சனி, 12 பிப்ரவரி, 2011

தமிழ் ஒருங்குகுறி : கரவுவினைகளும் காப்பு முயற்சிகளும்.

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!

 உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும். தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் ஒருங்குகுறியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும்.
     
ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பு (Unicode consortium) என்னும் அமைப்பே உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களுக்கு ஒருங்குகுறி உருவாக்கிப் பேணுகின்றது. வணிக நோக்குள்ள கணிப்பொறி நிறுவனங்கள் இணைந்து உலக எழுத்துமுறைகளைத் தகைமைப்படுத்த ஏற்படுத்தியதே இவ்வமைப்பாகும். இதில் பல்வேறுநாட்டு அரசுகளும், கணிப்பொறி, மொழி தகுதியுடைய தனியரும் அமைப்பாரும் உறுப்பினராக உள்ளனர். இவ் அமைப்பில் உறுப்பினராக இருந்த தமிழ்நாட்டரசு இடையில் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்துள்ளதாகவும், இப்போது கட்டணம் செலுத்தி உறுப்பினராக முயல்வதாகவும் கேள்விப்படுகிறோம்.
    
கிரந்தத்திற்கு ஒருங்குகுறி உருவாக்க வேண்டுமென ஒருங்குகுறிக் குழுமக்கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகளில், மூன்று முன்மொழிவுகள் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு விளைவிப்பனவாகும். தமிழைச் சிதைத்து அழிக்கக்கூடியனவாகும்.
அவற்றுள் முதலாவது, காஞ்சி சங்கரமட சிரீரமணசர்மா, 26 கிரந்தக் குறிகளை ஒருங்குகுறித் தகைமைபாட்டுக்குள் கொண்டுவந்து அதனைத் தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ் என்று வழங்கவேண்டுமென 10.07.2010 நாளிட்டு அனுப்பிய முன்மொழிவாகும்.
இம் முன்மொழிவும் தமிழுக்குக் கெடுதி செய்யும் பிறவும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் சிலரின் முயற்சியால் பலருக்குத் தெரிய, 2010 அக்குதோபர் பிற்பகுதியில் உலகோர் அனைவர்க்கும் தெரிந்தது.
ஒருங்குகுறி அறிஞர் திரு. முத்து. நெடுமாறன் அளித்த உடனடி விளக்க மறுப்பினை ஏற்று ஒருங்குறிக் குழுமக்கூட்டிணைப்பு சிரீரமண சர்மாவின் மேற்கூறிய முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது.

தமிழுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டாவது முன்மொழிவு, நா.கணேசன் என்பார் (அமெரிக்காவில் நாசா வில் வேலை செய்வதால் இவரை நாசா கணேசன் என்றுங் கூறுகின்றனர்), 68 கிரந்தக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக்கள் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்துடன் எகர உயிர்மெய்க் குறி, ஒகர உயிர்மெய்க் குறி ஆகிய இரண்டையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை 

கிரந்தத் தொகுப்பில் கலந்து 75 குறிகளைக் கொண்ட கிரந்தத்தமிழ்க் கலவைக் குறியிடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதாகும்.
நா.கணேசனுக்கும் சிரீரமணசர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட தருக்கத்தால் குழம்பிப்போன ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பு, இம் முன்மொழிவை எடுத்துக்கொள்ளவில்லை.
     
இந்நிலையில், அக் குழுமக்கூட்டிணைப்பு இந்திய நடுவணரசின்  உதவியை நாடியது. தமிழைத் தாரைவார்த்துக் கிரந்தத்தை நிலை நிறுத்தும் நா.கணேசன் முன்மொழிவில் சிறசிறு மாற்றங்கள் செய்து, மணிப்பவள மொழிக்காகவும், சமற்கிருத மொழிக்காகவும் தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை ஏற்படுத்துமாறு ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பிற்கு இழதிய அரசு தனது முன்மொழிவைத் தந்தது. இம் முன்மொழிவு, மேற்கூறிய 75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் இணைத்து 89 குறிகள் கொண்டிருந்தது. இதுவே, தமிழுக்குக் கேடு விளைவிக்கும் மூன்றாவது முன்மொழிவானது.

நடுவணரசில் இத்துறைக்குப் பொறுப்பாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.இராசா இவ்வளவு நடந்தும், இவை தாய்த்தமிழின் அழிவிற்கு அடிகோலுபவை என்ற அக்கறை கொண்டிருந்ததாகவே தெரியவில்லை.

நவம்பர் 2010 தொடக்கத்தில் ஒருங்ககுகுறி குழுமக்கூட்டிணைப்பு நடுவணரசின் முன்மொழிவு குறித்து முடிவெடுக்க இருந்த நிலையில், தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலுமிருந்த செய்தியறிந்த தமிழர் கிளர்ந்தெழுந்தனர்.       
அறிஞர் இராம.கி., பேரா.இ.மறைமலை, இ.திருவள்ளுவன், விடுதலை கி.வீரமணி ஆகியோர் முயற்சியால் தமிழ்நாட்டரசு 3.11.2010-இல் அறிஞர் கருத்தறியும் கூட்டம் நடத்தியது. இக் கூட்டத்தில் ஒருமனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக இந்திய அரசு ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பிற்குக் கிரந்தத்தோடு தமிழ்க் குறியிடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்த கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு மடல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தமிழ்க்காப்பு இயக்கங்கள் சார்பில் சென்னையில், ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க்காப்பும் என்ற தலைப்பில் நடைபெற்ற அரிய மாநாடு, தமிழ்க்காப்புத் தீர்மானங்களை நிறைவேற்றி தொடர்புடைய அனைவர்க்கும் விடுத்தது.

தமிழ்நாட்டரசு, ஓய்வு பெற்ற நயனகர் திரு. மோகன் தலைமையில் தமிழ் ஒருங்குகுறி அமைப்பு குறித்து அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் கீழ்க்காணும் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளதாக 18.1.2011-இல் அறிவித்தது.
  1. பேரா.இராசேந்திரன், துணைவேந்தர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்.
  2. முனைவர் வா.செ.குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர்
  3. பேரா. மு.ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்
  4. பேரா. பொன். கோதண்டராமன் (பொற்கோ)
  5.  முனைவர் ஐராவதம் மகாதேவன் இ.ஆ.ப., (ஓய்வு)
  6. பேரா. சோ.ந.கந்தசாமி, செம்மொழித்தமிழாய்வு நடுவண் நிறுவனம்
  7. பேரா.கே.நாச்சிமுத்து, உலகத்தமிழ்ச்செம்மொழி தொல்காப்பியர் பேரவை
  8. பேரா. அ. அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம்
  9. முனைவர் ப. அர. நக்கீரன், இயக்குநர், தமிழ்இணையக் கல்விக்கழகம், சென்னை
  10.  முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி,
 எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர்
  1.  திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர், பாவலர்
  2.  திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்
  3. திரு. மணி. மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி)
  4. முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில், 27.12.2010 அன்று காஞ்சிபுரத்தில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துக்களைக் கலக்கமுனையும் சங்கர மடத்தைக் கண்டித்துப் பெருமுழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சையில் 9.1.2011-இல் தாளாண்மை உழவர் இயக்கம், தமிழ்மக்கள் புரட்சிக் கழகம் முதலியோரால் தமிழ் ஒருங்குறியில் கிரந்தத் தாக்குதலைக் கண்டித்து மாநாடு நடைபெற்றது.
புதுவையில் 30.01.2011-இல், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு திரு.இரா.சுகுமாரன் முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் 4.2.2011-இல் பெருந்திரளானோர் கலந்து கொண்ட பெருமுழக்க ஆர்ப்பாட்டம்  சென்னைப் பொது மருத்துவமனை எதிரில் நடந்தது.
இவை தவிர, மறைமலைநகர், ஈரோடை, சேலம் போன்ற இடங்களிலும் தமிழ் ஒருங்ககுகுறியில்  கிரந்தத்தால்  விளையவிருக்கும் கேட்டை எதிர்த்துப் பொதுக்கூட்டங்களும் முழக்க ஆர்ப்பாட்டங்களும் பரவலாக நடந்துள்ளன.
கிரந்தக்கலப்பை எதிர்க்கும் தமிழ்க்காப்புப் பரப்புரை ஊர்தி, ஓசூரிலிருந்து சென்னை நோக்கி விழிப்புணர்வூட்டிச் சென்றதைச் செய்தித்தாள்கள் விளக்கின.

சென்னையிலும், தஞ்சையிலும், புதுவையிலும் நடந்த மாநாடுகளில் திருவாளர்கள் இராம.கி, பேரா.தெய்வசுந்தரம், இ.திருவள்ளுவன், தென்மொழி பூங்குன்றன் ஆகியோர் செய்திகளைச் சிறப்பாக விளக்கி, வினாக்களுக்கும் விளக்கம் தந்தனர்.
பேரா. தெய்வசுந்தரம், நடுவணரசின் முன்மொழிவு தமிழ்மொழிக்கு எதிரானது மட்டுமன்று, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான வல்லாண்மை  நடவடிக்கை என்றும் இந்துமதவெறியின் வெளிப்பாடு என்றும் மாநாடுகளில் விளக்கி கூறிவருகிறார்.
ஐயா இராம.கி., ஒளிப்பட உதவியுடன், எழுத்தில் தொடங்கி, ஒருங்குகுறி குறித்தும் இற்றைச் சிக்கல் குறித்தும் தெளிவாக மாநாடுகளில் விளக்கி வருகிறார்.

தஞ்சைத் தாளாண்மை உழவர் இயக்கம் அறிஞர் கருத்துக்களைத் தொகுத்து ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும் என்ற தலைப்பில் அரிய நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இணையத்தில், நயனம், வளவு வலைப்பதிவுகளில் திருவாளர்கள் நாக.இளங்கோவனும் இராம.கியும் விளக்கமாக எழுதியுள்ளனர். இன்னும் தமிழ்நிலம், தமிழநம்பி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் போன்ற வலைப்பதிவுகளிலும் விழிப்புணர்வுக் கட்டுரைகட்டுகள் எழுதப்பட்டுள்ளன. வல்லமை வலைப்பதிவில் பெரியண்ணன் சந்திரசேகரன், செல்வக்குமார், தெய்வசுந்தரம் ஆகியோரின் அரிய விளக்கங்கள் உள்ளன. 

தமிழ்நாட்டில் தென்மொழி, முதன்மொழி போன்ற இதழ்களும் புதுவைத் தெளிதமிழ், நற்றமிழ் இதழ்களும் கிரந்த ஒருங்குகுறிக் குறியீட்டு முயற்சியின் வழியே தமிழைச் சிதைத்தழிக்கும் முயற்சியைக் கண்டித்துள்ளன.
தொடர்ந்து தமிழ்நாடெங்கும் நடுவணரசின் முன்மொழிவுக்கு எதிரான இயக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

தமிழநாட்டரசு அமைத்துள்ள குழு 12.2.2011 அன்று கூட இருப்பதாக அறிகிறோம். இக்குழு உறுப்பினர்களில் நா.கணேசனின் முன்மொழிவை ஏற்போர் பெரும்பான்மையராக உள்ளவாறு அமர்த்தப் பெற்றுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டரசு இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து உறுப்பினர்களைத் தேர்ந்துள்ளதா? - என்ற கவலை தமிழர் நெஞ்சை வருத்தி வருகிறது.

நா.கணேசனுக்கு வேண்டியவரும் சமற்கிருதச் சார்புடையவரும் ஆகிய கொங்குப் பகுதித் தொழில்வல்லாரின் உறவினரும் அவருக்குக் கட்டுப்பட்டவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.

தமிழ்நாட்டரசு தமிழ்க் காப்பில் கவனம் செலுத்தவேண்டும். தமிழ் ஒருங்குகுறித் தொகுப்பில் கிரந்தம் கலக்கக்கூடாது. அவ்வாறே, கிரந்தக் கொத்தில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் இடம்பெறக் கூடாது. கிரந்த ஒருங்ககுகுறி தனியே இடம்பெற்றால், அதற்கு முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) இடமளிக்கவே கூடாது. இதற்கு மாறாகக் கருத்துரைப்போர் எவரையும் வரலாறு மன்னிக்காது; அவர்கள் தீராப்பழி சுமக்க வேண்டியவர்களாவர் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இனக் காப்பில் தமிழ்நாட்டரசு இழைத்த இரண்டகத்தால் தமிழர் நெஞ்சில் ஏற்பட்டுள்ள கொதிப்பை, மொழிக்காப்பால் ஓரளவேனும் தணிக்க முனையட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
(consortium : an association of several companies – The Compact Oxford Reference Dictionary)
___________________________________________________________________________________________     
 நன்றி உரைப்பு: 
இக்கட்டுரை எழுத உதவியாகச் சில செய்திகளுக்கு விளக்கம் அளித்தது திரு நாக. இளங்கோவனாரின் வலைப்பதிவு. அவருக்கு நம் நன்றி.
அவர் வலைப்பதிவு: http://nayanam.blogspot.com
­­­­­­­­­­­­­­­­­­­­­­­-----------------------------------------------------------------------                                        

சனி, 22 ஜனவரி, 2011

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக்கலப்பு

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு
30-01-2011 ஞாயிறு
காலை 9.00 முதல் மாலை 1.00 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்)புதுச்சேரி
................................................
பங்கேற்று கிரந்தக் கலப்பு எதிர்ப்பைப் பதிவு செய்ய இருப்பவர்கள்

பேராசிரியர் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர், (ஓய்வு) தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்து பாதுகாப்பியக்கம்
திரு. இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர்உத்தமம் INFITT), சென்னை
.................
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்,
காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி
திரு கோ.சுகுமாரன்
செயலர்மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர்உத்தமம், (INFITT).
திரு. இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
திரு ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம்
திரு.ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டிwww.thiratti.com
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,
திரு ம. இளங்கோ, அவர்கள்
செய்தித் தொடர்பாளர் பெரியார் திராவிடர்கழகம் புதுச்சேரி
.....................
திருமா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழிசென்னை.
திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
தாளாண்மை உழவர் இயக்கம்
திருஇரா.அழகிரி அவர்கள்
தமிழர் தேசிய இயக்கம் புதுச்சேரி
திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரிதிரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர்தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,
திருதமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர்தனித்தமிழ்க் கழகமபுதுச்சேரி,

திருதமிழ்நெஞ்சன்
 புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி,
திருபராங்குசம், புதுச்சேரி,
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர்நண்பர்கள் தோட்டம்புதுச்சேரி
தொடர்புக்கு:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர் 
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்rajasugumaran@gmail.comஇணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com,

வெள்ளி, 14 ஜனவரி, 2011

வீரவணக்கம்!

விழுப்புரம் வி.ப.இளங்கோவனார்க்கு
வீரவணக்கம்!


இவரியா ரென்குவீ ராயி னிவரே
தவச்சிறி தாறுந் தனிநல முன்னா
ஓங்குறு தூய்தமி ழுணர்வின ரென்றும்
நீங்கா நல்லிசை நெடுந்தொண் டாற்றிய
பெறற்கரும் பெரியார் பெருந்தொண் டரெனும்
சிறப்புறு தகைசால் செவ்வியர் பரந்த
ஆழ்கட லன்ன அமைதியர் ஆன்றநற்
காழ்சேர் கொள்கைக் கடுந்தொண் டாற்றியார்!
அழுக்குடை மழியா அடர்தா டிமுகம்
விழும இயக்க வி.ப. இளங்கோ!

மிதிவண் டிக்கடை; மேவிடு நினைப்பெலா
மெதிலுமெப் போது மெந்தமிழ் தமிழர்
உயர்வுற லன்றி யொன்றுவே றில்லை!

நயநற் கருத்தை நாடொறும் பலகையில்
சாலையோ ரத்தே சலிப்பிலா தெழுதிப்
பாலை மனத்தும் பசுமை கிளர்த்தவர்!

புதுவைவா னொலியில் புரையுறுந் தமிழ்கண்
டிதுவிது தவறென எடுத்தவர்க் குரைத்தவர்!

ஈழக் கொடும்போ ரிழிவுகண் டதிர்ந்தே
வேழமென் றேழ்ந்தவர்! வெய்தென் றேபல
அறவழிப் போரில் அழிசிறை ஏகியார்!

திறநற் றமிழில் தெளிவுறத் தொடர்ந்து
கொடுத்த படியே தொடுத்தார் பாடல்!

எடுப்புற எழுதி இளம்பா வலர்க்களி
பரிசுமுந் நூறு பாங்கினில் பெற்றவர்!

சரிதவ றுணர்த்தித் தமிழோ சைக்கிவர்
எழுதிய மடல்கள் இவருணர் வுரைக்கும்!

