பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு – அறிமுக உரை
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
நிறுவனமும் புதுவைத் தனித்தமிழ்க் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மொழிஞாயிறு
தேவநேயப்பாவாணர் அறக்கட்டளையின் பத்தாம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் புதுவைத் தாகூர்
கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அ.பசுபதி ஐயா
அறக்கட்டளை சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் முன்னதாகத் தமிழநம்பி ஆற்றிய
அறிமுகரை கீழே:
புதுச்சேரி
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுவைத் தனித்தமிழ்க் கழகத்துடன் இணைந்து
நடத்துகின்ற தேவநேயப்பாவாணர் அறக்கட்டளை பத்தாம் சொற்பொழிவு நிகழ்ச்சியின் தலைவர்
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அரிமாப்பாண்டியன் ஐயா அவர்களே!
வரவேற்புரை
யாற்றிய பு.மொ.ப.ஆ.நிறுவனத்தின் இயக்குநர் பண்பாட்டு மாந்தவியல் அறிஞர் பக்தவத்சல
பாரதி அவர்களே!
இவ்வாய்வு நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளே, பணியாளர்களே!
அரியதொரு
ஆய்வுச் சொற்பொழிவாற்ற இருக்கும் பெருமதிப்பிற்குரிய இனிய அன்புப் பேராசிரியர்,
கணிப்பொறி, தமிழ்க்கணினிப் பயன்பாட்டில் முதன்மையராக விளங்கும் பசுபதி ஐயா
அவர்களே!
மதிப்பிற்குரிய
கெழுதகை அன்பர்களாகிய தனித்தமிழ்க் கழகத் தொண்டுள்ளங்களே!
பல்வேறு
பணிகளையும் கவன ஈர்ப்புகளையும் தவிர்த்துவிட்டுத் தமிழ் கருதி குழுமியுள்ள அறிஞர்களே!
அன்புத் தமிழ்நெஞ்சங்களே!
அனைவர்க்கும்
வணக்கம்.
இன்றைக்கு நாம்
செவிமடுக்க இருக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவின் தலைப்பு ‘மொழிஞாயிறு
பாவாணரும் இணையமும்’ என்பதே. மொழிஞாயிறு பாவாணர் ஐயாவைப்
பற்றியும், சொற்பொழிவாற்ற இருக்கும் பேரா.பசுபதி ஐயாவைப் பற்றியும் அறியாத கற்ற
புதுச்சேரித் தமிழர் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
மேலும், இக்காலத்தில்
இணையத்தைப் பயன்படுத்துவோர், குறிப்பாக இணையத்தில் தமிழில் கணினியைப் பயன்படுத்தும்
தமிழர்கள் பெருகி இருக்கின்றனர். தமிழர்களில் பலருக்குத் தனியே வலைப்பதிவு உண்டு.
முகநூலில் நாள்தோறும் எழுதுகின்ற தமிழர், குறிப்பாகப் புதுச்சேரித் தமிழர் பலர்
இருக்கின்றனர். இத்தகு சூழலில் இத்தலைப்பு
பொருத்தமானதும் பயன்விளைப்பதுமான ஒன்றென்பது தெளிவு..
அண்மைக்
காலத்தில் பாவாணரின் நூற்களைத் தொகுப்பாக வெளியிட்ட ‘தமிழ்மண்’
பதிப்பக நிறுவனரும், பதிப்பாளருமான தமிழ்த்திரு கோ. இளவழகனார், அந்நூல்களின்
பதிப்புரையில் ஒருவரைப் பற்றிக் கீழ்காணும் வகையில் நன்றியுணர்வோடு போற்றி வணங்கி
குறிப்பிட்டெழுதுகிறார்: "இவர் தோன்றி யிராவிடில், குடத்துள் இட்ட விளக்காக இருந்த மொழிநூல்
மூதறிஞர் பாவாணர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றிப் போற்றியிருக்காது; எங்களைப்
போன்றவர்களும் அவர்தம் பேரறிவைக் கண்டு மகிழ்ந்திருக்க முட்டியாது."
இளவழகனாரால்
இவ்வாறு குறுப்பிடப் பட்டவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். இத்தகைய
சிறப்பிற்குரிய பாவலரேறு ஐயா, பாவாணரைப் பற்றி எழுதுகையில், “இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும்
தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு
வழங்கிவிட வில்லை. தமிழ்த் துறைக்கு அவர் தொண்டு புதியது; தமிழர்க்கு
அவர் கருத்துக்கள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள்
வியப்பளிப்பன. அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர்
காலத்திற்குப்பின், தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும்
ஒட்டுமொத்த முயற்சிக்குப் 'பாவாணர்' என்றே
பெயரிடலாம்" என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார்.
தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து
தமிழ்க்கெனப் பயின்று தமிழ்க்கெனப் பயிற்றித்
தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து
தமிழ்க்கென வாழும் தமிழே வாழி! எனப் பாவாணரை அவர் பாடுவார்.
இப்போது
பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இல்லை என்னும் துணிவிலேதான் நாகங்கள்
நச்சு உமிழத் தொடங்கி இருக்கின்றன! எழுத்தே இல்லாமல், செயற்கை வகையால்
உருவாக்கப்பட்டது ஒருமொழி. மக்கள் வழக்கு மொழியாக என்றுமே இருந்திடாத அது, வேள்விச்சடங்கு
மொழியாக இருந்தது. ‘இவனை அழி; அவனை அழி; எமக்கு இடையூறானவனை
அழி’ எனப் பகைப் பழிமொழியாகச் செவியால் கேட்டுக் கேட்டுச் சொல்லும் மொழியாக
இருந்தது அது. அம் மொழியைக் கொண்டுதான், தமிழ், எழுத்தும் சொல்லும் பொருளும்
இலக்கணமும் இலக்கியமும் அறநெறியும் மெய்யியலும், வழிபாடும் கலைகளும்
அமைத்துக்கொண்டது என்று ஆங்கிலத்திலே நூலாக எழுத ஒ,ருவருக்குத் துணிச்சல்
வந்திருக்கிறது!
4000 ஆண்டுகட்கு
முற்பட்ட சித்திர எழுத்துக்கள் கொண்ட செம்பியன் கண்டியூர் கைக்கோடரியைக்
கண்டெடுத்த பிறகும், பொருந்தல் அகழாய்வு எழுத்துக்கள காலம் கி.மு. 750 –
கி.மு.490 என்று அமெரிக்க ஆய்வகம் ஆணித்தரமாக அறிவித்த பின்னரும், ஆதிச்சநல்லூர்
தாழி எழுத்துப பொறிப்பின் காலம் கி.மு. 1700 என்று அறிந்த பின்னரும் பொய்யை
நச்சாகக் கக்க நாகசாமிகளுக்குத் தெம்பும் திடாரிக்கமும் வரக்காரணம் பாவாணர்
இல்லையென்ற அச்சந் தவிர்ந்த நிலையென்றால், மிகையன்று.
அது நிற்க..., பாவாணர்
நாற்பதிற்கும் அதிகமான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்றவர்; எண்பதிற்கும் அதிகமான
மொழிகளோடு தமிழின் தொடர்பைக் கண்டு காட்டியவர். மறைமலையடிகளார் வழி நின்று தம்
அறிவுழைப்பால் தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் ஆனவர்.
ஐம்பதாண்டுக்
கடுங்கடிய உழைப்பில் பாவாணர் எழுதிய 39 தமிழ் நூல்களும், இரண்டு
ஆங்கில நூல்களும், 152 கட்டுரைகளும், அருஞ்சிறப்
பார்ந்த நூற்றுக் கணக்கான மடல்களும் தமிழருக்கும் உலக மொழியாராய்ச்சி யாளர்க்கும்
அரிய விளக்கந் தந்து வருகின்றன. பாவாணரின்
அஃகியகன்ற ஆய்வின் பயனாய் விளக்கம் பெற்ற முடிவுகள் ஐந்து. அவையாவன:
- தமிழே உலக முதன்மொழி.
- தமிழே திராவிடத்திற்குத் தாய்.
- தமிழே ஆரியத்திற்கு மூலம்.
- மாந்தன் பிறந்தகம் கடலுள் மூழ்கிய குமரிக்கண்டம்.
- தமிழனே குமரிக்கண்டத்தில் தோன்றிய மாந்தன்
பத்தாண்டுகளுக்கும்
முன்னரே, மொழிஞாயிறு பாவாணர் அவர்களைப் பற்றிய செய்திகள் இணையத்தில் நிரம்ப
இடம்பெற்றிருந்ததாக, மலேசியாவில் வெளியிடப்பட்ட பாவாணர் நூற்றாண்டு விழா மலரில் குறிப்பிட்டிருந்தார்கள்.
பாவாணர் என்று ஆங்கிலத்தில் தட்டித் தேடினால் செய்தி கிடைக்கும் இணையதளங்களில் சில
என்று குறிப்பிட்டுப் பதின்மூன்று இணையதள முகவரிகளையும் தந்திருந்தார்கள்.
இப்போது, கூகுள்
தேடலில், தேவநேயப்பப்பாவாணர் என்று தட்டித் தேடினால், பாவாணர் பற்றிய செய்திகள்
இடம்பெறும் இடங்கள் இவையிவை என 54 பக்கங்களில் தளங்களின் குறிப்பு கிடைக்கிறது.
ஒருபக்கத்திற்கு ஏறத்தாழ பத்துத் தளத்தின் பெயர்கள் இடம்பெற் றிருக்கும். ஆக, 540
இடங்களில் பாவாணரைப் பற்றி எழுதிய செய்திகளை நம்மால் பார்க்க முடியும் என்ற நிலை
இருக்கிறது.
பாவாணர்பால் பெருமதிப்பும்
பேரன்பும் கொண்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த கோவலங்கண்ணனார் குடும்பத்தினரின் www.Devaneyan.net என்ற
இணைய தளத்திலும், பாவாணரின் மகன்களில் ஒருவரான திரு.மணிமன்ற வாணனின் புதல்வரும்
பாவாணனின் பெயரனுமாகிய இம்மானுவல் என்பாரின் www.devaneyappavanar.com என்ற
இணையதளத்திலும் இப்போதும் பாவாணர் பற்றிய செய்திகளையும் அவர் நூல்களையும் காணலாம்.
பொள்ளாச்சி
நசன் என்பாரின் www.thamizham.net என்னும் தளத்திலும் இன்னும் சில
தளங்களிலும், நாம் பாவாணரின் நூல்களைப் படிக்கவும் தரவிறக்கிக் கொள்ளவும் முடியும். இன்னும் பலப்பல வலைப்பதிவுகளும் பாவாணரைப் பற்றிய
செய்திகளை எழுதி வருகின்றன. அவர் கருத்துக்களைப் பாராட்டியும் மறுத்தும் செய்திகள்
வருகின்றன. இவற்றைப்பற்றியெல்லாம் பேராசிரியர் ஐயா விளக்க விருக்கின்றார்.
பேராசிரியர்
பசுபதி ஐயாவிடம் பயின்ற மாணவர்கள் சிலரும் இங்கு வந்திருக்கக் கூடும். அவர்
இன்றும் ஆசிரியராக இருந்து இணையப் பயன்பாடு குறித்து யார் எந்த ஐயம் எழுப்பினாலும், சற்றும் தயங்காது உடனுக்குடன் விளக்கமாக ஐயத்தைத் தெளிவிப்பவர். இணையத்தில்
தமிழைக் கையாளல் பற்றியும் வலைப்பதிவு, முகநூல் முதலான பல பயன்பாடுகள் தொடர்பாகவும்
பயிற்றி உதவுவோரில் அவர் முதன்மையானவர். ஒரு
கைப்பேசியை வைத்துக்கொண்டே உலகத் தமிழரொடு இடையறாக் கணனித் தொடர்பில் இருக்கின்றவர்.
அவருடைய வலைப்பதிவுகள்:
தேவமைந்தன் என்ற புனைப்பெயர் கொண்ட அ. பசுபதி ஐயா ஒரு பாவலர்; எழுத்தாளர்; பேச்சாளர். தமிழ்நாட்டிலுள்ள கோவையில் பிறந்தவர். புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்
தலைவராகப் பணிபுரிந்து தம் 52-ஆம் அகவையில் விருப்ப
ஓய்வு பெற்றார். 1968ஆம் ஆண்டு முதல் இவர் படைத்த பாடல்கள், ‘உங்கள் தெருவில் ஒரு பாடகன்‘ (1976) ‘புல்வெளி‘ (1980) ‘போன்சாய் மனிதர்கள்‘ (1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் இவர் வானொலி உரைகள் நிகழ்த்தி வருபவர். ‘செந்தமிழும் நாப்பழக்கம்” - என்ற இவர்தம் வானொலி
உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகி வருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப்
புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் தேவமைந்தன் ஆற்றிய உரை, பல வலைப்பூக்களில்
பதிவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பாடல்களும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின்
பாடற் பக்கங்கள் பல வலையேடுகளில் வெளிவந்துள்ளன. – என்ற இந்தச் செய்தியும்
இணையத்திலிருது திரட்டியதே.
பேரா. பசுபதி ஐயா பாவாணரைப் பற்றி
நன்கறிந்தவர். ஏறத்தாழ பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே அவர், ‘பாவாணரும் திருக்குறளும்’ என்ற தலைப்பில் பாவாணர் நூற்றாண்டு விழா மலரொன்றில் எழுதிய கட்டுரையைப்
படித்திருக்கின்றேன். அதற்கும் முன்னரே கூட அவர் பாவாணரைப் பற்றியும் அவர்
நூல்களைப் பற்றியும் எழுதியிருக்கக்கூடும்.
இதனை இதனால்
இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை
அவன்கண் விடல். – என்ற குறளை நன்குணர்ந்த தனித்தமிழ்க் கழகமும் பு.மொ.ப.ஆ.நிறுவனமும் தகுதியான
ஒருவரைத் தக்க தலைப்பில் பொருத்தமாக அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற அழைத்துள்ளனர். இந்த
உரையைக் கேட்கும் நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது என்று கூறி இனியும்
இடையில் நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் வாய்ப்பளித்தோர்க்கு நன்றியைத் தெரிவித்துக்
கொண்டு. என் உரையை முடித்துக்கொள்கின்றேன்.
-----------------------------------------------------------------