செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

‘தமிழர்களும் தமிழும்’ – நேற்று, இன்று, நாளை!

(24-2-2019 மாலை நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தின் 16-ஆம் ஆண்டுவிழாப் பாவரங்கத்தில் தலைமை ஏற்றுப் பாடிய பா) 

‘தமிழர்களும் தமிழும்’ – நேற்று, இன்று, நாளை!

அரங்கிலுள பெரியோரே அறிவார்ந்த சான்றோரே, அன்பு பொங்கும்                                   இரங்கும்உளத் தாய்மாரே, இளையோரே, மாணவரே இவ்வரங்கில்      
அருந்திறத்தில் பாடவந்த ஆற்றல்சால் பாவலர்காள்! அந்த மிழ்பால்          
வரம்பில்லாப் பற்றுடைய வயங்குளத்தர் அனைவரையும் வணங்கு கின்றேன்!

விழுப்புரத்தில் தமிழ்ச்சங்கம் வீறுறவே தொடக்கிதொடர் வினையால் இன்றே 
செழிப்புறவே பதினாறாம் சீரார்ந்த ஆண்டுவிழா சிறப்பாய்க் காணும்         
பழிப்பிழிப்புப் பாராட்டாப் பாலதண்டா யுதனாரைப் பலவா றாகக்                 

கொழிப்புறவே போற்றிடுவோம்! குறைவின்றிப் புகழுரைகள் குவிப்போம் யாமே!

உலகிலுள மொழியறிஞர் உயர்தனிச்செம் மொழிதமிழென் றுரைப்ப தோடே
பலவகையும் சிறப்புயர்வுப் பாங்குகளை எடுத்துரைத்துப் பராவு கின்றார்!
நிலவுகின்ற மொழிகளிலே நிலைத்ததமிழ் முதன்மொழியாம் நிவப்பைச் சொல்லிப்
புலமையரும் உலகத்தின் புகழ்பெற்ற ஆய்வருமே போற்று கின்றார்!

முதன்மொழியாம் தமிழோடு முதல்நாக ரிகங்கண்ட மூத்த மக்கள்
முதன்முதலில் இலக்கியங்கள் முனைந்தாக்கித் தந்தாரே! முரணர் வீழ்த்தி
அதிஉயரப் பனிமலையின் அகன்றநெற்றிக் கயற்புலிவில் ஆழத் தீட்டி
அதிகமுமாய்க் கொள்ளாமல் குறைவாயும் கொடுக்காமல் அறத்தின் நின்றே

நல்வணிகம் தரைகடலில் நடத்திநலஞ் சேர்த்தார்கள்! நாட்டில் தேர்ந்த
நல்லபல நுண்கலைகள் நளிஅண்ட வானியலும் நாட்டி யம்சேர்
வல்லயிசைப் பண்ணோடும் வளயாழின் இசையெல்லாம் வளர்த்துத் துய்த்தார்!
வள்ளலெனக் கொடைகொடுத்தார், வாழ்வினிலே ஒளிமிகுந்தார், வரலா(று) உண்மை!   

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே ஓதும் கல்வி!
சென்றுதொழுங் கோயில்கள், செப்பிவழக் காடுமன்றம் சேர எங்கும்
இன்றுஎந்தத் துறையினிலும் இல்லைதமிழ் எனும்நிலையே இருத்தல் காண்க!

தாய்மொழியே படிக்காமல் தமிழ்நாட்டில் கற்குநிலை தணியாத் துன்பம்!
ஏய்த்தநிலை இங்கன்றி எங்குமிலை! ஆட்சிமொழி ஏட்டில் மட்டும்!
வாய்த்ததொரு நடுவரசோ வஞ்சகமாய் திணிக்குமிக வலிந்தே இந்தி!
தாய்த்தமிழை மாநிலத்துத் தமிழரசும் பேணாதே தாழ்ச்சி செய்யும்ச்

சப்பானில் கொரியாவில் சான்றபுகழ் இரசியாவில் சன்ன்றும் சோரா
ஒப்பரிய சீனத்தில் உயர்பிரான்சில் ஆட்சிசெய்வோர் உலகம் ஈனும்
செப்பமுறு அறிவியல்நூல் செறிநுட்ப நூலனைத்தும் சிறப்புச் சேர
தப்பின்றித் தம்மொழியில் தக்கவகை மொழிபெயர்த்துத் தருகின்றாரே!

இங்காள்வோர்க் கிவைபற்றி எள்முனையும் கவலையிலை! எவ்வெவ் வாறு
அங்கிகிங்குக் கொள்ளையிட லாகுமெனும் சிந்தனைக்கே அவர்க்கு நேரம்
பங்கிடவே போதவிலை! பார்த்துவரும் நிலையிதுவே! பழகி நாமும்
எங்கெதுவும் நடக்கட்டும் எனத்தமிழைப் புறக்கணித்தோம்! ஏற்றம் தோற்றோம்!

செய்தித்தாள் இதழ்களிலே செறிவற்ற நூல்களிலே சீர்மை அற்றே
மொய்த்தெழுதும் சொற்களிலே முறையற்ற மொழிக்கலப்பு முடுக்க மாக!
நெய்வண்ண மினுக்கலிலே நிமிர்த்தெழுதும் கடைப்பெயர்கள் நிலைமை என்ன?
துய்யதமிழ் தொலைத்துபிற தொடர்பற்ற மொழிகளிலே துலங்கல் அன்றோ?

ஊடகத்தில் தொலைக்காட்சி உரையாட்டில் நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாக்
கேடுவிளை நாடகத்தில் கிளர்ச்சியுறு கூத்தாட்டக் கீழ்மை தம்மில்
ஈடுசொல முடியாத இழிவான தமிழ்க்கொலைகள்! இன்னு மிங்கே
பாடாகப் படுத்துதிரை பழியெனவே தமிழழிக்கும்! பார்க்கின் றோமே!

பண்பாடு நல்லொழுங்கு பார்போற்றும் நல்லறங்கள் பலவும் சொன்ன
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் மறையச் செய்யும்
கண்கெடுக்கும் இருதிரைகள் காட்டுகின்ற காட்சியெலாம் கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை! மட்டின்றி நடக்கிறதே மயக்கம் ஊட்டி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவேஅணுத்தீமை கொடுவுலைகள் அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்தில்இந்தி சமற்கிருதம் ஊன்றற் கென்றே
தேற்றமுறச் செயற்படுவார்தீந்தமிழை அழிப்பதற்கும் திட்டம் உண்டே!

இனிவருநாள் தமிழிளையோர் எழுவாரோ? இல்லைநம்மோர்க்(கு) இயல்பாய்ப் போன குனிந்துசெலும் உணர்வாலே குட்டுநிலை தொடர்ந்திடுமோ? கொடுமை மேலும் தணியாதே மிகுந்திடுமோ? தாய்த்தமிழும் வீழ்ந்திடுமோ தகைமை குன்றி!      பிணிநீங்கி நலம்வருமோ? பெருவாழ்வு வாய்த்திடுமோ? பீழை போமோ?

எந்தநிலை நேருமென எல்லோரும் செயலற்று இருத்தல் நன்றோ? செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றெழவேண்டும் செப்ப மாக!
அந்நல்நாள் விரைந்திடுக! அந்தமிழின் அரசமைக! ஆக்கம் சேர்க
!
______________________________________________________________________________

-      எனச்சொல்லி தலைவரின்பா இன்னிறைவு செய்கின்றேன்!
இனிபாவ லர்தம்மின் எழிற்பாக்கள் தொடர்ந்திடுமே!
================================================================================
ஆற்றாமை யால்நம்மின் அவலநிலை பாடிநின்றேன் அவையி ருக்க
நேற்றைக்கு நாமும்நம் நற்றமிழும் இருந்தநிலை நினைவைப் பாட,
மாற்றமாய் இன்றுள்ள மாறாக்கீழ் நிலைவிளக்க, மற்றும் நாளை
ஏற்றமதூஉம் வந்திடுமா எனப்பாடப் பாவலர்கள் எழுந்துள்ளாரே!
=========================================================================================

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அந்தநாள் விரைந்திடுக!

(திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் .கதிர்வேலு தம்தமிழ்ச்சோலைஎன்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது எழுதித்தந்த பாடல் இது):

அந்தநாள் விரைந்திடுக!

உலகமுதன் மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர் 
வுரைக்க்க் கண்டோம்!
உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென் 
றுறுதி செய்வர்!
உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம் 
ஓம்பும் பண்பும்
உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென 
உரைக்கும் நூல்கள்!

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள் 
பெற்ற ஆட்சி 
திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே
தீமை எல்லாம்
பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப் 
பேணாப் போக்கில்
கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம் 
கரைய விட்டே!

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக 
இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே 
ஓதும் வாயப்பும்!
சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம் 
சேர எல்லாத் 
துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே, 
தொலைந்த தந்தோ!

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள் 
பலவும் சொன்ன 
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் 
மறையச் செய்தே 
கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம் 
கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே 
மயக்கத் தாழ்த்தி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள் 
அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே 
ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம் 
வளர்த்தற் கென்றே 
தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும் 
திட்டம் உண்டே!

எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே 
இங்கே வாழ
செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் 
சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக 
செப்ப மாக!
அந்ல்நாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக! 
ஆக்கம் சேர்க!
--------------------------------------------------------------------------------


திங்கள், 23 ஜூலை, 2018

“தமிழகத்தில் பார்ப்பனர்கள்” தமிழாக்க நூல் வெளியீட்டு விழாவில் (22-7-2018-இல் விழுப்புரத்தில்) தமிழநம்பி ஆற்றிய நூல் உருவாக்க உரை.

தமிழகத்தில் பார்ப்பனர்கள்தமிழாக்க நூல் வெளியீட்டு விழாவில் (22-7-2018-இல் விழுப்புரத்தில்) தமிழநம்பி ஆற்றிய நூல் உருவாக்க உரை.
அரியதொரு மொழியாக்க நூலின் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கும் முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே! நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு விழுப்புரத்திற்கு வந்திருக்கினன்ற, அரியஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்ற திராவிடர்கழகத் தலைவர் விடுதலை நாளிதழின் ஆசிரியர் ஐயா அவர்களே! பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கு முரிய அவையினரே! நேர நெருக்கடியைக் கருத்திற்கொண்டு ஒவ்வொவரையும் தனித்தனியே குறிப்பிடாமல்,அவையோர் அனைவர்க்கும் பணிவான வணக்கத்தைத் தெரிவிக்கின்றேன்.
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மு.வி.சோமசுந்தரம் ஐயா அவர்கள், பதினொரு மாதங்களுக்கும் முன்னால், ‘Brahmin in the Tamolnadu’ என்ற ஆங்கிலநூலைப் பற்றிக் கூறி அதை மொழியாக்கம் செய்யும் முயற்சியைப் பற்றியும் கூறினார்கள். நாட்குறிப்புச் சுவடிகள் இரண்டில் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, மொழியாக்கம் செப்பமாகச் செய்ய உதவும்படி கேட்டுக் கொண்டார்கள்.                                                       
அன்பார்ந்த அவையினரே!                                                       ஆபிரகாம் தொ. கோவூர் என்னும் அறிஞர், மனநோய் மருத்துவர், மூடநம்பிக்கைகளை முனைப்புடன் எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி யூட்டிய பகுத்தறிவுப் பெருந்தகை ஆவார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய பல நூல்களில் ‘Begone Godmen” என்னும் நூலையும் “Gods demons and Spirits’ என்ற நூலையும் நான் விரும்பி, திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன்.

அந்நூல்களில், நிகழ்வாய்வுகள் உள்ளிட்ட கட்டுரைகள் பல இருந்தன. நிகழ்வாய்வுகள் என்றால் - case studies- அதாவது உளத்தியல் மருத்துவரான கோவூர் தம்மிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ள வந்த நோயாளிகள் எந்தவகை மனநோயால் தாக்கப்பட்டிருந்தனர் என்பதையும், அதற்கான காரணங்களையும், அந்நோயை அவர் எவ்வாறு குணப்படுத்தினார் என்பதையும் விளக்கிக் கூறியிருந்தவை. அக் கட்டுரைகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட உருப்படிகளை  22 ஆண்டுகளுக்கும் முன்னரே யான் மொழியாக்கம் செய்திருந்தேன்.

அவை, 1986-ஆம் ஆண்டு புதுவையில் தனித்தமிழ் அன்பர்கள் வெளியிட்ட ‘மதி’ மாத இதழிலும், புதுவைத் தனித்தமிழ்க் கழகப் பொறுப்பாண்மையினராகிய மதிப்பிற்குரிய சீனு..அரிமாப்பபாண்டியன் நடத்திய ‘தமிழருவி’ இதழிலும் வெளிவந்தன. அக்கட்டுரைகளுள், ‘உயிர்’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்த கட்டுரையும் ஒன்றாகும்.. அக்கட்டுரை, 1986- ஏப்பிரல் திங்கள் ‘மதி’ இதழில் வந்தது.  திராவிடர் கழக இதழாகிய ‘உண்மை’ இதழ், மதி இதழிலிருந்து அக்கட்டுரையை எடுத்து வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியைக் கூறக் காரணம் ஓரளவு தகுதியான, மொழியாக்கத்தில் முன்னரே யான் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிடுவதற்காகவே!.

என் துணைவியார் இறந்த 40-ஆம் நாளில், 20-10-2017-இல் நானும் திருமிகு சோமசுந்தரம் ஐயாவும் இந்த, ஆங்கில நூலின் தமிழாக்கத்தில் ஈடுபட்டோம். ஐயா, அவர் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் படியைப் பக்கத்தில் வைத்திருப்பார், நாங்கள் இணைந்து மொழியாக்கம் செயத இந்நூல் அதிலிருந்து முழுவதும் வேறானதாகும். பொருள் குழப்பம் தோன்றிய சில இடங்களில், ‘ஐயா,, நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்’ என்று கேட்பேன். அவர் எழுதியிருந்ததைப் படிப்பார். அது பொருந்துவதாகத் தோன்றினால் அதை எடுத்தெழுதினோம். இல்லையேல் மறுபடியும் ஆழ்ந்து படித்துப் புதிதாக எழுதினோம்.

சோமசுந்தரம் ஐயா, இம்மொழியாக்க நூலில் எழுதியுள்ள தம் முன்னுரையில், இப்பணியின்போது காரசாரமான உரையாடல்கள் நிகழ்ந்ததனவென்ற உண்மையைக் குறிப்பிட்டுள்ளார். அவை மொழிநடை பற்றியோ, சொல்லாட்சிகள் பற்றியோ நிகழ்ந்தவை என்பதைக் காட்டிலும் மொழியாக்க நிலையில் நிகழ்ந்தவை என்பது பொருந்தும்.  
ஏறத்தாழ ஏழரை மாதஙகள்- காலையில் சரியாக 9 மணிக்குச் சென்றுவிடுவேன். என்னுடைய வண்டிப் பழுதானாலும் பேருந்தோ அல்லது பங்குத்தானியோ பிடித்துப் போய்விடுவேன். இடையறாது, பதினொன்றரை மணிவரை தொடர்ந்து இப்பணியில் ஈடுபடுவோம்.

முதலில், ஆங்கில நூலில், கால்பக்கமோ அரைப்பக்கமோ மொழியாக்கம் செய்த்தைக். கரட்டுப்படியாக rough copy-ஆக பழைய தாள்களில் எழுதுவேன். பிறகு, அதனைச் செப்பமாக்கிய பின்னர்ச் செப்பப் படியாக வெள்ளைத் தாளில் படியெடுத்து எழுதுவேன். இவ்வாறு, 285 பக்கங்கள் கரட்டுப் படியாகவும் 285 பக்கங்கள் செப்பப்படியாகவும் மொத்தம் 570 பக்கங்கள் கையால் எழுதினேன். இப் பணியின் போது ஆறுக்கும் மேற்பட்ட அகராதிகளைப் புரட்டிப் பயன்படுத்தித்தான் மொழியாக்கம் செய்தோம்.

அவை, கணிப்பொறியில் தட்டச்சு செய்து வந்தபின், இருவரும் மெய்ப்புப் பார்த்தோம் – பிழை திருத்தினோம். பிழைதிருத்தப் பணியை இன்னொருவரும் பார்க்கச் செய்தோம். இவ்வாறு செப்பம் செய்த பிறகு சோமசுந்தரம் ஐயா, மொழியாக்கப் படியை நூலாக ஆக்க சென்னைக்கு அனுப்பினார்கள்.

இந்தப் பணியில், பொருள் சார்ந்த பலனேதும் எதிர்பார்க்காமல், பெறாமல் ஈடுபட்டதை மகிழ்வோடும், மனநிறைவோடும் பெருமையோடும் இங்குக் கூறிக்கொள்கின்றேன்.

இப்பணீயில் முழுமையாக ஈடுபட்டதற்கான காரணத்தைக் கூறி உரையை முடித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நல்லபாம்பும் வரிப்புலியும் கூட மாறலாம் ஆனால் பார்ப்பனர் மாறமாட்டார்கள் என்ற பொருளில் தந்தை பெரியார் கூறிய கருத்தைப் படித்தது நினைவில் இருக்கிறது. பாவலரேறு பெருஞ்சித்திரனார், ‘ஆரியப் பார்ப்பனர் திருந்தினர் என்றே ஆருனக் குரைத்தனர்? அவர் குணம் ஒன்றே!’ - என்று பாடியுள்ளார்.

அக்கருத்துக்களுக்கு ஒப்ப, பேராசிரியர் ந.சுப்பிரமணியனாரின் இந்த நூல், பார்ப்பனர் அறிவாளிகள், திறமையாளர்கள், ,எளிதில் எதையும் பற்றிக்கொள்பவர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என்று பெருமை பேசிக்கொள்கிறது என்றபோதிலும்,

பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை, தம்மை நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் செய்த தந்திரங்களை, அவர்கள் செய்த நம்பிக்கை இரண்டகங்களை, - நம்பிக்கைத் துரோகங்களை -, அவர்களால் தமிழர்க்கு நேர்ந்த கேடுகளைப் பற்றிய உண்மைகளை வேறெப்போதும் இல்லாத வகையில் ஒப்புக்கொள்ளுகின்ற நிலையில், உண்மையாகக் கூறுகிறது என்பதால், இதுவரையில் காணாத தனிச்சிறப்பும் புதிய புதுமையுமுடைதாக இருந்தததால், இவற்றைத் தமிழர் அனைவரும் அறிந்துகொள்ள வாய்ப்பேற்படுத்தித் தரவேண்டும்.– என்ற உந்துதலே இப்பணியில் ஈடுபடக் காரணம் ஆயிற்று.

இந்நூலைப் படிப்போம், மற்றவர்களுக்கும் கூறுவோம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி முடித்துக்கொள்கின்றேன். நன்றி! வணக்கம்.

============================================================

செவ்வாய், 5 ஜூன், 2018

தங்கப்பா ஐயா மறைந்தார்!

தங்கப்பா ஐயா மறைந்தார்!




வாழ்க்கையின் நோக்கம் அன்பு, அன்பு, அன்பு செலுத்தலே என வலியுறுத்திய அன்பே!

இயற்கையோடியைந்த வாழ்க்கையே வாழ்க்கை என விளக்கிய எங்கள் ஆசானே!

சுற்றுச்சூழல் தூய்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சிற்றூர் வரப்பு வாய்க்கால் மரநிழல் விரும்பியே!

இயற்கையைத் துய்க்க - எழில் உணர்ந்து மகிழ்ந்திட - எண்ணற்ற மாணவரை ஆற்றுப்படுத்திய ஏந்தலே!

தனித்தமிழைத் தாங்கி நின்று தாய்மொழியைக் காத்துயர்த்தத் தளராது பாடாற்றிய அறிஞனே!

செந்தலையார் குறிப்பிட்டது போன்று, தமிழின் அடையாளமாகத் திகழ்ந்த செவ்வியரே!

தமி.ழ்காத்த கேடகமே! தமிழ்ப்பகை அஞ்சி ஒடுங்க வைத்த வாளே!

கழக்கக்காலப் பாவலரை ஒத்த பாவலரே!

ஒருதனிச் சிறப்புமிக்க மொழிபெயர்ப்பாளரே!

தன்னேரில் கட்டுரைகளால், தெள்ளிய தெளிதமிழ் ஆசிரிய உரைகளால் 
தமிழ்ப்பகை அரசைச் சம்மட்டி அடியாய்த் தாக்கி இடித்துரைத்த எழுத்தாண்மையரே!

தமிழ்காக்கத் தாவி நின்ற கால்களே!

தமிழ் பகைக்கெதிராய்ப் புடைத்தெழும் தோள்களே!

எழுத்துப் பேச்சோடு நில்லாமல் களத்தில் முகத்து நின்ற போராளியே!

இந்திய இலக்கிய அமைப்பு இருமுறை தந்த பரிசெல்லாம் உங்களைச் சரியாக மதிப்பிட்டுவிடவில்லை! 
இதோ, உங்களை அறிந்த எங்கள் உள்ளம் கலங்கித் தவித்து கண்ணீர் விடுகிறதே அங்கேதான் உள்ளது உங்கள் மதிப்பு!

எல்லா நிலைகளிலும் தமிழும் தமிழரும் தமிழ்நிலமும் தாக்குதலுக் குள்ளாகியுள்ள நிலையில், ஏன் ஐயா பிரிந்து சென்றீர்கள்?

உங்களை நினைவில் நிறுத்தி, நீங்கள் பாராட்டிப் போற்றிய பாவலரேறுவை நினைவில் நிறுத்தி, தமிழ் இளைஞர் போராடுவர்!

தமிழ் மீட்க, தமிழர் நலன் மீட்க, தமிழ் நிலத்தை மீட்க எத்தகைய ஈகத்துக்கும் அணியமாகித் தமிழிளைஞர் போராடுவர்! 

வெற்றி காண்பர்!

போய்வாருங்கள் ஐயா!

நன்றி!
அன்பன்,
தமிழநம்பி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
(தலைசிறந்த தமிழறிஞரும் பாவலருமான ம.இலெ.தங்கப்பா 31.5.2018 அதிகாலையில் காலமானார்)
----------------------------------------------------------------------------------------------------------------------------------


சனி, 16 டிசம்பர், 2017

செந்தமிழ் இனமே!

செந்தமிழ் இனமே!
-----------------------------------------------

செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!
முந்து தமிழும் முதனா கரிகமும்
இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும்
துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும்











நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல்
கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும்
மிகையுங் கொளாது குறையுங் கொடாது
தகைமிகு வணிகம் தரைகட லோடி
நுண்கலை வானியல் நுட்ப அறிவியல்
எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும்
செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே!

அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே
இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி!
திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!
இன்மொழி நாட்டொடு இன்னினந் தொழும்புறத்
தன்னலத் தமிழரே முன்னின் றனரே!

இளந்தமிழ் உளங்காள்! எண்ணுக இதனை!
துளக்கறு மறிவில் துளங்கலில் விளங்கி
நம்மொழி நம்மினம் நம்நா டுற்ற
நம்பரு  மடிமை விம்முறு விலங்கு
ஒடித்து நொறுக்கிப் பொடித்திடு நோக்கில்
அடிப்படைத் திட்டம் ஆய்ந்து துணிந்து
என்றுங் கண்டிலா எழுச்சியோ டெழுக!

முன்னைப் பிழையும் உன்னித் தவிர்த்துத்
தகவில் இரண்டகம் தக்காங் கொறுத்து
இகலறுத் தினத்தார் இணைவுற எழுந்து
ஈட்டுக மீட்சி! இத்தரை
காட்டுக நந்தழிழ் கணிக்கருந் திறமே!
-------------------------------------------------------------------- 

வெள்ளி, 13 அக்டோபர், 2017

நன்றியறிவிப்பு

                           நன்றியறிவிப்பு
                           -----------------
                என் துணைவியாரின் மறைவையொட்டி நேரிலும், தொலைப்பேசி வழியாகவும் மடல் வழியாகவும் ஆறுதல் கூறித் தேற்றித் துணையிருந்த நண்பர்கள் உறவினர்கள் ஏனை அன்புள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். அந்த அதிர்ச்சியினின்றும் மீண்டு வர உங்களின் அன்பும் ஆறுதலும் பெரிதும் துணையாயிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேன்.

ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற,அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!   - புறம்.194.

(பக்கு உடுக்கை நன்கணியார் பாடல்)

அன்பார்ந்த உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி!
அன்பன்,
தமிழநம்பி.


புதன், 23 ஆகஸ்ட், 2017

அருமையான செய்தியொன்று!



அருமையான செய்தியொன்று!  

நான் பல முறை படித்ததென்றாலும், புதியதாகவே இருப்பது!

...........
..அன்று திருமண நாள்! அழகி அவள் கணவன். நன்னன் மாலையில் அலுவலகத்திலிருந்து வருவதற்க்காகக் காத்திருந்தாள்.

திருமணம் நடந்த சில ஆண்டுகளில் எண்ணிப்பார்க்காத மாற்றம்.!    
    
ஒருவரின்றி யொருவர் இருக்க இயலாத நிலையில் பொருந்தியிருந்த அவ்விணையர் மாறி, சிறுசிறு  செய்திகளுக் கெல்லாம் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரிடமொருவர் பேசாமல் ஒரே வீட்டில் இருவேறு அறிமுக மற்றவர்களைப் போன்று இருந்தார்கள்.

ஒன்றுமில்லாததெற் கெல்லாம் சண்டையிட்டுக் கொள்வதை அவர்களே விரும்பவில்லை! நிலைமை மாறியது.
இன்று, தம் திருமண நாள என்பதை மறவாமல் நன்னன் நினைத்திருக்கிறானா என்றறிய ஆவலுடன் காத்திருந்தாள்!

வாயில் அழைப்பு மணி ஒலித்தது. அவள் விரைந்து சென்று கதவைத் திறந்தாள். அவள் கணவன் நன்னன் மழையில் நனைந்த தோற்றத்துடன் கையில் பூங்கொத்துடன் புன்னகை பொதுள நிற்கக் கண்டாள்.

அவர்களிருவரும் தம்மைத் திருத்திக் கொள்ளத் தொடங்கி  பழையபடியே வாழத் தொடங்கினர். சண்டை சிக்கல் மறந்து இசைநிகழ்ச்சி விருந்திற்குப் போகத் திட்டமிட்டிருந்தனர். ஒரே மழை! 

அலறலாகத் தொலைபேசியின் மணி ஒலித்தது. அழகி தொலைப்பேசியை எடுத்தாள். மறுமுனையிலிருந்து...

நான் காவல்நிலையத்திலிருந்து பேசுகிறேன் அம்மா, நன்னன் வீட்டுத்தொலைபேசி எண்ணிலிருந்துதானே பேசுகிறீர்கள்?

ஆமாம்

வருத்தமான செய்தி அம்மா! நேர்ச்சியொன்றில் ஒருவர் இறந்துவிட்டார்; இந்தத் தொலைபேசி எண் இறந்தவரின் பணப்பையிலிருந்தது! நீங்கள் வந்து இறந்தவரின் உடலை அடையாளம் கண்டு கூறவேண்டும்!

அழகிக்குப் பேரதிர்ச்சி! அவள் நெஞ்சாங்குலை நடுங்கியது!

என் கணவர் இங்கு என்னுடன் இருக்கின்றாரே! என்றாள்.

அந்தத் துயர நிகழ்ச்சி மாலை 4மணிக்கு நடந்ததம்மா! அவர் தொடர்வண்டியில் ஏற முனைகையில் நிகழ்ந்துவிட்டது

அழகி, அதிர்ச்சியில் நினைவிழக்கும் நிலையிலிருந்தாள்!

இது எப்படி நடந்திருக்கும்??!!

இறந்தவரின் ஆதன் (ஆத்மா) நீங்கிச்செல்லுமுன், அதற்கு அன்பானவர்களைக் காண வருமென்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறாள்!!!

கண்கள் நீர் சொரிய, அடுத்த அறைக்கு ஓடிச்சென்று பார்த்தாள்!
நன்னனை அங்குக் காணவில்லை! அது உண்மையோ!! அவன் அவளைப் பிரிந்தே போய்விட்டானா?

அடக் கடவுளே! அவனோடு போட்ட சிறுசிறு சண்டைகளைத் விட்டுத் திருந்தி வாழ்ந்திட இன்னொரு வாய்ப்பிற்காக, அவள் உயிர்விடவும் அணியமாயிருந்தாளே!

அவள் அழுதுகொண்டே கீழே வீழ்ந்தாள், வலியில் துடித்தாள்! அவள் இழந்துவிட்டாள்; இனி எப்போதும் அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை! 

திடுமென குளியலறையில் ஒலி! கதவைத் திறந்துகொண்டு நன்னன் வெளியேவந்து, அன்பே! உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன், என்னுடைய பணப்பை இன்று தொடர்வண்டியில் ஏறும்போது திருடு போய்விட்டது என்றான்!
இதைக் கேட்ட மாத்திரத்தில், அவள் நெஞ்சம் அவனுக்காக அழுத்து! அவன் உயிரோடிருக்கும் உண்மையறிந்து மகிழ்ச்சியில் அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது!

வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பொன்றைத் தராமலே போகலாம்!. எனவே, ஒரு கணத்தையும் வீணடிக்காமல் தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்!

திருந்திக்கொள்ளத் தொடங்குவோம்!

பெற்றோரிடமும், உடன்பிறந்தாரிடமும், உறவினரிடமும், நண்பர்களிடமும் மற்றெல்லாரிடமும் தவறின்றித் திருத்தமாக நடக்கத் தொடங்குவோம்!

யாரொருவரும் நாளைக்கிருப்பது உறுதியில்லை!

வருத்தமற்ற அருமையான வாழ்க்கையை வாழ்வோம்!

இந்நாள் அருமையான நாளாக இருக்கட்டும்!

இப்போதிருந்து. ஒவ்வொரு கணத்தையும் புன்னகையோடு துய்த்திடுவோம்!

(கெழுதகை அன்பர் (தாமரைக்கோ) தாமரை Thamaraikko Thamarai அவர்களின் முகநூல் பக்கத்தில் ஆங்கிலத்தில் பார்த்துப் படித்த செய்தியை மொழியாக்கம் செய்து தந்துள்ளேன். படம் இணையத்தில் எடுத்தது. Chillzee.in  இணையதளத்திற்கு நன்றி!)
-------------------------------------------------------------