அகத்தியர் புரட்டு:
தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! - 1.
‘காசி
தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் முதல், இரண்டாம்
நிகழ்ச்சிகள் கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் வாரணாசி
என்னும் காசியில் நடைபெற்றன. அப்போது, அரசுச் செலவிலேயே தமிழ்நாட்டிலிருந்து
சிலரைக் காசிக்கு அழைத்துச் சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வைத்துத் தமிழ்நாட்டிற்குத்
திரும்ப ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி ‘காசி
தமிழ்ச் சங்கமம் 3.0’ எனும் பெயரில் 2025 பெப்ருவரி 15 முதல் 24 வரை 10 நாட்கள் நடைபெறும் செய்தியை இந்திய ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சர் தருமேந்திர பிரதான் தில்லியில் 15–1-2025 அன்று அறிவித்தார்.
அப்போது,...“இந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள்
அயோத்தி இராமர் கோயிலையும் பிரயாக்குராசில் நடைபெறும் கும்பக்கூடல் விழாவையும் (கும்பமேளா’வையும்) காணலாம் என்றார். காசி தமிழ்ச் சங்கமம் 3.0இன் கருப் பொருளாக ‘அகத்தியமுனி’யை வைத்துள்ளதாகக் கூறினார்…
“…அகத்தியமுனி, தமிழ்
இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவர்;.காசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான சிறந்த இணைப்பாக
இருந்தார் என்றார்.
இமாலயத்தில் பிறந்தவரான அகத்தியரிடம்
சிவன்,
தமிழகத்துக்குச் செல்லும்படி கட்டளையிட்டதாக
நம்பிக்கை உள்ளது. இதில், அகத்தியரிடம்தான் முருகன் தமிழ்
இலக்கணம் கற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்திய சித்த மருத்துவ (வைத்திய) முறையைத் தோற்றுவித்தவராகவும் அகத்தியர் இருந்ததால் அவரது பிறந்தநாளைத் தேசிய சித்த நாளாக
டிசம்பர் 19-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகம், கேரளாவின் களரிக் கலையை தோற்றுவித்தவர் அகத்தியர்
என்ற நம்பிக்கையும் உள்ளது.
தமிழ் அரசர்களான சோழர்கள் மற்றும்
பாண்டியர்களுக்கு குலகுருவாகவும் அகத்தியர் இருந்துள்ளார். செம்மொழி தமிழின்
இலக்கியத்தில் அகத்தியரின் பங்கு அதிகமானது. தமிழ் மற்றும் சமற்கிருத
மொழிகளில் அகத்தியர் பல நூல்களையும் எழுதியுள்ளார். இருக்கு மறையில் (ரிக்வேதத்தில்) சுமார் 300
மந்திரங்களையும் எழுதியுள்ளார். போர் நுட்பமான ‘அதித்ய ரித’த்தை அகத்தியர் இராமருக்குக் கற்பித்ததால் அவர் இலங்கைக்குச் சென்று போரில் வென்றார். அகத்தியரைப் பற்றி இராமாயணம், மகாபாரதம், புத்த
இலக்கியங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அகத்தியர் தம் மனைவி ‘உலோபமுத்திரா’வுடன் பாரதத்தின்
ஆயிரக்கணக்கான கோவில்களில் குறிப்பாகத்
தமிழகத்தின் காவிரிக் கரையில் வழிபாடுகள்
செய்த ஒரே முனிவர். அகத்தியர் வழிபாடுகள் கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, சாவா, கம்போடியா, மற்றும் வியத்நாமில் நடத்தப்படுகின்றன. இந்த
அளவுக்குப் புகழ்பெற்ற அகத்திய முனி
இந்தமுறை ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ -இன் மூல அடிப்படையாக இருப்பார்…
காசி தமிழ்ச் சங்கமம் 3.0இன் போது காசியில், முனிவர் அகத்தியர் திறனின்
பல்வேறு கூறுகளான நலவியல், மெய்யியல், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை பற்றியதும், குறிப்பாகத் தமிழ்,
தமிழ்நாடு ஆகியவற்றிற்கு அவர் அளித்த பங்களிப்புகள் பற்றியதுமான கண்காட்சி, கருத்தரங்குகள், பட்டறைகள், புத்தக வெளியீடு மற்றும் பிற நிகழ்வுகள் ஏற்பாடு
செய்யப்படும்...
கா.த.ச.3.0க்கு முன் போட்டிகள் மற்றும் பிற விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டிலும், மிகுதியான அளவு புலம்பெயர்ந்த தமிழர் உள்ள
இந்திய, வெளிநாட்டு முக்கிய நகரங்களில்
தகுந்த முறையில் ஏற்பாடு செய்யப்படும்…
அகத்தியருடைய அறிவார்ந்த திறம் தமிழ் மொழிக்கும்
இலக்கியத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது…
இந்த ஆண்டு ‘கா.த.ச.3.0’ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து மாணவர், ஆசிரியர், எழுத்தாளர்
பிரிவினர், உழவர், கைவினைஞர் பிரிவினர், தொழில்வல்லார், தொழில் முனைவோர் பிரிவினர்,
பெண்கள் (முத்திரா கடன் பயனாளிகள், தக்கண பாரத இந்தி பரப்புரையர்) பிரிவினர், தொடக்கநிலைத்
தொழில் நிறுவனத்தர், புத்தாக்கத்தர், கல்விநுட்பாளர், ஆய்வாளர் பிரிவினர் என்னும் ஐந்து
பிரிவினரிலிருந்தும் ஏறத்தாழ 1000 சார்பாளர்கள்
கலந்து கொள்வர்…
காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பிற்கு எழுச்சியூட்டும்
இந்நிகழ்ச்சியில் இவர்களுடன் கூடுதல் குழுவாக பல்வேறு நடுவண் பல்கலைக்கழகங்களில் தமிழின்
தோற்றம் பற்றி ஆய்வுசெய்யும் ஏறத்தாழ 200 மாணவர் பங்கு பெறுவர். இந்தச் சுற்றுச்செலவு
நடைபெறும் காலம் எட்டு நாள்களாகும். (நான்கு நாள்கள் செலவுக்காலம், நான்கு நாள்கள்
பார்வையிட) முதல்குழு தமிழ்நாட்டிலிருந்து பெப்புருவரி 13-ல் புறப்படும். கடைசிக் குழு தமிழ்நாட்டிற்கு
பெப்புருவரி 26-ம் நாள் திரும்புகிறார்கள்”... - என்று அமைச்சர் தருமேந்திர
பிரதான் தெரிவித்தார். (போக்குவரத்து, உணவு, தங்கிடம் முதலிய எல்லாச் செலவுகளையும்
இந்திய ஒன்றிய அரசு ஏற்றுச் செலவழிக்கின்றது)…– என்றும் ஒன்றிய அமைச்சர் கூறியிருக்கின்றார்.
அமைச்சர் தெரிவித்த அகத்தியர் பற்றிய செய்திகள் வெறும்
கற்பனையான மூடநம்பிக்கைக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன் எந்த அடிப்படைச்
சான்றும் அறிவியல் நோக்கும் அற்றவை என்பதும் தெளிவான உண்மையாகும். இவற்றில் உண்மை இல்லாத
செய்திகளும் உள்ளன.
தக்க அடிப்படைகள் இல்லாத, மதநம்பிக்கைத் தொடர்பான
நிகழ்ச்சிகளை மதச்சார்பற்ற அரசு பெரும் பொருட்செலவில் நடத்துவது அதிகாரத்தைத் தவறாகப்
பயன்படுத்தும் செயலாகவே உள்ளது. இவையிருக்க, இந்தக் ‘காசி தமிழ்ச்
சங்கமம் 3.0’ நிகழ்ச்சியின் கருப்பொருளாக அகத்தியரை வைத்து அரசியல் செய்வதில்
சூழ்ச்சி இருப்பதாகவே ஐயுறுகின்றோம். அவற்றைப் பற்றிப் பின்னர்ப் பார்ப்போம்.
மேற்குறித்த ‘காசி தமிழ்ச் சங்கமம்
3.0’ஐ, முன்னிட்டு, சென்னையில் நடுவண்
செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனமும் சாத்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து, அகத்திய
முனிவர் போல உடை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு நடைச்செலவு
ஊர்வலம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர். ‘சாந்திபனி வித்தியாலயா’, ‘’பிஎசு சீனியர், பிஎசுபிபி, பவன்சு இராசாசி வித்தியாசிரமம்’ ஆகிய
பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8-ம் வகுப்பு படிக்கும்
மாணவர்கள் இதில் பங்குபெறச் செய்தனர். இந்திப் பரப்பவையில் தொடங்கி தியாகராய நகரில் உள்ள அகத்தியமுனிவர் கோவிலில் நடைச்செலவு
முடிவடைந்தது.
பங்கேற்றோர் அனைவருக்கும் அகத்தியர் குறித்த ‘அமர
சித்திரா கதா’ வெளியிட்ட அகத்தியர் பற்றிய நூல் ஒன்று வழங்கப்பட்டது. மேலும் படையலுணாவும் (பிரசாதம்) வழங்கப்பட்டது. சாத்திரா
பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் எசு.வைத்திய சுப்பிரமணியன், சாத்திராவின் சென்னை
இயக்குநர் மருத்துவர் சுதா சேசையன், மேற்குறித்த பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் இந்த
நடைச்செலவில் பங்கேற்றனர் இந்த நடைச்செலவுச் செய்தியை இந்திய அரசும் வெளியிட்டுள்ளது.
நடுவண் செம்மொழி தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர் தமிழ்நாட்டு அறிஞர் பலரின் எதிர்ப்பைப்
பொருட்படுத்தாது அமர்த்தப்பட்ட திருவாட்டி சுதா சேசையன் என்பவராவார். சாத்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சென்னை
இயக்குநராக இருப்பவரும் அவரே.
இன்னும், கா.த.ச.3.O-ஐ
முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் 9ஆம்
வகுப்பு முதல் 12ம் வகுப்பு
வரையிலான பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் அகத்தியர்
குறித்த கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும்,
இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும்
வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள்களும்
மின்னூடகங்களும் கா.த.ச.3.O-ஐப் பரவலாக விளம்பரப்படுத்தின. ‘தினமணி’ நாளிதழ்
28-1-2025இல் அகத்தியர் பற்றிக் கற்பனைக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் கொண்ட அறிவியலுக்குப்
பொருந்தாத நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
புதுச்சேரிப்
பல்கலைக்கழக பாரதியார் தமிழியற்புலம் எழுத்தாளர் மாலனை கருத்தரங்கிற்கு அழைத்து, ‘அகத்தியரும்
தமிழும்’ எனும் தலைப்பில் பேசவைத்துள்ளனர். அவரும் அகத்தியர் இருக்கு மறையில் 27 ‘சூக்தங்கள்’
எழுதியிருக்கிறார் என்றும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் அவரே என்றும் பாரதி அதை வலியுறுத்தியுள்ளார்
என்றும் போகிற போக்கில் போட்டுத் தள்ளிவிட்டுப் போயிருக்கின்றார்.
பணிநிறைவு
செய்த பேராசிரியர்களையும் பதவியில் உள்ளோரையும் அகத்தியர் பற்றிப் பேச வலிந்து வலிந்து
அழைக்கின்றனர். பணிநிறைவு செய்த பேராசிரியர்கள் இவர்களுக்கு இசையப் பேசி சிக்கலில்
மாட்டிக்கொள்ள விரும்பாதோராய் இவர்களைப் பார்க்கவும் விரும்பாது தவிர்க்கின்றனர். ஏக்கத்துடன்
எதிர்பார்ப்புக்கு ஆட்பட்ட சிலர் மட்டுமே தலையாட்டிச் செல்கின்றனர்.
முகநூல்
முதலிய குமுக ஊடகங்களில் மாலன் வகையினரும் ஓரிரு தமிழ் வெறுப்பாளரும் தொடர்ந்து அகத்தியனால்
தான் தமிழ்மொழியே தோன்றியது என்றும் இலக்கியம் தோன்றியது என்றும் தமிழ் வெறுப்பைக்
கக்கத் தொடங்கி, உண்மைத் தமிழ் உணர்வாளர்களின் தெருட்சியால் (தெளிவுரையால்) வெருட்சியுற்று
(அச்சமுற்று) அடங்குகின்றனர்.
இத்தகையோரின்
கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் தக்க விடைகளைக் கூறி இவரகளின் உண்மை உருவை வெளிப்படுத்துவதற்கு
முன்பாக, இவற்றிற் கெல்லாம் காரணம் என்ன? திடுமென இவர்கள் அகத்தியரைத் தேடிப்பிடித்துத்
தூக்கிக் கொண்டு அலைவது ஏன்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தத்
தமிழர்களுக்குத் அவர்களின் தாய்மொழி மீதுள்ள உயிரனைய பற்றை உடைத்தெறிய வேண்டும். அப்போதுதான்
சங்கதத்தை (சமற்கிருதத்தை)த் தமிழ்நாட்டில் திணிக்க முடியும்; ஒரே நாடு ஒரே மொழி என்றாக்க
முடியும்.
தமிழ்நாட்டில்
ஆட்சிக்குவரும் இரண்டு கட்சிகளுமே இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன; அதனால்
இந்தித் திணிப்பின் வழி சங்கதத்தை(சமற்பிருதத்தை)த் திணிக்க முடியாத இக்கட்டுநிலை உள்ளது!
தமிழகத்துக்குத் தெற்கே
இருந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டத்தில் தமிழ்மொழி
இயற்கையாகத் தோன்றியதென்ற கொள்கை உள்ளதாலும், கடல்கோள்களால்
அப்பகுதி அழிய, மெள்ளமெள்ள வடக்கே வந்தவர்களால் அம்மொழி அழியாமல் என்றுமுள தென்றமிழாய் விளங்குகின்ற
நிலையாலும் சங்கதத்தை எளிதில் திணிக்கமுடியாத நிலை உள்ளது!
மொழியியல்
வழி தமிழ் இயற்கை மொழி என்று ஆய்வறிவர் கூறுவதை மாற்ற, தமிழ்மொழியே வடக்கிலிருந்து
வந்த அகத்தியரால் தான் ஏற்பட்டதென்று பொய்யான மூடநம்பிக்கைக் கதைகளின் துணையுடன் வலியுறுத்திக்
கூறி, தமிழின் சிறப்பைச் சிதறடிக்க வேண்டும்!
அண்மைக்
காலமாகத் தமிழ்நாட்டு அகழ்வாய்வுகளில் சிந்து வெளிக்கும் வைகைக் கரைக்கும் தொடர்பை
உறுதிப்படுத்தும் புத்தொளித் தரவுகள் கிடைத்து வருகின்றன. ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளைத்
தொல்லியல் தடயங்கள் தொன்மைச் சிறப்போடு, இந்தத் தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை
உறுதிசெய்து வருகின்றன. சிந்துவெளிக் குறியீடுகளையும் தமிழ்நாட்டு அகழ்வாய்வில் கிடைத்த
பானைக் குறியீடுகளையும் முறையாக ஒப்பீடு செய்யும் முயற்சிகள் தொடர்கின்றன.
சிந்துவெளி நாகரிக வெளிப்பாட்டின் நூற்றாண்டு விழாவைத்
தமிழ்நாடு கொண்டாடுகிறது. அண்மைக்காலத்
தொல்லியல் தடயங்களும் தரவுகளும் இந்தியாவின் பழங்குடிகள் தமிழரே எனத் தெள்ளத்தெளிவாக
விளக்குகின்றனவாக இருக்கின்றன.
இந்தியத் துணைக் கண்டத்திற்கான தொன்மைச் செவ்வியல் இலக்கியங்களாகக் கழக(சங்க) இலக்கியங்களை முன்னிறுத்தக்
கூடியவகை அயலக அறிஞர் மறு ஆய்வுப் படிப்பு அமைகிறது.
2000த்தில் ‘பென்னிகுயிக்கு’ என்ற ஆங்கிலேயருக்குத்
தமிழ்நாட்டில் சிலை நிறுவியதும் பிரித்தனிலும் அவருக்குச் சிலை நிறுவ இருப்பதுமான செய்திகள்
வருகின்றன. சிந்துவெளி நாகரிகத்தை நூறாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய சர் சான் மார்சலுக்குத்
தமிழ்நாட்டில் சிலைவைக்கப்படும் என்ற அறிவிப்பு செய்யப்படுகின்றது!
மேற்கூறிய காரணங்கள் தந்த கலக்கத்தால், வரலாற்றில்
புரட்டு செய்யமுடியாமற் போகின்ற காரணத்தால், இப்போது அகத்தியரைப் பிடித்துக்கொண்டு
தொங்குகின்றனர். வட ஆரிய, பிராமண முனிவர் அகத்தியர்தான் தமிழ் மொழி உருவாகக் காரணமாக இருந்தார்
என எல்லோரையும் நம்ப வைக்கவே அகத்தியரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அலைகின்றார்கள்
என்பது தெரிகின்றது. இலக்கியக் கூலிப் படையினரையும் வாயை வாடகைக்கு விட்டுப்
பிழைப்பாரையும் கொண்டு இக்கால் இவர்கள் இந்த அகத்தியர் புரட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகத்தியரைப் பற்றி இன்று
நாட்டில் பலகதைகள் வழங்குகின்றன. அவற்றுள் மிகப்பெரும்பாலன கற்பனைகளாகவே
உள்ளன என்றே ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
திரு. கா. சுப்பிரமணியப்
பிள்ளை அவர்கள் தம் தொல்காப்பிய எழுத்ததிகார முன்னுரையில் அகத்தியர் இருவர்
இருந்தனர் எனவும் அவர் இருவரும் பல்வேறு வகையில் வேறுபட்டு வாழ்ந்தவராவர் எனவும்
குறிக்கின்றார்.
மறைமலையடிகள் தம்முடைய ‘மாணிக்கவாசகர் காலம்’ என்னும் நூலில், “இருக்கு வேதத்தில்
பல பதிகங்களை இயற்றிய அகத்தியர் மிகப் பழைய காலத்தே இருந்தவர். இவர் தெற்கேயுள்ள தமிழ்நாடு
புகுந்தவர் அல்லர். தமிழ் அறிந்தவரும் அல்லர்” என்று எழுதியிருக்கின்றார்.
வடநாட்டு அகத்தியரின் வேறாகத் தமிழ்நாட்டின் பொதிய மலையில் நல்ல பண்பும் திறமும் உடைய வேறு ஓர் அகத்தியர் இருந்தார் எனவும், அவருக்கும் வடமொழிக்கும் தொடர்பு ஒன்றும் இருந்ததில்லை எனவும், பெயர் ஒற்றுமையால் இடைக்காலத்தில் இருவரையும் ஒருவரெனக் கருதியமையே பல்வேறு கற்பனைக் கதைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்ததென்ற கருத்தும் அறிஞர்கள் கருத்துரைக்கின்றனர்.
அகத்தியர் பலர் இருந்தனரென்பது
உண்மை என்று கா.நமசிவாய முதலியார் தம் ‘அகத்தியர் ஆராய்ச்சி’ நூலில்(1931) குறிப்பிட்டுள்ளார்.
துடிசைகிழார் அ.சிதம்பரனார்
‘அகத்தியர் வரலாறு’ (1964 கழக வெளியீடு) என்ற அவருடைய நூலில் தோற்றுவாயில் கீழே உள்ளவாறு
எழுதுகின்றார்:
“அகத்தியர் என்ற
பெயர்கோண்ட புலவர்களும் முனிவர்களும் சித்தர்களும் அறிஞர்களும் பொதுவான மாந்தரும் அரசியல்
தூதுவர்களும் பலராவர். அவர்கள் எல்லாம் ஓர் ஊரார் அல்லர்; ஒரு குலத்தவர் அல்லர்; ஒரு
காலத்தவர் அல்லர் ஒரே தொழிலை உடையவரும் அல்லர்.
அகத்தியர் என்னும்
பெயர் முதன்முதல் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வந்த ஒரு சிறந்த தமிழ்ப்பெயர் அதனால்
அப்பெயரை எல்லோரும் தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இட்டு வழங்கி வந்தார்கள்.
தமிழ் நாட்டாரேயன்றி,
ஆரிய நாட்டாரும், சாவக நாட்டாரும் கடார நாட்டாரும் ஈழ நாட்டாரும் ஐரொப்பிய நாட்டாரும்
அப்பெயரைத் தங்கள் தங்கள் மக்களுக்கு இட்டு வழங்கி வந்தார்கள்….”
மேலே குறிப்பிட்டுள்ள
செய்திகளோடு, கி.மு.16000 முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை முப்பத்தேழு அகத்தியர்
இருந்தனர் என்று காலக் கணக்குடன் துடிசைகிழார் அந்நூலில் எழுதியிருக்கின்றார். மேலும்,
இருக்குவேத
காலத்து அகத்தியர் நால்வர் என்றும் அந்நால்வரும் ஆரியர்களே தமிழர் அல்லரென்றும் அவர்களுக்குத்
தமிழ் தெரியாது என்றும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களும் அல்லர் என்றும் சிதம்பரனார்
கூறுகின்றார்.
”அகத்தியன்”
என்பது ஒரு தனிப்பட்ட இயற்பெயர் அன்று; தமிழில் அஃது ஓர் ஐயனையோ தலைவனையோ பெரியவனையோ குறிக்கும் பொதுப்பெயர் என்றும் அறிஞர் கூறுகின்றனர்.
இவ்வாறெல்லாம் ஆய்வரும்
அறிஞரும் கருதுகையில், அறிவுக் கொப்பாத வகையில் இந்திய ஒன்றிய அமைச்சர் முதல் தினமணி
வகையினரான மேதையர் பேதையர் கோதையர் வரை காலக் கணக்கைக் கூடக் கருத்தில் கொள்ளாமல்,
கற்பனைக் கதைகளை உண்மையானவை என நம்பி, அகத்தியர் ஒருவரே என்று கருதி எழுதி பேசிடும்
நிலைக்கு என்னென்று இரங்குவது?
இனி, அகத்தியர் பற்றிப்
பலரும் குழப்பமான பல செய்திகளை எழுதியும் பேசியும் வருகின்ற நிலையில், முதலில், அகத்தியர்
பற்றி வடமொழியில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம்:
இரிக்கு ‘வேத’த்தில் முதன்முதலாக அகத்தியர் பெயர் இடம் பெறுகிறது. அகத்தியரின்
27 பாடல்கள் இரிக்கு ‘வேத’த்தில் உள்ளன என்று எழுத்தாளர் மாலன் பேசியிருக்கின்றார்.
இன்னொருவர், 26 ‘சூக்தங்கள்’ உள்ளன என்று கூறுகிறார். இந்திய அமைச்சர் தருமேந்திர பிரதான்,
அகத்தியர் இரிக்கு வேதத்தில் ஏறத்தாழ 300 மந்திரங்களை
எழுதியுள்ளார் என்று கூறுகிறார். இதிலேயே அவர்களுக்குத் தெளிவில்லை.
