காலத்தால் மறைந்த தொலைவரிப்
பணி
காலத்தால் மறைந்த தொலைவரிப்
பணி
நம் விழுப்புரம் கிளையின் 38-ஆம் ஆண்டுவிழா நிகழ்வின் தலைவர் அவர்களே! நமது கிளையின் செயற்பாட்டாளர்களாகிய தோழர் கலியபெருமாள், தோழர் கருணாகரன், தோழர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பொறுப்பாளர்களே! நிகழ்ச்சி தொகுப்பாளர் தோழர் இராதாகிருட்டினன், பாவலர் தோழர் நீரை அத்திப்பூ, இன்னும் சிறப்புரை, வாழ்த்துரை வழங்க வருகை புரிந்துள்ள தோழர்களே! அவையிலுள்ள அனைத்து தோழமை உள்ளங்களே! அனைவர்க்கும் வணக்கம்.
இந்தப் பாட்டரங்கம் பகுதியில், தந்துள்ள தலைப்பு ‘காலத்தால் மறைந்த தந்தி சேவை’ என்பதாகும். இந்தத் தலைப்பைப் பற்றிச் சிறிது விளக்கிவிட்டு பாட்டரங்கப் பாடலுக்குப் போகலாம் என விழைகின்றேன்.
'தந்தி' என்ற சொல் வடமொழி என்னும் சங்கத மொழிச் சொல். அதற்குக் ‘கம்பி’, ‘இழை’ என்ற பொருள்கள் கூறுவார்கள். கம்பி வழியாகச் செய்தி அப்னுப்பப்படுவதால் ‘தந்தி’ என்று பெயரிட்டுவிட்டனர். அந்த சமற்கிருதச் சொல்லையே நாமும் பயன்படுத்தி வந்தோம்.
‘Telegraph’ என்ற ஆங்கிலச் சொல் ‘tele’, “gtaph’ எனும் இரண்டு கிரேக்கச் சொற்கள் சேர்ந்ததாகும். இவற்றில், ‘tele’ என்பதற்குத் தொலைவு, தூரம் என்று பொருள். “gtaph’ என்பதற்கு எழுதுதல், பதிவுசெய்தல் என்று பொருள். எனவே, ‘Telegraph’ என்றால் தொலைவிற்கு எழுதுதல் என்று பொருளாகும்.
தமிழில் வரி என்றால் எழுத்துவடிவம் என்று பொருள் உண்டு. அதனால்தான் தொலைப்பேசி, தொலைக்காட்சி என்று சொல்வதைப்போல், ‘Telegraph’ என்பதைத் சுருக்கமாகத் ‘தொலைவரி’ என்று சொல்வது பொருத்தமாகம் இருக்கும்., ‘சேவை’ என்ற அயற்சொல்லைப் ‘பணி’ எனத் தமிழில் கூறலாம். எனவே, ‘காலத்தால் மறைந்த தந்தி சேவை’ என்பதைக் ‘காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி’ என்பது பொருத்தமானதாகும். தந்தியே போய்விட்டது. இப்போது அதன் பெயர்பற்றிக் கவலைப்படத் தேவைஇல்லையே என்ற கருத்து சிலருக்குத் தோன்றும். ஒரளவு சரிதான். இருந்தாலும் சரியான செய்திகளைத் தெரிந்துகொள்வதுதானே நல்லது. சரி,
இனி, பாட்டிற்குப் போவோம்.
அன்பார்ந்த தோழர்களே! இது ஒரு மரபுப்பாடல். கலிவெண்பா வகையைச்சேர்ந்தது. எளிமையானது. படிக்கும்போதே புரியும். செய்திகளைத் திரட்டி எழுதியிருக்கின்றேன். நான்கு அல்லது ஐந்து நிமையம். தோழர்கள் அன்புகூர்ந்து அமைதியாகக் கவனிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
==================================================================
காலத்தால் மறைந்த தொலைவரிப்
பணி
தோழமை
அன்புநிறை தூயமன நல்லோரே!
ஆழறிவு
ஆய்வர் அமெரிக்க நாட்டினர்
சாமுவெல்
மோர்சென்னும் ஓவியர் ஆராய்ந்து
காமுறத்
தாமுழைத்துக் கண்டு பிடித்தார்
தொலைவர்
விரைவில் தொடர்புகொள ஏலும்
தொலைவரி
என்கின்ற துள்ளொலித் 'தந்தி ’யை!
நல்லவர் சாமுவெல் இல்லத் தரசியார்
பொல்லாத
சாவடைந்த அல்லலுறு தீச்செய்தி
காலத்தில்
கிட்டாத காரணத்தால் துன்பாழ்ந்தார்!
ஞாலத்தில்
மீவிரைவில் நாம்செய்தி தானனுப்பக்
கண்டுபிடிப்
போம்கருவி என்றுறுதிச் சூளேற்றுத்
திண்ணிய
பேருழைப்பில் கண்டதே ‘தந்தி ’யாம்
நூறுடன்
எண்பத்தெட் டாண்டின்முன் நுட்பமாய்க்
கூறுறத்
தந்தார் குறையறத் ‘தந்தி’’!
ஒருநூ(று)
அறுபதுடன் ஓரிரண்டாண்(டு) இங்கே
அருமையாய்த்
‘தந்தி ’ அடித்தார்
அனைவருமே!
செம்பு
இரும்புவகை ஊடகத்தின் ஊடாகக்
கம்பிவழிச்
செய்தி கடத்துவதால் சங்கதத்தில்
‘தந்தி’யென் றாரிந்தத் தக்க தொலைவரியை!
எந்தத்
தொலைவுக்கும் எட்டியதே செய்தி!
அடுத்துவந்த
ஆய்வாளர் அக்கம்பி தன்னை
விடுத்துத்
தவிர்த்தபுதுக் ‘கம்பியிலாத் தந்தி’
அலையியக்கத்
தாலே அரும்பணியைச் செய்யும்
தலையியக்கம்
என்றவகைக் கண்டு பிடித்தாரே
இன்னவகை
முன்னேற்றம் இத்துடன் நிற்கவில்லை!
பன்வகையும்
நுண்ணாய்வால் பாரோர்க்குத் தூரத்
தொலையச்சு
என்றே துலக்கமாகச் சொல்லும்
நிலையில் ‘தெலிபிரிண்டர்’ நேர்அச்சைத் தந்தனரே!
பின்னர்க்
கணிப்பொறி என்னும் பெயருடனே
பென்னம்பே
ராற்றலிங்குப் பேராட்சிச் செய்கிறது!
கட்டில்லாக்
கைப்பேசி, மட்டில் இணையத்தால்
கட்டுகட ‘தந்தி’ மறைந்ததுவே காலத்தால்!
சட்டமும்
ஏற்கும் சரியான ஆவணமாய்த்
திட்டமாய்த் ‘தந்தி’த் திகழ்ந்திட்ட காரணத்தால்
யாரும்
இடைநுழைந்தே ஏதமெதும் செய்யவொணாத்
தேறுநிலை காப்பு திகழ்கின்ற
காரணத்தால்
இக்காலும்
இத்தாலி, இன்சப்பான் நல்பிரேசில்
ஒக்கசில
நாட்டில் உயிர்வாழும் ‘தந்தி’முறை!
கப்பல்
தொடர்பிற்கும் கண்காணித் தேநாடு
தப்பாமல்
காக்கும் தகுதிமிகு போர்ப்படைக்கும்
எப்போதும்
‘தந்தி ’ இனிதுதவி செய்கிறது!
இப்போதும்
தேவை இருக்கிறது ‘தந்தி’க்கு!
சிற்றூரில் ‘தந்தி’யென வந்தாலே மக்கள்
அரற்றி
அலறி அழுததொரு காலம்!
அறிவியல்முன்
னேற்றமின்று யாரும் அறிவார்!
சிறியராம்
பிள்ளைகளும் சிற்றூரில் பேரூரில்
கைப்பேசி
கையாளல் கண்டு வியக்கின்றோம்!
மெய்ம்மறந்தே
மூழ்கியதில் மீளா விருப்பமுடன்
காலத்தை
வீணடிக்காக் கோலத்தர் யாரேனும்
ஞாலத்தில்
உள்ளாரோ? ஐயம்
அரிதேதான்!
இவ்வாறு
‘தந்தி’ இருந்தநிலை இக்காலம்
எவ்வாறு
மாறிய(து) என்பதையும் கண்டோம்!
இதுவே
உலகியல்(பு) ஏதொன்றும் மாறல்
பொதுநெறியாம்
மாறாதே பூவுலகில் என்றும்!
அமைதியுடன் கேட்ட அவையோர்க்கு நன்றி!
நமைக்கவர்ந்த ‘தந்தி’ நனிமறைந்த தைப்பாட
நல்வாய்ப்பை
நல்கிய நல்லாரை உள்ளிட்ட
எல்லாரும் வாழ்க இனிது.
- தமிழநம்பி -
---------------------------------------------------------------------------------------------------------------