வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ஒற்றைத்தன்மைத் திணிப்பு!

 

ஒற்றைத்தன்மைத் திணிப்பு!


இந்தியா என்று இப்போது அழைக்கப்படும் இந் நாடு, ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் (அதாவது கி.பி. 1600-க்கு முன்பு), இன்று நாம் பார்ப்பதுபோல ஒரேநாடாக இருக்கவில்லை. பல்வேறு பேரரசுகள், சிற்றரசுகள், குறுநில மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு துணைக்கண்டமாக இருந்தது. பல மொழி, பல பண்பாட்டுக் குமுக மக்கள், அவர்களின் மொழி, நிலப்பரப்பு, இனத்தின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்திக் கொண்டனர். அவர்களில் முகன்மையாகப் பின்வரும் இனக்குழுக்கள் வலுவாக இருந்தன:

                சேர, சோழ, பாண்டிய மரபுகளின் வழிவந்த தமிழர்கள் தெற்கில் அவர்கள் நிலப்பரப்பில் வாழ்ந்தனர். சேரநாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் (கேரளா-மலபார்) மலையாளிகள் இருந்தனர். தெலுங்கர்கள் இன்றைய ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளிலும், காக்கத்தியர், நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்தனர். கன்னடர்கள் மைசூர், கர்நாடகப் பகுதிகளில் வாழ்ந்தனர். மராட்டியர்கள் மேற்கு இந்தியப் பகுதியில் ஒரு பேரினமாக இருந்தனர்.

                வங்காளிகள், சீக்கியர்கள் (பஞ்சாபிகள்), இராசபுத்திரர்கள் முறையே கிழக்கு, வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தங்களுக்குரிய தனித்தன்மையான பண்பாடு பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்தனர். மொழி, பண்பாட்டு அடிப்படையில் மேற்குறிப்பிட்டோருடன் அசாமி, காசுமீரி முதலியோரும் பழங்குடி குமுகங்களும் வாழ்ந்து வந்தனர்/வருகின்றனர். இந்தியாவை ஒரு "தேசங்களின் நாடு" (Nation of Nations) என்று வரலாற்றாளர் குறிப்பிடுவர்.

இவர்கள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் எப்போதும் ஒரே ஆட்சியின்கீழ் இருந்ததுஇல்லை. இந்த வரலாறு திரிக்கப்பட்டு இன்றைக்கு முழுப்பூசுணையைச் சோற்றில் மறைப்பதுபோல் மறைத்தும் திரித்தும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கின்றோம்.

ஆங்கிலேயர் வருகையின்போது வடஇந்தியாவில் முகலாயப் பேரரசும் மராட்டியப் பேரரசும் இருந்தன. இராசபுதனத்தை இராசபுத்திரர் ஆண்டுவந்தனர். தென்னிந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை ஐதராபாத்து நிசாம்களும், நாயக்க மன்னர்களும், மைசூர் உடையார்களும், பாளையக்காரர்களும் ஆண்டு வந்தனர்.

இந்தியா உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் மிகப் பெரியதொரு நாடாக உள்ளது. அரசியல் பன்முகத்தன்மை என்பது கூட்டாட்சி அமைப்பு, பலகட்சி மக்கள்நாயகம், பலவேறு குமுகக் குழுக்களின் சார்பாளர் சேர்ந்த ஆட்சி என்பனவற்றில்தான் இருக்கின்றது.

இந்தியக் குடிமக்களில், மொழி, சமயம், சாதி, பண்பாடு, உடலமைப்பு, தோற்றம், உடை, உணவு முதலிய பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறைகள், இயற்கை வளங்கள், மலை, பாலைநிலம், கடற்கரை, காடு, சமவெளி எனப் பலவகை நில அமைப்புகள், தட்பவெப்பம், இசை, நாட்டியம் முதலிய நுண்கலைகள், நாட்டுப்புறக் கலைகள், வீர விளையாட்டுகள், மரபுகள், திருவிழாக்கள், சிந்தனைகள், கருத்துகள், படைப்பாற்றல், பொருளியல் முதலியவற்றில் வெளிப்படையான வேறுபாடுகள் உடையோர் இருக்கின்றனர். மேற்கூறிய வேறுபாடுகளால் அவர்களின் வாழ்வியல் முறைகளும் மாறுபடுகின்றன.

இவ்வுண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். அனைத்து மக்களிடத்தும் சமன்மையைப் பேண வேண்டும். இவற்றைக் கண்டுகொள்ளாது, பன்முகத்தன்மையை மறுப்பது, அறிவுடைமையன்று. இந்திய தேசியக் கட்சிகளின் உடனடி நன்மை கருதி எடுக்கப்படும் பன்முகத்தன்மைக்கு மாறான நடவடிக்கைகள், கூட்டாட்சிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஊறு ஏற்படுத்தும் தீங்காக முடியும் என்பதை மறுக்கஇயலாது.

இந்திய அரசியல்சட்டம் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதோடு அதை உறுதிப்படுத்துகின்றது; அதனைக் காக்கும்வகையில் சட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் பேரால் உறுதி எடுத்துக்கொண்டு ஆட்சிப்பதவிக்கு வருவோர் அந்தச் சட்டத்தை எந்த அளவுக்கு மதிக்காமல் செயல்படுகிறார்கள் என்பதைக் கண்டு வருகின்றோம்.

இப் பன்முகத் தன்மைக்கு ஊறுசெய்தலும், வேற்றுமையில் ஒற்றுமைஎன்பதைப் பேணுவதில் விருப்பின்றிக் கரவாக மாறுபட்டு நடத்தலும் இந்தியாவின் நிலைப்புக்கு ஊறுசெய்வதாகவே முடியும் என்பதில் சற்றும் மிகையில்லை. பல மொழிகள், பல மதங்கள், பல பண்பாடுகள், பல குமுகங்கள் கொண்ட நாட்டை ஒன்றாக வைத்திருப்பதே அரசியல் சட்டத்தின் அடிப்படைநோக்கமே அன்றி ஒரேமாதிரியாக ஆக்குவதன்று. இந் நாட்டின் ஒற்றுமை என்பது வேறுபாடுகளை அழித்துவிட்டு ஒன்றாக்குவதில் இல்லை; வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு இணைந்திருக்கச் செய்வதிலேயே இருக்கிறது. இந்திய ஒற்றுமையின் அடிப்படைவேற்றுமையில் ஒற்றுமை(Unity in Diversity) என்பதில்தான் உள்ளது.

ஒரே நாடு ஒரே மொழிஎன்றால், பிற மொழிகள் பேசும் மக்கள் இரண்டாம்நிலைக் குடிமக்களாகிறார்கள். இதனால் நம்பிக்கையின்மை, எதிர்ப்பு, போராட்டம், வன்முறை, பிரிவினை இயக்கம் எனப் பதற்றம் உருவாகும். 1960களின் தமிழ்நாட்டு இந்திஎதிர்ப்பு - மொழிப்போராட்டங்கள் சான்றாக உள்ளன. ஆயிரக்கணக்கான வழக்குமொழிகள் உள்ள ஒரு நாட்டில் ஒரே மொழியைத் திணிப்பது, பிற மொழிகளைப் புறக்கணித்து, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

       பல்வேறு குமுகங்களைக் கொண்ட நாட்டில் ஒன்றின் அடையாளத்தை மற்ற குமுகங்களின் மீது திணிக்கும்போது, அக் குமுகங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இது குமுகஒற்றுமையைச் சிதைக்கிறது. ஒரேநாடு ஒரே அடையாளம்என்றால், பலர் தங்கள் தனித்தன்மையை, தனியான அடையாளத்தை இழக்கும் தீங்கு ஏற்படுகிறது. அடையாள அழிப்பு (Identity erasure), “ஒரே…” என்ற போக்கு, மக்களிடையே நாம் இந்த நாட்டில் எங்கு நிறுத்தப்பட்டிருக்கிறோம்?”  என்ற எண்ணம் எழச்செய்து, நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. ஒரே அடையாளத்தைத் திணிப்பது, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகிறது.

இந்தியாவில் பல பண்பாடுகள் இருக்கும் நிலையில், “தேசியப் பண்பாடு என்றும், ‘ஒரே நாடு, ஒரே பண்பாடுஎன்றும் கூறி ஒன்றை உயர்த்துவது, பிற பண்பாடுகளைத் தாழ்வாகக் காட்டும் நிலையை உருவாக்குகின்றது; பண்பாட்டு வல்லாண்மை (ஆதிக்க) உணர்வு, எதிர்ப்புநிலையை உருவாக்குகிறது; பொறுத்துப்போகும் மனநிலையைக் குறைக்கிறது. ஒரே பண்பாட்டை முன்னிறுத்துவது, பிற பண்பாடுகளை அழிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.

பல மதங்கள் உள்ள நாட்டில் ஒருமதத்திற்குச் சார்பாக நடத்தல் குமுகத்தில் பகைஉணர்வு எழக் காரணமாகின்றது. இந்திய அரசியல் சட்டம், அரசு எந்த மதத்தையும் திணிக்கவோ, எந்த மதத்திற்கும் துணைதரவோ கூடாது என்கிறது. மதச்சார்பின்மையைக் கூறுகிறது.

இந்தியா ஒன்றாக இருப்பது அழுத்தத்தால் இல்லை; உடன் பாட்டால்தான்! இந்திய ஒன்றியஆட்சியின் வலிமை, பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ளும்போதுதான் நீடித்து இருக்கும். முன்பே கூறியவாறு இந்திய அரசியலமைப்பு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பதைக் கூறவில்லை. மாறாகப் பல மொழிகள், மத உரிமை, பண்பாட்டு உரிமை என அனைத்தையும் பாதுகாக்கிறது.

ஒற்றுமைக்கு உண்மையான பாதை எல்லோரும் ஒரே மாதிரி ஆவதில் இல்லை. வேறுபாடுகளுடன் சமமதிப்பைப் பெறுதலில்தான் உள்ளது. இந்தியாவின் வலிமை, ஒரே மாதிரி சிந்தனை அன்று;  பல சிந்தனைகள் உடையோரும் ஒரே நாட்டில் இணைந்து வாழ்வதாகும். இந்திய ஒற்றுமை என்பது  பல்வேறு பண்பாடுகளுக்கிடையேயான குறுக்கீடற்ற இணக்கமான இணைப்பை  வலியுறுத்துகிறது. கட்டாய ஒற்றுமை  மனக்கசப்பை விதைத்து, பிரிவினை உணர்வுகளை வலுப்படுத்துகின்றது.

உலகம் முழுவதும், பல்வேறு மக்களை ஒரே அடையாளத்தில் இணைக்கும்  "சீர்திருத்த" முயற்சிகள், பெரும்பாலும்  இனஅடிப்படை மோதல்களுக்கும், பிரிவினை இயக்கங்கள் தோற்றத்திற்கும், நாடுகளின் பிளவுக்கும் வழிவகுத்து இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு நிலப்பகுதிகள் அவற்றின் தனித்தன்மையைத் காப்பாற்றிக் கொள்ளும் உரிமையை வரலாற்று அடிப்படையில் வலியுறுத்துவதில் உறுதியானவையாக உள்ளன.

எனவே, “ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே அடையாளம், ஒரே மதம், ஒரே வழிபாடு…..” என்கின்ற போக்கு பன்முகத்தன்மையை அழித்து, குமுக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் கடுமையான சிக்கல்களை உருவாக்கும்.

                பல மொழிகளும் பல பண்பாடுகளும் இந்தியாவின் வாணிகம், சுற்றுலா, கல்வித்துறைகளுக்கு வலிமையாகும். ஒரே அடையாளத்தைத் திணிப்பது, பொருளியல் வாய்ப்புகளைக் குறைக்கும் போக்கினதாகவும் ஆகும்.      

மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றில் சிறுபான்மையர் குமுகங்கள் ஒதுக்கப்படுவதை உணரும்போது, அவர்களுக்குப் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு உருவாகிறது. "நாங்கள் இந்தியர்களா இல்லையா?" என்ற கேள்வி எழுகிறது. தம் தாய்மொழியையோ, பண்பாட்டையோ கைவிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும்போது எதிர்ப்பும் பிரிவினை கோரிக்கைகளும் வலுப்பெறுகின்றன. அவர்களுக்கு இந்நாட்டிற்குப் புறம்பான உணர்வு உருவாகிறது. ஒருமைப்பாட்டைக் கட்டாயப்படுத்துவது உண்மையான ஒற்றுமையை உருவாக்காது, மேலோட்டமான, வல்லந்தமான "ஒருமைப்பாடு" மட்டுமே உருவாகும்.

                வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு கடவுளை வணங்கினாலும், வெவ்வேறு உணவுகள் சாப்பிட்டாலும் - எல்லோரும் சமமான இந்தியர்கள்" என்ற நிலையிருந்தால் மட்டுமே உண்மையான ஒற்றுமை இருக்கும். மாறாக, "இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை" அல்லது "இந்தப் பண்பாடு மட்டுமே இந்தியப் பண்பாடு" என்று சொல்வது கோடிக்கணக்கான மக்களை விலக்குகிறது.

                ஒற்றைத்தன்மைத் திணிப்பு அரசியல், பொருளியல், உளத்தியல் அடிப்படையிலான தாக்கங்களை உருவாக்குகிறது. மக்களிடையே "நாம் - அவர்கள்" என்ற பிரிவினையை உருவாக்குகிறது. இது குமுக ஒற்றுமையைச் சிதைத்து, வன்முறைக்கும் கலவரங்களுக்கும் வழிவகுக்கிறது.

வரலாற்றில், தமிழ்நாடு கி.பி.1311-றிற்கு அதாவது மாலிக்காபூர் படையெடுப்புக்கு முன்னர் அயலர் ஆட்சியின் கீழ் இருந்ததில்லை. அதற்குப் பிறகும், ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படும் வரையிலும் தமிழகப் பகுதிகள் முழுமையுமாக அயலர் ஆட்சியின்கீழ் இருந்தது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு வடவர் ஆட்சியின் கீழுள்ள தமிழகம், ஒற்றைத்தன்மைத் திணிப்பால் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருவது கண்கூடு.

                ஒற்றை மொழியைத் திணிக்க முயன்ற நாடுகளில் மோதல்கள் மிகுந்துள்ளன. பாகித்தானில் உருதுவை மட்டும் தேசிய மொழியாகத் திணித்தபோது, வங்காளமொழி பேசும் கிழக்குபாக்கித்தான் கொதித்தது; மொழி உரிமைக்காக 1952-இல் மாணவர்கள் உயிரீகம் செய்தனர். இறுதியில் 1971-இல் வங்கதேசம் தனி நாடாகப் பிரிந்தது.

                செர்பிய அடையாளத்தை மற்றவர்கள் மீது திணிக்க முயன்றநிலை  (மிலோசெவிச்சு தலைமையில்) உயூகோ-சுலேவியாவின் பிரிவினைக்கும், குரோசியா, போசுனியா, கோசோவோ போர்களுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்தது.

                சீனஅரசு, சிஞ்சியாங்கு மாகாணத்தில் வாழும் உய்குர் முசுலிம்கள் மீதும், திபெத்தியர்கள் மீதும் கட்டாய மொழி, பண்பாட்டைத் திணிப்பது தொடர்மோதல்களையும் அடக்குமுறையையும் ஏற்படுத்தி உள்ளது.

                துருக்கியில், குருது மொழி, உடை, பண்பாடு மீது நீண்டகாலமாகத் தடைகள் விதித்து அடக்கியதுடன், துருக்கிய அடையாளத்தைத் திணித்ததால்  பல ஆண்டுகளாக வன்முறை மோதல் தொடர்கிறது.

                இலங்கையில், சிங்களமொழியை மட்டும் அரசு மொழியாக்கிய 'சிங்களம் மட்டும்' (Sinhala only Act) சட்டம், தமிழ் மக்களை தனிமைப்படுத்திய நிலையை உருவாக்கி, பல்லாண்டுக்கால உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

இவற்றிற்கு நேர்மாறாக சுவிட்சருலாந்து நான்கு ஆட்சி மொழிகளுடன் (செருமன், பிரெஞ்சு, இத்தாலியன், உரோமன்) அமைதியாகச் செயல்படுகிறது. கனடா, ஆங்கிலம்-பிரெஞ்சு இருமொழிக் கொள்கையுடன் ஒற்றுமையைக் காக்கிறது. பன்முகத்தன்மையை மதிப்பது ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. ஒருமைப்பாட்டை வல்லந்தமாகத் திணிப்பது சிதைவை உருவாக்குகிறது.



ஒருநாட்டிற் கொரேமொழிதான்; ஒருநாட்டிற் குப்பண்பா டொன்றென் போரே!

ஒருநாட்டிற் கோரடையா ளம்மட்டில் தானென்னும் ஓலத் தீரே!

ஒருநாட்டிற் கொருமதந்தா னொருவுடைதா னெனமுழங்கி உருமு வோரே!

ஒருநாட்டில் ஆளுகின்ற உம்போக்கால் புரட்சியெழல் உறுதி உண்மை!

                                                                                     - ..


கருத்துகள் இல்லை: