வியாழன், 25 ஜூலை, 2019

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் – ஓர் அறிமுகம்.



விழுப்புரத்தில் 13-4-2019 அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியொன்றில் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் சிறப்புரை நிகழ்த்தினார். அந்நிகழ்ச்சியில் ஐயா இளங்குமரனாரைப் பற்றி யான் நிகழ்த்திய அறிமுக உரையை அன்பர்கள் பார்வைக்காகக் கீழே தந்திருக்கின்றேன்.

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் – ஓர் அறிமுகம்.
- தமிழநம்பி -

தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் ஐயாவுக்கு அறிமுகமா? என்ற ஐயம் பலருக்கும் எழக்கூடும். ஐயாவைத் தலைசிறந்த தமிழறிஞராகவும், சிறந்த நூலாசிரியராகவும், கருத்தாழமிக்க சொற்பொழிவாளராகவும் அறிந்திருக்கிறோம். என்றாலும், ஐயாவைப்பற்றிப் பல நூல்களிலும், கணிப்பொறித் தேடல்களிலும் திரட்டிய செய்திகளைச் சுருக்கமாக தெரிவிக்க விரும்பியே இவ்வறிமுகம். எனினும், இவ்வறிமுகம் ஐயாவின் சிறப்புகளையும் உயர்வுகளையும் முழுமையாகக் கூறுவதாகக் கொள்ளற்க.

தமிழ் என்ற மொழியை, அதனோடு இணைந்த வழக்கை, பண்பாட்டை,  வாழ்வு முறையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லும் சான்றாண்மையர் பலர் காலந்தோறும்  இருந்துவருகிறார்கள். அத்தகைய பெரியோரின் தொண்டினாலேயே, தமிழ் இன்றளவும் செழுமையாகத் திகழ்ந்து வருகிறது. அத்தகு பெரியோரில் தலைசிறந்தவராய்த் தம் 91-ஆம் அகவையிலும் ஒல்லும் வகையெல்லாம் ஒய்வின்றி அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உழைத்து வரும் அருந்தவப் பெரியாரைப் பற்றி அறிதல் மிகப் பயன்விளைப்பதாகும்

திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில்  1928-ஆம் ஆண்டில் செபுதம்பர் 15-இல்  பிறந்தார். தந்தையார் படிக்கராமர் என்னும் இராமர், தாய் வாழவந்தம்மையார். இயற்பெயர் கிருட்டினன். பின்னர்த் தம் பெயரை இளங்குமரன் எனத் தூயதமிழில் மாற்றிக்கொண்டார். பள்ளிப்பருவத்திலேயே, தம் 15-ஆம் அகவையிலேயே  சொற்பொழிவாற்றும்  திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்தார். தம் 18-ஆம் அகவையில் இருந்தே ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 

பின்னர்த் தனியே தமிழ்படித்துச் சென்னைப் பல்கலைக் கழகத்தின்  வழியாக 1951-ஆம் ஆண்டில், புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் சிறப்புப் பேராசிரியர் (guest lecturer) ஆகவும் பணிபுரிந்திருக்கிறார்.
ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல்வேறு நிலைகளில் பல பணிகளையும் ஈடிணையற்ற வகையில் செய்துவருகிறார்.

தமிழ்ப் பேரறிஞரான ஐயா அவர்கள் இலக்கணம் இலக்கியம் வரலாறு, பாடல்கள், ஆய்வுகள் முதலிய பல துறைகளில் பல்வேறு நிலைகளில் எழுதியுள்ள நூல்கள் ஏறத்தாழ 400 ஆகும். ஐயா எழுதியுள்ள திருக்குறள் ஆய்வுநூல்கள் மட்டுமே 89 ஆகும். “செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்” நூல் மட்டுமே நாலாயிரத்துத் தொண்ணூறு பக்கங்களைக் கொண்டதாகும்.  ஐயாவின் நூல்களை ஆய்வு செய்து இளமுனைவர், முனைவர் பட்டங்கள் பெற்றவர் பலராவர்.

பண்டைத் தமிழ் நூல்கள் பலவற்றைத் தமிழர் இழந்தது குறித்துப் பாவாணர் கவலையோடு எழுதுகையில், “பாழான மண்ணுக்கும் படையான சிதலுக்கும் படியாதார் நெருப்புக்கும் பதினெட்டாம் பெருக்கிற்கும் பற்பல பூச்சிக்கும் பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்தனை எத்தனையோ” என்று குறிப்பிடுவார். அவ்வாறு இழந்த தமிழ் நூலை மீட்டுத்தந்த, மீட்டுருவாக்கம் செய்தளித்த பெருமைக்குரிய வினையாண்மையாளர் நம் இளங்குமரனார் ஐயா ஆவார்..  

பண்டை நூல்களுக்கு, குறிப்பாக இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள், அவர்தம் உரையில் மேற்கோள் காட்டும் நிலையில், பல்வேறு நூற்களிலிருந்தும் பாக்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர்.  அவ்வாறு சிதறிக் கிடந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேற்கோள் பாக்களைக் கண்டு கழிபேருவகை எய்திய ஐயா இளங்குமரனார், அவற்றைத் திரட்டி அகரவரிசைப்படுத்தி ‘மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை’ என்னும் பெயருடன் தனிநூலாக அமைத்தார்.

அப் பாக்களை இயற்றிய தனித்தனி ஆசிரியர் பெயரால் அடைவு செய்து பார்த்தபோது, காக்கைபாடினியார் பாக்களை ஒருங்கமைத்துப் பார்த்ததன் பயனாக, ‘காக்கைபாடினியம்’ என்னும் இலக்கண நூலை மீட்டுருவாக்கம் செய்து தமிழுலகிற்கு அளித்தார்.                                                                                 
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள், ஐயா, சிறப்பிடம் பெற்றவராவார். இவர் எழுதிய நூல்களுள், இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, , தமிழர் வாழ்வியல் இலக்கணம்,  குண்டலகேசி, முதலிய நூற்றுக்கணக்கான நூல்களும், தொகுப்பு நூல்களில், தொல்காப்பியப் பதிப்பு, தமிழ்வளம், தேவநேயம், மறைமலையம், திருவிகவின் தமிழ்க்கொடை, செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம், திருக்குறள் வாழ்வியலுரை. உள்ளிட்ட பலவும் இவர்தம் தமிழ்ப்பணியை என்றும் நின்று விளக்கியுரைப்பனவாம்.

ஐயாவின் குண்டலகேசி என்னும் பாவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது. திருக்குறள் ‘கட்டுரைத் தொகுப்பு’ என்னும் ஐயாவின் நூலை 1963-ஆம் ஆண்டு பண்டித நேரு வெளியிட்டார்.  ‘சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு’ என்னும் ஐயாவின் நூலை 2003-ஆம் ஆண்டு அப்துல் கலாம்  வெளியிட்டார்.

ஐயா எழுதிய ‘பாரி’ என்னும் ஆய்வக்கட்டுரையைப் படித்த பாவாணர், “நுங்கள் “பாரி”யைப் பார்த்தேன்; முற்றும் சரிதான்;.என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப் போலவே சொற்பிறப்பு அமைப்பீர்கள்’ - எனப் பாராட்டியுள்ளார்.

ஐயாவின் உரையைக் கேட்டால், தமிழ் மூதாதையருள் உயிர்பெற்ற ஒருவர் வந்து பேசுவது போலிருக்கும் எனில் மிகையன்று. தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் ஐயா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகளும், பிற ஆய்வுச் சொற்பொழிவுகளும் வழங்கி வருகிறார்.

திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தி வருகிறார். ஐயா நடத்திவைத்த திருமணம், புதுமனைப் புகவு, மணிவிழா முதலியவை 4000-க்கும் மேற்பட்டவையாம்.

ஐயாவின் கையெழுத்து அடித்தல் திருத்தல் இல்லாமல் நிரல்பட இருக்கும். ஐயா, இரவு நேரங்களில், அறிவெழுச்சியில் கருத்துகள் தோன்றும்போது, இருட்டில் தம் தலைமாட்டில் உள்ள கரிக்கோலால் தாளில் எழுதும் பழக்கம் உடையவர். காலையில் வெளிச்சத்தில் எடுத்துப் பார்த்தால் அவை மிகச் செப்பமான எழுத்துக்களாக இருக்கும். அரியதோர் ஆற்றல்!. ஐயா, மிகச்சிறந்த நினைவாற்றல் உடையவருமாவார். 

ஐயாவைபப் பற்றி, "உலகப் பெருந்தமிழர், தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்: வாழ்வும் பணியும்" என்ற ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஒரு புல் (தன் வரலாறு)’ என்னும் தலைப்பில் தம் வரலாற்று நூலை இரண்டு தொகுதிகளாக 2017-ஆம் ஆண்டுவரையும் ஐயா எழுதியுள்ளார். 

திருச்சிக்கருகே அல்லூர் என்னும் ஊரில் தவச்சாலை நிறுவினார். அங்கு, ‘பாவாணர் நூலகம்’ என்ற பெயரில் 17000 நூல்களுடன் அவர் எழுதிய நூல்களையும் தொகுத்து வைத்த நூலகத்தை, ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் சிறப்பாக அமைத்துத் தமிழுலகுக்கு அறிவு ஈகையராய்த் திகழ்கின்றார்.

தவச்சாலையில், செவ்வாய்க்கிழமை தோறும் ஐயாவின் மாந்தநேயத் தொண்டு நடைபெற்று வந்ததையெல்லாம் விரித்துரைக்கின் பெருகும். முதுமை காரணமாக ஐயா இக்கால் மதுரையில் தம் மகனாருடன் இருந்துவருகிறார்.                                                                                     
.
ஐயாவுக்குப் பல்வேறு தமிழ் அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் தந்த பட்டங்கள், விருதுகள், பரிசுகள், தமிழக அரசு தந்தது உட்பட எண்ணிலடங்காதவை எனலாம்.

பொதுநோக்கில், பண்பாட்டுக்குக் காந்தியையும், பொருளியிலுக்குக் காரல் மார்க்சையும், சமூக முன்னேற்றத்துக்குப்  பெரியாரையும் பின்பற்றுவதாகக் கூறுவார்.

திரு. வி. க. வை வாழ்வியலுக்கும் மறைமலையடிகளை தனித்தமிழ் உணர்வுக்கும் இலக்குவானரைத் தமிழ்த் தொண்டுக்கும் பாவாணரைச் சொல்லலாய்வுக்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்வார்.

ஐயா இளங்குமரனார் ஆழ்ந்த புலமையர்; இலக்கணப் புலவ,ர்; இலக்கியச் செல்வர்; பெருஞ்செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட ஆழ்கடல் போலும் அமைதியர்; எந்த ஒன்றையும் நுணுகி நோக்குவதும் அகப்புறச் சான்றுகளால் அறுதியிடுவதும் இவர் புலமையின் இயல்புகள். ஐயா, தமிழ்மரபு காக்குநர்; நுழைபுலமிக்க ஆய்வாளர்; கற்றதை விரித்துரைக்க வல்ல சொல்லாற்றலர்; குறள் கூறும் செந்நெறியில் ஒழுகும் செம்மல். தமிழநூற் பரப்பின் எல்லையைக் கண்டவர்; இலக்கிய இலக்கணச் சிந்தனைகளில் மூழ்கி முத்தெடுப்பவர்.

தமிழ் மொழி, இன,.நாட்டுப் பற்றில் முதன்மையானவர். தமிழீழ விடுதலையில் மிகுந்த நம்பிக்கை உடையவர். உலக வரலாறுகள் கற்றவர். பாவாணர், திரு.வி.க. வாழ்வியலை மிக உயர்வாக மதிப்பவர். மூத்த அறிவுடையோருடன் கேண்மையுடையவர். தமிழ்மான உணர்வும் தன்மான உணர்வும் நிரம்பப் பெற்றவர். தமிழ் இலக்கியங்களைக் குறைத்து மதித்தவரையும், தமிழ்மொழியை இழித்தவரையும் முறையே தக்க சான்றுகளுடன் மறுக்கப் பொங்கியெழுந்து சீறிப்பாயும் மான மற வேங்கையெனத் திகழ்பவர்.

முதுமையின் தாக்கம் இருந்துவருகின்ற போதும், ஐயாவின் பணி இன்னும் பல்லாண்டுகள் தொடரும். அவர், நலத்துடன் வாழ உலகெங்கும் வாழும் தமிழர் அனைவரும் விழைகின்றனர்

தமிழ் தமிழர் நலன்கருதி வாழும் அறிவார்ந்த ஐயா அவர்களை, இற்றைத்  தமிழ் இளையோர், தம் வழிகாட்டியாகக் கொண்டு உழைப்பாராகில், தமிழ் தமிழர்  தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் வாழ்வும் வரலாற்றுப் பீடும் மேலுயர்த்தப்படும் என்பதில் ஐயமில்லை. அது, அங்காந்த விழைவாக இருக்கின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------------


செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

‘தமிழர்களும் தமிழும்’ – நேற்று, இன்று, நாளை!

(24-2-2019 மாலை நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தின் 16-ஆம் ஆண்டுவிழாப் பாவரங்கத்தில் தலைமை ஏற்றுப் பாடிய பா) 

‘தமிழர்களும் தமிழும்’ – நேற்று, இன்று, நாளை!