திருமந்திரமணி,
துடிசைகிழார் அ.சிதம்பரனார் இருக்கு வேதத்தில் மண்டலம் ஒன்றில் அனுவாகம் 23இல் 'சூக்குதங்கள்'166,
167 முதல் 191 வரையிலானவற்றில் 26 'சூக்குதங்கள்' பல தெய்வங்களின் மீது அகத்தியர் பெயரில்
பாடப்பட்டவை என்று குறிப்பிட்டு எவ்வெத் தெய்வங்களை எவ்வெச் 'சூக்குதங்க'ளில் பாடியுள்ளரெரெனப்
பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
மேலும், வடமொழி அகத்தியரின்பிறப்பு
அருவருப்பான கற்பனைக் காமக்கதையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அக் கதையைக் கீழே
காண்க:
தாரகன் என்னும் அரக்கன் கடும் தவம் புரிந்ததன் மூலம்,
கடலுக்குள் சென்று ஒளிந்து வாழும் வரமும்,
ஒரு குடம் அளவு உள்ளவரால் தான் தனக்கு இறப்பு நேரவேண்டும் என்ற வரத்தையும்
பிரமனிடம் இருந்து பெற்றுக்கொண்டான். இந்த உலகத்தை அரக்கர்கள்
ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, முனிவர்களையும், மற்றவர்களையும் தன் அரக்கர்
கூட்டத்துடன் சென்று துன்புறுத்தத் தொடங்கினான். இதனால்
தேவர்களுக்கான பூசைகளும், வேள்விகளும்
தடைப்பட்டன. தேவர்களின் ஆற்றல்களும்
குறைந்தன.
தேவர்கள் இந்திரனிடம்
சென்று தாரகன் பூவுலகில் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கூறினார்கள். முனிவர்களையும், மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். இவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தேவலோகத்திலிருந்து இந்திரன் கோவத்துடன் தாரகனை அழிக்கப் பூவுலகம் வந்தடைந்தான். இதனை அறிந்த தாரகன்
கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இந்திரனால் தாரகனைப் பின்தொடர்ந்து
கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதற்குத் தீர்வுகாண இந்திரன் முதலில் நெருப்புக்
கடவுளை அழைத்து, உன் வெப்பத்தால் இந்தக் கடலை
ஆவியாக்கி விடு என்று கூறினான். ஆனால் நெருப்புக் கடவுளோ, “கடல் நீர் இருந்தால் தான் மழை பெய்யும். தண்ணீர் இல்லாமல் எந்த உயிரியும் நிலவுலகில் வாழ முடியாது. இந்தக் கொடுமையை நான் செய்ய மாட்டேன்.” என்று கூறிவிட்டான். இரண்டாவதாக இந்திரன் காற்றுக் கடவுளை அழைத்து வறண்ட காற்றினால் கடலை வற்ற வைக்கும்படி கூறினான்.
ஆனால் காற்றுக் கடவுளும் நெருப்புக் கடவுள் கூறிய காரணத்தைக் கூறித் தன்னாலும் முடியாது என்று கூறிவிட்டான்.
இதனால் சினமுற்ற இந்திரன் காற்றுக்
கடவுளும், நெருப்புக் கடவுளும் பூவுலகில் மாந்தராகப் பிறந்து தொல்லைப்பட வேண்டும் என்று சாவமிட்டான்.
நெருப்புக் கடவுள் மித்திரன் என்ற
பெயரிலும், காற்றுக் கடவுள் வருணன்
என்ற பெயரிலும் பூவுலகில் மாந்தராகப்
பிறந்தனர்.
இதற்கிடையில் தேவநடியான பேரெழிலி என்னும் ‘ஊர்வசி’ தொடர்பான
ஒரு கதை உள்ளது. இந்திரன் ஊர்வசியை நடனமாடப் பணித்தபோது அவள் இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால்
தன்னிலை மறந்தாள் எனவும் அதனால் சயந்தனும் ஊர்வசியும் பூவுலகில் பிறக்கும்படி சாவமிடப்
பட்டதாகவும் அந்தக் கதை கூறுகிறது.
தேவருலகத்தில் செய்த தவற்றினால்
சாவம் பெற்ற பேரெழிலி என்னும் ‘ஊர்வசி’
பூவுலகம் வந்து இருந்தாள். அவள் ஒரு குளத்தில் நீராடிக்
கொண்டிருக்கும் போது, மித்திரனும், வருணனும் அவளைக் கண்டனர். இதற்குமுன் அவள் போலும் பேரழகியை அவர்கள் கண்டதில்லை. அப்போது அவர்களிடம் இருந்து விந்து வெளிப்பட்டது. மித்திரன் தன் கையில் இருந்த
கும்பத்தில் விந்தை வெளியிட்டான். வருணன் தன் விந்தைத் தண்ணீரில்
விட்டான். கும்பத்தில் இருந்து பிறந்தவர்தான்
அகத்திய முனிவர். தண்ணீரிலிருந்து பிறந்தவர்தான் வசிட்ட முனிவர்.
அகத்தியர் உலோபாமுத்திரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும் ஒரு கதை கூறுகிறது.
சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தெற்கு உயர்ந்து வடக்கு தாழ்ந்ததால். சிவன் அகத்தியரை தெற்கிற்கு அனுப்யிச் சமன்செய்ததாகவும் ஒரு கதை நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றது.
வாதாபி, வில்வலன்
என்னும் அரக்கர்கள் இருவர் இருந்தனர். இருவரில் வில்வலன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர்
முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கொன்று கறியாய்ச்
சமைத்துப் படைத்து, அவர்கள் உண்டபின், வாதாபியை திரும்ப
அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால்
அவர்கள் இறந்து போவார்கள்.
முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அவர்கள் துன்பம் தீர்க்க, அகத்தியர் வாதாபி, வில்வலனிடம் விருந்து உண்ணச்
சென்றார். வில்வலன் உணவு படைத்துவிட்டு அகத்தியர்
வயிற்றிலிருக்கும் வாதாபியைக் கூப்பிட,
அகத்தியர் “வாதாபியே செரித்துப் போ’ (சீர்ணோ பவ) என்று வயிற்றைத் தடவிட வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வலன்
அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான். – என்றும் ஒரு கதை.
சிவன் சிவை திருமணத்தில் வடக்குத் தாழ தெற்கு உயர்ந்தது, அதனால் சிவன் அகத்தியரை
தெற்குக்கு அனுப்பினான் என்று தமிழிலுள்ள கந்தபுராணத்தில் உள்ள
கதை, வடமொழியில் உள்ள கந்தபுராணத்தில் இல்லை. அவரைத் தமிழ் அறிந்த
முனிவராகக் கந்தபுராணம் எங்கும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.
கந்தபுராணத்தில் காட்டப்படும் அகத்தியர், அப்புராணத்தை
ஒட்டிக் காளிதாசர் எழுதிய குமார சம்பவத்தில் இடம்பெறவில்லை.
பெருமான் திருமணத்துக்கு எத்தனையோ கடவுளரும் முனிவரும்
வந்தனர் எனக் காட்டும் ஆரியர், அகத்தியர் வந்ததாகக் குறிக்கவில்லை என்பதை
வடமொழி வாயிலாகக் கற்ற அறிஞர்கள் நன்கு விளக்கிக் காட்டுகின்றனர். எனவே, அந்தப் புராண வரலாறே அகத்தியரைப் பற்றி
மாறுபட்ட கருத்துகளைத் தருகின்றது.
இனி, இந்திய ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருப்பவர் அகத்தியர் பற்றிக்
கூறிய செய்திகளின் தகைமை என்ன என்று பார்ப்போம்.
(அகத்தியர் புரட்டு… தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக