புதன், 9 ஜூலை, 2008

பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!


          பொதுவாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கும் பழக்கமில்லாதவன் நான். இன்று (8-7-2008) இரவு பத்தரை மணியளவில் 'விசய்' (Vijay) தொலைக்காட்சியில் நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.
            இதற்கு முன்னும் இத்தலைப்பில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இன்று நடந்த நிகழ்ச்சியில், அணமையில் நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணாக்கரை அவர்தம் பெற்றோருடன் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து சிறப்பித்தனர்.
            இதில் போற்றத்தக்க சிறப்பு இருந்தது. பொருளியல் நிலையில் மிகமிகக் குறைந்த நிலையில் இருந்தபோதும் முயன்று படித்துப் பல்வேறு பாடங்களில் முதன்மையான மதிப்பெண்களைப் பெற்ற பையன்களையும் பெண்களையும் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைப் பெற்றோருடன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது அத்தொலைக்காட்சி!
            அம்மாணாக்கர்க்குப் பொருள் உதவியும் அத் தொலைக்காட்சி செய்தது. கணிப்பொறிக் கடவைகள்(courses) படிக்க உதவியும் பெற்றுத் தந்துள்ளது.
கூலிவேலைக்காரர், உணவுவிடுதிப் பரிமாறுநர், வீட்டுவேலை செய்யும் பெண், ‘புரியப்பம் (பரோட்டா) உருவாக்குநர், துப்புரவுத் தொழிலாளர் போன்றோரே அம்மாணாக்கரின் பெற்றோராயிருந்தனர்.
அவர்கள், தம் பிள்ளைகளைப் படிக்க வைக்கப் பெரும்பாடு பட்டதையும் அப்பிள்ளைகள் நன்கு படித்துக் குன்றின் மேலிட்ட விளக்காகச் சிறந்தபோது பெற்ற மகிழ்ச்சியையும் உணர்வுப் பெருக்கில் கண்கலங்கி பேச்சுவரா நிலையில் தம் உணர்வுகளை ஒருவாறு ஒருநிலைப் படுத்திக் கொண்டு எடுத்துக் கூறினர். அவற்றைத் தொலைக்காட்சியில் கண்ணுற்றவரும் செவிமடுத்தரும் கண்கலங்கினர்!
            இக்காட்சி, பலருக்கு ஊக்கமளிக்கும். பலருக்கு உதவி கிடைக்க வழி செய்யும். மாந்த நேயத்தோடும் குமுகாய முன்னேற்ற அக்கறையோடும் இந்நிகழ்ச்சி அமைக்கப் பட்டிருந்ததெனில், மிகையுரை அன்று. விசய்தொலைக்காட்சிக்குப் பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு! *****************************************************************

புதன், 2 ஜூலை, 2008

எல்லாரும் ஏமாறல் இல்!



இன்னிசைச் சிந்தியல் வெண்பா 

சொல்லுவ தொன்று செயலொன்றா? - தொல்லுலகில் 
பல்லபல ரேமாற்றல் பைங்கண்ணாய் ஒல்லுமே!
எல்லாரும் ஏமாறல் இல்.


வியாழன், 26 ஜூன், 2008

மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!


(ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர்   தமிழாக்கம் : தமிழநம்பி) 


            திருவாளர் ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முகன்மையான துறையொன்றில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். குமுக நிலையிலும் அரசியலிலும் பெயர் பெற்ற ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1967ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அவருடைய இளம் மனைவியுடன் என்னைக் காண வந்தார். அவர் மனைவியை வரவேற்பு அறையிலேயே அமர்த்திவிட்டு, அவரை மாடியிலுள்ள அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றேன். ஒரு நீண்ட கதையைக் கூறினார்.
            செரீன் என் இரண்டாம் மனைவி. முன்னாள் அரசத் தூதுவர் ஒருவரின் உடன் பிறந்தாளாகிய என் முதல் மனைவி, ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்து விட்டாள். அக்குழந்தையும் பின்னர் இறந்துபோய் விட்டது.
            செரீன் மதாராவைச் சேர்ந்தவள். நான் பணிஓய்வு பெற்ற பிறகு செரீனை மணந்து கொண்டேன். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
            இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு மழைநாளில், வேறு வேலை இல்லாத நிலையில், நாங்களிருவரும் குவளைக் கணியம்பார்ப்பதில் ஈடுபட்டோம். இதற்கு முன்பு ஒருமுறையும் இதில் ஈடுபட்டதுண்டு.
            வில் தொடங்கி நெடுங்கணக்கின் எல்லா எழுத்துக்களும் உணாமிசை (Dining table)மேல் வட்டமாக எழுதப்பட்டிருக்கும். நடுவில் ஒரு குவளை தலைகீழாக வைக்கப்பட்டிருக்கும். நானும் செரீனும் ஆள்காட்டி விரலை அக்குவளைமேல் வைத்துக் கொண்டு ஆவியை அழைப்போம். சில நிமையங்கள் ஆவலோடு காத்திருந்த பிறகு, அக்குவளை தானாகவே மெதுவாக நகரத் தொடங்கும். கொஞ்சநேரத்திற்குப் பின், வேகம் வேகமாக நகர்ந்து எழுத்துக்களைத் தொடும். இதுவே குவளைக் கணியம்என்னும் குவளை உரை’(Tumbler-talk) ஆகும். படித்துத்தெரிந்துகொள்ள வசதியாக, குவளை தொட்ட அந்த எழுத்துக்களை வரிசைப்படி எழுதினோம்.
            முதலில் குவளையை நகர்த்திய ஆவி, காலஞ்சென்ற தலைமை அமைச்சர் திரு.பண்டார நாயகாவினுடையது ஆகும். பண்டார நாயகா எங்கள் நண்பராகையால் நாங்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டுச் சரியான விடைகளையும் பெற்றோம்.
            இரண்டாவதாகக் குவளையை நகர்த்திய ஆவி நாங்கள் அறிந்திராத தாமசு சில்வா என்பவருடையது. மூன்றாவதாக வந்தது பூண்பாட்டம்மை யாரின் ஆவி! அந்த அம்மையார் அவர் கணவரால் சுட்டுக் கொல்லப் பட்டதைக் கூறியது.
            நான்காவதாக வந்தது மேதானந்தா என்பவருடைய ஆவி. அவர் இறக்கும் முன், நானும் அவரும் ஒரு மத நிறுவன உறுப்பினர்களாயிருந்து இணைந்து பணியாற்றினோம். அந்த ஆவி பயனுடைய பல செய்திகளை எனக்குக் கூறியது.
            அடுத்து வந்த ஆவி திரு.தி.யு.தி.சில்வாவினுடையது. நான் சார்ந்து இருந்த அரசியல் கட்சியின் முன்னணி உறுப்பினர் அவர். அவரோடு நான் நெருங்கிய நட்போடிருந்தேன்.
            ஆறாவது ஆவி, குடும்ப நண்பரான திரு.செயசுந்தராவினுடையது. என்னுடைய உடல் நலனில் தனிக்கவனத்தோடு இருக்குமாறு அவர் செரீனாவிடம் சொன்னார்.
            பகலுணவு உண்டு, சிறிது துயின்ற பிறகு, குவளைக் கணியத்தைத் தொடர்ந்தோம். முதலில் வந்தவர் திருமால். அடுத்து வந்தவர் கதிர்காமக் கடவுள். இரண்டு மாதங்களுக் குள்ளாக கதிர்காமச் செலவு (மதப் பயணம்) மேற்கொள்ளுமாறு அவர் கூறினார்.
            கடைசியாக வந்த ஆவி, துறவி சூடுஎன்பவருடையது. அவர் சார்பில், செரீனுக்கு ஒரு தங்க மோதிரம் அன்பளிப்பாகத் தரும்படி அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். ஆன் துறவி திருச்சவையில் இருக்கும் அவருடைய உருவச் சிலைக்கு அடியில் செரீனுக்காக அவர் இன்னொரு மோதிரம் வைத்திருப்பதாகவும் கூறினார்! செரீன் அங்கே சென்று சிலைக்கு முன்னால் மெழுகுத்திரி ஏற்றி வைத்து அம்மோதிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தையும் தெரிவித்தார்.
            மறுநாள் நாங்களிருவரும் ஆன்துறவி திருச்சவைக்குச் சென்றோம். துறவி சூடின் சிலைக்கு முன்னால் மெழுகுத்திரிகள் ஏற்றி வைத்தோம். ஆனால், அங்கு எவ்விடத்திலும் மோதிரம் காணப்படவில்லை.
            முற்றிலும் ஏமாற்றமடைந்து, செரீன் நிலை குலைந்திருந்தாள். திரும்பும் போது, இனிமேல் ஆவிகளை அழைக்கும் குவளை-உரை விளையாட்டுகளில் நாம் ஈடுபடக் கூடாது என்று அவளிடம் கூறினேன்.
            அன்றிரவு, எனக்குத் தெரியாமல் செரீன் குவளைக் கணியம் பார்த்திருக்கின்றாள். சூடு துறவியின் ஆவி மீண்டும் வந்து, மோதிரத்தைச் சிலையினடியில் வைக்காததற்கு மிகவும் வருந்துவதாகக் கூறியதாகத் தெரிகின்றது. நானும் அவளோடு அங்கு சென்றதால்தான் மோதிரத்தை வைக்கவில்லை என்றும், என்னைத் தவிர்த்து விட்டு அடுத்தநாள் அங்கே செல்லும்படியும் கேட்டுக்கொண் டிருக்கின்றது.
            அடுத்தநாள், செரீன் அவளுடைய நோயாளி அண்ணனுடன் அங்குச் சென்று, அச்சிலை முன் மெழுகுத்திரி ஏற்றி வணங்கியும் அம்மோதிரம் காணப்படவில்லை. நீண்ட நேரம் அங்கே தங்கியிருந்து கண்கள் நீர் சொரிய அழுதாள். இரண்டாம் முறையும் அவளுக்கு ஏமாற்றமே! மோதிரத்தைப் பெறாமல் அத்திருச்சவையை விட்டு வருவதற்கே மறுத்தாள். கடாசியில், அவள் அண்ணனும் உந்து ஓட்டுநரும் அவளை வலிந்து மகிழ்வுந்தில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
            வீட்டிற்குத் திரும்பிய நேரத்திலிருந்தே பித்தியம் பிடித்தவள் போல நடந்து கொண்டாள். எப்போதும் சூடு திறவியைப் பற்றியே பேசிக்கொண் டிருந்தாள்!
            சென்ற மூன்று கிழமைகளாகத் தனக்குக் குழந்தை பிறக்கப் போவதாகக் கூறி அழுதுகொண்டிருக்கிறாள். தான் ஒன்பது மாதப் பிள்ளைத் தாய்ச்சி என்று அவள் கூறினாலும் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மேலும் இரண்டாம் குழந்தை பிறந்ததி லிருந்தே நாங்கள் துய்ப்புறவு கொண்டதில்லை. இப்பொழுது நான் தெய்வச் சிந்தனையில் ஆழ்ந்து விடுவதால் பாலியல் ஈடுபாட்டிலிருந்து விலகி யிருக்கின்றேன்.
            கடந்த இரண்டு மாதங்களாகப் பித்தியம் தெளிவிப்பதற்காகப் பல இடங்களுக்கும் கூட்டிச் சென்று, பலவகையான மந்திர மாயங்கள் செய்து பார்த்தோம். கோழிக்கோட்டிலுள்ள ஒரு பேர்பெற்ற உரோமன் கத்தோலிக்கத் திருச்சவைக்கு அழைத்துச்சென்றோம். எனினும், முன்னினும் மோசமான நிலையிலேயே திரும்பி வந்தாள்.
      சில நண்பர்களின் கருத்துரையின்படி அவளை நயகாக்கண்டே -விலுள்ள மற்றொரு திருச்சவைக்கும் அழைத்துச் சென்றோம். இதுவரை எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. அடுத்து, தெமாத்தகோடா-விலுள்ள குறி கூறுவாரை அணுகிக் கேட்டோம். அவர் செரீனின் துன்பங்களுக்குக் காரணம் கலுக்குமரியா என்னும் ஒரு பெண்பேயின் ஆட்டுவிப்பு என்றார். அதற்குத் தீர்வாக ஒரு கட்டணத் தொகையைப் பெற்றுக் கொண்டு சில பூசைகள் நடத்தினார். இருந்த போதிலும், செரீனாவின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
      பின்னர், பாமன்காடாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த மந்திர எண்ணெய்யும் மந்திர நூலும்கூட பயன் தரவில்லை. அதன்பின், செரீனாவை மிரிகானாவிலுள்ள ஒரு புகழ் பெற்ற குறி சொல்லும் பெண்டிடம் அழைத்துச் சென்றோம். செரீனாவிற்கு எங்கள் எதிரிகளால் கடும் நஞ்சு கொடுக்கப்பட் டிருப்பதாக அவள் கூறினாள். அந்த நஞ்சை செரீன் கக்கி வெளியேற்றும்படி தன்னால் செய்யமுடியும் என்று அவள் சொன்னாள். நாங்கள் அதற்கு ஒப்புக் கொண்டு அவளுக்குப் பெருந்தொகை தந்தோம். குடிப்பதற்காகச் செரீனிடம் ஏதோ கொடுக்கப் பட்டது. அதன் பிறகு, செரீன் வாந்தி எடுத்தாள். ஆனாலும் அதன்பின்னரும் துன்பம் தொடர்ந்தது!
      பிறகு செரீனை வாட்டாலாவிலுள்ள ஒரு உரோமன் கத்தோலிக்க மதகுருவிடம் அழைத்துச் சென்றேன். அவர் இது பேயிறையின் (சாத்தான்) வேலைஎன்றார். கொஞ்சம் துய்ய நீரை செரீன் மீது தெளித்து அவள் நெற்றியில் விரலால் குறுக்கை(சிலுவை)க் குறியிட்டு வழிபாடு செய்தார். செரீன் குணமாக வில்லை.
      குவளைக் கணியத்தில் அறிவுறுத்தியவாறு அவளைக் கதிர்காமம் கோயிலுக்கு அழைத்துச் சென்றோம். அங்குப் பூசை நடந்த போது அவள் மயக்க முற்றாள். திரும்பி வந்த பிறகு, அவள் இயல்பாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், ஒருநாளைக்குப் பின், தொல்லை தொடர்ந்தது.       கடைசியாக மூன்று நாளைக்கு முன்பு, மெத்தேல் மந்திரக்காரக் குழுவினரால் இரவு முழுவதும் பேயோட்டல்நடந்தது. செரீன் மந்திரக் காரர்களுடன் நடனமாடினாள்! அம்மந்திரக் காரர்களின் கேள்விக்கு விடையாக, அது என்னுடைய முதல் மனைவி என்றும், செரீனின் உடலினின்றும் நீங்கிவிடுவதாகவும், ஒரு சேவலின் உடலில் நுழைந்து வடுவதாகவும் உறுதியளித்தது. அந்தச் சேவல் பின்னர்க் கொல்லப் பட்டது.
      செரீன் மயங்கி விழுந்தாள். அதே நிலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கிடந்தாள். காலையில் செரீன் முழுவதும் இயல்பானவளாகக் காணப்பட்டாள். அம்மந்திரக் காரர்களுக்கு ஒப்புக்கொண்ட கட்டணத் தொகையைக் கொடுத்தேன். அவரகள் திரும்பிச் செல்லுகின்ற நேரத்தில், அக்குழுவில் இருந்த ஓர் இளைஞன், இனியும் குணமாகாவிட்டால் உங்களை (அறிஞர் கோவூரை) அணுகுமாறு வலியுறுத்திச் சென்றான். நேற்று, மறுபடியும் செரீன் அழத் தொடங்கிவிட்டதோடு அவள் கருவுற் றிருப்பதாகவும் முறையிட்டாள்.
      இவற்றைக் கேட்டபின், ‘வைக் கீழே செல்லுமாறும் அவர் மனைவி செரீனை மேலே அனுப்பும்படியும் கூறினேன். என் துணைவியார், செரீனை அழைத்து வந்து துயிலிருக்கையில்(couch) ஓய்வு கொள்ளச்செய்தார். மேலே வரும்போது காதில் கேட்காத நிலையில் அவள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. செரீன் விலை உயர்ந்த புடைவையை மிக நாகரிகமாக உடுத்தியிருந்தாள். நாறபத்து நான்கு அகவையானாலும் இளமையாகத் தெரிந்தாள். அழகுவாய்ந்த வலமையான(healthy) இளம்பெண்ணின் தோற்றத்தோடு பழுத்த கோலிக்குட்டுவாழைப்பழ நிற உடலுடன் இருந்தாள். நாகரிகத் தோற்ற முடையவள் என்றாலும் மாற்றுக் குறையாத மரபில் வளர்ந்ததற்கு அடையாளமாக அடக்கத்தோடும் பணிவோடும் இருந்தாள்.
      அறிதுயிலில்(hypnosis) ஆழ்த்தியபோது, செரீன் கூறியவை: என் வீடு மதாராவில் இருக்கிறது. மதாரா ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்றேன். கத்தோலிக்க ரல்லாதார் மதஅறிவுரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை யென்றாலுங் கூட, நான் என் பள்ளியிலிருந்த கிறித்தவத் தோழிகளுடன் அவ்வகுப்புகளுக்கும் அவர்களுடைய வழிபாட்டுக்கும் கூடச் செல்வது வழக்கம். நானும் என் கணவரும் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் திருமணம் என் கணவருக்கு இரண்டாம் திருமண மென்றாலும் எனக்கு முதலாவதாகும். நாங்கள் ஒருவர்பாலொருவர் மதிப்பன்புடைய இனிய இணையாக இருக்கின்றோம். எனக்கு இரண்டாம் குழந்தை பிறந்ததும், இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை யென்று தீர்மானித்தோம். ஏனென்றால், என கணவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னால் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தர இயலாது. என் கணவர் வழிபாட்டு அறைக்கு அருகிலுள்ள அறையில் தூங்குவார். நான் வேறொரு அறையில் குழந்தைகளோடு தூங்குகிறேன்.
      வழிபாட்டு அறையில் புத்தக் கடவுளின் உருவச்சிலை உள்ளது. திருமால் சிலையும் கதிர்காமக் கடவுளின் சிலையும் இரண்டு பக்கங்களிலும் உள்ளன. சிலைகளின் முன்னால் ஒரு எண்ணெய் விளக்கு இரவு பகலாக எரிந்துகொண் டிருக்கின்றது. நாள்தோறும் மலர்கள் படைக்கப் படுகின்றன.     பொருள் நிலையில் நாங்கள் வளமானவர்கள். என் கணவர் பத்தி(பக்தி)மான்; மதம் விரும்பி. நாங்கள் மற்ற மதங்களையும் மதிக்கிறோம். விழா நாட்களில் நாங்கள் தவறாது கோவிலுக்குப் போவோம்.
      நான் தனியாகக் குவளைக் கணியம் பார்த்த போது, சூடு துறவி என்னிடம் நிறைய செய்திகளைக் கூறினார். அவற்றை என் கணவரிடம் சொல்ல வேண்டா மெனவும் கேட்டுக் கொண்டார். என்னை அவர் காதலிப்பதாகவும், முன் பிறப்பில் நான் அவர் மனைவியாக இருந்தேன் என்றும் கூறினார். முன் பிறப்பில் என் பெயர் உரோசு என்றும் அவர் பெயர் உரோலிதிரெமசு என்றும் சொன்னார். அடுத்த பிறப்பிலும் எனக்கு அவர் கணவராக இருக்க விரும்புவதாகவும் கூறினார்!
      அந்தக் குவளைக் கணிய நிழ்ச்சிக்குப் பிறகு, துறவி சூடு இரவு நேரங்களில் அடிக்கடி வந்து என்னுடன் உறங்குவது வழக்கம். என் கணவர் வீட்டிலில்லாத சில நேரங்களில், சமையலறைக்கு வந்து என்னைக் குளியலறைக்கு இழுத்துச் செல்வார். அங்கே என்னை ஆரத்தழுவி என்பால் அன்பு செலுத்துவது வழக்கம்.
      சில நேரங்களில் என்னுடைய உடைகளைக் களைந்து என் உடலில் குறுக்கை(சிலுவை)க் குறி வரைவார். அவ்வப்போது மிகுந்த வலியேற்படாமல் அவர் என்னைக் கடிப்பார்.
       இந்தக் கட்டத்தில், எவ்வகைத் தயக்கமுமின்றி அவளுடைய கச்சுடை(blouse)யைத் திறந்து, அவளுடைய மார்பில் குறுக்கை வடிவிலிருந்த ஒரு கீறற் குறியையும், வலக்கையில் கடித்த அடையாள மொன்றையும் எங்களுக்குக் காட்டினாள்.
      செரீன் தொடர்ந்தாள்: அவர் என்னிடம் நேயத்துடனிருப்பதால், எனக்கு மிகவும் பிடித்தமானவரே. அவர் மிகவும் அழகானவர். சிலையில் நாம் பார்ப்பதைவிட முற்றிலும் வேறுபட்ட வடிவினர். முழுவதும் மழுங்க மழித்த முகத்துட னிருக்கிறார்.
      ஒருநாள், இச்செய்திகளையெல்லாம் என கணவரிடம் சொன்னால் என் கழுத்தை நெரித்துவிடுவதாக ஒரு தாளில் எழுதினார். மற்றொரு சமையம்,என் காதணிகளையும் மணமோதிரத்தையும் கழற்றி விட்டார்! மூன்று முறை தலையணைக்கடியில் பணம் உருபா 1000, 16000, 800 வைத்துச் சென்றார்.  இவற்றைக் கூறிய பிறகு செரீன் கடுமையாக அழத் தொடங்கினாள். ஏன் அழுகிறாய்?’ என நான் கேட்ட போது, “எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது; இது எனக்கு ஒன்பதாம் மாதம்; அடுத்த மாதம் குழந்தை பிறந்ததும் எல்லாருக்கும் அக் குழந்தைக்குத் தந்தை என்கணவரல்லர் என்பது தெரிந்துவிடும்! நெறியற்ற முறையால் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதை விட இறந்து விடுவதே மேல்என்றாள் அவள்.
      இந்தக் கட்டத்தில் அவளை அறிதுயிலினின்றும் எழுப்பினேன். என் துணைவியார் அவளைக் கீழே அழைத்துச் சென்றார். திரு. வை மேலே அழைத்தேன்.
      வந்து அமர்ந்ததும் அவரிடம் 1964 சனவரி 12ஆம் நாள் சிலோன் அப்சர்வர்ஞாயிற்றுப் பதிப்புப் படியொன்றைத் தந்தேன். அதில் படுக்காவில் நான் ஆய்ந்த இதே போன்ற ஓர் உளநோயாளியின் செய்தி இருந்தது. அச்செய்தி, இறந்துபோன காதலனின் ஆவியெனக் கூறப்பட்டது இரவு நேரங்களில் வந்து அன்பு செலுத்தியதாகக் கூறிய பள்ளி மாணவி இலதாவின் இல்பொருள்காண் திரித்துணர்வு (hallucinatory experience) பற்றியதாகும்.     அச்செய்தியைக் படித்து முடித்ததும் அவருடைய மனைவி செரீனின் நிலையும் அவர் படித்த செய்தியைப்போன்றதே என்றும் அந்நிலைக்கு அவரே பொறுப்பு என்றும் கூறினேன். அவரைக் குற்றம் சாற்றிக் கூறியதைக் கேட்டதும் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
      நான் தொடர்ந்து கூறினேன்: உங்கள் இருவரின் உள்ளங்களும் அளவில்லாத மடமையான மூடநம்பிக்கைகளால் ஏமாற்றப் பட்டுள்ளன. ஆவிகள் உள்ளதாக நம்புவதும், குவளையின் உதவியுடன் கேள்விகளுக்கு விடை சொல்ல ஆவிகளை அழைப்பதென்பதும் மடமையும் இழிவுமாகும். உங்கள் மனைவி செரீனின் உள்ளம் குவளை-உரையால் நிலைகுலைந் திருக்கின்றது. மிகுந்த நுண்ணுணர்வு கொண்ட அவளின் மனம், உங்கள் மனத்தைப் போலவே ஆவிகள் பேய்கள் மந்திரங்கள் பூசனைகள் பேயோட்டங்கள் முதலிய மூடத்தனத்தால், குழந்தைப்பருவம் முதலே தவறான கொள்கைகளால் குழப்பப் பட்டுள்ளது.
      நீங்கள் இருவரும் குவளையின் மேல் விரல்களை வைத்திருந்த போது, செரீனுடைய கையின் உளத்தியல்ஓட்டத் தசையியக்கம் அக்குவளையை நகரச் செய்தது. அதனால்தான் இரவில் அவள் தனியாகக் குவளைக் கணியம் பார்த்தபோது, குவளை மறுபடியும் நகர்ந்தது.
      திரு.பண்டாரநாயகா, பூன்வாட்டம்மையார் மற்றும் பிறரின் ஆவிகளின் வரவும், கேள்விகளுக்கு விடையளித்ததாகக் கூறப்பட்டதும் உண்மைகளல்ல. செரீனே, குவளையின் நகர்வாலும், கிடைத்த விடைகளாலும் குழப்ப மடைந்திருக்கிறாள். இவை அனைத்தும் அவளுடைய உணர்வுநிலையற்ற மனத்தினால் தன்னுணர்வற்ற அறிவுநிலையில் நடந்தவை. இத்தகைய புதுமை நிகழ்ச்சிகளின் விளைவாக அவளுடைய மென்மையான உள்ளம் தாக்கமுற்றது. குவளைக்கணியத்தின் போது வந்ததாகக்கூறப்பட்ட ஆவிகள், பேய்கள் எனப்பட்ட தீய ஆற்றல்கள் பற்றி அவள் கொண்டிருந்த இனம்புரியாத அச்சம் அவளுக்கு நரம்பு இயக்க வீழ்ச்சியை உண்டாக்கி விட்டது. கற்பனைத் துறவி சூடுடனான அவளுடைய சிற்றினபச் செயலீடுபாடுகள் அனைத்தும் பாலுணர்வுச் சுரப்பிகள் உச்சத்திறனி லிருக்கும், பாலுறவு வறுமையுற்ற ஓர் இளம்பெண்ணின் விருப்ப நிறைவேற்றங்களாகும். குவளைக் கணியம் பார்த்த நாளிலிருந்தே அவளுக்கு நரம்புக் கோளாறு ஏற்பட்டு விட்டது. இப்படியிருந்த காலத்தில் அவளுடைய இல்பொருள் காணுந் திரித்துணர்வுகள் அனைத்தும் மெய்யானவை யில்லை என்றாலும் அவளைப் பொறுத்தவரை உண்மை நிகழ்வுகளே!
      காதற் றலைவனாக துறவி சூடின் வருகைகளும், அவருடைய காதல் உருவாக்கமும், அவள் கருவுறலும், தலையணைக்கு அடியில் பணந் தோன்றியதும், மோதிரம் பற்றிய உறுதியுரையும், அடுத்தபிறவித் திருமணம் பற்றிய உறுதி மொழியும் முற்றிலும் அவளுக்கு விருப்பமான வெறும் திரித்துணர்வு நிகழ்ச்சிகளாகும்.
      அவற்றைப் போன்றே, அவளுடைய காதணி மோதிரம் மறைந்ததும், அவளுடைய உடலில் குறுக்கைக் குறியும், கடித்த அடையாளங்களும் இன்னபிறவும் வேறொருவராக இருந்து அவளே செய்து கொண்ட சொந்தச் செயல்களே! 

      உங்களைப்போன்ற கல்வியறிவு மிக்க ஒருவர், உளத்தியல் மருத்துவரிடம் கலந்தாய்வு செய்யாமல், ஏமாளி மக்களிடம் பணத்தைக் கொள்ளை யடிக்கும் போலி மருத்துவர்களின் உதவியை நாடியது இரக்கத்திற் குரியதாகும். நாட்டின் ஆட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்குக் கூட, இத்தகையவர்களைச் சில மிகப் பெரியவர்கள் நாடிப் போவதைப் பார்த்து, நீங்களும் இப்படி நடக்கத் துணிந்தீர்கள் போலும்!
      செரீனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் மனக் கோளாற்றினால் ஏற்பட்டதே! ஆவிகளாலோ, நஞ்சினாலோ, பிறவற்றாலோ ஏற்பட்டதன்று! நீங்கள் ஒத்துழைப்புத் தந்தீர்களானால் இன்றைக்கே இத்துன்பங்க ளனைத்தையும் நான் நீக்கி விடுவேன். இன்றிலிருந்து உங்கள் ஊழ்கத்தை(meditation) நிறுத்துங்கள்! ஒரு கணவனின் இயல்பான பணியைச் செய்யுங்கள்!
      உயிரியியல் தேவையான ஒன்றிலிருந்து விலகியிருப்பது, அதிலும் குறிப்பாக உங்கள் மனைவி வாழ்க்கையின் இளமைக் காலத்தில் இருக்கும் போது விலகியிருப்பது, முட்டாள்தனமாகும். உங்கள் இரண்டாம் மனைவியாக ஒரு முதிய பெணமணியைத் தேர்ந்தெடுத் திருந்தீர்க ளானால் இத்தகைய துன்பங்கள் நேர்ந்தே இருக்காது.
      மேற்கொண்டு குழந்தைகள் பிறப்பதைத் தவிர்க்க விரும்பினால் ஊழ்கத்தை விடக் குடும்பக் கட்டுப்பாட்டு நிலையத்தின் உதவியை நாடுவதே அறிவார்ந்த செயலாகும். ஓர் இளம்பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு ஊழ்கத்தை நாடிச் செல்வது உங்களின் தன்னலமாகும்.
      மாற்றுக் குறையாத ஒழுக்க மரபிலே வளர்ந்திருக்கா விட்டால், செரீன் தன் உயிரியியல் உந்துதலைக் கமுக்கமான முறைகளில் நிறைவு செய்து கொண்டிருக்க முடியும். மாறாக, அவளுக்கு மிகத் தேவையா யிருந்த பாலியல் நிறைவை இல்பொருள்காண் திரித்துணர்வுகளின் வழி பெற்றிருக்கின்றாள்!
       ‘என்னுடைய அறிவுரைகளை ஏற்று நடப்பதாக உறுதி மொழிந்தார். பிறகு, கீழே சென்று அவருடைய மனைவியை மேலே அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன்.
      என் துணைவியார் செரீனைத் துயிலிருக்கையில் படுத்து ஓய்வு கொள்ளச் செய்தார். பின்னர், அவளை ஆழ்ந்த அறிதுயிலில் இருத்தி, கீழக் காண்பவற்றைக் கூறினேன்: துறவி சூடு இப்போது உன் முன்னால் இருக்கிறார். இதுவே அவர் உன்னிடம் வரும் கடைசி முறையாகும். உன்னிடம் விடைபெற்றுச் செல்லவே அவர் வந்திருக்கிறார்.
      இதைக்கேட்டதும் செரீனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் பதிவுசெய்ய என்னிடம் ஒரு திரைப்படப்பிடிப்புக் கருவி இல்லாமல் போய்விட்டதே என வருந்தினேன்! மேலும் கூறினேன்: துறவி சூடு தன் குழந்தையை உன் கருப்பையிலிருந்து எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் இனி ஒருபோதும் உன்னிடம் வரமாட்டார். இனி, உன் கணவர் உன்னிடம் மிக அன்புடன் இருப்பார்! நீயும் அவரிடம் பேரன்புடன் இருப்பாய்! நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்!
      அறிதுயிலினின்றும் செரீன் எழுப்பப் பட்ட சில நிமையங்களுக்குப் பிறகு, ‘புன்னகை தவழும் தன் இனிய மனைவியுடன் விடைபெற்றுச் சென்றார்.
      ஒரு மாதத்திற்குப் பின் திரு.வும் அவருடைய துணைவியாரும் நன்றி தெரிவிப்பதற்காகப் பரிசுப் பொருள்களுடன் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, இக்கதையைப் பிரான்சு, இசுப்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் வெளியிடுவதால் பல நன்மைகள் விளையக் கூடுமெனக் கூறி, அதற்கான அவர்களின் இசைவைப் பெற்றேன்!

------------------------------------------------------------------------

வியாழன், 19 ஜூன், 2008

மூடநம்பிக்கைகள் இங்கும் அங்கும்!


                   ( ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ.கோவூர்   தமிழாக்கம் : தமிழநம்பி ) 


            1953ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில், கொழும்பில், ஓர் அமெரிக்கக் கணவன் மனைவி இணையை உணவுவிடுதி யொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஒருமாதச் சுற்றுச் செலவிற்குப் பின் அவர்கள் சிரீலங்காவிற்கு வந்திருந்தனர்.
            நான் அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்டேன். அந்த அம்மையார், ‘நல்ல நாடு; ஆணால், மக்கள் மூடநம்பிக்கை முட்டாள்களின் கூட்டம்என்று கூறினார்.
            அப்பெண்மணி அலகாபாத் பிரயாகையில் அந்த ஆண்டு கும்பமேளாவின் போது அவர்கள் பார்த்த கொடுமையான காட்சியை விளக்கிக் கூறினார்:            கங்கை, யமுனை மற்றும் வானத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஓடிவருவதாக ஏமாளி மக்கள் நம்பும் கற்பனை ஆறான சரசுவதி ஆகிய மூன்றும் கூடுமிடத்தில் ஏறத்தாழ 60 இலக்கம் மக்கள் சேர்ந்திருந்தனர்.
            அந்த ஆறுகள் கூடுமிடத்தில் கும்பமேளாவின் நன்னிமித்த நேரத்தில் நீரில் மூழ்கி அவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ளவே அங்கேக் கூடியிருந்தனர்.
            சங்கு ஊதியும் கோயில் மணிகளை ஒலித்தும் நன்னிமித்த நேரம் தெரிவிக்கப் படுகின்றது. இலக்கக் கணக்கான ஆண்களும் பெண்களும் அந்நேரத்தைத் தவறவிடக் கூடாது என்ற பேரார்வத்துடன், அதிகம் வழுக்கும் மண்ணில் விழுந்து விட்டவர்களைத் தூக்கிவிடுவதில் நேரத்தை வீணாக்காமல்(?) ஆற்றில் முழுக்குப்போட விரைகின்றனர்.
            அந்தத் தூயகுளிப்பு முடிந்தபோது, ஆயிரக் கணக்கான சேறுபூசிய பிணங்களை அவ்வாற்றங் கரைகளில் எடுத்துச் சேரக்கின்றார்கள். இவ்வகையில், பேரெண்ணிக்கையி லான மாந்தரின் சாவுகள் எவரையும் கவலைக் குள்ளாக்கினவாகத் தெரியவில்லை.
            அந்த ஏமாளிகளுக்கு அத்தகைய சாவு விரும்பத்தக்கதா யிருக்கின்றது. ஏனென்றால், அங்கு இறந்தவர்கள் துறக்கம் (சொர்க்கம்) செல்வார்கள் என்று - அல்லது மேலும் சிறப்பான நிலையில் மீண்டும் பிறப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் அமெரிக்கர்களுக்கோ, அஃது ஓர் கொடிய காட்சியாக இருந்தது.
            தன்னுடைய பாவங்களைக் கழுவப் பிரயாகைக்கு வந்திருந்த இந்தியக் குடியரசு தலைவர் பர்.இராசேந்திர பிரசாத்தும் கூட அந்த ஏமாளி மடயர்களில் ஒருவராயிருந்த இழிவைக் குறிப்பிட்ட திருவாட்டி இராபர்ட்டு, ‘உங்கள் மக்களின் பேரளவிலான மூட நம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து சிந்தித் திருக்கின்றீர்களா?’ என்று என்னிடம் கேட்டார்.
            ‘ஆம், எங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் உங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் மிக ஆழமாகச் சிந்தித் திருக்கின்றேன்என்றேன் நான்.
            எங்கள் மக்களும் கூட மூட நம்பிக்கைக்காரர்கள் என்று எண்ணுகிறீர்களா என்ன?’ என்றார் அவர்.
            ஆம், எங்கள் மத நூல்களும், குருமார்களும் கங்கையின் தூயநீரில் மூழ்குவதால் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை எங்கள் மக்கள் குருட்டுத்தனமாக நம்பி அப்படியே செய்கின்றனர். உங்கள் மதநூல்களும் உங்கள் குருமார்களும் மெய்யறிவுக் குளிப்பு’ (Baptism) என்ற புறக்கழுவல், அல்லது தெய்வ விருந்து’ (Holy communion) என்ற அகக்கழுவல் மூலம் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை நீங்கள் குருட்டுத்தனமாக ஒப்புக் கொள்கிறீர்கள்.
            ‘ மெய்யறிவுக் குளிப்புக்காகவோ தெய்வ விருந்திற்காகவோ நன்னிமித்த நேரம் என்று எதுவும் இல்லாத நல்வாய்ப்பு உங்களுக்கு இருப்பதால் கூட்ட நெருக்கடிக் குழப்பங்களும் அதனால் ஏற்படும் சாவுகளும் இல்லாமல் இருக்கின்றன! என்று விடை கூறினேன்.
            எங்கள் உரையாடலை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த திரு.இராபர்ட்டிடம் ஐயா, எங்கள் சிந்தனைக்கு நிறைவான தீனி அளித்தீர்கள்என்று கூறினேன்.
            ஒருமுறை சிலோன் பெந்தகொசுதலியரின் தலைமை நிலையத்தினர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தனர். என் துணைவியாருடன் நான் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகே என்னை அழைத்ததன் முகன்மையான நோக்கத்தை அறிந்தேன். அய்ரோப்பிய பெந்தகொசுதலியர் உள்பட கிறித்துவ மதத்தில் பதவிகளிலுள்ள எல்லாத் தலைவர்களும் என்னுடன் தருக்கம் செய்ய அங்கே கூடியிருந்தனர்!
            நாக்கொடை’ (Glossolalia) என்ற நரம்புக் கோளாற்று நிலை பற்றி அறிவியல் சான்றுகளுடன் நான் விளக்கியும் கூட, ‘தூய ஆவியின் துணையால் ஏற்படும் திறமையென நம்பும் அவர்களை, அக்குருட்டு நம்பிக்கையினின்றும் மாற்ற முடியவில்லை.
            உணாமிசை (Dining table) க்குச் சென்றதும், திருத்தந்தை ஆல்வின்சு பக்கத்தில் எனக்கு இருக்கை அளித்தனர். விருந்தின் போதும் கலந்துரையாடல் தொடர்ந்தது. பெந்தகொசுதலியர், நோயுற்றாலும் மருந்துண்ணாமை பற்றிப் பேச்சு நடந்தது.
            ஒருவர் செய்த பாவத்திற்குத் தண்டனையாகவே அவருக்குக் கடவுள் நோயை உண்டாக்குகின்றார். நாம் கடவுளிடம் நோயைத் தீர்க்கும்படி முறையிடுகின்றோம். கடவுளின் கருத்தை வீழ்த்தும் வகையில் மாந்தன் மருந்துகளை ஏற்பது தவறாகும்என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.
            மாந்தன் மருத்துவ அறிவினால் கடவுளை, அவருடைய கருத்தை வீழ்த்த முடியுமென்றால், கடவுளைவிட மாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவன் என்று ஆகாதா? நீங்கள் மருந்தை ஏற்றுக் கொள்வதில்லை யென்றால், உணவை மட்டும் ஏற்றுக்கொள்வது ஏன்?’ என்றேன் நான்.
            உணவு மருந்தன்று; ஏசுவே உணவை உட்கொண்டிருக்கின்றார்என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.
            நீங்கள் சொல்வது தவறு! பசி என்ற நோய்க்கு உணவு ஒரு மருந்தாகும். விடாய் என்ற நோய்க்கு நீர் ஒரு மருந்தாகும்என்று கூறி முடித்தேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------