புதன், 29 அக்டோபர், 2025

தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை!

 

தணிப்பரிதாம் துன்பமிது!

தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை!

  பாவேந்தர் ஒருமுறை மதுரை சென்றிருந்தபோது கடைத்தெருக்களிலும் பிறஇடங்களிலும் பெயர்ப்பலகைகளில், வாணிக விளம்பரங்களில், தமிழ் இல்லா நிலையறிந்து மனம் வருந்தி, தமிழ் இளையோர்க்கு எழுச்சியூட்டும் வண்ணம், ஒரே இரவில் தமிழியக்கம்என்கின்ற நூலை எழுதினார். அத் தமிழியக்கம்நூலின் ஒரு பாடலின் ஓர்அடிதான் இத் தலைப்பாகும்.

                இந்நூலின் முதற்பதிப்பு 1945-இல் வந்தது. பாவேந்தர் நல்வினைஎன்ற தலைப்பில் எழுதிய சிறு முன்னுரையில், “இதை நான் எழுதிய நோக்கம் என்னவெனில், தமிழார்வம் மிக்க இளைஞர்கள், இத்தகைய துறைகளில், தமிழ் முன்னேற்றம் கருதி இயன்றவாறு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு கூட்டம் கோயிலில் பிறமொழிக் கூச்சலைத் தடுக்க ஏன் முயலலாகாது? ஒரு குழுவினர் தெருத்தோறும் சென்று பிறமொழி விளம்பரப்பலகையை மாற்றி அமைக்கச் சொல்லி ஏன் வற்புறுத்தலாகாது? மற்றும் பலவகையினும் கிளர்ச்சி செய்யின், தமிழ் விடுபடும், தமிழ்நாடு விடுபடும். எவ்வினையினும் இஃதன்றோ இந்நாள் இன்றியமையாத வினை?” என்று குறிப்பிட்டுள்ளார். அந் நூலின் விளைவாக, அப்போது, ஓரளவு எழுச்சி ஏற்பட்டது.

                தமிழ்நாட்டரசு இதன் தொடர்பாக, 1948-இல் இருந்து 75 ஆண்டுகட்கும் மேலான காலத்தில் கீழ்க்காணும் வகையெல்லாம் சட்டம் / அரசாணைகள் இயற்றி இருக்கின்றது:

                1947-இல் இயற்றிய தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தில், 1948-இல் உருவாக்கப்பட்ட நெறி-15 (Rule 15)-இன்படி நிறுவனங்கள் தங்கள் பெயர்களைப் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற பொதுவான அறிவுறுத்தல் இருந்தது. ஆனால், அந்தப் பெயர்ப்பலகைகள் தமிழில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் அப்போது இடம்பெறவில்லை.

                தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 என்பதன் கீழ் 1959-இல் நடைமுறை நெறிகள் வெளியிடப்பட்டன., 1959 நெறி 42வின்படி, உணவுவிடுதிகள், தேநீர்க்கடைகள் போன்ற அனைத்து உணவு நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளும் தமிழ்மொழியைப் பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டது. தமிழ் எழுத்துகள் மற்ற மொழிகளின் எழுத்துகளைவிடப் பெரியதாகவும், முதன்மையாகத் தெரியும்படியும் இருக்கவேண்டும். மற்ற மொழிகள் பயன்படுத்தப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து மற்ற மொழிகளும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

                1977-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை அரசாணை எண்: 575, நாள்: 08.08.1977 - என்பது தமிழ்நாட்டில் உள்ள வாணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழியைக் கட்டாயமாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையாகும். இந்த அரசாணையே, பெயர்ப்பலகை தொடர்பான தமிழ் வளர்ச்சி முயற்சிகளின் முதல் சட்டஅடிப்படை நடவடிக்கை ஆகும்.  இது, பெயர்ப்பலகைகளில் தமிழ்ப்பெயர் முதலில் (மேலே) இருக்கவேண்டும், அதன் கீழ் ஆங்கிலப் பெயர், பின்னர் மற்ற மொழிகள் இருக்கலாம். எழுத்துரு அளவுகள் 5 : 3 : 2 என்ற தகவீட்டில் (விகிதத்தில்) தமிழ், ஆங்கிலம், மற்ற மொழி இருக்கவேண்டும் என்று கூறியது.

                1982-இல் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அரசாணை 1541 நாள் 29-7-1982 - தமிழ்மொழிக்கு முதன்மைநிலை அளிக்கவும், தமிழில் சரியான எழுத்துருவை ஊக்குவிக்கவும், வாணிக / நிறுவனப் பெயர்ப்பலகைகளில் மொழிச் சமநிலையை நிறுவவும் கூறியது

                1983-இல் அரசாணை எண் 3312 தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை, நாள்: 29.12.1983, நெறி 24-அ திருத்தத்தின் வழி கடைகள், வாணிகநிறுவனங்கள், உணவுவிடுதிகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துகளின் அளவை மற்ற மொழிகளின் எழுத்துகளைவிடப் பெரிதாக வைக்கவேண்டும் என்பதைச் சட்ட அடிப்படையில் மாற்றியமைத்தது. பிற மொழியில் எழுத வேண்டுமானால், அந்த மொழி தமிழுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் வரவேண்டும். தமிழ் எழுத்துகள் முதன்மையாகவும் தெளிவாகவும் திருத்தப்பட்ட எழுத்து வடிவில் (Reformed Script) இருக்கவேண்டும் என்று கூறியது.

                1984-ல் புதிய திருத்தங்களும் அதனை நிலைநாட்டும் கூடுதல் அரசு ஆணையும் வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 50%, ஆங்கிலத்தில் 30%, பிற மொழியில் 20% என்ற எழுத்துரு அளவீடு குறிப்பிடப்பட்டது.

                அரசாணை. எண் 349, தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை, நாள்: 14.10.1987 - அரசுஅலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துகளின் அளவு பிறமொழி எழுத்துகளைவிட எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்பதைக் குறித்த வழிகாட்டுதலை வழங்கியது.

                தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அரசாணை. 291, நாள்: 19.12.1990 -இன் படி சரியான தமிழ்ச்சொல்லே பெயர்ப்பலகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறது. (எ.கா: Book Depot என்பதை நூலகம் / புத்தக நிலையம் என மாற்றுவது;  Bakery  என்பதை அடுமனை என மாற்றுவது).

                தமிழ்நாட்டை ஆண்ட / ஆளுகின்ற இரண்டு திராவிடக்கட்சியினரின் ஆட்சிகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், கடைகள், வாணிகநிறுவனங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றுகூடக் கட்டாயப்படுத்தவில்லை; தமிழ்எழுத்துகள் பெரிதாகவும், பிறமொழி எழுத்துகள் சிறிய அளவிலும் இருக்கவேண்டும் என்றுதான் அவை குறிப்பிடுகின்றன.

                இவற்றை வாணிகர்கள் பின்பற்றுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த அரசாணைகளைச் செயற்படுத்த வேண்டும் என்ற அழுத்தமான கருத்து எந்தக் கட்சி ஆட்சியாளர்க்கும் இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும். சட்டம் போட்டதோடு, அரசாணை வெளியிட்டதோடு அவர்தம் கடமை முடிந்துவிட்டதாகவே கருதிக்கொண்டு நிறைவடைந்து விடுகிறார்கள். நிலைமை முன்னைப் போலவே என்றும்போல் மாறாமல் நீடிக்கிறது. மேடைகளில் சட்டம் போட்டு விட்டதாகவும் அரசாணை வெளியிட்டு விட்டதாகவும் முழக்குகிறார்கள். ஆனால், அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று கவனித்து, கடுமையான நடவடிக்கை எடுப்பதே இல்லை.

                கோரிக்கைகளின் மூலமாக மட்டும் கடைகள், நிறுவனங்கள், பெயர்ப்பலகைகளில், வாணிக விளம்பரங்களில் தமிழை இடம்பெறச் செய்யமுடியாது என்று உறுதியாகத் தெரிவதால், அவ்வப்போது, தமிழ்ப்பற்று மிக்க சிறுசிறு அமைப்புகளும், சிறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபடுகின்றன. ஆனாலும் அவர்களும் அவ்வப்போது ஆட்சியாளரின் உறுதிமொழிகளை ஏற்று அமைதியாகிவிடுகின்றனர். இந்த நிலைமையே 75 ஆண்டுகளுக்கும் மேலாகத்தொடர்ந்து வருகின்றது.

                நகர்ப்புறங்களில் மட்டுமன்று; சிற்றூர்ப்புறங்களிலும்கூட பெயர்ப்பலகையை ஆங்கிலத்தில் எழுதுவது போலிநாகரிகமாகி விட்டது. மேலும், தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் செய்யப்படும் பெரும்பாலான விளம்பரங்களும் ஆங்கிலமொழியில்தான் அமைந்துள்ளன.  

                இத்தகைய நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பஞ்சாப்பு, கருநாடகம் போன்ற மாநிலங்களின் பெயர்ப்பலகைகளில் அவர்தம் தாய்மொழி முதலில் நிற்கிறது. இந்தி பேசும் மாநிலங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எண்கள்கூட இந்தியில் எழுதப்படுகின்றன. கருநாடகத்திலும் எண்களையும் கன்னடத்தில் எழுதிடும் அளவுக்கு அங்கே முனைப்புக் காட்டப்படுகிறது. ஆனால், தமிழகத்திலோ நமது குறைந்த அளவு கோரிக்கையான தமிழில் பெயர்ப் பலகைகள்என்பதே இன்றைய நாள்வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

                இதற்காக நடத்தப்படும் போராட்டங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு எதிராகவோ, வாணிகர்களுக்கு எதிராகவோ, சட்டம் ஒழுங்கு நிலையை மீறுவதற்காகவோ நடத்தப்படுவதில்லை; தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. போராட்டங்கள் நடத்தப்பட்டவுடன் மிகச்சில கடைகளில், வாணிகநிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாறும்; பெரிய அளவில் மாற்றம் நடைபெறுவதில்லை. எனவே, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் பெயர்ப்பலகைகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

                கடைகள், வாணிகநிறுவனங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகள் அந்த நிறுவனங்களுக்கான முகவரி மட்டுமில்லை. அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்திற்கே அவைதான் முகவரி ஆகும். ஒரு நகரத்தின் சாலைகளில் வெளிநாட்டவரோ, வெளிமாநிலத்தவரோ செல்லும்போது, அங்குள்ள கடைகள் மற்றும் வாணிகநிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் எந்த மொழியில் உள்ளனவோ, அவற்றைக் கருத்தில் கொண்டே, அந்த மொழி பேசும் பகுதிக்குள் செல்லுகின்றோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

                மொழி என்பது ஒரு நாட்டினுடைய, இனத்தினுடைய அடையாளம் ஆகும். நம்மொழியில் எழுத நாமே பல்லாண்டுக் காலமாக வலியுறுத்திப் போராடி வருவது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும். பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி, எளிய மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து ஊர்களிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை பதவியில் உள்ள அனைவரும் பேசுகிறார்கள். இந்தக் கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன் பயனாகத்தான் மேலே குறிப்பிட்ட சட்டங்களும் அரசாணைகளும் இயற்றப்பட்டன.

                2023 – ஆம் ஆண்டு தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அறிவிப்பில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்குத் தண்டத்தொகை உருவா 50-திலிருந்து உருவா 2000-மாக உயர்த்தப்பட்டது. தமிழில் பெயர்ப்பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நயன்மன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நயன்மன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் போதும் வாணிகநிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் உருவா 2000 தண்டம் செலுத்த வேண்டும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

                2024-இல், தமிழ்நாடு உயர்நயன்மன்றம் இந்த நெறியை நடைமுறைப்படுத்துவதற்குத் துணைதரவாக உத்தரவுகளை வழங்கியது. தமிழ்ப் பெயர்ப்பலகைகளைப் பயன்படுத்துவது மொழி உரிமையின் ஒரு பகுதி என்று நயன்மன்றம் கருத்துரைத்தது. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், வாணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், இணையவழி வாணிகர், சாலையோரக் கடைகள், உணவகங்கள், மக்களுக்கு உணவு வழங்கும் தொழில் செய்யும் சுவிக்கி’, ‘சொமாட்டோஉள்ளிட்ட பலரும் தமிழை முதன்மைமொழியாகப் பயன்படுத்துவது இல்லை. இந்தியநாடு முழுவதிலும் பல கிளைகள் கொண்ட இலென்சு கார்ட்டு’, ‘தோனியும் கையும்’  ‘இரிலையன்சு டிரண்ட்சுஉள்ளிட்ட கடைகளிலும் தமிழைச் சிறிய அளவாகவும், ஒலிபெயர்ப்பு செய்தும் மட்டுமே எழுதுகின்றனர்.

                ‘ஒயின் சாப்பு’, ‘தாசுமாக்குஎன்று ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதிப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வந்து தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள நிறுவனத்தில்கூட ஆங்கிலத்திலும், சீனத்திலும் மட்டுமே நிறுவனத்தின் பெயர்கள் காணப்படுகின்றன.

                தமிழ்நாட்டு முதலமைச்சர், 2023ஆம் ஆண்டிலும், அண்மையில் வாணிகர் நல வாரியக் கூட்டத்தில் பேசும்போதும் தமிழ்மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த, அனைத்துக் கடைகள், தனியார் நிறுவனங்கள், வாணிக நிறுவனங்கள், பெயர்ப் பலகைகளில் தமிழை முதன்மையாகவும், பெரிய எழுத்துகளிலும் எழுதவேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னை, மதுரை,  தருமபுரி,  திருவள்ளூர்,  திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் முதலிய பல மாவட்டங்களின் ஆட்சியாளர்களும் இதை வலியுறுத்திப் பேசினர்.

                ஆனால், ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களே திராவிட மாடல்’, ‘சுகூல் பவுண்டேசன், ‘ஏப்பி சிரீட்டு’, ‘சன் சயின்’, ‘சன் தி.வி’, ‘சன் நெட்டு ஒர்க்கு’, ‘இரெட்டு சயன்டு’, ‘சி இசுகொயர்’, ‘கிளவுடு நயின்’, ‘சன்ரைசர்சுஎனப் பெயரிட்டு வழங்குவதாலும், ‘வந்தே பாரத்து’, ‘கேலோ இந்தியாஎன்ற நிகழ்வுகளில் தமிழ்நாட்டு அமைச்சன்மார் ஒன்றிய அமைச்சருடன் தடையின்றிக் கலந்துகொண்டு மகிழ்வதாலும், இவற்றைப் பார்க்கும் வாணிகர்க்கும் பிறர்க்கும் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்த ஆணை ஒரு பொருட்படுத்தப்பட வேண்டிய முகன்மையான ஆணையாகக் கருத மனம் வருவதில்லை என்றால் சற்றும் மிகையுரை இல்லை.

                இப் போக்கைத் தடுக்கத் தமிழில் பெயர்ப்பலகை வைத்தால் தான் நிறுவனம், கடைகள் நடத்துவதற்கு உரிமம்  வழங்கப்படும் என்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் தமிழில் பெயர்ப்பலகையைக் காணமுடியும். தூயதமிழில் பெயர்ப்பலகை இருக்கவேண்டும் என்பதைத் திராவிட மாதிரிஅரசு கட்டாயச்சட்டமாக்கி நிறைவேற்ற வேண்டுமெனத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

                புதுச்சேரியில், கடைகள், நிறுவனங்கள் சட்டப்பிரிவு, 1964. நெறி 24-, பெயர்ப் பலகைகள் பார்வைக்கு வைத்தல் - என்பது புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையும் தமிழில் இருக்கவேண்டும். பிறமொழிகளையும் பயன்படுத்தும் இடங்களில் அம்மொழிகளின் வடிவம் தமிழுக்குக் கீழே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இதற்குப் பின் மூன்று நான்கு முறை இதன் தொடர்பாகப் புதுச்சேரி அரசின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுடன், கடந்த 18-03-2025 அன்று புதுச்சேரி முதல்வர் சட்டமன்றத்தில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டியது குறித்துக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். ஆனால், குறிப்பிடும்படியான மாற்றம் நிகழவில்லை.

                பல்வேறு காலங்களில், புதுச்சேரித் தமிழ்அமைப்புகளான தமிழ்க் காவற்குழு, தனித்தமிழ்க் கழகம், தமிழினத் தொண்டியக்கம் முதலியவை தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டுமென வலியுறுத்திப் பல போராட்டங்களை மேற்கொண்டபோதிலும், அவ்வப்போது சிலர் மட்டும் தமிழில் எழுதுவதும் பிறகு கொஞ்ச காலத்தில் மாற்றிப் பிறமொழிகளில் பெயர்ப்பலகை வைப்பதும் வழக்கமாகி விட்டது.

                அண்மையில், புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கத்தின் போராட்டத்தின் போது பிறமொழியில் எழுதப்பட்டிருந்த ஓரிரு கடைகளின் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்பட்டன. (பின்னர், அவை தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டன.) இந்த வகைச் செயற்பாட்டை யாரும் விரும்புவதில்லை என்பதே உண்மை. எனவே, அந்த நிலைக்குத் தமிழர்களைத் தள்ளாமல்  தமிழ்நாட்டரசும், புதுச்சேரி அரசும் தமிழ்மண்ணில் தமிழர்களுக்குப் புரியும்வண்ணம் தமிழில் பெயர்ப்பலகைகளையும் விளம்பரப்பலகைகளையும் அமைக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென நற்றமிழ் வலியுறுத்துகின்றது.

                 மொழியென்றால் உயிரின் நரம்பு நம்

                முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு!


                உரம்பெய்த  செந்தமிழுக்  கொன்றிங்கு

                                நேர்ந்ததென  உரைக்கக்  கேட்டால்

                நரம்பெல்லாம்  இரும்பாகி,  நனவெல்லாம்

                                உணர்வாகி  நண்ணி  டாரோ! - பாவேந்தர்

          (புதுவை 'நற்றமிழ்' - அக்குதோபர் 2025 - இதழில் வந்தது)                                                                                                     - த.ந.

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

திருக்குறளை அன்று! உனை நீயே இழிவு செய்தாய்!

 

திருக்குறளை அன்று! உனை நீயே இழிவு செய்தாய்!

பீகாரில் பிறந்த இர.நா.இரவி என்னும் இரவீந்திரநாத்து நாராயண இரவி, நாகாலாந்து, மேகாலயா ஆளுநராக இருந்தவர். அம் மாநிலங்களில் கெட்டபெயரெடுத்தவர். அவர் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டபோது கோகிமா செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற வழியணுப்பு நிகழ்ச்சியைச் செய்தியாளர்கள் அனைவரும் புறக்கணித்தனர் என்று அறிகின்றோம்.

18-09-2021-இல் தமிழ்நாட்டு ஆளுநராகப் பொறுப்பேற்றதி- லிருந்தே இர.நா.இரவி தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராகவே இயங்கிவந்தார். இவருடைய நடவடிக்கைகள் நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படைகளைத் தகர்க்கிறது என்றுகூறி உச்சநயன்மன்றம் கண்டித்தது. தமிழ்நாட்டுச் சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டவரைவுகளை நிறுத்திக் கிடப்பில் போட்டுத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆனார். இவர் செயற்பாடுகளை உச்சநயன்மன்றம் கண்டித்ததோடு எச்சரிக்கையும் செய்திருக்கின்றது. இவரைக் கண்டித்ததைப் போன்று வேறு எந்த ஆளுநரையும் உச்சநயன்மன்றம் கண்டித்ததில்லை என்கின்றனர். 

இர.நா.இரவி, ‘சநாதனம்மேலானது என்றும், தமிழ்நாட்டைத் தமிழகம் என்றுதான் கூறவேண்டுமென்றும், கால்டுவெல் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டவர் என்றும், மக்களுக்குக் கேடு செய்யும் செம்பு ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்கவேண்டுமென்றும், தமிழ்நாடு மட்டும் முன்னேறுவது சரியில்லை என்றும், இந்தி, சங்கதத் திணிப்பை வரவேற்றும் பேசிவந்ததைக் கண்டோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறுவது திருக்குறள். பிறப்பிலேயே வேறுபாடு கற்பிப்பதுசநாதனம்’. இர.நா.இரவி, திருவள்ளுவரைப்பாரத சநாதனத் துறவிஎனக் கூறி இழிவுறுத்தினார். சி.யு.போப்பு திருக்குறளை அவமதித்துள்ளார் என்றும், திருக்குறளில் இருக்குமறைச் சொற்கள் உள்ளனவென்றும் (இருக்குமறைக் கருத்துகளே குறளில் உள்ளதெனும் பொருளில்) பலவாறு கூறி தமிழ்மக்களின், தமிழறிஞர்களின் கண்டனத்திற்குள்ளானார். 

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்!

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே!என அனல் தெறிக்கப் பாடியவர் வள்ளலார்பெருமான்! அவரை, ஆதன்நேய ஒருமைப்பாடு கூறிய வடலூர் இராமலிங்க வள்ளலை, ‘சநாதன தருமத்தின் உச்சவிண்மீன்(நட்சத்திரம்)’ என்று கூறி இழிவுபடுத்தினார், இந்த இரவி! நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றக் கலைச்சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே’  - எனத் தெளியக் கூறிய இராமலிங்கப் பெருமகனை, இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலங் கடையா உரைப்பர்!’  - எனக்கூறி இடித்துரைத்த நம் பசிப்பிணி மருத்துவரைஇந்து மத சநாதனிஎன்றார் இந்த இரவி.

சனவரி 2024-இல் திருவள்ளுவரைக் காவி உடையோடும், திருநீற்றுப் பூச்சோடும் பூணூலோடும் மதஞ்சார்ந்தவராக்கி வரைந்த படத்தை வைத்திருந்ததினாலும், அழைப்பிதழில் வெளியிட்டதினாலும் தமிழர்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார். திருக்குறளைப் பற்றிய இரவியின் பேச்சுகள்  திருக்குறள் கூறும் மெய்ப்பொருளைத் திசைதிருப்பும் முயற்சிஎன்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.  

அரசியல்காரர்கள், குமுகப் பண்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், தமிழ் இயக்கத் தலைவர்கள் முதலிய அனைவரும் ஆளுநரின் நடவடிக்கைகளைப் பொறுப்பற்றவை எனக் குற்றம்சாட்டினர். அவர் செயல்கள், தமிழ்நாட்டின் மதநல்லிணக்க நிலையையும் பண்பாட்டு மதிப்புகளையும் மறுக்கும் வகையில் இருப்பதாகவும், மதஉணர்வைத் திணிப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

தமிழ்நாட்டரசு உச்சநயன்மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 08-04-2025-இல் அளித்த தீர்ப்பு, ஆளுநர் மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டங்களைத் தடுத்துவைத்தது "அரசியல் சட்டத்திற்கு எதிரானது" என்றும், "தவறானது" என்றும் கூறியது. ஆளுநர் பதவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதது  என்பதால், அவர் மாநிலஅரசின் செயல்பாடுகளுக்குத்  தடையாக இருக்கக்கூடாது  என்று உச்சநயன்மன்றம் வலியுறுத்தியது. ஆளுநர்க்குச் சட்ட வரைவுகளை காலவரையின்றித் தடுத்துவைக்கும் அல்லது மறுக்கும் அதிகாரம் (pocket veto) இல்லை என்று தெளிவுபடுத்தியது. ஆளுநர் அரசியலமைப்பை மதித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்குத் துணையிருக்க வேண்டும் என்றும், அவர் செயல்கள் அரசியல் நோக்கங்களால் தாக்கம்பெறக் கூடாது, மாறாக அரசியலமைப்பின் உயர்ந்த குறிக்கோள்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் தெளிவுறுத்தியது. 

இந்தத் தீர்ப்பு வந்தபின் கொஞ்சம் காலம் அமைதியாயிருந்த இர. நா. இரவி, இப்போது, மறுபடியும் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான செயல்பாட்டைத் தொடங்கிவிட்டார் எனத் தோன்றுகிறது. 13-7-2025-இல் சென்னையில் ஆளுநர்வளமனையில்தேசிய மருத்துவர்கள் நாள்விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில்எண்ணித் துணிகஎன்ற நிகழ்ச்சி இடம்பெற்றிருக்கிறது. அந் நிகழ்வில் ஆளுநர் இரவி, தேர்வு செய்யப்பட்ட ஐம்பது மருத்துவர்களுக்கு விருதுகளும் நினைவுப்பரிசுகளும் வழங்கியிருக்கிறார். அவரால் அளிக்கப்பட்ட நினைவுப்பரிசுக் கேடகத்தில் திருக்குறள் என்று ஒன்று இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்தது:

செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு 

மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு.   – திருவள்ளுவர் (குறள் 944)”.

திருவள்ளுவர் எழுதிய 1330 குறள் வெண்பாக்களில் 944-ஆம் குறளிலோ வேறு எங்குமோ இப்படி ஒன்று கிடையாது. திருக்குறளில் 123ஆம் பாடலாகிய,

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்” – என்னும் குறளைப் பார்த்துப் போலியாகப் புனையப்பட்ட ஒன்றையே கேடகத்தில் 944-ஆம் குறளென்று பொறித்துத் தந்துள்ளனர். 

வள்ளுவர் பெருமான் இயற்றிய 944-ஆம் எண்ணுக்குரிய குறள் -

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.               - என்ற குறளாகும். இங்ஙனம், திருக்குறளில் இல்லாத ஒன்றைத் திருக்குறள் 944 என்று குறித்த கேடகத்தை ஆளுநர் இரவி ஐம்பது மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்திருக்கின்றார். 

உலக அறிஞர்கள் மிகச்சிறப்பாகப் போற்றுகின்ற, தமிழர் உயிரெனக் கருதுகின்ற, ஈடெடுப்பற்ற உலகஇலக்கியமாகிய திருக்குறள் இவ்வாறு அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டு, இழிவுறுத்தமுயன்ற நிகழ்ச்சியால் தமிழரின் பண்பாட்டை, மரபு இலக்கியத்தைத் தமிழ்நாட்டின் ஆளுநர் இரவி தலைமையேற்று நடத்திய விழா அவமதித்திருக்கின்றது. 

நினைவுக்கேடகம் பெற்றுச்சென்ற மருத்துவர்களில் தமிழ் தெரிந்தார், திருக்குறளில் இல்லாத ஒன்றைத் திருக்குறள் என்று ஆளுநர் தந்த கேடகத்தில் பொறித்திருப்பதை அறிந்து வியப்பும் வருத்தமும்மிகச் செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இது திருக்குறளுக்கும், வள்ளுவருக்கும் அவமானம் எனப் பலரும் செய்தியறிந்து கொதிப்படைந்தனர். தமிழறிஞர்களும், இந்திய ஒன்றிய ஆளுங்கட்சி தவிர்த்த பிற அரசியல் கட்சித்தலைவர்களும் தமிழ்மக்களும் ஆளுநர் இரவிக்குத் தம் கண்டனத்தைத் தெரிவித்தவண்ணம் இருந்தனர். திருக்குறளுக்கு நேர்ந்த நிலைக்கு ஆளுநர் பதவிவிலக வேண்டுமெனவும், மன்னிப்புக்கேட்க வேண்டுமெனவும், குரல்கள் எழுந்தன.

            முன்னாள் இந்திய ஒன்றிய நிதிஅமைச்சரான ப.சிதம்பரம், “13-07-2025 அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலிக் 'குறள்' பொறிக்கப்பட்டிருந்தது என்பது தான் அதிர்ச்சிச் செய்தி. 'குறள் 944' என்று பொறிக்கப்பட்ட 'குறள்' திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரியவருகிறது. குறள் 123-லிருந்து திருடி, திருத்தி, இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தகுதி தாழ்ந்த செயல். காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலைக் 'குறள்' என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல். போலிச் சித்திரம், போலிக் குறள்....இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்?” என்று எழுதித் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

கண்டனக் குரல்கள் பெருகிச் செவிப்பறை தாக்கவே, விழிப்படைந்த ஆளுநர் அலுவலகம், இந்தத் தவற்றைச் செய்தது யார் என்பது குறித்து உசாவல் நடத்தப்படும் என்றும் தவறாக எழுதி யிருந்த 50 நினைவுப்பரிசுக் கேடகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளனவென்றும், தவற்றைச் சரி செய்து மூன்று நாள்களுக்குள் திரும்ப வழங்கப்படும் என்றும் கூறியது. 

அது மட்டுமன்றி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.சி.மோகன் பிரசாத்து வெளியிட்ட அறிக்கையில், “மூத்த மருத்துவ வல்லுநர்களுக்குத் திருக்குறள் பொறிக்கப்பட்ட  நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு பிழை ஏற்பட்டது. இந்தப் பிழைக்கு நாங்கள்தான் முழுப்பொறுப்புஎன்று குறித்திருந்தார்.

இருந்தபோதிலும், ஆளுநர் அலுவலகம் சார்பில் வழங்கப்படும் ஒரு நினைவுப்பரிசில் இத்தகைய ஒரு தவறு நிகழ்ந்தது, செயல்பாட்டுக் குறைபாட்டையும், உரிய சரிபார்ப்பு இல்லாததையும் சுட்டிக்காட்டுகிறது. எனவே, ஆளுநர் அலுவலகத்தின் தலைவராக, இந்த நிகழ்வுக்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டியது ஆளுநரின் கடமை என்று பலரும் கருதுகின்றனர். இது ஒரு மாந்தத் தவறு என்றாலும், திருக்குறள் போன்ற ஒரு முதன்மைச் சிறப்பு வாய்ந்த இலக்கியத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகப் பார்க்கப்படுவதால், ஆளுநரின் பொறுப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி, ஆளுநர் இரவியின் முந்தைய நடவடிக்கைகளுடன் இணைந்து, அவர் மீதான கண்டனங்கள் குவிகின்றன.

எது, எப்படி இருந்தாலும், திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் இழிவுநேர முயற்சிசெய்த இந்தச் செயலுக்கு யார் காரணமாக இருந்தாலும் அந்த ஆளிடம் நற்றமிழ் கூறவிரும்புவது இதுதான்:

திருக்குறளை அன்று! உனை நீயே இழிவு செய்தாய்!

----------------------------------------------------------------------------------------------

புதுவை 'நற்றமிழ்' தி.ஆ.2056 மடங்கல் (ஆகத்து - 2025) இதழில் வந்தது. 

-----------------------------------------------------------------------------------------------