செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

இளங்கோ அடிகள்

    
(தி.ஆ. 2044 மடங்கல் (ஆவணி) 2, (18-8-2013) அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்க விழாப் பாட்டரங்கத்தில் இளங்கோ அடிகள் என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா)

    இளங்கோ அடிகள்!

            - தமிழநம்பி -


பாட்டரங்கின் நற்றலைவ! பைந்தமிழ் முன்மரபில்
தீட்டும் விரைவியப் பாவல! என்றென்றும்
நெஞ்சில் நிறைந்தார் நிலைப்புகழை  இவ்வரங்கில்
எஞ்சலின்றிக் கூற எழுந்துள்ள பாவலர்காள்!

ஓரேர் உழவர், உழன்று விழாவெடுக்கும்
தீராத் தமிழ்ப்பசியர் தேர்ந்த மருத்துவர்
பாவலர் நல்லெளிமை பாலதண் டாயுதரே!
ஆவலுடன் வந்தே அமைந்திருந்து கேட்கின்ற
அன்புசால் தாய்க்குலமே! ஆன்ற பெரியோரே!
இன்தமிழ்ப் பற்றார்ந்த எந்தமிழ நல்லிளைஞீர்!
எல்லார்க்கும் நெஞ்சார்ந்த என்வணக்கம் கூறுகிறேன்!

நல்ல தலைப்பொன்றை நான்பாடத் தந்தார்!
நெஞ்சில் நிறைந்த இளங்கோ அடிகள்!ஆம்!
எஞ்சலின்றி எல்லாத் தமிழருளம் ஈர்க்கும்
புரட்சி நெருப்பினில் பூத்த துறவி!
மிரட்சி கொளச்செய்யும் மேன்மைமிகு பேரறிஞர்!

சேரப் பெருமன்னன் சேரலா தன்தனக்கும்
வீரமணக் கிள்ளிமகள் வீரிநற்சோ ணைக்கும்
இளங்கோ பிறந்தார் இரண்டாம் மகனாய்!
இலங்குசெங் குட்டுவன்தான் இவ்விணையர் மூத்தமகன்!

சேர னமர்ந்திருந்தான் சேர்ந்தேதன் மைந்தருடன்
ஆரழகு மண்டபத்தே; ஆங்கோர் நிமித்திகன் 
வந்துதன் வாயவிழ்த்தான் வல்லவன் போலெண்ணி!
இந்தஇரு மைந்தர் இருக்கும் உருவில்
விளங்கும் இலக்கணம் விள்ளுவதைச் சொல்வேன்!             
இளங்கோ அரசாள்வார் எல்லாரும் போற்றிடவே!
என்றுறுதி யாக இறுத்தசொல் பொய்யாக்க
அன்றப் பொழுதே அரசுடையைத் தான்நீக்கி
என்றும் அரியணை ஏறேன்!செங் குட்டுவனே
நன்றர சாண்டிடுவார் என்றுரைத்துத் தேர்ந்த
துறவுடையைத் தானுடுத்தித் தூய்துறவி ஆனார்!
நிமித்திகத்தை வீழ்த்தியதை நேர்வென்றார் அன்றே!
தமியனாய் ஓர்புரட்சி தான்செய்தார் அந்நாள்!

அருந்தமிழ் நூலெழுதும் ஆற்றலர்தம் நூலில்
இருந்துதமைத் தாழ்த்தி எளியேன், கடையேன்,
அறியேன், சிறியேன் அனைய அவையடக்கம்
அறிவிப்பார்! ஆனால் அடிகளோ செம்மாப்புக்             
காட்டும் பெருமிதத்தில் கண்விரிய ஆர்ப்பரிப்பார்!
நாட்டுதும் யாமொரு பாட்டுடைச் செய்யுள்!
தகைமை விளக்கும் வகையில் முழக்கம்!
இதுவோர் புதுமைதாம்! இன்னுமொன் றாகப்
பொதுப்போக் குடைத்துப் புதுவழி காட்டினார்!

பாவலர்கள் எல்லாரும் பைந்தமிழில் ஆக்கியநூல் 
ஏவல்போல் மன்னர் கடவுளையே போற்றும்!   
வணிகக் குடியொன்றில் வந்தவோர் பெண்ணைத்
துணிவாய்த் தலைவியெனத் தூக்கி நிறுத்தியந்தக்
கற்புக் கடம்பூண்ட கண்ணகி என்பவள்
உற்றவை கூறும் ஒருவர லாற்றைச்
சிறிதே புனைவுகள் சேர எழுதிச்
செறிதமிழ்ப் பாவியமாய்ச் செப்பமாய்ச் செய்தளித்தார்!

கண்ணகியாள் வாழ்வைச் சிலப்பதி காரத்தில்
தெண்ணீர்த் தெளிவில் திகழ்அணிகள் சேர
பொருள்செறி செய்தி பொதுளப் படைத்தார்
அருமை பெருமை அனைத்தும் விளக்கி!

அடிகள் தமையும் அவராக்கித் தந்த
முடிவில் சிறப்பமைந்த முத்தமிழ்ச் செய்யுள்
சிலப்பதி காரத்தின் செம்மாப் பினையும்
உலகிற்குப் பாரதி ஓங்க உரைத்தார்!

பாரதி சொல்வார், புலவரிலே கம்பனைப்போல்
ஆரறி வுக்குறள் வள்ளுவ  ரைப்போல்
வளப்பாப் புலவர் இளங்கோ தமைப்போல்
விளங்குல கெங்கும் பிறந்திலை என்றுமீ
துண்மையாம்! வெற்றுப் புகழ்ச்சி யிலையென்பார்!
இன்னுமவர், நெஞ்சத்தை அள்ளும் சிலப்பதி
காரமென் றோர்மணி ஆரம் படைத்ததிப்
பாரகத் தேதமிழ் நாடென்று பாடினார்!

இத்தனைப் போற்றலில் முத்திரை பெற்றநூல்
முத்தமிழ் வேந்தரின் மொத்த உயர்வெலாம்
நன்னடுவு மாறாத நா,மனத் தூய்மையில்
இன்னருஞ் செய்தியாய் எல்லார்க்கும் சொல்லிடும்!
எல்லா மதத்தையும் ஒப்ப மதித்திடும்!
அல்லவை நீக்கி அருள அடிதொழும்
அவ்வக் கடவுள் அடியாரைப் போலவே
செவ்வேள் அருகன் சிவன்மா லுடனினும்
கொற்றவை யன்னமற் றெல்லாரும் போற்றிடும்!      
                 
காவிரி வைகை கவின்பேரி யாற்றுடன்
தாவற மூன்று தலைநகர் பூம்புகார்
வஞ்சி மதுரை யுடனுறை யூரையும்
எஞ்சலில் லாதொப்ப ஏற்றியே போற்றிடும்! 

பட்டினப் பாக்கம் மருவூர்ப்பாக் கம்மென
முட்டிலாச் சீர்சேர் இரட்டை நகரெனும்
பூம்புகார் பற்றிப் புகன்றவை யந்நகர்
பத்தொன்ப தாம்நூற்றாண் டில்ஆங் கிலரின்
இலண்டன் நகரம் இருந்ததின் மேலாய்
இரண்டாம்நூற் றாண்டில் இருந்ததாம் பூம்புகார்!
இக்கால ஆய்வர் இயம்ப வியக்கிறோம்!
அக்கால் தமிழர் அருமுயர்(வு) எண்ணி!

வணிகவளம் கட்டடங்கள் வாடாத் தொழில்கள்
அணிசெய் நகரமைப்பு ஐவகை மன்றம்
அறம்காத்தல்! அல்லும் பகலுமங் காடி!
பிறநாட்டார் உண்டுறையும் பேரிடம்! நுண்கலைகள்
பட்டுடைகள் ஆடைவகை பிட்டுதொட் டுண்டிகள்
தட்டிசெய் நன்னகை தக்க எலிமயிரில்
தந்திடும் ஆடை தகுபருத்தி நெய்தவையும் 
சந்தனம் போலுமணம் தட்டின்றி வீசுநவும்
யாழ்குழலும் இன்னிசைக்கும் எல்லாக் கருவிகளும்      
வாழ்க்கைப் பொருள்பலவும் பாங்காக்க் கூறுகிறார்!

முப்பதுகல் என்பர் முழுதாய்ப் புகார்ப்பரப்பு!
அப்போ தறுபதாயி ரம்குடிகள் அங்கென்பர்!
ஆமாமாம்! மூன்றிலக்கம் அப்போது வாழ்ந்திருந்தார்!
தாமேவந் தங்கயலார் தங்கி இருந்தார்!  

சிலம்பில் அடிகளார் செந்நா கரிகப்
புலப்பா டெனவே புறச்சிறப்பைக் காட்டி
அகச்சிறப்பாய்க் காட்டுவார் அன்பு,பண் பாட்டை!
மிகச்சிறப் பைச்சிலம்பு மேவயிதும் ஏதாம்!

உரைப்பா வரிஇசைப்பா வோடு பலவாம்
குரவையுங் கூத்தொடு கூறுபிற செய்தி
சிலம்பினை முத்தமிழ்ப் பாவியம் ஆக
இலங்க அடிகள் இயற்றிய நுட்பம்
துலக்கமாய் ஆய்வர் விளக்கி உரைப்பர்!
இலக்கிய ஆய்வர் இதுவரை ஆய்ந்த
இலக்கியந் தம்முள் சிலப்பதி காரம்
இலக்கில் மிகப்பலர் இனிதாய்ந்த நூலாகும்!

பண்பொழுக் கம்,பிறர்க்கு நற்பய னாதலறம் 
நன்னயன்மைக் காப்பதற்குப் போராடல் நாளும்
பொறுமையெனும் நற்குணங்கள் பொன்போற் பொலியும்               
அருந்திறல் பெண்ணாய் அமைந்துளார் கண்ணகி!
அத்தகைய பெண்ணாளை ஆழிசூழ் இவ்வுலகம்
எத்திசையும் போற்றிட ஏற்றிடும் தெய்வமாய்!
என்பார் அடிகள் இப்படைப்பால்! ஓரிடத்தில்-

கணவன் பிரிவினால் கண்ணகியாள் வாட
துணைதோழி தேவந்தி சொல்லுவாள் செய்தியிதை
காவிரி யாறு கடலில் கடைசி
கலக்குமிடம் சோமகுண் டத்துடன் சூரிய
குண்டத் தினிலும் குளித்தெழுந்து காமவேள்
தண்கோயில் சென்று தலைவணங்கிக் கும்பிட்டால்
இன்புறலாம் கேள்வனுடன் என்றாட்குக் கண்ணகி
பின்னு விடையாய், பெருமைதரா தச்செயல்     
என்றவட்குப் பீடன்(று) எனவுரைத்த மாண்புரை
இன்னுமோர் சான்றாம் இளங்கோ புரட்சிக்கு!

ஐவகையாய் இந்நிலம் ஆம்பிரிவும் அவ்வவற்றின்
தெய்வம் முதலாம் திணைப்பொருள் எல்லாம்
அடிகள் பனுவலில் ஆங்காங் குரைப்பார்
படித்தார் அறிந்திருப்பர் பாலை நிலத்திற்கு
இவரொரு வர்தான் இலக்கணம் தந்தார்!
தவலற அடிகளார் தந்த வரையறை
முல்லை குறிஞ்சி முறையில் திரிவுற்று
நல்லியல் பற்றிடப் பாலையென் றாகும்

நிகர்நிற்கா மன்னர்கள் நேர்மையின் நீங்கி
இகழ்ந்துரை செய்தனர் என்பதால் அன்னார்
தலைநெரியக் கல்கொணர்ந்து  தந்துகண்ண கிக்குச்
சிலைசமைத்த செய்தி சிறப்பாய்ப் பதிந்துள்ளார்!   

நன்மரபு காத்திடவும் நன்குநிலை நாட்டிடவும்
என்றுமே பண்பாட்டால் இன்மொழியால் ஒன்றிணைந்து
ஒற்றுமைபோற் றித்தமிழர் ஓங்கியிங்கு வாழந்திடவும்
அற்றைக்கிப் பாவியத்தில் மூவேந்தர் முந்நாட்டை
ஒன்றாகப் போற்றி உயர்வெல்லாம் பாடிவைத்தார்!

என்றும் நினைவினில் நின்று நிலைத்திடும்
பொன்றாச் சிறப்புப் புகழ்பெற்ற சொற்றொடர்கள்
நம்சிலம்பில் உண்டுபல நற்சான்றாய் ஈங்குசில :
 “பதியெழுவறியாப் பழங்குடி
 “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
விடுதல் அறியா விருப்பினன்
நடந்தாய் வாழி காவேரி
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு
சிலம்புள கொண்ம்
பிறவா யாக்கைப் பெரியோன்
கவவுக்கை நெகிழாமல்
நாளங்காடி
அல்லங்காடி
பீடன்று
அஞ்செஞ்சீறடி
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
ஆறைங் காதம் அகநாட்டு உம்பர்
வம்பப் பரத்தை வறுமொழி யாளன்
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
தேரா மன்னா செப்புவ துடையேன்
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
யானோ அரசன் யானே கள்வன்

புரட்சித் துறவியார் போற்றற் குரிய.
இளங்கோ அடிகள் இயற்றிய பாவியம்
ஒப்பில் சிறப்பின் சிலப்பதி காரம்
எப்போதும் நெஞ்சத்தை ஈர்ப்பதால் உண்மையில்
செஞ்சொல் இளங்கோ அடிகள் இருக்கிறார்
நெஞ்சில் நிறைந்தே நிலைத்து!
  
-----------------------------------------

புதன், 6 மார்ச், 2013

பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு – அறிமுக உரை


பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு அறிமுக உரை


புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் புதுவைத் தனித்தமிழ்க் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளையின் பத்தாம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் புதுவைத் தாகூர் கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அ.பசுபதி ஐயா அறக்கட்டளை சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் முன்னதாகத் தமிழநம்பி ஆற்றிய அறிமுகரை கீழே:

     புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுவைத் தனித்தமிழ்க் கழகத்துடன் இணைந்து நடத்துகின்ற தேவநேயப்பாவாணர் அறக்கட்டளை பத்தாம் சொற்பொழிவு நிகழ்ச்சியின் தலைவர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அரிமாப்பாண்டியன் ஐயா அவர்களே!
      வரவேற்புரை யாற்றிய பு.மொ.ப.ஆ.நிறுவனத்தின் இயக்குநர் பண்பாட்டு மாந்தவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி அவர்களே!
இவ்வாய்வு நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளே, பணியாளர்களே!
      அரியதொரு ஆய்வுச் சொற்பொழிவாற்ற இருக்கும் பெருமதிப்பிற்குரிய இனிய அன்புப் பேராசிரியர், கணிப்பொறி, தமிழ்க்கணினிப் பயன்பாட்டில் முதன்மையராக விளங்கும் பசுபதி ஐயா அவர்களே!
      மதிப்பிற்குரிய கெழுதகை அன்பர்களாகிய தனித்தமிழ்க் கழகத் தொண்டுள்ளங்களே!
      பல்வேறு பணிகளையும் கவன ஈர்ப்புகளையும் தவிர்த்துவிட்டுத் தமிழ் கருதி குழுமியுள்ள அறிஞர்களே! அன்புத் தமிழ்நெஞ்சங்களே!
      அனைவர்க்கும் வணக்கம்.

      இன்றைக்கு நாம் செவிமடுக்க இருக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவின் தலைப்பு மொழிஞாயிறு பாவாணரும் இணையமும் என்பதே. மொழிஞாயிறு பாவாணர் ஐயாவைப் பற்றியும், சொற்பொழிவாற்ற இருக்கும் பேரா.பசுபதி ஐயாவைப் பற்றியும் அறியாத கற்ற புதுச்சேரித் தமிழர் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
     
      மேலும், இக்காலத்தில் இணையத்தைப் பயன்படுத்துவோர், குறிப்பாக இணையத்தில் தமிழில் கணினியைப் பயன்படுத்தும் தமிழர்கள் பெருகி இருக்கின்றனர். தமிழர்களில் பலருக்குத் தனியே வலைப்பதிவு உண்டு. முகநூலில் நாள்தோறும் எழுதுகின்ற தமிழர், குறிப்பாகப் புதுச்சேரித் தமிழர் பலர் இருக்கின்றனர்.  இத்தகு சூழலில் இத்தலைப்பு பொருத்தமானதும் பயன்விளைப்பதுமான ஒன்றென்பது தெளிவு..
       
      அண்மைக் காலத்தில் பாவாணரின் நூற்களைத் தொகுப்பாக வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக நிறுவனரும், பதிப்பாளருமான தமிழ்த்திரு கோ. இளவழகனார், அந்நூல்களின் பதிப்புரையில் ஒருவரைப் பற்றிக் கீழ்காணும் வகையில் நன்றியுணர்வோடு போற்றி வணங்கி குறிப்பிட்டெழுதுகிறார்: "இவர் தோன்றி யிராவிடில்,  குடத்துள் இட்ட விளக்காக இருந்த மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றிப் போற்றியிருக்காது; எங்களைப் போன்றவர்களும் அவர்தம் பேரறிவைக் கண்டு மகிழ்ந்திருக்க முட்டியாது."
               
      இளவழகனாரால் இவ்வாறு குறுப்பிடப் பட்டவர்  பாவலரேறு பெருஞ்சித்திரனார்  ஆவார். இத்தகைய சிறப்பிற்குரிய பாவலரேறு ஐயா, பாவாணரைப் பற்றி எழுதுகையில்,  “இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு வழங்கிவிட வில்லை. தமிழ்த் துறைக்கு அவர் தொண்டு புதியது; தமிழர்க்கு அவர் கருத்துக்கள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள் வியப்பளிப்பன. அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர் காலத்திற்குப்பின், தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சிக்குப் 'பாவாணர்' என்றே பெயரிடலாம்" என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார்.

தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து
தமிழ்க்கெனப் பயின்று தமிழ்க்கெனப் பயிற்றித்
தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து
தமிழ்க்கென வாழும் தமிழே வாழி!  எனப் பாவாணரை அவர் பாடுவார்.

                இப்போது பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இல்லை என்னும் துணிவிலேதான் நாகங்கள் நச்சு உமிழத் தொடங்கி இருக்கின்றன! எழுத்தே இல்லாமல், செயற்கை வகையால் உருவாக்கப்பட்டது ஒருமொழி. மக்கள் வழக்கு மொழியாக என்றுமே இருந்திடாத அது, வேள்விச்சடங்கு மொழியாக இருந்தது. இவனை அழி; அவனை அழி; எமக்கு இடையூறானவனை அழி எனப் பகைப் பழிமொழியாகச் செவியால் கேட்டுக் கேட்டுச் சொல்லும் மொழியாக இருந்தது அது. அம் மொழியைக் கொண்டுதான், தமிழ், எழுத்தும் சொல்லும் பொருளும் இலக்கணமும் இலக்கியமும் அறநெறியும் மெய்யியலும், வழிபாடும் கலைகளும் அமைத்துக்கொண்டது என்று ஆங்கிலத்திலே நூலாக எழுத ஒ,ருவருக்குத் துணிச்சல் வந்திருக்கிறது!
     
      4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்திர எழுத்துக்கள் கொண்ட செம்பியன் கண்டியூர் கைக்கோடரியைக் கண்டெடுத்த பிறகும், பொருந்தல் அகழாய்வு எழுத்துக்கள காலம் கி.மு. 750 கி.மு.490 என்று அமெரிக்க ஆய்வகம் ஆணித்தரமாக அறிவித்த பின்னரும், ஆதிச்சநல்லூர் தாழி எழுத்துப பொறிப்பின் காலம் கி.மு. 1700 என்று அறிந்த பின்னரும் பொய்யை நச்சாகக் கக்க நாகசாமிகளுக்குத் தெம்பும் திடாரிக்கமும் வரக்காரணம் பாவாணர் இல்லையென்ற அச்சந் தவிர்ந்த நிலையென்றால், மிகையன்று.   
     
      அது நிற்க..., பாவாணர் நாற்பதிற்கும் அதிகமான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்றவர்; எண்பதிற்கும் அதிகமான மொழிகளோடு தமிழின் தொடர்பைக் கண்டு காட்டியவர். மறைமலையடிகளார் வழி நின்று தம் அறிவுழைப்பால் தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் ஆனவர்.
     
      ஐம்பதாண்டுக் கடுங்கடிய உழைப்பில் பாவாணர் எழுதிய 39 தமிழ் நூல்களும், இரண்டு ஆங்கில நூல்களும், 152 கட்டுரைகளும், அருஞ்சிறப் பார்ந்த நூற்றுக் கணக்கான மடல்களும் தமிழருக்கும் உலக மொழியாராய்ச்சி யாளர்க்கும் அரிய விளக்கந் தந்து வருகின்றன. பாவாணரின் அஃகியகன்ற ஆய்வின் பயனாய் விளக்கம் பெற்ற முடிவுகள் ஐந்து. அவையாவன:
  1. தமிழே உலக முதன்மொழி.
  2. தமிழே திராவிடத்திற்குத் தாய்.
  3. தமிழே ஆரியத்திற்கு மூலம்.
  4. மாந்தன் பிறந்தகம் கடலுள் மூழ்கிய குமரிக்கண்டம்.
  5. தமிழனே குமரிக்கண்டத்தில் தோன்றிய மாந்தன்

      பத்தாண்டுகளுக்கும் முன்னரே, மொழிஞாயிறு பாவாணர் அவர்களைப் பற்றிய செய்திகள் இணையத்தில் நிரம்ப இடம்பெற்றிருந்ததாக, மலேசியாவில் வெளியிடப்பட்ட பாவாணர் நூற்றாண்டு விழா மலரில் குறிப்பிட்டிருந்தார்கள். பாவாணர் என்று ஆங்கிலத்தில் தட்டித் தேடினால் செய்தி கிடைக்கும் இணையதளங்களில் சில என்று குறிப்பிட்டுப் பதின்மூன்று இணையதள முகவரிகளையும் தந்திருந்தார்கள்.
     
      இப்போது, கூகுள் தேடலில், தேவநேயப்பப்பாவாணர் என்று தட்டித் தேடினால், பாவாணர் பற்றிய செய்திகள் இடம்பெறும் இடங்கள் இவையிவை என 54 பக்கங்களில் தளங்களின் குறிப்பு கிடைக்கிறது. ஒருபக்கத்திற்கு ஏறத்தாழ பத்துத் தளத்தின் பெயர்கள் இடம்பெற் றிருக்கும். ஆக, 540 இடங்களில் பாவாணரைப் பற்றி எழுதிய செய்திகளை நம்மால் பார்க்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

      பாவாணர்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த கோவலங்கண்ணனார் குடும்பத்தினரின் www.Devaneyan.net என்ற இணைய தளத்திலும், பாவாணரின் மகன்களில் ஒருவரான திரு.மணிமன்ற வாணனின் புதல்வரும் பாவாணனின் பெயரனுமாகிய இம்மானுவல் என்பாரின்  www.devaneyappavanar.com என்ற இணையதளத்திலும் இப்போதும் பாவாணர் பற்றிய செய்திகளையும் அவர் நூல்களையும் காணலாம்.

      பொள்ளாச்சி நசன் என்பாரின் www.thamizham.net என்னும் தளத்திலும் இன்னும் சில தளங்களிலும், நாம் பாவாணரின் நூல்களைப் படிக்கவும் தரவிறக்கிக் கொள்ளவும் முடியும். இன்னும் பலப்பல வலைப்பதிவுகளும் பாவாணரைப் பற்றிய செய்திகளை எழுதி வருகின்றன. அவர் கருத்துக்களைப் பாராட்டியும் மறுத்தும் செய்திகள் வருகின்றன. இவற்றைப்பற்றியெல்லாம் பேராசிரியர் ஐயா  விளக்க விருக்கின்றார்.

      பேராசிரியர் பசுபதி ஐயாவிடம் பயின்ற மாணவர்கள் சிலரும் இங்கு வந்திருக்கக் கூடும். அவர் இன்றும் ஆசிரியராக இருந்து இணையப் பயன்பாடு குறித்து யார் எந்த ஐயம் எழுப்பினாலும், சற்றும் தயங்காது உடனுக்குடன் விளக்கமாக ஐயத்தைத் தெளிவிப்பவர். இணையத்தில் தமிழைக் கையாளல் பற்றியும் வலைப்பதிவு, முகநூல் முதலான பல பயன்பாடுகள் தொடர்பாகவும்  பயிற்றி உதவுவோரில் அவர் முதன்மையானவர். ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டே உலகத் தமிழரொடு இடையறாக் கணனித் தொடர்பில் இருக்கின்றவர். அவருடைய வலைப்பதிவுகள்:
  1. http://kalapathy.blogspot.com/
  2. http://httpdevamaindhan.blogspot.com
     தேவமைந்தன் என்ற புனைப்பெயர் கொண்ட அ. பசுபதி ஐயா ஒரு பாவலர்; எழுத்தாளர்; பேச்சாளர். தமிழ்நாட்டிலுள்ள கோவையில் பிறந்தவர். புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து தம் 52-ஆம் அகவையில் விருப்ப ஓய்வு பெற்றார். 1968ஆம் ஆண்டு முதல் இவர் படைத்த பாடல்கள், ‘உங்கள் தெருவில் ஒரு பாடகன் (1976)  ‘புல்வெளி (1980) ‘போன்சாய் மனிதர்கள் (1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் இவர் வானொலி உரைகள் நிகழ்த்தி வருபவர். செந்தமிழும் நாப்பழக்கம்- என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகி வருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் தேவமைந்தன் ஆற்றிய உரை,  பல வலைப்பூக்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பாடல்களும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின் பாடற் பக்கங்கள் பல வலையேடுகளில் வெளிவந்துள்ளன. என்ற இந்தச் செய்தியும் இணையத்திலிருது திரட்டியதே.
      பேரா. பசுபதி ஐயா பாவாணரைப் பற்றி நன்கறிந்தவர். ஏறத்தாழ பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே அவர், பாவாணரும் திருக்குறளும் என்ற தலைப்பில் பாவாணர் நூற்றாண்டு விழா மலரொன்றில் எழுதிய கட்டுரையைப் படித்திருக்கின்றேன். அதற்கும் முன்னரே கூட அவர் பாவாணரைப் பற்றியும் அவர் நூல்களைப் பற்றியும் எழுதியிருக்கக்கூடும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து                                     அதனை அவன்கண் விடல்.                                                                                               என்ற குறளை நன்குணர்ந்த தனித்தமிழ்க் கழகமும் பு.மொ.ப.ஆ.நிறுவனமும் தகுதியான ஒருவரைத் தக்க தலைப்பில் பொருத்தமாக அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற அழைத்துள்ளனர். இந்த உரையைக் கேட்கும் நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது என்று கூறி இனியும் இடையில் நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் வாய்ப்பளித்தோர்க்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு. என் உரையை முடித்துக்கொள்கின்றேன்.
-----------------------------------------------------------------

புதன், 27 பிப்ரவரி, 2013

புதுவையில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு


புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும்
தனித்தமிழ்க் கழக
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு அழைப்பிதழ்

                                                                                                                                                                                                                                                                   

சனி, 2 பிப்ரவரி, 2013

புதுவையில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்


தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் 5.30 ணி வரை
இடம் : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்,
66. கடலூர் சாலைமுதலியார் பேட்டைபுதுச்சேரி -605 004.
                                                                தொடக்க விழா                                     
காலை 9.30 மணிக்கு

                             தலைமை:                                   
திரு. வீரமுருகையன்
தலைவர்புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

நோக்க உரை:
திரு. இரா. சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர்புதுச்சேரி லைப்பதிவர் சிறகம்.

முன்னிலை:
பேராசிரியர் நாக. இளங்கோ,
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்.
திரு. ஓவியர் இரா. இராசராசன்
விரிவுரையாளர்பாரதியார் பல்கலைக்கூடம்புதுச்சேரி.
பொறியாளர் இராதேவதாசு
துணைத்தலைவர்புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

முகாமைத் தொடக்கி வைப்பவர்:
மாண்புமிகு திருசபாபதி அவர்கள்
சட்டப்பேரவைத் தலைவர்புதுச்சேரி அரசு.
தமிழா தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:
மாண்புமிகு திருதிதியாகராசன் அவர்கள்
மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.
பெறுதல்:
திருகோ.சுகுமாரன்
செயலர்மக்கள் உரிமைக் கூட்டமைப்புபுதுச்சேரி.
வாழ்த்துரை:
திருஇரா.விசுவநாதன் அவர்கள்
மாநிலச் செயலர்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI), புதுச்சேரி.

அமர்வு 1:                                                                                காலை 10.30 முதல் 11.15 வரை 

தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu), தமிழில் எம்.எசு ஆபீசுஓப்பன் ஆபீசுதமிழில்  இணைய உலாவிகள் (Web Browsers),ஒருங்குகுறி, TAM, TAB, TSCII பற்றிய விளக்கம் மற்றும் குறியீடு மாற்றம்
(font conversion)

திருஇரா.சுகுமாரன்புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.
பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு பயன்பாட்டாளர்கள்.

அமர்வு 2:                                        காலை 11.15 முதல் 11.30 வரை
தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்.
திருஅருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.
 காலை 11.30 முதல் 11.45 வரை
தேநீர் இடைவேளை
அமர்வு 3:                                                             காலை 11.45 முதல் 12.30வரை
வலைப்பதிவு செய்தல்: பிளாக்வேர்டு பிரசுபிற
பரமேசுவரி
அமர்வு 4:                                           பகல் 12.30முதல் 1.15 வரை
திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம்தமிழ்வெளி,திரட்டி
கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டுபிற…
திரு. . வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.
                      உணவு இடைவேளை                       
பகல் 1.16 முதல் 2.00 வரை
அமர்வு 5:                                                                  பிற்பகல் 2.00 முதல் 2.45வரை
திருகோ.சுகுமாரன்
தமிழில் மின்னஞ்சல்அரட்டை,
சமுக வலைத்தளங்கள்முகநூல்டிவிட்டர்கூகுல் பிளசு

அமர்வு 6:                                  பிற்பகல் 2.46முதல் 3.15 வரை

பேராசிரியர் நாக. இளங்கோ
தமிழில் மின்னூல் உருவாக்குதல்
அமர்வு 7:                                 பிற்பகல் 3.15முதல் 4.00 வரை
கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
த. சீனிவாசன்,  - கணியம் மின்னிதழ் - ஆசிரியர்.

அமர்வு 8:                                 பிற்பகல் 4.00முதல் 4.15 வரை

தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்தமிழ் தொடர்பான பிற
திரு. தமிழநம்பி விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
தேநீர் இடைவேளை
பிற்பகல் 4.15 முதல் 4.30 வரை
நிறைவு விழா:                                         மாலை 4.30 மணி
தலைமை:
திரு. எல்லைசிவக்குமார்  பொதுச்செயலர்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
 சான்றிதழ் வழங்கல்:
பேராசிரியர் பசுபதி
நிறைவுரை:
 திருஅ.கு. சலீம்,
துணைத்தலைவர்புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.
 புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
 தொடர்புக்கு:
இரா. சுகுமாரன்  :  94431 05825,   எல்லை. சிவக்குமார்: 9843177943,
பேராசிரியர் நாக. இளங்கோ: 99436 46563, கோ.சுகுமாரன்:9894054640.
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.comellai.sivakumar@gmail.com
இணையம்: www.pudhuvaitamilbloggers.orgவலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/