திங்கள், 14 மார்ச், 2016

வடமொழியாளர் தமிழுக்கும் தமிழர்க்கும் இழைத்த கெடும்புகள்!                                                                                                 - உரைவேந்தர் ஒளவை.துரைசாமியார் விளக்குகிறார்!


     வடமொழியாளர், தமிழர் ஊர்ப்பெயர், மக்கட்பெயரை வடமொழியில் மொழிபெயர்த்து அவர்களுடையதாகத் தோன்றுமாறு செய்து கொள்ளும் தீச்செயலையே  பல நூற்றாண்டுகளாகச்செய்து வந்தமையின், பிற்காலத்தே வாழ்வில் அமைதி தோன்றியதும் மக்கள் தங்கள் நூல்களை எழுதத் தொடங்கியபோது வடமொழியிலிருந்து பெறவேண்டிய நிலைமை தோன்றியது. அப்போது தமிழ்நாட்டுத் தமிழர் ஊர்க்குரிய வரலாற்றை வேறு எவரோ எந்த நாட்டிலோ கூறியதாக வரலாறுகள் வேறுபடலாயின.
    
            இசையும், கூத்தும், சமயக்கருத்தும் பிறவும் பழம்பெயர் மறந்து போக, வடமொழிப் பெயரால் வெளிவரலாயின. பின் வந்தோர், உண்மை உணரமாட்டாமல் எல்லாம் வடமொழியிலே உள்ளன; தமிழ்மொழியே வடமொழியிலிருந்து தோன்றியதுதான் என்று கூறலுற்றனர்.
    
            வேள்வி செயதோர்க்கும் செய்வித்தோர்க்கும் பண்டை நாளில் வேந்தரும் செல்வரும் காமக்காணி என்று சிறப்புப் பெயர் நல்குவது வழக்கம். இடைக்கால கல்வெட்டுக்கள் மிகப்பல இதனைக் கூறுகின்றன. இவ்வாறு சிறப்புப்பெயர் பெற்ற சான்றோர் ஒருவர் சங்க இலக்கியத்தில் வருகிறார். அவர் பெயரை ஏட்டில் எழுதினோர் காமக்கணி என்று எழுதிவிட்டனர்.
            அதைக் கண்ட இக்கால அறிஞர், அது காமாட்சி என்பதன் மொழிபெயர்ப்பு என்று எழுதி யொழிந்தார். காஞ்சிபுரத்திலுள்ள காமக்கோட்டத்துக் காமாட்சிக்கு அப்பெயர் மிகவும் பிற்காலத்தே உண்டானது என்பது வரலாறு கூறும் உண்மை.
    
            இவ்வண்ணமே, கோயில்களில் இறைவன்முன் சொல்லப்படும் அருச்சனைகள் பல திருமுறைகளிலும் பிரபந்தங்களிலும் காணப்படும் சிறப்புப் பெயர்களின் மொழி பெயர்ப்பாகவே உள்ளன.
    
            இதனால் விளைந்த பயன் என்னை யெனில், சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கப பகுதியிலும் இருந்து பள்ளி மாணவர் பாட நூல்களுக்கு உரை எழுதினோரும் பிறரும் பின்விளைவு கருதாமல், தமிழில் வழங்கும் மணி, நீர், முத்து, சேரி, மீன், பழம் முதலிய யாவும் வடமொழித் திரிபுகள் என்றே எழுதினார்கள்.
    
            உலகில் அறவாழ்விற் சிறந்த சான்றோர்களைத் தமிழர் கடவுளர் என்பர். அப்பெயரைத் தெய்வமாகவும் ரிசிகளாகவும் மொழிபெயர்த்து அவர்கள் வரலாற்றுள் பலவற்றைத் தெயவச் செயல்களாக உரைக்கத்தொடங்கினர்.
    
            சாதி சமுதாய வேற்றுமைகள் நிலைபெறுதற் கேற்ப்ப் புராணங்கள்  பல வடமொழி வாயிலாகத் தோன்றின. தமிழ் மொழியிற் காணப்படும் பொருளுரைகளும் யாவும் வட நூல்களிலிருந்தே தோன்றின என்னும் கருத்து நாட்டவர் தெரியவும் மேனாட்டவரும் பிறரும் தமிழர்க்கெனத் தனித்த அறிவோ, பண்பாடோ, சமய ஒழுக்கமோ இல்லையென உணரவும் உரைத்தனர்; நூல்வடிவில் எழுதியும் வந்தனர்.
    
            ஆங்கில அறிவும் அதன் வாயிலாக வடநூல் கருத்துக்களும் வரலாற்றுண்மைகளும் தமிழ் மக்கன்குத் தெரியவந்தன. அதனால் தமிழர்கட்கு வடமொழிபால் வெறுப்பு உண்டாயிற்று.இவ்வெறுப்பு வளர்தற்கேற்ப, மேனாட்டவரும் தமிழரல்லாத பிறரும் இரு மொழியும் பயின்று பெற்ற அறிவால், வடமொழியில் உள்ள வரலாறு பலவும் புளுகுக் குப்பைகள் (‘A farrago of  legendary nonsense’ – W.Logan’s Malabar) என்று திட்டவட்டமாகக் கூறுவாராயினர்.
     இதற்கிடையே நல்லகாலமாக மொழிநூல் நெறி (PHILOLOGY) பொய்யான கருத்துக்களை மறுத்துவிட்டது உண்மை ஒளிவிட்டுத் திகழ்வதாயிற்று.                                               


- ‘தமிழ்ப்பொழில்’ 32ஆம் துணர், மார்ச்சு 1957.
நன்றி! உரைவேந்தர் தமிழ்த்தொகை 23, பக்கம் 172, 173. 
-------------------------------------------------------
ஐரோப்பியரும் வடமொழியாளரும்!
-         உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்!

     மேலைநாட்டு ஐரோப்பியரிடம் காணப்படாத ஒரு தீய பழக்கம் வடமொழியாளரிடம் இருந்தது. ஐரோப்பியர் தாம் கேட்கும் செய்தியும் கற்கும் பொருளும் யாவரிடம் கிடைத் திருக்கின்றனவோ அவரையும் அவர்களின் நூலையும் விடாமற் குறிப்பது அவர்கள் வழக்கம்.
    
            அவர்களுடைய நூல்களைக் காண்போமாயின், இது இன்னார் கூறியது; இதைக்கூறியவர் இன்ன நூலிற் கூறியுள்ளார் என்பதைத் தவறாமற் குறிப்பர். பின்பு எந்தப் பொருளேனும் புதிதாகக் காணப்படின், அப்பொருள் காணப்படும் இடத்தே அதற்கு எப்பெயர் வழங்குகிறதோ அதனைத் தங்கள் மொழியொலிக் கேற்பத் திரித்துக்கொள்வர; ஊர்ப்பெயர், மக்கட்பெயர் ஆகியவற்றையும் அவ்வாறே திரித்துக்கொள்வது அவர்கள் இயல்பு.
     வடமொழியாளரோ எனில், அப்பெயரை வடமொழியில் மொழிபெயர்த்து அவர்களுடையதாகத் தோன்றுமாறு செய்து கொள்வர்.
     விரிஞ்சிபுரத்திலுள்ள இறைவனுக்குப் பழம் பெயர் வழித்துணை நாயனார் என்பது. விருத்தாசலத்துக்குப் பழமையான பெயர் முதுகுன்றம் என்பது. வழி என்பதை மார்க்கமென்றும் துணை என்பதைச் சகாயம் என்றும் மொழிபெயர்த்து மார்க்க சகாயர் என்றும், முதுமை விருத்தம், குன்றம் அசலம் ஆகவே முதுகுன்றம் விருத்தாசலமென்றும், வெண்காடன் என்பதைச் சுவேதாரணியன் என்றும் கூறினர்.
     இவ்வாறே, விரிஞ்சிபுரத்திற்கு அருகில் ஓடும் பாலாற்றை க்ஷீரநதி என்றும், அழகர் மலையிலுள்ள சிலம்பாற்றை நூபுர கங்கை என்றும், அறம் வளர்த்தாள், பெரியநாயகி என்ற பெயர்களைத் தர்மசம்வர்த்தினி, பிரகந்நாயகி என்றும் மொழி பெயர்த்துக் கொண்டனர். இவ்வாறே சைவத் திருமுறைகளிலும் நாலாயிரப் பிரபந்தங்களிலும் காணப்படும் பல பெயர்கள் வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன.
     வழித்துணை நாயனாரை ஐவே கைடு (Highway guide) என்றோ முதுகுன்றை குட் ஓல்டு இல்லக் (Good old hillock) என்றோ ஆங்கிலேயரோ வேறு ஐரோப்பியரோ மாற்றியதோ, மாற்றுவதோ கிடையாது.

-         தமிழ்ப்பொழில் 32ஆம் துணர், மார்ச்சு 1957.
நன்றி! உரைவேந்தர் தமிழ்த்தொகை 23, பக்கம் 172, 173. 

-------------------------------------------------------  

வியாழன், 10 மார்ச், 2016

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!
(10-3-1933)


இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்!                                                                     

தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி, ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்!                                                                                    

மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்!           

செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்!                                                      

ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்!                                                                  

சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்!                                                                             

ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்!                                                                             

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்!                                                                                                         

சிறந்த இலக்கியப் புலமையாளர்!  அரிய மொழிபெயர்ப்பாளர்!

நல்ல ஓவியர்!    திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்!                                                      

தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி!                                                                                                                    

மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்!                                                                                                 

தமிழ்மொழி,  தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்!                                                                                          

சலுகை பெறவும் சாதிகூடாதென வாழ்ந்த சாதிமறுப்பாளர்!

சாதிமறுத்து மணம்புரிந்து கொண்டவர்!  தம் மக்களுக்கும் அவ்வாறே மணம் செய்வித்தவர்!

- இவ்வாறு பல்வேறு சிற்ப்புக்களுக்கு உரியவரே துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

அவர் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அணுக்கத் தொண்டனாக இருந்த காலத்தை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்!

இன்றைக்கும் தேவைப்படும் பாவலரேறு ஐயாவின் பா முழக்கம்:

ஆண்டுநூ றானாலும் அன்னைத் தமிழ்நாடு
வேண்டும் விடுதலை; எண்ணம் விலக்கோம் யாம்;
பூண்டோம் உறுதி! புறப்பட்டோம்! என்றேநீ
மூண்ட இடியாய் முழங்காய் தமிழ்மகனே!

தமிழ்மண் விடுதலை பெறும்வரை அம்முழக்கம் ஓயாது!


--------------------------------------------------------------  

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழர்

தமிழர்!                               

உலகமுதன் மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர் 
வுரைக்க்க் கண்டோம்!
உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென் 
றுறுதி செய்யும்!
உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம் 
ஓம்பும் பண்பும்
உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென 
உரைக்கும் நூல்கள்!

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள் 
பெற்ற ஆட்சி 
திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே 
தீமை எல்லாம்
பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப் 
பேணாப் போக்கில்
கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம் 
கரைய விட்டே!

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக 
இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே 
ஓதும் வாயப்பும்!
சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம் 
சேர எல்லாத் 
துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே, 
தொலைந்த தந்தோ!

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள் 
பலவும் சொன்ன 
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் 
மறையச் செய்தே 
கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம் 
கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே 
மயக்கத் தாழ்த்தி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள் 
அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே 
ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம் 
வளர்த்தற் கென்றே 
தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும் 
திட்டம் உண்டே!

எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே 
இங்கே வாழ
செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் 
சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக 
செப்ப மாக!
அந்தநாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக! 
ஆக்கம் சேர்க!
                                                                                                              (திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் க.கதிர்வேலு தம் தமிழ்ச்சோலை’ என்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது, அவர் தந்த தலைப்பில் எழுதித்தந்த பாடல் இது)                                                                                                                              
----------------------------------------------------------------------------------------------------

புதன், 2 டிசம்பர், 2015

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!   

     தமழ்நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் இக்கால் இயல்பிகந்த நிலையில் மக்கள் பெருந்துன்பத்திற் காளாகியுள்ளனர். இந்நிலைக்குக் காரணமானவர்கள் யார் யார்? எவரெவருக்கு எவ்வளவு பங்கு? என்ற ஆய்வுகளும் கருத்தாடல்களும் இப்பொழுது, இந்த நேரத்தில் எண்ணவோ பேசவோ கூடாதவை மட்டுமல்ல, இந்த நேர மீட்சிப் பணிக்குக் கேடு விளைவிப்பவை; நேரத்தை வீண்டிப்பவை.
    
     இக்கால் உடனடித் தேவை மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவதும் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து ஆறுதல் அளிப்பதுமே ஆகும். இந்த நோக்கத்திலேயே அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். இவையே இக்கால் இன்றியமையாது தேவைப்படுவனவாம்..
    
     இவற்றையே கருத்தில் கொண்டு எவ்வகை வேற்றுமையும் கருதாது ஒவ்வொருவரும் இயங்க வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறேன். எவ்வெவ் வகையில் உதவ முடியுமோ அவ்வவ் வகையில் அவரவரும் இடர்ப்பாட்டி லுள்ளோருக்கு உதவுதல் இந்த நேரத் தேவையாக உள்ளது.
    
     மீட்புப் பணியிலுள்ளோரைப் பாராட்டுவோம்; மக்களுக்கு உதவுவோர்க்கு நன்றி சொல்வோம். பிறவனைத்தும் பிறகு பேசலாம்!
     செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
     செய்யாமை யானும் கெடும்.

-----------------------------------------------------------------------  

ஞாயிறு, 29 நவம்பர், 2015

பெண்!...

பெண்!...
(மும்மொழி வல்லார் உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்)

க. மனு நூலில்!
      “ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும், பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதி பணிபுரிய வேண்டும் என்றும்,
     மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்ப வாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும்,
     மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன், சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி, வேட்டை நாய்கள் கடித்துத் துன்புறுத்துமாறு அவளை அந்நாய்களுக்கு இரையாக்க வேண்டுமென்றும்,
     தன்கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்றவனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப்பாளாயின், அவள் மூன்று திங்களுக்கு உயரிய ஆடை அணிகலனின்றி வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது.

உ. யாகஞவல்கியும், அத்திரியும், வாசிட்ட நூலும், ஆங்கீரசரும் கூறுவதென்ன?
      கணவன் சொல்வழி யடங்கி யொடுங்கி ஒழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம்என யாகஞவல்கியர் இயம்புகின்றார்.
     கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அனிகளையோ உடல் முழுதுமோ நீராட்டி அந்நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ்சிறப்புப் பெறுவாள்எனவும் அத்திரி என்பார் அறிவிக்கின்றார்.
.
     மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லை யாகலான், கணவனுக்கு அடங்கா தொழுகுபவள் இறந்தால் இன்ப உலகு எய்தாள்; எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும்என்று வாசிட்ட நூல் வற்புறுத்துகின்றது.
     கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உணவு தரப் பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள்என ஆங்கீரசர் கடிகின்றார்.

{நன்றி! செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 160, 161.}

பெண்!...(தொடர்ச்சி)
(உரைவேந்தர் ஒளவை துரைசாமியார் விளக்கம்)
பெண்மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர், ”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலன” என்று தெரிவிக்கின்றார்.
கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவுஒழுக்கம் கற்புஎன்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், ‘உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை’ என்றும்,வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர் அவற்றை ‘எழுதாக் கற்பு’ என்றும் குறிப்பதே இப் பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும்.
மகளிர்க்கு கல்வியறிவின் திணிநிலை ஒழுக்கத்தைக் கற்பென வாளா ஓதாமல், ‘செயிர்தீர் காட்சிக் கற்பு’ என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளுகின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர்.
மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற் றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின், ஆணுக்கு உரிமைதந்து பெண் அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது.
ஆண்மக்களைப் போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்த போது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின்,
“விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இன்செறிந் திருத்தல்
அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்”
என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது.; இருவரும் கூடியே அதனைச்செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது, இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கின்ர். அவளது துணையின் சிறப்புணர்ந்து தேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர்.
{நன்றி! ‘செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 163, 164.}
-----------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 6 நவம்பர், 2015

அரணமுறுவலார் !


அரணமுறுவல்!

         இன்று (6.11.2015) காலை அன்பிற்கினிய முனைவர் தோழர் ந.அரணமுறுவல் மீளாத்துயில் ஆழ்ந்த செய்தியை ஐயா செந்தலை கவுதமனார் முகநூல் குறிப்பின் வழி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்  பெரு வருத்தத்திற் கிடையே பழைய நினைவுகள் நிழலாடின.

           1960ஆம் ஆண்டுகளின் இறுதியில், 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தேவநேயச்சித்திரன், பொதியவெற்பன், கு.அண்டிரன், அரணமுறுவல் ஆகியோர் அடங்கிய  அக்காலத் தென்மொழி அன்பர் குழு தமிழம் என்னும் தலைப்பில் தனி இதழ் தொடங்க முயன்றதும் அம்முயற்சி செயலாகும் முன்னரே ஐயா செம்பியன் பன்னீர்ச்செலவம் தமிழம் இதழைத் தொடங்கி நடத்தியதும் நினைவுக்கு வருகின்றது.

        1974ஆம் ஆண்டளவில் நான் திருக்கோவலூரில் பணியில் இருந்தபோது, சந்தைப்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டிற்கு வந்து பல செய்திகளைப் பேசிக்கொண்டிருந்ததும், போகும்போது நான் வைத்திருந்த நூல்கள் பாவாணரின் வடமொழி வரலாறு, தமிழர் மதம் மற்றும் இரண்டு நூல்களை வாங்கிச் சென்றதும் நினைவில் உள்ளன.

         கடலூரில், தென்மொழி அலுவலக/அக-த்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா நடத்தி வைத்த அரணமுறுவலின் திருமண நிகழ்வும் அதையொட்டி நடந்த சிறு விருந்தும் மறக்க முடியாதவை.

         பின்னர், அவர் சென்னை சென்றதும் தொடர்ந்து படித்ததும் முனைவரானதும் பல்வேறு தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டதும் அவரை அவ்வப்போது பார்க்கும்போது அவரே கூறவும் அவருடைய நெருங்கிய உறவினர் கு.அண்டிரன் ஐயா வழியும் அறிந்த செய்திகள்.

         அவர் தமிழியக்கம் இதழ் தொடங்கி நடத்திய போது, அவருக்கு இதழ் தொடர்பாக எழுதிய மடலும், அவர் உலகத் தமிழ்க் கழகத்தை மீண்டும் செயற்பட வைக்க எடுத்த பெருமுயற்சியும், அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டதும் முகன்மையாகக் குறிப்பிடவேண்டிய செய்திகளாகும்.

                    “முதன்மொழி இதழைச் சிறப்பாகக் கொண்டுவந்த வினைப்பாடும் பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை எதிர்த்து வீழ்த்த நடந்த பெரும் பணியில் உ.த.க. சார்பில் அவர் பங்கு குறிப்பிடத் தக்கதாகும். குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை காப்புக்காக அவரும் மா.செ.தமிழ்மணியும் பிறரும் எடுத்த முயற்சிகள நினைவுக்கு வருகின்றன.

         கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நிலைகளில் தமிழ், தமிழர் நலன் காக்கும் பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவர் மறைவை, இன்று ஈடு செய்ய இயலாப் பேரிழப்பாகவே உணர்கின்றேன். அந்தத் தென்மொழி அன்பர்க்கு, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாசறையில் உருவெடுத்த தமிழ்ப்படை மறவருக்கு, அஞ்சா நெஞ்சுடன் களப்பணியாற்றிய வல்லவர்க்கு வீரவணக்கம் செலுத்துவோம்!
  
வீரவணக்கம்! வீரவணக்கம்! அரணமுறுவலுக்கு வீரவணக்கம்!
------------------------------------------------------------------------

செவ்வாய், 3 நவம்பர், 2015

குறள். 1107

   தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. குறள். 1107

      இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல்,  தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு,  தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத்,  தாமும் விருந்தினருமாக,  நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்.      

      ஈண்டுத் திருவள்ளுவப் பெருந்தகை வேறுசில இடங்களில் கூறியிருக்கும் கீழ்க்காணும் கருத்துக்களும் ஒப்புநோக்கத்தக்கன:                

முயற்சிசெய்து ஈட்டியபொருள் முழுவதும் தகுதியுடையார்க்கு உதவி செய்வதற்கே ஆகும்  (கு.212)
முறையான முயற்சியால் கிடைத்தது தெளிந்த நீர் போன்ற கூழே ஆயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறில்லை – (கு.1065)       எப்போதும் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீயநோய் அணுகாது. – (கு.227)                                       கிடைத்த உணவை இயன்றவரைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டுப் பலவகை உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையான அறமாகும். – (கு.322) 
           
      இவற்றுடன், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்னும் புறநானூற்று வரியும் (பு.17),  மணிமேகலை வரியும் (மணி.1255) ஒப்புநோக்கத் தக்கனவாம். மாந்தர் வாழ்வில் மிகஉயர்ந்த இனிமையை, இன்பநிலையைப் பகுத்துண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட,  மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் எனக் குறள் கூறுகிறது.
இக்குறளைப் படித்தறியும்போது, ஈடிணையற்ற நாகரிகம் பண்பாடு கொண்ட சான்றாண்மையராக முன்னோர் இருந்திருக்கின்றனர் என்ற எண்ணத்தால் நெஞ்சம் பெருமையால் இருமாந்து பூரிக்கும். ஆனால், அதேபோழ்தில், இன்றுள்ள தமிழரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆற்றொணாக் கவலைகள் நெஞ்சை அழுத்தும். இவை அடிக்கடி நிகழும்.


பொருத்தமான எதுகையும், முதலடியில் பொழிப்பு மோனையும் இரண்டாமடியில் இணை மோனையும் அமைந்து இனிய ஒழுகிசைச் செப்பலோசையுடன் குறள் படிக்க இன்பம் தருகிறது.