விழுப்புரம்
‘புத்தகக் காட்சி’ அரங்கில் 5-3-2025இல் தமிழநம்பி ஆற்றிய உரை:
====================================================
மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய அன்பார்ந்த
அவையோரே! நேர நெருக்கடி கருதி சுருக்கமாக அனைவர்க்கும் வணக்கம். மூன்றாம் ஆண்டாக விழுப்புரத்தில்
புத்தகக் காட்சி நடந்துகொண்டு இருக்கின்றது! ஏற்பாடு செய்த தமிழ்நாட்டரசுக்கும் மாவட்ட
ஆட்சியாளர்க்கும் மாவட்ட நூலகத்துறை அதிகாரிகள் பிற பணியாளர்க்கும் நன்றியைக் கூறுவோம்.
பத்தகங்களை, நூல்களைப் படிக்கவேண்டியதின் தேவையையும் படிப்பதால்
பெறும் நன்மைகளையும் கடந்த மூன்று நாள்களில் உள்ளூர் எழுத்தாளர்கள் முநல் வெளியூரிலிருந்து
வந்த பெரிய எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் வரைப் பலரும் கூறியதைக் கேட்டோம். ஆம். ஒவ்வொருவரும்
நூல்களைப் படிக்க வேண்டும். இன்றியமையாத் தேவைதான். உண்மைதான்!
சரி, எந்த நூல்களைப் படிக்க வேண்டும்! ‘கண்டதைப் படிப்பவன்
பண்டிதனாவான்’ என்பார்களே, அது உண்மையா? இல்லை. உண்மை இல்லை. ‘தென்மொழி’ ஆசிரியர் பாவலரேறு
பொருஞ்சித்திரனார் பாடுவார்:
எவர் பேச்சைக் கேட்பது எவர் நூலைப்
படிப்பது?
எச்சரிக்கை யாயிரு தம்பி! – குட்டிச்
சுவராக உனையாக்கும் நூலுண்டு; பேச்சுண்டு;
தெளிய வேண்டும் நீ கண்டு!
கைக்குக் கிடைப்பன எலாம் படிக்காதே!
காலத்தை வீண்டிக் காதே! - தம்பி
பொய்க்கும் புரட்டுக்கும் பளபளப்புண்டு;
நீ புரியவேண்டும் அதைக்கண்டு! – என்பார்.
திருவள்ளுவப் பேராசான், ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என்றும்,
‘நல்லவை நாடி இனிய சொலின்’ என்றும் கூறுவார். சொல்லுவதிலும் கேட்பதிலும் நல்லவற்றை
நாட வேண்டுமென்கிறார். இதே அளவுகோல்தான் படிப்பதற்கும்! நல்ல நூல்களைப் படிக்க வேண்டும்.
நல்ல நூல்கள் என்று தனியே உண்டா? தீய நூல்களும் இருக்கின்றனவா? ஆம் இருக்கின்றன.
ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்குச்
சமமென்று சொல்வார்கள். சரி, நல்ல நூல்கள் யாவை? நல்ல புத்தகங்களின் கூறுகள், பண்புகள் என்னென்ன?
பலவண்ணத்தில் பள்பளப்பாக உயர்ந்த தாளில் கவர்ச்சியாக அச்சிட்டவை எல்லாம் நல்ல நூல்களா?
இல்லை!
நல்ல நூல்கள் அறிவை வளர்க்கும், அறிவை விரிவுபடுத்தும், மன அழுத்தத்தைக் குறைக்கும், சீராக்கும். மொழித்திறனை வளர்க்க
உதவும். புதிய
செய்திகளைத் தரும். தன்னம்பிக்கை ஊட்டும். அறிவியல் பார்வை தரும். நன்கு சிந்திக்க
வைத்து, நல்ல உணர்வுகளைத் தூண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வலியுறுத்தும், ஊக்கப்படுத்தும். நம்மை நல்ல நோக்கிற்கு
மாற்றும், நல்ல ஒழுக்கத்தைக் கற்பிக்கும், ஆசானாக இருந்து நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டும், வாழ்க்கையை
மேம்படுத்தும்.
இனி, நல்லவையல்லாத நூல்கள், தீய நூல்கள்
யாவை? அவற்றின் கூறுகள், பண்புகள் என்னென்ன? மங்கலான தாள்களில் கரட்டு அட்டைகளில் பலவண்ணப் பளபளப்பின்றி
காணப்படுபவையா? இல்லை!
தீய நூல்கள் உண்மையில்லாத செய்திகளைத்
தருகின்றவை, தவறான செய்திகளைத் தருகின்றவை, வெறுப்பை உண்டாக்கும் தன்மை கொண்டவை. தவறான
நடத்தையையும் தவறான ஒழுக்கத்தையும் தூண்டுபவை. தவறான செயல்களுக்கு ஊக்குவிப்பவை, மன
அழுத்தத்தை உண்டாக்குகின்றவை. மூடநம்பிக்கையை வளர்ப்பவை. அறிவுக்கு ஒவ்வாத செய்திகளைத்
தருபவை. அறிவியல் நோக்கற்றவை. குமுகத்தில், மக்களிடையே நல்லிணக்கத்தைக் குலைத்துத்
தீங்குநேர வழிசெய்பவை. பிறப்பில் உயர்வுதாழ்வு கூறுபவை இன்னும் பல்வேறு தீமைகளுக்கு
அடித்தளமாக இருப்பவை தீய நூல்களே!
ஓர் எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம். அண்மைக் காலமாக வரும் அகத்தியர் பற்றிய செய்தி! அகத்தியர்
பற்றிச் செய்தித்தாள்கள் நடுப்பக்கக் கட்டுரைகளும் சிறப்புச் செய்திகளும் வெளியிடுகின்றன.
நூல்களும் கூட வந்திருக்கின்றன. அகத்தியருடைய
பிறப்பு பற்றிக் கூறப்படும் கதை அருவருப்பானது. அத்துடன், இரிக்கு வேத காலத்திலிருந்து கம்பஇராமாயண காலம்வரை பல்லாண்டுக்
காலம் ஒருவர் வாழ்ந்திருக்க முடியுமா?
அகத்தியர் தொல்காப்பியருக்கும் ஆசிரியர்
என்பதற்கும் அவர் தொல்காப்பியருக்கும் முன்னர்த் தமிழிலக்கணம் எழுதினார் என்று கூறுவதற்கும்
தமிழ் இலக்கியம் படைத்தார் என்பதற்கும் எந்த அடிப்படைச் சான்றும் இல்லை. கற்பனையாகக்
கூறப்படும் பழங்கதைகளைச் சான்றுகளாகக் கொள்ள முடியுமா? இன்னும் சொன்னால் இக்கதைகள்
மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. இச் செய்திகளால் எல்லாம் மக்களுக்கு எந்த நன்மையும்
இல்லை. அத்துடன், அவை அறிவை மழுங்கடிப்பவை. முன்னேற்றத்திற்கு எதிரானவை.
சரி, போகட்டும்! இனி, நல்ல நூல்ளைக்
கண்டுபிடிப்பது எப்படி? உலகம் முழுவதும் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. இங்கு இந்தப்
புத்தகக் காட்சியில் பல்லாயிரக் கணக்கான நூல்கள் உள்ளன. நூல்ளைத் தேர்வு செய்வது எப்படி?
நல்ல நூல்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
முதலில், உங்களுக்கு பிடித்தமான துறை
சார்ந்த நூல்கள் அல்லது நீங்கள் எதைப்பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றீர்களோ அதை நோக்கிச்
செல்லலாம். கழக(சங்க) இலக்கியம், சிறுகதை, பாடல், புதினம், பல்வகை அறிவியல், மொழியியல்,
தன்முன்னேற்றம் முதலியவற்றில் உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்வது முதன்மையாகும்.
நம்பகமான புகழ்பெற்ற
நூலாசிரியர்களை அடிப்படையாகக் கொண்டு புத்தகங்களைத்
தேர்ந்தெடுக்கலாம். புத்தகங்களை உண்மையாகப் படித்து மதிப்புரை எழுதியவர்களின் மதிப்பீட்டைப் படித்தும்
தேர்ந்தெடுக்கலாம். புத்தகங்களைப் பற்றிய உண்மைத் திறனாய்வு வந்திருந்தால் அவற்றைக்
கொண்டும் நல்ல நூல்களைக் கண்டுபிடிக்கலாம். அறிவார்ந்த நண்பர்கள் அன்பார்ந்த குடும்பத்தார்
பரிந்துரைகளும் நல்ல நூல்களை அறிய உதவி செய்யக்கூடும். நூலகங்களிலும் கடைகளிலும் நூல்களைப்
புரட்டிப் பார்த்து உள்ளடக்கம், எழுத்துநடை முதலியவற்றை நோட்டமிட்டும் நல்ல நூல்களைத்
தேர்ந்திடலாம்.
எனவே, அன்பார்ந்த அவையோரே, நல்லவற்றை
நாடுவோம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்போம்! முன்னேறுவோம்! முன்னேற்றுவோம்!
வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கின்றேன் நன்றி!
-----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக