புதன், 19 நவம்பர், 2025

தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை!

 

தணிப்பரிதாம் துன்பமிது!

தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை!

                

            பாவேந்தர் ஒருமுறை மதுரை சென்றிருந்தபோது கடைத்தெருக்களிலும் பிறஇடங்களிலும் பெயர்ப்பலகைகளில், வாணிக விளம்பரங்களில், தமிழ் இல்லா நிலையறிந்து மனம் வருந்தி, தமிழ் இளையோர்க்கு எழுச்சியூட்டும் வண்ணம், ஒரே இரவில் ‘தமிழியக்கம்’ என்கின்ற நூலை எழுதினார். அத் ‘தமிழியக்கம்’ நூலின் ஒரு பாடலின் ஓர்அடிதான் இத் தலைப்பாகும்.

            இந்நூலின் முதற்பதிப்பு 1945-இல் வந்தது. பாவேந்தர் ‘நல்வினை’ என்ற தலைப்பில் எழுதிய சிறு முன்னுரையில், “இதை நான் எழுதிய நோக்கம் என்னவெனில், தமிழார்வம் மிக்க இளைஞர்கள், இத்தகைய துறைகளில், தமிழ் முன்னேற்றம் கருதி இயன்றவாறு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு கூட்டம் கோயிலில் பிறமொழிக் கூச்சலைத் தடுக்க ஏன் முயலலாகாது? ஒரு குழுவினர் தெருத்தோறும் சென்று பிறமொழி விளம்பரப்பலகையை மாற்றி அமைக்கச் சொல்லி ஏன் வற்புறுத்தலாகாது? மற்றும் பலவகையினும் கிளர்ச்சி செய்யின், தமிழ் விடுபடும், தமிழ்நாடு விடுபடும். எவ்வினையினும் இஃதன்றோ இந்நாள் இன்றியமையாத வினை?” என்று குறிப்பிட்டுள்ளார். அந் நூலின் விளைவாக, அப்போது, ஓரளவு எழுச்சி ஏற்பட்டது.

            தமிழ்நாட்டரசு இதன் தொடர்பாக, 1948-இல் இருந்து 75 ஆண்டுகட்கும் மேலான காலத்தில் கீழ்க்காணும் வகையெல்லாம் சட்டம் / அரசாணைகள் இயற்றி இருக்கின்றது:

            1947-இல் இயற்றிய தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தில், 1948-இல் உருவாக்கப்பட்ட நெறி-15 (Rule 15)-இன்படி நிறுவனங்கள் தங்கள் பெயர்களைப் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற பொதுவான அறிவுறுத்தல் இருந்தது. ஆனால், அந்தப் பெயர்ப்பலகைகள் தமிழில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் அப்போது இடம்பெறவில்லை.

            தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 என்பதன் கீழ் 1959-இல் நடைமுறை நெறிகள் வெளியிடப்பட்டன., 1959 நெறி 42ஆ –வின்படி, உணவுவிடுதிகள், தேநீர்க்கடைகள் போன்ற அனைத்து உணவு நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளும் தமிழ்மொழியைப் பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டது. தமிழ் எழுத்துகள் மற்ற மொழிகளின் எழுத்துகளைவிடப் பெரியதாகவும், முதன்மையாகத் தெரியும்படியும் இருக்கவேண்டும். மற்ற மொழிகள் பயன்படுத்தப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து மற்ற மொழிகளும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

            1977-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை அரசாணை எண்: 575, நாள்: 08.08.1977 - என்பது தமிழ்நாட்டில் உள்ள வாணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழியைக் கட்டாயமாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையாகும். இந்த அரசாணையே, பெயர்ப்பலகை தொடர்பான தமிழ் வளர்ச்சி முயற்சிகளின் முதல் சட்டஅடிப்படை நடவடிக்கை ஆகும். இது, பெயர்ப்பலகைகளில் தமிழ்ப்பெயர் முதலில் (மேலே) இருக்கவேண்டும், அதன் கீழ் ஆங்கிலப் பெயர், பின்னர் மற்ற மொழிகள் இருக்கலாம். எழுத்துரு அளவுகள் 5 : 3 : 2 என்ற தகவீட்டில் (விகிதத்தில்) தமிழ், ஆங்கிலம், மற்ற மொழி இருக்கவேண்டும் என்று கூறியது.

            1982-இல் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அரசாணை 1541 நாள் 29-7-1982 - தமிழ்மொழிக்கு முதன்மைநிலை அளிக்கவும், தமிழில் சரியான எழுத்துருவை ஊக்குவிக்கவும், வாணிக / நிறுவனப் பெயர்ப்பலகைகளில் மொழிச் சமநிலையை நிறுவவும் கூறியது

            1983-இல் அரசாணை எண் 3312 தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை, நாள்: 29.12.1983, நெறி 24-அ திருத்தத்தின் வழி கடைகள், வாணிகநிறுவனங்கள், உணவுவிடுதிகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துகளின் அளவை மற்ற மொழிகளின் எழுத்துகளைவிடப் பெரிதாக வைக்கவேண்டும் என்பதைச் சட்ட அடிப்படையில் மாற்றியமைத்தது. பிற மொழியில் எழுத வேண்டுமானால், அந்த மொழி தமிழுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் வரவேண்டும். தமிழ் எழுத்துகள் முதன்மையாகவும் தெளிவாகவும் “திருத்தப்பட்ட எழுத்து” வடிவில் (Reformed Script) இருக்கவேண்டும் என்று கூறியது.

            1984-ல் புதிய திருத்தங்களும் அதனை நிலைநாட்டும் கூடுதல் அரசு ஆணையும் வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 50%, ஆங்கிலத்தில் 30%, பிற மொழியில் 20% என்ற எழுத்துரு அளவீடு குறிப்பிடப்பட்டது.

            அரசாணை. எண் 349, தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை, நாள்: 14.10.1987 - அரசுஅலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துகளின் அளவு பிறமொழி எழுத்துகளைவிட எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்பதைக் குறித்த வழிகாட்டுதலை வழங்கியது.

            தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத் துறை அரசாணை. 291, நாள்: 19.12.1990 -இன் படி சரியான தமிழ்ச்சொல்லே பெயர்ப்பலகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறது. (எ.கா: Book Depot என்பதை நூலகம் / புத்தக நிலையம் என மாற்றுவது; Bakery என்பதை அடுமனை என மாற்றுவது).

            தமிழ்நாட்டை ஆண்ட / ஆளுகின்ற இரண்டு திராவிடக்கட்சியினரின் ஆட்சிகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், கடைகள், வாணிகநிறுவனங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றுகூடக் கட்டாயப்படுத்தவில்லை; தமிழ்எழுத்துகள் பெரிதாகவும், பிறமொழி எழுத்துகள் சிறிய அளவிலும் இருக்கவேண்டும் என்றுதான் அவை குறிப்பிடுகின்றன.

            இவற்றை வாணிகர்கள் பின்பற்றுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த அரசாணைகளைச் செயற்படுத்த வேண்டும் என்ற அழுத்தமான கருத்து எந்தக் கட்சி ஆட்சியாளர்க்கும் இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும். சட்டம் போட்டதோடு, அரசாணை வெளியிட்டதோடு அவர்தம் கடமை முடிந்துவிட்டதாகவே கருதிக்கொண்டு நிறைவடைந்து விடுகிறார்கள். நிலைமை முன்னைப் போலவே என்றும்போல் மாறாமல் நீடிக்கிறது. மேடைகளில் சட்டம் போட்டு விட்டதாகவும் அரசாணை வெளியிட்டு விட்டதாகவும் முழக்குகிறார்கள். ஆனால், அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று கவனித்து, கடுமையான நடவடிக்கை எடுப்பதே இல்லை.

            கோரிக்கைகளின் மூலமாக மட்டும் கடைகள், நிறுவனங்கள், பெயர்ப்பலகைகளில், வாணிக விளம்பரங்களில் தமிழை இடம்பெறச் செய்யமுடியாது என்று உறுதியாகத் தெரிவதால், அவ்வப்போது, தமிழ்ப்பற்று மிக்க சிறுசிறு அமைப்புகளும், சிறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபடுகின்றன. ஆனாலும் அவர்களும் அவ்வப்போது ஆட்சியாளரின் உறுதிமொழிகளை ஏற்று அமைதியாகிவிடுகின்றனர். இந்த நிலைமையே 75 ஆண்டுகளுக்கும் மேலாகத்தொடர்ந்து வருகின்றது.

            நகர்ப்புறங்களில் மட்டுமன்று; சிற்றூர்ப்புறங்களிலும்கூட பெயர்ப்பலகையை ஆங்கிலத்தில் எழுதுவது போலிநாகரிகமாகி விட்டது. மேலும், தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் செய்யப்படும் பெரும்பாலான விளம்பரங்களும் ஆங்கிலமொழியில்தான் அமைந்துள்ளன.

            இத்தகைய நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.            பஞ்சாப்பு, கருநாடகம் போன்ற மாநிலங்களின் பெயர்ப்பலகைகளில் அவர்தம் தாய்மொழி முதலில் நிற்கிறது. இந்தி பேசும் மாநிலங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எண்கள்கூட இந்தியில் எழுதப்படுகின்றன. கருநாடகத்திலும் எண்களையும் கன்னடத்தில் எழுதிடும் அளவுக்கு அங்கே முனைப்புக் காட்டப்படுகிறது. ஆனால், தமிழகத்திலோ நமது குறைந்த அளவு கோரிக்கையான “தமிழில் பெயர்ப் பலகைகள்” என்பதே இன்றைய நாள்வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

            இதற்காக நடத்தப்படும் போராட்டங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு எதிராகவோ, வாணிகர்களுக்கு எதிராகவோ, சட்டம் – ஒழுங்கு நிலையை மீறுவதற்காகவோ நடத்தப்படுவதில்லை; தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. போராட்டங்கள் நடத்தப்பட்டவுடன் மிகச்சில கடைகளில், வாணிகநிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாறும்; பெரிய அளவில் மாற்றம் நடைபெறுவதில்லை. எனவே, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் பெயர்ப்பலகைகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

            கடைகள், வாணிகநிறுவனங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகள் அந்த நிறுவனங்களுக்கான முகவரி மட்டுமில்லை. அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்திற்கே அவைதான் முகவரி ஆகும். ஒரு நகரத்தின் சாலைகளில் வெளிநாட்டவரோ, வெளிமாநிலத்தவரோ செல்லும்போது, அங்குள்ள கடைகள் மற்றும் வாணிகநிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் எந்த மொழியில் உள்ளனவோ, அவற்றைக் கருத்தில் கொண்டே, அந்த மொழி பேசும் பகுதிக்குள் செல்லுகின்றோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

            மொழி என்பது ஒரு நாட்டினுடைய, இனத்தினுடைய அடையாளம் ஆகும். நம்மொழியில் எழுத நாமே பல்லாண்டுக் காலமாக வலியுறுத்திப் போராடி வருவது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும். பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி, எளிய மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து ஊர்களிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை பதவியில் உள்ள அனைவரும் பேசுகிறார்கள். இந்தக் கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன் பயனாகத்தான் மேலே குறிப்பிட்ட சட்டங்களும் அரசாணைகளும் இயற்றப்பட்டன.

            2023 – ஆம் ஆண்டு தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அறிவிப்பில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்குத் தண்டத்தொகை உருவா 50-திலிருந்து உருவா 2000-மாக உயர்த்தப்பட்டது. தமிழில் பெயர்ப்பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நயன்மன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நயன்மன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் போதும் வாணிகநிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் உருவா 2000 தண்டம் செலுத்த வேண்டும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

            2024-இல், தமிழ்நாடு உயர்நயன்மன்றம் இந்த நெறியை நடைமுறைப்படுத்துவதற்குத் துணைதரவாக உத்தரவுகளை வழங்கியது. தமிழ்ப் பெயர்ப்பலகைகளைப் பயன்படுத்துவது மொழி உரிமையின் ஒரு பகுதி என்று நயன்மன்றம் கருத்துரைத்தது. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், வாணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், இணையவழி வாணிகர், சாலையோரக் கடைகள், உணவகங்கள், மக்களுக்கு உணவு வழங்கும் தொழில் செய்யும் ‘சுவிக்கி’, ‘சொமாட்டோ’ உள்ளிட்ட பலரும் தமிழை முதன்மைமொழியாகப் பயன்படுத்துவது இல்லை. இந்தியநாடு முழுவதிலும் பல கிளைகள் கொண்ட ‘இலென்சு கார்ட்டு’, ‘தோனியும் கையும்’ ‘இரிலையன்சு டிரண்ட்சு’ உள்ளிட்ட கடைகளிலும் தமிழைச் சிறிய அளவாகவும், ஒலிபெயர்ப்பு செய்தும் மட்டுமே எழுதுகின்றனர்.

‘ஒயின் சாப்பு’, ‘தாசுமாக்கு’ என்று ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதிப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வந்து தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள நிறுவனத்தில்கூட ஆங்கிலத்திலும், சீனத்திலும் மட்டுமே நிறுவனத்தின் பெயர்கள் காணப்படுகின்றன.

            தமிழ்நாட்டு முதலமைச்சர், 2023ஆம் ஆண்டிலும், அண்மையில் வாணிகர் நல வாரியக் கூட்டத்தில் பேசும்போதும் தமிழ்மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த, அனைத்துக் கடைகள், தனியார் நிறுவனங்கள், வாணிக நிறுவனங்கள், பெயர்ப் பலகைகளில் தமிழை முதன்மையாகவும், பெரிய எழுத்துகளிலும் எழுதவேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னை, மதுரை, தருமபுரி, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் முதலிய பல மாவட்டங்களின் ஆட்சியாளர்களும் இதை வலியுறுத்திப் பேசினர்.

            ஆனால், ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களே ‘திராவிட ‘மாடல்’, ‘சுகூல் பவுண்டேசன், ‘ஏப்பி சிரீட்டு’, ‘சன் சயின்’, ‘சன் தி.வி’, ‘சன் நெட்டு ஒர்க்கு’, ‘இரெட்டு சயன்டு’, ‘சி இசுகொயர்’, ‘கிளவுடு நயின்’, ‘சன்ரைசர்சு’ எனப் பெயரிட்டு வழங்குவதாலும், ‘வந்தே பாரத்து’, ‘கேலோ இந்தியா’ என்ற நிகழ்வுகளில் தமிழ்நாட்டு அமைச்சன்மார் ஒன்றிய அமைச்சருடன் தடையின்றிக் கலந்துகொண்டு மகிழ்வதாலும், இவற்றைப் பார்க்கும் வாணிகர்க்கும் பிறர்க்கும் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்த ஆணை ஒரு பொருட்படுத்தப்பட வேண்டிய முகன்மையான ஆணையாகக் கருத மனம் வருவதில்லை என்றால் சற்றும் மிகையுரை இல்லை.

            இப் போக்கைத் தடுக்கத் தமிழில் பெயர்ப்பலகை வைத்தால் தான் நிறுவனம், கடைகள் நடத்துவதற்கு உரிமம் வழங்கப்படும் என்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் தமிழில் பெயர்ப்பலகையைக் காணமுடியும். தூயதமிழில் பெயர்ப்பலகை இருக்கவேண்டும் என்பதைத் திராவிட ‘மாதிரி’ அரசு கட்டாயச்சட்டமாக்கி நிறைவேற்ற வேண்டுமெனத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

            புதுச்சேரியில், கடைகள், நிறுவனங்கள் சட்டப்பிரிவு, 1964. நெறி 24-அ, பெயர்ப் பலகைகள் பார்வைக்கு வைத்தல் - என்பது புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையும் தமிழில் இருக்கவேண்டும். பிறமொழிகளையும் பயன்படுத்தும் இடங்களில் அம்மொழிகளின் வடிவம் தமிழுக்குக் கீழே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இதற்குப் பின் மூன்று நான்கு முறை இதன் தொடர்பாகப் புதுச்சேரி அரசின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுடன், கடந்த 18-03-2025 அன்று புதுச்சேரி முதல்வர் சட்டமன்றத்தில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டியது குறித்துக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். ஆனால், குறிப்பிடும்படியான மாற்றம் நிகழவில்லை.

            பல்வேறு காலங்களில், புதுச்சேரித் தமிழ்அமைப்புகளான தமிழ்க் காவற்குழு, தனித்தமிழ்க் கழகம், தமிழினத் தொண்டியக்கம் முதலியவை தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டுமென வலியுறுத்திப் பல போராட்டங்களை மேற்கொண்டபோதிலும், அவ்வப்போது சிலர் மட்டும் தமிழில் எழுதுவதும் பிறகு கொஞ்ச காலத்தில் மாற்றிப் பிறமொழிகளில் பெயர்ப்பலகை வைப்பதும் வழக்கமாகி விட்டது.

            அண்மையில், புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கத்தின் போராட்டத்தின் போது பிறமொழியில் எழுதப்பட்டிருந்த ஓரிரு கடைகளின் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்பட்டன. (பின்னர், அவை தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டன.) இந்த வகைச் செயற்பாட்டை யாரும் விரும்புவதில்லை என்பதே உண்மை. எனவே, அந்த நிலைக்குத் தமிழர்களைத் தள்ளாமல் தமிழ்நாட்டரசும், புதுச்சேரி அரசும் தமிழ்மண்ணில் தமிழர்களுக்குப் புரியும்வண்ணம் தமிழில் பெயர்ப்பலகைகளையும் விளம்பரப்பலகைகளையும் அமைக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென நற்றமிழ் வலியுறுத்துகின்றது.

மொழியென்றால் உயிரின் நரம்பு – நம்

முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு!


உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு

நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்

நரம்பெல்லாம் இரும்பாகி, நனவெல்லாம்

உணர்வாகி நண்ணி டாரோ!
- பாவேந்தர்

                                                                                                                                    - த.ந.

 

கூட்டாட்சியும் தமிழ்நாட்டு உரிமைகள் பறிப்பும்!



கூட்டாட்சியும் தமிழ்நாட்டு உரிமைகள் பறிப்பும்!

            தமிழ்நாட்டைக் கழக(சங்க) காலத்தில் சேர சோழ பாண்டிய அரசர்களும் குறுநில மன்னர்களும் ஆண்டனர். அதன்பின் களப்பிரர், பல்லவர், பிற்காலச்சோழர்கள், மறுமலர்ச்சிப் பாண்டியர்கள், விசய நகரத்தார், நாயக்கர், தில்லி முகமதியர், மராத்தியர், மைசூரர் (ஐதர்அலி, திப்புசுல்தான்), பின் ஆங்கிலேயர் ஆண்டனர். இவர்களுள் ஆங்கிலேயர் தவிர்த்து அயலர் எவரும் தமிழ்நாடு முழுவதையும் ஆண்டதில்லை. சிற்சில பகுதிகளிலேயே தம் ஆட்சியைச் செலுத்தினர்.

           ஆங்கிலேயரே தமிழ்நாடு முழுமையையும் தம் ஆட்சிப் பொறுப்பில் வைத்திருந்தனர். தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய நாட்டையும் உருவாக்கினர். இந்தியநாடு 1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதென்றாலும் தென்னாட்டார் சிலர்க்கு அமைச்சுப்பதவி அளித்தனர் என்றாலும் வடவரின் வல்லாண்மையுடனே இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி நடந்துவருகின்றது.

            இந்தியநாடு பல்வேறு மொழி, இனம், பண்பாடு, சமயம், உணவுப் பழக்கம், உடை முதலியவற்றுடன் பன்முகத்தன்மை கொண்டதாகவும், கூட்டாட்சி நெறிமுறைகளைக் கொண்டதாகவும், மாநிலங்களின் ஒன்றியமாகவும் உருவாக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் இப்போது, மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டதோடு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றியஅரசிடம் போராடிப் பெறவேண்டிய நிலையே உள்ளது.

            மாநில உரிமைகள் (அதிகாரங்கள்), ஒன்றியஅரசின் உரிமைகள், பொதுப்பட்டியல் உரிமைகள் என இந்தியாவில், முப்பிரிவுகளாக அரசியல்சட்டப்படி உரிமைகள் பிரிக்கப்பட்டிருந்தும் இந்திய ஒன்றிய அரசு, பொதுப்பட்டியலில் உள்ள அதிகார உரிமைளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக்கொண்டு வருகின்றதோடு மாநில உரிமைகளையும் தந்திரமாகப் பறித்துவருகின்றது.

            இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா கூட்டாட்சி நாடாகும். பல நாடுகளின் (மாநிலங்களின்) ஒன்றியம் (Union of States) தான் இந்தியா. ஆனால், அதற்கு மாறாக இந்தியாவை ஒற்றை நாடாக தில்லி ஒன்றிய ஆட்சியாளர் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

            மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றனவென்றால் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றனவென்றே பொருள். கூட்டாட்சிக் கொள்கை மக்களாட்சியோடு ஒன்றிணைந்ததாகும். மக்களுடைய உரிமைகளும் மாநிலங்களின் உரிமைகளும் சேர்ந்ததே உண்மையான மக்களாட்சியாகும். உலகின் மக்கள்தொகையில் 40 விழுக்காட்டிற்கு மேல் உள்ள மக்கள் வாழும் வெவ்வேறு நாடுகளில், கூட்டாட்சி முறைதான் பின்பற்றப்படுகின்றது.

            உலகின் பலநாடுகளிலும் அரசியல், குமுக, பொருளியல், இன, மொழி, பண்பாட்டு வேறுபாடுகளையும், நிதித் தொடர்பான அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டே கூட்டாட்சி முறையின் சிறப்பு அமைகிறது.

            செவ்வைக் கூட்டாட்சியியலைப் (classic federalism) பின்பற்றுகின்ற அமெரிக்கா, ஆத்திரேலியா, சுவிட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் மாநிலங்களின் உரிமைகள்தான் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக அமைகின்றன. சில முதன்மையான காரணங்களுக்காக அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கூறிய கூட்டாட்சி நாடுகளில் மேற்கொள்ளநேரிட்டாலும், ஒருமுறை கூட மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்ற அரசமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதே இல்லை.

            இந்தியாவில் மாநில உரிமைகள் தொடர்ந்து 78 ஆண்டுகளாகச் சிதைக்கப்படுகின்றன. இத்தகைய தன்மைகள் பொருந்திய இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முழுவதுமாக ஒற்றையாட்சிச் சட்டமாக மாறி வருகிறது. இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைத்தால் மாநிலங்களை நினைத்த நேரத்தில் கலைத்துவிட முடியும்; கவிழ்த்துவிட முடியும் என்னும் நிலையே உள்ளது.

            ஒன்றிய அரசு முழு முற்றதிகார (சர்வாதிகார) அரசாக மாறியதற்குப் பேராயக்கட்சியும், பா.ச.க.வும் செய்த, செய்து வருகின்ற மக்களாட்சிக்கு எதிரான, கூட்டாட்சிஇயலுக்கு எதிரான தொடர் சட்டத்திருத்தங்களும், பின்பற்றுகின்ற மேலாண்மை நடவடிக்கைகளும் காரணங்களாக உள்ளன. இந்தியா ஒரு நாடன்று; இது ஒரு துணைக்கண்டம். மேற்குறிப்பிட்ட செவ்வைக் கூட்டாட்சி நாடுகளில் காணமுடியாத வேற்றுமைக்கூறுகள் இத் துணைக் கண்டத்தில்தான் பெருமளவில் உள்ளன என்பது வெள்ளிடைமலையாகும்.

            பல்வேறு மத, மொழி, இனமக்கள் மாநிலங்களில் இருப்பதனாலும், பல மாநிலக் கட்சிகள் மாநிலங்களில் ஆட்சியமைப்பதனாலும் ஒன்றியஅரசில் தேசியக்கட்சிகள் தனித்து ஆட்சியமைக்கும் முழுப்பெரும்பான்மையினை இழந்து வருகின்ற நிலையிருப்பினும் நடைமுறையில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒற்றையாட்சிச் சட்டமாகவே மாற்றப்பட்டு விட்டது.

            தேசவிடுதலைப் போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும், மொழிவழி மாநிலங்களுக்காகவும், மொழி, இனம், பண்பாடு பாதுகாக்கப் படுவதற்காகவும் பல்வேறு தேசியஇனங்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டங்களும், கூட்டாட்சிக் கோட்பாடு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதற்கு முகன்மையான காரணங்கள் ஆகும்.

            2014க்குப் பிறகு ஒன்றியத்தில் பா.ச.க. அரசு அமைந்தவுடன் திட்டமிட்டு மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. முற்றதிகார (சர்வாதிகார) அரசியலை முன்னிலைப்படுத்துகிற இந்து தேசம் (ராஷ்டிரம்) என்ற தேசியத் தற்பணியர் அமைப்பின் (RSS). செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பா.ச.க. ஆட்சி முயன்று வருகின்றது. இதன் அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கிய தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் வெட்டப்படுகின்றன.

            அரசியல் அமைப்புச் சட்டப்படி தனியதிகாரத்துடன் செயற்படவேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முழு அளவிற்குப் பா.ச.கட்சியின் செயல்பாடுகளாகவே நடக்கின்றன. தேர்தல் ஆணையரைத் தலைமை அமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர், உச்சநயன்மன்ற நயனகர் ஆகிய மூவர் குழு தேர்ந்தெடுத்துக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று, 2023-இல் உச்சநயன்மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்திய ஒன்றிய அரசார், தலைமைஅமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர், அமைச்சரவையிலுள்ள அமைச்சரொருவர் ஆகிய மூவர் அடங்கிய குழு தேர்ந்தெடுத்துப் பரிந்துரைக்கும் என்று சட்டம் இயற்றிக்கொண்டார்கள்.

            இனி, எவ்வாறெல்லாம் தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்று சில நிலைகளில் சிறிது பார்ப்போம்:
1. நிலப்பகுதி உரிமை இழப்பு; மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழர்பகுதிகள் ஆந்திரா, கருநாடகா, கேரளாவுடன் இணைக்கப்பட்டுவிட்டன. அவையாவன:

அ) ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள்: சித்தூர் மாவட்டத்தின் பகுதிகள், திருப்பதி அதைச்சுற்றியுள்ள சில பகுதிகள், நெல்லூர் மாவட்டத்தின் சில பகுதிகள் முதலியன தமிழ்நாட்டிடமிருந்து பறிக்கப்பட்டன.

ஆ) கருநாடகத்துக்குச் சென்ற பகுதிகள்: கோலார் தங்கவயல் பகுதிகள், ஆனேகல் மாவட்டம் உள்ளிட்ட பெங்களூரு நகரத்தின் சில பகுதிகள், மண்டியாவுக்கும் பெலகாவிக்கும் அருகிலுள்ள பகுதிகள் முதலியன.

இ) கேரளாவுக்குப் போன பகுதிகள்: செங்கோட்டையின் சில பகுதிகள், தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு, இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகள் முதலியன.

ஈ) கச்சத்தீவு தமிழர்களின் இசைவின்றியும் நாடாளுமன்றத்தின் இசைவின்றியும் இனவெறிச் சிங்கள அரசிற்குத் தாரைவார்க்கப்பட்டது.

2. ஆற்றுநீர் உரிமைகள் பறிப்பு: காவிரி, முல்லைப்பேரியாறு, தென்பெண்ணை முதலிய ஆற்று நீர் உரிமை நீண்ட காலமாகச் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரிநீர் ஒழுங்காற்று வாரியம் ஆகியவற்றின் அதிகாரத்தை நீராற்றல் (சல்சக்தி) துறைக்குள் முடக்கி விட்டனர். குறைக்கப்பட்ட அளவிலான நீரைப் பெறவே நடைமுறையில் தமிழ்நாடு அடிக்கடி உச்சநயன் மன்றத்தை நாடவேண்டியிருக்கிறது.

            முல்லைப்பேரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை நடுவண் நீர்வளக் குழுவும், உச்சநயன்மன்றம் அமைத்த குழுக்களும் பலமுறை ஆய்வுசெய்து உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், உச்சநயன்மன்றம் அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணை பாதுகாப்பாக உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், கேரள அரசு அந்தத் தீர்ப்புகளை ஏற்க மறுத்து, தொடர்ந்து அணையைப் பேணுதற்குத் தேவையற்ற தொல்லை தருகிறது; சட்டப் போராட்டங்களை நடத்துகிறது.

            தென்பெண்ணை ஆற்றின் துணைஆறான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கருநாடக அரசு பங்கரப்பேட்டைப் பகுதியில் ஒரு புதிய அணையைத் தமிழ்நாட்டின் இசைவின்றிக் கட்டியுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீரின் அளவைக் குறைத்து, ஐந்து மாவட்டங்களின் பாசனத்தையும், குடிநீர்ப் பயன்பாட்டையும் தடுக்கிறது. உச்சநயன்மன்றம், ஒன்றியஅரசை இதற்குத் தீர்ப்பாயம் அமைக்கக் கூறியும், இதுவரை ஒன்றியஅரசு அமைக்கவில்லை. பெங்களூரின் தூய்மையாக்கப்படாத கழிவுநீர் நேரடியாகத் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால், ஆறு பெருமளவு மாசுபடுகிறது.

            பாலாற்றிலும் சிறுவாணியிலும் தடுப்பணைகள் கட்டித் தமிழ்நாட்டின் நீர் உரிமையைப் பறிக்கின்றனர்.

3. பறிக்கப்படும் மொழி உரிமை: பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும், நாளொரு சொல்லும் பொழுதொரு தொடருமாகத் தொடர்ந்து இந்தியும் சங்கதமும் (சமற்கிருதம்) திணிக்கப்படுகின்றன. தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்தி அழிக்கும் முயற்சி நடக்கிறது. இந்தி, சங்கதத் திணிப்பு, சங்கத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அனைத்து இந்தியத் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்துவது, தொடர்வண்டித் துறை உள்ளகத் தொடர்புக்குத் தமிழைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் பா.ச.க. ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன.

            இந்தி, இந்தியாவின் ஒரே அதிகார அடிப்படை மொழி என்னும் போக்கு, தமிழைத் தாழ்த்தி தனக்குரிய இடத்தை இழக்கச் செய்கின்றது. ஒன்றிய அரசின் தேர்வுகளிலும், படைத்துறை, தொடர்வண்டித்துறை முதலிய துறைகளிலும் தமிழ் அறவே புறக்கணிக்கப்படுகின்றது.

4. பண்பாட்டு உரிமைகள் பறிப்பு: தமிழர் பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதோடு வடநாட்டுப் பண்பாடுகள் வலிந்து திணிக்கப்படுகின்றன. ஏறுதழுவல் (சல்லிக்கட்டு) தடையை நீக்கப் பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்ததையும், வடவரின் ‘கோலி’ப்பண்டிகை தமிழகத்தில் வலிந்து புகுத்தப்படுவதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.

            தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள், கோவில்கள், மரபுவழிக் கலைகள் முதலியவை வணிகவயமாக்கப்பட்டு, அவற்றின் உண்மையான மதிப்பு உள்ளூர் மக்களுக்குப் பயன்படாமல், வெளிமாநில, வெளிநாட்டுச் சுற்றுலாச் செலவர்க்கும் ஒன்றிய அரசுக்கும் மட்டுமே உதவுகிறது.

5. நிதி உரிமைகள்பறிப்பு: தமிழகம் நிதித்துறையில் வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒன்றியஅரசுக்குச் செல்லும் வரி வருவாய்க்கு இணையாகத் தமிழ்நாட்டிற்கு நிதிஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. நாம் பங்களிக்கக்கூடிய ஓர் உருவா வரியில் 29 காசு மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாகத் தரப்படுகின்றது. உ.பி., பீகார் போன்ற மாநிலங்களுக்குப் பலமடங்கு ஒதுக்கப்படுகின்றது. ஒன்றியஅரசு, நிதிப்பகிர்வு செய்ய வேண்டாத வரிவிதிப்புகளை அதிகமாக்கி வருவாய் பெருக்கிக் கொள்கிறது.

            இயற்கைச் சீற்றங்களினால் தமிழ்நாடு தாக்கப்பட்டபோதெல்லாம் கூட, தகுந்த ஆய்வின்வழி அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும், உரிய இழப்பீடுகள் வழங்கப்படவேஇல்லை. ஆனால், குசராத்து போன்ற மாநிலங்களுக்கு அளவீடுகளுக்கு முன்னரும் பின்னரும் கூட நிறைய வாரி வழங்கப்படுகின்றது. ‘சரக்குகள், பணிகள் வரி’ (GST) என்ற பெயரில் மாநிலங்களின் வரிதிரட்டும் உரிமைகளையே ஒன்றிய பா.ச.க. அரசு பறித்துவிட்டது.

            ஒன்றிய அரசுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆளுங்கட்சி ஆளும் மாநிலங்களுக்குப் பெருமளவில் வாரி வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகின்றது.

6. கல்வி உரிமை பறிப்பு: மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் கல்வியில் தமிழ்நாட்டின் தன்னுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. இந்தி, சங்கதம், ஆங்கிலத் திணிப்புத் தொடர்ந்து நடக்கிறது. இதனால் தமிழில் சொற்கள் வழக்கிழந்து தமிழின் அழிவுக்கு அடிகோலுகிறது.

            ‘தேசியத் தகுதி நுழைவுத்தேர்வு’ (NEET) முறையால் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் தமிழ்நாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சிற்றூர்ப்புற நடுத்தகை, ஏழை மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. பயிற்சி நடுவங்களின் கொள்ளைக்கு வழிதிறந்து விடப்பட்டிருக்கின்றது. மேலும், இத் தேர்வுகள், முழுவதும் நேர்மையாக நடந்ததாக வரலாறில்லை.

            தேசியக் கல்விக் கொள்கை வழி மும்மொழி என்ற பெயரில் இந்தி, சங்கதத் திணிப்புக்குத் தந்திரமாக வழிசெய்யப்படுகின்றது. தமிழ்வழிக் கல்விக்கு வழியில்லை. மறைமுகமாகக் குலக்கல்வித்திட்டம் புகுத்தப்படுகிறது. பாடத்திட்டத்தில் தமிழ், தமிழர், தமிழக வரலாறு, கழக இலக்கியம், விடுதலைப் போரில் தமிழர் பங்களிப்பு முதலியவை பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றன. இது, தமிழர் அடையாள உரிமை பறிப்பும் ஆகும்.

            தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘ஒருங்கிணைந்த கல்வி இயக்கம்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய உருவா 2,500 கோடியை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.

7. வளங்களின் உரிமைகள் பறிப்பு: வரலாற்று அடிப்படையில், ஒரு நிலப்பரப்பின் வளங்கள் அதன் முற்காலக் குடிமக்களுக்கே உரியவை என்பது பொதுவான கோட்பாடு. அவ்வகையில், தமிழ்நாட்டின் நீர், நிலம், கனிமங்கள், காடுகள் போன்ற இயற்கைவளங்கள் தமிழர்களின் மரபுவழிச் சொத்தாகக் கருதப் படுகின்றன. இந்த வளங்கள் மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைக்கும் அடிப்படை. தமிழ்நாட்டில் உள்ள வளங்கள், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் தமிழர்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பரவலாக ஒப்புதலுள்ள கருத்து. இந்தியாவில் இது பின்பற்றப்படுவதில்லை.

அ) இயற்கை வளங்கள், கனிமங்கள் சுரண்டல்: தமிழ்நாட்டின் முகன்மை இயற்கை வளங்கள், கடுங்கரி (Graphite), சுண்ணாம்புக்கல் (Limestone), கருங்கல், படிகக்கல் (Quartz), வெளிமடம் என்னும் வெள்ளைக்கல் (Magnesite), அளமியக்கனிமம் (Bauxite), பழுப்பு நிலக்கரி, கனிமமணல், இரும்புக்கனிமம், நீர்வளம் (ஆறுகள், ஏரிகள்), நிலவளம் முதலியவை ஆகும். இவை தமிழர்களின் வாழ்வடிப்படைக்கு இன்றியமையாதன. ஆனால், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைப்பதன் பெயரில் இவை சுரண்டப் படுகின்றன.

            குமரிமாவட்டத்தில் மலைகள் உடைத்துக் கடத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு, நிலச்சரிவு ஏற்படுவதுடன் உள்ளூர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கருங்கல், பிற கனிமங்களின் அகழ்வு, உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்காமல், தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் ஊதியம் தருவதாக உள்ளது.

            ஒன்றிய அரசு, ‘மாவட்டக் கனிமக் கட்டமைப்பு அறக்கட்டளை நிதி’ முழுவதையும், தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்கிறது. இது, மாநில அரசின் உரிமை பறிப்பாக உள்ளது.

ஆ) சுரங்கங்களால் பறிக்கப்படும் உரிமைகள்: சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் கடுங்கரி (Graphite) சுரங்கத்திற்காக 600 குறுக்கம் (Acre) பயிரிடு நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இது உழவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. திருவட்டாறு அருகில் செறுகோல் மலைக்குன்றை உடைத்து 56,000 கனமாத்திரி (cubicmetre) மண் எடுக்க ஒரு நிறுவனம் செயல்படுகிறது, இது நிலச்சரிவு மற்றும் நலவாழ்வுச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு கனிமவளத் துறை (Department of Geology and Mining) அறிக்கைகள் இந்தச் சுரண்டலை உறுதிப்படுத்துகின்றன. வடதமிழ்நாட்டில் (திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்) இயற்கை வளங்கள் சீரழிவு ஏற்பட்டுள்ளதாகப் பிரித்திசு ஒலிபரப்பு வாரிய (BBC) செய்திஅறிக்கை கூறுகிறது.

இ) காடுகள் உரிமை பறிப்பு: தமிழ்நாட்டில் காடுகள் 17.59% பரப்பளவில் உள்ளன. தமிழ்நாட்டில் வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், சதுப்புநிலக் காடுகள் (பிச்சாவரம் மற்றும் திருமரைக்காடு) போன்ற பல்வேறு வகையான காடுகள் உள்ளன. காட்டுப் பாதுகாப்புச் சட்டங்களும் அதற்குத் திருத்தங்களும் (எடுத்துக்காட்டாக, 2023 கான் பாதுகாப்புத் திருத்த சட்டமுன்வரைவு) ஒன்றிய அரசால் கொண்டுவரப்படுகின்றன. இவை, காடுகளைப் பயன்படுத்துவது, பாதுகாப்பது போன்றவற்றில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கின்றது.

ஈ) சுற்றுச்சூழல் உரிமை பறிப்பு: நீரகக்கரிமத்திற்கான (hydrocarbon) அகழ்வு, சதுப்புவளிக்கான (methane) அகழ்வு, நுண்ணொதுமி (neutrino) ஆய்வகழ்வு, தங்குசுத்தன் (tungsten) அகழ்வு என்னும் பெயர்களால் சுற்றுச்சூழலையும், மண்வளத்தையும், நிலத்தடிநீரையும் மாசுபடுத்திக் கெடுத்திடும் செயல்களுக்கு ஒன்றியஅரசு தமிழக இடங்களைத் தேர்ந்தெடுத்து மக்களின் கவலையை மிகுத்து, மனஅமைதியைக் கெடுக்கிறது. ஒவ்வொன்றையும் தடுத்து நிறுத்தப் பெரும் போராட்டங்களை நடத்தி உயிர் ஈகமும் செய்ய வேண்டியுள்ளது. தூத்துக்குடிச் செப்புருக்குத் தொழிற்சாலை (Sterilite Factory) வரலாற்றை எண்ணிப் பாருங்கள்!

உ) வேளாண் நிலங்கள், நீர் நிலைகள் உரிமை பறிப்பு: பரந்தூர் வானூர்தி நிலையத்திற்காகத் தனியாரிடம் 3774 குறுக்கம் பயிரிடு நிலங்கள் பறிக்கப்படுகின்றன. முன்பு செப்புருக்குத் தொழிற்சாலைக்கு (Sterilite Factory) ஆயிரம் குறுக்கம் நிலம் பறிக்கப்பட்டது. இங்குள்ள நீர்நிலைகளும் அழிக்கப்படுகின்றன. இவற்றால், உள்ளூர்த் தமிழர்களின் வாழ்வடிப்படை பறிக்கப்படுகின்றது. மேலும், தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் மாசுபாடு இந்த நிலையை மேலும் மோசமாக்குகிறது.

8. மீனவர் உரிமைகள் பறிப்பு: கச்சத்தீவு தமிழர் இசைவின்றியும் நாடாளுமன்ற ஒப்புதலின்றியும் இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் மரபுவழி மீன் பிடி உரிமைகள் (குறிப்பாகக் கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடலில்) பறிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாகத், தமிழக மீனவர்கள் காலங்காலமாக மரபுவழி மீன்பிடித்த பகுதியிலேயே மீன் பிடித்தும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இன்றுவரை இலங்கைக் கடற்படையால் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; பல்லாயிரவர் தாக்கப்பட்டுள்ளனர்; தளைப்படுத்தப்பட்டோர் ஆயிரக் கணக்கானவராவார். பன்னூற்றுக் கணக்கான படகுகளும் இலங்கையரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

            ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்ட கடல்சார் மீன்வள சட்டமுன் வரைவு 2021 (Marine Fisheries Bill 2021) போன்றவை மீனவர்களின் உரிமைகளை மேலும் பறிக்கும் எனப் பல மீனவர் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மீன்வளம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தும், அந்த உரிமையை ஒன்றிய அரசு பறிக்கிறது.

9. மக்களின் நல்லிணக்கம், அமைதி பறிப்பு: தன்னல நோக்கத்திற்காக மக்களிடையே மத, சாதி உணர்வுகளைத் தூண்டி அவர்களிடையே நல்லிணக்கமும், அமைதியும் கெடுக்கப்படுகின்றது; பறிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் பலவகையான துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.

10. மின்துறையில் உரிமை பறிப்பு: அரசமைப்புச் சட்டத்தில் மின்சாரம் பொதுப்பட்டியலில் உள்ளது. மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மூலம் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (State Electricity Regulatory Commission) தலைவரையும் உறுப்பினர்களையும் அமர்த்தும் அதிகாரத்தை ஒன்றியஅரசு எடுத்துக்கொள்கிறது. இது மாநிலஅரசின் உரிமை பறிப்பாகிறது.

            மின்சார சட்டத்திருத்தம்-2022 மூலம் மாநிலங்களில் மின்சார வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிகாரங்களை ஒன்றியத்திலுள்ள ஒழுங்குமுறை ஆணையம் முழுவதும் பறித்துக்கொள்கிறது.

            மின்சார ஒப்பந்தங்களைச் செயற்படுத்துவதற்காக அமைக்கப்படும் ‘மின் ஒப்பந்த செயற்படுத்த ஆணையம்’ (Electricity Contract Enforcement Authority) ஒன்றியஅரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு உறுப்பாண்மை இல்லை. இதுவும் மாநில உரிமைகளை மீறும் ஒரு செயலாகும்.

            தமிழ்நாட்டின் மின் தேவையையும் வழங்கலையும் மேலாண்மை செய்வதில் தமிழ்நாடு மின் உருவாக்க, பகிர்மான நிறுவனம் (TANGEDCO) முகன்மையாகவுள்ளது. ஆனால், மாநிலத்தின் மின்வலையிணைப்பும் (Grid), முகன்மைக் கடத்தற் கம்பிகளின் மீதான கட்டுப்பாடும் மின்தொகுப்பின் (POWERGRID) கைகளில் உள்ளன. இது மாநிலத்தின் முழுமையான கட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் உள்ள உரிமை பறிப்பாகும்.

11. கூட்டுறவுத்துறை உரிமை பறிப்பு: கூட்டுறவு மாநிலப் பட்டியலில் இருக்கிறது. அதை ஒன்றியஅரசுப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லும் வகையில், அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவர ஒன்றியஅரசு முனைப்புக் காட்டுகிறது. கூட்டுறவு அமைப்புகள், அந்தந்த ஊரில் உள்ள மக்களால் அங்கேயே அமைக்கப்படுவனவாகும். இது மாநில அரசுப்பட்டியலில் இருந்தால்தான் மக்களுக்கும் பயனளிக்கும், மாநில அரசும் நேரடியாக கண்காணிக்க முடியும்.

12. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதால் உரிமை பறிப்பு: ஒன்றியஅரசின் வழிகாட்டுதல்படி தமிழ்நாட்டில் பிறப்புத் தகவு (விகிதம்) கட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில், அதற்குத் தண்டனை என்னும் வகையில், மக்கள்தொகை அடிப்படையை வைத்து நிதிப்பகிர்வு செய்யப்படுகின்றது. மேலும், 2026-இல் நடைமுறைப்படுத்தக் கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுமானால், தமிழ்நாட்டின் உறுப்பாண்மை மிகவும் குறைக்கப்படக் கூடிய கெடுதல் நேரவிருக்கின்றது.

13. ஆளுநர் பதவியால் உரிமை பறிப்பு: உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் முதன்மை நாடுகள் எவற்றிலும் ஒன்றியஅரசு ஆளுநரை அமர்த்தம் செய்யும் முறை இல்லை.

            மாநிலஅரசு எந்தச் சட்டம் இயற்றினாலும் ஆளுநர் கையெழுத்திட்டு ஏற்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டரசு இயற்றிய பல சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலவரம்பின்றிக் கிடப்பில் போட்டு வைத்ததையும் இதன் தொடர்பாக உச்சநயன்மன்ற வழக்குகள் உள்ளதையும் பார்த்து வருகின்றோம். அமர்த்தப் பதவியான ஆளுநர் பதவியிலிருப்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை நிறுத்திவைத்து மக்களின் உரிமையையே செல்லாததாக்கிவிடுகிறார். இப்படி ஆளுநர் பதவி மக்களின் உரிமையைப் பறிக்கும் நிலையைப் பார்க்கின்றோம்.

14. காவல்துறை உரிமை பறிப்பு: காவல்துறை மாநிலப் பட்டியலில் உள்ளது. அதையும் மீறி ஒன்றியஅரசு ‘ஒன்றிய சேமக் காவல் படை’யை (Reserve police) வைத்திருக்கிறது. மாநிலங்களின் இசைவு பெறாமலேயே, அப் படையை மாநிலங்களுக்குள் அணுப்பலாம்; செயற்படச் செய்யலாம். இதுவும் உரிமை பறிப்பே.

            இவ்வாறு பல துறைகளிலும் பறிக்கப்படும் உரிமைகளை எடுத்துச் சொல்லலாம். எனினும், விரிவுறல் எண்ணி இத்துடன் நிறுத்திக்கொள்கின்றோம். இப்படிப்பட்ட உரிமை பறிப்பு ஆளுமையைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தவிர்க்க வேண்டுமானால், செவ்வைக் கூட்டாட்சி நாடுகளில் உள்ளதைப் போல் மாநிலங்கள் பல துறைகளிலும் முழு அதிகாரங்கள் உள்ளனவாக இருக்கவேண்டும். அதிகாரப் பறிப்பிற்கு வழியிருக்கக் கூடாது.

இவற்றையெல்லாம் தமிழ் இளையோர் எண்ணிப் பார்க்கவேண்டும்; தீர்வு காண முயலவேண்டும்.

                 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

            இல்லாண்மை ஆக்கிக் கொளல். - கு.1026.

                                                                                                                                            - ..

 

 


புதன், 29 அக்டோபர், 2025

தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை!

 

தணிப்பரிதாம் துன்பமிது!

தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை!

  பாவேந்தர் ஒருமுறை மதுரை சென்றிருந்தபோது கடைத்தெருக்களிலும் பிறஇடங்களிலும் பெயர்ப்பலகைகளில், வாணிக விளம்பரங்களில், தமிழ் இல்லா நிலையறிந்து மனம் வருந்தி, தமிழ் இளையோர்க்கு எழுச்சியூட்டும் வண்ணம், ஒரே இரவில் தமிழியக்கம்என்கின்ற நூலை எழுதினார். அத் தமிழியக்கம்நூலின் ஒரு பாடலின் ஓர்அடிதான் இத் தலைப்பாகும்.

                இந்நூலின் முதற்பதிப்பு 1945-இல் வந்தது. பாவேந்தர் நல்வினைஎன்ற தலைப்பில் எழுதிய சிறு முன்னுரையில், “இதை நான் எழுதிய நோக்கம் என்னவெனில், தமிழார்வம் மிக்க இளைஞர்கள், இத்தகைய துறைகளில், தமிழ் முன்னேற்றம் கருதி இயன்றவாறு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு கூட்டம் கோயிலில் பிறமொழிக் கூச்சலைத் தடுக்க ஏன் முயலலாகாது? ஒரு குழுவினர் தெருத்தோறும் சென்று பிறமொழி விளம்பரப்பலகையை மாற்றி அமைக்கச் சொல்லி ஏன் வற்புறுத்தலாகாது? மற்றும் பலவகையினும் கிளர்ச்சி செய்யின், தமிழ் விடுபடும், தமிழ்நாடு விடுபடும். எவ்வினையினும் இஃதன்றோ இந்நாள் இன்றியமையாத வினை?” என்று குறிப்பிட்டுள்ளார். அந் நூலின் விளைவாக, அப்போது, ஓரளவு எழுச்சி ஏற்பட்டது.

                தமிழ்நாட்டரசு இதன் தொடர்பாக, 1948-இல் இருந்து 75 ஆண்டுகட்கும் மேலான காலத்தில் கீழ்க்காணும் வகையெல்லாம் சட்டம் / அரசாணைகள் இயற்றி இருக்கின்றது:

                1947-இல் இயற்றிய தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தில், 1948-இல் உருவாக்கப்பட்ட நெறி-15 (Rule 15)-இன்படி நிறுவனங்கள் தங்கள் பெயர்களைப் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற பொதுவான அறிவுறுத்தல் இருந்தது. ஆனால், அந்தப் பெயர்ப்பலகைகள் தமிழில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் அப்போது இடம்பெறவில்லை.

                தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 என்பதன் கீழ் 1959-இல் நடைமுறை நெறிகள் வெளியிடப்பட்டன., 1959 நெறி 42வின்படி, உணவுவிடுதிகள், தேநீர்க்கடைகள் போன்ற அனைத்து உணவு நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளும் தமிழ்மொழியைப் பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டது. தமிழ் எழுத்துகள் மற்ற மொழிகளின் எழுத்துகளைவிடப் பெரியதாகவும், முதன்மையாகத் தெரியும்படியும் இருக்கவேண்டும். மற்ற மொழிகள் பயன்படுத்தப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து மற்ற மொழிகளும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

                1977-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை அரசாணை எண்: 575, நாள்: 08.08.1977 - என்பது தமிழ்நாட்டில் உள்ள வாணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழியைக் கட்டாயமாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையாகும். இந்த அரசாணையே, பெயர்ப்பலகை தொடர்பான தமிழ் வளர்ச்சி முயற்சிகளின் முதல் சட்டஅடிப்படை நடவடிக்கை ஆகும்.  இது, பெயர்ப்பலகைகளில் தமிழ்ப்பெயர் முதலில் (மேலே) இருக்கவேண்டும், அதன் கீழ் ஆங்கிலப் பெயர், பின்னர் மற்ற மொழிகள் இருக்கலாம். எழுத்துரு அளவுகள் 5 : 3 : 2 என்ற தகவீட்டில் (விகிதத்தில்) தமிழ், ஆங்கிலம், மற்ற மொழி இருக்கவேண்டும் என்று கூறியது.

                1982-இல் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அரசாணை 1541 நாள் 29-7-1982 - தமிழ்மொழிக்கு முதன்மைநிலை அளிக்கவும், தமிழில் சரியான எழுத்துருவை ஊக்குவிக்கவும், வாணிக / நிறுவனப் பெயர்ப்பலகைகளில் மொழிச் சமநிலையை நிறுவவும் கூறியது

                1983-இல் அரசாணை எண் 3312 தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை, நாள்: 29.12.1983, நெறி 24-அ திருத்தத்தின் வழி கடைகள், வாணிகநிறுவனங்கள், உணவுவிடுதிகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துகளின் அளவை மற்ற மொழிகளின் எழுத்துகளைவிடப் பெரிதாக வைக்கவேண்டும் என்பதைச் சட்ட அடிப்படையில் மாற்றியமைத்தது. பிற மொழியில் எழுத வேண்டுமானால், அந்த மொழி தமிழுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் வரவேண்டும். தமிழ் எழுத்துகள் முதன்மையாகவும் தெளிவாகவும் திருத்தப்பட்ட எழுத்து வடிவில் (Reformed Script) இருக்கவேண்டும் என்று கூறியது.

                1984-ல் புதிய திருத்தங்களும் அதனை நிலைநாட்டும் கூடுதல் அரசு ஆணையும் வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 50%, ஆங்கிலத்தில் 30%, பிற மொழியில் 20% என்ற எழுத்துரு அளவீடு குறிப்பிடப்பட்டது.

                அரசாணை. எண் 349, தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை, நாள்: 14.10.1987 - அரசுஅலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துகளின் அளவு பிறமொழி எழுத்துகளைவிட எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்பதைக் குறித்த வழிகாட்டுதலை வழங்கியது.

                தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அரசாணை. 291, நாள்: 19.12.1990 -இன் படி சரியான தமிழ்ச்சொல்லே பெயர்ப்பலகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறது. (எ.கா: Book Depot என்பதை நூலகம் / புத்தக நிலையம் என மாற்றுவது;  Bakery  என்பதை அடுமனை என மாற்றுவது).

                தமிழ்நாட்டை ஆண்ட / ஆளுகின்ற இரண்டு திராவிடக்கட்சியினரின் ஆட்சிகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், கடைகள், வாணிகநிறுவனங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றுகூடக் கட்டாயப்படுத்தவில்லை; தமிழ்எழுத்துகள் பெரிதாகவும், பிறமொழி எழுத்துகள் சிறிய அளவிலும் இருக்கவேண்டும் என்றுதான் அவை குறிப்பிடுகின்றன.

                இவற்றை வாணிகர்கள் பின்பற்றுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த அரசாணைகளைச் செயற்படுத்த வேண்டும் என்ற அழுத்தமான கருத்து எந்தக் கட்சி ஆட்சியாளர்க்கும் இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும். சட்டம் போட்டதோடு, அரசாணை வெளியிட்டதோடு அவர்தம் கடமை முடிந்துவிட்டதாகவே கருதிக்கொண்டு நிறைவடைந்து விடுகிறார்கள். நிலைமை முன்னைப் போலவே என்றும்போல் மாறாமல் நீடிக்கிறது. மேடைகளில் சட்டம் போட்டு விட்டதாகவும் அரசாணை வெளியிட்டு விட்டதாகவும் முழக்குகிறார்கள். ஆனால், அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று கவனித்து, கடுமையான நடவடிக்கை எடுப்பதே இல்லை.

                கோரிக்கைகளின் மூலமாக மட்டும் கடைகள், நிறுவனங்கள், பெயர்ப்பலகைகளில், வாணிக விளம்பரங்களில் தமிழை இடம்பெறச் செய்யமுடியாது என்று உறுதியாகத் தெரிவதால், அவ்வப்போது, தமிழ்ப்பற்று மிக்க சிறுசிறு அமைப்புகளும், சிறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபடுகின்றன. ஆனாலும் அவர்களும் அவ்வப்போது ஆட்சியாளரின் உறுதிமொழிகளை ஏற்று அமைதியாகிவிடுகின்றனர். இந்த நிலைமையே 75 ஆண்டுகளுக்கும் மேலாகத்தொடர்ந்து வருகின்றது.

                நகர்ப்புறங்களில் மட்டுமன்று; சிற்றூர்ப்புறங்களிலும்கூட பெயர்ப்பலகையை ஆங்கிலத்தில் எழுதுவது போலிநாகரிகமாகி விட்டது. மேலும், தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் செய்யப்படும் பெரும்பாலான விளம்பரங்களும் ஆங்கிலமொழியில்தான் அமைந்துள்ளன.  

                இத்தகைய நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பஞ்சாப்பு, கருநாடகம் போன்ற மாநிலங்களின் பெயர்ப்பலகைகளில் அவர்தம் தாய்மொழி முதலில் நிற்கிறது. இந்தி பேசும் மாநிலங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எண்கள்கூட இந்தியில் எழுதப்படுகின்றன. கருநாடகத்திலும் எண்களையும் கன்னடத்தில் எழுதிடும் அளவுக்கு அங்கே முனைப்புக் காட்டப்படுகிறது. ஆனால், தமிழகத்திலோ நமது குறைந்த அளவு கோரிக்கையான தமிழில் பெயர்ப் பலகைகள்என்பதே இன்றைய நாள்வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

                இதற்காக நடத்தப்படும் போராட்டங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு எதிராகவோ, வாணிகர்களுக்கு எதிராகவோ, சட்டம் ஒழுங்கு நிலையை மீறுவதற்காகவோ நடத்தப்படுவதில்லை; தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. போராட்டங்கள் நடத்தப்பட்டவுடன் மிகச்சில கடைகளில், வாணிகநிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாறும்; பெரிய அளவில் மாற்றம் நடைபெறுவதில்லை. எனவே, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் பெயர்ப்பலகைகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

                கடைகள், வாணிகநிறுவனங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகள் அந்த நிறுவனங்களுக்கான முகவரி மட்டுமில்லை. அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்திற்கே அவைதான் முகவரி ஆகும். ஒரு நகரத்தின் சாலைகளில் வெளிநாட்டவரோ, வெளிமாநிலத்தவரோ செல்லும்போது, அங்குள்ள கடைகள் மற்றும் வாணிகநிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் எந்த மொழியில் உள்ளனவோ, அவற்றைக் கருத்தில் கொண்டே, அந்த மொழி பேசும் பகுதிக்குள் செல்லுகின்றோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

                மொழி என்பது ஒரு நாட்டினுடைய, இனத்தினுடைய அடையாளம் ஆகும். நம்மொழியில் எழுத நாமே பல்லாண்டுக் காலமாக வலியுறுத்திப் போராடி வருவது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும். பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி, எளிய மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து ஊர்களிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை பதவியில் உள்ள அனைவரும் பேசுகிறார்கள். இந்தக் கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன் பயனாகத்தான் மேலே குறிப்பிட்ட சட்டங்களும் அரசாணைகளும் இயற்றப்பட்டன.

                2023 – ஆம் ஆண்டு தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அறிவிப்பில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்குத் தண்டத்தொகை உருவா 50-திலிருந்து உருவா 2000-மாக உயர்த்தப்பட்டது. தமிழில் பெயர்ப்பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நயன்மன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நயன்மன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் போதும் வாணிகநிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் உருவா 2000 தண்டம் செலுத்த வேண்டும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

                2024-இல், தமிழ்நாடு உயர்நயன்மன்றம் இந்த நெறியை நடைமுறைப்படுத்துவதற்குத் துணைதரவாக உத்தரவுகளை வழங்கியது. தமிழ்ப் பெயர்ப்பலகைகளைப் பயன்படுத்துவது மொழி உரிமையின் ஒரு பகுதி என்று நயன்மன்றம் கருத்துரைத்தது. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், வாணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், இணையவழி வாணிகர், சாலையோரக் கடைகள், உணவகங்கள், மக்களுக்கு உணவு வழங்கும் தொழில் செய்யும் சுவிக்கி’, ‘சொமாட்டோஉள்ளிட்ட பலரும் தமிழை முதன்மைமொழியாகப் பயன்படுத்துவது இல்லை. இந்தியநாடு முழுவதிலும் பல கிளைகள் கொண்ட இலென்சு கார்ட்டு’, ‘தோனியும் கையும்’  ‘இரிலையன்சு டிரண்ட்சுஉள்ளிட்ட கடைகளிலும் தமிழைச் சிறிய அளவாகவும், ஒலிபெயர்ப்பு செய்தும் மட்டுமே எழுதுகின்றனர்.

                ‘ஒயின் சாப்பு’, ‘தாசுமாக்குஎன்று ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதிப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வந்து தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள நிறுவனத்தில்கூட ஆங்கிலத்திலும், சீனத்திலும் மட்டுமே நிறுவனத்தின் பெயர்கள் காணப்படுகின்றன.

                தமிழ்நாட்டு முதலமைச்சர், 2023ஆம் ஆண்டிலும், அண்மையில் வாணிகர் நல வாரியக் கூட்டத்தில் பேசும்போதும் தமிழ்மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த, அனைத்துக் கடைகள், தனியார் நிறுவனங்கள், வாணிக நிறுவனங்கள், பெயர்ப் பலகைகளில் தமிழை முதன்மையாகவும், பெரிய எழுத்துகளிலும் எழுதவேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னை, மதுரை,  தருமபுரி,  திருவள்ளூர்,  திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் முதலிய பல மாவட்டங்களின் ஆட்சியாளர்களும் இதை வலியுறுத்திப் பேசினர்.

                ஆனால், ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களே திராவிட மாடல்’, ‘சுகூல் பவுண்டேசன், ‘ஏப்பி சிரீட்டு’, ‘சன் சயின்’, ‘சன் தி.வி’, ‘சன் நெட்டு ஒர்க்கு’, ‘இரெட்டு சயன்டு’, ‘சி இசுகொயர்’, ‘கிளவுடு நயின்’, ‘சன்ரைசர்சுஎனப் பெயரிட்டு வழங்குவதாலும், ‘வந்தே பாரத்து’, ‘கேலோ இந்தியாஎன்ற நிகழ்வுகளில் தமிழ்நாட்டு அமைச்சன்மார் ஒன்றிய அமைச்சருடன் தடையின்றிக் கலந்துகொண்டு மகிழ்வதாலும், இவற்றைப் பார்க்கும் வாணிகர்க்கும் பிறர்க்கும் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்த ஆணை ஒரு பொருட்படுத்தப்பட வேண்டிய முகன்மையான ஆணையாகக் கருத மனம் வருவதில்லை என்றால் சற்றும் மிகையுரை இல்லை.

                இப் போக்கைத் தடுக்கத் தமிழில் பெயர்ப்பலகை வைத்தால் தான் நிறுவனம், கடைகள் நடத்துவதற்கு உரிமம்  வழங்கப்படும் என்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் தமிழில் பெயர்ப்பலகையைக் காணமுடியும். தூயதமிழில் பெயர்ப்பலகை இருக்கவேண்டும் என்பதைத் திராவிட மாதிரிஅரசு கட்டாயச்சட்டமாக்கி நிறைவேற்ற வேண்டுமெனத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

                புதுச்சேரியில், கடைகள், நிறுவனங்கள் சட்டப்பிரிவு, 1964. நெறி 24-, பெயர்ப் பலகைகள் பார்வைக்கு வைத்தல் - என்பது புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையும் தமிழில் இருக்கவேண்டும். பிறமொழிகளையும் பயன்படுத்தும் இடங்களில் அம்மொழிகளின் வடிவம் தமிழுக்குக் கீழே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இதற்குப் பின் மூன்று நான்கு முறை இதன் தொடர்பாகப் புதுச்சேரி அரசின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுடன், கடந்த 18-03-2025 அன்று புதுச்சேரி முதல்வர் சட்டமன்றத்தில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டியது குறித்துக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். ஆனால், குறிப்பிடும்படியான மாற்றம் நிகழவில்லை.

                பல்வேறு காலங்களில், புதுச்சேரித் தமிழ்அமைப்புகளான தமிழ்க் காவற்குழு, தனித்தமிழ்க் கழகம், தமிழினத் தொண்டியக்கம் முதலியவை தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டுமென வலியுறுத்திப் பல போராட்டங்களை மேற்கொண்டபோதிலும், அவ்வப்போது சிலர் மட்டும் தமிழில் எழுதுவதும் பிறகு கொஞ்ச காலத்தில் மாற்றிப் பிறமொழிகளில் பெயர்ப்பலகை வைப்பதும் வழக்கமாகி விட்டது.

                அண்மையில், புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கத்தின் போராட்டத்தின் போது பிறமொழியில் எழுதப்பட்டிருந்த ஓரிரு கடைகளின் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்பட்டன. (பின்னர், அவை தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டன.) இந்த வகைச் செயற்பாட்டை யாரும் விரும்புவதில்லை என்பதே உண்மை. எனவே, அந்த நிலைக்குத் தமிழர்களைத் தள்ளாமல்  தமிழ்நாட்டரசும், புதுச்சேரி அரசும் தமிழ்மண்ணில் தமிழர்களுக்குப் புரியும்வண்ணம் தமிழில் பெயர்ப்பலகைகளையும் விளம்பரப்பலகைகளையும் அமைக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென நற்றமிழ் வலியுறுத்துகின்றது.

                 மொழியென்றால் உயிரின் நரம்பு நம்

                முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு!


                உரம்பெய்த  செந்தமிழுக்  கொன்றிங்கு

                                நேர்ந்ததென  உரைக்கக்  கேட்டால்

                நரம்பெல்லாம்  இரும்பாகி,  நனவெல்லாம்

                                உணர்வாகி  நண்ணி  டாரோ! - பாவேந்தர்

          (புதுவை 'நற்றமிழ்' - அக்குதோபர் 2025 - இதழில் வந்தது)                                                                                                     - த.ந.