தமிழரும் பெயரும்!
‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றும், ‘நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான், நான், நான்!’ என்றும் முழங்கினார் பாவேந்தர்! ‘தமிழே எனக்கிங்கு உயிர்மலர்ச்சி! – செந்தமிழே எனக்கிங்கு உடலம்!’ என்றும், ‘அறம் பெருகும் தமிழ்படித்தால், திறம் பெருகும், மறம் பெருகும், ஆண்மை வரும், மருள்விலகும், பொய்மையெலாம் புறம்பெயரும், வாழ்வு புதுமைபெறும்’ என்னும் கருத்துப் பெறவும் பாடினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இத்தகையோர் வாழ்ந்த மண் இது!
இந்தத் தமிழகத்தில் இப்போது தமிழர் தம் தாய்மொழியைப் பேணிப் பாதுகாத்துப் புரக்கும் நிலை மிகமிக இரங்கத்தக்கதாக உள்ளதென்பது மிகையாகச் சொல்லப்படுவதன்று! முற்றும் உண்மையே! ஓர் எடுத்துக்காட்டைப் பார்த்தால் இந் நிலை தெளிவாக விளங்கும்.
17-06-2026 அன்று வந்த நாளிதழ்களில், ’தி இந்து’ - ஆங்கில நாளிதழ், ‘இந்து தமிழ் திசை’, ‘தினமணி’ - தமிழ் நாளிதழ்கள் ஆகிய நாம் பார்த்த மூன்று நாளிதழ்களில் முதற்பக்கத்தில் ‘அப்போலோ கல்வி நடுவ’த்தின் முழுப்பக்க விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அந்த விளம்பரத்தில் அக் கல்வி நடுவத்தில் பயின்று, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – தொகுப்பு 1’ தேர்வில் முன் நிலைகளில் தேறிய நாற்பது பேர்களின் படம், பெயர், வரிசை(தரம்) எண்ணுடன் அவர்கள் இப்போது செய்யும் வேலையையும் வெளியிட்டிருந்தனர்.
ஆண்களும் பெண்களுமாகக் கலந்து காணப்பட்ட அந்த நாற்பதின்மர் பெயர்களையும் ஒன்றிற்கு இரண்டுமுறை கூர்ந்து பார்த்ததில், அப் பெயர்களில் ஒன்றே ஒன்று மட்டுமே தமிழ்ப்பெயராக இருக்கக் கண்டோம். PUGALANBU. K – என ஆங்கிலத்தில் எழுதியிருந்த அப்பெயர், ‘புகழன்பு’ எனும் தமிழ்ப் பெயரென்றே கருதுகின்றோம். அந்த விளம்பரத்தில் கண்ட நாற்பது தமிழரில் ஒருவரே தமிழ்ப்பெயர் தாங்கி இருக்கின்றார் என்பதே நிலை!
பெயர் என்பது வெறும் கூப்பிடுவதற்கான குறியீடு இல்லை; அது ஒரு மாந்தனின் முகவரி; தாய்மொழியைப் பேணுகின்ற நிலையின் ஒரு முகன்மைக் கூறு! பிள்ளைகளுக்குப் புரியும் தாய்மொழியில் பெயரிடுவது, அவர்களுக்கு நாம் தரும் தன்னம்பிக்கை மட்டுமன்று, பண்பாட்டின், வரலாற்றின், மரபின், மொழியின், கலையின் வாழ்வியலின் அடையாளம். அறிந்தோ, அறியாமலோ, பொருள் புரிந்தோ, புரியாமலோ பிறமொழியில் நாம் சூட்டும் பெயர், உளத்தியல்படி நம்மை அறியாமல் அம்மொழியின் வல்லாண்மைக்கு நாம் நம்மை அறியாமலே ஆளாக்கிக் கொள்வதாகும் எனில் மிகைஉரை இல்லை, உண்மையே!
பெயரிடுவதில் போலி நாகரிகம் புன்மைப் பெருமைகள் புகுந்து விட்டன. புரியாத மொழியில் பேசுபவர்களை உயர்வாக எண்ணும் ஒருவகை அறியாமை போன்றதே புரியாத மொழியில் பெயர் சூட்டிப் போலிப் பெருமை கொள்வதுமாகும்!. தாய்மொழியைத் தாழ்த்தி அயல்மொழியை உயர்வாக எண்ணும் அவலம், அறியாமை இதில் இருப்பதை உணரவேண்டும். உண்மையில், உலகின் மூத்த மொழி, முதல்தாய்மொழி, வளமான இயற்கை மொழி தமிழே என்ற ஆய்வறிஞர் கூற்றை மறந்து, நாம் போலித்தனங்களுக்கு நம்மைநாமே ஆளாக்கிக் கொள்கின்றோம்.
தமிழர் தமிழில் பெயரிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதே ஓர் இரங்கத்தக்க நிலை என்பதை உணரவேண்டும். புதுச்சேரி, தமிழ்நாட்டு அரசுகளும், தமிழர் இயக்கங்களும் மக்களிடையே இந்த உணர்வை உருவாக்கித் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்ட ஊக்குவிக்கவேண்டும்.
தம்மிடம் வந்து காசு கொடுத்து எந்தப் பெயர் வைப்பது என்று கேட்போரிடம் பிறந்த நாள் நேரம் கேட்டுவிட்டுப், புரியாத அயல் மொழிப் பெயர்களையும் தமிழ் இலக்கண வரையறையைப் பொருட் படுத்தாத பிறமொழிப் பெயர்களையும் சூட்டும்படி வலியுறுத்துவதையும், மொழிக்கு முதலில்வரா எழுத்துகளில் தொடங்கும் பெயர்களாக வைக்கத் தூண்டுவதையும் காண்கிறோம். இத்தகைய தமிழுக்கு எதிரானபோக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றது. இந்தப் போக்கில் உள்ள சூதைப் புரிந்து கொண்டு விழிப்புறவேண்டும்.
நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டி நாம் தொன்மைச் சிறப்பும் பண்பாட்டு நாகரிகச் சிறப்பும் கொண்ட தமிழர்கள் என்று அடையாளம் காட்டவேண்டும். தாய்மொழி தமிழில் பெயர்வைத்துக் கொள்வது பெருமைதரும் செயல் என்று கருதவேண்டும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். - கு.466.
{புதுவை 'நற்றமிழ் - சூலை 2026 - இதழில் வந்தது )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக