திங்கள், 30 ஜூன், 2025

அகத்தியர் புரட்டு: தமிழ் தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி- 4

 

அகத்தியர் புரட்டு: 

தமிழ் தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி- 4

===================================

    முனைவர் ப.தங்கராசு அவர்களின் முனைவர்பட்ட ஆய்வேடு  தமிழ் இலக்கியங்களில் அகத்தியர் - ஓர் ஆய்வுஎன்னும் நூலாகும். இந்த ஆய்வு, தமிழ்மொழித் தொடர்பான அகத்தியரை மையமாகக் கொண்டு அமைந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியன் என்னும் சொல் தமிழ்ச்சொல் எனக் கருதலாம் என்கிறார். 

                  'பொதியில் முனிவன்என ஒரு விண்மீனுக்குப் பெயர் வழங்கப் பெற்றிருப்பதால் அப்பெயரை உடையவர் மிகப் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்புகழுடன் விளங்கியிருத்தல் வேண்டும் என்றும், பொதியமலையில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அகத்தியரைத் தமிழர் எனக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.தமிழ் நூல்கள் குறிப்பிடுகிற அகத்தியர் தமிழ் அகத்தியர் என்றும் வான்மீகியும் இவரைக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார். வடநாட்டு வேதகால அகத்தியர், பாரதகால அகத்தியர், இராமாயணகால அகத்தியர் ஆகியோர் ஆரிய அகத்தியர்கள் என்கிறார்.

                அகத்தியர் என்னும் பெயருடையோர் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பலர் வாழ்ந்துள்ளனர்; ஆரிய அகத்தியர்கள் தவிர, தமிழகத்தில் அகத்தியர் என்னும் பெயரில் எழுவர் வாழ்ந்துள்ளனர்; அகத்தியர்களைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவினும் அவர்கள் வாழ்ந்த காலம் பற்றி எவரும் உறுதிப்பட நிறுவவில்லை என்று கூறுகிறார். 

அகத்தியர் என்னும் பெயர் உடையோர் தென்னிந்தியாவி னின்று கீழைநாடுகளுக்குச் சென்று இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் பரப்பியதோடு அரசமரபையும் தோற்றுவித்துள்ளனர் என்று  குறிப்பிடுகிறார்.

                இறையனாரகப் பொருளுரையால் அறியப்பெறும் அகத்தியத்தைத் தொன்மையான இலக்கண நூலாகக் கொள்ளலாம் என்றும்பேரகத்தியத் திரட்டு' என்னும் பெயரால் காணப்படும் நூலில் இடம் பெற்றுள்ள அகத்திய நூற்பாக்கள் பிற்காலத்தவர்களால் எழுதப்பெற்றவை என்றும் கூறுகிறார்.           கம்பர் தம்காலத்தும், தமக்கு முற்பட்ட காலத்தும் தமிழ்நாட்டில் வழங்கிய அகத்தியர் பற்றிய கதைகளையும், வான்மீகத்தில் கூறப்பெற்ற அகத்தியர் பற்றிய கதைகளையும், ஒரே அகத்தியர் பற்றியனவாகவே சொல்லியமை, அகத்தியர் பற்றிய தெளிவான கருத்துக்குத் தடையாக உள்ளது என்று எழுதுகிறார்.

  ஆய்வாளர் திரும‌ந்திரமணி. துடிசைகிழார் அ.சிதம்பரனார்அகத்தியர் வரலாறுஎன்னும் தம் நூலில், அகத்தியர் என்ற பெயர் கொண்டோர் பலராவர் என்றும் அவர்கள் வெவ்வேறு ஊரர்; வெவ்வேறு குலத்தர்; வெவ்வேறு காலத்தர்; வெவ்வேறு தொழிலர் என்றும் கூறுகின்றார். 

                அகத்தியர் என்னும் பெயர் முதன்முதல் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வந்த ஒருசிறந்த தமிழ்ப்பெயர். அதனால் அப்பெயரை எல்லோரும் தத்தம் குழந்தைகளுக்கு இட்டு வழங்கிவந்தார்கள். அகத்தியர் என்னும் பெயரை உடைய பெரியார்கள் பலர் தமிழ் நாட்டில் பல இடங்களில் பல காலங்களில் வாழ்ந்து வந்து உள்ளனர் என்று கொண்டு அவர்களுடைய வரலாற்றில் உண்மை காண முயல்வதே அறிஞர் கடன் என்கின்றார். 

  அகத்தியர் என்ற பெயரைத் தமிழ்நாட்டில் வான்மீனுக்கு இட்டு வழங்க வேண்டுமானால் அப்பெயர் தமிழ்நாட்டில் பேரும் புகழும் பெற்றவருடையதாய் இருக்கவேண்டும் என்கின்றார்.      

     எழுமீன்(Great Bear – ‘சப்தரிசி’)மண்டலத்திலுள்ள  அகத்தியன் என்னும் விண்மீன் மிதுனராசியில் தோன்றுங் காலத்தில் கடல்நீர் ஆவியாக மாறுவதனால் கடல் வற்றுகிறதென்றும், அது மறையுங் காலத்தில் மழை பெய்வதால் கடலில் நீர் நிறைகிறதென்றும் பரிபாடல் பாடல் கூறுகின்றது. இதனைத்தான் உருவகமாக (in metaphorical language) அகத்தியர் கடலைக் குடித்தார் என்றும், மறுபடியும் கடல்நீரை அவர் உமிழ்ந்து விட்டார் என்றும் பழங்கதைகள் (புராணங்கள்) கூறும் என்று பேராசிரியர் ஒ.சி.கங்குலி (O.C.Ganguly) கருதுகிறார் என்றும் எடுத்துக்காட்டுகிறார்.

                  ஆரியஅகத்தியர்கள், தமிழ்அகத்தியர்கள் உள்பட முப்பத்தேழு அகத்தியர்கள் இருந்ததாகக் காலக்கணிப்புடன் எழுதியுள்ளார் என்பதை முன்பே எடுத்துக்காட்டினோம். ஒரே நாட்டில் பல காலங்களில் இருந்த அகத்தியர்களின் வரலாறுகள் அனைத்தையும் ஒன்றுபடுத்துவது தவறு என்றும், தனித்தனியாக ஒவ்வோர் அகத்தியருடைய வரலாற்றைப் பிரித்துப் படித்தால் முரண்பாடுகள் ஏற்படாது என்றும் தெளிவாகக் கூறுகிறார்.                

                 இனி, அறிஞர் பலர் தம் எழுத்துகளில் அகத்தியர் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகளைக் காண்போம்:   

                அ.மு.பரமசிவானந்தம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்என்னும் அவருடைய நூலில் கூறியுள்ளவை: கந்தபுராண வரலாற்றின்படி அகத்தியர் இமயத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் என்பர். வடமொழியில் உள்ளகந்த புராணத்தில் அகத்தியர் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. அவரைத் தமிழ் அறிந்த முனிவராக அந்நூலில் எங்கும் குறிக்கவில்லை. அந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்த கச்சியப்பர் அவரைத் தமிழ்அகத்தியர் என்றே குறிக்கின்றார்.மலயத்து வள்ளல்என்றும், ‘தமிழ்மாமுனிஎன்றும் தமிழ் கந்தபுராணம் காட்டுகிறது. அகத்தியர் சிவபெருமான் திருமணம் காணச்சென்றிருந்தாலும், அவர் தமிழ்நாட்டிலிருந்து சென்றார் எனக் கொள்ளல் வேண்டும். 

 சில பழங்கதை (புராண) வரலாறுகள் வடமொழி, தமிழ் இரண்டையும் சிவபெருமான் உலகுக்கு அருளினார் என்றும் வடமொழியைப் பாணினிக்கும், தமிழை அகத்தியருக்கும் அறிவுறுத்தினார் என்றும் காட்டுகின்றன. மொழியியல்பு அறிந்தாருக்கும், வரலாற்றறிஞர்களுக்கும் இக்கருத்து முழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அன்று என்பது நன்கு விளங்கும்..

புராணங்கள் பிந்திய காலத்தில் சமயமும் பற்றும் பின்னிப் பிணைந்த காலத்துப் புலவன் உள்ளத்தில் உதித்த கற்பனைகளே என்பதை இன்று சமயநெறி உணர்ந்த தக்கவர்களே ஏற்றுக்கொள்கின்றார்கள். 

   சிவபெருமான் திருமணத்துக்கு எத்தனையோ கடவுளரும் முனிவரும் வந்தனர் எனக் காட்டும் ஆரியர், அகத்தியர் வந்ததாகக் குறிக்கவில்லை என்பதை வடமொழி வாயிலாகக் கற்ற அறிஞர்கள் நன்கு விளக்கிக் காட்டுகின்றார்கள்.

  அகத்தியருக்கு விந்தியமலை வழிவிடவில்லை என்று புராணக்காரர் கூறிய கதையால் அவரைத் தென்னாட்டு ஒழுக்கமும் பண்பாடும் விந்திய எல்லையிலேயே தடுத்து நிறுத்தின என்று கொள்வது பொருந்தும். 

                  வடநாட்டு அகத்தியரின் வேறாகத் தமிழ்நாட்டின் பொதிய மலையில் வேறு ஒர் அகத்தியர் இருந்தார் எனவும், அவருக்கும் வடமொழிக்கும் தொடர்பு ஒன்றும் இருந்ததில்லை எனவும், பெயர் ஒற்றுமையால் இடைக்காலத்தில் இருவரையும் ஒருவரெனக் கருதியமையே இத்தகைய கற்பனைக் கதைகளுக்கும் பிறவற்றிற்கும் இடம்கொடுத்ததெனவும், உண்மையை எண்ணின், இருவேறு பகுதிகளில் வடக்கிலும் தெற்கிலும் இருவேறு அகத்தியர் வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம் எனவும், அவர்தம் பெயர் ஒற்றுமையைத் தவிர வேறு எதிலும் அவர்க்குள் தொடர்போ வேறு ஒற்றுமையோ இருந்ததில்லை எனவும் கொள்ளுதல் பொருத்தமாகும் என எண்ணுகிறேன். 

                அகத்தியச் சூத்திரம் எனக் குறிக்கும் இரண்டொரு சூத்திரங்களும் சிறந்தவை எனக் கொள்ளக்கூடியன அல்ல. எனவே, இருக்கும் ஏதோ இரண்டொன்றைக் கண்டு அவற்றின்வழி அகத்தியர் பெருநூல் செய்தார் எனவும் அது மறைந்தது எனவும் கொள்ளுவதினும் அந்நூல் எழவில்லை என்றே கொள்ளல் பொருத்தமானதாகும். 

அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் எவ்வாறு தொடர்பு கற்பித்தார்கள் என்பது விளங்காத புதிராய் உள்ளது. 

                பொதியமலையில் தமிழ் அறிந்த நல்ல பண்பாடுடைய ஒரு புலவர் வாழ, அதே பெயரோடு வடக்கே இமயத்திலிருந்து வந்து விந்தியமலையில் மற்றொரு புலவர் வாழ்ந்தார் என்று கொள்ளுவதே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்துவதாகும். 

                சோமசுந்தரபாரதியார்: எந்த ஆதரவு வைத்துக் கொண்டு அகத்தியர் தமிழை உண்டாக்கினார், வளர்த்தார் என்று சொல்லுகிறீர்கள்அவ்வாறு கூறுவது முழுப்பொய். தமிழைப் படித்ததால் அகத்தியன் பெருமை பெற்றான். அகத்தியன் கடவுள் அல்லன். அகத்தியன் ஒரு மனிதன். அகத்தியனைப் பற்றிப் புராணங்கள் கட்டுக்கதைகளைக் கிளப்பின - என்கின்றார். 

இவர் ஆங்கிலத்தில் எழுதிய அகத்தியர் பற்றிய கட்டுரையில், அகத்தியர் பலரே என்னும் கருத்தைக் கூறுகிறார்.

                மறைமலையடிகள்:  இவர் தமது, ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்என்னும் நூலில் குறிப்பிடுஞ் செய்திகள்: மணிமேகலையில் அகத்தியனாரைப் பற்றிய குறிப்புக் காணப்படினும் அவர் தமிழுக்கு இலக்கணம் செய்தார் என்றாவது, அவர் மாணாக்கர் தொல்காப்பியர் என்றாவது அதன்கண் ஏதுஞ் சொல்லப்பட்டிலது. 

         இறையனார் அகப்பொருளுரைப் பாயிரத்தில், அகத்தியனாரால் செய்யப்பட்டது அகத்தியம், அவர் இருந்தது தலைச்சங்கம் என்பது கூறப்பட்டதாலோவெனின்; அவ்வுரைப் பாயிரத்திலுள்ள இன்னோரன்ன வெல்லாம் நக்கீரர் உரைத்தனவல்ல வென்றும், அவை, புராணக்கதைகள் மிக்கெழுந்த பிற்காலத்தே யிருந்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவாமென்றும். இவ் ஆராய்ச்சியாரெல்லாம் உரைப்பக் காண்டலானும், அவ் வுரைப்பாயிரத்திற் கண்ட அவற்றுக்கெல்லாம் பழைய நூற் சான்றுகள் சிறிதுமின்மையானும் அவை உண்மையென்று கொள்ளற்பாலன அல்ல.

    “புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரத்தில் அகத்தியனார் தொல்காப்பியனாரைப் பற்றிய இக் குறிப்புகள் காணப்படுதல் என்னையெனின், ‘புறப்பொருள் வெண்பாமாலைகி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல் அன்றாகலின், புராணகாலத்து வந்த அந் நூற்பாயிரத்தில் அவை காணப்படுதல் ஒரு வியப்பன்று.

        அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவர் எனவும், அப்பன்னிருவரும் ஒருங்குகூடிச் செய்த நூலேபன்னிருபடலமாம் எனவும், அப்பன்னிரு படலத்தின் வழித்தாகவேபுறப்பொருள் வெண்பாமாலைஇயற்றப்பட்டது எனவும் அவ் வெண்பாமாலைப் பாயிரமாகியமன்னிய சிறப்பின்என்னுஞ் செய்யுள் நுவலுதல் பொருந்தாது.

                 ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்தியர் மாணாக்க ரென்றலும் வெறும் கட்டேயாம்!

                க. வெள்ளைவாரணனார்: இவர் தமதுதமிழ் இலக்கிய வரலாறுஎன்னும் நூலில் குறிப்பிடுஞ்செய்திகள்:

                அகத்தியர் என்ற பெயருடைய முனிவர் பலர் வடநாட்டிலும் தென்னாட்டிலும் காலந்தோறும் பல இடங்களில் பேசப்பட்டுள்ளார்கள். தலைச்சங்கத்து நூலாகிய அகத்தியத்தை இயற்றியவர் தென்னாட்டிலேயே பிறந்து செந்தமிழ் பயின்ற சிறந்த புலவராதல் வேண்டும். அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் உள்ள தொடர்பினைத் துணிதற்கேற்ற சான்று எதுவும் நூலில் இல்லை. பின்னுள்ளோரால் காட்டப்பெறும் அகத்திய நூற்பாக்கள் தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தே இயற்றப்பெற்றனவாதல் வேண்டும்.

                 அகத்தியர் என ஆசிரியர் பெயரும் அகத்தியம் என நூற்பெயரும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்பில் காணப்படுவதனைக் கொண்டு அகத்தியருக்கு மாணவர் தொல்காப்பியர் எனத் துணியவியலாது. அகத்தியம் என்னும்பெயரால் எடுத்துக்காட்டிய நூற்பாக்களும், பேரகத்தியம் என்ற பெயரால் இக்காலத்து வெளியிடப் பெற்ற நூற்பாக்களும் மிகமிகப் பிற்காலத்தே அகத்தியர் பெயரால் வெளியிடப்பெற்றவையே!  

                இரா. இராகவையங்கார்: வேதகாலந் தொட்டுப் பிந்தியகாலம் வரை ஓர் அகத்தியர் பரம்பரை உண்டென்றும், அவ்வழியினருள் தமிழிலக்கணஞ் செய்தவரும் ஒருவர் உண்டென்றும், அவர் தொல்காப்பியனார் காலத்தவரென்றும், தமிழ் இலக்கண உரைகாரர் கூற்றால் துணியலாமென்று தெளிக. 

இவ் வகத்தியர்க்கு முன்னே இத் தமிழ்நாடு இனிய செய்யுளாலும், நல்ல வழக்காலும் சிறந்து விளங்கிற்றென்று கருதுவதே பொருத்தமுடையதாகும்.. வேதகால அகத்தியர் இராமாயண கால அகத்தியர், பாரத கால அகத்தியர் எனப் பலராதல் தெளியலாம். இவ்வழியில் பாணினீய காலத்தவராய்த் தமிழுணர்ந்தவராய்த் தமிழ் இலக்ணமும் செய்த அகத்தியர் ஒருவர் உண்டு என்பது தான் இயைவதாகும் என்கிறார். 

                ந.மு.வேங்கடசாமி நாட்டார்: தமிழ்முனி என்று பலராலும் பாராட்டப்பெற்ற அகத்தியரைத் தமிழர் என அழைப்பதில் தவறில்லை என்பார். 

                கா. சுப்பிமரணியபிள்ளை: தொல்காப்பியம் எழுத்ததிகார முன்னுரையில் அகத்தியர் இருவர் இருந்தனர் எனவும் அவர் இருவரும் பல்வேறு வகையில் வேறுபட்டு வாழ்ந்தவராவர் எனவும், பொதியமலை அகத்தியர் தமிழ்முனிவர் எனவும் குறிக்கின்றார். 

                பி. டி. சீனிவாச ஐயங்கார்: இவர்தமிழர் வரலாறு' என்னும் நூலில் அகத்தியரைக் குறித்துக் கூறியுள்ள கருத்துகள்:இஷ்வாகுகாலம் முதல்கிருஷ்ணன்காலம் வரையில் வடமொழி நூல்களில் கூறப்படும் அகத்தியர்கள், வசிட்டர்கள் ஆகியோர் தனிப்பட்ட அகத்தியரையோ வசிட்டரையோ குறித்தவர்கள் ஆகார். அப்பெயர்கள் குடும்பப் பெயராகப் பலருக்கு வழங்கியனவாகும். அப்பெயர்கள் குடும்பப் பெயரேயன்றித் தனிப்பட்டவர்களுக்குரிய பெயர்களல்ல. 

                வி.கோ.சூரியநாராயண சாத்திரியார்:கருத்துக்கள் தன்முயற்சியானெழும் ஒலிகளின் சம்பந்தமாகவே வெளிப்படுகின்ற இயல்பினின்றுமே பாஷைக ளுண்டாதலியலும் என்பது யாவரும் மறுக்கமுடியாததோர் பாஷைநூலுண்மை. இவ் வுண்மையை யொட்டியே தமிழ்ப்பாஷையின் தோற்றமும் ஏற்பட்டிருத்தல் மிகவும் கவனிக்கற்பாலதே. 

ஈதிவ்வாறாக, தமிழ் நூலாசிரியர் பலரும், இக்காலத்தினும் ஆங்கிலநூற் பயிற்சியில்லாத நண்பருட் சிலரும் தமிழ்மொழியும் வடமொழியும் தேவபாஷைகளென்றும் இவ்விரண்டு முறையே அகத்தியனார்க்கும் பாணினியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப் பட்டன என்றும் கூறாநிற்பர். 

                கால்டுவெல்: இவர் தம் நூலான, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (தமிழ்)  பக். 170 இல், "அவர் (அகத்தியர்) ஆரிய வந்தேறிகளின் தலைவர் என்று கூறுவதைவிட அக் குடியேற்றக் கட்டுக்கதைக்குத் தலைவரே யெனக் கூறலாம்" என்கின்றார்.

                உ.வே.சாமிநாதையர்: ''இவர் (அகத்தியர்) வருவதற்கு முன்னரே இந் நாட்டிலிருந்த தமிழையும் அதனிலக்கணத்தையும் இவர் தந்தாரென்று கூறியிருப்பது உபசாரவழக்கு

                தமிழோடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்த கொடி     (குமர.)

என்றதனாலும் அகத்தியர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னமேயே          அந்நாட்டில் இருந்த தமிழின் தொன்மை விளங்கும். (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்)

                பாவேந்தர் பாரதிதாசன்:அகத்தியன் விட்ட புதுக்கரடிஎனுந் தலைப்பில் அகத்தியர் பற்றிய சில குறிப்புக்களைப் புதிய நோக்கில் சுட்டியுள்ளார்.    பண்டைய திராவிடம் எனப்படும் தென்பகுதி எல்லா வகையிலும் சிறப்புற்றிருந்த காலத்து, அகத்தியர் ஆரியக் கோட்பாடுகளைப் பரப்பும் நோக்கத்துடன் தென்னாடு வந்தார் என்றும், பொதிகை மலையில் தங்கி, அங்கிருந்த தமிழ்ப்பெரும் புலவர்களிடம் இயற்றமிழ்இசைத்தமிழ், ஆடற்றமிழ் ஆகிய மூன்றனையும் முறைப்படி பயின்றார் என்றும் கூறியுள்ளார். மேலும், 'செல்வம் முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயன்', சிறுமை, முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன். தீ, தீம்புனல், கடுவெளி ஆகியவை தெய்வங்கள். இந்திரன் எதற்கும் இறைவன். அவன் மந்திர வேள்வியால் மகிழ்பவன்' முதலான ஆரியக்கோட்பாடுகளை அகத்தியர் தமிழர்சர்களின் ஆதரவோடு தமிழ்மக்களிடையே பரப்பினார் என்றும், இறுதியாகத் தமிழரசர்கள் இக்கொள்கைகளையும் ஏற்று அகத்தியருக்கு அடிமையாயினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் வடக்கிலிருந்து வந்த ஆரியர் என்றும், ஆரியக் கொள்கைகள் தமிழகத்துப் பரவியதற்கு இவரே அடிப்படைக் காரணம் என்றும், இவருடைய -வருகைக்குப் - பின்னரே தமிழ்க்கலை, பண்பாடு, நாகரிகம் முதலானவை அழிந்தன என்றும் சுட்டியுள்ளார். 

                அருணகிரியார், குமரகுருபரர்:சிவனை நிகர் பொதியவரை முனிவ னகமகிழவிரு செவிகுளிர வினியதமிழ் பகர்வோனே" என்பர் அருணகிரியார். தமிழ் முனிவன் வாழுமலை என்பார் குமரகுருபரர். அகத்தியரைச் சிவபெருமானோடு ஒப்பிட்டும், அவரைத் தமிழ் முனிவரென்றும் அவர்தம் இருப்பிடம் பொதியமலை என்றும் இவ்விருவர் கூற்றுக்களும் விளக்குகின்றன. 

அகத்தியரைப்பற்றி ஆராய்ந்தவர்களுள் மு. இராகவையங் காரும், செகவீரபாண்டியனும் அகத்தியர் ஒருவரே என்னுங் கருத்துடையோர் ஆவர். கே. என் சிவராசபிள்ளை, துடிசைகிழார் அ. சிதம்பரனார், ந.சி.கந்தையாப் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், ஆ.சிவலிங்கனார், ப.தங்கராசு, அ.மு.பரமசிவானந்தம், மறைமலையடிகள்சோமசுந்தர பாரதியார், இரா. இராகவையங்கார், பி.டி.சீனிவாச ஐயங்கார் முதலானோர் அகத்தியர் பலர் என்னும் முடிவினைக் கொண்டவர்கள் ஆவர்.

பிரபந்த இலக்கணம்என்னும் சிற்றிலக்கிய இலக்கணத்தைக் கூறுகின்ற பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்துகளுக்கும் பாவகைகளுக்கும் கூட ஏற்றத்தாழ்வு (இன்ன சாதிக்கு இன்ன எழுத்து, இன்ன சாதிக்கு இன்ன பா வகை எனக்) கூறுகின்றவை. இவை கூறும் செய்திகளிலும் அத்தகைய உணர்வு இருந்தால் வியப்பதற்கில்லை. 

முடிப்புரை: 

                 மேலே எடுத்துக்காட்டிய அறிஞர்களின் கருத்துகளையும் பிற நூல்களின் குறிப்புகளையும் கொண்டு ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால், கீழ்க்காணும் முடிவுகளுக்கு வரலாம்.

1.அகத்தியர் ஒருவரே என்று கருதுவது தவறென்றும் அகத்தியர் பெயரில் பலர் இருந்துள்ளனர் என்றும் தெரிகிறது:

2. அகத்தியர் என்னும் பெயரில் வடமொழி ஆரியஅகத்தியர்களும் தமிழ்அகத்தியர்களும் இருந்துள்ளனர்.

3. தமிழ்நாட்டில் அகத்தியர் என்னும் பெயரினைத் தாங்கி வாழ்ந்த அறிஞர் தமிழரே. பொதியமலை அகத்தியர் தமிழரே.

4. வடஆரிய அகத்தியர் காலத்திற்கு முன்பே தமிழ், இலக்கிய இலக்கணச் செழுமையுடன் இருந்திருக்கின்றது. (உ,வே.சா., இரா. இராகவையங்கார் கருத்தைக் காண்க)

5. அகத்தியம் முதனூல் என்ற கூற்று உறுதிப்டுத்தப் படாததாகும்.

6. தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்பதற்கு அடிப்படையான உறுதிச் சான்றெதுவும் இல்லை.

7. அகத்தியம் என்று ஒரு நூல் இருந்ததற்கான அடிப்படையான உறுதிச் சான்றெதுவும் இல்லை.

8.அகத்தியர் நூற்பாக்களாக உரையாசிரியர்களால் காட்டப்படும் நூற்பாக்கள் பிற்காலத்தில் பிறரால் எழுதப்பட்டவை.

9. (வடவாரிய) அகத்திய மாமுனி தமிழ்இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவர் என்றும் அவரின் திறம் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது என்றும் இந்திய ஒன்றிய அமைச்சர் கூறியது கலப்படமற்ற முழுப்பொய்யே.

                இன்றைய அறிவியல்காலத்திலும் கூட, ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருக்கிற காரணத்தால், அந்த அதிகாரம், பெரும்பணவலிவு முதலியவற்றைக் கொண்டு, கூலி எழுத்தாளர்கள் கூட்டத்தையும், வாயை வாடகைக்கு விடும் முன்னாள் இந்நாள் பேராசிரியன்மாரையும் வளைத்துவிடுகின்றனர். அவர்கள் வழி அகத்தியர் பெயரால் பொய்ம்மைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, தமிழ்க் குமுகாயத்தை மூடஅடிமைகளாக்கிடவும், தமிழை மீண்டும் மூடநம்பிக்கைக் குப்பைக்குக் கொண்டுபோகவும், திட்டமிட்ட இந்தியஆட்சியாளர், இக்கால் விழிப்புற்றெழுந்த தமிழரின் எதிர்ப்பால் அமைதியாகி அடங்கியுள்ளனர் என்று அறியமுடிகிறது.

எவ்வளவு படித்திருந்தாலும் எத்தனை பெரிய அறிஞராயிருந்தாலும் தன்னலத்திற்கும் அறிவுக்கும் போட்டி என்று வரும்போது தன்னலம் வெற்றிபெற்று விடுகிறது; அறிவு தோற்றுவிடுகிறது என்று புரட்சியாளர் அம்பேத்கார் கூறியுள்ளார் என்று ஒருவர் புத்தகவிழாச் சொற்பொழிவில் கூறியதைக் கேட்க வாய்த்தது. ஆம், அதற்கு அகத்தியர் புரட்டுக்குத் துணை போனவர்களே சான்றாக உள்ளனர்.

 

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.             -கு.116

எற்றிற் குரியர்  கயவரொன் றுற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து.                             - கு.1080.

 

உதவிய நூல்கள்:

1. K.N. Sivaraja pillai, ‘Agastya in Tamil Land’, Madras Law Journal press, Mylapore, Madraş. 

2. கா.நமச்சிவாய முதலியார், ‘அகத்தியர் ஆராய்ச்சி’, குடி அரசுப் பதிப்பகம், ஈரோடு, 1931. 

3. ந.சி.கந்தையாபிள்ளை, ‘அகத்தியர்’, ஆசிரியர் நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1931. 

4. செகவீரபாண்டின், ‘அகத்திய முனிவர்’, மதுரை, 1964. 

5. துடிசைகிழார் அ.சிதம்பரனார், ‘அகத்தியர் வரலாறு’, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1964. 

6. ஆ.சிவலிங்கனார், அகத்தியர்கள், ஒற்றுமை அலுவலகம், சென்னை, 1948.

7. முனைவர் ப.தங்கராசு, ‘தமிழ் இலக்கியங்களில் அகத்தியர்’, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1997.

8. அ.மு.பரமசிவானந்தம், ‘வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்’, வள்ளியம்மாள் கல்வி அறம், சென்னை – 102.

9. மறைமலையடிகள்,மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்' 1957. கழக வெளியீடு,1980. 

10. க.வெள்ளைவாரணனார், ‘தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்’, மாணவர் பதிப்பகம், சென்னை-7

11. உ.வே.சாமிநாதையர், ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’, .வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை – 41, 1978.

12. பாரதிதாசன், ‘அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துக் கதைபாரதிதாசன் பதிப்பகம், 1948.

13. இன்னும் பலரின் குறிப்புகள்.         உதவிய அனைவர்க்கும் நன்றி 

                              (அகத்தியர் புரட்டு முற்றுப்பெற்றது)  

(புதுவை 'நற்றமிழ்' ஆடவை 15-6-2025 இதழில் வந்தது) 


’மூலதிராவிடம்’ என்பது முறையற்ற ஏய்ப்பு !

          மூலதிராவிடம் - என்பது முறையற்ற ஏய்ப்பு !

          ====================================================================

அண்மையில் ஒரு திரைப்பட நடிகர், திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, அவருடைய கன்னட நண்பருடன் அவருக்குள்ள நெருக்கத்தைக் குறிக்கும் வகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது (தாய் மகள் உறவு) என்ற பொருள்படும்படி பேசிவிட்டாராம். அதனைத் தொடர்ந்து கருநாடகத்தில் எதிர்ப்பு உண்டாகி, அந்த நடிகரின் படத்தைக் கருநாடகத்தில் வெளியிட தடையேற்பட்டது. இதன் தொடர்பாகப் பலரும் பல கருத்துகளைக் கூறினார்கள்.

முத்துமணி என்பவர் தினமணி நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘நாகாக்ககாவாக்கால்என்று அந்த நடிகரை எச்சரித்திருந்தார். அக் கட்டுரையில் பெட்டிச்செய்தியாகத்,  ‘தாய்மொழி அல்ல ஒரு தாய்மக்கள்’  என்ற தலைப்பிட்டும் எழுதியிருந்தார். அதில், ‘தமிழும், கன்னடமும்சகோதரமொழிகளே அன்றிக், கன்னடத்துக்குத் தமிழ் தாய்மொழி அல்லஎன்று எழுதியதோடுமுதனிலைத் திராவிடமொழியை மொழியியல் அறிஞா்கள் தற்போது மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள்என்றும் எழுதியிருந்தார். இதிலே, ‘முதனிலைத் திராவிட மொழி’ (Proto-Dravidian language) என்பதும், ‘மீட்டுருவாக்கம்’ (Reconstruction) என்பதும் என்ன என்று கொஞ்சம் பார்ப்போம். 

முதனிலை மொழி (Proto-language) அல்லது மூலமொழி அல்லது முந்துமொழி என்பது கற்பனையாக ஊகமாகக் - கொள்ளப்படும் ஒரு மொழியாகும். மூலமொழி என்பது துல்லியமான வரலாற்றுப் பதிவுகள் இல்லாத நேரத்தில், அறிவியலால் கணிக்கப்படும் ஒரு புனைவு (hypothetical construct) தான். அது உண்மையில் இருந்ததா என்பதை 100% மெய்ப்பிக்க முடியாது. இது ஒரு அறிவியல் புனைப்பு (scientific hypothesis) என்று கூறுகிறார்கள். 

                   மூலமொழி என்பது உண்மையில் இருந்திராத, ஆய்வுக்காக மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட (Hypothetical reconstructed language) ஒன்றே என்றும் கூறியுள்ளார்கள். மேலும், ''மூலமொழிக் கொள்கை'' என்பது மொழிஆய்வில் அனைவரும் ஏற்றுக்கொண்ட கொள்கை என்று கொள்ளமுடியாது. இதற்குப் பின்னால் வகுப்பு (வர்க்க) அரசியல் இருக்கிறது என்கிற கருத்தும் உண்டு.       

     மாருக்சியர் இசுதாலின், “மொழிக்குடும்பம், பொதுவான, பழைமை யான மூலமொழியில் இருந்து பிரிந்து உருவான கிளைமொழி களை உள்ளடக்கியது எனும் இந்தோ ஐரோப்பியச் சிந்தனைக் கொள்கையைக் குறிக்கும்எனக் கூறியுள்ளதாக அறிகிறோம். 

                முன்னதாக இருந்த ஒரு மொழியிலிருந்தே (உண்மையில் அப்படி ஒரு மொழி இல்லாமலும் இருக்கும்) குடும்ப மொழிகள் உருவாயின என்ற முன்முடிவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுமுறையே மூலமொழி ஆய்வாகும். 

       மூலமொழி என்பது சில தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருதுகோள் (hypothesis) மட்டுமே, அது ஒரு நேரடியான உண்மை அல்லது நேரடியாக மெய்ப்பிக்கப்பட்ட ஒன்று அன்று என்ற கருத்தும் உண்டு. எனவே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகள்  மூலத் திராவிடமொழி ஒன்றிலிருந்து உருவாயின என்பது மொழிநூலார் சிலரின் ஊகமே தவிர முடிந்த முடிவு அன்று. 

                இனி, ‘மீட்டுருவாக்கம்என்றால் என்ன என்று பார்ப்போம்: 

மொழியியல் மீட்டுருவாக்கம் (Linguistic Reconstruction) என்பது, ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளை ஒப்பீடு செய்து, அக் குடும்ப மொழிகள் வந்திருக்கக் கூடிய பண்டைய "மூலமொழி" (Proto-language) (அப்படி ஒன்று இருந்தால்) எப்படி இருந்திருக்கும் என்று கணிப்பதற்கான அறிவியல் செயல்முறை என்ற விளக்கம் தருகின்றனர்.

மொழியியல் மீட்டுருவாக்கம் என்பது, இப்போது இல்லாத இறந்துபோன - அல்லது நேரடியாகக் கிடைக்கப்பெறாத ஒரு மொழியின் (மூலமொழி - Proto-language - என்று கூறப்படுவதின்) கூறுகளை, அதிலிருந்து உருவான அந்தக் குடும்ப மொழிகளின் - ஒப்பீட்டு ஆய்வு மூலம் மீண்டும் உருவாக்குவதாகும்  என்றவாறும் விளக்கம் தருகின்றனர். 

இது, உயிரோடில்லாத, நேரடிப் பதிவுகள் இல்லாத ஒரு மொழியை, நம்மிடம் உள்ள பிற மொழிகளின் வழியாகப் புனைந்து உருவாக்கும் செயல். இது ஒரு புனைவு (hypothesis) — உறுதியான பதிவு கிடையாது. ஆனால், இது ஒப்பீட்டு முறையில் தரவுகள், ஒலிவினை நெறிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் விளக்கப்படுகிறது.

சரி, எல்லா மொழிக்குடும்பங்களுக்கும் "மூலமொழி" மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறதா? என்றால், ‘இல்லைஎன்பதே விடையாகும்.

இலத்தீனிலிருந்து உரோமன் குடும்பமொழிகள் (பிரெஞ்சு, இசுப்பானிசு, போர்த்துகீசியம், இத்தாலியன், உருமேனியன் போன்றவை) உருவாயின என்று கூறுகிறார்கள். இலத்தீன், பிரெஞ்சு, இசுப்பானிசு, போர்த்துகீசியம், இத்தாலியன், உருமேனியன் போன்றவை கிளைமொழிகள் என்றோ, அக்காதங்கை மொழிகள் (Sister languages) என்றோ கூறுவதில்லை. 

சமற்கிருதத்திலிருந்து வட இந்திய மொழிகள் (இந்தி, பெங்காலி, மராத்தி, குசராத்தி போன்றவை) உருவாயின என்று பொதுவாகக் கூறப்படுகிறது. சமற்கிருதம், இந்தி, பெங்காலி, மராத்தி, குசராத்தி போன்றவை கிளைமொழிகள் என்றோ, அக்கா தங்கை மொழிகள் (Sister languages) என்றோ கூறுவதில்லை. இவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. பெரும்பாலும் இப்படித்தான் உலகில் பல்வேறு மொழிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது. 

       தமிழ் இயற்கையான மொழி என்பதால், அது மூலமொழி ஆகாது என்றும், ஆனால், இலத்தீன், சமற்கிருதம் பேசப்படாத மரபு மொழிகள் (இறந்துபட்ட மொழிகள்) என்பதால் அவற்றை மூலமொழியாகப் பார்த்து விடுகிறார்கள் என்றும் கருத்து கூறப்படுகிறது

தமிழர்களிடம் ஓர் அமைதிக்காகப், ‘பிற திராவிட மொழிகளைக் காட்டிலும், மூலத்திராவிட மொழியோடு மிக நெருக்கமாக இருப்பது தமிழ்தான்என்று கூறிவிடுவார்கள்.

இனி, இலத்தீனுக்கும், சமற்கிருதத்திற்கும் பல்வேறு கூறுகளில் உள்ள தகுதிகளைவிடத் தமிழின் தகுதிகள் குறைவானவையா? ‘இல்லைஎன்று ஒப்புகிறார்கள். உண்மையில், அந்த இரண்டு மொழிகளின் தகுதி நிலைகளுக்கும் மேலான தகுதிநிலை உடையது தமிழ். அதை யாரும் மறுக்க இயலாது.

 இப்படிப்பட்ட நிலைகளில், மொழியியல் மீட்டுருவாக்கம் என்னும் பொதுக்கொள்கை முரணாக இருப்பது தெளிவு. தமிழை மட்டும் கிளைமொழிகளுள் ஒன்று என்று கூறுவதும், தைவைத்து மீட்டுருவாக்கம் என்று கூறி வலியுறுத்துவதும் ஏன்?

       மேலையரை (மேற்கு நாட்டினரை)ப் பொறுத்தவரை, இலத்தீன் உரோமானியப் பேரரசின் அதிகார அடிப்படை மொழியாக இருந்ததால், அதன் வழித்தோன்றல் மொழிகளுக்கு - உரோமானிய குடும்பமொழிகளுக்கு - இலத்தீன் தாய்மொழி என்பது எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழ்மொழிக்கு அப்படியொரு அரசியல் நடுவம் அதிகாரநிலை இல்லை - என்ற உண்மை எண்ணிப் பார்க்கத்தக்கது.

        பல சமையங்களில், மேலை நாட்டு மொழியியல் ஆய்வுகளில் ஒரு குறிப்பிட்ட வல்லாண்மைப் (மேலாதிக்கப்) பார்வை இருப்பதால், இந்திய மொழிகளின் ஆய்வு முறையில் குறிப்பாகத் திரவிடமொழிகளின் ஆய்வுமுறையில் வேறுபாடுகள் இருக்கின்றன எனவும் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.

உலகமொழியறிஞர்கள் தொல்காப்பியம், கழக இலக்கியங்களில் போதிய பயிற்சிபெறா நிலை (Lack of Proficiency and Awareness of Tolkappiyam and Sangam Literature among World Linguists) அவர்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தாத நிலையும்கூட காரணமாக உள்ளது.  

                மேற்குலக மொழியியல் ஆய்வுகள் பெரும்பாலும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சுற்றியே வளர்ந்தன. இதனால், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் போன்ற மொழிகளில் அவர்களுக்கு ஆழ்ந்த புலமை உண்டு. 

அவர்களுக்குத் தொல்காப்பியம், கழக இலக்கியம் போன்ற நூல்கள் மொழியியல், இலக்கியம், பண்பாடு, குமுகவியல் எனப் பல்துறை சார்ந்த மிக உயர்ந்த கருவூலங்கள் என்பதையும், தமிழ் உலகின் தொன்மையான மொழி என்பதையும் முறையாக அறிமுகப்படுத்தாததும், அரிய தமிழ் இலக்கியங்கள் முழுமையாக ஆங்கிலத்திலும் பிற முகன்மை மொழிகளிலும் கிடைக்காததும் பெரும் குறைபாடாகவும் காரணமாகவும் இருக்கிறது..

மொழியறிஞர்களில், கழகஇலக்கியம், தொல்காப்பியம் போன்றவற்றில் போதிய பயிற்சியும் தோய்வும் உடையவர்கள் உலக அளவில் மிகக் குறைவு. இதனால், தமிழின் தனிச்சிறப்பான மொழியியல் கூறுகள், அதன் வரலாற்றுப் போக்குகள், பிற மொழிகளுடனான அதன் தொடர்புகள் போன்றவை முழுமையாக ஆராயப்படாமல் இருக்கின்றன என்பது உண்மையாகும்.

இனி, இந்திய ஒன்றியத்தில் தமிழின் நிலையைப் பார்ப்போம்:

இலத்தீன், உரோமானியப் பேரரசின் ஆட்சிமொழியாக அதிகார நிலையில் இருந்தது. சமற்கிருதம் இந்திய ஒன்றியத்தில் ஆட்சிமொழியினும் மேலான அதிகார நிலையில் இருந்துவருகிறது. பிறமொழிகள் பட்டினியால் வாடுகையில், பலகோடிக்கணக்கான உருவாக்களை வீணில் விழுங்கிக் கொண்டு இருக்கிறது. 

இந்திய ஒன்றியத்திலோ உலகில் வேறு எங்குமோ தமிழ் ஆட்சிமொழியாக இல்லை. எனவே தமிழ், அரசின் அதிகார அடிப்படை மொழி என்ற வாய்ப்பைப் பெறவில்லை.

                 இந்தியஒன்றியத்தில் இந்திபேசும்மக்கள் ஒப்பீட்டில் மிகுதியாக இருப்பதும், இந்திமொழியைத் தேசியமொழியாக்கும் முயற்சிகளும், இந்தி அல்லாத மொழிகளை, குறிப்பாகத் தமிழை, ஒருவகைச் சிறுபான்மைநிலைக்குத் தள்ளியுள்ளன. இது தமிழின் தொன்மையையும், தனித்தன்மை வாய்ந்த  பிற சிறப்புகளையும் உலகஅளவில் எடுத்துச் செல்வதில் முன்னேறா நிலைக்குக் காரணமாக இருப்பதை மறுக்கஇயலாது.       

                மொழியியல் என்பது ஓர் அறிவியல் பிரிவு என்றாலும் மொழி, வரலாறு தொடர்பான நிலைகளில் சில சமையங்களில் அரசியல், குமுக, பண்பாட்டு இடையீடுகள் இருப்பதுண்டு என்றே கூறுகிறார்கள். திராவிட மொழிகளின் தோற்றம், 'மூலதிராவிட' கருத்து முதலியவை பற்றிய தருக்கங்கள், சில சமையங்களில், பண்பாட்டு அடையாளம், அரசியல் அதிகாரம் போன்றவற்றுடன் இணைந்துவிடுகின்றன என்ற கருத்து உண்டு.

                மொழியியல் அடிப்படையில் தமிழ் தகுதியைப் பெற்றிருந்தாலும், தமிழின் தனித்தன்மையை, தனித்தகுதியைக் குறைப்பதற்கான சில அரசியல் ஆற்றல்களின் முயற்சி இருப்பதை மறுப்பதற்கில்லை என்று கூறுகின்றார்கள். 

       மொழிக்குடும்பத்தில் தமிழ் ஒரு பொதுவான தாய்மொழி என்பதை ஏற்றுக்கொள்வது, தங்கள் மொழியின் தனித்தன்மையைக் குறைப்பதாக மொழிக்குடும்பத்தில் உள்ள பிறமொழியினர் உணர்வதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று ஆட்சியாளர்கள் எண்ணக்கூடும் என்ற பொய்க்காரணமும் கூறப்படுகின்றது.

 தமிழ் முதல்தாய்மொழி அல்லது திராவிட மொழிகளுக்குத் தாய் என்ற கூற்று ஏற்கப்பட்டால், தமிழ்த்தேசிய உணர்வுகளுக்கும், திராவிட இயக்க அரசியலுக்கும் வலுவேற்பட்டுவிடும் என்ற வலுவற்ற கருத்தும் இருப்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கருதாத இக்காலத்தினமணி’, மொழிப்புலன், ஆய்வுத்தகைமையற்ற தக்கையராகிய சிலசொத்தைப்பணிஎழுத்தரின் கூற்றுகளை கட்டங்கட்டிப் பெட்டிச்செய்தியாக வெளியிட்டு வருகிறது என்பதே அவலமாகும்.  

(புதுவை 'நற்றமிழ்' ஆடவை - 15-6-2025 இதழில் வந்தது)


சனி, 14 ஜூன், 2025

விழுப்புரம் ‘புத்தகக்காட்சி’ அரங்கில் 5-3-2025இல் தமிழநம்பி ஆற்றிய உரை:

 

விழுப்புரம் புத்தகக்காட்சிஅரங்கில் 5-3-2025இல்   

தமிழநம்பி  ஆற்றிய உரை:

மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய அன்பார்ந்த அவையோரே! நேர நெருக்கடி கருதி சுருக்கமாக அனைவர்க்கும் வணக்கம். மூன்றாம் ஆண்டாக விழுப்புரத்தில் புத்தகக்காட்சி நடந்துகொண்டு இருக்கின்றது! ஏற்பாடு செய்த தமிழ்நாட்டரசுக்கும் மாவட்டஆட்சியாளர்க்கும் மாவட்ட நூலகத்துறை அதிகாரிகள், பிற பணியாளர்க்கும் நன்றியைக் கூறுவோம்.

பத்தகங்களை, நூல்களைப் படிக்கவேண்டியதின் தேவையையும், படிப்பதால் பெறும் நன்மைகளையும் கடந்த மூன்று நாள்களில் உள்ளூர் எழுத்தாளர்கள் முல் வெளியூரிலிருந்து வந்த பெரும்பெரிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்வரைப் பலரும் கூறியதைக் கேட்டோம். ஆம். ஒவ்வொருவரும் நூல்களைப் படிக்க வேண்டும். இன்றியமையாத் தேவைதான். உண்மைதான்!

சரி, எந்த நூல்களைப் படிக்க வேண்டும்! கண்டதைப் படிப்பவன் பண்டிதனாவான்என்பார்களே, அது உண்மையா? இல்லை. உண்மை இல்லை. தென்மொழிஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்,

அச்சாகு நூலெல்லாம் நூலாமோ? ஆங்கிருவர்

மெச்சியுரை செய்வதனால் மேலாமோ? – முச்சில்

புடைத்துலையில் இட்ட புதுமணலைச் சோறாய்ப்

படைத்துவிட லாமோ பசிக்கு. என்றும்,

 

எவர் பேச்சைக் கேட்பது எவர் நூலைப் படிப்பது?

எச்சரிக்கை யாயிரு தம்பி! குட்டிச்

சுவராக உனையாக்கும் நூலுண்டு; பேச்சுண்டு;

தெளிய வேண்டும் நீ கண்டு!