பழுதிலாத் தொண்டால் பைந்தமிழ் காத்தவர்!
இருங்கடல் வையத் தருங்கட னாற்றிய
ஒருமறத் தமிழர் ஓய்வுற் றாரே!

தேரலர் எதிர்த்தே தீந்தமிழ் காத்த
வீரருக் கெங்கள் விறலுறு
வீரவ ணக்கம்! வீரவ ணக்கமே!
---------------------------------------------------------------

திங்கள், 3 ஜனவரி, 2011

நெடுநல்வாடை அறிமுகமும் ஆய்வும் – அறுசீர் மண்டிலங்களில்!

நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
                            
(நான்குகாய் மா - தேமா வாய்பாட்டில் அமைந்த அறுசீர் மண்டிலங்கள்)


கழக(சங்க) இலக்கியமும் நெடுநல்வாடையும்

சீரார்ந்த செம்மொழியாம் செந்தமிழின் தமிழர்தம்
     சிறப்பைச் சொல்லும்
ஈரார்ந்த சான்றுகளாய் இலங்குவன நம்கழக
     இலக்கி யங்கள்!
கூரார்ந்த தொன்மையுறு கொழுஞ்செழுமை நாகரிகம்
     கூறா நிற்கும்!
வேரார்ந்த சொன்மலியும் வியன்றமிழின் நுட்பமெலாம்
     விளக்கிச் சொல்லும்!

பத்துப்பாட் டுடனெட்டுத் தொகைக்கழக இலக்கியமாம்
     பத்துப் பாட்டில்
முத்தேழாம் பாட்டாகும் முழுத்திறத்தில் நக்கீரர்
     மொழிந்த திந்த
எத்துணையும் சுவைகுன்றா தேந்துநெடு நல்வாடை
     ஏற்ற பேரும்
ஒத்தவகை கருத்தறியின் உணர்ந்துசுவைத் தேத்திடலாம்
     ஓர்ந்து நோக்கி!

பெயர்ப் பொருத்தம்

தலைவன்றன் பிரிவாற்றாத் தலைவிக்கோ நெடுந்துயரைத்
     தந்த வாடை!
உலைவறியாத் தலைவனுக்கோ உறுவெற்றி ஞாட்பளிக்கும்
     ஒருநல் வாடை!
கலைவறியா நிகழ்நடக்கும் காலமதும் வாடையெனக்
     கருத்தாய்த் தேர்ந்தே
நிலைபொருந்த பெயரிட்டார் நெடுநல்வா டையெனவே
     நேர்த்தி சேர்த்தார்!  

பாட்டும் உரையும்

சுவையான நிகழ்வுகளைச் சொல்லழகில் கலைநுட்பில்
     சொல்வ தோடே
சவையேற்றும் நச்சருரை தந்தகருத் தெழுப்பியதோர்
     தக்கத் தாலே
சுவைகூடும் இப்பாடல் சொலலகமா புறப்பொருளா?
     சொற்போ ராலே!
இவையிருக்க, சுருக்கமுற இப்பாடல் இயம்புவதை
     இனிகாண் போமே!

பாட்டு கூறும் நிகழ்வுகள்

கூதிர்கா லத்தரசன் கொண்டதுணை தனைப்பிரிந்தான்
     கொடும்போர் செய்ய!
கோதில்தூய் தலைவியுறும் கொடுந்துயரை செவிலித்தாய்
     குறைக்க எண்ணி
ஊதிகைநெல் தூவிதொழு துருகிமனம் கொற்றவையை
     உதவக் கேட்பாள்!
மாதிவளின் துயர்தீரே! மன்னன்வா கைசூடி
     வரச்செய் என்றே!


கூதிர்காலமும் ஊரும் உயிர்களும்

ஒருநூற்று எண்பதுடன் ஓரெட்டின் அடிப்பாட்டில்
     உரைக்கும் செய்தி
பருகிடவே ஒவ்வொன்றாய்ப் பார்த்திடுவோம் சுருக்கமுற
     பாரில் மாரி
பெருவெள்ளம்! கோவலரும் பிறவுயிரும் நடுங்குகுளிர்
     பீழை கூறி
இருங்களியும் ஊர்செழிப்பும் ஈரநீர்ப்பூ விரிசிரிப்பும்
     எழில்வி ளக்கும்!

ஓங்கியவீ டமைந்ததெரு ஓராற்றைப் போல்கிடக்கும்
     ஊர்வ ளத்தில்!
வீங்குதிணி தோள்வலியர் விலங்கன்னார் முறுக்குடலர்
     வீழ்ம ழைக்கே
ஆங்கஞ்சா தலைந்திடுவர் அளிமூசு கட்குடியில்
     அறுவை தொங்க!
பாங்காக விளக்கேற்றிப் பனிமுல்லை நெல்தூவிப்
       பணிவர் பெண்டிர்!

கூதிர்கால நிலைப்பால் விளைவுகள்

மனையுறையும் ஆண்புறவு மகிழ்பெடையோ டுணாத்தேட
     மறந்து மாழ்கி
வினையின்றி நின்றவலி மிகவாகக் கால்மாற்றும்
     விந்தைக் காட்சி!
புனைமாலை தவிர்பெண்டிர் பூச்செருக நறுங்கூந்தற்
     புகைவ ளர்ப்பார்!
முனைகொக்கி விசிறிதொங்கும் மூண்டிருக்கும் சிலந்திவலை
     மொழிதல் நுட்பம்!

தென்றலடி சாளரத்தின் திண்கதவங் குளிர்க்கஞ்சித்
திறவாத் தாழில்!
கன்னலுள தண்ணீரைக் கருதியுணார் குளிர்காயக்
     கடுகிச் செல்வார்!
குன்றியுள யாழிற்பண் கூட்டுதற்கே நரம்பைமுலைக்
     கொம்மை வைப்பார்!
புன்கூர்ந்த காதலர்கள் புலம்பிடுவர் பிரிதுன்பில்
     போகாக் கூதிர்!

அரசியின் மனை வகுத்த முறை

கதிரவனின் வெப்பொளியில் காலிரண்டு குடகுணக்கில்
     கணக்கில் நட்டே
அதிலிரண்டு கோல்குறுக்காய் அளவிட்டு வைத்துப்பின்
     அவற்றின் நீழல்
பொதிந்தொன்றன் மேலொன்றாய்ப் பொருந்தியொரு கோடாகும்
     போதில் கண்டே
மதிபுலவர் நூலறிந்தார் மயக்கின்றிக் கயிறிட்டே
     மனைவ குப்பார்!

வாயிலும் முன்றிலும் வழங்கொலிகளும்

புகுவாயில் யானையமர் மறவன்கைக் கொடியுயர்த்திப்
     போகும் வண்ணம்
மிகுமலையில் திறந்தன்ன மேலுயர நெடுவாயில்
     வினைவல் லாரால்
தகுவுயரத் திருக்கதவம் தாழமைத்துப் பிடிபொருத்தித்
     தக்க வாறு
தெகுளுறவெண் கடுகொடுநெய் தேர்ந்தப்பி நெடுநிலையும்
     திகழா நிற்கும்!

மணல்ஞெமிரும் முன்றிலிலே மானன்னம் துள்ளிமிக
     மகிழ்வி லாடும்!
உணவாம்புல் தெவிட்டபரி ஒலிகனைப்பும் நீர்வீழும்
     ஒலியும் மஞ்ஞை
முணங்கின்றி அகவொலியும் மூண்டுமலை எதிரொலியாய்
     முழக்கம் கேட்கும்!
இணங்கலுறப் பலவொலியும் இவ்வாறே அரண்மனையில்
     எழுச்சி கொள்ளும்!

அரசியின் நல்லில்லம்

பாவையகல் நெய்யூற்றிப் பருத்திரியும் நேரெரியப்
பார்த்துத் தூண்டித்
தேவையுறு பள்ளிதொறும் தேங்கிருளை நீக்கியொளி
     சேர்த்தும் காவல்
கோவையலால் பிறஆண்கள் குறுகியலா வரையிருக்கும்
     குன்றென் இல்லில்!
பூவைமிகக் கொள்கொடிகள் பொலிவான்வில் குன்றின்மேல்
     போல்வி ளங்கும்!

வெள்ளியெனச் சுதைசாந்து வீசவொளி பூசிமிக
     விளங்க, தூண்கள்
வள்ளுரக்காழ் கருநிறத்தில் வாய்த்திருக்க நெடுஞ்சுவரோ
     வார்ப்புச் செம்பில்
உள்ளியவே லைப்பாட்டில் உயர்வாகச் செய்ததைப்போல்
     ஓங்கி நிற்கும்!
கொள்ளையழ கோவியப்பூக் கொடிகளுடன் கருப்பெயர்தாங்
     கும்நல் லில்லம்!

கட்டிலும் படுக்கையும்

நாற்பத்தின் அகவையுடை நால்வாய்ப்போர்க் களம்பட்டு
     நல்குங் கொம்பை
ஆற்றலுற கைவல்லான் அழகாகக் காற்குடமாய்
     ஆக்கிக் கட்டில்
ஏற்றவகை இலையுருவை இடையமைத்து நாற்புறமும்
     இனிய முத்து
நூற்சரமாய்த் தொங்குமதன் மேல்நோக்கின் தகட்டிலுரு
     நுட்பம் தோன்றும்!

கான்முல்லை சேர்ந்தமலர் கவினுறவே வேறறிய
     கட்டில் இட்டார்!
கோன்கோதை தாம்படுக்கக் குழையிணைவில் படுக்கைகளைக்
     கூட்டி வைத்தார்!
மேன்மென்மை புணரன்னம் மெலவுதிர்த்தத் தூவியணை
     மேலே இட்டார்!
தேன்றவசக் கஞ்சியுடன் திகழ்சலவை மடியாடை
     தேர்ந்து வைத்தார்!

அரசியின் நிலை

ஆரமில்லாத் தனித்தாலி அழுத்துமுலை உலர்கூந்தல்
     ஐயன் நீங்க
சீரழகி நுதல்உலற செறிகுழையும் அகற்றியதால்
     சிறிதே தொங்கும்
ஆரழகு வடுச்செவியே! அவள்முன்கை பொன்வளையும்
     நீங்கி ஆங்கே
நேரல்லாத் தொடிசங்கில் நெளிமெலிதாய் துய்யுடையும்
     நீக்கா மாசில்!

தீட்டாத ஓவியமாய்த் திகழ்வளவள் தோழியர்க்கோ
     தேமல் மேனி
ஊட்டத்தோள் வேயொப்ப உறுத்துமுலை மரையொக்க
     ஒடுங்கி டையாம்!
நாட்டமுடன் தோழியரும் நல்லடியை வருடிடுவர்
     நன்மை சொல்வர்!
கூட்டமுறு செவிலியரும் குறைதேற்றத் துணைவனின்னே
     குறுகும் என்பார்!

ஆற்றாதாள் இன்சொலினும் அதையேற்கா தகங்கலங்கி
     அமைதி அற்றாள்!
மேற்கட்டின் ஓவியத்தில் விண்ணிலவும் மீன்சகடும்
     மேவி நீங்கா
வீற்றமெண்ணி நெட்டுயிர்த்தாள் விழிவடிநீர் செவ்விரலால்
     மெலத்து டைத்தாள்!
மாற்றியவள் படர்தீர மன்னற்கு விறல்தந்தே
     மறல்மு டிக்க!

பாசறையில் அரசன்

ஒளிப்பட்டப் போர்யானை ஒற்றைக்கை நிலம்புரள
     ஒறுத்த வீரர்
ஒளிறுபகை போழ்ந்திடவே உற்றபுண்கண் டவர்வீரம்
     உயர்த்திப் போற்ற
நளிர்வாடை அகற்சுடரை நனியசைக்க வேம்பார்த்த
     நல்வேல் தாங்கி
மிளிர்பொருநன் முன்சென்றே விழுப்புண்ணர் குறித்திறைக்கு
     விளக்கிச் சொல்வான்!

மணியணிந்த கடிவாளம் மாட்டுகிற சேணம்வேய்
     மாத்தாள் பாய்மா
துணிவோடே பாசறையின் தொய்யலதை எங்கெங்கும்
     துளித்துச் செல்ல
அணிவெண்கொற் றக்குடைக்கீழ் அந்துகிலை இடப்பக்கம்
     அணைத்துக் கொண்டே
பிணித்தவாள் தோள்தொங்கும் பெருமறவன் சுவலில்கை
     பெய்து செல்வான்!

நள்ளிரவும் பள்ளிகொளா நல்வேந்தன் சிலரோடே
     நண்ணி யாங்கே
வள்வலியர் விழுப்புண்ணார் மனம்மகிழக் கண்டவரை
     வாழ்த்தி ஊக்கி
நள்ளார்தம் மோடுபொரும் நசைகொள்பா சறைத்தொழிலாம்
      நவில்கின றாரே!
தெள்ளலுற நக்கீரர் தேர்ந்துரைத்த பாட்டிலிவை
     தெரிவித் தாரே!

அகமா புறமா?

அகப்பொருளி லக்கணத்தில் அன்றேதொல் காப்பியனார்
     அறியத் தந்தார்
மிகத்தெளிவாய் மக்களியற் பெயர்சுட்டி எவ்விடத்தும்
     விளியா ரென்றே!
அகமறிந்த நக்கீரர் அதைமீறா தெழுதிடினும்
     அறிவர் நச்சர்
தகவாய்ந்தே தருமுரையில் தலைவனியற் பெயரறிந்து
     தருகின் றாரே!

வீரர்படைத் தலைவனின்வேல் வேம்புதலை யாத்த'தென
     விளம்ப லாலே
கீரருரைப் படிவேலில் வேப்பம்பூத் தாருளதால்
     வேந்தன் மாறன்!
வீரமிகப் பலரோடு முரணியனென் றுரைத்ததனால்                                                             விளங்கும் மன்னன்
கூரறிவு நெடுஞ்செழியன்  கொடுந்தாக்கில் எண்மரென
     கொண்ட செய்தி

இன்னவகை ஆய்வுரையால் இயற்பெயரைக் கண்டுரைத்தே
     இந்தப் பாட்டு
சொன்னவகை புறப்பாட்டே சுட்டியந்த வேப்பந்தார்
     சொன்ன தென்றார்!
இன்னுமதன் திணைவாகை என்றுரைத்தே வெற்றிதனை
     இயம்பி யுள்ளார்!
பின்னுமதன் துறைவாடைப் பாசறையா மதுபாலைப்
     புறமென் றாரே!

புலவர்தம் உச்சிகொளும் நச்சருரை இவ்வாறு
     புகன்ற போது
பலராய்வு வேம்பெனவே பகன்றததன் தழையைத்தான்
     படலை அன்றென்
றிலகலுற சான்றுடனே எடுத்துரைத்தே இதுஅகமே
     என்று சொல்லும்!
நிலவுமிரு ஆய்வுகளும் நெடுநல்வா டைச்சிறப்பை
     நிலைக்கச் செய்யும்!

அகப்புற ஒப்பீடு

நெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள
     நினைத்தி ருப்பான்!
நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள்
     நெஞ்சம் நொய்வாள்!
படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான்
     படர்த ணிக்க!
கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள்
     கலக்கம் மாறாள்!

செந்தமிழின் இலக்கியங்கள் செழியன்பு செருமறத்தின்
     சீர்மை சொல்லும்!
சிந்தையுறு நுண்ணுட்பச் செய்திகளைத் தெரிவிக்கும்
     தெருட்சி மாட்சி!
இந்தநெடு நல்வாடை இன்னன்பும் மறச்சிறப்பும்
     எடுப்பாய்க் கூறித்
தந்தவகை அன்புமறம் தமிழினகப் புறச்சிறப்பைத்
     தகவி ளக்கும்!

பாட்டு நலம்

பாட்டுநலம் அனைத்தையுமே பாராட்டல் எளிதன்று
     பலநி கழ்வை
ஏட்டினிலே இயல்பின்பம் எள்ளளவும் மாறாதே
     எழுதி யுள்ளார்!
காட்டும்வா னியற்சிறப்பும் கணியறிவும் ஓவியமும்
     கனியத் தந்தே
தீட்டியுள அழகியற்கை தேன்சுவையாய் உயிரியக்கம்
     திகட்டா இன்பம்!

சிறப்புரைக்கும் மருவினிய கோலநெடு நல்வாடை
     செப்பக் கூற்று!
திறஞ்சான்ற பொருள்வளமும் தேர்ந்தெடுத்த உவமைகளும்
     செஞ்சொற் சீரும்
மறஞ்சான்ற மன்னவனின் மதித்தொழுகும் பொதுவுணர்வும்
     வழங்கும் பாட்டு
விறலார்ந்த நாகரிகம் விளங்கவுரை நக்கீரர்
     வெற்றிப் பாட்டாம்!

-------------------------------------------------------------------