நிறுத்தக்
குறிகளும் பயன்படுத்தமும்
கருத்துக்களை
வெளிப்படுத்தவும் விளக்கவும் எழுதும்பொழுது பல்வேறு குறிகளைப்
பயன்படுத்துகின்றோம். இவ்வாறு குறிகள் இடுவதை நிறுத்தக் குறியீடு (punctuation) என்று
கூறுகின்றோம். இந்த நிறுத்தக் குறிகள் சொற்றொடர்களைப் பிரித்துக் காட்டவும் பொருளைத்
தெளிவாகப் புரிந்து கொள்ளவும் பெரிதும் உதவுவனவாக உள்ளன. படிப்பவருடைய கவனத்தை
ஈர்ப்பதற்கும் நிறுத்தக் குறிகள் மிகவும் பயன்படுகின்றன.
இப்படி
இடப்பெறும் குறியீடுகள் பற்றிப் பலருக்கும் தெரியும் என்றாலும், இக் குறிகளைப்
பயன்படுத்துவதற்கெனப் பின்பற்றப்படும் வகைமுறைகளை அறிந்து, அதன்படி
பயன்படுத்துகிறார்களா எனபது ஐயப்பாடே!
பண்டைக் குறியீடுகள் :
பண்டைக்
காலத்தில் (பனைஓலை) ஏடுகளில் எழுதும் பொழுதும் கல்வெட்டுகளிலும் ஒரு பாடல் அல்லது
உரைநடைப் பகுதி எழுதி முடிந்ததும், அது முடிந்தமைக்கு அடையாளமாக, அதன் இறுதியில் ‘சுழியம்’ (0)
இடுதல் அல்லது // என்று இரண்டு கோடுகள் இடுதல் அல்லது / என்று ஒரு கோடு இடுதல்
என்னும் வழக்கம் இருந்துள்ளது.
அறிமுகமும் எச்சரிக்கையும் :
அய்ரோப்பியர்களே
பல்வேறு நிறுத்தற் குறியீடுகளை நமக்கு அறிமுகப்படுத்தி, எவ்வெவ்விடங்களில் எவ்வெக்
குறியீட்டைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கினர். நிறுத்தக் குறியீடுகளைப்
பயன்படுத்துகையில் தமிழ்மொழி இலக்கணத்திற்குக் கேடு நிகழாவாறு பார்த்துக் கொள்ள
வேண்டுவதும் இன்றியமையாததாகும்.
பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு நிறுத்தற்
குறிகளாவன :
காற்புள்ளி -
,
அரைப்புள்ளி -
;
முக்காற்புள்ளி -
:
முற்றுப்புள்ளி -
.
வினாக்குறி -
?
உணர்ச்சிக்குறி -
!
ஒற்றை மேற்கோள் குறி - ‘ ’
இரட்டை மேற்கோள் குறி - “ ”
விடுகுறி (அல்லது) எச்சக்குறி - ’
மேற்படிக்குறி - ”
சிறுகோடு -
-
தொடர் விடுநிலைக் குறி - ....
இடைப்பிறவரல் வைப்புக் குறி - -...-
பிறை அடைப்பு -
( )
பகர அடைப்பு -
[ ]
சாய் கோடு -
/
அடிக்கோடு -
அ
நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தும் முறைகள் :
காற்புள்ளி : பொருள்களை
எண்ணுமிடங்களிலும், விளி முன்னும், வினையெச்சங்களுக்குப் பின்னும், மேற்கோள்
குறிக்கு முன்னும், ஆதலால் ஆகவே ஆயினும் முதலிய சொற்களுக்குப் பின்னும்,
முகவரியில் இறுதிவரிக்கு முன்னைய வரிகளின் இறுதியிலும் இடப்படுகின்றது.
காற்புள்ளி இடுதல் தொடர்பான சில முகன்மையான
செய்திகள் :
1. சொற்களைத்
தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : (அ) தனித்தனியாகப் பிரித்தல் :
அறம், பொருள், இன்பம், வீடு என்பன உறுதிப் பொருள்களாகும்.
(ஆ) அடுக்கு அடுக்காகப் பிரித்தல் :
நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பொருஞ் சோழனும்,
உதயணனும் யூகியும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.
(இ) சொற்றொடரில், எழுவாய் ஒன்றாக நின்று, பல பயனிலைகளைப்
பெற்றுவரும்போது, இறுதிப்பயனிலை தவிர பிறவற்றிற்குப்பின் காற்புள்ளி இட வேண்டும்.
