திங்கள், 19 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – எ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! எ.
--------------------------------------------------------------------------------
 
தமிழா,

சப்பானியப் பொறிஞன் தமிழகம் வருகிறானே!
மொழிபெயர்ப்பாளிகளோடு வருகிறானே!
மொழிச்சிக்கல் அவனுக்கு இல்லையே!

போகின்றவனுக்கும் சிக்கல் இல்லையே!

உன்னைக் கொத்தடிமையாய்க் கொண்டு ஆட்சி செய்யும் நடுவணரசில் உன் மொழிக்கு ஒத்த உரிமை உண்டா?

இந்திக்காரனுக்கு மட்டும் இந்தியா பட்டாபோட்டுத் தரப்பட்டு விட்டதா?

எந்த நாட்டில் மொழியுரிமை இல்லையோ, அந்த நாட்டில் வாழ்வது...
அடிமை வாழ்வேதான்!


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,22., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

-------------------------------------------------------------------------------------------------------

சனி, 17 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௬.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ௬.
------------------------------------------------------------------------------------

தமிழா,

ஆள்பவன் ஒப்புகை இல்லாமல், அயலவன் அணுவுலை உன்நாட்டில் ஏற்படுமா?

அண்டை மாநிலத்தான் ஏற்காத அணுவுலையை,
அன்றே மண்ணின் மைந்தர் எதிர்த்தும்,
இந்நாள்வரை எதிர்த்துக்கொண்டிருந்தும்,
மேலும் மேலும் விரிவாக்கத்திற்கு முனைவது என்ன?

அயல் மாநிலத்தான் துணவு அணுவும் இல்லாக்
கோழைத் தன்னல அயலவரே இங்கு ஆள்வது தானே?


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,8., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)
 ------------------------------------------------------------------------------------------------

வியாழன், 15 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ரு.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ரு.
------------------------------------------------------------------------------------

தமிழா,

ஒருநாடு பன்மொழி பல இன நாடு என்றால் என்னசெய்ய வேண்டும்?

பல இனங்களுக்கும் பல மொழிகளுக்கும் ஒப்புரிமை ஆளுமை வேண்டும் அல்லவா?

வல்லாண்மையால் இந்தி மட்டும் ஆட்சிமொழி என்று ஆனால் அது...,
ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில்  சுண்ணாம்பும் தடவுவது இல்லையா?

உன் மாநில ஆட்சி,
உன்மாநில முறைமன்றம்,
உன் மாநிலமொழிக் கல்வி உனக்கு இல்லை என்றால்,

இது விடுதலை நாடா?
கெடுதலை நாடா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,7., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

செவ்வாய், 13 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௪



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ௪.
------------------------------------------------------------------------------------
 
தமிழா,

உலகின் மூத்த குடிநீ                                                     உலகின் மூத்த மொழி உன்னுடையது.

பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னே, குமரியொடு வடவிமயம் வரை வாழ்ந்தவன். ஆணை செலுத்தியவன்.

நீ சுற்றாத கடலில்லை. 
வெல்லாத நாடில்லை.

ஆனால், உனக்காக ஒரு நாடு உலகில் உள்ளதா?

உன் உயர்மொழி உலகமன்றம் ஏறுகிறதா?

உன் பிறந்த மண்ணிலேயே சாகடிக்கத் துணிந்த நீ, எங்கே அதனை ஆள வைப்பாய்?-

எப்படி வாழவைப்பாய்?


(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,7., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

------------------------------------------------------------------------------------------------------------

சனி, 10 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௩.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! .
------------------------------------------------------------------------------------
தமிழா,

உன் தாய்மொழி ஒரு நூற்றாண்டுக்குள் செத்தமொழியாகிவிடும் என்று உலகம் அறிவிக்கிறதே!

உணர்ந்தாயா?

எந்தமொழி ஆட்சிமொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி கல்விமொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி வழிபாட்டு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி இசை மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி சடங்கு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி வீட்டு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
நூற்றாண்டில் அழியும் என்கிறதே உலகப் புள்ளி விளக்கம்!

அதனை உணராத நீ உண்மையில் உயிரோடும் உணர்வோடும் இருக்கத்தான் செய்கிறாயா?


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,3., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

--------------------------------------------------------------

புதன், 7 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – உ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! .
----------------------------------------------------

தமிழா,

உன்மொழி உயர்மொழி; தனிமொழி; செம்மொழி.
அதைப்படைத்தவன் அறிவியல் நுண்ணியன்.

அதனை அறியும் அறிவு உனக்கு உண்டா?
அதனை உணர்ந்து வளர்க்கும் திறன் உனக்கு உண்டா?

அதனை அழிக்கின்றவன் கயவன் என்று என்றாவது எண்ணியது உண்டா?
அழிப்பான் அழிப்புக்கு நீ இடமதராமல் இருந்தாயா?
அழிக்க நீதானே முந்து நின்றாய்!

நீ, நீயாக என்றாவது இருந்தாயா?
எவனெவனையெல்லாம் தூக்கிச் சுமந்தாய்!

இருப்பவரை ஏறிட்டுப் பாராமல் செத்தாரைத் தேடித் தூக்கிச் சுமக்கும் நீ, என்று திருந்துவாய்?

உன்னை உணராத நீயா உலகை உணர்வாய்?  


(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம் 2,3.,  2016., திருவள்ளுவர் நிலையம்,  7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006.)

-----------------------------------------------------------------------

திங்கள், 5 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்!



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்!
------------------------------------------------


தமிழா,

மூவாயிர ஆண்டு ஆரியத்தமிழனாய் கெட்டாய்;
அவனினும் கெடுப்பவன் ஆனாய்!

ஆங்கிலத் தமிழனாய் முந்நூறு ஆண்டுகள் ஆனாய்!
அவனினும் தமிழைக் கெடுத்தாய்;

இதுகால் திரவிடத் தமிழனானாய்,
இல்லாத பெயரை இட்டுக்கொண்டு ஏமாற்றலே வாழ்வானாய்!

நீ தமிழனாக தமிழ்த் தமிழனாக ஆவது எப்போது?

அப்போதே நீ உருப்படுவாய்!


(தமிழா! தமிழா!! இரா.இளங்குமரனார், பக்கம் 1,2., 2016., திருவள்ளுவர் நிலையம், 7,இராமன் தெரு, திருநகர், மதுரை 625006.)
-------------------------------------------------------------

செவ்வாய், 16 மே, 2017

எண்ணுப்பெயர் ‘ஒன்பது’ பற்றிய பாவாணரின் கருத்து விளக்கம்!



எண்ணுப்பெயர் ஒன்பது பற்றிய பாவாணரின் கருத்து விளக்கம்!
-------------------------------------------------------------

தொண்டு : தொள் + து = தொண்டு.
தொள் = தொளை.
உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்தலின், தொண்டு என்னும பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.
தொண்டு தொண்டி = தொளை
ஒப்புநோக்கு: தொண்டை (throat) = தொளையுள்ளது.
....................
ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது.
தொண்டு + பத்து = தொண்பதுந
தொண்பது தொன்பது ஒன்பது.
தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக.

தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது 900 என்னும் எண்ணைக் குறித்தது.
தொண்டு + நூறு = தொண்ணூறு.
இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும் பிறமூன்றாம் இட எண்ணுப்பெயர்களுடன் ஒப்புநோக்குக.

தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது.
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் தொளாயிரம்.
இதை ஆறாயிரம் ஏழாயிரம் எண்ணாயிரம்என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக.

தொண்டு என்னும் பெயர் எங்ஙனமோ, தொல்காப்பியர்  காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது. ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில் தொடைத் தொகை கூறுமிடத்து,
மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
நொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே. (செய்.101)   
என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். தொண்டுபடு திவ்வின் (மலைபடு கடாம்.21) என்றார் பெருங்கெளசிகனாரும்.

எண்ணுப் பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்ட வேண்டியதாயிற்று.

எண்            பண்டைப்பெயர்      இற்றைப்பெயர்
9               தொண்டு             ஒன்பது (தொன்பது)
90              தொண்பது           தொண்ணூறு
900            தொண்ணூறு         தொள்ளாயிரம்
9000           தொள்ளாயிரம்       ஒன்பதினாயிரம்
                                     (ஒன்பது+ஆயிரம்)
ஒன்பதினாயிரம் என்னும் கலவை எண்ணுப்பெயர் பண்டை முறைப்படி (1000X9) 9000 என்னும் எண்ணைக் குறிப்பதாகும்.

ஒன்றுமுதல் பத்துவரையுள்ள ஏனை எண்ணுப்பெயர்களெல்லாம் தனிமொழிகளாயிருக்க ஒன்பது என்பது மட்டும் தொடர் மொழியாயும், பது (பத்து) என்னும் வருமொழியைக் கொண்டதாயு மிருத்தல் காண்க.
தொன்பது என்னும் பெயர் முதன்மெய் நீங்கி ஒன்பது என்று தமிழில் வழங்குகுன்றது. தெலுங்கில் முதன்மெய் நீங்காமல் தொம்மிதி (தொனுமிதி) என்று வழங்குவதுடன், எட்டு என்னும் எண்ணுக்கும் எனுமிதி எனப் பத்தாம் இடப்பெயர் வழங்கிவருகிறது.

ஒன்பது என்னும் பெயருக்கு ஒன்று குறைந்த பத்து என்று பெருள்கூறுவது, பொருந்தப் புகலல் என்னும் உத்தி பற்றியது. இக்கூற்றிற்கு உருதுவிலும்  இந்தியிலும் உள்ள, உன்னீஸ் (19) உன்தீஸ் (29), உன்சாலிஸ் (39), உன்சாஸ் (49), உன்சட் (59), உனத்தர் (69), உன்யாசி (79), என்னும் எண்ணுப்பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும் அப்பெயர்கள் ஒழுங்கற்ற முறையிலமைந்தவை யென்பதை நவாசீ (89), தின்னா நபே (99) என்னும் பெயர்களாலறியலாம்.

தொண்டு + பத்து = தொண்பது (தொன்பது ஒன்பது),         தொண்டு + நூறு = தொண்ணூறு
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம்
என்று புணர்ப்பது எளிதாயும் இயற்கையாயிமிருப்பவும், இங்ஙனம் புணர்க்காது,
ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றும்,
ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்றும்,
செயற்கையாகவும், ஒலிநூலுக்கும் தருக்க நூலுக்கும் முற்றும் மாறாகவும் தொல்காப்பியர் புணர்த்தது, அவருக்கு முன்னமே தொண்டு என்னும் எண்ணுப்பெயர் வழக்கற்றுப் போனதையும், தொல்காப்பியத்திற்கு முந்தின தமிழிலக்கண நூல்களில் மேற்கூறிய எண்ணுப்பெயர்களைத் தவறாக செய்கை செய்து காட்டியதையும் குறிப்பதாகும். இதனால் தமிழின் தொன்மையும் தமிழிலக்கணத்தின் தொன்மையும் அறியப்படும்.

தொல்காப்பியரைப் பின்பற்றி, நன்னூலாரும் தொண்ணூறு தொள்ளாயிரம் என்னும் புணர்மொழி யுறுப்புகளைப் பிழைபடக் கூறியுள்ளார்.  

(நன்றி! - பாவாணரின் ஒப்பியன் மொழிநூல்)

------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 8 மே, 2017

பொறிஞர் அகனின் “தமிழ் வீறு” – நூல் அறிமுகமும் கருத்துரையும்!



     பொறிஞர் அகனின்
தமிழ் வீறு நூல் அறிமுகமும் கருத்துரையும்!

     மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் மொழியாய்வுக் கொள்கைகளையும் கருத்துக்களையும் ஏற்று நடப்பவர் அகன் ஐயா! பொறிஞராக அலுவல் பார்த்தவர்; தமிழைத் தனியே பயின்றவர்; யாப்பிலக்கணம் கற்றவர்; இனிய எளிய உணர்வு தெறிக்கும் பாடல்களை எழுதுகின்றவர்; சுவைமிக்க கருத்தாழம் மிக்க சிறுகதைகளத் தூய தமிழில் எழுதுவதில் வல்லவர்.   

     அகன் ஐயா, தெளிதமிழ், நற்றமிழ், எழுகதிர், தமிழ்நேயம், தமிழர் முழக்கம், தேமதுரத் தமிழோசை, கண்ணியம், மள்ளர் மலர், திருக்குறள் தொண்டூழியம், தமுக்கு, யாதும் ஊரே, நாளை விடியும், புதிய தென்றல் போலும் சிற்றிதழ்களில் எழுதிய பாடல்களுடன் ஈராண்டுக் காலத்தில் எழுதிய பிற பாடல்களையும் சேர்த்து தமிழ் வீறு நூலாக்கியிருக்கின்றார்.



வெண்பா, கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, பொறிஞர் அகன் அவர்களின் பா நூலின் அனைத்துப் பாடல்களிலும் தலைப்பிற் கேற்ப, தமிழ் வீறு வெளிப்படுகின்றது அறுசீர் மண்டிலம், எழுசீர் மண்டிலம், எண்சீர் மண்டிலம், ஆசிரியம் ஆகிய பா, பாவின வகைகளில் 52 தல்ப்புகளில் பாடல்களை ஆக்கியிருக்கிறார்.

     தமிழைப் போற்றிக் காத்தல், தமிழ் ஆன்றோரைப் போற்றல், தமிழ் மரபு காத்தல், தமிழ், தமிழர் நலன்களுக்கெதிராக இயங்குவாரைக் கண்ணின்று கண்ணறக் கண்டித்தல், தமிழின் பல்வேறு சிறப்புகளைக் கூறல், தமிழைக் காக்க எழுச்சியூட்டல், குமுகாய சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தல், சாதி மதம் எதிர்த்தல், பெண்ண்டிமை எதிர்த்தல் போன்ற உயர்ந்த கருத்துகள் பாடுபொருள்களாக உள்ளன. நேரடியாகக் கூறி நெறிப்படுத்தும் உத்தியே பெரும்பாலும் கையாளப்பட்டுள்ளது.

முப்பாலே; முத்தமிழே; மூப்பில்லாச் செந்தமிழே!
இப்பாரின் முன்மை இயன்மொழியே! ஒப்பில்லா
நன்றூறும் வாழ்வறமும் நன்றாம் அகம்புறமும்
மன்னுலகிற் கீந்ததுன் மாண்பு
இப்பாடல் அகன் ஐயா தமிழைப் போற்றும் பாடல்களுள் ஒன்று!

பயனில் இந்தியைப் பகைத்தல் போலவே
மயக்கும் ஆங்கில மடமை மாய்ப்பமே என்று பாடுகிறார்.

ஐந்திணைச் சீரறம் ஓங்கு நந்தமிழ்ச்
செந்நெறி தீய்த்திடும் இந்தி ஓட்டுவம் என்றும் முங்குகிறார்.

நந்தமிழ் கொல்லும் திராவிட ஆரிய நஞ்சினையே
உந்தி அழுந்திட முற்றிலும் காறி உமிழ்ந்திடுக! என்கிறார்.

விழுப்புறு மானம், உரிமைகள் காத்திடல் வாழுதலாம் என்று விளக்குகிறார்.

விண்ணின்று வந்தொருவன் விழிப்பேற்றி விடியலீவான் என்றா உள்ளாய்? என்று கேட்கின்றார்.

சீரோங்கும் செந்தமிழின் தூய்மைதனைக் காக்கச்
சீரற்ற பிறஎழுத்து, சொல் விக்குவோமே என்று வலியுறுத்துகிறார்.

இந்தியா இந்தி இந்துவென் றுளறி
செந்தமிழ்க் குடிஎம் சீரினைச் சிதைப்பதா? எனச் சீறுகிறார்.

இவை போலும் கருத்துக்களும் எழுச்சியூட்டும் பாடல்களும் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. 

தனித்தமிழ் உணர்வார்ந்தார் மெய்ப்பு பார்க்கவியலாத நிலையில், இடம்பெற்றுவிட்ட அற்பம், சாமி, சதி, சவம் போன்ற சில அயற்சொற்களை அடுத்த பதிப்புகளில் தவிர்த்திடலாம்.

இன்றைய தமிழரின் வாழ்வு, மொழி, பண்பாடு பொன்ற பல்வேறு நிலைகளிலும் உள்ள சீர்கேட்டினைக் கண்டு மன வெதும்பலுடன்,  தமிழ் தமிழர் நலத்தையன்றி வேறு எவ்வகைப் பற்றுமற்ற துறவார்ந்த மனநிலையோடு ஒருவர்,  தமிழர்க்கு எழுச்சியூட்டப் பாடும் வீறார்ந்த பாடல்களாக தமிழ்வீறு பாடல்கள் விளங்குகின்றன எனில் மிகையில்லை. 

இன்னொரு பயனாக, நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பல்வேறு யாப்பு வகைகளையும் குறிப்பிட்டிருப்பதால் தொடக்கநிலை பாவலர்க்கு பாட்டெழுத இந்நூல் பெரிதும் உதவியாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

உயரிய கருத்தார்ந்த அரிய பாக்கள் அடங்கிய நூலைத் தந்துள்ள பொறிஞர் அகனார்க்கு நம் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்!
-------------------------------------------------------------------------

வியாழன், 4 மே, 2017

எண்ணுப்பெயர்கள் – ௩ (நிறைவுப் பகுதி)



எண்ணுப்பெயர்கள்   (நிறைவுப் பகுதி)
எட்டு:
எட்டு பெயர் வடிவம்
எண் அடை வடிவம்
எட்டு + நாள = எண்ணாள்

எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்
எட்டு + கழஞ்சு = எண்கழஞ்சு
எட்டு + வகை = எண்வகை
எட்டு + நாழி = எண்ணாழி

ஒன்பது:
ஒன்பான், ஒன்பஃது என்பவை மாற்று வடிவங்கள்.
தொண்டு என்பது ஒன்பதைக் குறித்த பழைய பெயர்.
ஒன்பது கூட்டு வடிவம்.

ஒன்பஃது (அ) ஒன்பது + பத்து = ஒன்பஃதுநூறு > தொன்பஃதுநூறு > தொன்நூறு > தொண்ணூறு.

ஒன்பஃது (அ) ஒன்பது + நூறு = ஒன்பஃது ஆயிரம் > தொன்பஃது ஆயிரம் > தொன் ஆயிரம் > தொள் ஆயிரம் > தொள்ளாயிரம்.
இது, தொளாயிரம் எனவும் வழங்குகின்றது.

இவற்றை மரூஉ என்று கொள்ளாமல், தொல்லாசிரியர் முடித்தவாறே முடித்துக் காட்டுகின்றனர். இதனை நெறி என்கின்றனர்.

ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம்; ஒன்பதிற்றாயிரம்.

பத்து:
பத்து - பெயர் வடிவம்.
பான், பன், பது, பஃது, பதின் என்பன மாற்று வடிவங்கள்.

ஒன்று + பத்து = ஒருபது; ஒருபஃது
இரண்டு + பத்து = இருபது; இருபஃது
மூன்று + பத்து = முப்பது; முப்பஃது
நான்கு + பத்து = நாப்பது; நாற்பஃது
ஐந்து + பத்து = ஐம்பது; ஐம்பஃது
ஆறு + பத்து = அறுபது; அறுபஃது
ஏழு + பத்து = எழுபது; எழுபஃது
எட்டு + பத்து = எண்பது; எண்பஃது.

ஒருபஃது + ஒன்று = ஒருபத்தொன்று (எண்)
இருபஃது + மூன்றுகல் = இருபத்து மூன்றுகல்.

பத்து + ஒன்று = பதினொன்று; பதிற்றொன்று.
     `           {பன்னொன்று (மரூஉ) எனச் சிறுபான்மை வரும்)
பத்து + இரண்டு = பன்னிரண்டு
பத்து + மூன்று = பதின்மூன்று; {பன்மூன்று (மரூஉ)}
பத்து + நான்கு = பதினான்கு; {பன்னான்கு (மரூஉ)}

நூறு:
நூறு பெயர் வடிவம் (எழு நூறு)

நூறு + ஆயிரம் = நூறாயிரம்
நூறு + இருபது = நூற்றிருபது
நூறு + பத்து = நூற்றுப்பத்து.

சில எண்ணுப் பெயர்கள் இரட்டித்தல் (எண் அடுக்கு)
ஒவ்வொன்று
இவ்விரண்டு
மும்மூன்று
நன்னான்கு
அவ்வைந்து
அவ்வாறு
எவ்வேழு
எவ்வெட்டு
பப்பத்து                                         (முடிந்தது)