அச்சம் அறியாத் தமிழ்த்தொண்டர்
அ. நக்கீரனார்!
பின்னர்ப் பாவலரேறு ஐயா சென்னை சென்ற பிறகும் தொடர்பு தொடர்ந்திருந்தது. உலகத் தமிழின முன்னேற்றக் கழத்தில் இவரும் விழுப்பரையனாரும் மாவட்டப் பொறுப்புகளில் அமர்த்தம் பெற்றனர். பல கிளைகளைத் தோற்றுவித்துப் பாவலரேறுவை வரவழைத்துப் பொதுக்கூட்டங்கள் பல நடத்தியதில் நக்கீரனாருக்குப் பெரும்பங்கிருந்தது.
அதன் பின்னர்ப் புதுச்சேரி ஆய்வறிஞர் அருளியாரின் தொடர்பும் ஏற்பட்டது. அவருடைய வினைப்பாடுகளுக்கு இவரால் இயன்றவரை துணையிருந்தார். புதுவையில் தனித்தமிழ் அன்பர்களுடைய தமிழினத் தொண்டியக்கத்தின் வெளியீடாக வந்த ‘மதி’ மாத இதழின் ஆசிரியர்கள் இருவரில் இவரும் ஒருவராவார்.
ஈழத்தில் தமிழர் படுகொலைகள் நிகழ்ந்த போது, ‘தென்மொழி’ இதழில் எழுதப்பட்ட அறிவிப்பொன்றை, துண்டறிக்கையாக அச்சிட்டு விழுப்புரத்தில் பொதுமக்களுக்கு வழங்கினார். அதற்காகத் தளைப்படுத்தப்பட்டுச் சிறைக்குச் சென்றார். இந் நிகழ்ச்சிக்கு முன்னரும் பின்பும் ஈழ மக்களின் இன்னலை இவர் பல இடங்களிலும் இவருக்கே உரிய ஈர்க்கும் முறையில், எளிய மக்களிடம் விளக்கி உணர்வு கொளுத்தியதெல்லாம் பழைய கதையாகும்.
தமிழ்நாட்டு ஆளுங்கட்சியின் விழுப்புரம் நகரச் செயலாளராக இருந்த ஒருவர், நக்கீரனாரின் நிலத்தில் இருந்த பெரிய மரமொன்றினைக் கள்ளத்தனமாக இவருக்குத் தெரியாமல் பல துண்டுகளாக வெட்டி, எடுத்துச் செல்லவிருந்த நேரத்தில் இவர் பார்த்துவிட்டார். மரத்தை வெட்டிய அந்த நகரச் செயலாளர் கட்சிக்காரர்களைச் சேர்த்துக் கொண்டு இவரையே அச்சுறுத்த முயன்றார். அதனைப் பொருட்படுத்தாத நக்கீரனார், காவல் நிலையத்தில் முறையீட்டை எழுதித்தந்தார். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தனி ஒருவராகக் காவல் துறைக்கு எதிராக நகரத்தில் பெரிய கண்டன ஊர்வலமொன்றை நடத்திக் காவல் துறையைத் திகைக்க வைத்தார்.
சென்னை மேடவாக்கத்தில், நடிகை சரோசாதேவிக்குச் சொந்தமாக இருந்த ஒரு மாந்தோப்பில், பாவலரேறு ஐயா கூட்டிய கமுக்கக் கூட்டத்திற்கு இவரும் விழுப்பரையனாரும் தமிழநம்பியும் சென்றனர். இப்போது, முதுமை காரணமாக நடமாட இயலாத நிலையில் இருந்துவருகின்றார் என்றாலும் இன்றும் கொஞ்சமும் மாறாத அதே தமிழ்உணர்வுடன் பேச்சுக்கொடுப்போரிடம் பேசுகிறார்; திருக்குறள் விளக்கம் தருகின்றார்; பாவலரேறு பாடல்களை முழங்கி வருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக