புதன், 26 ஏப்ரல், 2017

ஞாயிறு போற்றுவம் – நூல் அறிமுகமும் அலசலும்!



ஞாயிறு போற்றுவம் நூல் அறிமுகமும் அலசலும்!





         ஒரு பொறியாளர் ஏறத்தாழ முப்பது அகவைக்கு மேல் தமிழ் யாப்பிலக்கணம் கற்றுத் தடையின்றிப் பாட்டெழுதி நூலாக்கி வெளியிட்டாரென்றால், அவர், தாய்மொழியாகிய தமிழில் எந்த அளவிற்குப் பற்றும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவராக இருக்கவேண்டு மென்பதை பொதுவாக யாரும் உணரமுடியும். பொறியாளனாகப் பணி செய்து கொண்டே தமிழ் முதுகலை படித்து, ஓரளவு மரபில் பாட்டெழுதவும் கற்ற என்னைப் போன்றோர் அவருடைய ஈடுபாட்டை இன்னும் முழுமையாக உணரமுடிகிறது..

     பொறிஞர் மி.அமலன் என்ற ஆசிரியர் பெயரில் எழுதப்பட்ட ஞாயிறு போற்றுவம் என்னும் பொருட்டொடர் நிலைச் செய்யுள் நூல், இக்கால் தேர்ந்த பாவலராக விளங்கும் அகன் அவர்களின் முதல் முயற்சியாக வந்த நூலாகும்.

     பூரிப்பு என்ற தலைப்பில் அணிந்துரை எழுதியுள்ள மூதறிஞர் இரா.இளங்குமரனார் ஐயா, பாவாணர் வாழ்வியலையும் ஆய்வியலையும் ஓடிய ஓட்டத்தில் கண்டு மகிழுமாறு, திரட்டுப்பாகாக வழங்கியுள்ளார் அமலனார் என்று குறிப்பிட்டுள்ளார்.

     நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வென்பா, சிந்தியல் வெண்பா, வெண்கலிப்பா, கலி வெண்பா, பஃறொடை வெண்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை யாப்பில், எளிமையாகவும் இனிமையாகவும் அமைந்த பாடல்கள் கருத்தை விளக்குகின்றன.

     மரபுப் பாடல்களை விளக்க வந்த எளிய எடுத்துக்காட்டுப் பாடல்களாகவும், பாவாணர் பற்றிக் கூறும் அரிய செய்யுள் நூலாகவும் அமைத்து ஒரேகல்லில் இரண்டு காய்களை அடித்திருக்கிறார்! வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று குறளைப் படித்தவரன்றோ?          
    
     பாடல்கள் அணிநயத்தோடும் யாப்பமைதியோடும் சிறப்பாக பாடப் பெற்றுள்ளன. தமிழ், தமிழர் உரிமை மீடக உழைத்தோர், உழைப்போர்க்கும், பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் கயவரை எதிர்ப்போர்க்கும் நூலைப் படையல் செய்துள்ளார்.

     தமிழ்வாழ்த்துப் பாடலில் பாவாணர் கூறும் தமிழின் பதினாறு சிறப்புகளை விளக்கியிருக்கின்றார். உணர்வெலா மூடுருவி ஊனெங்கு மூறி உணவாக என்ற னுயிர்க்காகிய தமிழ் என்ற கூற்று ஆசிரியரின் தமிழ்ப் பற்றைக் காட்டுகிறது.

     பாவாணரின் பிறப்பைக் கூறுங்கால், பூத்தரை ஞாயிற்றின் பொற்கதிர் மங்கிடப் பூத்ததே ஞாயிற்றுக் குஞ்சு என்று போற்றும் சிறப்பு சுவையாகும். பொல்லா இறப்புறுக சாவு, எல்லோர்க்கும் கற்ற்றிவே மாடு, அறவழி அருள்சுரந் தொழுகல், கார்முகில் மூடியோ செம்பரிதிக்கு?போன்ற தொடர்கள் சிறப்பானவை.

     ஆசிரியரின் தொடக்கப் படைப்பு இந் நூலாகையால், புவி, சதி, புத்தி போலும் இரண்டு மூன்று அயற்சொற்கள் இடம் பெற்று விட்டன. அமலன் என்பது மாசிலான், மாசிலி எனற பொருளுடைய அயற்சொல் என அறிந்து, இக்கால் ஆசிரியர் அப் பெயரைத் தவிர்த்து, அகன் என்ற பெயரில் எழுதிவருகிறார். ஒரு தொடக்கநிலைப் பாவலரின் மிகச் சிறப்பான மரபுப்பா நூல் ஞாயிறு போற்றுவோம் ஆகும். பாவாணரை அறிமுகப்படுத்தும் வகையில் பாடப் பெற்ற இந்நூல், மரபுப்பா எழுத விழைவாரும் மரபுப்பாவில் ஆர்வமுடையோரும் தவறாமல் படிக்க வேண்டிய நூலாகும்.
-----------------------------------------------------------------------
   

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…


சிறந்த நூல் அறிமுகம்
பாராட்டுகள்

உமா சொன்னது…

ஐயா வணக்கம். வெகு நாட்களுக்குப் பிறகு தங்கள் வலைப்பக்கம் வரும் வாய்ப்புக்கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்புத்தகம் கிடைக்குமிடம் பதிப்பக பெயர் இருப்பின் அருள் கூர்ந்து க்குறிப்பிடவும். நன்றி
அன்புடன்
உமா