திங்கள், 7 ஏப்ரல், 2025

பாவேந்தரின் ‘தமிழியக்கம்’: இன்றைய தேவையும் தமிழர் கடமையும்!

 

பாவேந்தரின் தமிழியக்கம்’: இன்றைய தேவையும் தமிழர் கடமையும்!

=================================================

    பாவேந்தர் 1959ஆம் ஆண்டில் ஒருமுறை மதுரைக்குச் சென்றிருக்கின்றார். மதுரையில் கடைத்தெருக்களிலும் பிற இடங்களிலும் தமிழின் நிலைகண்டு மனம் வருந்தியிருக்கின்றார் அதன் விளைவாகக் கானாடுகாத்தான் வளமனையில் தங்கியபோது ஒரே இரவில் தமிழியக்கம்என்ற ஒப்பற்றவொரு நூலை எழுதியிருக்கின்றார்.

    பாவேந்தர் இலக்கியங்களிலேயே தலைசிறந்தவை, அழகின் சிரிப்பு, தமிழியக்கம், குடும்பவிளக்கு ஆகிய மூன்று படைப்புகளுந்தா ம்! அவற்றுள் ஒன்றான தமிழியக்கம்நாட்டு நிலைகளை மிக வெளிப்படையாகக் கூறித் தமிழ்மக்கள் தமிழ்மொழியின் சீரழிவை இன்னின்ன துறைகளில் மீட்டெடுக்க வேண்டும் என்ற வகையில் எழுந்த அருமையும், அழகும், கருத்துச் செறிவும் மிக்கதான ஒரு நூல்என்பது பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதியுள்ள கருத்தாகும்.

    தமிழ்நாட்டில் தமிழ் தாழ்த்தப்பட்ட நிலை தமிழர்க்கு அவமானமும் இழிவுமானதாகும். பிறர் தமிழைத் தாழ்த்துகின்ற நிலையும் தமிழரே பிறமொழிக்கு அடிமையாகி அறிந்தும் அறியாதும் தமிழைத் தாழ்த்துகின்ற நிலையும் தமிழை நலிவுறச்செய்து அழிப்புக்குள்ளாக்கும் செயல்களாகும். பொருளுக்காகவும் பிற நன்மைகளுக்காகவும் எவரையும் புகழ்ந்து பாடுவோரும், போலிப் புகழுக்காக எதைவேண்டுமானாலும் எப்படியும் பாடுவோரும் ஆகிய எழுத்து வீரர்கள் இப்போதுள்ள நிலைபோல் அவர் காலத்திலும் இருந்திருக்கின்றனர். இந் நிலைகளை மாற்றத் தமிழ் இளைஞர்களைக் கருத்தில் கொண்டே பாவேந்தர் இந்நூலை எழுதியிருக்கின்றார்.

இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் தமிழ் முன்னேற்றம் கருதி இயன்றவாறு கிளர்ச்சி செய்தால் தமிழ் விடுபடும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட புரட்சிநூலே தமிழியக்கம்’. இருபத்து நான்கு பகுதிகளில் தலைப்பு ஒவ்வொன்றுக்கும் ஐந்தைந்து பாடல்களாக அறுசீர் மண்டில யாப்பில் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ள நூற்று இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நெஞ்சு பதைக்கும் நிலைஎன்ற முதல் தலைப்பில் தமிழின் சிறப்புகளை ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டடிகளில் விளக்கி அடுத்த இரண்டடிகளில் தமிழழிப்பாளர் துறைதோறும் தமிழின் எழிலை அழிக்க எண்ணுவதை நினைக்கையிலே நெஞ்சு பதைக்கும், விளக்க வாய் பதைக்குமென வருந்திப் பாடுவார்.

இருப்பதைவிட இறப்பது நன்றுஎன்பது இரண்டாம் தலைப்பு. இதில், வாணிகர், புலவர், அரசியலர், கோயில் அறத்தலைவர், காப்பாளர், விழாவெடுப்போர், திருமணம் செய்துகொள்வோர், ஆசிரியர், மாணாக்கர், கூத்தர் (நடிகர்), வாய்ப்பாட்டாளர், இசைப்பாடல் எழுதுவார், சொற்பொழிளர், எழுத்தாளர், அச்சகத்தார், சொல்லாக்கத்தார், துண்டறிக்கையாளர், செல்வர், வல்லவர், பெரியநிலை வாய்த்தோர் ஆகியோரை யெல்லாம் விளித்து (அழைத்து) கடுஞ்சொற்களால் கண்டித்து ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் தமிழ் காவாது தமிழர் வாழ்வதினும் இறத்தல் நன்றே எனக் கோவத்துடன் கூறி எழுச்சியூட்டுகின்றார்.

வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திருஎனும் மூன்றாம் தலைப்பில், இளந்தமிழனை அழைத்து, ஒண்டமிழ்த்தாய் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம் என்று கூறி, கண்விழிப்பாய்! எழுந்திருநீ எனப்பலவாறு எழுச்சியூட்டி ஊக்கி, தமிழ்காப்பாய்! துறைதோறும் துறைதோறும் தமிழுக்கு உழைப்பாய்! எனத் தூண்டுகின்றார்.

மங்கையர் முதியோர் எழுக!என்பது நான்காம் தலைப்பு! பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்கப் பெண்களெலாம் பறந்துவாரீர்! என அழைக்கின்றார். தண்டூன்றும் முதியோரை நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகித் தமிழ்த்தொண்டாற்ற அழைக்கின்றார்.

வாணிகர் - ஐந்தாம் தலைப்பு! தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை!என மனம் நொந்து, வாணிகர் கடைப் பெயர்களைத் தமிழில் எழுதாத நிலையைக் குறிப்பிட்டு இடித்துரைத்து தமிழில் எழுதவைக்கும் பணியை முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

அடுத்த மூன்றுக்கும் ஒரே தலைப்பு, - ‘அரசியல்சீர் வாய்ந்தார்.கல்லூரித் தலைவர், பள்ளித் தலைமை ஆசிரியரை இடித்துரைத்துத் தமிழ் தழுவாச் சுவடிதனைத் தணல் தழுவாது இராதினிமேல்என எச்சரிக்கின்றார். தமிழ்நாட்டில் தெலுங்கு ஏன்? செத்த வடமொழிக்கு இங்கே என்ன ஆக்கம்? என்கின்றார். இங்கே, இசைப்பாட்டு பிறமொழியில் ஏற்படுத்த இசையலாமோ? என்கின்றார். அலுவலகம், அறமன்றம் இங்கெல்லாம் ஆங்கிலம் ஏன்? என்கின்றார். தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும், தமிழ்ப்பகைவன் வாராது தடுத்தல் வேண்டுமென்கின்றார். ஊராட்சி முதல் அனைத்து ஆட்சி மன்றங்களிலும் புக நினைப்பார் தகுபுலமை குறிக்கின்ற சான்று தரவேண்டு மென்கின்றார். தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்றொரு சட்டம் செய்ய வேண்டுமென்கின்றார். ஆங்கிலநூல் அறிவுக்குச் சான்றிருந்தால் அதுபோதுமென்கின்றார்.

அடுத்த இரண்டிற்குப் புலவர்எனும் தலைப்பு. தமிழ்ப்புலவர் ஒன்றுபடும் நன்னாள் தமிழர்க்குப் பொன்னாள்; தனித்தமிழில் தக்கபுதுப் பாவியம் இயற்ற நினைக்கவேண்டும். புது நூற்கள் புதுக்கருத்தால் பொதுவகையால் புலவர் தரவேண்டும்; ‘வாட்டடங்கண்என்பதை வாள்த்தடங்கண்என்றும் கற்றரையை கல்த்தரைஎன்றும் எழுதி பிழைபல குவிப்பார்க்குச் சாட்டைகொடுத்து அறிக்கைவிடத் தாள் ஒன்றும் அற்றதுவோ? என்கின்றார். ஆரியரை ஆதரித்துக் கிடப்பதொன்றே நலன் விளைக்கும் என்னும் மடமையினை நசுக்க வேண்டுமென்கின்றார்.

குடும்பத்தார்என்பது பதினொன்றாம் தலைப்பு. குடும்பத்தீர்! இல்லறத்தீர்! செந்தமிழ்க்கே வருமிக்க தீமையினை எதிர்த்திடுவீர் நெஞ்சாலும் வாய் மெய்யாலும்! இயற்கை தரும் தமிழ்மொழிக்குப் புரிந்திடுவீர் நற்றொண்டு, புரியாவிட்டால், இருள்மிக்க தாகிவிடும் வாழ்வென்று எச்சரிக்கின்றார்.

கோயிலார்என்பது அடுத்தத் தலைப்பு. வேற்றுவரின் வடமொழியை வேரறுப்பீர் கோயிலிலே என்கின்றார். உயிர்போன்ற உங்கள் தமிழ் கடவுளுக்கே உவப்பாகாதா? தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான தேனிருக்க வேதபாராயணம் ஏன்? என வினவுகின்றார்.

அடுத்தத் தலைப்பு, ‘அறத்தலைவர்’. அறம் இந்நாள் தமிழ்காத்தல் அன்றோ? செந்தமிழிற் புதுப்புது நூல் விளைப்பதற்குச் செல்வத்தைச் செலவு செய்தால் நந் தமிழ்நாடு உயராதோ? நலிவெல்லாம் தீராவோ என்று அறிவுறுத்துகின்றார்.

பதினான்காம் தலைப்பு விழா நடத்துவோர்’. எல்லோரும் கயிறிழுக்க இயங்குமொரு தேர்மீதில் ஆரியத்தைச் சொல்லிடுமோர் சொரிபிடித்த பார்ப்பானைக் குந்தவைத்தல் தூய்மைதானோ! என்றும், பணமிக்க தலைவர்களே, பழியேற்க வேண்டாம் நீர்! திருமணத்தில் மணமக்கள், இல்லறத்தை மாத்தமிழால் தொடங்கிடுக; மல்கும் இன்பம்! என்கின்றார்.

அடுத்தது, கணக்காயர். கணக்காயர் என்றால் ஆசிரியர், அறிஞர் என்று பொருள். எழுதவல்ல பேசவல்ல கல்லூரிக் கணக்காயர் எவரும் நாட்டின் முழுநலத்தில் பொறுப்புடனும் முன்னேற்றக் கருத்துடனும்  உழைப்பாராயின் அழுதிருக்கும் தமிழன்னை சிரித்தெழுவாள்; அவள் மக்கள் அடிமை தீர்வார்! எனப்பாடுகின்றார்.

பதினாறாம் தலைப்பு மாணவர். ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர் என்றும் பார்ப்பான்பால் படியாதீர், சொற்குக் கீழ்ப்படியாதீர், உம்மை ஏய்க்கப் பார்ப்பான்; தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் என்றும் இன்னும் பலவும் கூறி எச்சரிப்பார்.

அடுத்தத் தலைப்பு பாடகர்’. தமிழ்ப் பாடகர்க்குத் தமிழறிவு இல்லாமையைக் கடுமையாகக் கண்டித்து, தமிழ்மொழியில் தமிழ்ப்பாடல் மிகவுண்டு தமிழ்க்கவிஞர் பல்லோர் உள்ளார், உமைத்தாழ்வு படுத்தாதீர் பார்ப்பான் சொல் கேட்டபடி உயிர்வாழாதீர் என்கின்றார்.

அடுத்தது, ‘கூத்தர்’. ஆடுகின்ற மெல்லியலாள் அங்கையினைக் காட்டுவது பொருள் குறித்தே! நாடிடும் அப்பொருள் குறிக்கும் சொல் தமிழாய் இருப்பதுதான் நன்றா? அன்றித் தேடிடினும் பொருள்தோன்றாத் தெலுங்கு வடசொல்லாதல் நன்றா? என வினவுகின்றார்.

பத்தொன்பதாம் தலைப்பு, ‘பாட்டியற்றுவோர்’. செயற்கரிய நந்தமிழர் என்னென்ன செய்தார்கள்? செந்தமிழ்க்காம் முயற்சி எவை நாட்டிற்கு முடிப்ப தென்ன? இவையனைத்தும் தனித்தமைந்த வியத்தகுசெந் தமிழாலே வெல்லத்துத் தென்பாங்கில் பாடவேண்டும் எனக் கூறுகின்றார்.

சொற்பொழிவாளர்என்பது அடுத்த தலைப்பு. மொணமொணெனக் கடவுளரின் முச்செயலின் பொய்ப்பேச்சில் முழுகவைப்பார் கணகணெனத் தமிழ்க்கல்வி கட்டாயம் செயத்தக்க கருத்தும் சொல்லார் என்றும், கலகத்தைச் சமயத்தைக் கழறுவதை காதாலும் கேட்கவேண்டாம் என்றும் பாடுவார்.

அடுத்த இரண்டிற்கும் ஏடெழுதுவார்எனும் தலைப்பு. பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும் பைந்தமிழ்க்கோ சீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும் நன்மையிலை என்றும் இலக்கணமும் இலக்கியமும் அறியாதான் ஏடெழுதல் கேடு நல்கும் என்றும், சின்னபிழை ஏடெழுதும் கணக்காயன் செய்திடினும் திருநாட்டார்பால் மன்னிவிடும் ஆதலினால் ஏடெழுதும் வாழ்க்கையிலே விழிப்பு வேண்டும் என்றும் பாடுகிறார்.

இருபத்து மூன்றாம் தலைப்பு பெருஞ்செல்வர்’. தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும், இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும் என்று தெளிவுறப் பாடுகின்றார்.

மற்றும் பலர்என்பது இறுதித் தலைப்பு. இதில் அச்சகத்தார், கலைச்சொல்லாக்கத்தார், அரசினர், பெரியநிலை அடைந்தாரையும் பிறரையும் எச்சரித்துத் தமிழ் போற்ற அறிவுறுத்துகின்றார். கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க என்றும் மொழிப்போரே வேண்டுவது தொடக்கஞ் செய்வீர் வெல்வீர் என்றும் வழிகாட்டுவார்.

தமிழியக்கப் பாடல்களால் பாவேந்தர், தமிழ்ப்பகையைக் கடுமையாகக் கண்டித்தும் தாக்கியும், தமிழரை இடித்துரைத்தும் நெறிப்படுத்தியும் செயலுக்கு ஊக்கியும் தமக்கே உரிய முறையில் தமிழ்க் காக்கத் துடிக்கும் தம் உணர்வைத் தமிழர்க்கும் உண்டாக்கப் பெரிதும் முயன்றார். அந்நூல் தமிழரை ஓரளவு எழுச்சியுறச் செய்ததால், தொடக்கத்தில் ஓரளவு தமிழ்க்காப்பு வினைப்பாடுகளால் நன்மைகள் விளைந்தன. தமிழ்ப்பகை பெருமளவு அடங்கி ஒடுங்கி இருந்தது. ஆனால் தொடர் வினைப்பாடின்மையால் பின்னர் அந் நல் விளைவுகளும் படிப்படியே மறைந்து இக்கால் தமிழ் முன்னினும் வீழ்வுற்று வருவதைக் காண்கின்றோம். எனவே, ‘தமிழியக்கம்இப்பொழுதே இன்றியமையாததாக இருக்கின்றது.

பாவேந்தர் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இக்கால் பள்ளி கல்லூரிகளில் தமிழாசிரிர்களாகவும் தமிழ்ப் பேராசிரியர்களாவும் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் (விரல் விட்டு எண்ணத்தக்க சிலரைத் தவிர) தமிழப்பற்றும் தமிழர் என்ற உணர்வும் இல்லாதவர்க ளாகவே இருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள இவர்கள் ஆசிரியப் பணியை முறையாகச் செய்கிறார்களோ இல்லையோ, வட்டிக்கு விடுதல், தரகு, செங்கல்சூளை இன்னோரன்ன பிற பணிகளில் ஈடுபட்டு பணத்தின் பின்னே ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நாம் கேள்விப்படுவதில் உண்மையில்லாம லில்லை. இந்நிலைகள், பாவேந்தர் தமிழியக்கத்தின் இரண்டாம் தலைப்பை எழுதிய உணர்வைப் புரிந்து கொள்ள உதவுகின்றன..

இன்றைய நிலையில், தமிழியக்கத்தைச் செயற்படுத்தத் தமிழ் இளையோர் ஈடுபட்டாக வேண்டும் ஈராயிரமாண்டுக்கும் மேற்பட்ட கால இன்னலிலிருந்து தமிழை மீட்டாக வேண்டும். தமிழின் தமிழரின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகாமல் தவிர்க்க, பாவேந்தரின் ஆணைகளை நிறைவேற்றியாக வேண்டும். இந் நிலைகளைக் கண்ணுற்றே பாவலரேறு பெருஞ்சித்திரனார் கீழ்க்காணும் வகையில் பாடினார்:

இன்றைக்கே எழாமல்நீ என்றைக்குத் தான்எழுவாய்

எண்ணிப் பார்ப்பாய்!

என்றைக்குக் காலமினி ஏற்றபடி கனிந்துவரும்,

இந்நாள் போல

குன்றைத்தூள் செய்கின்ற வல்லுணர்வை உன்நெஞ்சில்

குவிக்கும் வண்ணம்

என்றைக்குப் பாவேந்தன் இனியொருகால் எழுந்துவந்தே

எழுதித் தீர்ப்பான்?

---------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை: