சனி, 13 ஜூன், 2026

புதிய ஆட்சியாளர்க்குச் சிலசொல்!

 

புதிய ஆட்சியாளர்க்குச் சிலசொல்!

                

                தமிழ்நாட்டின் 17-ஆம் சட்டப்பேரவைக்குத் தேர்தல்கள் முடிந்தன. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக வந்தாலும், ஆட்சியமைக்க 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் துணைதரவு தேவைப்பட்டது. முதலில் இந்தியப் பேராயக் கட்சி த.வெ.க.வுடன் கூட்டு சேர்ந்தது. பல்வேறு நிகழ்வுக் காட்சிகளுக்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சிகள் இரண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய ஒன்றிய முசுலிம் கூட்டமைப்பு (IUML) ஆகிய நான்கு கட்சிகளும் த.வெ.கவுக்கு துணைதருவதாக ஒப்புதல் மடல்கள் தந்தன. அதனால் மொத்தமாக 120 உறுப்பினர்கள் துணைதரவோடு 10 ‘மே’ 2026-இல் த.வெ.க. தலைவர் திரு.விசய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவருடன் தொண்டு (ஒன்பது) பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

            புதிய ஆட்சியாளர்க்கு ‘நற்றமிழ்’ முதலில் மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவிக்கின்றது. அடுத்து, தமிழ், தமிழர் நலன்களுக்காக அடிப்படையாகச் சிலவற்றையும், பொதுவாகச் சிலவற்றையும் கூறுவதை ‘நற்றமிழ்’ தன் இன்றியமையாக் கடமையாகக் கருதுகின்றது.

            தமிழினம் மூத்த தொன்மையான இனம்; பண்பாடு நாகரிகங்களில் சிறந்து விளங்கிய இனம். தமிழ்மொழி அவ்வினத்தின் அடையாளம் என்பது மட்டுமன்றி உலகின் மூத்தமொழி; உலகின் மூத்த தாய்மொழி. பல மொழிகளுக்குத் தாய். தமிழைத் தம்உயிருக்கு நேராகத் தமிழர் போற்றிவருகின்றனர் என்பதுஉண்மை என்றாலும் இதுவரை தமிழுக்கு உண்மையான காப்பும் உண்மையான ஆக்கமும் ஊக்கமும் உயர்வும் இல்லை என்பதே உண்மையாகும்.

            த.வெ.க.வின் முழுத் தேர்தல்அறிக்கையில் தமிழ்மொழி பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. அரசியலுக்குப் புதியவர்கள் தமிழைப்பற்றிக் குறிப்பிட மறந்திருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. த.வெ.க.வின் தலைவர் சிறந்த நடிகராகத் திகழ்ந்தவர். அந்தத் தகுதியே அவருக்கு ஆட்சிக்கட்டிலேறத் தக்கத்தகுதியாகத் தமிழ்நாட்டுமக்களில் பலராலும் பார்க்கப் பட்டிருக்கின்றது என்றால் மிகையில்லை; உண்மையே. ஆண்டவர்களின் மேலிருந்த வெறுப்பால், வேறு மாற்றுஇன்மையால் அல்லது மாற்று என்ன என்பதறியாமல் தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறினாலும் பொருந்தும். எப்படியிருந்த போதிலும், த.வெ.கழகத்தார் தமிழைப் புறக்கணிக்க எந்தக் காரணமுமில்லை. அவர்கள் தமிழுக்கு ஆற்றவேண்டிய உடனடி இன்றியமையா அடிப்படைப் பணிகளாகச் சிலவற்றைக் கீழே குறிப்பிடுகின்றோம்:

1. ஆட்சிமொழியாகத் தமிழை முழுமையாகச் செயற்படுத்தவேண்டும்.

2. தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவர உடனடி நடவடிக்கை

வேண்டும்.

3. தமிழில் படித்தோர்க்கே தமிழ்நாட்டில் அனைத்து வேலைவாய்ப்பு

களிலும் முன்னுரிமை தரவேண்டும்.

4. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும்.

5. உருசியா, சீனா, பிரான்சு, சப்பான், கொரியா முதலிய நாடுகளில்
உள்ளவற்றைப் போல உலகின் எந்த மூலையில் எந்த மொழியில் வரும் அறிவியல் செய்திகள், நுண்கலைச் செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெயர்த்தளிக்க ஏற்பாடு வேண்டும்.

மேலே கண்ட ஐந்தும் தேர்தல் பரப்புரையில் பொதுவாக அரசியல் கட்சிகளால் குறிப்பிடப்படுபவையே.

இவற்றைத் தொடர்ந்து ஆற்றவேண்டிய பல பணிகளை எப்போதும்போல், அவ்வப்போது ‘நற்றமிழ்’ தெரிவிக்கும்.

அடுத்து, ஆட்சிசெய்தவர்களின் மீது மக்களுக்கு வெறுப்பேற்படுத்திய பொதுவான சில சரிசெய்யப்படவேண்டிய செய்திகளைக் குறிப்பிட்டு வலியுறுத்த விரும்புகிறோம்.

1. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2024-இல் மட்டும் 11,363 ஆகும்; இது முந்தைய ஆண்டுகளைவிட மிகுதியாகும். இவற்றைத் தடுக்க உடனடி நடவடிக்கை வேண்டும்.

2. தமிழ்நாட்டில் 2024-இல் மட்டும் 19,965 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும்.

3. தமிழ்நாட்டில் 2024-இல் மட்டும் 5,793 கணிசார் குற்றங்கள் (cyber crimes) நடந்துள்ளன. உரிய நடவடிக்கை வேண்டும்.

4. சாலைநேர்ச்சிகள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்தையும்விட தமிழ்நாட்டில் அதிகமாக 2024—ஆம் ஆண்டில் 69,828 நிகழ்ந்துள்ளன, 20,390பேர் இறந்துள்ளனர். இவற்றைத் தடுக்க உடனடி தக்க நடவடிக்கை வேண்டும்.

5. தமிழ்நாட்டில் மிக அதிகமாகப் புழங்கும் வெறிமயக்கப் பொருள்களை அறவே ஒழிக்க முனைப்பான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

(புள்ளி விளக்கங்கள் 8-5-2026 ‘தைம்சு ஆப்பு இந்தியா’ நாளிதழில் உள்ளவை)

            10-5-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சித் தொடக்கத்தில் முதலில் சமற்கிருதப்பாடலும் அடுத்து சனகணமன… எனும் இந்திய தேசியப்பாடலும் பாடப்பட்டு மூன்றாவதாகவே தமிழ்வணக்கப் பாடல் பாடப்பட்டுள்ளது. தமிழ்வணக்கப் பாடலை முதலில் பாடியிருக்க வேண்டும். இந் நிகழ்வின் முன்புவரை கடைப்பிடிக்கப்பட்ட மரபை மீறியிருக்கின்றார்கள். இது கண்டிக்கத்தக்கதும் கடுமையாக எதிர்க்கத் தக்கதுமாகும். இதுபோல் மீண்டும் நடக்கக்கூடாது. இதில் மாண்புமிகு முதலமைச்சர் கவனமாக இருக்கவேண்டுமென ‘நற்றமிழ்’ வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

            இந்திய ஒன்றிய அரசு, இப்போது, ‘பிஎம்சிரி’ எனும் திட்டத்திற்கு ஒப்புதல் கையெழுத்துப்போட தமிழ்நாட்டரசை வலியுறுத்தி மடல் எழுதியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இந்தத் திட்டம் மும்மொழிக் கொள்கைக்கு – அதன்வழி இந்தி, சங்கதத் திணிப்பிற்கு- வழிகோலுவதாகும். எனவே, இருமொழிக் கொள்கையைக் கொண்டதாக அறிவித்துள்ள புதிய தமிழ்நாட்டரசு விழிப்பாக இருந்து அத் திட்டத்தை ஏற்கக் கையெழுத்திடக் கூடாது என்று ‘நற்றமிழ்’ வலியுறுத்துகிறது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இராசுமோகன், இதில் எந்தச் சூதும் நேராமல் இருக்கப் பொறுப்போடு விழிப்பாக இருக்கவேண்டுமென ‘நற்றமிழ்’ வலியுறுத்துகின்றது.

            தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்காக எழுதப்பட்ட அனைத்தும் புதுவை ஆட்சியாளர்க்கும் பொருந்தக்கூடியவையே. புதுவையில் 13-5-2026-இல் பதவியேற்றிருக்கும் புதிய அமைச்சரவை இவற்றில் கவனம் கொண்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ‘நற்றமிழ்’ வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.

            புதுவையில் நடைமுறையிலுள்ள ‘நடுவண் இடைநிலைக் கல்விக் கழக’ (CBSE) பாடத்திட்டப் பள்ளிகளில் இந்தி சங்கதத் திணிப்பிற்கு வழிசெய்யும் மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அண்மையில் செய்திகள் கூறியதைத் தொடர்ந்து, புதுவை ‘தமிழ் உரிமைக் கழகம்’ மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் தொடர்வண்டி மறியல் போராட்டமும் நடத்தியிருக்கின்றது. புதுவையின் புதிய ஆட்சியாளர்கள் இத் திட்டத்தை ஏற்கக்கூடாது. பா.ச.க.வும் ஆளும் கூட்டணியில் இருப்பதால், மாண்புமிகு முதல்வர் அரங்கசாமியார் இதில் கவனம் செலுத்த வேண்டுமென ‘நற்றமிழ்’ வலியுறுத்துகின்றது.

            தமிழின் ஆக்கம், உயர்வு, தமிழரின் நலன், தமிழ்நாட்டு உரிமைகள்ஆகியவற்றிற்காக உண்மையான கவலையோடு எழுதும் ‘நற்றமிழ்’ இதழ், அவ்வப்போது பலவற்றைப்பற்றிக் குறிப்பிட்டுக் காட்டி எழுதிவருகின்றது. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் புதிய ஆட்சியாளர்கள் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனத் தமிழுள்ளத்தோடு ‘நற்றமிழ்’ கேட்டுக்கொள்கின்றது.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
- குறள்:1022.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
. - குறள்:1025.


- த.ந.

கருத்துகள் இல்லை: