செவ்வாய், 1 மே, 2012

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!


கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!

  (பழைய கட்டுரை இடம் மாறி வந்துள்ளது, பொறுத்தாற்றுக)               
               
                  

1970-ஆம் ஆண்டில் கணிப்பொறி பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. 1980-ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலிருந்தே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், நம் தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்களில் மிகச் சிலரே கணிப்பொறியைப் பயன்படுத்துகின்றனர். தமிழாசிரியப் பெருமக்களோ, (மிகச் சிறுபான்மையர் தவிர, மற்றெல்லாரும்) பாடத்திட்டத்தில் வந்துள்ள பாடங்களைத்தவிர வேறெதையும் பார்க்கவும் விருப்ப மில்லாதவர்களே! இந்நிலையில், தமிழ்ப்பகைவர் மிக விழிப்பாகச் செயற்பட்டு, கணிப்பொறிப் பயன்பாட்டைக் கொண்டே தமிழை அழித்தொழிக்கும் முயற்சியில் திறக்கரவுடன் முனைந்துள்ளனர். பெரும்பான்மைத் தமிழர்கள் என்ன நடக்கிறதென்றே அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

அச்சு நால்கள் எதிர்காலத்தில் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று கூற இயலாது. எல்லா ஆவணங்களும் கணிப்பொறி வழியே எழுதப்படுகின்ற காலம் வந்துவிட்டது. எல்லா நூல்களுமே கணிப்பொறி வழி எழுதிக் காக்கப்படுகின்றன. இந்நிலையில் கணிப்பொறியையே புறக்கணிக்க நினைப்பது பேதைமை. காலங்காலமாகத் தமிழ்அழிப்பு வினையில் ஈடுபட்டு வருகின்றவர்கள், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கிரந்தக் கலப்பின்வழி, தமிழ்ச் சிதைப்புக்கும் அழிப்புக்கும் மிகச் சூழ்ச்சியாக முனைந்துள்ளனர்.

இக் கரவுவினை பற்றித் தமிழர்களிடத்தே எந்த விழிப்பும் இல்லாத நிலை இரங்கத் தக்கதாகும்! தமிழர்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய இன்றியமையாக் கடமையாகும். இப்பொழுது எழுந்துள்ள இச் சிக்கலை நுட்பமாக அறிந்துகொள்ளாவிட்டாலும் தாய்த்தமிழைக் காக்கும் நோக்கில் எச்சரிக்கை உணர்வுடன் செய்திகளைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர். 

இதைப்பற்றிப் புரிந்துகொள்ள கிரந்தம் பற்றியும், கணிப்பொறியில் இப்போதைய தமிழ்ப் பயன்பாட்டு நிலை பற்றியும், ஒருங்குகுறி, ஒருங்குகுறி கூட்டிணையம், போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரந்தம்: கிரந்தம் ஒரு எழுத்துமுறை; மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன. அவற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடுண்டாக்கவும் காரணமாயின. மேலும், தமிழும் வடமொழியும் கலந்த பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்க் கணிப்பொறி: கணிப்பொறியைத் தமிழ்ப் பயன்பாட்டுக்குக் கொணர்ந்த தொடக்கக் காலத்தில், அவரவரும் ஒரு குறியீட்டு முறையையும், எழுத்துரு (வார்ப்புரு)வையும் பயன்படுத்தினர். இப்படிச் செய்ததால், ஒருவர் எழுதியதை இன்னொருவர் பயன்படுத்த இயலாத நிலை  இருந்துவந்தது. அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவே, இன்னொருவரின் கணிப்பொறியிலும் இருக்க வேண்டும் என்ற நிலையே கணிப்பொறிப் பயன்பாட்டில் இருந்துவந்தது. இணையம் வளர்ச்சிபெற்ற நிலையில் தமிழ்ப் பயன்பாட்டிற்கு இது பெரும் சிக்கலாகவும் தடையாகவும் இருந்துவந்தது. 
ஒருங்குகுறி (Unicode): மேற்கூறிய சிக்கலும் தடையும் இன்றி அனைத்துக் கணிப்பொறியிலும் தமிழைப் பயன்படுத்தற்கேற்ற  ஒரு வசதி தேவைப்பட்டது. இந்நிலையில், உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்துக்களுக்கும் எண்களைக் கொடுத்து அவ் வெழுத்துக்களை ஒருங்குசேர்த்து ஒரே ஆவணத்தில் பயன்படுத்த இயலும் வகையில் அமைந்த ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) முறை இச்சிக்கலுக்குத் தீர்வாக அமைந்தது.
இக்கால், பல்வேறு கணிப்பொறி நிறுவனங்களும் எண்மமுறைக் கருவி நிறுவனங்களும் ஒருங்குகுறியை ஏற்றுக்கொண்டு தம் உருவாக்கங்களில் இக்குறியீட்டு முறையைச் சேர்த்துக்கொண்டுள்ளன. புதியதாகத் தோன்றும் பல உருவாக்க நெறிகளும் ஒருங்குகுறியை அடிப்படையாகக் கொள்கின்றன.
ஒருங்குகுறிக் கூட்டிணையம் (Unicode consortium): உலகிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக்களையும் எவ்வகைத் தடையுமின்றி எல்லாரும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் அமைப்பாக ஒழுங்குகுறி கூட்டிணையம் உள்ளது. இவ்வமைப்பில் பல நாடுகளும் தனியாள்களும்கூட உறுப்பினராக உள்ளனர். தமிழ்க் கணிப்பொறிக்கான ஒருங்குகுறி குறித்து உரியவண்ணம் அக்கறை கொள்ள வேண்டிய தமிழ்நாட்டரசு தன் உறுப்பாண்மையை உறுதி செய்து கொள்ளாத நிலை வியப்பும் ஏமாற்றமும் அளிக்கக் கூடியதாகும்.
இன்றைய சிக்கல் : இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்தில் ஒப்போலை பெற்ற உறுப்பினராக உள்ளது. இத்துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற 22மொழிகளையும் இக் கூட்டிணையத்தின் அடைவுப்பட்டியலில் இடம்பெறச் செய்தது; அத்துடன் வழக்கிழந்த வேதசமற்கிருத எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் அப்பட்டியலில் இடம்பெறவேண்டுமெனக் கருதியது.
இதன் தொடர்பாக, 6.9.2010-இல் 14 பேர் கொண்ட ஒரு குழுவைக் கூட்டியது. இக்குழுவில் தமிழறிஞர்ளோ, கணிப்பொறி வல்லுநரோ, ஒருங்குகுறித் தெளிவறிவினரோ, தொல்லியல் அறிஞர்களோ இல்லை. அந்தப் 14 பேரில், தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஆர்.கிருட்டினமூர்த்தி சாத்திரி; இன்னொருவர் காஞ்சி சங்கரமட ரமணசர்மா ஆவர். அக்குழு எடுத்த முடிவினைப் பரிந்துரைத்து இந்திய அரசுத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்கு அனுப்பியது.
இறுதியாக, இந்திய அரசு, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தத்தோடு எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ்எழுத்துக்கள் உள்ளிட்ட தமிழின் 7 குறியீடுகளையும் இணைத்து இடம்பெறும் குறியேற்றத்தை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
தமிழ் எழுத்துக் குறியீடுகளோடு கிரந்த எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும் கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு  தமிழ்எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும், விளைவு தமிழ்மொழிக்குப் பெருங்கேடாகவே இருக்கும். தமிழ் நூல்களும் இதழ்களும் சிறிதளவு தமிழ் கலந்த கிரந்த எழுத்துக்களாலேயே எழுதப்படும். அரிசியில் கல் கலந்ததைப் போலன்றிக் கல்லில் அரிசி கலந்த கதையாகும்.
சமற்கிருத மொழி ஒலிவடிவங்களுக்கு உருவாக்கப்பட்ட வரிவடிவங்களான கிரந்த எழுத்துக்களைக் கொண்டே, அக் கிரந்த எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் வரிவடிவங்கள் புறக்கணிப்புறுமாறும் பயன்பாடின்றிச் செயலிழந்து வழக்கற்றுப் போகுமாறும் செய்யப்படும்.
இவற்றையெல்லாம் எண்ணிக் கவன்ற தமிழறிஞர்கள் - குறிப்பாக இலக்குவனார் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் போன்றோர் - எடுத்த முயற்சியின் பயனாகத் தமிழ்நாட்டரசு, அறிஞர் கருத்தறிய 3.11.2010 அன்று தமிழ்ப் பல்கலைக்கழத்தின் மூலம் 17 பேர் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தியது. அவர்கள் ஒரு மனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி, தமிழக முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியதன் விளைவாக, ஒருங்குகுறி கூட்டிணையம், 6.11.2010-ஆம் நாள் கூட்டத்தில் கிரந்த எழுத்தோடு தமிழ்க் குறியீடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்ததை 26.2.2011-ஆம் நாள் கூட்டத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.

தினமணியின் குறை : இந்தச் சிக்கலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல்,ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ என்னும் ஐந்து கிரந்த எழுத்துக்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ்நாட்டரசு இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறைக்கு மடல் எழுதியுள்ளதாகக் குறைபட்டுக் கொண்டு எழுதிய தினமணி நாளிதழ், அதன் 9.11.2010-ஆம் நாள் ஆசிரியருரையில் தன் வெளிறை வெளிப்படுத்திக் கொண்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதலிய பலரும் உணர்த்திய பின்னரும்கூட தினமணி தன் தவற்றுக்கு வருந்தவில்லை.
கலப்புக்கு முனையக் காரணம் : தமிழின் தூய்மையைக் கெடுத்து, வளங்குன்றச் செய்து, சிதைத்து, காலப்போக்கில் தமிழை அழித்துவிடவேண்டு மென்ற எண்ணமே, கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக் குறியீடுகளைக் கலக்கப் பரிந்துரைத்ததற்குக் காரணமாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறதன்றோ?          
கிரந்தத்தை இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாக ஆக்கி ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளிலும் மின்னஞ்சல், இணைய இதழ்கள் இடம்பெறச் செய்யலாமென்ற எண்ணமும் காரணமாகக்கூறப்படுகிறது. உலக மொழிகள் அனைத்திற்குமான ஒரே எழுத்துவடிவம் (International phonetic alphabet - IPA) உருவாகிப் பயன்பாட்டில் உள்ள நிலையில், இக் காரணம், பெரிய பூனையும் குட்டிப் பூனையும் போகவர கதவில் பெரிய துளையும் சிறிய துளையுமாக இரண்டு துளைகள் போட்ட கதையை நினைவு படுத்துவதாக உள்ளது.
கலப்பால் விளையும் கேடும் காப்புணர்வின் தேவையும் ஏற்கெனவே, தமிழரின் விழிப்பின்மையால், சமற்கிருத ஒலிப்புண்டாக்கவெனக் காரணம் கூறி, கிரந்த எழுத்துக்கள் ஸ, ஷ, ஜ, ஹ - வுடன் கூட்டெழுத்துக்கள் க்ஷ, ஸ்ரீ - யும் தமிழிற் கலக்கப்பட்டதால்  நேர்ந்திருக்கும் சிதைவினின்றும் தமிழை மீட்கவே, மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தோற்றித் தமிழ் மீட்சிக்குப் பாடுபட்டார். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் இலக்குவனார், அறிஞர் வ.சுப.மா., பாவேந்தர், அறிஞர் அண்ணா போன்றோரின் இடைவிடாத முயற்சியால் தமிழ் மென்மேலும் சிதைவதுதடுத்தாற்றப் பெற்று ஒரளவு மீட்சி கண்டுள்ளது.
இப்போது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் கொத்தில் 7 தமிழ்க் குறியீடுகள் கலந்தால், தமிழ் கிரந்தமொழியாக்கப்படும் உலகின் மூத்த மொழியின் வரிவடிவம் கிரந்தமாகிப் போகும். இதனால், பிற்காலத்தில் சமற்கிருதத்திலிருந்து அல்லது சங்கத மொழியிலிருதுதான் தமிழ் பிறந்தது என்றும் சிலர் நிறுவத் துணிந்தாலும் வியப்பதற்கில்லை.

இக் கிரந்த எழுத்துக்கள் தமிழிற் கலப்பதைத் தடுக்கவே, ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்ற நூற்பாவின் வழி காப்புச் செய்ய முனைந்தது. நன்னூல் பவணந்தியாரும் தற்பவம் தற்சமம் கூறி இரண்டின் வழியும் கிரந்த எழுத்து வராதிருக்கத் தடையிட்டார். தொல்காப்பியத்திலும், கழக இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையிலும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீறாப்புராணம், வீரமாமுனிவரின் எழுத்தோவியங்கள், நாலாயிரப் பனுவல்கள் முதலானவற்றிலும் கிரந்த எழுத்துக்கள் இடம்பெறவே யில்லை. 

தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ், பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற வரலாறற்ற குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

எம்மொழியிலும் எல்லாமொழிப் பெயர்களும், எல்லா ஒலிப்பும் இல்லை. சீன எழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒரு மொழி தன் இயல்பிற் கேற்காத ஒலியை ஏற்பின், நாளடைவில் சிதைவுற்று மாற்றமடைந்து வேறொரு மொழியாகிவிடும். இதற்கு, மலையாள மொழியே எடுத்துக் காட்டாகும். தமிழ் என்பதை டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தாமில், தமிஷ், தமிஸ் என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்; பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ழ, ற, ண முதலிய தமிழ் எழுத்துக்களை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?

தமிழரின் இன்றைய கடமை : தமிழில் கிரந்தம் கலந்தாலும் கிரந்தத்தில் தமிழ் கலந்தாலும் சிதைவும் அழிவும் தமிழுக்கு நேர்வது உறுதி என்பதால் உலகெங்கணும் உள்ள தமிழர், ஒருங்ககுகுறியில் தமிழுக்கு உரிய இடத்தில் கிரந்த எழுத்துக்கு இடமளிப்பதற்கும், கிரந்தத்தோடு தமிழ் எழுத்துக்களைச் சேர்ப்பதற்கும் தம் எதிர்ப்பை மிக உறுதியாக வெளிப்படுத்தி அம முயற்சியைத் தடுக்கவேண்டும்.

கல்வெட்டு, செப்பேடு, ஈடு உரைகள் ஆராய்ச்சிக்குக் கிரந்த எழுத்தின் தேவை குறித்தெல்லாம் தொடர்புடைய பல்துறை அறிஞர் குழு அமைத்து அமைதியாக முடிவெடுக்கலாம்.

தமிழ்நாட்டரசு, இனக்காப்பில் இழைத்த இரண்டகம் தமிழர் நெஞ்சில் மாறாப் பெருவடுவாக நிலைத்திருக்கின்றது. இப்போது, மொழிக் காப்பிலும் கோட்டைவிட்டுப் பழிதேடிக் கொள்ளக் கூடாதென்று நல்லுணர்வோடு வலியுறுத்துகின்றோம்.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.   (கு.466)
--------------------------------------------------------------

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அடிகளாசிரியர்க்கு இரங்கல்


அடிகளாசிரியர்க்கு இரங்கல்
                           
(விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்தை அடுத்த கூகையூர் என்னும் குகையூரில் குடத்திலிட்ட விளக்காய் வாழ்ந்த ஏற்றமிகு தமிழறிஞர், தொல்காப்பிய திருமந்திர ஆய்வாளர் அடிகளாசிரியர் கடந்த 8-1-2012இல் இயற்கை எய்திதினார். அப்பெரியாரின் நினைவேந்தும் பா இது)

உலகில்சீர் தொண்டாற்றி ஒளிசேர்த்தார் பலருள்ளும்
ஒப்பாய்க் கூறப்
பலகற்றும் ஆய்ந்தாழம் பற்பலநூல் விளக்கமுறப்
படைத்த ளித்தும்
இலகுறவே கூரையகம் ஏற்றதென கோரைப்பாய்
இருந்தே வாழ்ந்த
அலகில்லா எளிமைசேர் அடிகளாசி ரியருமைப்போல்
யாரே உண்டு?

மாறலிலாத் தமிழ்ப்பற்றில் மறைமலையார் நற்றொடர்பில்
மக்க ளுக்கே
தூறலற அழகழகாய்த் தூயதமிழ்ப் பெயரிட்டீர்!
தோய்ந்த ஆய்வுச்
சேறலுற செம்மொழியாம் செந்தமிழ்த்தொல் காப்பியத்தின்
சிறப்பு ரைக்கும்
சாறமுறு நூல்பலவும் சமைத்தளித்தீர்! ஐயமற
தமிழ்கற் பித்தீர்!

நூற்றியிரண் டாண்டகவை நுடங்காத வாழ்வினிலே
நுவன்றீர் தேர்ந்தே
தேற்றமுற ஆய்ந்தறிந்த தெளிவார்ந்த கருத்துக்கள்;
தேடி வந்த
ஏற்றமுறு சிறப்புகளோ எண்ணிலவாம்! இவைவிடுத்தே
எங்கே போனீர்?
ஆற்றல்சால் உம்நினைவை அகத்தேற்றோம்! வணங்குகிறோம்!
அடிகள் ஐயா!

(இலகுற எளிமையுற; தூறல் பழிச்சொல்லல், சேறல் எழுச்சி)

---------------------------------------------------------------

சனி, 31 டிசம்பர், 2011

நூலகம்


நூலகம்

(அண்மையில் நடைபெற்ற நூலக விழாவில் பாடியது)

அனைவர்க்கு மென்றன் அன்பு வணக்கம்!
முனைதமிழ் மொழியில் நினைவறா வழக்குறும்

ஆலகம் என்பது ஆலடி நிழலாம்!
ஏலகம் என்பது எளிதிலொப் புளமாம்!
ஓலகம் என்பது ஒலிசெயும் கடலாம்!
காலகம் என்பது காற்றுசேர் நீராம்!

கீலகம் என்பது கேடுசெய் தந்திரம்!
கூலகம் என்பது குதிர்க ளஞ்சியம்!
சாலகம் என்பது சாளரம் பலகணி!
சூலகம் என்பது சூலுறு கருப்பை!
சேலகம் என்பது செறிகயல் சேரிடம்!
தாலகம் என்பது தாலாட்டு நா,வாய்!

கோலகம் என்பது குழகழகு வீடாம்!
தோலகம் என்பது தோற்பொருட் கடையாம்!
நீலகம் என்பது நெடுங்காழ் இருளாம்!
நோலகம் என்பது நோன்பிரு இடமாம்!

பேலகம் என்பது பெரும்புணை தெப்பம்!
போலகம் என்பது புகலுமகத் துவமை!
மேலகம் என்பது மேலுள்ள இல்லம்!
வாலகம் என்பது வயங்கொளி மாடம்!
மாலகம் என்பது மருந்தெனும் வேம்பாம்!
மூலகம் என்பது முழுத்தனி அணுவாம்!

நூலகம் என்பதோ நுவன்றிடின் பற்பல
சாலத் திரட்டிய நூலுள அகமாம்!

அறிவுக் கருவூலம், அறிவியல் திரட்டு,
செறிமொழி காக்கும் சிறந்த காப்பகம்!
இலக்கியப் பெட்டகம், துலக்க விளக்கமாய்ப்
பலவர லாறுகள் பாங்குறக் கூறகம்!

உளத்தியல் சமயம் உருளுகோள் கணியம்
புலன்கவர் விளக்கப் புத்தாய் வுரைகள்!
நெறியுற மாந்தனை நேர்பண் புறுத்தி
அறிவுத்திறனைச் செறிவுற அளிக்கும்!
நலவள உடலும் ஞானமும் முயன்றால்
செலவில் லாமல் சேர்ந்திட உதவிடும்!

மருத்துவ நூல்கள் மருந்துகள் இன்னும்
திருத்தமாய்க் கட்டுரை தேர்ந்த படங்கள்
விளக்கக் காணொளி துளக்கறும் காட்சிகள்!
துலக்க விளக்கமாய் அறுவை மருத்துவம்!

குழந்தைகள் அறிவைக் கூட்டி வளர்த்திடும்
கழிபெருந் திரட்சி! கல்விசேர் மாந்தனை
மாந்த னாகவும் மீமாந்த னாகவும்
ஏழ்ந்திட மாறி வாழ்ந்திட வழிதரும்!

இத்தகை நூலகம் ஏறிப் படித்தே
முத்தென ஒளிர்ந்தோர் எத்தனை யோபேர்!

கல்வெட் டெழுதியும் பல்வகை ஓவியம்
கல்லில் பாறையில் கவினுறத் தீட்டியும்
பதிவுசெய் தனர்நம் பழந்தமிழ் மக்கள்!

இதுநாம் அறிந்ததே! புதிதாய்க் குழைத்த
களிமண் தட்டினில் தெளிவுற எழுதி
வளிகுறை சூளையில் வகையுறச் சுட்டு
தனித்தனி ஏட்டைத் தகுதுறை பிரித்தே
இனிதுறுங் கோயிலில், நனிகாப் பரசிலில்
வைத்துப் போற்றி வந்தனர் அந்நாள்
மொய்ப்புகழ் மொசப்பத் தோமியோ மக்கள்!

நூலகத் தோற்ற நுனைமுன் முயற்சியிஞ்
ஞாலத் திவையென ஏல உரைக்கலாம்!

திறப்பீர் சிறந்தவோர் நூலகந் தன்னை!
திடமுடன் மூடுவீர் சிறைஒரு நூற்றினை!
என்ப தறிஞர் இயம்பிய பொன்மொழி!
என்றும் மாறா இலக்கணப் புதுமொழி!

நூறா யிரம்நூல் நூலக மொன்று
தீராச் சிறப்பின் தெற்கா சியாவில்
பெரிதென யாழ்நகர் பிறங்கி யிருந்ததைச்
சிறியர் சிங்களர் தீயிட் டழித்த
நெறியற் றசெயல் நீளுல கறிந்து
வெறிய ரவறின் வறிதறி விகழ்ந்தது!

புதிது பிதிதாய்ப் பொலிவுற வீடுகள்
இதுயெமக் குரியதென் றெழுச்சியில் கட்டுவோம்!
எதுஎதற் கெலாமோ எழிலுற அறைகள்
புதுவீட் டினிலே புழங்க அமைக்கிறோம்!
படித்தற் கென்றோர் படிப்பறை நூலகம்
எடுப்புற அமைக்க ஏனோ மறக்கிறோம்!

இக்கால் நூலகம் இனிது திரட்டிடும்
எக்கா லும்கெடா ஒலிஒளிப் பேழைகள்!
குறுவட் டுடன்நுண் படலந் தன்னில்
சிறுபெரு படங்கள் சிறப்பா வணங்கள்!

ஒலிநூ லகமொன் றுண்டமரிக் காவில்!
ஒலிஓ ரிலக்கம் ஒப்பிலாப் பதிவில்
இசையமைப் பாளர் இயைபில் பதிந்தவை
இசையும் பல்வேறு இயக்க ஒலிகளும்!

இணையநூ லகத்தினில் எண்மிய ஊடகம்
இணையிலா தியங்கும், எடுக்கலாம் பதிவுகள்!
எல்லாச் செய்தியும் இருக்கிற திங்கே
பொல்லாப் பழுதுறா தெல்லாக் காப்புடன்!
அரிய காட்சிகள் அழகுப் படங்கள்
உரிய ஓசைகள் உண்டே பிறவும்!

இறுதியாய், இளைஞரே, இங்குமக் கொருசொல்
உறுதியாய் ஏற்க உமைவேண் டிடுவேன்!
நூலகம் செல்லுதல் சாலவும் நன்று!
மேலும் வளர்க்கும் ஏலும் வகையெலாம்!
அதனாற் பயனுற அழைக்கிறேன்
எதனா லுயரலாம் எனவேங் கிளையரே!



தங்கப்பா ஐயா


தங்கப்பா ஐயா

தமிழ்கொரு தீங்கெனின் புடைத்தெழும் எம்தோள்!
தமிழ்நலம் காக்கத் தாவும்எம் கால்கள்!
தமிழ்க்குடி புரக்கத் தணலும்எம் நரம்பே
ஆதலின், ஊறுங் குருதியும் தமிழெனின் மிகுமே,
வாழ்தலுந் தமிழ்க்கென வாழ்ந்து
காதல்எந் தமிழ்க்குச் சாதலெங் கடனே!
      பரந்துபட்ட மணற்பரப்பின்மீது அலை எழுப்பாமல் அமைதியாய் நடக்கும் ஆறு போன்றது என் வாழ்க்கை என்று தம் வாழ்க்கையைக் குறிப்பிடும் நம் தங்கப்பா ஐயாவின் பாடல் வரிகளே இவை. 
      தொடக்கத்தில், தென்றல், வானம்பாடி போன்ற இதழ்களில் ஐயாவின் படைப்புகள் வந்தன.
      ஈடெடுப்பற்ற பாவலராகவும், ஒப்பற்ற தமிழ் உணர்வாளராகவும், எடுத்துக்காட்டான தமிழ் உரிமைப் போராளியாகவும், உணர்வு கொளுத்தும் தமிழுணர்வுக் கட்டுரையாளராகவுமே இவர் தென்மொழி, நற்றமிழ், தெளிதமிழ் இதழ்களின் வழி அன்பர்களால் முதலில் அறிந்து கொள்ளப்பட்டார். இவருடைய தமிழாக்கத்தில் பாவலர் இரசூல் கம்சதேவ் முதலான பாவலர்களின் மொழிமீட்சி, விடுதலை உணர்வுப் பாடல்கள், மெய்த்தமிழ் அன்பர்களுக்கு ஈர்ப்பாக விளங்கினவெனலாம்.
      அவருடைய வாழ்வியல் கட்டுரைகளும் அவருடைய மொழிபெயர்ப்புப் பணிகளும் இதுவரை அறிவுலகம் காணாத அருமை சான்றவை எனில் மிகையன்று.
      அன்பியக்கமே வாழ்வியக்கம் என்றும் அன்பை முதன்மையாகக் கொண்டே மாந்தரின் பிற எல்லாச் செயல்களும் அமைய வேண்டுமென்றும் கூறுவார். உள்ளத்துக்குள் அன்பின் பசை சிறிதுமின்றி வெறும் அறிவாளியாக அல்லது படிப்பாளியாக இயங்குவோரைத் தம்மால் மதிக்க முடிவதில்லை என்பார்.
      குழந்தைப் பருவத்திலிருந்து வாழ்க்கைமீது அன்பு கொண்டிருந்ததைப் போலவே தமிழ்மீதும் அன்பு கொண்டிருந்த தாகவும் இளமையிலேயே தமிழ் தம்முட் புகுந்து தம்மை ஆட்கொண்டதெனவும் குறிப்பிடுவார்.
      ஐயாவின் தந்தையார் தென்காசி வட்டம் குறும்பலாப்பேரிப் புலவர் மதனபாண்டியன் என்னும் பெயருடைய தமிழாசிரியர் ஆவார். அவருடைய குடும்பத்தில் தமிழ் பரவிப் பரந்திருந்தது. நெருங்கிய உறவினர் பலரும் தமிழ்ப் புலவர்களாகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் எழுத்தாளராகவும் இருந்தனர். எனவே, தமிழ் அவர் குருதியில் ஊறியுள்ளமை இயல்பான ஒன்றே எனலாம்.
      தமிழைப்போலவே கல்லூரியில் ஆங்கிலத்தைக் கற்றார். தமிழ்நூல்களைவிடவும் ஆங்கில நூல்களை மிகுதியாகப் படித்திருக்கிறார். அவர் படைப்பாற்றலை ஆங்கில மொழியில் செலுத்தியிருந்தால், ஆங்கிலத்தில் உலகறிந்த ஓர் எழுத்தாளராகவோ படைப்பாளராகவோ ஆகியிருக்க முடியும்.
      கல்லூரிக் காலத்திலேயே தமிழ் இலக்கியங்களையும் ஆங்கில இலக்கியங்களையும் படித்து, அவற்றில் மூழ்கித் திளைத் திருக்கிறார். அப்பொழுது அவர் எழுதிய ஆங்கிலமொழிப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களும் நண்பர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவை.  
                ஐயா, பாளையங்கோட்டைக் கல்லூரியில் வரலாறு, ஏரணம் அடங்கிய இடைநிலைக் கல்வியும், பொருளியல் வரலாறு அரசியல் அடங்கிய இளங்கலையும் படித்தார்.
      உயர்நிலைப்பள்ளிக் காலத்திலேயே அவரிடம் பகுத்தறிவு, சாதிமறுப்பு எண்ணங்கள் தோன்றி பாவேந்தர் பாடல்கள் படித்ததால் செழித்திருந்தன. அக்கால், தமிழிலும் ஆங்கலத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்; தமிழாக்கமும் செய்திருக்கிறார்.
      இளங்கலை தேறியதும் பாளையில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரானார். அப்போது, தமிழாசிரியரிடம் இரண்டே மணித்துளியில் வெண்பா இலக்கணம் கற்று எழுதிய முதல் பாவிற்கே தென்றல் இதழின் பரிசு கிடைத்திருக்கிறது.  
                தமிழும் தமிழிலக்கியமும் சார்ந்த வாழ்வில் தமக்குத் துணைநின்றவருள் முதன்மையானவர் பாவலர் த.கோவேந்தன் என்று குறிப்பிடுகிறார். பல்லாற்றானும் பல நேரங்களிலும் தமக்கு உதவிய அன்பராக அவரைக் கூறுகிறார். கழக இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவர் ஊக்கியதைக் குறிப்பிடுகிறார்.
      கோவேந்தன் வழி அறிமுகமான சிறந்த வரலாற்றாய்வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நூற்பதிப்பாளரும் ஆகிய முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஐயா செய்த கழகப்பாடல்களின் மொழிபெயர்ப்பைப் பார்த்து மகிழ்ந்து சில திருத்தங்களையும் கூறியுள்ளார். ஐயாவின் உழைப்பில், கழகப்பாடல்களின் ஆங்கிலவாக்கம் பெங்குவின் பதிப்பாக வந்ததற்கு சலபதி விடாமுயற்சி எடுத்ததை நினைவுகூர்கிறார்.
      தம் தமிழுணர்வு தனித்தமிழ் உணர்வாக மாறுதற்கும் இலக்கிய உணர்வு மேலும் ஆழம் அடைவதற்கும் வழிகாட்டியவராக தென்மொழி பெருஞ்சித்திரனாரைக் குறிப்பிடுகிறார். அவரின் ஆற்றல்களைப் போற்றிடும் ஐயா, தமிழுரிமை வேட்கையில் இருவரும் ஒரு கோட்டிலேயே நின்றதாக்க் கூறுகிறார். தம்பார்வையில் ஏதேனும் மங்கல் படிந்திருக்குமானால் அதை நீக்கித் தெளிவுபடுத்தியவ ரென்றும், பாட்டுணர்வை ஆழப்படுத்தியவ ரென்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரைக் குறிப்பிடுகிறார்.
      1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சிறைப்படுத்தப் பட்டபோது, தங்கப்பா ஐயா தென்மொழி ஆசிரியராக இருந்து எழுதிய ஓர் அட்டைப் படப் பாடல் இது: 
அரியேற்றைச் சிறைபுகுத்தின் அதன்முழக்கம் அடங்கிடுமோ   
                                          அண்ட மெல்லாம்
எரியேற்றும் பெரும்பிழம்பைச் சிறுநீர்தான் அவித்திடுமா
                                          அறமில் சூழ்ச்சி
நரியேய்க்கும் சிறுமனத்தீர்! நல்லுணர்வைப் புன்சிறையால்
                                          தெறநி னைத்தீர்!
விரைவேற்ற லானீர்நும் வீழ்ச்சிக்கே! தமிழகத்தின்
                                          விடுதலைக்கே!
தென்மொழி அன்பர்களின் நினைவில் நிலைத்த பாடல் இது.
     தென்மொழியோடு சில ஆண்டுக் காலம் சேர்ந்திருந்ததன்பின், அதைவிட்டு விலகி வந்ததற்கு ஐயா தந்துள்ள விளக்கும் தெளிவானதாகும். 
                "குறிக்கோளுக்கு முதன்மை வழங்கித் தம் பணியினை ஒரு வேள்வியாகவே நடத்தியவர் பெருஞ்சித்திரனார். வேள்வி நெருப்புச் சீறி எழுந்து கொழுந்துவிட்டெரிதல் வேண்டும். அதற்கு எதையும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டவர் அவர். நான் வாழ்க்கையை அன்பு வெள்ளமாகக் கருதினேன். வேள்வியாகக் கருதியவன் அல்லேன். ஒரு நலனுக்காக இன்னொன்று அழிந்துவிடுதல் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் நான். ஒருபுள்ளியில் நில்லாமல் எல்லாவற்றிலும் என்னைப் பரப்பிக் கொள்பவனாக நான் இருந்தேன்" என்று அவர் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
      ஆசிரியராகப் பணியாற்றுகையில், வகுப்பறைப் பாடங்களுடன் தமிழ் விழிப்புணர்வு, இயற்கை ஈடுபாடு, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, வாழ்வியல் அறிவு ஆகியவற்றையும் மாணவர் உள்ளத்தில் பதித்திருக்கிறார்.
      புதுவை அரசின் 2000ஆம் ஆண்டுக்கான தமிழ்மாமணிப் பட்டம் இரா.திருமுருகன் அவர்கட்கும், இயற்றமிழ்க்கான கலைமாமணிப் பட்டம் தங்கப்பா ஐயாவுக்கும் தரப்பட்டன. பட்டங்களை வழங்கிய அரசை மதிக்கும் வகையில் அவற்றை ஏற்றுக்கொண்டாலும், அரசு அலுவலர்கள் தமிழிலேயே கையொப்பமிடல் வேண்டும் என்ற அரசு ஆணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு ஒருமாத கால இடைவெளி வழங்கி அதற்குள் ஆணை செயல்படாவிடின், பட்டங்களை அரசின்பால் திருப்பிக்கொடுப்பதாக இருவரும் அறிவித்தனர்.
      அவ்வாறு அரசின் ஆணை செயல்படுத்தப் படாததால், 10-4-2001 அன்று இருவரும் ஊர்வலமாகச் சென்று கலை பணபாட்டுத்துறை இயக்குநரிடம் பட்டங்களையும் உரிய தொகையினையும் திருப்பிக்கொடுத்தனர்.
     
      தமிழ், தமிழர் உரிமை என்று பேசுவதும் செயற்படுவதும் உலகப் பொதுவான மாந்தர் முன்னேற்றத்துக்குத் தடையாக இல்லை என்பதை ஐயா தெளிவுறுத்துவார்.
      தமிழ் மட்டுந்தான் நமக்கு வேண்டும் என்றால் அது குறுகிய நோக்கமே, நாம் அப்படிச் சொல்லவில்லை. தமிழ் சொந்த மண்ணிலேயே உரிமையிழந்து நிற்கின்றது. அவ்வுரிமையை அதற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இது மிகத்தேவையான பணி. உலக முன்னேற்றத்திற்காக உழைக்கிறவர்கள் உலகம் எல்லாவற்றையும் ஒன்றாய் இழுத்துப்போட்டுக்கொண்டு பாடுபடத் தேவையில்லை. தம் பணிக்குத்தம்மால் முடிந்த ஓர் எல்லையை வகுத்துக்கொள்ளலாம். தமிழர் மாந்த இனத்தின் ஒருபகுதி. காலிலோ கையிலோ காயம்பட்டால் அதை ஆற்றித்தானே ஆக வேண்டும் அதை ஆற்றாமல் உடம்பின் பொதுநலம்தான் முதன்மையானது. கை காலுக்கு அவ்வளவு முதன்மை கொடுக்கத் தேவையில்லை என்று கூறமுடியுமா என்பார். 
      இந்தியத் தேசியம் என்ற விரிவான நோக்கத்தோடு நீங்கள் ஏன் பாடுபடக்கூடாது? அதில் தமிழர் நலனும் அடங்குமே என்பார்க்கு ஐயா எளிதில் புரியும்படி ஐயா விடையிறுக்கிறார்.
      இந்தியத் தேசியத்தில் தமிழர் நலன் அடங்கினால் சரி. அடகவில்லையே! இது மிக வெளிப்படையான, மறுக்கமுடியாத உண்மை. இந்தியத் தேசியம் பொய்த் தேசியம். போலித் தேசியம். தமிழர்களை அழிக்கும் தேசியமாக இருக்கின்றதே. தனது நாட்டின் குற்றம் செய்யாக் குடிமக்களை மற்றொரு நாட்டான் சுட்டுக் கொல்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்ன தேசியம்? உலகிலேயே இதுவரை காணப்படாத, இழிந்த தேசியம் அது.
      குற்றம் இழைக்காத தமிழ் மீனவர்களைத் தொடர்ந்து பலாண்டுகளாகச் சிங்கள இனவெறி அரசு துன்புறுத்தியும் கொன்றும் வருகிறது. கண்ணையும் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறதே இந்திய அரசு! சீ என்று அதன் முகத்தில் காறி உமிழத் தேவையில்லையா? இதற்குத் தேசியம் என்று பெயர் சொல்வதைவிட நான்று கொண்டு சாகலாமே! என்றும் இன்னும் இவை தொடர்பாக விளக்கமாகப் பல செய்திகளையும் ஐயா எழுதிய நானும் என் தமிழும் என்ற நூலில் காணலாம். இந்நூல், கோவை ஞானி அவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும்.
      தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய காவிரி நீரை, முல்லைப்பெரியாற்று நீரை, பாலாற்று நீரைப் பெற்றுத்தர முடியாத இந்திய ஒருமைப்பாடு எவ்வளவு போலியானது! இதைத் தாங்கிக்கொண்டு நாமும் சும்மாவிருக்கிறோம் என்று எழுதுவார். 
      நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை ஐயா எழுதியுள்ளார். இவற்றுள் தமிழ் நூல்களும் ஆங்கில நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் பா நூல்களும், கட்டுரை நூல்களும், குழந்தைகளுக்கான பாடல்களும், வாழ்வியற் சிந்தனைகளும், இயற்கை யீடுபாட்டு எழுத்துக்களும் உண்டு. ஐயாவின் எழுத்துக்கள் 15க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களிலும் பத்திற்கும் மேற்பட்ட ஆங்கில இதழ்களிலும் வந்துள்ளன.
      ஐயாவின் உயிர்ப்பின் அதிர்வுகள் என்ற பா நூல் சிற்பி இலக்கியப் பரிசைப் பெற்றது. இந்நூலில் புதுப்பா வகையிலமைந்தவையும் உள்ளன. கள்ளும் மொந்தையும் தனி நூலாக வந்தபோது, அதற்கு ஐயா எழுதிய முன்னுரை அரியதொரு அறிவுக் கருவூலம்; படைப்பு, படைப்பாளி, மரபுப்பா, புதுப்பா என்பவற்றிற்கு இதுவரை எவரும் அளித்திரா தெளிவு விளக்கம் உள்ளதைப் படிப்பார் உணரலாம்.
      ஐயா தம் கல்லூரி நாட்களிலேயே மொழிபெயர்ப்பில் சிறந்து விளங்கினார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கும் ஐயா பல மொழியாக்கங்களைச் செய்திருக்கிறார். கழக இலக்கியப் பாடல்களின் ஆங்கில ஆக்க நூலான ‘Love Stands Alone’, முத்தொள்ளாயிரத்தின் ஆங்கில ஆக்க நூலான ‘Red lilies and Frightened Birds’ ஆகிய இரண்டும் உலகப் புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. இந்நூல்கள் ஆங்கில தமிழ் அறிஞர்களாலும் மிகச் சிறந்தவை எனப் பாராட்டப்படுகின்றன.    
      இவை தவிர, அவார் மொழிப்பாவலன் இரசூல் கம்சதேவ் பாடல்களையும் பிரெஞ்சுப் படைப்பாளர் ஆந்திரே ழீது கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்திருக்கிறார். வள்ளலார், சித்தர் பாடல்கள், முத்தொள்ளாயிரம், அற நூல்கள், பாரதி, பாவேந்தர் பாடல்களையும் தமிழாக்கம் செய்துள்ளார். சில கதைகளையும் கூட ஆங்கில ஆக்கம் செய்துள்ளார்.
      மொழிபெயர்ப்புலகில் ம.இலெ.தங்கப்பா என்னும் தேவமைந்தனார் கட்டுரையும், இலக்கணச்சுடர் முனைவர் திருமுருகனார், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பேராசிரியர் பரமசிவம் போன்ற பிற அறிஞர்களின் உரைகளும் உயரவுக்குச் சாற்றுரைக்கின்றன.
வள்ளலாரின் பாடல் ஒன்று.
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் என்கோவே துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.   
இப்பாடலின் தங்கப்பா ஐயா மொழிபெயர்ப்பு இது:
Will it be today, or will it be tomorrow?
When will it be at all, the one event of my life…
My discarding of all this ignorance and reaching beyond
The immeasurable within the immeasurable…
To come at last into the quiet bliss of inaction?
எவ்வளவு எளிமை! எண்ணிப் பாருங்கள்.
      காலச்சுவடு இதழ் ஐயாவை அறிமுகப்படுத்திய போது இவ்வாறு எழுதியது: இயற்கையும் அன்பும் தங்கப்பாவின் வலிமையான இரண்டு அடிப்படைகள். இயற்கையின் நேசர் அவர் என்று சொல்வது குறைத்துச் சொல்வதாகிவிடும். அவரது வீட்டின் பெயர் வானகம். குழந்தைகள் செங்கதிர், இளம்பிறை, விண்மீன், மின்னல்.
      சிறுவர், சிறுமியரை ஏரி, காடு, வயல், மலை, ஆற்றுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று செடி, கொடி, மரம், பறவை ஆகியவற்றைச் சிறப்புத் செய்திகளுடன் அறிமுகப்படுத்தி வைப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். சிற்றூர் வாழ்க்கை அறிவும் இயற்கையைப் பேசிய கழக(சங்க) இலக்கியப் பயிற்சியும் கொண்ட தங்கப்பா போன்றவர்களே இத்தகைய இயற்கை அறிமுகத்தைச் செய்ய முடியும். இவ்வகைத் தமிழ் மரபின் கடைசிக் கண்ணிகளுள் தங்கப்பா ஒருவர்.
      அன்புதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது, பல சமூக, மொழிப் போராட்டங்களில் கலந்துகொண்ட தங்கப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. தங்கப்பாவின் வலிமைகளுள் மற்றொன்று அவரது தமிழ் நடை. பாடலிலும் சரி, உரையிலும் சரி கலப்பு நீங்கிய தெளிவுமிக்கது.
            அரசின் பல விருதுகள், சிற்பி பரிசு எனப் பல பாராட்டுகள் தங்கப்பாவை அடைந்தாலும் அவை அவரை ஒன்றும் செய்யவில்லை. கல்லுப் பிள்ளையார் போல எதற்கும் அவர் அசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை
      எது வாழ்க்கைஎன்னும் உங்கள் நூலில் வெளிப்படுத்திய வாழ்க்கை பற்றிய பார்வையை எவ்வளவு தூரம் உங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிந்தது? என்ற வினாவிற்கு ஐயா தந்த விடை:
      புறவுலகச் சீர்கேட்டுக்கு இயற்கையழிவு காரணமாக இருப்பதுபோல் அகவுலகச் சீர்கேட்டுக்கு அன்பின்மை காரணமாக இருக்கின்றது. அன்பென்பது பிறர்மீது ஈடுபாடு. கோடிக்கணக்கான மக்கள் - உயிரினங்கள் -கூடி வாழும் இவ்வுலகில் பிறர்மீது ஈடுபாடு கொள்வது -அன்பு செலுத்துவது இன்றியமையாதது. பிறரோடு நல்லுறவு கொள்வதுதான் உலகுக்கும் சொந்த வாழ்க்கைக்கும் நன்மை பயக்கும். அன்பு, உணர்ச்சியின் பாற்பட்ட ஒரு கொள்கையன்று, அது அறிவியல் மெய்ம்மை. மீறக் கூடாத இயற்கைச் சட்டம்.
      என் திருமணமும் என் பிள்ளைகளின் திருமணங்களும் சாதி மறுப்புத் திருமணங்களே. எந்த மதத்தையும் வழிபாட்டு முறையையும் நாங்கள் பின்பற்றுவதில்லை. கொடுத்தல்தான் வாழ்க்கை, பெறுதல் அன்று என எங்கள் பிள்ளைகட்கு நாங்கள் கற்றுக் கொடுத்திருக்கின்றோம். ஆயினும் வாழ்க்கை பல்வேறுபட்ட தன்மையோருடனும்  பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். எனினும் குறைகள் மூடிமறைக்கப்படுவதில்லை. மேற்பூச்சுகளும் மூடிமறைத்தலும் இல்லாமல் திறந்த புத்தகமாகவே எங்கள் வாழ்க்கை அமைகின்றது
      தங்கப்பா ஐயா அவர்கள் களப் போராளியாகவும் திகழ்கின்றவராவார். தமிழ் நலத்திற்கெனவும் தமிழுரிமை மீட்சிக்கெனவும் நடக்கும் போராட்டங்களிலும் ஈழத் தமிழர் இன்னல் தீர்க்க விழைந்த போராட்டங்களிலும் புதுவையில் மட்டுமின்றி தமிழ்நாடெங்கிலும் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றார்.
சுருங்கக்கூறின், தங்கப்பா ஐயா...
எடுத்துக்காட்டான மாந்தர்;
தலைசிறந்த பாவலர்;
சீரிய கட்டுரையாளர்;
அன்பையும் இயறகையோடியைந்த வாழ்வையும் வலியுறுத்தும் வாழ்வியற் சிந்தனையாளர்;
ஒப்பற்ற தமிழ் உணர்வாளர்;
உண்மையான போராளி;
எப்போதும் அமைதியாக இருப்பவர்; எல்லாப் போதும் தமிழ் தமிழர் நலத்திற்கெனக் குமுறி வெடிக்கும் எரிமலை!
அவரைப் பாராட்டி மகிழ்வதோடு, அவருடைய அறிவார்ந்த கருத்துக்களை ஏற்று நடப்பதே நம்மை உயர்த்திக் கொள்ளும் செயலாக அமைவதாகும்.

---------------------------------------------------------------------
எழுத உதவியவை:
  1. நானும் என் தமிழும் ம.இலெ.தங்கப்பா. இதனுடன் ஐயாவின் பிற எழுத்துக்களும்.
  2. காலச்சுவடு இதழ்
  3. பேராசிரியர் அ.பசுபதி என்னும் தேவமைந்தனாரின் தமிழ்க்காவல் கட்டுரைகளும், திண்ணை கட்டுரைகளும்.
  4. பேராசிரியர் பெஞ்சமின் லெபோவின் இணையக்கட்டுரை.
உதவியோர்க்கு நன்றி.
------------------------------------------------------------------
.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தங்கப்பா ஐயாவின், “சோளக்கொல்லைப் பொம்மை”க்கு இந்திய அரசு இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாதமி) பரிசு!




          ‘சாகித்திய அகாதமி என்னும் இலக்கியக் கழகம் இந்திய அரசினல் 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
          இந்தியாவின் 24 மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து பரிசளித்தும், பிறமொழிகளில் மொழிபெயர்த்தும் ஊக்கப்படுத்தி வருகின்றது.
          படைப்பாளிகளுக்கு மதிப்பளித்து அவர்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஊடகமாகவும் உள்ளது          இந்த அமைப்பு, பரிசுக்குரிய நூலைத் தேர்ந்தெடுக்கும் முறை ஓராண்டுக்கால நீட்சியுடையதாகக் கூறுகின்றனர்.
          முதலில், இக்கழகத்தின் தலைவரால் அமர்தப்பட்ட ஓரிரண்டு வல்லுநர் நூல்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்நூல்கள் தகுதிசான்ற அறிஞர் பதின்மருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அப் பதின்பரும் ஆளுக்கு இரண்டிரண்டு நூல்களைத் தேர்வுசெய்து பரிசுக்குப் பரிந்துரைக்கிறார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட நூற்களின் பட்டியல் மூன்று நடுவர்களின் தேர்ந்தெடுப்பிற்கு அனுப்பப்படுகின்றன. அவர்களில் பெரும்பான்மையர் தேர்ந்தெடுக்கும் நூலே இவ் இலக்கியக் கழத்தின் செயற்குழுவால் ஏற்பிசைவு பெற்று அறிவிக்கப்படுகின்றது.
          இப்படிப்பட்ட நடைமுறைகள் உள்ளதெனக் கூறப்பட்டாலும், இப்பரிசுக்குத் தேர்வு செய்யப்
படுவோருள் சிலரின் தகுதிகுறித்து படைப்பாளிகள் தம் நிறைவின்மையை வெளிப்படுத்துவதும் உண்டு.
          இந்த இலக்கிய அமைப்பு சென்ற 2010ஆம் ஆண்டு முதல் சிறுவர் இலக்கிய மதிப்பளிப்பு (பால சாகித்திய புரசுகார்) என்ற பெயரில் இந்தியாவின் இருபத்து நான்கு    மொழிகளிலும் எழுதப்பெறும் சிறந்த குழந்தை இலக்கியத்திற்குப் பரிசளிக்கின்றது. வாழ்நாள் குழந்தை இலக்கியப் பணிக்காவும் சிலருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த 2011ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கான குழந்தை இலக்கியப் பரிசுக்குரிய நூலாக, இவ்வமைப்பு, நம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழ்வல்லார் பாவலர் ம. இலெனின் தங்கப்பா ஐயா எழுதிய
 சோளக்கொல்லைப் பொம்மையைத் தேர்ந்தெடுத்து அறிவித்துப் பெருமை பெற்றுள்ளது.
    இப்பரிசு, ஐம்பதாயிரம் உருபாவுக்கான காசோலையும், ஒரு செதுக்கப்பட்ட செப்புப் பட்டயமும் கொண்டதாகும். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் இப்பரிசு வழங்கப்படும்.
    இப்பரிசளிப்பு குறித்து தங்கப்பா ஐயா கூறுகையில், 
உண்மையான தகுதி மதிக்கப்பட வேண்டும் என்றும் குழந்தைகளோடு பழகி,  இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததன் வெளிப்பாடாக, "சோளக்கொல்லை பொம்மை  நூலை எழுதியதாகவும் தகுதியான நூலுக்குப் பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
     நம் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு தங்கப்பா ஐயாவின் தகுதிக்குரிய பரிசுகள் இன்னும் அளிக்கப்பட வேண்டும் என்ற விழைவையும் குறிப்பிட விரும்புகிறோம். 
     (அடுத்த பதிவு தங்கப்பா ஐயாவைப் பற்றிய செய்தித் தொகுப்பாக இருக்கும்.)
-----------------------------------------------------  

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!


எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!
                             
செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்
சிறைக்குச் சென்று
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்
நனிவாய்ந் தாரே!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென
இயம்பி வந்தார்!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.
படத்தில், தாளில்!

கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி
களிக்கத்தோன்றி
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்
கடுகிச் சென்றார்!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்
ஆனார் பின்னர்த்
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்
தேர்ந்து சென்றார்!

தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்
திமிர்கொள் ஆட்சிச்
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;
சற்றும் சோரா(து)
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்
கதிக நாட்கள்!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!
சிறப்ப றிந்தார்!

தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்
தனியே தோற்றி
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்
றியற்றுங் காலைத்
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்
தனிய ராக!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு
தொகுதி என்றே!

செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்
செய்வீர் இன்னே!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி
உயர்வைச் செய்வீர்!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!
தகைமை காப்பீர்!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்
எழுதி பேசி!  

இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி
இணையி லாதாய்!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு
ஏழ்ந்த போது
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!
சொல்வ துண்மை!
திவளலறி யாதியங்கித் திருவேங்க டம்மீட்கச்
சிறையுஞ் சென்றார்!

பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட
பெரிய மீசை
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி
சிலவும் மீட்டார்!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்
சென்ற போதும்
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை
ஓம்பக் கண்டோம்!

பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு
பொலிசெங் கோட்டை
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி
திறத்தில் மூண்டு
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே
பீடிற் சென்றே
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்
சார்பு தந்தார்!

நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்
நுட்ப மாக!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்
எடுப்பாய்ச் சொல்வார்!                                         சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர்
சறுக்கல், உண்மை!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்ததையும்
அகத்தில் கொள்வோம்!  

(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)
 
--------------------------------------------------------------------------  

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஒன்று... இரண்டு... மூன்று...!

ஒன்று இரண்டு... மூன்று...!

ஒன்றும் ஒன்றும் இரண்டு!
உலகம் சுழலும் உருண்டு!

இரண்டும் ஒன்றும் மூன்று!
இனிமைக் குத்தேன் சான்று!

மூன்றும் ஒன்றும் நான்கு!
மூத்தோர் அன்பைத் தாங்கு!

நான்கும் ஒன்றும் ஐந்து!
நாயின் நன்றி ஏந்து!

ஐந்தும் ஒன்றும் ஆறு!
ஆழ உழுவார் ஏரு!

ஆறும் ஒன்றும் ஏழு!
அன்பால் அமுதாம் கூழு!

ஏழும் ஒன்றும் எட்டு!
எழிலைக் கூட்டும் பொட்டு!

எட்டும் ஒன்றும் ஒன்பது!
என்றும் கோவம் தீயது!

ஒன்பதும் ஒன்றும் பத்து!
ஒளிரும் அழகு முத்து!


(23-7-2011ஆம் நாள் தினமணி சிறுவர் மணியில் வந்தது)

புதன், 8 ஜூன், 2011

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு!

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு...!

இரண்டகஞ் செய்தே இனக்கொலைக் குத்துணை             போனவரை
முரண்படப் பேசி மொழிநலந் தீய்த்தவம் மொய்ம்பிலரை
உரங்கெட வீழ்த்தின ராட்சி பறித்தார்  
உணர்ந்திடுக!                
நிரந்தினி தாள்க! நெடுந்தன் முனைப்பை        நிறுத்துகவே!

திங்கள், 16 மே, 2011

பாவாணரின் மடல்கள்

   பாவாணரின் மடல்கள்

       அருமையான இலக்கியமாகவும், அரிய ஆய்வுத் திரட்டாகவும், திறமிக்க சொல்லாக்கம் மொழியாக்கங்களின் விளக்கமாகவும், தமிழ்த் தொண்டின் நிலை கூறும் ஆவணமாகவும், அறிவாற்றல் சான்ற வீற்றின் வெளிப்பாடாகவும் பாவாணர் மடல்கள் இருக்கின்றன.
தமிழ்மொழி, தமிழின, தமிழ்நாட்டு நலன்களின் மீட்பில்  நாட்டமுள்ள தமிழிளையோர் தவறாது அறியவேண்டிய பல செய்திகளையும் அவர் மடல்கள் தருகின்றன.
---------------------------------------------------------------------------------
உதவிய நூல்கள்:
1. பாவாணர் கடிதங்கள்                    : புலவர் இரா. இளங்குமரன்
  (கழகம், 1985)
2. பாவாணர் பாடல்களும் மடல்களும்      : இரா. இளங்குமரன்
  (விகனேஷ் வெளியீடு, 2006)
3. தேவநேயப் பாவாணர்                   : இரா. இளங்குமரன்  
  (சாகித்திய அக்காதமி, 2002)
4. பாவாணர் வரலாறு                     : இரா. இளங்குமரன்
  (கழகம், 2000)
5. தென்மொழி (சுவடி: 7, ஓலை: 6-7)  :ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.        
நன்றி!
_______________________________________________________________________________________