அரங்கிலுள பெரியோரே அறிவார்ந்த சான்றோரே, அன்பு பொங்கும்                                   இரங்கும்உளத் தாய்மாரே, இளையோரே, மாணவரே இவ்வரங்கில்      
அருந்திறத்தில் பாடவந்த ஆற்றல்சால் பாவலர்காள்! அந்த மிழ்பால்          
வரம்பில்லாப் பற்றுடைய வயங்குளத்தர் அனைவரையும் வணங்கு கின்றேன்!

விழுப்புரத்தில் தமிழ்ச்சங்கம் வீறுறவே தொடக்கிதொடர் வினையால் இன்றே 
செழிப்புறவே பதினாறாம் சீரார்ந்த ஆண்டுவிழா சிறப்பாய்க் காணும்         
பழிப்பிழிப்புப் பாராட்டாப் பாலதண்டா யுதனாரைப் பலவா றாகக்                 

கொழிப்புறவே போற்றிடுவோம்! குறைவின்றிப் புகழுரைகள் குவிப்போம் யாமே!

உலகிலுள மொழியறிஞர் உயர்தனிச்செம் மொழிதமிழென் றுரைப்ப தோடே
பலவகையும் சிறப்புயர்வுப் பாங்குகளை எடுத்துரைத்துப் பராவு கின்றார்!
நிலவுகின்ற மொழிகளிலே நிலைத்ததமிழ் முதன்மொழியாம் நிவப்பைச் சொல்லிப்
புலமையரும் உலகத்தின் புகழ்பெற்ற ஆய்வருமே போற்று கின்றார்!

முதன்மொழியாம் தமிழோடு முதல்நாக ரிகங்கண்ட மூத்த மக்கள்
முதன்முதலில் இலக்கியங்கள் முனைந்தாக்கித் தந்தாரே! முரணர் வீழ்த்தி
அதிஉயரப் பனிமலையின் அகன்றநெற்றிக் கயற்புலிவில் ஆழத் தீட்டி
அதிகமுமாய்க் கொள்ளாமல் குறைவாயும் கொடுக்காமல் அறத்தின் நின்றே

நல்வணிகம் தரைகடலில் நடத்திநலஞ் சேர்த்தார்கள்! நாட்டில் தேர்ந்த
நல்லபல நுண்கலைகள் நளிஅண்ட வானியலும் நாட்டி யம்சேர்
வல்லயிசைப் பண்ணோடும் வளயாழின் இசையெல்லாம் வளர்த்துத் துய்த்தார்!
வள்ளலெனக் கொடைகொடுத்தார், வாழ்வினிலே ஒளிமிகுந்தார், வரலா(று) உண்மை!   

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே ஓதும் கல்வி!
சென்றுதொழுங் கோயில்கள், செப்பிவழக் காடுமன்றம் சேர எங்கும்
இன்றுஎந்தத் துறையினிலும் இல்லைதமிழ் எனும்நிலையே இருத்தல் காண்க!

தாய்மொழியே படிக்காமல் தமிழ்நாட்டில் கற்குநிலை தணியாத் துன்பம்!
ஏய்த்தநிலை இங்கன்றி எங்குமிலை! ஆட்சிமொழி ஏட்டில் மட்டும்!
வாய்த்ததொரு நடுவரசோ வஞ்சகமாய் திணிக்குமிக வலிந்தே இந்தி!
தாய்த்தமிழை மாநிலத்துத் தமிழரசும் பேணாதே தாழ்ச்சி செய்யும்ச்

சப்பானில் கொரியாவில் சான்றபுகழ் இரசியாவில் சன்ன்றும் சோரா
ஒப்பரிய சீனத்தில் உயர்பிரான்சில் ஆட்சிசெய்வோர் உலகம் ஈனும்
செப்பமுறு அறிவியல்நூல் செறிநுட்ப நூலனைத்தும் சிறப்புச் சேர
தப்பின்றித் தம்மொழியில் தக்கவகை மொழிபெயர்த்துத் தருகின்றாரே!

இங்காள்வோர்க் கிவைபற்றி எள்முனையும் கவலையிலை! எவ்வெவ் வாறு
அங்கிகிங்குக் கொள்ளையிட லாகுமெனும் சிந்தனைக்கே அவர்க்கு நேரம்
பங்கிடவே போதவிலை! பார்த்துவரும் நிலையிதுவே! பழகி நாமும்
எங்கெதுவும் நடக்கட்டும் எனத்தமிழைப் புறக்கணித்தோம்! ஏற்றம் தோற்றோம்!

செய்தித்தாள் இதழ்களிலே செறிவற்ற நூல்களிலே சீர்மை அற்றே
மொய்த்தெழுதும் சொற்களிலே முறையற்ற மொழிக்கலப்பு முடுக்க மாக!
நெய்வண்ண மினுக்கலிலே நிமிர்த்தெழுதும் கடைப்பெயர்கள் நிலைமை என்ன?
துய்யதமிழ் தொலைத்துபிற தொடர்பற்ற மொழிகளிலே துலங்கல் அன்றோ?

ஊடகத்தில் தொலைக்காட்சி உரையாட்டில் நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாக்
கேடுவிளை நாடகத்தில் கிளர்ச்சியுறு கூத்தாட்டக் கீழ்மை தம்மில்
ஈடுசொல முடியாத இழிவான தமிழ்க்கொலைகள்! இன்னு மிங்கே
பாடாகப் படுத்துதிரை பழியெனவே தமிழழிக்கும்! பார்க்கின் றோமே!

பண்பாடு நல்லொழுங்கு பார்போற்றும் நல்லறங்கள் பலவும் சொன்ன
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் மறையச் செய்யும்
கண்கெடுக்கும் இருதிரைகள் காட்டுகின்ற காட்சியெலாம் கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை! மட்டின்றி நடக்கிறதே மயக்கம் ஊட்டி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவேஅணுத்தீமை கொடுவுலைகள் அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்தில்இந்தி சமற்கிருதம் ஊன்றற் கென்றே
தேற்றமுறச் செயற்படுவார்தீந்தமிழை அழிப்பதற்கும் திட்டம் உண்டே!

இனிவருநாள் தமிழிளையோர் எழுவாரோ? இல்லைநம்மோர்க்(கு) இயல்பாய்ப் போன குனிந்துசெலும் உணர்வாலே குட்டுநிலை தொடர்ந்திடுமோ? கொடுமை மேலும் தணியாதே மிகுந்திடுமோ? தாய்த்தமிழும் வீழ்ந்திடுமோ தகைமை குன்றி!      பிணிநீங்கி நலம்வருமோ? பெருவாழ்வு வாய்த்திடுமோ? பீழை போமோ?

எந்தநிலை நேருமென எல்லோரும் செயலற்று இருத்தல் நன்றோ? செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றெழவேண்டும் செப்ப மாக!
அந்நல்நாள் விரைந்திடுக! அந்தமிழின் அரசமைக! ஆக்கம் சேர்க
!
______________________________________________________________________________

-      எனச்சொல்லி தலைவரின்பா இன்னிறைவு செய்கின்றேன்!
இனிபாவ லர்தம்மின் எழிற்பாக்கள் தொடர்ந்திடுமே!
================================================================================
ஆற்றாமை யால்நம்மின் அவலநிலை பாடிநின்றேன் அவையி ருக்க
நேற்றைக்கு நாமும்நம் நற்றமிழும் இருந்தநிலை நினைவைப் பாட,
மாற்றமாய் இன்றுள்ள மாறாக்கீழ் நிலைவிளக்க, மற்றும் நாளை
ஏற்றமதூஉம் வந்திடுமா எனப்பாடப் பாவலர்கள் எழுந்துள்ளாரே!
=========================================================================================

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அந்தநாள் விரைந்திடுக!

(திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் .கதிர்வேலு தம்தமிழ்ச்சோலைஎன்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது எழுதித்தந்த பாடல் இது):

அந்தநாள் விரைந்திடுக!

உலகமுதன் மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர் 
வுரைக்க்க் கண்டோம்!
உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென் 
றுறுதி செய்வர்!
உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம் 
ஓம்பும் பண்பும்
உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென 
உரைக்கும் நூல்கள்!

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள் 
பெற்ற ஆட்சி 
திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே
தீமை எல்லாம்
பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப் 
பேணாப் போக்கில்
கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம் 
கரைய விட்டே!

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக 
இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே 
ஓதும் வாயப்பும்!
சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம் 
சேர எல்லாத் 
துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே, 
தொலைந்த தந்தோ!

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள் 
பலவும் சொன்ன 
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் 
மறையச் செய்தே 
கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம் 
கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே 
மயக்கத் தாழ்த்தி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள் 
அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே 
ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம் 
வளர்த்தற் கென்றே 
தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும் 
திட்டம் உண்டே!

எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே 
இங்கே வாழ
செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் 
சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக 
செப்ப மாக!
அந்ல்நாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக! 
ஆக்கம் சேர்க!
--------------------------------------------------------------------------------