வியாழன், 20 மே, 2010

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சியும் பயனும்!

*

புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு!


     நம் வலைப்பதிவில் முன்பே அறிவித்திருந்த 'தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு' புதுவை வலைப்பதிவர் சிறகத்தாரால் 16-05-2010 அன்று முழுநாள் நிகழ்வாக நடத்தப்பட்டது.
            முதல் நிகழ்வாக, பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரனார் தொகுத்த "தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?" என்றற அரிய நூல் வெளியிடப்பட்டது.
            பின்னர், முதல் அமர்வில் பேரா. நா.இளங்கோ தலைமை உரையாற்ற பொறியாளர்கள் திரு. இராம.கி., மணி.மு.மணிவண்ணன் அரிய ஆய்வு சான்ற விளக்கவுரை ஆற்றினர். தமிழ்மணம் சொ.சங்கரபாண்டி அவர்களின் உரை காண்பொளியில் அளிக்கப்பட்டது.
            பகல் உணவுக்குப்பின் நடைபெற்ற இரண்டாம் அமர்வு, எளிமையாக விளக்கம் தரும் உணர்வுரை நிகழ்வாக இருந்தது. தமிழநம்பியின் தலைமை உரையுடன் தொடங்கியது. தமிழ்த்திருவாளர்கள் சீனு.அரிமாப் பாண்டியனார், ந.மு. தமிழ்மணி ஐயா, க.தமிழமல்லனார், கோ.தாமரைக்கோ ஐயா, பாவலர் அரங்க.நடராசன் ஐயா, ப.திருநாவுக்கரசு ஐயா, தென்மொழி மா.பூங்குன்றன் ஐயா ஆகியோர் அரிய கருத்துக்களுடன் உணர்வுரை ஆற்றினர்.
நிறைவு நிகழ்வாக, பேராசிரியர், பாவலர் ம.இலெ.தங்கப்பா ஐயாவின் நிறைவுக் கருத்துரை இடம்பெற்றது.
            தமிழ்நாட்டரசு, தமிழ் எழுத்து மாற்ற அறிவிப்புச் செய்யக்கூடாதெனப் பலரும் பல்வேறு கோணங்களிலும் பல்வேறு காரணங்களைக் காட்டி உரையாற்றினர்.
முழுமையான செய்திகளை
என்னும் வலைப்பதிவில் காணலாம்.
            மாநாட்டின் முதன்மைப் பயனாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் புதுவைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான மதிப்பிற்குரிய திரு.ம.இராசேந்திரனின் அறிக்கை வந்துள்ளது.          

     புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் 16-5-2010 அன்று பேசிய தமிழறிஞர்       இரா.இளங்குமரனார் உரைக்கு விடையளிக்கும் வகையில் திரு.ம.இராசேந்திரன் திங்கள்கிழமை (17-5-20100) வெளியிட்ட செய்தி என 18-5-2010ஆம் நாள் தினமணியில் கீழ்க்காணும் செய்தி வந்துள்ளது:
            "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன. இம் மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை. அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி உறழாடும் (விவாதிக்கும்)  அரங்காகத்தான் செம்மொழி மாநாடு நடக்கும்".
            இந்த அறிவிப்பு ஆட்சியாளரின் அறிவுறுத்தத்தின் படியே செய்யப்பட்டிருக்கும் என்று கருத இடமிருந்தாலும், புதுவை வலைப்பதிவர் சிறகம், இவ் அறிவிப்பிற்கு ஒருங்கிணைப்பாளர் இராசேந்திரனார்க்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, அரசு அறிவிப்பாக இக்கருத்தை வெளியிட வேண்டுமென 19-5-2010 அன்று புதுவைச் செய்தியாளர் கூட்டத்தின் வழி கேட்டுக்கொண்டுள்ளது.
            அச் செய்தியாளர் கூட்டத்தில், திருவாளர்கள் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன், பேரா.நா.இளங்கோ, ம.இளங்கோ, தமிழநம்பி ஆகியோர் கலந்துகொண்டு கருத்து விளக்கம் அளித்தனர்.
            இந் நிலையில், தமிழ்நாட்டரசு தன்முனைப்பாக எழுத்து மாற்றம் செய்யத் துணியாதென நம்புகிறோம்.
            தக்க காலத்தில், தகுந்த முறையில் தக்கதோர் மாநாட்டினை நடத்திக் காப்பு முயற்சி மேற்கொண்டு, தக்க பயனேற்பட வழி வகுத்த புதுவை வலைப்பதிவர் சிறகத்தைத் தமிழுலகம் பாராட்டி நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறது. *
 ---------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: