வியாழன், 4 பிப்ரவரி, 2010

கூட்டாகப் பொய்யுரைப்போர்!

* கூட்டாகப் பொய்யுரைப்போர்!


எக்கேடு வந்திடுமோ எந்தத் தீங்கு
     எந்தமிழ இனமுறுமோ என்றே தோன்றும்
இக்காலிச் சிவசங்கர் இங்கே ஆளும்
     இரண்டகரோ டுரையாடி இருப்ப தாலே!
அக்காலம் மேனனொடு அமுக்க மான
     அழிசூழ்ச்சி நாராயன் வந்து போனால்
மிக்கதாக் கீழத்தே நடக்கும்! ஒன்னார்
     மீமுயல்வால் பணிந்தார்கள் என்றே பொய்ப்பர்!

சென்னைக்கு வந்தவர்கள் செய்தி சொல்வார்
     சிங்களவர் போர்நிறுத்தம் செய்த தாக!
முன்னைவிட மேலதிக ஆய்தம் மற்றும்
     முனைந்துளவுச் செய்தியெலாம் அவர்க்க ளிப்பர்!
பின்னையுமே போர்நுட்ப ஆள னுப்பி
     பெருங்கப்பல் அவர்க்கீந்து துணையி ருப்பர்!     
தொன்னையிலே நெருப்பெடுத்து வந்த தாகத்
     துணிந்திங்கே கூட்டாகப் பொய்யு ரைப்பர்!

எனவேதான் இக்காலும் எத்தர் கூடி
     எந்தமிழர் அழிவிற்கே சூழ்ந்தார் என்றே
இனநலனை எண்ணிடுவோர் கவலு கின்றார்!
     ஏமாற்றுக் காரணங்கள் உண்மை யில்லை!
மனங்கனல நடப்பதெலாம் பார்த்தி ருக்கும்
     மறஞ்சான்ற இளந்தமிழர் மறக்க மாட்டார்!
சினமடக்கி வைத்தவர்கள் சீறும் நாளில்
     சீர்கெட்ட இவர்தப்ப வழியு முண்டோ?

--------------------------------------------------

8 கருத்துகள்:

Kandumany Veluppillai Rudra சொன்னது…

வந்து போனதன் பலன்,வறுத்து எடுத்து விட்டார்களே,இலங்கை அகதிகளை

தமிழநம்பி சொன்னது…

எதுவும் நடக்கக்கூடும்.

பின்னூட்டமிட்டமைக்கு நன்றி ஐயா.

Kumaran சொன்னது…

உங்கள் ஆக்கங்கள் எல்லாம் மிகவும் தரமாக உள்ளன......மிக நன்றி...மென்மேலும் தமிழ் பற்றிய பல ஆக்கங்களை தரவேண்டும்........

தமிழநம்பி சொன்னது…

நெஞ்சார்ந்த நன்றி சிவனி குமரன் அவர்களே!

Kandumany Veluppillai Rudra சொன்னது…

தக்க சமயத்தில் கிடைத்த,-நல்ல
தரமான திரட்டியின் பாராட்டு,
வளமாரப் போற்றிப் பாராட்டுவோம்! -நீங்கள்
வளமுடன் நீழுழி வாழ வாழ்த்துவோம்!

தமிழநம்பி சொன்னது…

உருத்திரா ஐயா,

உங்கள் அன்புரைக்கு நெஞ்சங்கனிந்த நன்றி.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

'தொன்னையிலே நெருப்பெடுத்து வந்த'"தமிழ"னாட்சியில்,'இனநலனை எண்ணிடுவோர் கவலு'வதைத் தவிர வேறென்ன செய்வர்?
தங்கள் அன்பன்,
தேவமைந்தன்

தமிழநம்பி சொன்னது…

அன்பும் மதிப்பும் மிக்க பேராசிரியர் ஐயா,
உணர்வார்ந்த கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.