புதன், 15 மார்ச், 2017

மாலனின் மனக்கோணல் கக்கும் நச்சுக் கருத்துக்கள்!



மாலனின் மனக்கோணல் கக்கும் நச்சுக் கருத்துக்கள்!
-------------------------------------------------------------- 
13-3-2017 தினமணி நாளிதழ் நடுப்பக்கத்தில் உத்திரப்பிரதேசம் சொல்லும் செய்தி கேட்கிறதா? என்ற தலைப்பில் மாலன் என்ற பெயரில் இடம்பெற்றுள்ள கட்டுரை தமிழ், தமிழினத்துக் கெதிராக மறைமுகமாக நச்சுக்கருத்துக்களை உமிழ்ந்துள்ளது எனில் சற்றும் மிகையில்லை!



உத்திரப்பிரதேசத்தில் பா.ச.க. 403 இடங்களில் 312இல் வெற்றி பெற்றுவிட்டதாம்!

இதை வைத்து இவர் கூறுகிறார்...

அமெரிக்க வெள்ளை இனத்தவர், சிங்கப்பூரில் சீனர், இலங்கையில் சிங்களர், மலேசியாவில் மலேயாக்காரர் பெரும்பான்மையினர் நிறத்தாலோ மொழியாலோ பண்பாட்டாலோ தனியாக பொது அடையாளம் சூட்டப்பட்டு அதை விரும்பி ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.



அதாவது, தனித்தனி மொழி, இனம், வரலாறு, பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றைக் கைவிட்டுவிட்டுப் பெரும்பான்மையினரின் மொழி, இனம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கத்தை விரும்பி ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்! 

தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? உலகோடு ஒட்ட ஒழுகுமா? ஒதுங்கித் தனித்துப்போகுமா? என்று கவலைப்பட்டுக் கொள்கிறார்!



இந்து மதவெறிக் கூட்டத்திற்கு, அக்கூட்டத்தின் பலவகைப்பட்ட வெளிப்படையான, முக்காடுபோட்ட, ஒப்பனை செய்யப்பட்ட முகங்களுக்கும் உள்ளங்களுக்கும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு வசதியின்மையின் எரிச்சல் பாடாய்ப் படுத்துபகிறது!



இந்து மதவெறியை எதிர்க்கிறார்கள்!

சமற்கிருதத் திணிப்பை எதிர்க்கிறார்கள்!

இந்ந்தித் திணிப்பை எதிர்க்கிறார்கள்!



தங்கள் பண்பாட்டு அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல் போராடுகிறார்கள்!



கீதையைப் போற்றமாடேன் எனகிறார்கள்! திருக்குறளை தலைமேல் வைத்துக்கொண்டாடுகிறார்கள்!



தமிழ்நாட்டின் வளத்தைச் சுரண்டவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பகுதிகளைப் பாலையாக்கிப் பாழாக்கிச் சுடுகாடாக்கத் தியாகம் செய்ய மறுக்கிறார்கள்!  



மருத்துவமனை அமைக்கத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதற்கும் அணுஉலைகளை அடுக்கடுக்காய் அமைப்பதையும் கூட எதிர்க்கிறார்கள்!



வரலாற்றில் பலகாலமாக உரிமையோடிருந்த பல்வேறு ஆற்றுநீர் உரிமைகளை விடமாட்டேன் எனகிறார்கள்!



இன்னும் இதைப்போன்றே பெரும்பான்மையானவற்றில் வடவரின் விருப்பங்களுக்கு எதிராக இருக்கின்றார்கள்!  



எனவே, இவர்களை அடையாளம் தெரியாமல் அழித்தொழித்துவிட வேண்டும்!

மொழி, இனம், வரலாறு, பண்பாடு, நாகரிகம் என்ற கூறுகளையெல்லாம் அழித்துவிட்டு வடநாட்டாராக்கி அடியோடு தமிழர்கள் என்ற அடையாளமே இல்லாதாக்கிவிடவேண்டும் - என்று மிகமிக முனைப்பில் இருக்கிறார்கள் என்ற நிலையின் வெளிப்பாடே இந்தத் தினமணி கட்டுரையின் நச்சுக் கருத்தாகும்!



உ.பி.யில் 2014-இல் 42.6% ஒப்போலை பெற்ற கட்சி, 2017 ச.ம தேர்தலில் 39.6% ஒப்போலை பெற்றுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நிலையிலேயே தலைகால் தெரியாது ஆடுகிறார்ர்கள்!



இவர்கள் உலக நிலையைப்பற்றிக் கூறும் கருத்துக்களில் உண்மையின் விழுக்காட்டு அளவும் இரங்கத்தக்கதே!



இக்கால், விழிப்புற்றிருக்கும் தமிழ் இளையோர் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!

இந்தத் தமிழினம் பெரு நெருக்கடியில் உள்ள நிலையைப் புரிந்து அறிவாற்றலோடு செயலாற்றவேண்டும்!

---------------------------------------------------------------------



 

வெள்ளி, 3 மார்ச், 2017

'நெடுவாசல் போராட்டம்' - பாட்டரங்கப் பாட்டு!



நீரியக்கரியம் (Hydrocarbon) எடுக்கும் திட்டத்திற்காக வேளாண் நிலங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்து, நெடுவாசல் உழவர்களின் போராட்டத்திற்குத் துணைதரும் வகையில், விழுப்புரம் தமிழ் இலக்கிய அமைப்புகள் திருவள்ளுவர் சிலையருகில் 3-3-2017 வெள்ளி மாலை 5-00 மணியளவில் நடத்திய பாட்டரங்கில் தநத பாட்டு:
--------------------------------------------------------------------------

அன்பார்ந்த பெரியோரே, அறிவார்ந்த இளையோரே அன்பின் ஊற்றாய்
நின்றுதிகழ் தாய்மாரே, நெஞ்சார்ந்த நல்வணக்கம்! நெருங்கி வாரீர்!
இன்றிங்கு எடுத்துரைக்கும் இந்தியத்தை ஆள்வோர்செய் இழிவைக் கேட்பீர்!
என்றென்றும் தமிழர்க்கே எதிராக இயங்குகின்ற இயல்பைச் சொல்வோம்!

இந்திமொழி திணித்திடுவார்! இறந்தசமற் கிருத்த்தை எழுப்பு தற்கே
முந்திவந்து பலகோடி முக்காலும் செலவிடுவார், முழுதும் தோற்பார்!
நந்தமிழர் நலங்கெடுக்க நாளெல்லாம் எண்ணிடுவார்! நமைய ழிக்க
வந்திடுமிங் கணுவுலைகள் வாழ்வழிக்கும் ஆய்வுகளும்! வழக்கம் ஈதே!

ஈரவளி மீத்தேனை எடுப்பதைநாம் எதிர்த்திட்டோம் என்ப தாலே
ஊரறியா வேறுபெயர் உரைத்துவளம் உறிஞ்சிடவே ஒளிந்தே வந்தார்!
பேரதுவும் வேறெனினும் பெருங்கேடாய் நெடுவாசல் பிழைப்ப ழித்தும்
சீரழித்தும் வேளாண்மை செய்யவொணா நிலைக்காக்கிச் செல்ல வந்தார்!

பாரிலுள பிறநாட்டார் பாலைநிலம் கடலடியில் பார்க்கும் வேலை!
ஆரப்பல் லாயிரமாம் அடியாழம் வேதிகளை அனுப்பி வைப்பார்!
வேரான வளத்தையெலாம் விரைந்துறிஞ்சி நிலங்கெடுத்து விட்டே போவார்!         
நீரெல்லாம் அற்றுப்போம்! நிலஞ்சரியும்! சூழலெலாம் நிலைகெட் டுப்போம்!

இந்தத்தீச் செயலெதிர்க்கும் எம்மவரைத் தியாகஞ்செய் என்னும் சொல்லும்
எந்தவகை யும்பொருந்தா தெமக்குரைக்கும் தேசப்பற் றென்னும் சொல்லும்
இந்தியவாட் சியர்நம்மை ஏமாற்றி முதலாளிக் கேற்றம் செய்யத்
தந்திரமாய்க் கூறுகின்ற தகுதிகெட்ட சொல்லென்றே தகைமை தேர்வோம்!

எங்கள்கச் சத்தீவை யாமறியா தெடுத்தளிப்பீர் இலங்கை யர்க்கே!
எங்கள்பண் பாடுகலைக் கெதிராகச் செயற்படுவீர்1 இப்போ திங்கே
எங்கள்மண் வளங்கெடுக்க ஏதோபேர் மாற்றிகுழாய் இறக்கு கின்றீர்!
எங்கள்வாழ் வழிப்பதற்கோ இந்தியத்தில் இணைத்தீர்கள்! ஏய்க்கின் றீர்கள்!

எம்மினத்தைக் கொன்றழிக்க எதிரிக்கே துணைநின்றீர்! இன்றோ எங்கள்
செம்மைசேர் வளநிலத்தை செய்தொழிலை அழித்தொழிக்கச் சிந்தை கொண்டீர்!
அம்மவோ! வல்லாண்மை அரசினரே! அழிப்புவினை அடங்கா தென்றால்
உம்முறவை அறுத்தெறிவோம்! உரிமைதமிழ் நாடமைக்க உறுதி கொள்வோம்!

இருநிலைகள் கொண்டியங்கும் இந்தியமே இந்நிலையே இனிதொ டர்ந்தால்    
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலர் ஆட்சியினை வீழ்த்தி யிங்கே
தெருவெல்லாம் ஊரெல்லாம் தெளிவாக அறிவிப்போம், தீந்த மிழ்நா(டு)
ஒருதனிநா டாகுமென ஓங்குமுழக் கெழுப்பிடுவோம்! உழைப்போம் என்றே!

வாய்ப்புக்கு நன்றி!                        
  ----------------------------------------------------------------------------------------------------------


வியாழன், 23 பிப்ரவரி, 2017

‘அன்னை அருள் அறக்கட்டளை’யின் அருமையான ‘அருங்காட்சியகம்’ நாள்காட்டி!


  



                                    ‘அன்னை அருள் அறக்கட்டளையின் அருமையான அருங்காட்சியகம் நாள்காட்டி!
--------------------------------------------------------------

தேசிய மரபு அறக்கட்டளையின் திட்டத்தின்படி, புதுச்சேரி அன்னை மறுதோன்றி அச்சகம் அச்சிட, அன்னை அருள் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அருங்காட்சியகம் நாள்காட்டி ஏறத்தாழ 61 நூ.மா. நீளமும் 43 நூ.மா. அகலமும் கொண்டு பெரிய அளவில் அமைந்ததாகும். (நூ.மா.- நூற்றுமாத்திரி அல்லது நூற்றிலொரு மாத்திரி- centimeter – c.m.)

நாள்காட்டியின் முதல் மாதத் தாளுக்கும் முன்னால், முதல் தாளின் இருபக்கங்களிலும் நடுப்பகுதியில் செய்திகள் எழுதப்ப்பட்டுள்ளன. இருபக்கங்களிலும் ஓரங்களில் படப் பகுதிகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மரபு அறக்கட்டளையின் தலைவரும், இந்திய-பிரெஞ்சு அருங்காட்சியகத் திட்ட நிறுவுநருமான திரு.அ.அறிவன், அருங்காட்சியகம் பார்வை! வேண்டுகை! தேவை! என்ற தலைப்பிட்டு அந்த உரையை எழுதியிருக்கிறார்.

இயல்பான அருங்காட்சியகம், சாதி அருங்காட்சியகம், அணிகலன் அருங்காட்சியகம், போர்க்கருவி அருங்காட்சியகம் என்ற பிரிவுகளாக உரை எழுதப்பட்டுள்ளது.

முதல் பிரிவான அருங்காட்சியகத்தில் அருங்காட்சிகம் பற்றிய பொதுவான கருத்தும், இந்திய அருங்காட்சியகக் கழகம் ஒன்பது கூறுகளில் தரும் விளக்கமும், அனைத்துலக நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் (UNESCO) பதிவு செய்துள்ள விளக்கமும் உள்ளன. இரிச்சர்டு குரூவு, மக்களின் கல்வி, ஆய்வு, மகிழ்ச்சி போன்றவற்றிற்காக மாந்த இனத்தின் அரும் பொருட்களையும், இயற்கையின் செல்வங்களையும் தொகுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் அருங்காட்சியகங்கள் ஆகும் என்றவாறு அளித்த விளக்கமும் காணப்படுகிறது.

தொடர்ந்து, அருங்காட்சியகத்தின் நோக்கு, செயல்பாடு, பணிகள், பதினொரு வகை அருங்காட்சியகங்கள், ஐந்து வகையாக நடத்தப்படும் அருங்காட்சியகங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

அடுத்து, தொல்பொருள் ஆய்வர்கள் பற்றியும், தஞ்சையில் நீரடித் தொல்லியல் நிறுவனம் அமைந்துள்ள செய்தியும், அருங்காட்சியகங்கள் பற்றிய சுருக்க வரலாறும் உள்ளன. இந்தியாவில் நூற்றுக் கணக்கிலேயே அருங்காட்சியகங்கள் உள்ளன; ஆனால், ஒன்றிய அரசியத்தில் (UK) 2500க்கு மேலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளில் (USA) 5500க்கும் மேலும் உள்ளன என்ற செய்தி தரப்பட்டுள்ளது.

Museum -  அருங்காட்சியகம், Museology – அருங்காட்சியகவியல்,  museologist - அருங்காட்சிகவியலர், Archeo - தொன்மை, Antique - தொல்பொருள், Ancient quarianism - தொல்பொருளாய்வினை, Ancient science - தொல்லறிவியல் போன்ற பெயர்ப்புகள் அருமை! 

அடுத்து, சாதி என்ற தலைப்பில் உள்ள செய்திகளில், 1901-ஆம் ஆண்டில் இந்தியாவில் 2378 சாதிகள் இருந்த செய்தியை அறிகிறோம். சாதி அருங்காட்சியகம் என்ற தலைப்பில் தந்துள்ள தமிழக அரசின் சாதிப்பட்டியலில் ஏறத்தாழ 380 சாதிகளின் பெயர்கள் உள்ளன. (சாதி அருங்காட்சி அல்லவே! காலந்தோறும் சாதிக்கொடுமைகள் இருந்துவருகின்றனவே! இன்றும் செருக்குக் கொலைககளும் பிற கொடுங்கொடிய சாதிய ஒடுக்குமுறைகளும் இருக்கின்றனவே! எல்லா சாதிப் பெயர்களையும் ஒரே இடத்தில் குவித்துக் காட்டுவால் 'அருங்காட்சி' எனலாம்)

அடுத்து அணிகலன் அருங்காட்சியகமென ஏறத்தாழ 150 அணிகலன்களின் பெயர்கள் தொகுத் தளிக்கப்பட்டுள்ளன. தெடர்ந்து, போர்க்கருவிகளின் அருங்காட்சியகமென ஏறத்தாழ 80 போர்க்கருவிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. கட்டுரையாளரின் இந்திய-பிரெஞ்சு அருங்காட்சியம் அமைக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்துவம்.
*    -    *    -    *    -    *    -    *    -    *    -
ஒவ்வொரு மாத்த்திற்கும் ஒருபக்கம் என 12 பக்கங்களில் நாள்காட்டி அமைந்துள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் மேல்பாதியில் படமும் கீழ்பாதியில் நாள்காட்டியும் உள்ளன. முதல் மாதத்தில் உள்ள படத்தில் மண்கலங்கள் சிறிதும் பெரிதுமாகவும், உடைந்தவை உடையாதவையாகவும் நாற்பது தொன்மை மண்கலன்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் மாத்த்தில் தொல் மாழைக்கருவிகள் ஏறத்தாழ நாற்பது முழு உருவத்துடனும், உடைந்தகருவிப் படங்ககளும் உள்ளன
மூன்றாம் மாத்தப் படத்தில் சிறியதும் பெரியதுமான பண்டை மாழைக்கலன்கள் உள்ளன. நான்காம் மாதப் படத்தில், அழகழகான பண்டைக் கற்சிலைகளைத் தந்திருக்கிறார்கள். ஐந்தாம் மாதத்தில், நுடபமான வேலைத்திறன் கொண்ட மரச்சிலைகளின் படங்கள் இருபத்தாறு இருக்கின்றன.

ஆறாம் மாதப் படத்தில் இருபத்தாறு அழகிய மாழைச்சிலைகள் உள்ளன. ஏழாம்மாதப் படத்தில், பழைய மாழைப் போர்க்கருவிள் அழகுற காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. எட்டாம்மாதப் படத்தில், பழைய உயர்மதிப்பு அணிகலன்கள் 32 உள்ளன. ஒன்பதாம்மாதப் படம், புதிய போர்க்கருவிகள் சிலவற்றைக் காட்டுகின்றது. பத்தாம்மாதப் படம், முதுகுடிமக்கள பயன்பாட்டுப் பொருள்களைக் காணத்தருகின்றது. பதினொன்றாம்மாதப் படம், கண்கொள்ளாக் காட்சியாக முதுகுடிமக்களின் உருவங்களைக் காட்டுகின்றது. பன்னிரண்டாமாதப் படம், எழுத்தறிவு மூலங்களாக எழுத்தாணிகள், ஏடுகள், செப்பேடுகள், கல்வெட்டுகளைக் காட்டுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் படத்தில் காண்பவற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந் நாள்காட்டி, பண்டைத் தமிழரின் கலை பண்பாட்டு நாகரிகச் சிறப்புகளை காட்சிகளாக்கி தமிழர்களுக்கு உணர்வூட்டுகின்றது. தமிழர் தம் பண்டைச் சிறப்புகளைப் போற்றவும் வருங்காலத்தில் தம் அடையாளங்களை அழியாமல் காக்கவும் வலியுறுத்துகின்றது. இந்த வகையில் இது நாள்காட்டியாக மட்டும் இல்லாமல் தமிழர்க்கு உணர்வூட்டும் கருவியாகவும் விளங்குவது கண்கூடு. உருவாக்கித்தந்த அனைவருக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவிப்போம்!
 -------------------------------------------------------------------------
                                                              

புதன், 22 பிப்ரவரி, 2017

உலகத் தாய்மொழி நாளும் தமிழரும்!




உலகத் தாய்மொழி நாளும் தமிழரும்!
------------------------------------------

இன்று (21-02-2017) உலகத் தாய்மொழிநாள்!
உலகெங்கிலும் உள்ள மக்கள் தம் தாய்மொழியைக் கொண்டாடி மகிழ்கின்றனர்!

இந்தத் தாய்மொழிநாளில்....
தமிழகத்தில் உள்ள தமிழர்களின் நிலை...
இரங்கத்தக்கது மட்டுமன்று!
இத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தையே இழந்து-
தம் மொழி நாகரிக பண்பாட்டுச சிறப்புகளை இழக்கிறார்கள்!

தமிழர்களின் சில குடும்பங்களில் தமிழே தெரியாத தலைமுறை தலையெடுத்திருக்கிறது!
இக் குடும்பங்களின் எண்ணிக்கை வரவரக் கூடிக்கொண்டே போகிறது!

ஒருமொழிவைத்து உலகாண்ட இனம், உருத்தெரியாமல் கரைந்துகொண்டிருக்கிறது!
உலகத்தில் முதல் தாய்மொழியைக் கண்ட இனம், சோற்றுக்கும் துய்ப்புக்கும் தாய்மொழியை விற்றுத் தொலைக்க முனைகிறது!

உலக நாகரிகத்தின் தொட்டிலான தமிழ்மண் உருவழிக்கப்பட்டு ஒழிக்கப்படுகின்றது!
போலித் துய்ப்புகளுக்கும் பொய் நாகரிகத்திற்கும் இத் தமிழ்நிலம் இரையாகின்றது!

இந்த உலகத் தாய்மொழிநாளில் தமிழ் தமிழர் நலன் குறித்துக் கவலைப்படுவோர் எண்ணிப்பார்க்க வேண்டும்!
இளைஞர்கள் செயற்படவேண்டும்!
இந்த இழிநிலைகளை மாற்ற வேண்டும்!

நாம் உலகத் தாய்மொழிநாளில் பெருமைப்படவும் கொண்டாடவும் வேறொன்றுமில்லை! 
--------------------------------------------------------------

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

போதும் ஐயா, போதும்!



போதும் ஐயா, போதும்!
--------------------------------------------------------------------------------------------------------------

சலிக்கும் அளவு பேசியாயிற்று!
ஓயும் அளவு உரையாடியாயிற்று!
வெறுப்பில் தூக்கிப்போடும் அளவு எழுதியாயிற்று!

வழக்கம்போல் ஓர் அடிமை அரசு அமைந்து விட்டது!

வழக்கம் போல் ஊழல் தொடரப்போகின்றது!

போதும், போதும்! ஆரவாரங்கள் போதும்!

இனியாவது தமிழ் தமிழர் நலன் குறித்து எண்ணுவோமா?

நெடுஞ்சாலைக் கற்களில் தமிழை நீக்கி இந்தித்திணிப்பு!
21ஆம் நாளிலிருந்து காவிரிபற்றி தொடர்ந்து நயன்மன்ற ஆய்வு!
பவானி ஆற்றில் கட்டப்படும் புதிய அணை!
கூடங்குளத்தில் இன்னும் இரண்டு உலைகளென்னும் கொடுமை!
புதிய கல்விக்கொளகை வழி கல்வி உரிமை மேலும் பறிப்பு!
சமற்கிருதக் கெடுதல்!
இன்னும், தாய்மொழியாம் தமிழ்வழி கற்க விடாத கொடுமை!
தமிழில் மறுக்கப்படும் வழிபாட்டுரிமை!
நயன்மன்றத்தில் தமிழில் பேசமுடியாத இழிநிலை!
நாடாளுமன்றத்தில் தமிழர் தம் தாய்மொழியில் பேசுவதற்கும் குறைகளைத் தெரிவிக்கவும் இயலாத கேடு!
தமிழர் பண்பாட்டு நிலைகளை அழிக்க எண்ணும் போக்கு!
மழைக் குறைவால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலை!
உழவரின் தற்கொலைகள் தொடரும் பேரவலம்!

இவற்றைப் பற்றி எண்ணுவோமா?
இவற்றிற்குத் தீர்வ காணப் பேசுவோமா?
இந்தக் கேடுகளிலிந்து தப்ப இயன்றவரையில் செயல்படுவோமா?
--------------------------------------------------------------

சனி, 11 பிப்ரவரி, 2017

‘தாழி ஆய்வு நடுவ’த்தின் தனிச்சிறப்பார்ந்த நாட்குறிப்புச் சுவடி



தாழி ஆய்வு நடுவத்தின் தனிச்சிறப்பார்ந்த நாட்குறிப்புச் சுவடி

 


           
சென்ற ஆங்கில ஆண்டிற்கான (2016) நாட்குறிப்பேட்டைத் தனிச் சிறப்போடும் அழகோடும் அரிய செய்திகளோடும் செப்பமாகத் தாழி ஆய்வு நடுவம்வெளியிட்டிருந்தது குறித்த பதிவை அன்பர்கள் படித்திருக்கலாம்.

தாழி ஆய்வு நடுவத்தின் 2017-ஆம் ஆண்டு நாட்குறிப்பேடு, புதுச்சேரி அன்னை அருள் கட்டளை வெளியீடாகப் புதுவை அன்னை அருள் மறுதோன்றி அச்சகத்தில் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

அளவில் பெரியதாக, அட்டையுடன் 28 நூ.மா. நீளம், 221/2 நூ.மா. அகலம் (நூ.மா.- நூற்றுமாத்திரி அல்லது நூற்றிலொரு மாத்திரி- centimeter – c.m.) உள்ளது.

இதில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகள் வரை நாட்குறிப்பு எழுதலாம். அத்துடன், ஒவ்வொரு பக்கத்திலும் மேல் பகுதியில் 51/2 நூ.மா. அளவிற்கு அறிவியல் செய்திகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன; கீழே 31/2 நூ.மா. அளவில் உள்ள இடத்தில், மேல்பகுதியில் இடம்பெற்ற அறிவியல் தொடர்பான தமிழ்க் கலைச்சொற்களின் ஆங்கிலவடிவமும், அன்றைய நாள் உலகளவில் சிறப்பாக என்ன நாள் என்றும், எந்தெந்த அறிஞர்தம் நினைவுநாள் என்னும் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.

இந் நாட்குறிப்பின் முன் அட்டையின் நடுப்பகுதியில், நாம் வாழும் உலகின் கோளத்தோற்றப் படம் உள்ளது; மேலே. புடவியின் உலகு... என்று நாட்குறிப்பின் பெயரும், கீழே நாள்-குறிப்பு 2017 என்ற குறிப்பும் உள்ளது.

இது, நாட்குறிப்பு எழுதும் சுவடியாக மட்டும் இல்லாமல்,  பூதியல் நிலவரைவியல் (Physical basis of Geography) செய்திகளை அழகுற எளிமையாகத் தூயதமிழில் தரும் அறிவியல் அருஞ்செய்திக் களஞ்சியமாகவும்  உள்ளதெனில் மிகையில்லை.
நாட்குறிப்புச் சுவடியின் முன்அட்டை ஒட்டுத்தாள் உட்புறப் பக்கத்தில், இந்த இந்திய ஒன்றியத்தில் தக்கவாறு நினைவுகூறப் படாத ஒப்பற்ற ஈகி வ.உ.சி. அவர்கள், சிறையிலிருந்து தம் தந்தையார் உலகநாதனார்க்கு எழுதிய அகவற்பா மடலும் இரு வெண்பாக்களும், அவர் இழுத்த செக்கின் படமும் இடம்பெற்றுள்ளன; பினனட்டை ஒட்டுத்தாள் உட்புறத்தில் வ.உ.சி.யார் பொன்.பாண்டித்துரையார்க்கு எழுதியதோர் அகவற்பா நன்றிமடல் பாண்டித்துரையார் படத்துடனும் தமிழ்ச்சங்கக் கட்டடப் பின்னணியோடும் காணப்படுகிறது.            

பின்னட்டைப பகுதியில், நால்வகை நிலங்கள் குறித்த தொல்காப்பிய நூற்பாவும், மழையின் சிறப்புரைக்கும் பதின்மூன்றாம் திருக்குறள் உரையோடும், ஒரு விதை முளைத்தெழுந்து செடியாகும் காட்சியின் மூன்று படங்களும், வாடிய பயிரை... எனத்தொடங்கும் வள்ளலார் பாடலும் உள்ளன.

இந்த முயற்சி மிகவும் பாராட்டிற்குரியதாகும். நூலில் எழுதப் படுவதைப் போல இந்நாட்குறிப்பிலும் பாயிரம் உள்ளது. ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே (நன்னூல்-54) அல்லவா!. பாயிரம் பகுதியில், நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள அறிவியல் செய்திகள் பற்றிய குறிப்பும், தமிழரின் மீட்புக்கருவியாக உள்ளது தமிழ்மொழியே என்னும் குறிப்பும் காண்கிறோம்.

இதனைத் தொடர்ந்து நாட்குறிப்பு உரிமையாளர் தற்குறிப்பு விளத்தங்களை எழுதிவைக்கும் பல பகுதிகள் உள்ளன. தொடர்ந்து, புடவி (Universe) எனுந் தலைப்பில், கதிரவ மண்டில விளக்கமும் அதன் தொடர்பான அடிப்படை உண்மைகளும் கோள்களைப்பற்றிய செய்திகளும் பிறவும் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு தலைப்பு குறித்து  வழவழப்புத்தாள் படத்துடன் அரிய பல செய்திகள் திரட்டித் தரப்பட்டுள்ளன.

சனவரி மாதத் தொடக்கத்தில் உலகம் என்னுந தலைப்பில் உலகத் தோற்றம், வடிவம், அளவு, சுழற்சி பற்றிய செய்திகள் விரிவாகத் தூய எளிய தமிழில் உள்ளன. மாத இறுதிப் பக்கத்தில் உலகக்கோளின் வெட்டுப்படத்தின் வழி அமைப்புகள் விளக்கப்பட்டுள்ளன. வேறு மூன்று படங்களில் அகலாங்கு (Lattitude), நெட்டாங்கு (longitude), நண்ணிலக்கோடு (Equator) முதலிய புனைவுக் கோடுகள் பலவும் வரைந்து காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறே,  ஒவ்வொரு மாதத்திற்கும் பெருங்கடல், கண்டம்,  தீவு, மலை, எரிமலை, நிலநடுக்கம், ஆறு, அருவி, ஏரி, பாலை, மழை என்ற தலைப்புகளில் படங்களும் தலைப்பைச் சார்ந்த பல்வேறு அரிய செய்திகளும் திரட்டித் தரப்பட்டுள்ளன. அவற்றை விரித்துரைக்கின் பெருகும்.

முன்னரே கூறியவாறு, ஆண்டு முழுவதற்குமான 365 பக்கங்களிலும் அருமையாகத் தூயதமிழ்க் கலைச்சொற்களைப்  பயன்படுத்தி எளிதில் புரியுமாறு அறிவியல் செய்திகள் தரப்பட்டுள்ளன.

இந்த முயற்சி மிகவும் பாராட்டிற்குரியதாகும். நாட்குறிப்பின் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளதற் கொப்ப, தமிழ்மொழியே. தமிழர்க்கு மீட்புக் கருவியாகும். அதை விளக்கும் எடுத்துக்காட்டைப் போன்று இந் நாட்குறிப்புச்சுவடி அமைந்துள்ளதெனில் மிகையன்று.

நாம் பொங்கல் திருநாளை 2017 சனவரி 14இல் சுறவத் திங்கள் முதல் நாளில் கொண்டாடினோம். நாட்குறிப்பில் 2017 சனவரி 15 அன்று தைப்பொங்கல் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது ஒன்றே வேறுபாடாகத் தெரிந்தது.

மிகச் சிறப்பாக அச்சிட்டு கட்டம் செய்து அரிய செய்திகளோடு உள்ள இந்நாட்குறிப்புச் சுவடியை வெளியிட்டோர்:
அன்னை அருள் அறக்கட்டளை, 169, ஈசுவரன் கோயில் நெரு, புதுச்சேரி 605001. தொலைப்பேசி எண்: 0413 2336205.  

இந்த உயர்ந்த ஒப்பற்ற நாட்குறிப்பைத் தந்த அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்!  
------------------------------------------------------------------------

திங்கள், 23 ஜனவரி, 2017

பாவலரேறு ஐயாவுக்கு ஒரு தொலைவரி!



பாவலரேறு ஐயாவுக்கு ஒரு தொலைவரி!
---------------------------------------
 

ஐயா!

உங்கள் உழைப்பு!

உங்கள் ஈகம்!

உங்கள் வாழ்க்கை!

உங்கள் எழுத்து!

உங்கள் மேடைமுழக்கம்!

உங்கள் பாட்டுப் பெருமுழக்கம்!...



எதுவும் வீணாகவில்லை ஐயா!

பயனளிக்கத் தொடங்கிவிட்டது!



வடவாரிய வல்லாண்மை விலங்குத்தனமான அதிகார வலிவிலிருந்தும்...

அஞ்சிப் பார்க்கவேண்டிய நிலையை இன்று நந்தமிழ் இளைஞர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர் ஐயா!



ஏறுதழுவல் மீட்பிற்கான

போராட்டக் களமெங்கும்

தனித்தமிழ்நாடுமுழக்கம் கேட்டு

வல்லதிகாரத் தில்லி

வாயடைத்து நிற்கின்றது ஐயா!



இன்றில்லாவிட்டாலும் நாளை

நீங்கள் நினைத்தது நடக்கும்!

தமிழ்நாட்டைத் தமிழிளைஞர் மீட்பர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது ஐயா!

உங்கள் புன்னகை பூத்த முகம் தெரிகிறது ஐயா!



அறவே நம்பிக்கையிழந்திருந்த

தன்னலமற்ற தமிழ்க் குமுகாயத்தின் நலம் நாடும் உண்மை உள்ளங்களுக்கு

நம்பிக்கை ஒளிக்கீற்றளித்த இருபால் இளைஞர்களே!

நன்றி!


உங்கள் உரம் பெருகட்டும்!

உறுதி நிலைக்கட்டும்!

தாயகத்தைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!

-----------------------------------------------------------

சனி, 14 ஜனவரி, 2017

கூவுகவே பொங்கலோ பொங்கல்!



கூவுகவே பொங்கலோ பொங்கல்!
----------------------------------------------------------


பொங்கு தமிழ்மகனே பொங்கலோ பொங்கலென
இங்குன் மொழியழிய எங்கெங்கும் தாழ்ந்திழிய!

கல்வியிலை தாய்மொழியில் காணும் இடமெங்கும்
பொல்லா மொழியில் புகட்டுகின்ற பள்ளிகளே!

ஆட்சி மொழியெல்லாம் ஆங்கிலமும் இந்தியுந்தாம்!
காட்சியூட கங்கள் கலப்பு மொழியினில்தான்!

குற்றங் கடிந்தே குறைதீர்க்கும் என்றுசெலும்
இற்றை நயன்மன்றம் எங்கும் தமிழில்லை!

நாளிதழ் தொட்டே நடந்திடும் பல்வேறு
தாளிகைகள் தம்மில் தமிழ்க்கொலைகள் பேராளம்!

கோயில் வழிபாட்டில் கூறுகின்ற போற்றலிலே
தாயின் மொழியாம் தமிழில்லை; இல்லையடா!

உன்றன் உரிமையெலாம் ஒவ்வொன்றாய்ப் போனதுவே!
பன்னூறு காலம் பயன்கண்ட ஆற்றுரிமை

இன்றுபறி போகிறதே! யார்முறையைக் கூறுகிறார்?
என்றுச்ச மன்றத்தை யாரே மதித்தாரே!

எல்லா வகையாலும் ஏதம் மிகநிறைந்த
பொல்லா அணுவுலைகள் போற்றத் தமிழ்நாடாம்!

செந்தமிழ் மண்சார்ந்த சீரார்ந்த பண்பாட்டை
நந்தம் கலைகளைநாம் போற்றத் தடையிங்கே!

எந்த வகையாலும் எப்போதும் நம்மவர்க்கே
வந்திடும் தொல்லைபல! வாழ்க்கை நிலையிதிலே

மான விறகெரித்து மண்டடிமை கேடரிசி
கூனலுறப் பானையிலே கொட்டியதைப் பொங்கியே

தன்மானம் வீறு தகைமை தமைமறந்தே
புன்மையுறக் கூவுகவே பொங்கலோ பொங்கலென
இன்னுமிகத் தாழ இழிந்து.
--------------------------------------------------