எடுத்துக்காட்டு : கணவன் கொலை
செய்யப்பட்டான் என்று கேட்ட கண்ணகி பொங்கி எழுந்தாள், விம்மினாள், அரற்றினாள்,
ஏங்கினாள், கலங்கினாள், மயங்கினாள், விழுந்தாள்.
(ஈ) பொருள்மயக்கம் நீக்கித் தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில்
காற்புள்ளி இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : அண்ணன், தம்பி
வீட்டுக்குச் சென்றதால் நான் பார்க்கவில்லை.
(உ) கல்வி, அறமும் பொருளும் இன்பமும் வீடும் நல்கும் –
என்னும் சொற்றொடரில் எண்ணும்மைகளுக்குப் பின் காற்புள்ளி இடுதல் தவறு.
பெரிய
சொற்றொடர்கள் இணைக்கப்படும் பொழுது எண்ணும்மை இருப்பினும் தெளிவுக்காகக்
காற்புள்ளி இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : குறிஞ்சிக்
காட்சிகளைக் கூறுவதில் வல்லவராகிய கபிலரும், வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவதில்
சிறந்தவராகிய பரணரும், பத்துப்பாட்டில் இரண்டு பாடல்களை இயற்றியவராகிய நக்கீரரும்
கடைக்கழகப் புலவர்கள்.
‘உம்’ இடைச்சொற்கள் நெருங்கி வரும் இடங்களில்
காற்புள்ளி இடவேண்டிய தில்லை. அவை ஒன்றற்கொன்று தொலைவில் அமைந்திருக்குமாயின்
காற்புள்ளி இடவேண்டும் எனபதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.
அரைப்புள்ளி : 1. ஒரே
எழுவாயில் பல பயனிலைகள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், எழுவாய்க்குரிய
உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும்
பயன்படுத்தப் படுகின்றது.
எடுத்துக்காட்டு : (அ) பலர்
வயிற்றளவை மீறி உண்பர்; பசியாலும் உண்பர்; கிடைத்தபோதெல்லாம் உண்பர்; நாவிற்காக
உண்பர்; வயிறு கெட்டும் உண்பர்.
(ஆ) கண்ணன் தேர்வு எழுதினான்; ஆனால் அதில் தேரவில்லை.
2. காரணம் காட்டும் ஏனென்றால் என்பதற்கு முன் அரைப்புள்ளி
இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : நான் இன்று
பேசமாட்டேன்; ஏனென்றால், என் தொண்டை நோயுற்றிருக்கிறது.
முக்காற்புள்ளி : உள்
தலைப்பு அமைக்கும் போதும், ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும், சொற்றொடரில்
கூறியதொன்றை விரித்துக் கூறும்போதும் முக்காற்புள்ளி இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு : 1. வாழ்வு இரு
திறத்தது : ஒன்று உயிர் வாழ்வு; மற்றொன்று உடல் வாழ்வு. 2. பொருள் கூறுக : களிறு,
பிணிமுகம்.
முற்றுப்புள்ளி : 1.
சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு : நீ உள்ளே வா.
2. சுருக்கச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும்
முற்றுப்புள்ளி இட வேண்டும். எடுத்துக்காட்டு :(அ)
திரு. மணி. திருநாவுக்கரசு. (ஆ) திரு. திரு.வி.க.
3. பட்டப் பெயர்களுக்குப்பின் முற்றுப்புள்ளி இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : திரு. இ.
செழியன், க.மு.
வினாக்குறி : வினாச்
சொற்றொடர்களின் இறுதியில் இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு : பாடுபட்டால்
பயன் இல்லாமல் போகுமா?
சொற்றொடருக்கு நடுவில் கேள்விக்குறி வரக்கூடாது. ‘நீங்கள்
யார் என்று அவர் கேட்டார்’ என்னும் சொற்றொடரில் யார் என்ற
சொல்லுக்குப் பின்னால்
வினாக்குறி கண்டிப்பாக இருக்கக்கூடாது.
உணர்ச்சிக்குறி :
வியத்தல், வரவேற்றல், வாழ்த்தல், வைதலின் போது பயன்படுத்தப் படுகின்றது. நம்ப
முடியாது என்பதையும் இகழ்ச்சியுடையது என்பதையும் காட்டுமிடங்களிலும்
உணர்ச்சிக்குறியிடுதல் உண்டு.
எடுத்துக்காட்டு : (அ) அந்தோ! பல
பழந்தமிழ் நூல்கள் அழிந்தனவே. (ஆ) வாழி! வாழி! தமிழ்நாடு வாழியவே!
கண்டவாறு உணர்ச்சிக்குறியை !, !!, !!! இவ்வாறெல்லாம் இடுதல்
விரும்பத் தக்கதன்று.
ஒற்றை மேற்கோள் குறி : சிறப்புக்
காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற
இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் ஒற்றை
மேற்கோள் இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு : பரதன், “நான்
என் செய்வேன்! அண்ணன், ‘நீபோ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே
வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்துவிட்டேன்”
பிரித்துக்
காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்தற்கும்
ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப் படுகின்றது.
எடுத்துக்காட்டு : (அ) ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’
என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா. (ஆ) ‘முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.
இரட்டை மேற்கோள் குறி : தன் கூற்றை வலியுறுத்தத் தன்னினும்
சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே
கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : (அ) “அறம்தலை
நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர். (ஆ) நெடுஞ்செழியன், “இப்போரில்
நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங்கோலனாவேனாக!” என்று
சூளுரைத்தான்.
விடுகுறி (அல்லது) எச்சக்குறி : சில எழுத்துக்களை அல்லது எண்களை
விட்டுவிடும் போது ’ இக் குறியிடுக.
எடுத்துக்காட்டு : 26-11-’54
என்பதில் 1954இல் உள்ள 19 விடப்பட்டது காண்க.
மேற்படிக்குறி : மேற்குறித்ததே
இஃது என்று காட்டுவது மேற்படிக்குறி. எடுத்துக்காட்டு
: ஆடுகொடி – வினைத்தொகை
கடிநாய்
- ” ”
சிறுகோடு : ஒன்றைச்
சேர்ப்பதைக் குறித்ததற்கும் விரித்துக் கூறுபவற்றைத் தொகுத்துக் கூறுமிடத்தும்
சிறுகோடு இடப்படும்.
எடுத்துக்காட்டு : நண்பர், சுற்றத்தார்,
ஊரார் – எல்லாரும் என்னைக் கைவிட்டார்.
தொடர் விடுநிலைக் குறி : வேண்டாததை
விடும்போது ...... இக் குறியிடப்படுகிறது.
எடுத்துக்காட்டு : அருமை
மாணாக்கர்களே, உங்கள் படிப்பைக் கவனியுங்கள்! உங்கள் வீட்டைக் கவனியுங்கள்! உங்கள்
நாட்டை நோக்குங்கள்! ........... குற்றங்குறை இருப்பின் மன்னிப்பீர்களாக!
இடைப்பிறவரல் வைப்புக் குறி : இக்
குறி ஒரு சிறு சொற்றொடரின் முன்னும் பின்னும் உள்ள சிறு கோடுகளைக் குறிக்கும்.
கூறுகின்ற சொற்றொடரின் நடுவில் இலக்கண முறையில் தொடர்பில்லாது, இடைப்பிறவரலாக
வரும் தனிச் சொற்றொடரைப் பிரிக்க இக்குறி இடப்படும்.
எடுத்துக்காட்டு : இறுதியாக –
சுருங்கக் கூறுமிடத்து – நாங்கள் வீட்டுக்கே திரும்பி வந்தோம்.
பிறை அடைப்பு : ஒன்றனை விளக்க
மற்றொரு சொல்லைப் பிறை அடைப்புக்குள் குறிப்பது உண்டு.
எடுத்துக்காட்டு : பாரதியார்
நுழைவுத்தேர்வில் (entrance examination) முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
பிறை அடைப்பு சொற்றொடரின் இறுதியில் வந்தால் பிறை அடைப்புக்குப் பிறகு புள்ளி வைக்க
வேண்டும்.
எடுத்துக்காட்டு : குற்றங்கள்
மூன்றாவன : இணைவிழைச்சு (காமம்), வெகுளி (குரோதம்), மயக்கம் (மோகம்).
முழுச் சொற்றொடரும் பிறை அடைப்புக்குள் இருப்பின் முற்றுப்
புள்ளியையும் பிறைஅடைப்புக்குள் இட வேண்டும்.
எடுத்துக்காட்டு : நான்
முதன்முதலாகச் சென்ற வெளியூர் திருப்பெருந் துறையாகும். (அது இக்காலத்தில்
ஆவுடையார் கோயில் என்று வழங்கப் படுகின்றது.)
பிறை அடைப்புக்குள் மேலும் பிறைஅடைப்பு தேவைப்பட்டால், பகர
அடைப்பு இடவேண்டா; பிறை அடைப்பையே பயன்படுத்தலாம்.
பகர அடைப்பு : பிறருடைய
உரைகளை மேற்கோளுக்காக எடுத்தாளும் போது, எழுதுகிறவர் இடையிடையே தம்
கருத்தைத்தெரிவிக்கத் தம் கருத்தைப் பகர அடைப்பிற்குள் எழுதவேண்டும்.
எடுத்துக்காட்டு : “நரசிம்ம
வர்மனின் படைத்தலைவர் விக்கிரம கேசரி [பிற்காலத்தில் பரஞ்சோதி] இரண்டாம்
புலிகேசியை வெற்றிகொண்டு திரும்பும்போது பிள்ளையார் சிலையைத் தமிழகத்திற்குக்
கொண்டு வந்தார்”.
சாய் கோடு : இரண்டில் ஒன்றை
அல்லது பலவற்றில் ஒன்றைத்தேர்வு செய்யக்கூடிய இங்களில் சாய் கோடு இடப்படுகிறது.
எடுத்துக்காட்டு : பால் : ஆண்/
பெண்
தொகையைக் குறிக்கும் எண்ணை அடுத்து, இருசிறு படுக்கைக்
கோடுகளுடன் இணைந்து இடப்படுகிறது.
எடுத்துக்காட்டு : உருவா 5000/=
அடிக்கோடு : முகன்மையான
ஒன்றைக் கவனத்தை ஈர்க்குமாறு தருவதற்கு அடிக்கோடு இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு : ஒப்போலை அளிக்க
வருவோர் கண்டிப்பாக அடையாள அட்டை எடுத்துவர வேண்டும்.
இவற்றைத் தவிர,
நூலில் அடிக்குறிப்பைப் பார்க்குமாறு கூறும் சில
குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள் சில குறியிடுகளாவன :
உடுக்குறி -
*
குத்துவாட் குறி -
+
பிரிவுக்குறி -
$
சதுரக்குறி -
#
இணை குறி -
ll
செய்யுளில் நிறுத்தக்குறிகள் :
செய்யுளில் நிறுத்தக்குறிகள் இடுவது பற்றி இருவேறு
கருத்துகள் உள்ளன. இருந்தபோதிலும், எளிதில் புரிந்து கொள்ள இயலாதாருக்கு உதவியாக
தேவை நேருமிடங்களில், பொருத்தமான குறிகளை இடலாம்.
எனினும், ‘நிறுத்தக் குறிகளை மூலத்துள்
நுழைப்பது முறையன்று; சொல் பிரிக்கையில் அடைப்புக் குறிக்குள் சந்திகளை நுழைப்பதும் முறையன்று; சீர் ஒழுங்கைக்
குலைத்து அச்சிடுவது, பாவடிவை மாற்றும்’ என்று கூறுவாரின் கவலையைப்
புறக்கணிக்கணித்தல் தவறாகும்.
எடுத்துக்காட்டு : கீழே
காண்பது நல்வழி 15ஆம் பாடல். எந்த நிறுத்தக் குறியுமின்றி உள்ளது.
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளு மில்லை உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
இப்பாடலில் கீழ்க்காணுமாறு குறீயீடு இட்டால், எளிதில்
புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது.
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளு மில்லை! - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
இப்பாடலையே கீழ்க்காணுமாறு தவறாகக் குறியிட்டால் பொருளைக்
கெடுத்துக் குழப்பிவிடும்.
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம்! ஒருநாளு மில்லை உபாயம்!
இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய்
விடும்.
எனவே, தக்க இடத்தில் தகுந்த நிறுத்தற்குறியிடத் தெரியாத
போது, செய்யுளில் நிறுத்தற்குறியிடாமல் விடுதலே சாலச் சிறந்ததாகும்.
நன்றியுரைப்பு :
துணையிருந்த நூல்கள்:
1. பிழையின்றி எழுதுங்கள் -
மு.வை.அரவிந்தன்.
2.. நல்லதமிழ் எழுத வேண்டுமா? - அ.கி.பரந்தாமனார்.
3. புத்தகக்கலை -
அ.விநாயகமூர்த்தி.
துணைசெய்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.
--------------------------------------------------------------------------
.