் வ. உ .சிதம்பரனாரின் இயக்கத்தின் வழியாகவும் விடுதலை வேட்கை பெற்றார்.
பேராய(காங்கிரசு)க் கட்சியில் இளம்
அகவையிலேயே சேர்ந்த நல்லக்கண்ணு, இந்திய விடுதலைப்
போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 15ஆம் அகவையில் இந்தியப்
பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.
முறைப்படியான கட்சி உறுப்பினராவதற்கு இன்னும் அவருக்குச் சற்று அகவை கூடுதலாக
வேண்டியிருந்தது. ஆனால் அடுத்த சில பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுப் பொதுவுடைமை
இயக்கத்தின் மிக முதன்மையான ஆளுமையாக நல்லக்கண்ணு ஐயா உருவானார்.
அவர் பொதுவுடைமைக் கட்சியில்
இணைந்த காலத்தில்,
இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு
ஏற்பட்டது. ‘பத்தினிக் கோட்டம்’
என்ற இடத்தில் நெல்மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை அறிந்த
நல்லக்கண்ணு,
பொதுவுடைமைக் கட்சி நாளிதழில் அதுகுறித்து எழுதி
வெளிப்படுத்தினார். அரசு அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு
சென்று ஆயிரம் நெல் மூட்டைகளை வெளியில் கொண்டு வந்தார். இது பஞ்சத்தால் பசியில்
வாடிய மக்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்ததன் விளைவே, ‘’இந்தச் சுத்து வட்டாரமே இன்று சாப்பிடுகிறது என்றால் அதற்கு நல்லக்கண்ணு
ஐயாதான் காரணம்’’
என 80
ஆண்டுகள் கடந்தபிறகும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்
நன்றியுணர்வுடன் பாராட்டுவதாகும்.
அந்த அகவையிலேயே அன்று தொடங்கிய
போராட்ட வாழ்க்கை,
இன்றுவரை அகவை நூறு ஆகியும் ஒடுக்கப்பட்டோர், ஏழைகள்,
தொழிலாளர், உழைக்கும் பிரிவார், விளிம்பு நிலை மக்கள் ஆகியோரின் நலனுக்கான போராட்ட வாழ்க்கையாகத் தொடர்கிறது.
இந்திய விடுதலைக்குப் பின், பொதுவுடைமைக் கட்சியார் மீது இந்திய அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறைகளை
மனத்திடத்தோடு எதிர்த்துப் போராடினார். இதனால் அவரும் இன்னும் பல தலைவர்களும்
ஆய்தப் புரட்சியைத் தூண்டியதாகவும், அரசுகளைக் கவிழ்க்க முயன்றதாகவும்கூறி, ‘நெல்லை வஞ்சக (சதி) வழக்கு’ப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1952ஆம் ஆண்டு இந்த வழக்கில் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்களுக்கு வாணாள் சிறை எனத்
தண்டனை தரப்பட்டது. அப்போது அவருடைய அகவை வெறும் 27 மட்டுமே. குறைக்கப்பட்ட 7 ஆண்டுக்கால
சிறைவாழ்க்கையில்,
காவல்துறையின் கொடிய அடக்குமுறை அடிதடிக்கு ஆளாகிய
நிழ்வுகள் எல்லாம் வாழ்வில் அவர் பெற்ற மாறாத விழுப்புண்களாகும்.
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு
எதிராகவும்,
சுற்றுச்சூழல்மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு
எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். குறிப்பாகப் பொருநை(தாமிரபரணி) ஆற்றை
அழித்து அதை நம்பி இருந்த மக்கள் வாழ்வின் அடித்தளத்தை ஒழிக்கும் முயற்சியில்
ஈடுபட்டு வந்த மணல்கொள்ளைக் கும்பலுக்கு எதிராகப் போராடினார். நயன்மன்றில் இதற்காக
அவரே வழக்கில் உறழாடிச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். பொருநையில் மணல்
அள்ளுவது உயர்நயன்மன்றத்தால் தடை செய்யப்பட்டது.
நாங்குநேரி வானாமாமலைப்
பெருமாள்கோயில் நுழைவுப் போராட்டம், சாதிச் செருக்குப்
படுகொலை எதிர்ப்பு,
மணல் கொள்ளையைத் தடுக்க உயர் நயன்மன்றம் வரை சென்று
போராடியது எல்லாம் நல்லக்கண்ணு ஐயாவின் நெகிழ்ச்சியற்ற போராட்ட குணத்திற்கான
சான்றுகளாக உள்ளன. 80 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் நல்லக்கண்ணு ஐயா, இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற
உறுப்பினராகவோ இருந்தது இல்லை. தம் துணிவுமிக்க போராட்டங்களாலேயே மக்கள்
மன்றத்தில் இன்று வரை அவர் அடையாளங் காணப்பட்டு வருகிறார். அரசியலில் சில ஆண்டுகள்
இருந்துவிட்டாலே சொந்த வீடு,
சொத்து, மகிழ்வுந்து என்று
வாழும் ஆள்களுக்கிடையில் எளிமையின் உச்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். பெரிய
போராட்டம்,
சிறிய போராட்டம் என்று பார்க்காமல் போராட்டத்தின் நோக்கத்தை
மட்டுமே அறிந்து அதில் கலந்துகொள்ளும் மாமாந்தர் நல்லக்கண்ணு ஐயா, ஆவார்.
ஐயாவின் 80 ஆவது பிறந்தநாளில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அவருக்கு உருவா ஒரு கோடி
திரட்டிக் கொடுத்தது. அதைத் தம் சார்பாக மீண்டும் கட்சிக்கே திருப்பிக்கொடுத்தார்.
அதேபோல்,
தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்ற நல்லக்கண்ணு, அரசு வழங்கிய ஓர் இலக்கம் உருவா பரிசுத் தொகையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியைக்
கட்சிக்கும் மீதியை உழவுத் தொழிலாளர் அமைப்புக்கும் அளித்தார். அவருக்குத் தமிழ்நாடு
அரசு ‘தகைசால் தமிழ’ருக்கான விருதை அறிவித்து உருவா பத்து இலக்கம் அளித்தது. அரசுதந்த உருவா
பத்திலக்கம் காசோலையுடன் தம் சொந்தப்பணம் உருவா ஐந்தாயிரத்தைச் சேர்த்து மொத்தம்
பத்திலக்கத்து ஐயாயிரம் உருவாவை முதல்-அமைச்சரின் பொதுத் துயர்துடைப்பு நிதிக்கு
வழங்கினார்.
நல்லக்கண்ணு ஐயா மிகவும்
தன்னடக்கமானவர். அவர் கலந்து கொண்ட போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள்,
பெரிய நிகழ்வுகள் எதிலும் முதன்மையாகத் தன்னை நிறுத்திக்
கொள்ளாதவர். அவற்றில் சிலவற்றில் அவரின் பங்கு மிகவும் முகன்மையானது என்றாலும்
தன்னை முன்னிறுத்தி அந் நிகழ்வுகளை விரித்துரைக்காத விந்தை மாந்தர் அவர்.
இராசாசி ஆட்சிக்காலத்தில், நிலங்கள் ‘பார்ப்புத்தேய’ (பிரம்மதேய) முறைப்படி ஆட்சியாளர்களால் இலவயமாகப் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
அவர்கள் அந்த நிலத்தில் வரும் விளைச்சலை எடுத்துக் கொண்டனர். அவர்கள் நேரடியாகச்
சென்று பயிர் செய்யமாட்டார்கள். ஆனால் விளைச்சலை மட்டும் பெற்றுக் கொள்வார்கள்.
தேவதான முறைப்படி இத்தகைய நிலங்கள் கொடையாகக் கோவில்களுக்கு வழங்கப்பட்டன. சில
நேரங்களில் ஒரு சிற்றூர் முழுமையும் கூட கோவிலுக்கு வழங்கப்பட்டது. சிறு
உழவர்களும் பணியாளர்களும் அவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
எதிர்த்து யாரேனும் நின்றால் அவர்களை வெளியேற்றி விடுவார்கள். இவற்றை எதிர்த்து
நல்லக்கண்ணு ஐயா கலந்துகொண்ட உரிமைப் போராட்டங்கள் 1948-ம் ஆண்டு தொடங்கி 1960-ம் ஆண்டு வரை தொடர்ந்தன. முதலமைச்சராக இருந்த இராசாசி, நிலக்கிழார்களின் பக்கமும் மடங்களின் பக்கமும் நின்று கொண்டார். ”உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்” எனக் கூறியபோது, இராசாசி நிலத்துக்கான ஆவணங்களைக் கொண்டிருப்பவர்களுக்குதான் நிலம் சொந்தம் என்றார்.
ஆனால்,
நல்லக்கண்ணு ஐயாவும் தோழர்களும் மேற்கொண்ட போராட்டங்களினால், இந்தக் கோவில்களும் மடங்களும் கொண்டிருந்த அதிகாரம் உடையத் தொடங்கியது.
அவர்களின் அறுவடை விதிகளையும் முறைகளையும் தொழிலாளர்கள் போராடி எதிர்த்தனர். அடிமைகளாக
இருக்க மறுத்தனர்.
மாநிலம் முழுவதும் உழவர்களுக்கான
இயக்கத்தை உருவாக்கி உழவர் (சங்கம்) அமைப்புக்கான
அடித்தளத்தை உருவாக்கியவர் என்று பொதுவுடைமைக் கட்சிகளின் தலைவர்கள் நல்லக்கண்ணு
ஐயாவைப் பாராட்டுகிறார்கள்.
பொதுவுடைமை இயக்கத்தின்
நூற்றாண்டும் நல்லகண்ணு ஐயாவின் நூற்றாண்டும் ஒரே நேரத்தில் அமைந்துள்ளது ஒரு
சிறப்பான பொருத்தமாகும்.
பொதுவாழ்க்கையில் நேர்மையோடும்
உண்மையோடும் ஊழலற்றும் எளிமையாகவும் இருக்கவேண்டியதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக
விளங்கும் மக்களின் உண்மைத் தொண்டர் ஈடற்ற தலைவர் நல்லக்கண்ணுஐயா நீடுவாழ நற்றமிழ்
உளமார வாழ்த்துகின்றது.
குற்றம் இலனாய்க் குடிசெய்து
வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. - குறள்.1025.
-த.ந.
(புதுவை நற்றமிழ் இதழில் வந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக