சனி, 11 ஜனவரி, 2025

தமிழ்ஆட்சிமொழிச் சட்டம் -இன்றைய நிலை!

 தமிழ்ஆட்சிமொழிச் சட்டம் -இன்றைய நிலை!

ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியே அம் மாநில ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்பதே முறையாகும். மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களுடைய ஆட்சி என்பர். மக்கள்மொழி ஒன்றாகவும், அவர்களை ஆளும் ஆட்சியின்மொழி வேறொன்றாகவும் அமையுமாயின், மக்களுக்குத் தொடர்பின்றிப் போகிறது. அதனால், அம் மக்களின் மொழியும் பண்பாடும் கலையும் நாகரிகமும் பொருளியலும் உலகஅரங்கில் அவர்களைப்பற்றிய குமுகாய மதிப்பீடுகளும் தாழ்ந்துபோய்விடுகின்றன.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி உள்ளது. ஒரு மொழி ஆட்சிமொழி ஆவதற்கு, அது தாய்மொழி என்னும் தகுதிக்குமேல் வேறு எந்தத் தகுதியும் பெற்றிருக்கத் தேவையில்லைஎன்பது அறிஞர் அண்ணா அவர்களின் கருத்து.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக் கூறு 345இல் வகை செய்யப்பட்டவாறு, தமிழ்நாட்டில் தமிழ்மொழிதான் ஆட்சிமொழி என்று 7.12.1956இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 19-01-1957 ஆம் நாளன்று ஆளுநரின் இசைவினை இச் சட்டம் பெற்றது. 27-01-1957ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கென ஆட்சிமொழித் திட்ட நிறைவேற்றக் குழுஒன்று 1957ஆம் ஆண்டு அரசால் அமைக்கப்பட்டது. 1968ஆம் ஆண்டில் இக்குழு மாற்றப்பட்டு, ‘தமிழ் வளர்ச்சி இயக்ககம்என்னும் தனித்துறை ஒன்றை அரசு உருவாக்கியது. தமிழ் வளர்ச்சித்துறையின் அலுவலர்கள், அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் தமிழ் ஆளுகைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அணுப்ப வேண்டும்.

ஆய்வு செய்யப்படும் அலுவலகத்தில், பேணப்பட்டு வரும் பதிவேடுகள், கோப்புகள், காலமுறை அறிக்கைகள், மடல் போக்குவரத்து, அலுவலகஆணைகள், செயல்முறை ஆணைகள், கருத்துருக்கள், பணிச்செலவு (duty travel) நிரல், நாட்குறி்ப்பு, பெயர்ப்பலகை, செய்திப்பலகைகள், பயன்பாட்டில் உள்ள இழுவை முத்திரைகள் போன்ற பலவற்றின் விளக்கங்களையும் அளிக்கவேண்டும். ஆய்வு செய்யப்பட்ட அலுவலகத் தலைவர் தேவைப்படும் இடங்களில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல் செய்யப்படவேண்டும்.

அரசு அலுவலர்களும் பணியாளர்களும் ஆட்சிமொழித் திட்டம் தொடர்பாக நன்கு அறிந்துகொண்டு செயல்பட வேண்டும்


என்பதற்காக மாவட்டந்தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் நடத்தப் பெறுகின்றன. ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடத்துவதற்கு ரூ.30,000 உம் கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.20,000 உம் அரசுப்பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தொகுத்து ஆட்சிச் சொல்லகராதி என்ற நூலினைத் உருவாக்கி அச்சிட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்குகின்றனர். அரசின் பல்வேறு துறைகளுக்கு உரியனவாக 75 சிறப்புச் சொல்லகராதிகள் வெளியிடப்பட்டன.

1957இல் திரு. வெங்கடேசுவரன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பெற்ற ஆட்சிமொழிக்குழு பல்வேறு துறைகளில் வழக்கிலுள்ள பொதுவான சொற்களுக்குரிய தமிழாக்கங்களைத் தொகுத்து ஆட்சிச்சொல் அகராதியின் முதல் பதிப்பை 1957ஆம் ஆண்டு வெளியிட்டது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் ஏறத்தாழ 9000 மேலாண்மை ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இவ்வகராதி தருகிறது. 1957ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவ்வகராதி இதுவரை நான்கு பதிப்புகளாக வெளி வந்துள்ளது. நான்காம் பதிப்பின் மறு பதிப்பும் வெளிவந்துள்ளது.

17,161 சொற்கள் அடங்கிய ஆட்சிச்சொல் அகராதி 2015ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றது. 

ஆட்சிச் சொல்லகராதி உருவாக்கத்திற்கு முன்பும், பின்பும் பாவேந்தர் பாரதிதாசன், மறைமலையடிகளார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் முதலானோர் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புகளும், புதுச் சொல்லாக்கங்களும் உருவாகும் வகையில் பல சொற்களைப் படைத்தளித்து ஊக்கமூட்டினர்.

ஆட்சிமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த பிறப்பித்த ஆணைகள் சிலவற்றைக் கீழே காண்க:

1. அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்ற அரசு ஆணை எண். 1134, நாள்.26.01.1978.

2. அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்ற அரசு ஆணை எண்.2618, நாள்.30.01.1981.

3. பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்ற அரசு நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971

4. உயர்நயன்மன்றம், உச்சநயன்மன்றம், நடுவணரசு, பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தி்ல் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே ஆட்சிமொழித்


திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் மடல்போக்குவரத்துகள் தமிழிலேயே அமைய வேண்டும் என்ற அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.

5. அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்ற பணியாளர் மேலாண்மைச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.

6. அலுவலகவரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்ற அரசு கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.

7. அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துக்களின் அளவு இடம்பெற வேண்டுவது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.

இவை போன்ற பல அரசாணைகளை அரசு பிறப்பித்தது.

முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா 1968ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படுமென உறுதியளித்தார். அதன்படி 1973ஆம் ஆண்டிலேயே ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாகவும் அனைத்து நிலைகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கவேண்டும். கல்விநிலையங்கள் அனைத்திலும் தமிழ் பயிற்றுமொழி யாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அண்ணா அவர்கள் மறைவுக்குப்பிறகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பயிற்றுமொழித் திட்டத்திற்கென ஆணைகள் பல பிறப்பிக்கப்பட்டிருந்தும் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எதிர்பார்த்தஅளவுக்கு வளர்ச்சி எல்லையை எட்டவேயில்லை என்பதுதான் உண்மை நிலை. தமிழ்வாழ்க என்னும் வாசகம் மட்டுமே அரசுத்துறைகளில் காணப்படுகிறது. ஆனால் அரசாணைகள் சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. தமிழ்வளர்ச்சித்துறையோ பிறரோ இவற்றில் கருத்தூன்றல் இல்லாதவராகவே உள்ளனர். இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இதே நிலையே தொடர்கிறது.

தமிழ் பயிற்றுமொழி என்னும் நிலை இன்னும் கனவாக, எட்டாக்கனியாகவே உள்ளது! இன்னும் இழிநிலையாக ஆங்கிலவழிக் கல்விக்கூடங்கள் புற்றீசல்களாகப் பெருகி வல்லாளுமைநிலை பெற்றுள்ளன.

அடிப்படை நிலையிலுள்ள சார்நிலை அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் முன்னேற்றமிருந்தாலும் மேலே செல்லசெல்ல செயலாக்கமின்மை தெளிவாகத் தெரிகிறது. ஆட்சிமொழித் திட்டத்தின் செயலாக்கத்தை அரசாணைகளாலும்,


அறிவுரைகளாலும் மட்டுமே நிறைவேறிட முடியாது. இதில் ஆட்சியாளரின் ஈடுபாடும் பற்றார்வமும் தொடர்ந்த கண்காணிப்பும் கண்டிப்பாகத் தேவை; இன்றேல் பயனில்லா நிலையே தொடரும்.

தமிழ்ஆட்சிமொழித் திட்ட செயலாக்கம் அரசு அலுவலகங்களுடன் மட்டும் அமைந்துவிடுவது அன்று. அது தெருக்களிலும், பெயர்ப்பலகைகளிலும் செய்தித்தாள்கள், இதழ்கள், ஒளிஊடகங்கள் முதலியவற்றிலும், கல்விநிலைய பயிற்று மொழியிலும், மக்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலாக்கப்பட வேண்டியதாகும். ஆனால், இவற்றைப் பற்றித் தமிழ்நாட்டரசும், புதுவைஅரசும் மக்களும் கருத்தூன்றலில்லாமல் இருக்கின்ற நிலை இரங்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் கடைகள், வணிகநிறுவனங்கள், தொழிலகங்கள் தங்கள் நிறுவனப்பெயர்களை, பெயர்ப் பலகைகளில் தமிழில் எழுத வேண்டுமென அரசாணை வெளியிட்டதோடு சரி, தொடர்நடவடிக்கை இல்லை. ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியவற்றையும், இக்கால் சில இடங்களில் இந்தியில் மட்டுமே எழுதியுள்ள பலகைகளையும் பார்க்கும் அவலநிலை உள்ளது. தமிழ் அறவே புறக்கணிக்கப்படுகிறது.

தமிழ் பயிற்றுமொழி பற்றித் தமிழ்நாட்டரசும் புதுவை அரசும் கொஞ்சமும் பொருட்படுத்துவனவாகத் தெரியவில்லை. அரசுப்பள்ளிகளும் நாளுக்கு நாள் ஆங்கிலவழிப் பள்ளிகளாகி வருகின்ற அவலநிலை! புதுவையில் தமிழ்வழிப்பள்ளிகள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன.

தமிழர்களின் பெருமை, தமிழின் மேன்மை, தமிழ்ப்பண்பாட்டுக் காப்பு, தமிழரின் உயர்வு, தமிழரின் உரிமை முதலியவற்றைப் பேணிக் காக்க இன்றியமையாத் தேவை தமிழைப் பயிற்றுமொழியாக்கவேண்டியதாகும்.

ஆட்சிமொழிச் சட்டத்தின் நிலை, இவ்வாறு தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இரங்கத்தக்க நிலையிலுள்ளது. பலமுறை பலரும் தமிழ்நாட்டரசையும் புதுவை அரசுசையும் வலியுறுத்திய பின்பும் மாற்றமில்லா நிலையே தொடர்கின்றது. ஆட்சிக்கு வரும் எந்தக்கட்சியும் தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந் நிலை தொடர்ந்தால் தமிழரிடமே தமிழ் வழக்கொழிந்து போகும். தமிழர் தம் அடையாளமிழந்து வெவ்வேறு கலவை இனத்தவராகி விடுவர் என்ற உண்மை கொஞ்சமும் மிகையாகக் கூறப்படுவதில்லை என்பதை ஆட்சியாளரும் பிறரும் உணர்ந்து இனியேனும் செயற்படவேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும். - குறள் 466.

(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் - அக்குதோபர் 2024 இநழில் வந்தது)

கருத்துகள் இல்லை: