ஆளுநர் மாறினும் அடாச்செயல்கள் மாறிலை!
இந்திய ஒன்றிய அரசின் அமைச்சர்களில் பெரும்பான்மையர் தேசியத் தற்பணியர் அமைப்பின் (RSS) வழிவந்த இந்துத்துவக் கொள்கையர் - இந்துமத வல்லதிகார மனப்பான்மையர் - என்பது வெளிப்படையாகும். இவர்கள் ஆட்சியில் இல்லாத, அதாவது பா.ச.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுகின்ற மாநிலக்கட்சியார்க்கு அல்லது வேறு எதிர்க்கட்சியார்க்கு இயலுகின்ற வகையெல்லாம் தொல்லை, இடைஞ்சல் தந்து தடையாக இருப்பதற்காகவே இவர்களுக்குத் தோதான ஆட்களை அம் மாநிலங்களில் ஆளுநர்களாக அமர்த்துகின்றனர்.
இப்படி அமர்த்தப்படும் இந்த ஆளுநர்கள், மாநில ஆட்சிக்குத் தொல்லை தருவதோடு மட்டுமன்றி மாநில மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், மரபுகள், நாகரிக நடைமுறைகள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாது, மதிக்காது அவற்றைக் கொச்சைப்படுத்தி இழிவு செய்யும் நோக்கிலும் போக்கிலும் நடந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இரவிந்திர நாராயண இரவி ஆளுநராக இருந்தபோது, மாநிலச்சட்டமன்றம் நிறைவேற்றியணுப்பும் தீர்மானங்களைக் கிடப்பில் போடுவது, தேவையின்றிக் குடியரசுத்தலைவருக்கு விடுத்துவிடுவது போன்ற பல அடாச் செயல்களுக்காக அவரை உச்சநயன்மன்றம் கடுமையாகக் கண்டித்தது; எச்சரித்தது.
நாம் முன்னரே ‘நற்றமி’ழில் குறிப்பிட்டவாறு, பொதுவாக ‘இந்துத்துவா’க்காரர்களுக்கு அடிப்படையான ஒரு செயல்திட்டம் இருக்கிறது. அது இந்தியநாட்டை ஆரியநாடாக்க அதாவது பார்ப்பனரே தலையாயவர் பிறரெல்லாம் அவர்களுக்கு அடிமைகள் என்ற நிலை கொண்ட நாடாக உருவாக்க வேண்டுமென்பதே அது. அவர்களுக்கு விருப்பமான சிலஅடிமைகளுக்குச் சில அதிகாரப்பதவிகளைத் தருவார்கள். அந்தக் கரவான திட்டத்தின் நிறைவேற்றத்தை நோக்கியே அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கரவாக இருக்கும். மொழித்திணிப்பு, மாநில அதிகாரப்பறிப்பு, அடக்குமுறைச்சட்டங்கள், பெண்களை முன்னேற விடாமை, அனைவரும் எல்லாநிலையிலும் கற்கத் தடைசெய்யும் கல்வித்திட்டம் முதலிய பல தந்திரமான திட்டங்கள் இருக்கும்.
ஆனால் இவற்றை மறுக்கவும், மறைக்கவும் அவர்கள் ‘ஆரியர்’ என்ற இனமே இல்லையென்றும், ஆரியர் வந்தேறிகள் இல்லையென்றும் கருத்துருவாக்க ஆள்சேர்த்து வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். இங்கு ஆளுநராக இருந்த இரவிந்திர நாராயண இரவி, ‘சனாதனம்’ என்றும், கால்டுவெல் ‘பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர்’ என்றும், செம்பு ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்கவேவேண்டும் என்றும், தமிழ்நாடு மட்டும் முன்னேறுவது சரியில்லை என்றும், இந்தி சமற்கிருதத் திணிப்புக்குத் துணைதரவாகவும் பேசிவந்தது இதைச் சார்ந்ததே.
இவர்கள் நேரடியாக எதிர்த்து வெற்றிபெற முடியாத ஒருவரோ அல்லது ஒரு கருத்தியலோ இருந்தால், அந்நிலையில், அவரை அல்லது அக்கருத்தியலைத் தம்மோடு அணைத்துச் சேர்த்துத் தம்மவராக அல்லது தமதாக ஆக்கிக் கொண்டுப் பின் கொஞ்சம்கொஞ்சமாக அழித்துவிட்டுத் தம்மை வலுப்படுத்திக் கொள்வார்கள்.
திருவள்ளுவரையும் திருக்குறளையும் அவர்கள் இந்த வகையில்தான் தம்மவராக, தமதாக ஆக்கிக்கொள்ள முனைகிறார்கள். உலகப் பொதுவான ஈடெடுப்பற்ற திருக்குறள் கருத்துகளை இவர்களால் எதிர்க்க முடியாது என்பதால்தான், இரவிந்திர நாராயண இரவி, ‘மதப் பரப்புநரான சி.யு.போப்பு திருக்குறளிலுள்ள பத்தி(பக்தி) சிந்தனைகளை நீக்கிப் பெரிய அவமதிப்பைச் செய்திருக்கிறார்’ என்றும் அவரின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு ‘ஆதன் இல்லாத பிணம் போல இருக்கிறது’ என்றும் கூறினார். திருக்குறள் வாழ்வியல் நெறி நூல் என்று குறைத்து மதிப்பிடுகின்றனர். அது ஒரு தொல்வரலாற்று (இதிகாசம்) நூல் என்றும் அதில் நிலையான ஆதனிகத்தின் (ஆன்மிகத்தின்) ஆதன் (ஆன்மா) இருக்கிறதென்றும் கூறியதோடு, திருக்குறளில் இருக்குமறையிலுள்ள (இருக்கு வேதத்திலுள்ள) சொற்கள் உள்ளன என்றும் (அதாவது இருக்குமறையின் கருத்துகளே திருக்குறளில் உள்ளன என்ற கரவான கருத்தைக்) கூறினார்.
அவர், திருவள்ளுவரைப் ‘பாரத சனாதனத்’தின் ஒளிவீசும் துறவி என்றபோதே தமிழர் அனைவரும் அவரைக் கண்டித்து உரைத்தனர். அத்துடன், காவி உடையுடன் கைகளில், நெற்றியில் திருநீற்றுப்பூச்சுடன், கழுத்தில் முண்மணிக்காய் மாலையுடன் வரைந்த திருவள்ளுவர் உருவப் படத்தை வைத்திருந்தார். இதைக் கண்ணுற்ற தமிழர் பலரும் கடுமையாக எதிர்த்தனர்.
தமிழ்நாட்டரசு தமிழர் திருநாளான பொங்கலை அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் எனக் கடைப்பிடித்து வருகையில் அவர் ‘வைகாசி அனுசம்’ திருவள்ளுவர் நாளென தாமே அறிவித்து மேற்கூறியவாறே திருவள்ளுவர் படத்தையும் காட்சிக்கு வைத்திருந்தார். அதற்காகத் தமிழரின் கடுங் கண்டனங்களைப் பெற்ற அவர், 2026, மார்ச்சு 11-ஆம் நாள் தமிழ்நாட்டிலிருந்து நீங்கி மேற்குவங்க ஆளுநராகப் போனார்.
கேரள ஆளுநராக இருக்கும் கோவாவைச் சேர்ந்த இராசேந்திர விசுவநாத்து அருலேகர், மார்ச்சு 12, 2026 முதல் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். இவரும் இரவிந்திர நாராயண இரவியைப் போலவே, அண்மையில் ‘வைகாசி அனுசம்’ திருவள்ளுவர் நாளெனக் கூறிக்கொண்டு, காவி உடையுடன் கைகளில், நெற்றியில் திருநீற்றுப்பூச்சுடன், கழுத்தில் முண்மணிக்காய் மாலையுடன் வரைந்த திருவள்ளுவர் உருவப்படத்தை வைத்து வணங்கியதைச் செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.
திருவள்ளுவர் குறிப்பிட்ட எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், மொழிக்கும் அப்பாற்பட்ட ஒரு 'உலகப்பொதுமறை' தந்தவர். அவருக்கு ஒரு குறிப்பிட்ட சமய அடையாளத்தைத் (காவி உடை, திருநீறு, முண்மணிக்காய் மாலை) திணிப்பது, அவருடைய உலகளாவிய பொதுக்கருத்தின் எல்லையைச் சுருக்க முயல்வதாகும். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இன்று நாம் பார்க்கும் சமயப் பிரிவுகளோ, குறியீடுகளோ கிடையாது. எனவே, அவருக்குப் பிற்காலச் சமய அடையாளங்களை வழங்குவது வரலாற்று அடிப்படையில் பொருத்தமற்றதாகும்.
அரசியல் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் இத்தகைய படங்களைப் பயன்படுத்துவது, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளத்தைச் சுருக்கி இழிவுபடுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய ஒரு பேரறிஞரை இழிவுபடுத்துவது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் இரண்டு அமைச்சர்களும் பொறுப்பு ஆளுநர் அருலேகரின் இச்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இரண்டு பொதுவுடைமைக் கட்சிகளும், ம.தி.மு.க.வும் பல தமிழ் அமைப்புகளும், குமுகஊடகங்களில் எழுதும் பலரும் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கும் முன்பு, 10-05-2026 அன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில், வழக்கமாகத் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு மாறாக, வந்தேமாதரம் என்ற சமற்கிருதப்பாடல் முதலிலும், தேசியப்பாடல் இரண்டாவதாகவும் பாடியபின்பு இறுதியாகவும் மூன்றாவதாகவும் தமிழ்வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. இதற்குப் பல கட்சிகளும் அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.
மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநர்களின் இத்தகைய போக்குகளைப் பற்றியும் இவற்றிற்கு நிலையான தீர்வு காணவேண்டிய இன்றியமையாமையைப் பற்றியும் தமிழ் இளையோர் சிந்திக்கவேண்டும்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின் – கு. 965
- த.ந.
(சூன் 2026 புதுவை 'நற்றமிழ்' இதழில் வந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக