சனி, 11 ஜனவரி, 2025

தமிழ்ஆட்சிமொழிச் சட்டம் -இன்றைய நிலை!

 தமிழ்ஆட்சிமொழிச் சட்டம் -இன்றைய நிலை!

ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியே அம் மாநில ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்பதே முறையாகும். மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களுடைய ஆட்சி என்பர். மக்கள்மொழி ஒன்றாகவும், அவர்களை ஆளும் ஆட்சியின்மொழி வேறொன்றாகவும் அமையுமாயின், மக்களுக்குத் தொடர்பின்றிப் போகிறது. அதனால், அம் மக்களின் மொழியும் பண்பாடும் கலையும் நாகரிகமும் பொருளியலும் உலகஅரங்கில் அவர்களைப்பற்றிய குமுகாய மதிப்பீடுகளும் தாழ்ந்துபோய்விடுகின்றன.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி உள்ளது. ஒரு மொழி ஆட்சிமொழி ஆவதற்கு, அது தாய்மொழி என்னும் தகுதிக்குமேல் வேறு எந்தத் தகுதியும் பெற்றிருக்கத் தேவையில்லைஎன்பது அறிஞர் அண்ணா அவர்களின் கருத்து.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக் கூறு 345இல் வகை செய்யப்பட்டவாறு, தமிழ்நாட்டில் தமிழ்மொழிதான் ஆட்சிமொழி என்று 7.12.1956இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 19-01-1957 ஆம் நாளன்று ஆளுநரின் இசைவினை இச் சட்டம் பெற்றது. 27-01-1957ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கென ஆட்சிமொழித் திட்ட நிறைவேற்றக் குழுஒன்று 1957ஆம் ஆண்டு அரசால் அமைக்கப்பட்டது. 1968ஆம் ஆண்டில் இக்குழு மாற்றப்பட்டு, ‘தமிழ் வளர்ச்சி இயக்ககம்என்னும் தனித்துறை ஒன்றை அரசு உருவாக்கியது. தமிழ் வளர்ச்சித்துறையின் அலுவலர்கள், அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் தமிழ் ஆளுகைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அணுப்ப வேண்டும்.

ஆய்வு செய்யப்படும் அலுவலகத்தில், பேணப்பட்டு வரும் பதிவேடுகள், கோப்புகள், காலமுறை அறிக்கைகள், மடல் போக்குவரத்து, அலுவலகஆணைகள், செயல்முறை ஆணைகள், கருத்துருக்கள், பணிச்செலவு (duty travel) நிரல், நாட்குறி்ப்பு, பெயர்ப்பலகை, செய்திப்பலகைகள், பயன்பாட்டில் உள்ள இழுவை முத்திரைகள் போன்ற பலவற்றின் விளக்கங்களையும் அளிக்கவேண்டும். ஆய்வு செய்யப்பட்ட அலுவலகத் தலைவர் தேவைப்படும் இடங்களில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல் செய்யப்படவேண்டும்.

அரசு அலுவலர்களும் பணியாளர்களும் ஆட்சிமொழித் திட்டம் தொடர்பாக நன்கு அறிந்துகொண்டு செயல்பட வேண்டும்


என்பதற்காக மாவட்டந்தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் நடத்தப் பெறுகின்றன. ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடத்துவதற்கு ரூ.30,000 உம் கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.20,000 உம் அரசுப்பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தொகுத்து ஆட்சிச் சொல்லகராதி என்ற நூலினைத் உருவாக்கி அச்சிட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்குகின்றனர். அரசின் பல்வேறு துறைகளுக்கு உரியனவாக 75 சிறப்புச் சொல்லகராதிகள் வெளியிடப்பட்டன.

1957இல் திரு. வெங்கடேசுவரன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பெற்ற ஆட்சிமொழிக்குழு பல்வேறு துறைகளில் வழக்கிலுள்ள பொதுவான சொற்களுக்குரிய தமிழாக்கங்களைத் தொகுத்து ஆட்சிச்சொல் அகராதியின் முதல் பதிப்பை 1957ஆம் ஆண்டு வெளியிட்டது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் ஏறத்தாழ 9000 மேலாண்மை ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இவ்வகராதி தருகிறது. 1957ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவ்வகராதி இதுவரை நான்கு பதிப்புகளாக வெளி வந்துள்ளது. நான்காம் பதிப்பின் மறு பதிப்பும் வெளிவந்துள்ளது.

17,161 சொற்கள் அடங்கிய ஆட்சிச்சொல் அகராதி 2015ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றது. 

ஆட்சிச் சொல்லகராதி உருவாக்கத்திற்கு முன்பும், பின்பும் பாவேந்தர் பாரதிதாசன், மறைமலையடிகளார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் முதலானோர் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புகளும், புதுச் சொல்லாக்கங்களும் உருவாகும் வகையில் பல சொற்களைப் படைத்தளித்து ஊக்கமூட்டினர்.

ஆட்சிமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த பிறப்பித்த ஆணைகள் சிலவற்றைக் கீழே காண்க:

1. அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்ற அரசு ஆணை எண். 1134, நாள்.26.01.1978.

2. அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்ற அரசு ஆணை எண்.2618, நாள்.30.01.1981.

3. பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்ற அரசு நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971

4. உயர்நயன்மன்றம், உச்சநயன்மன்றம், நடுவணரசு, பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தி்ல் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே ஆட்சிமொழித்


திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் மடல்போக்குவரத்துகள் தமிழிலேயே அமைய வேண்டும் என்ற அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.

5. அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்ற பணியாளர் மேலாண்மைச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.

6. அலுவலகவரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்ற அரசு கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.

7. அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துக்களின் அளவு இடம்பெற வேண்டுவது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.

இவை போன்ற பல அரசாணைகளை அரசு பிறப்பித்தது.

முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா 1968ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படுமென உறுதியளித்தார். அதன்படி 1973ஆம் ஆண்டிலேயே ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாகவும் அனைத்து நிலைகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கவேண்டும். கல்விநிலையங்கள் அனைத்திலும் தமிழ் பயிற்றுமொழி யாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அண்ணா அவர்கள் மறைவுக்குப்பிறகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பயிற்றுமொழித் திட்டத்திற்கென ஆணைகள் பல பிறப்பிக்கப்பட்டிருந்தும் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எதிர்பார்த்தஅளவுக்கு வளர்ச்சி எல்லையை எட்டவேயில்லை என்பதுதான் உண்மை நிலை. தமிழ்வாழ்க என்னும் வாசகம் மட்டுமே அரசுத்துறைகளில் காணப்படுகிறது. ஆனால் அரசாணைகள் சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. தமிழ்வளர்ச்சித்துறையோ பிறரோ இவற்றில் கருத்தூன்றல் இல்லாதவராகவே உள்ளனர். இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இதே நிலையே தொடர்கிறது.

தமிழ் பயிற்றுமொழி என்னும் நிலை இன்னும் கனவாக, எட்டாக்கனியாகவே உள்ளது! இன்னும் இழிநிலையாக ஆங்கிலவழிக் கல்விக்கூடங்கள் புற்றீசல்களாகப் பெருகி வல்லாளுமைநிலை பெற்றுள்ளன.

அடிப்படை நிலையிலுள்ள சார்நிலை அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் முன்னேற்றமிருந்தாலும் மேலே செல்லசெல்ல செயலாக்கமின்மை தெளிவாகத் தெரிகிறது. ஆட்சிமொழித் திட்டத்தின் செயலாக்கத்தை அரசாணைகளாலும்,


அறிவுரைகளாலும் மட்டுமே நிறைவேறிட முடியாது. இதில் ஆட்சியாளரின் ஈடுபாடும் பற்றார்வமும் தொடர்ந்த கண்காணிப்பும் கண்டிப்பாகத் தேவை; இன்றேல் பயனில்லா நிலையே தொடரும்.

தமிழ்ஆட்சிமொழித் திட்ட செயலாக்கம் அரசு அலுவலகங்களுடன் மட்டும் அமைந்துவிடுவது அன்று. அது தெருக்களிலும், பெயர்ப்பலகைகளிலும் செய்தித்தாள்கள், இதழ்கள், ஒளிஊடகங்கள் முதலியவற்றிலும், கல்விநிலைய பயிற்று மொழியிலும், மக்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலாக்கப்பட வேண்டியதாகும். ஆனால், இவற்றைப் பற்றித் தமிழ்நாட்டரசும், புதுவைஅரசும் மக்களும் கருத்தூன்றலில்லாமல் இருக்கின்ற நிலை இரங்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் கடைகள், வணிகநிறுவனங்கள், தொழிலகங்கள் தங்கள் நிறுவனப்பெயர்களை, பெயர்ப் பலகைகளில் தமிழில் எழுத வேண்டுமென அரசாணை வெளியிட்டதோடு சரி, தொடர்நடவடிக்கை இல்லை. ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியவற்றையும், இக்கால் சில இடங்களில் இந்தியில் மட்டுமே எழுதியுள்ள பலகைகளையும் பார்க்கும் அவலநிலை உள்ளது. தமிழ் அறவே புறக்கணிக்கப்படுகிறது.

தமிழ் பயிற்றுமொழி பற்றித் தமிழ்நாட்டரசும் புதுவை அரசும் கொஞ்சமும் பொருட்படுத்துவனவாகத் தெரியவில்லை. அரசுப்பள்ளிகளும் நாளுக்கு நாள் ஆங்கிலவழிப் பள்ளிகளாகி வருகின்ற அவலநிலை! புதுவையில் தமிழ்வழிப்பள்ளிகள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன.

தமிழர்களின் பெருமை, தமிழின் மேன்மை, தமிழ்ப்பண்பாட்டுக் காப்பு, தமிழரின் உயர்வு, தமிழரின் உரிமை முதலியவற்றைப் பேணிக் காக்க இன்றியமையாத் தேவை தமிழைப் பயிற்றுமொழியாக்கவேண்டியதாகும்.

ஆட்சிமொழிச் சட்டத்தின் நிலை, இவ்வாறு தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இரங்கத்தக்க நிலையிலுள்ளது. பலமுறை பலரும் தமிழ்நாட்டரசையும் புதுவை அரசுசையும் வலியுறுத்திய பின்பும் மாற்றமில்லா நிலையே தொடர்கின்றது. ஆட்சிக்கு வரும் எந்தக்கட்சியும் தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந் நிலை தொடர்ந்தால் தமிழரிடமே தமிழ் வழக்கொழிந்து போகும். தமிழர் தம் அடையாளமிழந்து வெவ்வேறு கலவை இனத்தவராகி விடுவர் என்ற உண்மை கொஞ்சமும் மிகையாகக் கூறப்படுவதில்லை என்பதை ஆட்சியாளரும் பிறரும் உணர்ந்து இனியேனும் செயற்படவேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும். - குறள் 466.

(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் - அக்குதோபர் 2024 இநழில் வந்தது)

திங்கள், 23 டிசம்பர், 2024

தமிழ்க் காப்புப் போராளி இறைவிழியனார்!

 

தமிழ்க் காப்புப் போராளி இறைவிழியனார்!

தமிழ்மாமணி இறைவிழியனாருக்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு. அவர் ஆழ்ந்த மொழிப்பற்றாளர்; பகுத்தறிவு மனப்பான்மையினர்; புலமை மிக்கவர்; இனிய முகத்துடன் பழகும் பண்பாளர்; எளிய தோற்றத்தினர்; விடாமுயற்சி, நேர்மையுடன் செயல்திறன் கொண்டவர்; காலந் தவறாமையைக் கடைப்பிடித்தவர்; கைம்மாறு கருதாத கடப்பாட்டாளர்; புதுவையில் திருவள்ளுவர் சிலையமைக்கப் பெரும் பங்காற்றியவர்; இளமை தொட்டே பொதுத் தொண்டுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்; இறுதிக்காலம் வரை நான் என்னும் செருக்கு தம்மை அண்டவிடாதவர்; விளம்பரத்திற்கு முன்நிற்காதவர்; சலியாத உழைப்பாளி என்றெல்லாம் அவரைப் பலரும் பலவாறு பாராட்டுகின்றனர்.

புரையற்ற போர்க்குணம்

மேற்குறிப்பிட்ட சிறப்புகளோடு என்னை மிகவும் கவர்ந்தது அவருக் குள்ளிருந்த போர்க்குணமாகும். தமிழின் நலம் காக்கவும் தமிழரின் நலம் காக்கவும் முனைந்து அவர் செயற்பட்டபோது அவருடைய அக் குணத்தை அறிய முடிந்தது. ஆம்! அவர் தமிழ்க்காப்பில் முனைப்புமிக்க புரையற்ற போர்க்குணம் கொண்ட ஒரு போராளியாகத் திகழ்ந்தார்.

யா இறைவிழியனார் 'நற்றமிழ்' இதழைத் தொடங்கிய போது யான் அவருக்கு எழுதிய மடலில், 'உங்கள் அயரா உழைப்பும் அப்பழுக்கற்ற நேர்மையும், நெகிழ்வற்ற கொள்கைக் கடைப்பிடிப்பும் தமிழ் மொழி இன நலனுக்கான போராட்ட உணர்வும் போற்றற்குரியன. தமிழின் வளர்ச்சிக்கும் தமிழ்க் காப்பிற்குமாக வெளிவந்திருக்கும் நற்றமிழ் வளர்ச்சிக்குத் துணையிருப்போம்' என்று எழுதியிருந்தேன். தி..2031 ஆடவை (15-6-2000) நாளிட்ட இரண்டாவது நற்றமிழ் இதழில் இதை வெளியிட்டிருந்தார்.

ஐயாவுக்குப் புதுவை அரசு தமிழ்மாமணி பட்டமளித்த போது, அதையொட்டி மதிப்பிற்குரிய சீனு. அரிமாப்பாண்டியன் ஐயாவும் அன்பர்களும் உழைப்பளித்து உருவாக்கித் தந்த 'இறைவிழியனார் வாழ்வும் பணியும்' என்ற தொகுப்பு நூலில் யான் எழுதியிருந்த பாட்டின் தலைப்பு 'தளர்விலாத் தமிழ்ப் போராளி' என்பதாகும்.

அவர் கருவியேந்திப் போராடவில்லை. பெரும் எண்ணிக்கையிலான மக்களைத் திரட்டி ஒரு மாபெரும் அமைப்பை உருவாக்கிப் பெரும் புரட்சி செய்யவில்லை. பகைவர்களைக் கருவிப் போர்க்களத்தில் நேர்கொள்ள வில்லை. ஆனால் அவருக்கிருந்த மொழிப்பற்றும் இனப்பற்றும் நாட்டுப்பற்றும், இயல்பாகவே அவர்க்குள்ளிருந்த போர்க்குணமும், அவர் பள்ளி ஆசிரியப் பணி நிறைவு செய்த பின்னர் ஈடுபட்ட பல்வேறு அறவழிப் போராட்டங்களும் அவரை ஒரு போராளியாக அனைவருக்கும் அடையாளம் காட்டின. அவர் முன்னின்று நடத்தியவும் பங்கெடுத்துக் கொண்டவையுமான பல தமிழ்க் காப்புப் போராட்டங்களைப் பற்றி அறிந்தால் அவருடைய போர்க் குணத்தை அறியமுடியும்.

தமிழ்க் காவற்குழுப் போராட்டங்கள்

முனைவர் திருமுருகனார் சீவானந்தம் பள்ளியில் பணியாற்றிய போது, பாடநூலில் வடவெழுத்துக்களைப் பயன்படுத்துவதை எதிர்த்திருக்கிறார். அதை அங்கிருந்த பொறுப்பாளர் செய்தியாக்கிக் கல்வித்துறை இயக்குநருக்கு எழுதிப் போட்டிருக்கிறார். இதை அறிந்த இறைவிழியனார் உடனடியாகச் செயற்பட்டு விளக்கமாக ஒரு மடலை எழுதிப் புதுவையில் இருந்த பதினைந்து இலக்கிய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கையொப்பம் பெற்றுப் புதுவை ஆளுநருக்கும் கல்வித்துறை இயக்குநருக்கும் அனுப்பி ஏதமேதும் நிகழா வண்ணம் காத்திருக்கிறார்.

அப்போது ஏற்பட்ட தொடர்பைப் பயன்படுத்தி, இருபது இயக்கங்களின் கூட்டமைப்பாகத் தமிழ்க் காவற்குழுவை வலிமை மிக்கதாக்கி இருக்கிறார். அதன் தலைவராக 1983லிருந்து 1990 வரை எட்டாண்டுகள் துடிப்புடன் செயற்பட்டிருக்கிறார்.

புதுச்சேரி பெயர் மாற்றப் போராட்டம்

புதுச்சேரி என்னும் தமிழ்ப் பெயரை வழக்கத்துக்குக் கொண்டு வருவதற்குப் பணிகள் மேற்கொண்ட இவர், பல அலுவலகங்களின் படிகளை அலுப்புச் சலிப்பின்றி ஏறி இறங்கியிருக்கிறார். முதலில், நாள்காட்டியில் தமிழில் புதுச்சேரி இடம்பெற்றது. இவருடைய தொடர் முயற்சியால், 'பாரதி' என்ற பெயருடைய பேருந்தில் புதுச்சேரி என்று ஊர்ப்பெயர் இடம்பெற்றது.

புதுச்சேரி வானொலி நிலையத்திற்கும் தொடர்வண்டி நிலையப் பொறுப்பாளர்க்கும் புதுச்சேரி என்ற பெயரைப் பயன்படுத்துமாறு தொடர்ந்து மடல்கள் விடுத்தார். நடுவணரசின் தொடர்புடைய அமைச்சர்கட்கும் தொடர்ந்து மடல்கள் எழுதினார். இதன் பயனாக வானொலி நிலையம் புதுச்சேரி என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியது. தொடர்வண்டி நிலையத்தில், தமிழில் எழுதும் பெயர் மட்டும் புதுச்சேரி என்று எழுதப்பட்டது; ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்படும் பெயர் பாண்டிச்சேரி என்றே தொடர்ந்திருந்தது.

இறைவிழியனாரின் மறைவிற்குப் பின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு இராமதாசு அவர்களின் முயற்சியால் நடுவணரசு புதுச்சேரி என்று பெயரை மாற்ற ஒப்புக்கொண்டு ஆணை பிறப்பித்தது. தொடர்வண்டி நிலையத்திலும் புதுச்சேரி முழுமையாக இடம்பெற்றது.

அந்தச் சமையத்தில் 'நற்றமிழ்' இதழில் பாடல் எழுதிய பெரும்பாவலர் ஐயா அரங்க நடராசனார், பழைய நிகழ்ச்சிகளை எண்ணி, "வழங்குகையில் நீ யிலையே!” அதாவது, 'புதுச்சேரி என்று பெயர் வழங்குகையில் நீ இலையே!' என்ற பொருளில் இறைவிழியனாரைக் கருத்தில் கொண்டு நெகிழ்வூட்டும் பொருத்தமான பாடல் எழுதி இருந்ததைப் பலரும் பாராட்டினர்.

தமிழில் பெயர்ப் பலகை வைக்கப் போராட்டம்

"வாணிகர்தம் முகவரியை வரைகின்ற பலகையில்

ஆங்கிலமா வேண்டும்?

மாணுயர்ந்த செந்தமிழில் வரைகஎன அன்னவர்க்குச்

சொல்ல வேண்டும்!” என்றும்,

மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?

தோப்பில் நிழலா இல்லை

 

தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில்

தமிழ்தா னில்லை என்றும்.

வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ?”

என்றும் உள்ளக் குமுறலோடு பாவேந்தர் பாடியதன் பொருளை, இந்தப் புலவர் இறைவிழியனார் உள்ளவாறு உணர்ந்திருந்தார்.

தமிழ்க் காவற்குழுவின் தலைவராகப், புதுவையில் பெயர்ப் பலகையைத் தமிழில் எழுதச் செய்த் தொடர்ந்து பணிகள் மேற்கொண்டார். பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்தில் இருந்த பெயர்ப் பலகையைத் தமிழில் எழுதி அமைக்க வேண்டுமென கல்லூரி முதல்வர்க்கு வற்புறுத்தி மடல் எழுதினார். இதன் தொடர்பாக, தனித்தமிழ்க் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளும் முயற்சி மேற்கொண்டதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். அம் முயற்சிகளின் விளைவாக, அக்கல்லூரியின் பெயர்ப்பலகை தமிழில் எழுதப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

புதுவை முதல்வராகத் திரு.பாரூக்கு என்பார் இருந்தபோது, இறைவிழியனார் தலைமையிலான தமிழ்க் காவற்குழு, தமிழ் வளர்ச்சித் துறையை அமைத்திட வேண்டுமென அரசை வற்புறுத்தி ஒரு மாநாடு நடத்தியது. அதன் விளைவாகவே பின்பு தமிழ் வளர்ச்சிச் சிறகம் அமைந்ததென அவரே எழுதியிருக்கிறார்.

தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் போராட்டங்கள்

தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக் குழு அமைப்பைப் பற்றி ஐயா இறைவிழியனார் எழுதியிருக்கும் செய்தியே அவர் போராட்ட உணர்வை அறியச் செய்யும் சான்றாக உள்ளது. அவர் எழுதுகிறார்.

"ஒருமுறை தமிழ் வளர்ச்சிக்கான தமிழன்பர்களின் மறியல் நடந்தது. அப்போது நூறு பேர்களுக்குமேல் கூடி முழக்கம் செய்தனர். காவலர் வண்டி எடுத்துவந்து 'மறியல் செய்பவர்களைத் தளைப் படுத்துகிறோம். வண்டியில் ஏறுங்கள்' எனக் கூறினர். ஏறக்குறைய முப்பது பேர் மட்டுமே வண்டியில் ஏறினர். அந்நிகழ்ச்சி எனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. நூறுபேர் கூடி முழக்கமிட்டும் முப்பதுபேர் மட்டுமே ளைப்படும் நிலை ஏன்? என வினா எழுந்தது. தளைப்படக் கூடாத அரசு ஊழியரும், அகவை முதிர்ந்தோரும் கலந்து கொள்வதால் இந்த நிலை ஏற்படுகிறது. அதனால் அரசுக்கும் இப் போராட்டங்கள் பெரிதாகத் தோன்றில. எனவே, இம் முறையில் ஒரு மாற்றம் காண வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் பதிந்தது.

எனவேதான், தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு அமைக்கும் பொழுது, செயற்பாட்டு உறுப்பினர், துணை உறுப்பினர் என இரு பிரிவை உருவாக்கினேன். செயற்பாட்டுப் பிரிவில் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் செல்லக்கூடியவர் மட்டுமே உறுப்பினராதல் வேண்டும். அவ்வுறுப்பினரே ...குழுவின் தேர்தலில் கலந்து கொண்டு பொறுப்பாளராகப் பதவி ஏற்றல் வேண்டும், அரசு ஊழியர்கள், சிறைக்குச் செல்ல இயலாதவர்கள் துணைக்குழுவில் உறுப்பினராதல் வேண்டும். அவர்கள் தம் உழைப்பாலும் பொருளாலும் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவிற்கு உதவுதல் வேண்டும் எனத் தெளிவாக வரையறை செய்தேன்" என்று பதிவு செய்திருக்கிறார்.

...குழுவின் முதல் போராட்டத்தை இவ்வாறு எழுதுகிறார் : தமிழ் ஏடுகளில் பாண்டிச்சேரி என்ற பெயரை நீக்கித் தமிழ்ப்பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையைக் குழு முதலில் கையில் எடுத்தது. தினத்தந்தி, மாலைமலர் அலுவலகத்தின் முன் அவ்விதழ்கள் எரிப்புப்போர் நடத்த முனைந்தது.கடலூர்ச் சாலையில் பெருந்திரளான கூட்டம் கூடிவிட்டது.

தமிழன்பர்கள் மிகுதியான உணர்வுடன் முழக்கமிட்டனர். ஏடுகளின் அலுவலகத்தாரும் மிரண்டு விட்டனர். எனவே, ஒரு திங்களில் தமிழ்ப் பெயரைப் பயன்படுத்துவதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. இப் போராட்டம் ...குழுவிற்கு வெற்றியைத் தந்ததுடன் தமிழன்பர்கட்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

தமிழில் பெயர்ப்பலகை வைத்தல், தமிழில் கையொப்பமிடுதல், புதுச்சேரி என்ற தமிழ்ப் பெயரைப் பயன்படுத்துதல் ஆகிய தமிழ் வளர்ச்சிப் பணிகட்காகத் தலைமைச் செயலக மறியல், தினமலர் நாளேட்டின் அலுவலகத்தின் முன் மறியல் எனப் பல்வகைப் போராட்டங்கள் நடந்தன. 30 பேரிலிருந்து 50 பேர் வரையில் தளைப்படுத்தப்பட்டனர். தமிழ் உணர்வாளர்கட்கு ஊக்கம் ஏற்பட்டது என்று எழுதுகிறார்.

தமிழ் வளரச்சிப் பணிகள் சிறப்புறச் சிற்றூர் மக்களிடையே விளக்கம் தருதற்காக மூன்று பிரிவாக நடைச்செலவுத் திட்டத்தைப் பிரித்தமைத்து சிறப்பாக நடத்தியதாகவும் குறிப்பிடுகிறார்.

தில்லியில் சாலைமறியல் போராட்டம்

தமிழ்மொழியின் நலத்திற்கென யார் போராட்டம் நடத்தினாலும் எங்குப் போராட்டம் நடந்தாலும் அங்குப்போய்க் கலந்து கொள்ளத் தயங்காதவராக ஐயா இறைவிழியனார் இருந்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு, தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் கோரி தில்லியில் 22-8-2000-த்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தியது. நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட அப் போராட்டத்தில், அந்த அமைப்பில் உறுப்பினராக இல்லாத போதும் தம் தாய்மொழித் தொடர்பான போராட்டம் என்பதால் தாமும் கலந்து கொண்டார். இப்படிப்பட்ட பல போராட்டங்களின் பயனாக, 2004-இல் தமிழைச் செம்மொழி என நடுவணரசு அறிவித்ததை அறிவோம்.

சாகும்வரை பட்டினிப்போர் போராட்டம்

தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டுமென அரசை வலியுறுத்தி 25-4-1999 இல் சென்னையில் தமிழறிஞர்களும் அன்பர்களுமாக 100 பேர் கலந்து கொண்ட, சாகும்வரைப் பட்டினிப் போராகத் தொடங்கிய போராட்டத்தில், இறைவிழியனார் புதுச்சேரியிலிருந்து சென்ற மற்ற மூவரோடும் கலந்து கொண்டார். அன்றைய தமிழ்நாட்டு அரசின் முதல்வர் அப் போராட்டத்தைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளாமல் வழுக்கல் நிலையை உருவாக்கிவிட்டார் என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

தமிழர் நலக் காப்பணிப் போராட்டங்கள்

புதுச்சேரி அரசு தமிழ்வழிக் கல்வியை முற்றாக ஒழிக்கும் வகையில் எல்லாத் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி மழலையர் வகுப்புக்கு வழி செய்ததை எதிர்த்து 30க்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புக்களை ஒருங்கிணைத்து தமிழர் நலக் காப்பணியை உருவாக்கினார். அக் கூட்டமைப்பின் தலைவராகப் பேரா.தங்கப்பா ஐயா தேர்வு செய்யப்பட்டார்.

பல்வேறு முயற்சிகளும் பயனளிக்காத நிலையில், பதினொரு தொடக்கப்பள்ளிகள் முன்பு அறிஞர்களின் தலைமையில் 1-6-2005-இல் மறியல் போர் செய்து தளைப்பட்டதாக எழுதியிருக்கிறார்.

சிற்றூர்களில் மக்களைத் திரட்ட இரெட்டியார்பாளையத்தை அடுத்த புதுநகரிலும், ஆண்டியார்பாளையத்திலும், மூலைக்குளத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கருத்து விளக்கம் தந்து மக்களிடம் எழுச்சியை உருவாக்கினார்.

எழுத்து மாற்றத்தை எதிர்த்த போராட்டம்

அண்மையில் 16-5-2010 அன்று புதுவை வலைப்பதிவர் சிறகம் புதுச்சேரி வணிக அவையில் "தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு" நடத்தியதையும் அதனைத் தொடர்ந்து தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான மதிப்பிற்குரிய திரு..இராசேந்திரன், செம்மொழி மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என யாரும் தெரிவிக்கவில்லை என மறுத்துக் கூறியுள்ளதையும் பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஏழாண்டுகளுக்கு முன்னரே, 2003ஆம் ஆண்டே எழுத்து மாற்றத்தை எதிர்த்த போராட்டத்தைத் தமிழர் நலக் காப்பணி புதுவையில் நடத்தியுள்ளது. இதைப்பற்றி நற்றமிழில் வந்த செய்தியின் பகுதி பின் வருமாறு இருந்தது:

'விடுதலை' நாளேட்டில் தொடர்ந்து வரும் உயிர்மெய் உகர ஊகார வரிசை எழுத்துக்களின் சீர்திருத்தம் (36 எழுத்து) தமிழ் மொழிக்குக் கேடு விளைவிப்பது. எனவே, அவ்வெளியீட்டை நிறுத்த வேண்டும் எனத் தமிழர் நலக் காப்பணி விடுதலை ஆசிரியருக்கு எழுதியும் எப்பயனும் விளைந்திலது. எனவே, 2-3-2003இல் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் எழுத்துச் சீர்திருத்த எதிர்ப்பு விளக்கக்கூட்டம் பேரா. தங்கப்பா ஐயா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எழுத்து மாற்றத்தை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை ஏட்டின் எழுத்துச் சீர்திருத்தக் கேடு வெளியாகும் பகுதியைத் தீயிட்டு எரிக்க முனையுங்கால் காவலர்கள் தடுத்து ஏறத்தாழ முப்பது பேரை மட்டும் தளைப்படுத்தி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

'நற்றமிழ்' இதழில் வெளியான விடுதலை ஏட்டிற்குத் தீயிட்டு எரியூட்டவிருக்கும் போராட்ட அறிவிப்பைப் படித் கொட்டாரக்குறிச்சி என்ற ஊரிலுள்ள தமிழ்மன்றத்தின் அமைப்பாளர், அவர்களும் தமிழ் எழுத்து மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை ட்டினை எரித்துச் சாம்பலாக்கி, அச்சாம்பலை அந்த ஏட்டின் ஆசிரியருக்கு ணுப்ப முடிவு செய்துள்ளதாக நற்றமிழுக்கு எழுதிய மடலும் கூட நற்றமிழில் வெளிவந்தது.

நற்றமிழ் நெறிமடல் இயக்கம்

 

கெடலெங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க" என்ற பாவேந்தரின் அறிவுரையை மேற்கொண்டு, எங்கெல்லாம் தமிழ்மொழிக்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் தலையிட்டுத் தாய்மொழிக்கு உரிய இடத்தை, சிறப்பைப் பெறலே நற்றமிழ் நெறிமடல் இயக்கத்தின் நோக்கம்.

தமிழுக்கு இழிவு ஏற்படுத்துவார்க்கும் உரிய இடம் தாராதார்க்கும் அஞ்சலட்டைகளின் வழிப் பலராலும் கோரிக்கை மடல்கள் விடுக்கப்படும். கோரிக்கை நிறைவேற்றப்படாவிடில், நற்றமிழில் அம் மடலின் டியை வெளியிட்டு அம்பலப்படுத்தப்படும்.

மொழிக்காப்பிற்கான சிறுசிறு முயற்சிகள்: அதன்வழி உணர்வூட்டல்கள்

திர்த் தொலைக்காட்சியில் (sun TV) அரட்டை அரங்கம் என்பதை ஆங்கில எழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்து எழுதியதைக் குறிப்பிட்டு, அதனை மாற்றித் மிழிலேயே எழுதும்படி நெறிமடல் இயக்கத்தார் எழுதி முயற்சி மேற்கொண்ட பின், அரட்டை அரங்கம் எனத் தமிழ் எழுத்துக்களிலேயே மாற்றி எழுதினர்.

செயா தொலைக்காட்சியில், நியூ சினிமா என்ற ஆங்கிலச் சொல்லை ஆங்கில எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் கலந்து எழுதியதை எதிர்த்து நெறிமடல் இயக்கம் நடவடிக்கை எடுத்தது. விளைவாக, நியூ சினிமா எனத் தமிழ் எழுத்துக்களில் எழுதினர்.

எந்த அளவுக்கு வினைப்பாடு உள்ளதோ அந்த அளவுக்குப் பயன் விளைச்சல் கிடைக்கிறது. 400, 500 மடல் போயிருக்கிறது; கொஞ்சம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது; கொஞ்சமாக மதித்திருக் கிறார்கள். 4000, 5000 மடல்கள் போயிருந்தாலோ அல்லது 500பேர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலோ அது மிகுந்த அச்சம் தரும்; அதற்கு மதிப்பு மிகுதி; 'நியு சினிமா' என்பதை மாற்றிப் புதுப்பம் என்றோ புதிய திரைப்படம் என்றோ எழுதியிருப்பார்கள். இதனைத் தம் பல்வேறு போராட்டங்களின் வழியாக இறைவிழியனார் விளக்கியிருக்கிறார்.

நெறிமடல் இயக்கம், தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பால் விளம்பரத்தில் 'தூத்' என்ற இந்திப்பெயர் பயன்படுத்தியதை எதிர்த்து எடுத்த செறிவான நடவடிக்கையின் பயனாய், அவ் விளம்பரங்களே இல்லாது போயின.

முடிவாக...

நான் முன்னரே குறிப்பிட்டதைப் போல், இறைவிழியனார் பெரும் புரட்சியாளராக இல்லாதிருக்கலாம். அவர் உண்மையான நேர்மையான முழுமையான ஈடுபாட்டோடு தமிழ்க்காப்புக்குப் போராடிய எடுத்துக்காட்டான போராளி என்பதை யாராலும் மறுக்க இயலாது. அவருடைய வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட தமிழ்க்காப்புப் போராட்டங்கள் அனைத்துமே இளைஞர்களுக்கு உணர்வூட்டி ஊக்கந் தந்து எழுச்சியூட்டின; அவ்வகையில் அவருடைய போராட்டங்கள் அனைத்தும் வெற்றிப் போராட்டங்களே!

அவற்றை ஈடுபாட்டோடு படித்தும் கேட்டும் அறிகின்ற இளந் தலைமுறையினர் உணர்வு பெற்று தமிழ்க்காப்பு நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர் என்பதில் ஐயமில்லை!

--------------------------------------------------------------------------------

அறக்கட்டளைச்சொற்பொழிவு

புதுவை நற்றமிழ் இதழில் (சூலை - ஆகத்து 2024) வந்தது.

---------------------------------------------------------------------------------