வெள்ளி, 1 ஜூலை, 2016

பெயர் முன் அடை

பெயர் முன் அடை

      திரு என்பது சிறீ என்று திரியவே, திருமான் என்பதை சிறீமான், சீமான் என்றும் திருமாட்டி என்பதை சிறீமாட்டி, சீமாட்டி என்றும் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர்.

திருமான் என்பது திருமகன் என்பதன் மரூஉ.
ஒப்புநோக்கு: பெருமகன் பெருமான்.

பெருமானுக்குப் பெண்பால் பெருமாட்டியாதல் போல, திருமானுக்குப் பெண்பால் திருமாட்டியகும்.

     சிறீ என்பது திரு என்பதன் திரிபே யாதலால், சிறீ அல்லது சீ என்னும் அடைமொழி பின்வருமாறு தமிழில் எழுதப்படும்.

வடமொழி வடிவம்              தென்மொழி வடிவம்
    
     சிறீ                             திரு
     மகா ராஜ ராஜ சிறீ             மா அரச அரசத்திரு
                                     பேர் அரச அரசத்திரு
     சிறீலசிறீ                       திருவத்திரு
                                     திருப்பெருந்திரு
     சீகாழி                          திருக்காழி
     சீகாளத்தி                       திருக்காளத்தி               

     திருநாவுக்கரசு திருமங்கையாழ்வார் முதலிய பெயர்களில் வரும் திரு என்னும் அடை ஆங்கிலத்தில் அடியார் பெயர்முன் சேர்க்கப்படும், St. (Saint)  என்பதற்குச் சமமாய்த் தூய்மை குறிப்பதா யிருப்பதால், அடியாரல்லாத பிற மக்களைக் குறிக்கும்போது திருவாளர், திருவாட்டியார் என்ற அடைஎளையே முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் வழங்குவது தக்கதாகும்.
திருவாளன்மார், திருவாட்டிமார் என்பன பலர்பால் அடைகள்.

     சீகாழியைச் சீர்காழி என்று வழங்குவது சரியாய்த் சோன்றவில்லை. சிறுதனம் சிறீதனம் என்று தவறாய் வழங்குகிறது.

(பாவாணருக்கு நன்றி! மொழிநூற் கட்டுரைகள் பக்கம் 55. தமிழ்மண், சென்னை.)

வியாழன், 30 ஜூன், 2016

சங்க இலக்கியக் கல்வி பற்றித் தொல்காப்பித் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயாவின் வலியுறுத்தம்!








சங்க இலக்கியக் கல்வி பற்றித் தொல்காப்பித் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயாவின் வலியுறுத்தம்!
----------------------------------------------------------------------------------

எவ்வகைத் தமிழ்நூல்கள் எவ்வளவு படித்திருந்தாலும் தொல்காப்பியம்முதலான சங்க இலக்கியக் கல்வி இல்லாதாரைத் திறமான தமிழ்ப்புலமை பெற்றவராகச் சொல்ல முடியாது.
ஆற்றுநீர் கடலிற்போய்க் கலக்கின்றது என்றாலும் ஆற்றிற் குளித்தோரைக் கடலிற் குளித்துத் திளைத்தவராகச் சொல்வதுண்டோ?
சொல்லாலும் பொருளாலும் பண்பாலும் செறிவாலும் நடையாலும் ஓங்கிய சங்கவிலக்கியம் கற்றாரின் புலமையே வேரோடிய தமிழ்ப் புலமையாகும்....

புரியாத நடையுடையது சங்கவிலக்கியம் என்ற ஒருசாராரின் அவலக் கருத்து, நீர்சுடும் என்பது போன்ற மயக்க மருளாகும்.

இலக்கண வழக்கு முரண்பட்ட அயல்மொழிகளைப் புரியும் என்று பொருள் கொட்டிப் படிக்கும் தமிழர்கள், தம் தாயிலக்கியம் புரியாது என்று புலம்புவது பேதைமையுள் எல்லாம் கலப்பற்ற பேதைமையாகும்.
சங்கத்தமிழை நீர்தெளிந்த கோதாவரிக்குக் கம்பர் ஒப்பிடுவதைச் சிறிதேனும் எண்ணுங்கள், புரியும்.

(‘நாவலர் நாட்டார் தமிழுரைகள்’-18, ‘நாட்டாரின் சங்கப்புலமை’ – தொல்காப்பியத் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம், பக்கம் xxii,xxiv, தமிழ் மண், சென்னை)
---------
 
சங்கக்காலம் யார்க்கும் சிந்தனையை வளர்த்த காலம். சங்கக் கல்வி கற்பவர்க்கெல்லாம் சிந்தனையை ஊட்டிய கல்வி. ௩௭௮ (378) அகப்புலவோருள் ஒரே பாடல் பாடியமைந்த புலவோர் தொகை ௨௪௯ (249) எனின்,படித்தோர் பெருக்கமும், பாடவல்லுநர் பெருக்கமும், சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தமை பெறப்படும்.
 - மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், ‘தமிழ்க்காதல்
-----------

பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம்போகும் கீழ்மையும் போம்
- மா.குறள்-461. ஆசிரியர்: வ.சுப.மாணிக்கனார்
--------------

வெள்ளி, 17 ஜூன், 2016

சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா?



சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா?
நாவலர் ந.மு.வேங்கடசாமியார் விளக்குகிறார்:


இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் வகுப்பினர் முதலானோர்பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயருகளாவது சங்கநாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் இடைக் காலத்துத் தோன்றியவையே.

ஐயர் எனபது முனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது.கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறுகுலத்துப் பெரியார்களையும் சிறப்புப்பற்றி ஐயர் என ஆன்றோர் வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும்,

சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

என்ற விதிப்படி, அமரமுனிவன் அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற்போல இயற்பெயர்க்கு முன் வருதலே மரபு. பிற்காலத்திற்றான் பெயர்கள் இம்முறைமாறி வரலாயின. சிறப்புப்பெயரும் முன்பு யாவர்க்கும் வழங்குவன அல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்பவில்லையென்பது போதரும்

(நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்- 18, தமிழ்மண், சென்னை, பக்கம் 43, 44.)

--------------------------------------------------------------

சனி, 11 ஜூன், 2016

பாவலரேறு ஐயாவுக்கு ஒரு மடல்!



பாவலரேறு ஐயாவுக்கு ஒரு மடல்!

ஐயா,
     வணக்கம்.

இருபத்தோராம் ஆண்டு முடியவிருக்கின்றது….  
16-6-1995-இல் சென்னையைக் குலுக்கிய அந்த இறுதி ஊர்வலம் நடைபெற்று!
    
            இறுதி ஊர்வலத்திலும் உணர்வு கொப்புளிக்க வீறுமுழக்கிய விடுதலைப் பெரும் பேரணி நடத்திய ஆற்றலரே!
    
            உங்களுக்குத் தெரிவிக்கப் பல செய்திகள் உள்ளன. ஆனால், அன்புமிக்க ஐயா, எதுவும் மகிழ்ச்சியான செய்தி இல்லையே!
    
            பொங்குணர்வுச் சூறாவளியே! போழ்வாய் அரிமாவே! பொரு களிறே! மூண்ட இடியாய் இத்தமிழ் மண்ணின் விடுதலை முழக்கமிட்ட பெருமுரசே!
    
            ஒரு தமிழ்ப் பாவலனுக்கு இத்துணைச் சிறப்பா? இத்தகைய படையணியா? என இறுதி ஊர்வலங் கண்டோரை வியக்கவைத்த மா மறவரே!
    
            தமழின், தமிழரின, தமிழ்நிலத்தின் விடுதலைக்குப் பல்லாயிரம் பாடல்களில் முழங்கிய பாவலரேறே!
    
     பிரிவினைத் தடைச் சட்டம், இந்திய பாதுகாப்புச் சட்டம், அச்சுறுத்தர் ஒழிப்புச் சட்டம் போலும் பற்பலப் புதுப்புதுச் சட்டங்களால் நிலைப்படுத்திக் கொண்ட இந்திய வல்லாட்சியரின் வன்தலை திரும்பி நோக்கும் வகையில், தமிழகத்தை விடுவிக்க மூன்று முறை தமிழக விடுதலை மாநாடுகளை  நடத்திய திண்ணிய வல்லுர அஞ்சா நெஞ்சம் பெற்றிருந்த ஒருதனிப் பெருமறத் தனித்தமிழ்ப் புலவ!
    
     தமிழ்த் தேசியம் பேச இக்கால் பலர் எழுந்துள்ளனர். நன்றே! அவர்களுள் சிலர், தந்தை பெரியாரைப் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிய நிலையும், அதற்குத் துணையாகப் பாவாணரையும் உங்களையுமே வலிந்து சேர்க்க முனையும் விந்தையும் நடக்கிறது.
    
     மொழிநிலையிலும் தமிழ் தொடர்பாகவும் தந்தை பெரியாரை நீங்கள் எதிர்த்தெழுதிய போதும், அவரின் ஈடிணையற்ற தொண்டினைக் கட்டுரைகளிலும் பாடல்களிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா வகையில் ஏற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ள வரலாற்றை அவர்கள் அறிந்திருக்கவில்லை!
     
     இத்தகைய அவர்கள் போக்கால், தமிழ்த் தேசிய விடுதலை உணர்வாளர்களைப் பிரித்தாளும் நரித்தனத்திற்குத் தாம் துணைபோவதை அறியாராக, உணராராக உள்ளனர்.

     ஐயா, பல்வேறு செய்திகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியவை உள்ளன. அவ்வப்போது இனி எழுதுகிறேன்.    

     உங்கள் பிரிவிற்குப் பின்னால் விடுதலை முயற்சிகளில் பல காரணங்களால் தொய்வு நேர்ந்திருக்கின்றது. ஆனாலும் நீங்கள் ஊட்டிய உணர்வு காப்பாற்றப்பட்டு வருகின்றது! உங்கள் பாடல் முழக்கம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.!

புரிவினைகள் அத்தனைக்கும் புரைவடவர் தம்மிசைவைப்
போய்போய்க் கேட்டுப்

பரிவினுக்குக் காமத்திருக்கும் படியென்ன வந்ததிங்கே?
பணங்கா சுக்கே

நரிவினையைச் செய்திடுவார்; நயந்துவரார்; நறுந்தமிழர்க்(கு)
உரிமை வேண்டிப்

பிரிவினைக்கு வழிவகுப்போம்! பிறவினைகள் பிறகென்போம்!
பிளிறு வோமே!

பிற பின்.

அன்புத் தம்பி,
தமிழநம்பி.

(தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழாக வந்த தென்மொழி இதழின் ஆசிரியர்,
தமிழக விடுதலையை உயிர்க் கொள்கையாகக் கொண்டுப் பெரும் பாடாற்றிய ஈடிணையற்ற பாவலர்,
தனித்தமிழ் அறிஞர்,
தமிழ்ப் பகைவர் அஞ்சிநடுங்கிய தமிழரிமா
துரைமாணிக்கம் என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவு நாள் இன்று!)

திங்கள், 23 மே, 2016

வாழ்நாட் பல்லாண்டு விழாக்கள்!



வாழ்நாட் பல்லாண்டு விழாக்கள்!

பிறந்த நாள் ஆண்டுவிழா  : நாண்மங்கலம் (அல்லது)
                                வெள்ளணி விழா.

கால் நூற்றாண்டு விழா    : வெள்ளி விழா.

அரை நூற்றாண்டு விழா   : பொன் விழா.

அறுபான்(60) ஆண்டு விழா : வயிர விழா.

முக்கால் நூற்றாண்டு விழா : ஒள்ளி விழா (அல்லது)
                               முத்து விழா.

எண்பான்(80) ஆண்டு விழா  : கதிரிய விழா.

நூறு ஆண்டு விழா          : நூற்றாண்டு விழா.

நூற்றாண்டிற்கு மேற்பட்ட
    கால விழா              : அருட்கதிர் விழா.

    (பாவாணர்க்கு நன்றி)

செவ்வாய், 3 மே, 2016

சொல் மயக்கம்



சொல் மயக்கம்

பின்வரும் சொற்களை மயக்கமின்றிப் பொருளறிந்து பயன்படுத்தல் வேண்டும்.

1.     அரிவாள், அறுவாள்

பொருள்களைச சிறிதாய் அறியும் வாள் அரிவாள்.         (அரிவாள் மணை)
பொருள்களை அறுக்கும் வாள் அறுவாள். (வெட்டறுவாள்)

2.     அரை, அற

அரைப்படித்தவன் குறைவாகக் கற்றவன்.
அறப்படித்தவன் முற்றக்கற்றவன்

3.     அல்ல, இல்லை

ஒன்று இன்னொன் றல்லாமையை அல்ல என்னுஞ் சொல் குறிக்கும்.
எ-டு: (ஒருமை) அது மாடன்று 
      (பன்மை) அவை கழுதைகள் அல்ல.
ஒன்று அல்லது ஒருவர் ஓரிடத்தி லின்மையை இல்லை என்னுஞ் சொல் குறிக்கும்.
எ-டு:  செழியன் இங்கே இல்லை.

4.     ஊர்வலம், ஊர்கோலம், ஊர்தல்

ஊர்வலம் ஊரை வலமாகச் சுற்றுதல்.
ஊர்கோலம் ஊரை வலமாகச் சுற்றாமல் ஊர்ந்து செல்லல்.
ஊர்தல் ஊர்தி(வண்டி)யிற் செல்லல், பையச்செல்லல்.

5.     பண்டிகை, திருவிழா

பண்டிகை வீட்டிற் கொண்டாடப்படுவது.
திருவிழா வெளியிற் கொண்டாடப்படுவது.

6.     தேர்ந்தெடு, தெரிந்தெடு

தேர்ந்தெடு (ஆங்.) examine and select.
தெரிந்தெடு (ஆங்.) select, elect.

7.     வருமானம், வரும்படி

வருமானம் - (ஆங்.) proper income
வரும்படி - (ஆங்.) additional income

8.     பருமை, பெருமை

பருமை - (ஆங்.) bulk.
பெருமை - (ஆங்.) greatness, dignity, pride, excess, increase.

9.      புறக்கடை, புழைக்கடை

புறக்கடை - (ஆங்.) backyard.
புழைக்கடை - (ஆங்.) narrow passage.

10.  விவரி, விரி

விவரி - (ஆங்.) give the details of.
விரி - (ஆங்.) expand.

11.  வழக்கம், பழக்கம்

வழக்கம் - (ஆங்.) habit, custom.
பழக்கம் - (ஆங்.)  practice,  acquaintance.

12.  நிறுத்து, நிறுவு

நிறுத்து - (ஆங்.) stop, post, make anything stand.
நிறுவு - (ஆங்.) establish.

13.  கருப்பு, கறுப்பு

கருப்பு - (ஆங்.) blackness.
கறுப்பு - (ஆங்.) rage,  darkening of the face through anger.

14. கட்டிடம், கட்டடம்

கட்டிடம் (ஆங்.) site.
கட்டடம் (ஆங்கிலம்) building, construction, binding.

  (பாவாணருக்கு நன்றி)
----------------------------------------------


வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பாவேந்தே, நின் நினைவில்...!



பாவேந்தே, நின் நினைவில்...!


ஏக்கழுத்தும், பீடுநடையும்
அரிமா நோக்கும், அஞ்சா நெஞ்சமும்
நினக்கே உரியவை!

இருளற்றம் பார்க்கும் விளக்கே போல்
தமிழ்ப் பகையை இல்லாமல் ஓட்டியது
நின் பார்வை யன்றோ?

உவரி ஒலியிட்ட எலிப்பகை கெட்டவகை
தமிழ்ப் பகை கெட்டழிந்தது
நின் மூச்சால், உயிர்ப்பால் அன்றோ?

ஈராயிர மாண்டு வீழ்ச்சியிற் கிடந்தவரை
விடுதலைப்பா முரசறைந்து
எழுச்சிக்குத் தொடக்கமிட்ட
இரண்டாவது வள்ளுவனே!

நல்லுயிர் உடம்பு செந்தமிழ்
மூன்றும் நீ, நீ, நீயேயன்றோ?

இன்றிந் நாட்டில் இழிஞர் ஆட்சியால்
மண்ணையும் மாசில்லா மொழியையும்
மற்றெல்லாத் தமிழ நலன்களையும்
தோற்று நிற்கிறோம்!

தமிழால் உயர்ந்தோர் தமிழை வீழ்த்தினர்!
அமிழ்ந்த உணர்வால் அயலர் அரியணையில்!
அவலம்! அனைத்திலும் தமிழர்க்கு அவலம்!

இற்றைக்கும் பாவலர்கள் இங்குண்டு! என்சொல்ல!
தூய்தமிழ் போற்றுவர் தெளிதமிழ் இதழில்!
பரிசுக்குப் பல்லிளித்துப் பார்ப்பன இதழ்களில்
அயற்சொல் கலந்தெழுதி அருந்தமிழ் கொல்லுவர்!

ஐயா, புரட்சிப் பாவேந்தே!
வாராது வந்த தமிழ் எழுச்சி நெருப்பே!
எந்த நற்செய்தியும் இலையுனக்குச் சொல்ல!

இழிவில் உறையும் இந்நிலை மாற்றிட
என்றெழு வோமோ? இலையழி வோமோ!
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கி
ஓய்ந்துநின் நினைவில் தோய்ந் தெழுதினனே!

--------------------------------------------

திங்கள், 25 ஏப்ரல், 2016

பிழை தவிர்க்கச் சில செய்திகள்!



பிழை தவிர்க்கச் சில செய்திகள்:

 1.      சொல்லின் இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது இடையின ரகரமே; வல்லின றகரம் அன்று.
எடுத்துக்காட்டு: அவர், ஊர், குதிர், பதர்

           
            2.  சொல்லின் இடையில் இரண்டு புள்ளி(மெய்) எழுத்து           சேர்ந்து வருமிடங்களில், முதல் புள்ளியெழுத்தாக                              இருக்கக்கூடியது இடையின ரகர மெய்யாகவே இருக்கும்.        வல்லின றகர மெய்யாக இருக்காது.
            எ-டு: நேர்த்தி, பார்த்து, அயர்ச்சி

ற் மெய்யெழுத்தை அடுத்து இன்னொரு புள்ளி எழுத்து வராது.

     பிழை     ---  திருத்தம்
     முயற்ச்சி       முயற்சி
     நேற்த்தி        நேர்த்தி
     பயிற்ச்சி        பயிற்சி


3.      இரட்டிக்கும் இடங்களில் வல்லின றகரமே வரும். இடையின ரகரம் இரட்டிக்காது.
எ-டு: வெற்றி, கற்றோர், அற்ற, ஆற்றை


4.      ல், ன் என்ற புள்ளி எழுத்துக்கள் சேர்ந்து(புணர்ந்து) வருங்கால், திரிபில் வருவது வல்லின றகரமே.
எ-டு: கல்+பலகை    = கற்பலகை
      கல்+தாழை    = கற்றாழை
      வருதல்+கு    = வருதற்கு

     தன்+பெருமை   = தற்பகருமை
     பொன்+தோடு   = பொற்றோடு
     அதன்+கு       = அதற்கு


சில இன எழுத்துக்களின் பெயர்கள்

     ண - டண்ணகரம், முச்சுழிணகரம்.
     ந - தந்நகரம், மொழிமுதல் நகரம்.
     ன - றன்னகரம், இருசுழி னகரம்.

     ர - இடையின ரகரம், சின்ன ரகரம்
     ற - வல்லின றகரம், பெரிய றகரம்.

            ழ - சிறப்பு ழகரம், பெரிய ழகரம்,மகர ழகரம்.
            ள - பொது ளகரம், சின்ன ளகரம்.

(பாவாணருக்கு நன்றி!)
-------------------------------------

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!



யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!

நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செ்ழுந்தமிழ் காத்தனை!

உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!

கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்

புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!

அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!

தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!
---------------------------------------------
(விழுப்புரம் பாவேந்தர் பேரவையின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)