கைக்குக் கிடைப்பன எலாம் படிக்காதே!


காலத்தை வீணடிக் காதே! - தம்பி

பொய்க்கும் புரட்டுக்கும் பளபளப்புண்டு; நீ

புரியவேண்டும் அதைக்கண்டு! என்றும் பாடுவார்.

 

திருவள்ளுவப் பேராசான், ‘எனைத்தானும் நல்லவை கேட்கஎன்றும், ‘நல்லவை நாடி இனிய சொலின்என்றும் கூறுவார். சொல்லுவதிலும் கேட்பதிலும் நல்லவற்றை நாட வேண்டுமென்கிறார். இதே அளவுகோல்தான் படிப்பதற்கும்! நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். நல்ல நூல்கள் என்று தனியே உண்டா? தீய நூல்களும் இருக்கின்றனவா? ஆம் இருக்கின்றன.

ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமமென்று சொல்வார்கள். சரி, நல்லநூல்கள் யாவை? நல்ல புத்தகங்களின் கூறுகள், பண்புகள் என்னென்ன? பலவண்ணத்தில் பளபளப்பாக உயர்ந்த தாளில் கவர்ச்சியாக அச்சிட்டவை எல்லாம் நல்ல நூல்களா? இல்லை!

நல்லநூல்கள் அறிவை வளர்க்கும், அறிவை விரிவுபடுத்தும், மன அழுத்தத்தைக் குறைக்கும், சீராக்கும். மொழித்திறனை வளர்க்க உதவும். புதிய செய்திகளைத் தரும். தன்னம்பிக்கை ஊட்டும். அறிவியல் பார்வை தரும். நன்கு சிந்திக்க வைத்து, நல்ல உணர்வுகளைத் தூண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வலியுறுத்தும்; ஊக்கப்படுத்தும். நம்மை நல்ல நோக்கிற்கு மாற்றும், நல்ல ஒழுக்கத்தைக் கற்பிக்கும், ஆசானாக இருந்து நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டும், வாழ்க்கையை மேம்படுத்தும்.

இனி, நல்லவையல்லாத நூல்கள், தீயநூல்கள் யாவை? அவற்றின் கூறுகள், பண்புகள் என்னென்ன? மங்கலான தாள்களில் கரட்டு அட்டைகளில் பலவண்ணப் பளபளப்பின்றி காணப்படுபவையா? இல்லை!

தீயநூல்கள் உண்மையில்லாத செய்திகளைத் தருகின்றவை, தவறான செய்திகளைத் தருகின்றவை, வெறுப்பை உண்டாக்கும் தன்மை கொண்டவை. தவறான நடத்தையையும் தவறான ஒழுக்கத்தையும் தூண்டுபவை. தவறான செயல்களுக்கு


ஊக்குவிப்பவை, மனஅழுத்தத்தை உண்டாக்குகின்றவை. மூடநம்பிக்கையை வளர்ப்பவை. அறிவுக்கு ஒவ்வாத செய்திகளைத் தருபவை. அறிவியல் நோக்கற்றவை. குமுகத்தில், மக்களிடையே நல்லிணக்கத்தைக் குலைத்துத் தீங்குநேர வழிசெய்பவை. பிறப்பில் உயர்வுதாழ்வு கூறுபவை. இன்னும் பல்வேறு தீமைகளுக்கு அடித்தளமாக இருப்பவை தீயநூல்களே!

ஓர் எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம். அண்மைக் காலமாக வரும் அகத்தியர் பற்றிய செய்தி! அகத்தியர் பற்றிச் செய்தித்தாள்கள் நடுப்பக்கக் கட்டுரைகளும் சிறப்புச்செய்திகளும் வெளியிடுகின்றன. நூல்களும்கூட வந்திருக்கின்றன. அகத்தியருடைய பிறப்பு பற்றிக் கூறப்படும் கதை அருவருப்பானது. அத்துடன், இரிக்கு வேதகாலத்திலிருந்து கம்பஇராமாயண காலம்வரை பல்லாண்டுக் காலம் ஒருவர் வாழ்ந்திருக்க முடியுமா?

அகத்தியர் தொல்காப்பியருக்கும் ஆசிரியர் என்பதற்கும் அவர் தொல்காப்பியருக்கும் முன்னர்த் தமிழிலக்கணம் எழுதினார் என்று கூறுவதற்கும் தமிழ் இலக்கியம் படைத்தார் என்பதற்கும் எந்த அடிப்படைச் சான்றும் இல்லை. கற்பனையாகக் கூறப்படும் பழங்கதைகளைச் சான்றுகளாகக் கொள்ளமுடியுமா? இன்னும் சொன்னால் இக்கதைகள் மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. இச் செய்திகளால் எல்லாம் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அத்துடன், அவை அறிவை மழுங்கடிப்பவை. முன்னேற்றத்திற்கு எதிரானவை.

சரி, போகட்டும்! இனி, நல்ல நூல்ளைக் கண்டுபிடிப்பது எப்படி? உலகம் முழுவதும் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. இங்கு இந்தப் புத்தகக்காட்சியில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. நூல்ளைத் தேர்வு செய்வது எப்படி? நல்ல நூல்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

முதலில், உங்களுக்குப் பிடித்தமான துறை சார்ந்த நூல்கள் அல்லது நீங்கள் எதைப்பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றீர்களோ


அதை நோக்கிச் செல்லலாம். கழக(சங்க) இலக்கியம், சிறுகதை, பாடல், புதினம், பல்வகை அறிவியல், மொழியியல், தன்முன்னேற்றம் முதலியவற்றில் உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்வது முதன்மையாகும்.

நம்பகமான புகழ்பெற்ற நூலாசிரியர்களை அடிப்படையாகக் கொண்டு புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கலாம். புத்தகங்களை உண்மையாகப் படித்து மதிப்புரை எழுதியவர்களின் மதிப்பீட்டைப் படித்தும் தேர்ந்தெடுக்கலாம். புத்தகங்களைப் பற்றிய உண்மைத் திறனாய்வு வந்திருந்தால் அவற்றைக் கொண்டும் நல்ல நூல்களைக் கண்டுபிடிக்கலாம். அறிவார்ந்த நண்பர்கள், அன்பார்ந்த குடும்பத்தார் பரிந்துரைகளும் நல்லநூல்களை அறிய உதவி செய்யக்கூடும். நூலகங்களிலும் கடைகளிலும் நூல்களைப் புரட்டிப் பார்த்து உள்ளடக்கம், எழுத்துநடை முதலியவற்றை நோட்டமிட்டும் நல்ல நூல்களைத் தேர்ந்திடலாம்.

எனவே, அன்பார்ந்த அவையோரே, நல்லவற்றை நாடுவோம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்போம்! முன்னேறுவோம்! முன்னேற்றுவோம்! வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கின்றேன். நன்றி!

----------------------------------------------------------------------